Monday, June 9, 2008

பெட்ரோல் விலையேற்றம் : சொரணையே இல்லையாட நமக்கு!!

விலைவாசி மிக கடுமையாக உயர்ந்த பின்னும் மீண்டும் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலையினை ரூ3ம், சிலிண்டருக்கு ரூ50ம் விலை ஏற்றி அறிவித்து உள்ளது மத்திய அரசு.

இதனை அரங்கேற்றிய எல்லா ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் - கிழித்து எறிவதற்கு முன்னர், பெட்ரோல் விலை ரகசியம் - இதனை ஏற்றவேண்டி இவர்கள் கூறிய காரணத்தோட யோக்கியதைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை பிரச்சாரமாக எடுத்து சென்றால் தான் இந்த நாய்களை அம்பலப்படுத்த முடியும்.

1.
பெட்ரோல் விலை (தற்போதைய விலை) - ரூ 49.61 (இது சாதங்க, சூப்பர் ரூ53 அதுவே ஷெல்ல ரூ58)
இதுல சுங்கவரி, கலால் வரி, விற்பனை வரி, கல்வி (!) வரி என மத்திய - மாநில அரசுகள் பிடுங்குவது ரூ28
அதாவது 1 லிட்டருக்கு 57% வரி.
இதனை கழித்துவிட்டு பார்த்தால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 21 தான்.

2.
கச்சா எண்ணெய் மொத்த தேவையில் 30 % நமது நாட்டில் கிடைக்கிறது.
இதையும் இறக்குமதி செய்யப்படும் 70 % கச்சா எண்ணெய்க்கு ஈடாக வரியினை போடுகிறார்கள் இந்த மோசடி வியாபார ஓட்டுப்பொறுக்கிகள்.

3.
அடுத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு யார்- யார் ஈடுபடுறானுங்க பார்த்தோமானால்,
நமது நாட்டில் உள்ள 19 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 18 அரசு வசமும், ஒன்று திருட்டு அம்பானி வசமும் உள்ளது. ஆனால் 18 ஆலை வச்சிருக்கிற அரசு உற்பத்தி திறன் 74%, ஒத்த திருட்டு அம்பானி ஆலையின் உற்பத்தி திறன் 26%. இந்த அயோக்கியத்தனத்தை போல பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனில் அம்பானியின் ஆலை 59% ஆக உள்ளது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப்
பாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

4.
இவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலம் 2004-2005 ஆம் ஆண்டில் அரசுக்கு கிடைத்த வருமானம் 1,20,946 கோடி.
ஆனால் இவனுங்க 2005-2006 ஆம் ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுக்கும் கொடுத்த மானியமோ 2,535 கோடி ரூபாய் தான்.

இப்படி வரியினை போட்டு கொள்ளையடிக்கும் அரசு எங்க எண்ணெய் ஆலைகளுக்கு நஷ்டம் என கதை விடுகிறது. ஆனால் இது பெரிய பித்தலாட்டம். இதனை தோலுரிக்காமல் நேற்று நமட்டு சிரிப்புடன் விலையேற்றத்தை நியாயப்படுத்திய மண்மோகன் அடிமை போன்றவற்றை முச்சந்தியில் நிறுத்த முடியாது.

இவனுங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டுமானம், ராணுவ தளவாடங்கள் போன்றவற்றுக்காகவே தாக்கல் செய்கின்ற பட்ஜெட் என்ற மோசடியில் வருமானத்துக்கு வரி போடுவது, பொதுத்துறையினை விற்பது என்பதை மட்டுமே வழக்கமாக கொண்டு இருக்குறானுங்க. இந்த வரி விதிப்பில் பெரும்பங்கு பெட்ரோலிய பொருட்களின் மீது போடுவது.

இப்ப தெரியுதா, மேலே உள்ள உண்மை நிலையினை இவன் ஏன் மறைத்து நட்ட கணக்கு காட்டுகிறான் என்று. வரியினை போட்டாதான் தங்க நாற்கர சாலையும், ராக்கெட்டையும் விட முடியும். ஒரு வரியில் சொல்லனும்னா "நம்ம வீட்டை கொளுத்திவிட்டு அதுல குளுரு காய்றானுங்க".

இந்த விலையேற்றத்தை எதிர்ப்பது போல போராட்டத்தை அறிவிக்கும் பாஜக, சிபிஎம் - எந்த அருகதையும் இல்லை. இதே பாஜக ஆட்சியும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல் விலையினை ஏற்றியவர்கள் தான். 123 ஒப்பந்தத்திற்கு ஆரம்ப சுழி போட்டவன், தற்போதைய மறுகாலனிய கொள்யினை அச்சு அசலாக பின்பற்றியவர்கள். ஆட்கள் தான் மாறுகின்றனர் கொள்கை அதே தான் இந்திய திருநாட்டில்.

