விஜயகாந்தின் அரசியல் கவர்ச்சி பாதி காவி பாதி
கருப்புப் பணம் மீதி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் இலவசமாக வேட்டி, சேலை வழங்குவது போல, தமிழக மக்களுக்கு தன்னுடைய தமிழ் சினிமா வசனங்களை எல்லாம் இலவசமாக மேடையில் வாரி இறைக்கிறார், ""கருப்பு எம்.ஜி.ஆர்.'', ""புரட்சிக்கலைஞர்'' விஜயகாந்த்.
""தமிழர்களுக்கு உதவும் அனைத்து நற்குணங்களுடன் விஜயகாந்தைப் படைத்த பிரம்மன் திருஷ்டி படாமல் இருக்கவே அவரைக் கருப்பாக படைத்து விட்டான். ஏற்கெனவே இருந்தவர் சிவப்பு எம்.ஜி.ஆர்.; இவர் கருப்பு எம்.ஜி.ஆர்.'' என்று விஜயகாந்தின் சினிமா வளர்ப்புப் பிராணிகள் குரைத்துக் கொண்டே சுற்றி ஓடிவர, கருப்பு எம்.ஜி.ஆர். மக்களுக்கு தரிசனம் தருகிறார்.
எழுதித் தந்த வசனங்களை மனப்பாடம் செய்து சினிமாவைப் போல் "நடிப்பை' பிழிந்து மேடைகளில் வெளுத்துக் கட்டுகிறார்; சிவந்த கண்கள், அனல் பறக்கும் வசனங்கள், துடிக்கும் உதடுகள் என்று அச்சு பிசகாமல் சினிமா கதாநாயகன் போலவே அரசியல் மேடைகளில் சீறுகிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.
""மாத்தி மாத்தி ஓட்டுப் போடறீங்க, நீங்க ஓட்டுப் போடறவங்க என்ன பண்றாங்க? சபையை நடத்தவிடாமல் ரகளைதான் பண்றாங்க. மந்திரிப் பதவிக்கு அடிச்சிக்கிறாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காகவா? இல்லை, தங்களுடைய சுயலாபத்துக்காகவா? தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே, அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை யாராவது கேட்டாங்களா? அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா? எல்லாம் சுய லாபத்துக்காக வருமானம் வரும் துறைகளைக் கேட்டு வாங்கினாங்க. அரசியல் தெரியாதவர்கள், அரசியல் பக்கம் வராதவர்கள் ஜெயிச்சு எம்.பி.யாக, மந்திரியாக வருகிறார்கள். ஏன், தேர்தலில் ஜெயிக்காமலேயே மந்திரி ஆகியிருக்கிறார்கள்'' என்று கனலைக் கக்குகிறார். ""நான் அரசியல் வேண்டாம்னு சொல்றவன் இல்லை. ஆனா வந்துட்டா, ஊழல் இல்லாத நல்ல ஆட்சியா கொடுக்கனும்'' என்று மிரட்டுகிறார்.
மேலும், ஆண்டாண்டு காலமாய் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு அரை நொடியில் தீர்வு சொல்கிறார். ""செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக வரமுடிந்தது. அவரது தொழிலைத் தாழ்வாகவோ, தன்னை தாழ்த்தப்பட்டவராகவோ அவர் நினைக்கலே; இப்போதும் நான் தாழ்த்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன்னு யாரும் சொல்லிக்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். மற்ற ஜாதிக்காரர்கள் எப்படித் தங்களை உயர்வாக நினைக்கிறாங்களோ, அதுபோலவே இவங்களும் தன்னை உயர்வாக நினைச்சுக்கனும்'' என்கிறார். அதாவது, ஆதிக்க சாதியினரிடம் உதை வாங்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழ் சினிமாவைப்போல அப்படியே கனவுக் காட்சிக்குத் தாவி, உதை கொடுத்தவரின் மகளுடன் "டூயட்' பாடவேண்டும். பழிக்குப் பழி! சாதிய ஒடுக்குமுறைக்கு கருப்பு எம்.ஜி.ஆர். கூறும் அரசியல் தீர்வு இதுதான்!
அடுத்து, ""ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி ஆயுதத்தை எடுக்கப் போறீங்க?'' என்று ஜூனியர் விகடன் கேள்விக்கு ""அது தன்னால நடக்கும் பாருங்களேன். என்ன ஆயுதம்னு இப்ப நான் சொன்னா, அதனால பல பிரச்சினைகள்(?) வரும். நானும் ஒரு கட்சியைத் தொடங்கி, கட்சி வலுவடையும் போதுதான் எதிர்ப்புகளைச் சமாளிக்கிற பலம் எனக்கு வரும். அதுக்கு முன்னால அந்த ஆயுதத்த நான் சொல்லிட்டா, எல்லாரும் சுதாரிச்சிக்குவாங்க(!)'' என்கிறார். இவையெல்லாம் பழைய "டப்பிங்' தெலுங்குப்பட வசனங்கள். "ரிவால்வர் ரீட்டா', "கன் பைன் காஞ்சனா' போன்ற பழைய கௌபாய் படங்களிலிருந்து "சுட்ட' வசனங்களைத்தான் அரசியல் சந்தையில் புதிதாக கடைவிரிக்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.
இதில் கூத்து என்னவென்றால் இவ்வாறான "அதிரடி அரசியல் கருத்துக்களை'ப் பேசுவதால் ""நான் நிறைய நெருக்கடிகளைச் சந்திச்சுட்டேன்... சந்திச்சுக்கிட்டு இருக்கிறேன்'' என்று தமிழர்களிடம், குறிப்பாக பெண்களிடம் ""பாவம் விஜயகாந்த்'' என்ற அனுதாபத்தைத் தேடுகிறார்.
""நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்'' என்பது எம்.ஜி.ஆர். "பார்முலா'. இப்போது இதையே தனது அரசியல் சரக்காக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார், கருப்பு எம்.ஜி.ஆர்.
""உரிய பொறுப்புகள் (முதல்வர் பதவி) வந்தால் நிஜ வாழ்க்கையிலும் "ரமணா' அவதாரம் எடுப்பேன். இந்தக் காலகட்டத்துல எந்தெந்த மட்டத்துல என்னென்ன ஃபிராடு நடக்குதுனு மத்தவங்களவிட எனக்கு நல்லாவே தெரியும். (ஏனெனில் இவரே வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்யும் கருப்புப் பண பேர்வழிதானே!). அதை எப்படியெல்லாம் தடுக்கலாம்னு நிறையவே யோசிக்கிறேன். லஞ்சம் கொடுப்பவர்கள் இருந்தாதானே அதை வாங்குறவங்க பெருகுவாங்க் லஞ்சம் கொடுக்கிறதையே நிறுத்திட்டா... அதுதான் என்னுடைய பிளான்'' என்று கூறி, எம்.ஜி.ஆர்.யிசம் போன்று இன்னொரு பாசிச கோமாளியிசம்தான் ""ரமணாயிசம்'' என்று வாக்குமூலம் தருகிறார்.
தமிழ் சினிமாவில் வரும் ஆபாச சரவெடி சிரிப்புக் காட்சிகளை விஞ்சும் கருப்பு எம்.ஜி.ஆரின் ரமணாயிசம் "ஒரிஜினல்' எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தை விட அருவருப்பானது! ஆபத்தானது! கருவிலேயே அழிக்க வேண்டியது! இதற்கான ஆதாரங்களை எங்கேயும் தேடவேண்டியதில்லை. விஜயகாந்தின் பணவெறி, பதவிவெறி, சாதிவெறி, மதவெறி மற்றும் சுய விளம்பர போதையே இதற்கு சாட்சி!
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதே காலக்கட்டத்தில் தமிழகத்தின் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் ஏராளமான அடக்குமுறைகளை ஏவியுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளாக விஜயகாந்த் தமிழகத்தின் நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருந்தபோது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தமது பிரச்சினைக்காக நெல்லையில் ஆட்சித் தலைவரிடம் மனுக் கொடுக்கச் சென்றனர். அவர்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிப் படுகொலை செய்ததற்கு எதிராக இவர் எதிர்ப்பு அறிக்கைக் கூட வெளியிட்டதில்லை.
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது நடந்த லஞ்ச ஊழல் மோசடிகள், அதிகாரமுறைகேடுகள், அடக்குமுறைகள் மற்றும் கருணாநிதி ஆட்சியில் சக திரைப்பட தொழிலாளர்கள் மீது நடந்த போலீசு அடக்குமுறைகள், பட்டினியில் திரைப்படத் தொழிலாளர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது என எதற்குமே இந்த "புரட்சிக்கலைஞர்' வாய் திறக்கவேயில்லை. வாச்சாத்தி, சின்னாம்பதி முதல் சிதம்பரம் வரை ஏழை உழைக்கும் பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதல்கள் வன்புணர்ச்சிகள் போன்ற ஆயிரக்கணக்கான கொடுமைகளுக்கு எதிராக சிறு துரும்புக் கூட அசைக்காதவர்தான் இந்த கருப்பு எம்.ஜி.ஆர்.
ஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் விஜயகாந்த் காட்டும் கரிசனம் நிழல் உலகோடு (சினிமாவோடு) முடிந்து விடுகிறது. நிஜத்தில், அவர் ஒரு திடீர் பணக்காரர்; பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்துக் கொண்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குத் துதிபாடும் நவீன முதலாளி.
சென்னை மதுரை கோவை என்று பல முக்கிய நகரங்களில் ஏராளமான சொகுசு பங்களாக்கள், பலமாடி வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பண்ணை நிலங்கள், சொந்தமாக சூதாட்ட கிளப்புகள், பெட்ரோல் நிலையங்கள், பிறமொழி மற்றும் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பு விநியோக உரிமை நிறுவனங்கள், மச்சான், மனைவி, மகன்கள் பெயரில் ஏராளமான முதலீடுகள், கணக்கில் காட்டாத கருப்புப் பணம் என்று பணத்திலேயே புரளும் இந்த கோமான் திடீரென தமிழர்களின் மீது கரிசனம் வந்து உருண்டு புரள்வது எதற்கு?
கருணாநிதி குடும்பம், ராமதாசு குடும்பம் போல தனது குடும்பத்தையும் ""முன்னேற்றுவதற்கு''த் தான் அவர் அரசியலில் குதிக்கிறார். தமிழக மக்களிடம் தனக்குள்ள சினிமா கவர்ச்சி, செல்வாக்கு; ஓட்டுக் கட்சிகள் மீது தமிழக மக்களுக்குள்ள வெறுப்பு, தன்னைச் சுற்றியுள்ள பிழைப்புவாதிகளின் கூட்டம் - இவற்றையெல்லாம் மூலதனமாக வைத்துதான் அரசியல் வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார், அவர். இந்த வியாபாரத்தை முற்போக்காகக் காட்டத்தான் ""தமிழன்'', ""ஊழல் எதிர்ப்பு'' எனச் சவடால் அடிக்கிறார்.
திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள் எனச் சாடும் இந்த உத்தமர், குறைந்தபட்சம் சினிமாவில் தான் வாங்கும் சம்பளத் தொகையைப் பகிரங்கமாக அறிவிப்பாரா? அதில் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று மேடையில் அறிவிக்கத் தயாரா? அரசியல் நடத்தும் திராவிட ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளை குறி வைத்துத் தாக்கும் இவர், தன்னுடைய நெற்றியில் திருநீறு அணிவது என்ற பெயரில் இந்துமதச் சின்னத்தை பொறித்துக் கொண்டுதான் வெளியில் வலம் வருகிறார். இந்து மதத்தையும், சாதிவெறியையும் பிரிக்க முடியாது என்பது இந்த "புரட்சிக்கலைஞருக்கு'த் தெரியாதா!
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர், தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூட முடியவில்லை. "மேல்சாதி' இந்துக்களான கள்ளர் சாதி வெறியர்களின் இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து அம்பலப்படுத்திப் பேச வக்கற்ற விஜயகாந்த், "நரசிம்மா' என்ற தன்னுடைய திரைப்படத்தில், "இந்தியாவில் முசுலீம் ஜனாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது; கிரிக்கெட் கேப்டனாக முடிகிறது; பாகிஸ்தானில் ஓர் இந்து, வார்டு பிரதிநிதியாகக் கூட வர முடியவில்லையே, ஏன்?'' என்று ஆர்.எஸ்.எஸ். இன் அவதூறுகளையே வசனமாகப் பேசி, அப்பாவி முசுலீம்களிடம் தனது வீரத்தைக் காட்டுகிறார். தேசப்பற்று கொப்பளிக்கும் தன்னுடைய படங்களில் எல்லாம் முசுலீம் தீவிரவாதிகளை மட்டும் வில்லனாகக் காட்டுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு ஒத்து ஊதுகிறார்.
ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலை உலகத்தையே உலுக்கிப் போட்டதைப் பச்சைக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்லும். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தைத் தட்டிக் கேட்பவராக அரிதாரம் பூசிக் கொண்டு வலம் வந்த விஜயகாந்த், ""அங்கே என்ன நடக்கிறதென்றே அப்போது சரியாத் தெரியவில்லை. அதனால்தான் குரல் கொடுக்கவில்லை'' என்று இப்போது பத்திரிகைக்குப் பேட்டியளித்து, ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றம் சுமத்துவதில் இருந்து நழுவிக் கொள்கிறார். ""எவன் தாலி அறுந்தால் நமக்கென்ன? எவன் குடி கெட்டால் நமக்கென்ன?'' என்று சினிமா போதையில் மிதந்து கிடக்கும் இந்தச் சுயநலப்பேர்வழி தமிழன், தமிழன் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் காவடி தூக்கும் பார்ப்பனிய விசுவாசி என்பதைத்தான் இவை நிரூபிக்கின்றன.
""ஆட்சியைப் பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.க.வை மதவாதக் கட்சிங்றாங்க. தங்களை மதவாதக் கட்சின்னு அவங்க (பி.ஜே.பி) சொல்லியிருக்காங்களான்னு(!) எனக்கு தெரியாது'' எனக் கூறி, இந்து மதவெறிக் கட்சியான பி.ஜே.பி.க்கு மதச்சார்பற்ற முத்திரைக் குத்தப் பார்க்கும் பித்தலாட்ட பேர்வழிதான் விஜயகாந்த். ""உயிர் தமிழுக்கு'' என்று அடுக்குமொழியில் ஊரை ஏமாற்றிக் கொண்டு இந்தி மொழித் திணிப்பை ஆதரிக்கும் கருங்காலி! ""அப்போது நடந்த மொழிப் போராட்டத்தில் (இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்) கலந்து கொண்ட என்(!) போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு போய்விட்டது'' என்று அவதூறு பரப்பும் தமிழின விரோதி!
கால் நூற்றாண்டாக மதுரை அலங்காநல்லூர் சோதிடன் சுந்தரானந்தம் என்பவரின் பின்னால் திரிந்து கொண்டு நாள் நட்சத்திரம் பார்த்து திரைப்படம் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளின் மேல் உருண்டு கிடந்த இந்த "புரட்சிக்கலைஞர்', இப்போது தமிழகத்தின் முதல்வர் பதவி நாற்காலியை மோகித்து பெங்களூர் சோதிடன் "பாபா'வின் சொற்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.
""நேற்றைய வல்லரசு! இன்றைய பேரரசு!! நாளைய தமிழரசு!!!'' என்று தமிழகம் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டி நாறடித்து, நினைத்த நேரத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் திறந்தவெளி கழிப்பிடம் போல் தமிழகத்தை திணவோடு பயன்படுத்துகிறார். ""2006 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தே தீருவது என்ற இலக்கை நோக்கை விரைந்து கொண்டிருக்கிறார் கேப்டன்'' என்று துடப்பகட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் "மாமா' வேலையில் இறங்கிவிட்டன பார்ப்பன பத்திரிகைகள்.
சினிமாவில் இதுநாள்வரை புரட்யூசர் செலவில் "புரட்சி' செய்து கொண்டிருந்த கருப்பு எம்.ஜி.ஆர். இப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் தயவில் தமிழர்களின் தலையை மொட்டை அடிக்க நாள் குறித்து விட்டார். அதற்காக, தன் மச்சான், மனைவி மற்றும் ரசிகர்கள் பட்டாளம் என்ற கூலிப்படைகளோடு கிளம்புகிறார். மீண்டும், இன்னொரு சுனாமி வந்தால்கூட தமிழகத்தை காப்பாற்றி விடலாம். ஆனால், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் இந்த சாக்கடையை தமிழகத்தில் நுழையவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது! ஏதுமறியாத நமது தமிழகத்தின் குழந்தைகள் நம்மைப் போலவே மீளாத கொடுமையில் சிக்கி மிகப் பெரும் இருண்ட ஆட்சியில் உழலும் அபாயம் ஏற்படும்! எனவே, இப்போதே நம் பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி கறுப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயரில் படையெடுக்கும் இந்தக் கழிசடை காவிக் கூட்டத்தை அதன் கருவிலேயே நாம் அழித்தொழிக்க வேண்டும்.
-பச்சையப்பன்
2 comments:
இதை பற்றி என் வலை பதிவில் எழுதியுள்ளேன்(www.lightink.wordpress.com) முதலில் உங்கள் கட்டுரைக்கு வாழ்த்துக்கள், ஆனாலும்
இப்படி விஜயகாந்தை அம்மானமா அக்கிவிட்டீர்களே...!
இந்த விஜயகாந்த் நாதாரிதான் சிரிலங்கா அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி கொடுப்பதை ஆதரிச்சு டெல்லில பேசிருக்கு. இவன் கட்சி பேரு தேசிய திராவிட முன்னேற்றக் கழகமாம். கம்முணாட்டி பய.... இவனையெல்லாம் வாயில செருப்ப கவ்வ கொடுத்து அம்மணக்கட்டையா அடிச்சு தெருத்தெருவா இழுத்துட்டு போகனும்.
Post a Comment