அடுத்து சிபிஎம் -சொல்லவே தேவையில்லை இவனுங்க ஆதரவுடன் தான் 4 ஆண்டு கொள்ளையே நடக்குது. 123 இருந்து இந்த விலையேற்றம் வரை "மக்களை திரட்டி போராடுவோம்" என்று கூறி கொண்டே ஆட்சிக்கு முட்டு கொடுத்து மக்களை கொலை செய்து வருகின்றனர். இதைவிட மக்களை கேவலப்படுத்த முடியாது.

அடுத்து திமுக, ராமதாஸ் போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். இந்த மதவெறி எதிரான ஆட்சியின் காவலர்கள் தான் போன பாஜக ஆட்சியின் குஜராத் படுகொலைகளையும், மறுகாலனியாதிக்க கொள்ளைகளையும் முழுக்க ஆதரத்து குளிர் காய்ந்த நாதாரிகள் என்பது சிபிஎம் போலிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். மக்களாகிய நாமும் இதனை நம்பி இருப்பதை எந்த வகையில நியாயப்படுத்த முடியும்.


எல்லாவற்றையும் உடன் இருந்து அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்துவிட்டு நாட்டில் இதனை விட முக்கிய பிரச்சனை இருப்பது போல திரிகிறார் ஐபிஎல் ரசிகர் கலைஞர். மேலும் தனது 50 ஆண்டுகால இது போன்ற சாதனைகளுக்காக வரலாறு காணாத வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறார் நம்ம தமிழின தலைவர். இந்த காரியவாத தலைவரின் சொத்து இன்று பல்லாயிரக்கணக்கான கோடி .

அப்பறம் ராமதாசு, தனது மகன் அங்க ஒப்புதல் கொடுப்பார் - இவரு தீவிர மக்கள் நலன் விரும்பி போல அறிக்கை விடுவார். இந்த ஓட்டுப்பொறுக்கியும் பாஜக காலத்துல இருந்து மத்திய அமைச்சரவையில இருக்கு. 123 யினை ஆதரிக்கும் அடிமை. இந்த கவர்ச்சிவாத தலைவரின் சொத்து இன்று ஆயிரக்கணக்கான கோடி.

அடுத்து மக்கள் விலைவாசியில கஷ்டப்படுவதை தாங்காமல் உதகையில் இருந்து அறிக்கை விடும் நம்ம ஜெயலலிதா அம்மா. இது காலத்து வரலாற்றை கூற வேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் முடிக்கலாம்.

இந்த விலையேற்றத்தை தொடர்ந்து நாளை அனைத்து பொருட்களும் மீண்டும் விலையேற போகிறது.

ஆக மொத்தத்தில் காசு இல்லாதவனை பார்த்து சாங்கடா என்கிறது அரசு. ஆனால் நாம் மவுனம் காத்து கொண்டுயிருக்கிறோம். இது நமக்கு நாமே சவக்குழியினை தோண்டிக் கொள்வதை போலத்தான். இதனைவிடுத்து மவுனத்தை உடைத்தெறிந்து வீதியில் இறங்கி போராடுவது தான் அத்தனை பிரச்சனைகளையும் தீரக்க முடியும்.

இந்த பதிவினை கிரகிக்க நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வி தான் பதிவின் தலைப்பு - "சொரணையே இல்லையா நமக்கு".

Tuesday, June 3, 2008

பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.



பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை

உயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.


இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.


எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ""ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ""சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.


பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப் பொருளான கச்சா எண்ணெய் (ஞிணூதஞீஞு ணிடிடூ) நமது நாட்டில் தேவையான அளவிற்குக் கிடைப்பதில்லை என்றாலும் கூட, இந்தியாவின் (பெட்ரோலிய) தேவையில் ஏறத்தாழ 30 சதவீதத்தை உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்கிறது. வியாபாரம் என்று பார்த்தால்கூட, உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடாக விற்பனை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மைய அரசோ, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது என்னென்ன உற்பத்திச் செலவீனங்கள் ஏற்றப்படுமோ, அவை அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மீதும் ஏற்றி வைத்து விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளை, ஃபாரின் சரக்குகளைப் போல விற்கும் மோசடி வியாபாரத்தை, மைய அரசு சட்டபூர்வமாகவே நடத்தி வருகிறது.


இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து அரசுக்கு ஆக. 2005இல் அளித்துள்ள அறிக்கையில், ""இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கடற்பயணச் சரக்குக் கட்டணம், துறைமுகக் கட்டணம், சுங்கவரி போன்ற செலவீனங்களை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து விலை நிர்ணயம் செய்யக் கூடாது'' என அரசுக்குப் பரிந்துரை செய்தது.


இப்பரிந்துரையை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு, ""உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் வரிகள் மற்றும் அதன் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை சொல்ல ரங்கராஜன் கமிட்டியை அமைத்திருப்பதாக''க் கூறி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை அறிக்கையைக் கரையானுக்கு இரையாக்கியது, மைய அரசு.


ரங்கராஜன் கமிட்டியால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில், உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்பதைக் ""கண்டுபிடித்த'' நாடாளுமன்ற நிலைக்குழு, ""மைய அரசு, நிலைக்குழுவிடம் பொய் சொல்லியதாக''க் குற்றஞ்சுமத்தியது. மேலும், ஜூன் 2006இல் அன்று அரசுக்கு அளித்த மற்றொரு அறிக்கையில், ""உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துமாறு'' மீண்டும் வலியுறுத்தியது, நாடாளுமன்ற நிலைக்குழு. நாடாளுமன்ற நிலைக்குழுவை நாடாளுமன்றத்திற்கு இணையாக மதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும், அது அளித்த பரிந்துரைகளோ, பைசா காசுக்கும் பயன் இல்லாமல், செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து போனது.


கச்சா எண்ணெயின் அடக்க விலையை நிர்ணயிப்பதில் நடந்து வரும் இப்பகற் கொள்ளை ஒருபுறமிருக்க, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது, மைய/மாநில அரசுகளின் கஜானாவை நிரப்பும் அமுதசுரபியாக இருந்து வருகிறது.


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 41.25. இதில் ரூ. 23.97ஐ, வரியாக, மைய/மாநில அரசுகள் பறித்துக் கொள்கின்றன. இதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால், 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 17.28 தான்.


பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் சிறீலங்காவில் 37%, தாய்லாந்தில் 24%, பாகிஸ்தானில் 30%, மற்ற பல நாடுகளில் 20 சதவீதமாகவும் இருக்கும்பொழுது இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி மட்டும் 18.9 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை எகிறிப் பாய்கிறது. இவ்விற்பனை வரி தவிர்த்து, சுங்கவரி, கலால்வரி, நுழைவுவரி, கல்விவரி, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என அடுக்கடுக்காக பெட்ரோலியப் பொருட்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 57 சதவீதமும்; ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விற்பனை விலையில் 35 சதவீதமும் பல்வேறு வரிகளாக மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.


பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குக் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 200405ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 77,692 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய். அந்த ஆண்டு, மைய அரசிற்கு சுங்கவரி மூலம் கிடைத்த வருமானத்தில் (54,738 கோடி ரூபாய்), 35 சதவீதப் பங்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.


பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும், அவ்விலை உயர்வுக்கு நேர் விகிதத்தில் அரசின் வரி வருமானமும் அதிகரித்து வந்திருக்கிறது. 200506 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 53,182 கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கு பின்னர் 64,215 கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டது. அந்த பட்ஜெட் ஆண்டின் இறுதியில் சுங்க வரி வருமானம் 65,050 கோடி ரூபாயாக அதிகரித்தது. பட்ஜெட்டில் போட்டதைவிட 22.32 சதவீதம் அதிகமாக சுங்கவரி வசூலானதற்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் காரணமாக அமைந்தது என மைய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.


பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் ஏற்பட்டு, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வேட்டு வைத்துவிடும் என்பதால், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட, பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்குமாறு அரசிடம் கூறி வருகிறார்கள். ஆனால் மைய அரசோ, இந்த வரிக் கொள்ளையை விரிவாக்குவதில்தான் குறியாக இருந்து வருகிறது.


எங்கும் இல்லாத அதிசயமாக, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என்ற பெயரில் புதுவிதமான வரியொன்றை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து, அதன்மூலம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வசூலித்து வருகிறது, மைய அரசு. 1974ஆம் ஆண்டு தொடங்கி விதிக்கப்பட்டு வரும் இவ்வரியின் மூலம், இதுநாள்வரை ஏறத்தாழ 64,000 கோடி ரூபாய் மைய அரசிற்கு வருமானம் கிடைத்திருந்தாலும், எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இவ்வரி வருமானத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ள தொகை 902 கோடி ரூபாய் தான். மீதிப் பணம் முழுவதையும் மைய அரசு ஊதாரித்தனமாகச் செலவழித்திருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் மீது கல்வி வரியைக் விதித்து வருகிறது மைய அரசு; வளர்ச்சி வரியைச் சுருட்டிக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களையே அம்போ எனக் கைவிட்டுவிட்ட மைய அரசு, கல்வி வரியில் மட்டும் கை வைக்காமல் விட்டிருக்குமா?


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயரும் பொழுது, அதனின் பாதிப்பில் இருந்து உள்நாட்டு நுகர்வோரைக் காப்பாற்ற 15,000 கோடி ரூபாய் பெறுமான அவசர கால நிதியொன்றை மைய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரசுக்குப் பதிலாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை சந்தை தீர்மானிக்கும்படியான சீர்திருத்தம் இத்துறையில் புகுத்தப்பட்டபொழுது, அந்த 15,000 கோடி ரூபாயையும் மைய அரசே சுருட்டிக் கொண்டது.


இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை தரகு முதலாளி அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது. எனினும், இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (59 சதவீத ஏற்றுமதி) முன்னணியில் இருக்கிறது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப் பாசம்தான் இதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இந்தச் சலுகைகளை அம்பானியே ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் அடக்கி வாசிக்கின்றன.


இதனை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, ""சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்'' எனப் பரிந்துரைத்தது.


இந்த ஆலோசனையைக் கேட்டு, அம்பானி அலறுவதற்கு முன்பாகவே, அரசாங்கம் அலறியது. ""இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வண்ணம் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சுங்கவரிச் சலுகைகளை அளித்து வருகிறோம். எனவே, இச்சலுகைகளைத் திரும்பப் பெற முடியாது'' எனக் கூறி, அம்பானியின் வயிற்றில் பாலை வார்த்தது.


அரசாங்கத்தின் கொள்கை எப்படி ஏறுக்கு மாறாக இருக்கிறதென்று பாருங்கள். பெட்ரோலும், டீசலும், மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் உள்நாட்டு மக்களுக்கு விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது பற்றி அக்கறை கொள்ளாத அரசாங்கம், இந்தியப் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் எனக் கவலைப்படுகிறுது. மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் தரப்படும் "மானியத்தை' நிறுத்த வேண்டும் எனத் திருவாய் மலரும் மன்மோகன் சிங், அம்பானி அனுபவித்து வரும் ஏற்றுமதி வரிச் சலுகைகளை நிறுத்த மறுக்கிறார்.


200405 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த மொத்த வரி வருமானம் 1,20,946 கோடி ரூபாய் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவ்வரி வருமானம் போக, அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை இலாப ஈவாக மைய அரசிற்கு அளித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பொழுது, அதற்கேற்ப உள்நாட்டில் விலை குறைப்பு செய்யாமல் அடித்த கொள்ளை தனிக்கதை. இப்படியாக பெட்ரோலியத் துறை பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் அதேசமயம், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் 200506ஆம் ஆண்டில் அரசு கொடுத்த "மானியமோ' வெறும் 2,535 கோடி ரூபாய்தான். (ஆதாரம்: தினமணி, 13.1.08, பக். 8)


பொது மக்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாகப் பறித்துக் கொண்டுவிட்டு, 2,500 கோடி ரூபாயைத் திருப்பித் தருவதை மானியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த 2,500 கோடி ரூபாய் திருப்பித் தரப்படுவதைக் கூட நிறுத்திவிட வேண்டும் எனக் கூறிவரும் மன்மோகன் சிங்கின் மேதமைக்கும், ஒரு வழிப்பறித் திருடனின் இரக்கமின்மைக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்து விட முடியும்?


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு அமெரிக்கா, ஈராக்கில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர், அமெரிக்கப் பொருளாதாரமும், அமெரிக்க டாலரும் நசிவடைந்திருப்பது உள்ளிட்டுப் பல்வேறு திரைமறைவுக் காரணங்கள் உள்ளன. இவற்றைக் கண்டித்து அம்பலப்படுத்த முன்வராத மன்மோகன் சிங், பெட்ரோல் டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிக்கிறார். இப்படிப்பட்டவரை பொருளாதாரப் புலி என அழைப்பதைவிட, ஆட்கொல்லிப் புலி என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

http://www.tamilcircle.net/

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது