Wednesday, February 20, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து நடந்த பொதுக்கூட்ட காட்சிகள் & செய்திகள்!


போலீசு தடைக்கு முன் செய்யப்பட்ட அரங்குக்கூட்ட ஏற்பாடுகள்


பின்னர் எம்.ஜீ.ஆர் நகர் மார்க்கெட்-யின் ஆயிரக்கணக்கான மக்கள் திரளின் முன் நடந்த பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம் பற்றிய நாளிதழ் செய்திகள்


Tuesday, February 19, 2008

போலீஸ் தடையினை அடுத்து பொதுக்கூட்டம்-ஆக நடக்கிறது - இடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்கெட்.! !

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து நடக்கவிருந்த அரங்கக் கூட்டம் - பொதுக்கூட்டமாக நடக்கிறது.
இடம் எம்.ஜி.ஆர் நகர் மார்கெட்!
நேரம் மாலை 6 மணி

Friday, February 15, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னையில் நடக்கவிருக்கும் அரங்கக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்!











பிப்ரவரி 19, 2008


செவ்வாய், மாலை 4 மணி


பத்மா ராம் மகால்(ராம் தியேட்டர்)


83, N.S.K சாலை,


கோடம்பாக்கம்,


சென்னை- 24





இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்



..

தலைமை :

சு.ப தங்கராசு
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு,
அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.
..




உரையாற்றுவோர்:
..




நீண்ட பயணம் சுந்தரம்
மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)
..
தமிழேந்தி
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,
..
இல.கோவிந்தசாமி
செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி
..
சங்கர சுப்பு
வழக்குரைஞர்,
மாநிலத்தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்.
..
சாந்திர பகதூர்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
..
இந்தியா.ஏ.எஸ். குமார்
மாநில துனைத்தலைவர்,A.I.C.C.T.U
..
த.வெள்ளையன்
தலைவர்,தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
..
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி.
..
தொல்.திருமாவளவன்

பொதுச் செயலாளர்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
..
தியாகு
பொதுச் செலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
..
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
..
மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

..
சிறப்புரை:

பவன் பட்டேல்செயலாளர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.

லட்சுமண் பந்த்
செயலாளர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்தியா.

சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)

நன்றியுரை:

வ.கார்த்திகேயன்

செயலாளர்,
புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

தொடர்புக்கு:

அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை - 24
அழைக்க - 94448 34519

நன்றி.http://www.sivappualai.blogspot.com/

Related:
முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னையில் அரங்கக் கூட்டம்!

Thursday, February 14, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னையில் அரங்கக் கூட்டம்!

தோழர் சி.பி.கஜீரேல்
மையக் குழு உறுப்பினர்
நேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
உரையாற்றுகிறார்.
******************************
19.2.2008
இடம் : ராம் தியேட்டர்..ஆற்காடு சாலை
*******************************
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
Related:
..
..
..

Wednesday, February 13, 2008

நேபாளம்: விண்ணில் தவளும் செங்கொடி! மண்ணில் கமழும் புரட்சி!!



காடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.


தகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு.


இடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை.


கர்னாலி ஓர் அற்புதம் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. இமாலயத் தேசமான நேபாளத்தில் பெருக்கெடுத்தோடுகிற சிறிதும் பெரியதுமான 6000 ஆறுகளில் கடைசிக் காட்டாறு கர்னாலியாகத்தான் இருக்கும். இப்பிராந்தியத்தில் ஓடுகிற மிகப் பெரிய ஆறுகளான கண்டக், மஹாகாளி இரண்டுமே இந்தியநேபாள நாடுகளுக்கிடையிலான சமனற்ற ஒப்பந்தங்களினால் நார்நாராகக் கிழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவை. இந்தியப் பெரியண்ணன் எல்லாத் தண்ணீர் மூலங்களையுமே கொள்ளையடித்துவிட்டது; சின்னஞ்சிறு நேபாள நாடோ தீராத வறட்சியிலும், தொலையாத தாகத்திலும் சிக்கித் தவிக்கிறது.


கர்னாலி ஆற்றின் மீது ஜப்பானியர் மிக அற்புதமான தொங்கு பாலமொன்றைக் கட்டியிருக்கிறார்கள். காடுகளைப் போலவே இங்கும் இரவு அடர்ந்து கரியதிரை விழும்நேரம் சிஸாபானி கிராமக் குழந்தைகள் பாலத்தின் மேல் குதித்து ஓடியவாறு ""ஜனநாயகம் ஜனநாயகம், குடியரசு குடியரசு'' என்று முழங்குகின்றன. அங்கு நிலவும் சுதந்திர மன எழுச்சியின் மழலைப் பாட்டொலியாக அது பரவசம் ஊட்டுகிறது.


இந்தச் சிறிய கிராமத்தின் மக்களும் கூட நெடுஞ்சாலைகளை மறித்து, 19 நாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ""பராஸ் ஒரு மக்கள் விரோதி. அவனைத் தூக்கிலே போடு.'' (பராஸ், மன்னன் ஞானேந்திராவின் மகன்) ""திருட்டு நாயே ஞானேந்திரா, நாட்டை விட்டு வெளியேறு'' என்று நேபாளம் முழுக்க பிரபலமான முழக்கங்களை எழுப்பினர். நேபாளத்தில் நடப்பது சர்வாதிகார மன்னனுக்கும் மக்களுக்கும் இடையேயான போர் என்பதை இது மிகத் துலக்கமாகப் பிரகடனப்படுத்துகிறது.


ஆனால் மன்னனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ வெளியேற மனமில்லை. மன்னன் ஞானேந்திரா இன்னமும் அங்கு ஒட்டிக் கொண்டே இருக்கிறான். மன்னனைப் போலவே அவனது ராயல் நேபாள ராணுவம் (கீNஅ) இராணுவத் தலைமைத் தளபதியாக இருக்கும் கோமாளி பியார் யங் தாபா, பல வண்ண நிலப்பிரபுத்துவ உள்ளூர்த் தலைவர்களும், பணநாற்றமடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும் இந்த ஏழை நாட்டின் இரத்தத்தையும், வியர்வையையும், இயற்கை வளங்களையும் சூறையாடியும், சுரண்டியும் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.


பத்திரிக்கைக் குரல்வளையை நெரித்து நீதிபரிபாலனத்தில் தலையிட்டு, அரசு நிறுவனங்களை அழித்து, எழுத்தாளர்கள், கலைஞர்கள், வக்கீல்கள், வீட்டுப் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சிறைப்படுத்தி, சித்திரவதைக் கூடங்களில் அடைத்து, அரசு பயங்கரவாத நிலையைக் கட்டவிழ்த்து விட்டு, பல ஆயிரக்கணக்கான ஏழை மக்களை, நேபாள மாவோயிஸ்டு கம்யூனிசப் புரட்சியாளர்களைக் கொன்றார்கள்.


நாங்கள் கர்னாலி நதியைக் கடக்கும்போது நடுச்சாமத்தின் கரிய இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கட்டுறுதி கொண்ட ஒல்லியான தேகத்துடன் சீருடை அணிந்த ஒருவர் எங்கள் பாதைக்குக் குறுக்கே வந்து பின் இருளில் மறைந்து போனார். எங்கள் கார் டிரைவர் குருஜி, ""மாவோயிஸ்ட்'' என்று முணுமுணுத்துக் கொண்டார். கடந்த 9 நாட்களில் சுமார் 1,000 கி.மீ. தூரம் மாவோயிசக் கட்டுப்பாட்டுப் பிராந்தியங்களிலே பயணம் செய்ததால், நாங்கள் ஆச்சரியப்படவில்லை.


நாங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போர்முனைகள் தகர்க்கப்பட்ட போலீசு நிலையங்கள், மாவோயிஸ்டுகளைக் கொன்று அவர்களது சிதைந்த உடல்களைக் குழிதோண்டிப் புதைத்த பாலத்து அடிகள், தமது இளம்பாலகர்களைப் பறிகொடுத்த கிராமங்கள் என அனைத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் கார் திடீரென ஒரு இராணுவச் சோதனை நிலையம் அமைந்திருந்த யாருமற்ற, வெறிச் சோடிய நெடுஞ்சாலையை அடைந்தது.


என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் சுட்டுத் தள்ளப்படலாம். அவர்கள் யாரையும் நம்புவதில்லை. இது மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. எனவே அனைத்துப் பாதைகளையும் நன்கறிந்தவர்கள் அவர்கள். ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து இராணுவத்தையோ, அல்லது மாவட்டத் தலைநகரத்தையோ தாக்கத் திட்டமிட்டு இருக்கலாம். (கபிலவஸ்துவில் ஏப்ரலில் நடந்தது போல). பெண் தளபதிகள் தலைமையில் 5,000 6,000 என வலிமையான படையோடு தான்சேன் நகரத்தைக் கைப்பற்றியது போன்ற செயலிலும் இறங்கலாம். (மாவோயிச மக்கள் விடுதலைப் படை (கஃஅ)யில் 40மூ பெண்கள் உள்ளனர்.)


""யார் நீங்கள்? இந்த இராத்திரியில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?'' தூரத்திலே ஒரு குரல்கேட்டது. மிகவும் அந்நியமான குரல். அவர்கள் சிலராக இருந்தனர். அந்த ஒளி எங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தபடியே இருந்தது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மிகவும் தடுமாறிப் போனதால் அவர்கள் இராணுவத்தினர் என்பதை உடனடியாக எங்களால் அடையாளம் காண இயலவில்லை. நாங்கள் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் என்பதை குருஜி தெரியப்படுத்திக் கொண்டார். பின்வாங்கிக் கொண்ட குரல் மீண்டும் ஒலித்தது. ""சரி போங்கள், மீண்டும் இரவு நேரத்தில் இங்கே திரும்ப வராதீர்கள்'' என்றது.
இந்த மலைப்பிரதேச இராணுவச் சோதனை நிலையத்தைப் போன்று அனைத்துச் சோதனை நிலையங்களும் அபாயம் கொண்டதல்ல. நேபாளம் நீண்டதொரு அடக்குமுறையின் தளைகள் அறுக்கப்பட்டு மெல்ல பல கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் ஜனநாயக மலர்ச்சோலையின் முதல் மகிழ்ச்சி அனுபவத்தின் அரைவாசியைக் கண்டு கொண்டிருந்தது. 19 நாள் வன்முறையற்ற புரட்சி மன்னனை ஒரு மூலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆனால் அரண்மனைச் சதிகள், துரோகங்கள் மற்றும் சமரசங்கள் பற்றிய கவலை ரேகைகள் எங்கும் பரவியே இருக்கின்றன.


ஒரு இடைக்கால அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஏழு கட்சிக் கூட்டணியுடனான மாவோயிஸ்டுகளின் 12 ஒப்பந்தங்கள் முழுதாக இணைத்துக் கொள்ளப்படுமா? அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் அதிகார மன்றம் ஏற்படுத்தப்படுமா? மன்னன் மற்றும் இராணுவத்தின் கதி என்னவாக இருக்கும்?


உண்மை என்னவெனில், இப்போது போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் மாவோயிஸ்டுகளே நேபாளத்தின் பெரும்பான்மையான பகுதிகளைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள். முன்பு மன்னனது கட்டுப்பாட்டில் இருந்தவை கடுமையான இராணுவப் பாதுகாப்பு கொண்டிருந்த காத்மாண்டுவும், சில துணை நகரங்களும் மட்டும்தான். 75 மாவட்டங்களின் 75 சதவீதப் பகுதிகள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு நேபாள நிலப்பரப்பு முழுவதும் நிலையான செல்வாக்கையும் பெற்றுள்ளது.


மக்களிடம் ஒரு பயமும் அதே நேரத்தில் அவர்களின் தியாக வாழ்க்கை, கொள்கைப் பிடிப்பு, வீரம் ஆகியவற்றின் மீது உயரிய மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக வாழ்கிறார்கள், சாகிறார்கள். அவர்களிடையே வேலை செய்து, வாழ்ந்து, பள்ளிகள், சாலைகள் அமைத்துக் கொடுத்து, அனைவருக்கும் நிலம் விநியோகித்து, உடனடி நீதி வழங்கல் முறையை ஏற்படுத்தி, எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல், சமூக அதிகாரத்தை அளித்து, நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைத் தாங்கிப் பிடிக்கும் பழைய கட்டுமானங்களைத் தகர்த்து எறிவதில் மாவோயிஸ்டுகள் முன் நிற்கிறார்கள்.


மக்கள் மன்னனை வெறுக்கிறார்கள். மன்னன் நடத்திய அரண்மனைப் படுகொலைகளை மக்கள் மறக்கவில்லை. ""மன்னன் மற்றும் அவனது மகன், இருவருமே அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம். மன்னன் அப்புறப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்'' என்று நேபாள்கஞ்ச் பகுதி மாவோயிசத் தோழர் "அதக்' குறிப்பிட்டார். இவர் பேக் மற்றும் பாட்டியாவின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். உத்தராஞ்சல் எல்லையில் உள்ள மகேந்திர நகரில் (புரட்சிக்குப் பிறகு, இப்போது பீம்நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1960களில் மிகப் பெரிய விவசாய இயக்கத்தை மேற்கொண்டு பின்னர் மன்னனின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட பீம் தத் பாண்டே நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது).


கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கிருஷ்ணா தத் குறிப்பிடும் போது ""மாவோயிஸ்டுகள் கண்ணுக்கு நேரே புலப்படாத சக்தி. ஆனால் அவர்கள் எங்கும் நீக்கமற உள்ளனர். அரசாங்கத்தில் கண்டிப்பாக அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இந்த மக்கள் எழுச்சியில் (ஜன அந்தோலன்) மிக முக்கியப் பாத்திரத்தை அவர்கள் வகிக்கிறார்கள்.''


நேபாளம் நெடுகிலும் 90களின் நடுப்பகுதியில் ரோல்பாவில் மாவோயிஸ்டுகள் முதன்முதலில் தொடங்கிய போராட்டத்தில் காணப்பட்ட பிரச்சாரச் சுவரெழுத்துக்கள் சிவப்பு வண்ணத்தில் எங்கும் மிளிர்கின்றன: ""கொலைகாரக் கிரிமினல் சர்வாதிகாரி மன்னனை அழித்தொழிப்போம். ஒரு ஜனநாயக மக்கள் குடியரசை நிறுவுவோம்.'' அவர்களின் நடவடிக்கைகள் மிகத் தெளிவாக எங்கும் உள்ளன. கடந்த ஏப்ரலில், நகரங்களில் ஆயிரக்கணக்கான கிராம மக்களை அணிதிரட்டியவர்கள் மாவோயிஸ்டுகளே.


""வன்முறை நிகழாத அந்த மக்கள் எழுச்சியில் 3 முக்கிய சக்திகள் இருந்தனர் ஏழு கட்சிக் கூட்டணி, மக்கள், மற்றும் மாவோயிஸ்டுகள். சந்தேகமேயில்லாமல், மாவோயிஸ்டுகளே மிகப் பெரிய சக்தி'', என்கிறார் மனித உரிமைகள் வழக்குரைஞர், கோபால் சிவக்குட்டி சிந்தன். மேலும் அவர், "புதிய இடைக்கால அரசாங்கத்தில் மாவோயிஸ்டுகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 1990இன் அரசமைப்புச் சட்டம் தூக்கியெறியப்பட்டு, ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். மன்னனும், அவன் மகனும் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு எல்லா அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட்டு, சட்ட அதிகார மன்றத்தின் ஆட்சி செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், நேபாளம் நிச்சயமாக இரண்டாவது புரட்சிக்குத் தயாராகும்'' என்று விளக்குகிறார்.


நேபாளம் ஏற்கெனவே இரண்டாவது புரட்சி ஒன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.


பீம்நகரில், ஞானேந்திரா மார்க், ஜனமார்க் என பெயர் மாற்றப்பட்டுள்ளது; மன்னர் மாட்சிமையைப் பறைசாற்றிய பெயர்ப் பலகைகள் நேபாளம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன் காத்மாண்டு பாராளுமன்றத்தில் நேபாள மக்கள் குடியரசின் சின்னமான அரிவாள் சுத்தியல் காட்சி தருகிறது; மன்னன் மற்றும் அவனது மூதாதையர்களின் சிலைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன் புதிய பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன் கிரிமினல்கள் மற்றும் மக்களை ஒடுக்கிய ஒடுக்குமுறையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் மிகவும் உன்னிப்பாக ஏழு கட்சிக் கூட்டணியைக் கண்காணித்து வருகிறார்கள்.


வன்முறையற்ற இந்த இயக்கம் 21 உயிர் இழப்புக்களைச் சந்தித்தது. அவற்றில் ஒன்று குகுகயின் முன்னணியாளர் துர்ஜா குமார் ராய் சுட்டுக் கொல்லப்பட்டு, காத்மாண்டுவில் வெட்டவெளியில் தொங்க விடப்பட்டு இருந்தார். ஊனமாக்கப்பட்டவர்கள் பலர். பார்டியா மாவட்டத்தில், குலேரியா கிராமத்தின் விவசாயி யம்லால், காலில் சுடப்பட்டுள்ளார். ""அவர்கள் துரோகம் இழைத்தால் மறுபடி தெருவில் இறங்கிப் போராடுவேன்'' என்கிறார் அவர். அப்போது சுட்டுக் கொல்லப்படும் நிலைமை வந்தால் என்ன செய்வார்? ""நாட்டிற்காக நான் சாவேன். எங்களுக்கு ஒரு குடியரசு வேண்டும். மன்னன் இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்கிறார் தீர்க்கமாக.


கஜூரா கிராமத்தின் ஏழை தலித் மக்கள் காலனியில், ஷாகித் சேது பிக்காவின் பலவீனமான 3 குழந்தைகள் எங்களைச் சுற்றி ஓடிக் கொண்டே ஜனநாயகத்தை வாழ்த்தி சில முழக்கங்களை எழுப்பியபடி இருந்தன. ""உங்கள் அம்மா எங்கே போயிருக்கிறார்கள்?'' என்று நான் கேட்டேன். ""மன்னன் எங்கள் அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டான்,'' என்று பதிலளித்தான் ஆசிஷ். இருபத்தாறே வயதான சேது 10 கி.மீ. தூரம் நேபாள் கஞ்சுக்குப் பயணம் செய்து இந்தப் போராட்டத்தில் பங்கு எடுத்து உள்ளனர். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் சுஷ்மா என்ற பெண், ""அப்போது ஒரு லட்சம் மக்கள் நேபாளத் தெருக்களில் நின்றிருந்தார்கள். கண்ணீர்ப் புகைகுண்டு ஒன்று ஆசிஷ் தாய் மீது விழுந்ததால் மூச்சு திணறி இறந்து போனாள்'' என்று சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.


அந்த நிலப்பரப்பு முழுவதும் இதுபோன்ற வீரமும், தியாகமும் நிறைந்த நம்பமுடியாத பல கதைகள் உள்ளன. சேது இறந்த உடனே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, போலீசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு நேபாள் கஞ்சில் உள்ள ஞானேந்திரா சவுக்கில் அமைந்திருக்கும் ஞானேந்திரா நினைவிடத்தைத் தகர்த்தெறிந்தனர். இப்போது, தகர்க்கப்பட்ட அந்த நினைவிடத்தில் ஒரு புதிய பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது ""ஷாகித் (தியாகி) சேது பிகா சவுக்.''


மாவோயிஸ்டுகள் மீதான பயங்கரவாதிகள் முத்திரை நீக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வெளிப்படையான நடவடிக்கைகளில் உள்ளனர். ஆயினும், ஆபத்தை ஊகித்துணரும் வகையில் எச்சரிக்கை நிலையிலே உள்ளனர். அவர்கள் இந்த இராணுவத்தையும் அரசாங்கத்தையும் நம்பவில்லை. எனில், இப்படி வெளிப்படையாக இயங்குகின்ற நிலையை எப்படி அவர்கள் உணர்கிறார்கள்? இதற்கு தோழர் ரமில்ராம், (வயது 25) விடையளிக்கிறார்: ""எங்களைக் கொல்ல நடக்கும் சதிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்கும். மக்களின் உறுதியான ஆதரவு எமக்கு இருப்பதால், அவர்களே எங்களுக்குப் பாதுகாப்பு. எனவே சண்டை நிறுத்தத்தை அறிவித்ததனால் மட்டுமல்ல, வேறுவழிகளிலும் எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.''


இது எப்போதும் சாத்தியமில்லை. தோழர் அதக் கூறும் போது 12,000 மக்கள் கடந்த 10 வருடங்களில் போலீசு மற்றும் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5,000 பேர் மாவோயிஸ்டுகள், 7,000 பேர் சராசரி மக்கள் மற்றும் மாவோயிஸ்ட் அனுதாபிகள். இதுபோக 2,000 மாவோயிஸ்டுகள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். 1,400 தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் "காணாமல்' போய் உள்ளனர். அதாவது கொல்லப்பட்டு விட்டனர். போக்ராவுக்கு அருகே கஸ்கி மாவட்டத்தின் துல்கவுடா கிராமத்தில் மளிகைக் கடைக்காரரான ஆர்த்தி ஷர்மாவின் கணவன், தங்கா ஷர்மா "காணாமல் போனவர்'களில் ஒருவர். ""என் கணவர் ஒரு மாவோயிஸ்ட் தான்'' என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.


சித்திரவதை, கடத்தல், கற்பழிப்புகள் மற்றும் கொலைகள் குறித்த சோகக் கதைகள் நேபாள மக்களின் உண்மைக் கதைகள். ஆனால், மக்கள் காட்டும் உறுதிப்பாடு வியப்புக்குரியது. எளிமையும், அன்பும், உணர்ச்சி வேகமும் கொண்ட நேபாள மக்கள் அனைவரிடமும் உயரிய விழிப்புணர்ச்சி நிலையும், அரசியல் தெளிவும், உறுதியும் இருப்பதை நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம் காணலாம். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை, வறுமை மற்றும் ஒடுக்குமுறைகளால் நொறுக்கப்பட்ட மக்கள் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதியைப் பெற்றுத் தரும் ஒரு சுதந்திரக் குடியரசுக்காகச் சாகவும் தயாராக இருக்கிறார்கள்.


போக்ராவின் கஸ்கி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான தோழர் சுராஜ், தனது இளமைப் பருவத்திலிருந்தே தலைமறைவாக இருந்தவர். பல்வேறு ஆயுதத் தாக்குதல்களில் கலந்து கொண்டவர். சமீபத்திய பெனியில் நடந்த தாக்குதலில் 64 தோழர்களை இழக்க நேரிட்டதைக் குறிப்பிடுகிறார். ஹெலிகாப்டர்களில் எங்கள் மீது குண்டு பொழிந்ததும், நாங்கள் அவர்களைத் திருப்பிச் சுட்டதும் ஒரு சாகச அனுபவம். இறந்த தோழர்களின் நினைவுகள் ஏற்படுத்திய வலி பலநாட்களுக்கு என்னை வருத்தியபடியே இருந்தது''. ""எதுவரினும் எங்கள் கடமையைத் தொடர்ந்து தானே ஆக வேண்டும்''.


இவரைப் போன்ற இளம் மாவோயிஸ்டுகள் மற்றும் இந்தப் போராட்டக் களத்தில் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அல்லாத பிரிவினர் அனைவரும் மிகத் தெளிவான தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகமும், அரசியல்கூர்மையும் கொண்டவர்களாக உள்ளனர். ""இப்போது ஒரு அடி முன் நகர்ந்துள்ளோம். அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அதன் உச்சம், சோசலிசத்துக்கும் மேலானதாக இருக்கும்'' என்கிறார், சுராஜ்.


அவர் தலைமறைவுக் காலத்தில் காட்டில் வாழ்ந்திருக்கிறார். 8 நாட்கள் வரை பசியுடன் இருந்துள்ளார். இராணுவத்தை பலமுறை எதிர் கொண்டிருக்கிறார். ""அப்போது, அது எனக்குச் சிரமமாகத் தோன்றியது. அனைத்தையும் இப்போது யோசிக்கும் போது சுவாரசியமான அனுபவமாக நினைவுகளில் எழுகிறது'' என்று கூறி, புன்னகைக்கிறார். சுராஜின் 21 வயதான மனைவி நிஷாலும் ஒரு மாவோயிஸ்ட் தோழர். அவருடன் மேலும் 4 பெண் தோழர்களைக் கைது செய்த இராணுவம், சித்திரவதைக்குப் பின்னர் கொன்றொழித்தது. சுராஜ் இன்னொரு திருமணத்தை செய்து கொள்வாரா? ஒரு புன்னகையில் தன் வலியை மறைக்கிறார். ""எங்கள் அரசியல் சித்தாந்தத்தை நாங்கள் மணம் முடித்து இருக்கிறோம்... ஆனால், நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள நிலையில், புரட்சியை அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டாமா?'' என்று எளிய பதிலளிக்கிறார்.


அடுத்தநாள் காலையில், கஸ்கிகரகா கொடுஞ்சிறையில் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவந்திகா வெளிப்படுத்திய துயரப் புன்னகை, சுராஜின் மனச்சுமையை ஒத்திருந்தது. 25 வயதிலேயே 3 முறை கைதாகியிருக்கும் அவந்திகாவின் சிறை வாழ்க்கை 6 வருடங்கள். அவருடன் சிறைப்படுத்தப்பட்டிருந்த இளம் பெண் தோழர்கள் ஆஷா, ஷர்மிளா மற்றும் லீலா ஆகியோர் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இருபது வயதுப் பிராயத்தில் உள்ள 14 பெண்கள் மற்றும் 73 ஆண் மாவோயிஸ்டு தோழர்களும் கோஷங்களை எழுப்பியவாறு சட்டமியற்றும் அதிகாரமன்றம் வேண்டி உணவு உட்கொள்ள மறுத்து வருகின்றனர்.


பெண்கள், தாம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டது குறித்து, அவர்கள் தலைகளை தண்ணீர்க் குட்டைகளில் வலியத் திணித்து மூழ்கச் செய்தது, உள் பாதங்களில் திரும்ப, திரும்ப அடித்துத் துன்புறுத்தியது, தூக்கமற்ற இரவுகள் முழுக்க விசாரணை செய்தது என ஏகப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அவர்கள் அனைத்தையும் சொல்லவில்லை. தம்மீது ஏவப்பட்ட இரத்தம் தோய்ந்த வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் சொல்லி அனுதாபம் தேடிக் கொள்ள விரும்பவில்லை. ""எதற்காக இத்தனைப் போராட்டங்களும்?'' நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். ""நேபாளத்திற்கு வேண்டிய சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம்'' என்றனர். ""உங்கள் மாவோயிசத்தின் இலக்கு என்ன?'' ""நேபாளத்திலும் உலகத்திலும் உலகப் புரட்சி கொண்டு வருவதே'' என்றனர்.


எந்த இன்னலையும் தாங்கிக் கொண்டு போராட உறுதி ஏற்ற இளம் ஆண்களும், பெண்களும் மின்னும் நட்சத்திரங்களைக் கொண்ட சிவப்புப் பட்டைகளை தமது தலைகளைச் சுற்றிக் கட்டியவாறு, புரட்சியின் தீர்மானமான சக்தியாக நேபாளம் முழுக்க உள்ளனர். இவர்கள் போலி மோதல் படுகொலையில் கொல்லப்படாத பாக்கியசாலிகள் என்று மட்டும் எனக்குத் தோன்றியது. அஞ்சாத நெஞ்சுறுதி, அரசியல் கூர்மை, தமது அரசியல் நோக்கத்திற்குக் காட்டும் விசுவாசம் அனைத்தையும் வெளிப்படுத்தும் அவர்கள் புன்னகை, மலையிலிருந்து வெளிக்காட்டும் சூரியக் கதிர்களின் பிரகாசத்தை ஒத்திருக்கிறது.


நான் விடைபெறுவதற்காக அவர்களுடன் கைகுலுக்கிய போது என்னைப் பற்றிய கைகளிலிருந்து ஒரு அரவணைப்பும், வீர உணர்வும் என்னுள் படர்வதை உணர்ந்தேன். அநீதிக்கு எதிரான கோபமும், தார்மீக ஆவேசமும் அதன் உக்கிர உணர்ச்சியுடன் ஒன்றாய் மின்னுவதை அவர்கள் கண்களில் பார்த்தேன். தீராத புரட்சி நம்பிக்கை அது ஏப்ரல் புரட்சி நம்பிக்கை போன்றது. ""தோழர்களே உங்களுக்குச் செவ்வணக்கம்'' என்று சொல்லிக் கொண்டு நான் திரும்பி விட்டேன்.


பழைமை எண்ணங்கொண்ட, சீரழிந்த, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகள் ஒருபுறம்; கனவுகளைத் தேக்கி, தமது உயிரைப் பணயம் வைத்து, அவற்றை நிறைவேற்ற துடி துடிப்போடுக் காத்திருக்கும் இளம் லட்சியவாதிகள் மறுபுறம் என நேபாளத்தை இப்போது பார்க்கிறேன்.


இளம் தலைமுறையினர் சுதந்திரத்தையும், நீதியையும் இந்த முதல் புரட்சியின் வழியே பெறவில்லையென்றால், அவர்கள் இரண்டாவது மற்றும் இறுதிப் புரட்சியின் வழியே அதை நிச்சயம் நடத்திக் காட்டுவார்கள்.
ஆம் அது இரண்டாம் புரட்சியாக இருக்கும்!


ஆங்கில மூலம்: அமித் சென்குப்தா, நன்றி: 3.6.2006 தெஹல்கா வார இதழ்.
சுருக்கப்பட்ட தமிழாக்கம்: இளந்தீபன்.

Friday, February 1, 2008

குடிக்கெடுக்கும் குடியரசுக்கு விழா ஒரு கேடா?

Related:
"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை



காந்தி நல்லவரா? கெட்டவரா?

வெட்டிபயல் என்ற நண்பர் பகத்சிங் பிறந்த நாளை ஒட்டி பதியப்பட்ட ஒரு காட்டுரையில் காந்தியை விமர்சித்து வரும் வரிகள் குறித்து தனது மாற்றுக் கருத்தை தெரிவித்திருந்தார்:

//நீங்க காந்தியை பற்றி தவறாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது...
காந்தி உயர்ந்தவரா, பகத் சிங் உயரந்தவரானு கேட்டா எனக்கு ரெண்டு பேரையும் பிரிச்சு பாக்க தெரியாது. தன் நாட்டு மக்களுக்காக உயிரை விட்ட இருவருமே ஒன்றுதான். தங்களின் நம்பிக்கையின் விளைவில் அவர்கள் போராடினார்கள்.//

அவருக்கு விளக்கம் கொடுக்கும் முகமாக் காந்தி குறித்து ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாம் என்று பிரியப்பட்டேன். இங்கு வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் பகத்சிங்கின் தீர்க்கமான பார்வைக்கு முன்பு காந்தியின் வறட்டு பழமைவாத தத்துவம் ஒன்றுமே கிடையாது. அவர்(காந்தி) முற்றிலும் உணர்வுப் பூர்வமான ஒரு மனிதர். அந்த உள்ளுணர்வை தீர்மானித்ததோ அவரது வர்ணாஸ்ரம பிடிப்பு.

**************முன்பொருமுறை மா.சிவகுமாருடன் காந்தி குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதன் பகுதிகளை தருகிறேன்.

நான் மா.சிவகுமாரிடம் கேட்டிருந்த கேள்விகள்:

1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?

2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?

3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?

4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?

5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?

6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.

மா.சி யின் பதிலில் உள்ள ஒரு பகுதி:

***//தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.//***

***//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே.//***

ஆக, இதுதான் காந்தி. இந்த பெருமையை, பழைய காலத்தை ஆங்கிலேயனிடம் இருந்து மீட்ப்பதுதான் அவரது இயங்கியல். இதை தவிர்த்து அவர் மக்கள் விடுதலை என்று பேசியவை எல்லாம் அன்றைக்கு நிலவிய கருத்துக்களால் தாக்கப்பட்டு அவற்றையும் பிரதி நிதித்துவ படுத்த வேண்டிய கட்டாயமே அன்றி வேறல்ல. அப்பொழுதும் அவர் நிலபிரபுத்துவத்தின் நலனில் ஒரு சிறு அளவு கூட சமரசம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில், எப்படி கீழே தள்ளிவிடப்பட்ட காந்தி விசனமுற்றாரோ அதே போலத்தானே உடமைகள் பிடுங்கப்படும் கொழுத்த சுரண்டல் நிலபிரபுவும் விசனப்படுவான் என்பதை அவரால பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்த உடமையும் இன்றி அந்த காலத்தில் அடிமையைவிட கேவலாமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் போராட்டங்களை அவரால் அவ்வாறு பொருத்திப் பார்த்து உணர முடியவில்லை.

மா.சிக்கு சின்னக் கட்ட பொம்மன் என்பவர் கொடுத்த சில பதில்கள்:
*****
காந்தி வைக்கம் போராட்டத்தைச் சிதைத்திடச் செய்த ஈனத்தனமான செய்கையை, தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட, ஞானி இயக்கிய 'அய்யா' எனும் தொடர் அம்பலமாக்கியுள்ளது. அப்போராட்டத்தில், பெரியாருடன் இணைந்து போராடிய காங்கிரசுப் பிரமுகர் ஜார்ஜ் ஜோசப்பை, அப்போராட்டத்தினை விட்டு விலகிடுமாறு காந்தி கடிதம் எழுதினார். வைக்கம் போராட்டத்தில் ஜோசப் ஈடுபட்டபோது திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்தது. அப்போது சிறைக்குள் இருந்த ஜோசப்பிற்கு காந்தியின் வேண்டுகோள் வந்து சேர்ந்தது. "கிறிஸ்தவரான தாங்கள், இந்து மதத்தின் உள்விவகாரத்தில் அக்கரை காட்ட வேண்டாம். விலகிடுங்கள்" என்று. ஜோசப் மனம் நொந்து போனார். மனித உரிமை மீறலை எதிர்த்துத்தான் அவர் பெரியாருடன் இணைந்து வைக்கம் வந்தவர். அவரின் செயலை, இந்த பாவ ஆத்மாவோ, மதரீதியாய்த் தனிமைப்படுத்திடும் இழிவான செயலில் இறங்கியது.

தற்காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள், ராம கோபாலன் எனும் வானரக் கூட்டத்தினர் என்பதை எண்ணிப்பார்க்கலாம். கோவிலிலே தமிழில் வழிபாடு என்று கேட்டால், நாத்திகர்களுக்கு இதைச் சொல்ல உரிமை ஏது? என்று நரித்தனமாய்க் கேட்பார்கள்? ராமகோபாலன் கூட்டத்தின் முன்னோடியாக மோகன் தாசு இவ்வாறாக வெளிப்படுகிறார் பார்த்தீர்களா?

பிற்பாடு ஜார்ஜ் ஜோசப் காங்கிரசை எதிர்க்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போய்ச் சேரும் வேலையை காந்தியே செய்தார் என்று வ.ரா. எழுதி இருக்கிறார்.
மதமாற்றம், கோமாதாவைப் பிரியாணி போடுவது பற்றி, நால்வகை வர்ணம் பற்றி காந்தி மஹ்ஹ்ஹ்ஹான் என்ன கருதினார்?
*****
*****
காந்தியின் எளிமை பற்றிய புரட்சிகர மயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.
செல்வந்தராகவும், பிறப்பில் மேம்பட்ட வைசிய வர்ணத்தவராகவும் பிறந்த காந்தி, எளிய உடை உடுத்துவது என்பது அவ்வர்க்கத்தால் எளிதில் செய்யக்கூடிய செயல் என்பதையும், ஆனால் தூய்மையான உடையோ, ஆடம்பரமான உடையோ மறுக்கப்பட்ட மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், கோட் சூட் அணிந்து அதை மறுப்பதுதான் இங்கு புரட்சிகரமான விசயம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

காந்தியின் மற்ற எளிமைகளைப் பற்றி சரோஜினி நாயுடு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்:-

"அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".

பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.

இந்த மாதிரி வெளி வேசம் போட்ட ஆசாமி எவ்வாறு தன்னிகரில்லா தலைவனானான்?
*****
*****

இந்த தன்னிகரில்லா தலைவலியால், நமது நாடு சந்தித்த இடையூறுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1) வெள்ளையனை எதிர்த்துப் போர் முரசு கொட்டி மாண்ட லட்சுமிபாய்,திப்பு சுல்தான்,கட்டபொம்மன்,பூலித்தேவன்,அழகுமுத்துக் கோன் ஆகிய வீரர்களின் வாட்களோ, இந்த ஆசாமியால் சர்வோதயா/கதர் காரியாலயத்தில் 'கதர் சோப்பு' வெட்டிக்கொண்டிருந்தது.

தோழர் ஜீவானந்தம், 1920களில் காந்தி பக்தராக இருந்த காலத்தில் காரைக்குடியில் காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாசிரமத்திற்கு விஜயம் செய்த வ.உ.சி. சினத்துடன் சொன்ன வார்த்தை "வாளெடுத்துப் போர் புரிய வேண்டிய கைகளைப் போயும் போயும் கைராட்டை சுற்ற வைத்து விட்டாயேப்பா".

2) சௌரி சௌரா போலீஸ் ஸ்டேசனை மக்கள் கொளுத்தித் தம் கோபத்தைக் காட்டியதும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தீராக்காதலர் காந்திக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்.

பின்னே! செய்ய மாட்டாரா என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முதல் உலகப்போரில், பிரிட்டிசாருக்கு ராணுவத்தில் சேர்ந்து தொண்டு செய்ய மக்களிடம் அரும்பாடுபட்டிருந்தார். அதற்கு சற்று முன்னர், தென் ஆப்பிரிக்க போயர் யுத்தத்தில், வெள்ளையனுக்கு கங்காணி வேலை செய்து விட்டுத்தானே இங்கே கப்பல் ஏறி வந்தார்?

3)புரட்சிக்காரன் பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால், அதனை, லாகூர் காங்கிரசுக்கு முன்னரே செய்து விடுங்கள் என்று இர்வினிடம் பேரம் பேசி 'காந்தி-இர்வின்'ஒப்பந்தம் போட்ட துரோகத் தலைவனாச்சே!

4)ஆங்கிலேயனை, அவன் வந்திறங்கிய இந்திய வாசலான பம்பாயிலேயே துரத்தி அடிக்கும் பாய்ச்சலோடு 1946லே இந்தியக் கடற்படையினர் 'தல்வார்' கப்பலில் செய்த ராணுவப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த இவரல்லவா தலைவர்?

5) சக இந்தியரை சுட மறுத்த (வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில்) கூர்க்கா ராணுவப் படையினரின் செயலைக் கண்டித்த தேசத்தலைவரல்லவா?
6)தெலுங்கானா, புன்னப்புரா, வயலார், வயநாடு ஆகிய விவசாயிகள் புரட்சியை ரத்தச் சேற்றில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நசுக்கிக் கொண்டிருந்தபோது 'தர்மகர்த்தா' முறை மூலம் நமது உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வரும் என கிலோக்கணக்கில் அல்வா கொடுத்த ஜென்மம் அல்லவா?
காந்தியின் சாதனைகள் தொடரும்..
*****
*****
அஹிம்சைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் நீர், கீழ்க்கண்ட விசயம் பற்றி என்ன கருதுகிறீர்?

தலித்களின் இரட்டை வாக்காளர் தொகுதியை அம்பேத்கர் ஆதரித்தபோது, அது இந்து தர்மத்தைப் பிளவுபடுத்தி விடும் என்று சொல்லி, அம்முறையைக் கைவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்த காந்தியின் பிளாக்மெயில் அணுகுமுறையும் அஹிம்சைதானா?(உண்ணாவிரதம் என்பதால் அஹிம்சைதானே)உயிரை ஊசலாட வைத்துக்கொண்டு அம்பேத்கரை மிரட்டி 'பூனா ஒப்பந்தத்தில்' கையெழுத்திடச் செய்து, தலித்களின் நலன்களுக்கு எதிராக காந்தி நடந்துகொண்ட அம்முறை, காந்தியின் பக்தர்களான தங்களுக்கு உவப்பானதா?

அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார், அம்பேத்கருக்கு 'அவர் சாகட்டும். அவரின் உயிருக்காகப் பணிந்து போய் தாழ்த்தப்பட்டவர்களின் நலனைப் பலி கொடுக்காதீர்கள்' என்று தந்தி கொடுத்ததையும் இங்கு நினைவுகூர்கிறேன்.

அஹிம்சையை காந்தி யாருக்கு வலியுறுத்தினார்? ஒடுக்கப்படும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மட்டுமே. அரசின் பயங்கரவாதத்தை அவர் எப்போதுமே ஆதரித்துள்ளார். நிலப்பிரபுக்களின் சுரண்டல் அவர் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்தச் சுரண்டல் எல்லாம் என்ன அஹிம்சைப் பரம்பொருளா என்ன?

பசுவைக் கொல்லக் கூடாது என எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள்?பசுவின் கறியே மலிவு விலையில் (கிலோ 60 ரூபாய் இருக்கும். 3 வருடங்களுக்கு முன் சென்னையில் 55ரூபாய்க்கு வாங்கினேன்) ஏழை மக்களுக்குக் கிடைக்கும் அதிகப் புரதம் நிறைந்த உணவு. மேலும் பசுவைக் கொல்வதால் நமக்குக் கிடைக்கும் செல்வம் சொல்லி மாளாது. பேட்டா செருப்பு, கைப்பை, ஜெர்க்கின் என்று தோல்பொருட்களும், மாருதி காரின் சீட்டு, சர்க்கரை வியாதி மருந்து, செல்லப் பிராணிகளின் தீனி, சர்க்கரை சுத்திகரிப்புத் தொழிலில் முக்கிய இடுபொருள், என அதன் பயன்பாடு எண்ணிலடங்கா. பார்ப்பனர்களின் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் பஞ்சகவ்யத்தில் கூட பசுவின் கோரோசனம் ஒரு பங்காகும்.

உபயோகமில்லா மாட்டை எந்த ஏழையாலும் தீனி போட்டுப் பராமரிப்பதென்பது ஏலாத காரியம்.

உயர்சாதி மனோபாவத்துடனும், முசுலீம் எதிர்ப்பு இந்து வெறியாலுமே, பசு வந்தனை பஜனைகள் பாட முடியும்.
*****
*****
காந்தியின் பசு வதை எதிர்ப்பும், சுரண்டும் வர்க்கத்தின் பண்பாடுதான்.அவர் எப்போதுமே ஆளும் வர்க்கக் கருத்தியலுக்கு ஊறு விளைவித்திடாத வகையில் மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதனால்தான் அஹிம்சையை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து மட்டும் எதிர்பார்த்தார்.

அஹிம்சையால் எதிராளியின் மனசை மாற்றுவது எனும் கற்பனையின் விஸ்தாரம் இருக்கட்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நிகழ்வுகளைப் பேசுவோமே.

தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய நாட்டு கோக் நிறுவனம் ஒட்ட உறிஞ்சி நம்மைக் குடிநீர்ப் பஞ்சம் நோக்கித் துரத்த ஆரம்பித்துள்ளது. இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியது. நம் நாட்டில் இத்தகைய எதிர்ப்புகளை அஹிம்சை வழியில் செய்ய அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.

போராடும் மக்கள், இதற்காக ஊர்வலம் நடத்திப் பிரச்சாரம் செய்திட முனைகிறார்கள். ஆனால் கோக்கிடம் காசு வாங்கிய காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கோக் பற்றி நீங்கள் உங்கள் பிரச்சாரத்தில் பேசக் கூடாது என மறுக்கிறது. பாருங்கள்! இங்கே அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோக் ஆலை அமைய இருக்கும் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் கம்சன் என்பவர் அந்த நிறுவனம் தொடங்க அனுமதியை ரத்து செய்து தீர்மானம் போடுகிறார். உடனே, கோக்கின் ஆட்களால் கடத்தப்பட்டு, மர்மமான முறையில் சாகிறார். இது ஹிம்சை. அரசோ கோக் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எதிரி, ஹிம்சையைக் கையாள அரசு மவுனசாட்சியாக நிற்கும்போது, மக்கள் போராடுவதற்குக் கூட அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது.

மக்கள், கோக் ஆலைக்காரன் மனசை மாற்றிட ஏதாவது ஜெபமோ, பஜனையோ பாடிக் கொண்டிருக்க முடியுமா?

நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா?

நிலப்பிரபுத்துவம் உச்சிக்குப் போய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தெலங்கானாவில் ஒவ்வொரு பண்ணையாளருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், அவர்களின் அதீத சுரண்டலும், உழைக்கும் விவசாயக் கூலிகளுக்கோ ஒட்டிய வயிறே சொத்தாக இருந்ததுமே அவர்களைப் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளியது.

இந்த இடத்தில் பண்ணையார்கள் துப்பாக்கியால் விவசாயிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது அவ்விவசாயிகளுக்கு அஹிம்சையை உபதேசிப்பது எவ்விதத்திலும் அவர்களை மேம்படுத்திட உதவி செய்யாது. இல்லையா?

விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு போராடி பல மாவட்டங்களில் பண்ணையார்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பண்ணையார்கள் ஹைதராபாத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். காந்தி ஏழை விவசாயிகளின் இச்செயலை ஏற்றுக் கொள்ளவில்லை.

உடனே அவரின் சீடர் வினோபா தலைமையில் பூமிதான இயக்கம் தோன்றிட விதை போட்டார். அதாவது நிலப்பிரபுக்களே மனசு மாறி உபரி நிலங்களை ஏழைகளுக்குத் தானமாய்த் தந்து விடுவது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கத்தி இன்றி நிலம் சொந்தமாகி விடும். இதன் நீட்சியாக தமிழ் நாட்டில் கூட பின்னாளில் காங்கிரசு அரசு எந்த ஒரு பண்ணையாருக்கும் 45 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என சட்டம் போட்டது. காந்தியின் சீடர்கள்தான் கில்லாடிகளாச்சே. பினாமி பேரில் 45, 45 ஏக்கர்களாய் மாற்றிக் கொண்டார்கள். உதாரணமாக கோவிந்தசாமி மூப்பனார்(கருப்பையா மூப்பனாரின் அப்பா) தனக்கு சொந்தமாய் இருந்த 1000 ஏக்கர் நிலங்களில் பெரும்பாலானவற்றை டிரஸ்ட் ஒன்றின் கீழ் மாற்றி ஏய்த்தார். சிலவற்றை பினாமிகளாய் தனக்கு சாராயத்தில் சோடா கலந்து தரும் வேலை செய்த எடுபிடி 'சோடா மாணிக்கம்' என்பவரது பேரில் கூட 45 ஏக்கர் எழுதி வைத்தார்.

இவ்வாறு நிலப்பிரபுக்களின் நலன் சரிந்து விடாதபடிக்குத்தான் காந்தியின் 'தர்மகர்த்தா' பொருளாதார முறை விளங்கியது. காந்தியின் மனப்பான்மை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கானதில்லை.
*****
மா.சிக்கு அசுரனின் சில பதில்கள்:
*****
ஒவ்வொரு சமூக கட்டங்களையும் இயக்கும் பிரதான முரன்பாடு என்ன? காந்தி எந்த வர்க்கம்? அவரது பின்புலமாக உள்ள சமூக கட்டங்கள் என்ன? அவர் மீது ஆளுமை செலுத்திய தத்துவங்கள் என்ன? அன்றைய காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகள் என்ன என்று பல்வேறு விசயங்களை கண்க்கில் எடுத்து ஆய்வு செய்தால் மிஞ்சுவது காந்தி சமூக விடுதலைக்கான ஒரு தலைவர் அல்ல. அவரிடம் தீர்வு என்று சொல்லுவதற்கான விசயங்கள் ஒன்றும் கிடையாது, அவர் சமூகத்தை பின்னுக்கிழுக்க முயற்சி செய்தவஎ என்பதுதான் முடிவாக வருகிறது. மேலும் நீங்களே சொல்லுவது போல் அவரை நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனம் ஆளுமை செலுத்துகிறது.
*****
*****சிவகுமார்:

உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.

அசுரன்:

இதை நான் மறுக்கவே இல்லை. இன்னும் இந்த விசயத்தை மனதில் கொண்டுதான் எனது மாப்ளா கலகம் கட்டுரையில் கூட காந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இவை ஒரு தனிமனிதனுக்கு நல்ல முன்னுதாரணம். இவை ஒரு நல்ல மனித சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலம் கருதி வாழ்வதற்க்கு நல்ல முன்ணுதாரனம். இவற்றை கட்டாயம் எந்த ஒரு சமூகப் போராளியும், தலைவரும் தனது பண்பாடாக சுவிகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை எந்த காலத்திலும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாது.

காந்தியின் நேர்மையை அவரது 'அறிவியல் பூர்வமான சித்தாந்தமில்லா' சுய தேடலை இப்படித்தான் அன்றைய ஏகாதிபத்தியம் தனக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் எனது மாப்ளா கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்: ""பிறகு பாவம் காந்தி நிரந்தர முகமூடி ஆகிவிட்டார்""

இங்கு "பாவம்" என்ற சொல்லை - அவர் ஏகாதிபத்திய சதிகளுக்கு நீங்கள் அவரிடம் இருப்பதாக(//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு//) சொன்ன பல்வேறு நிலபிரபுத்துவ தத்துவ தாக்கங்கள் காரணமாக பலியானார் - என்பதை உண்ர்ந்து பயன்படுத்தினேன்.
*****

*****சிவகுமார்:
எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.

அசுரன்:

அவர் எப்பொழுதுமே சூழ்நிலைக் கைதிதான்(may be some exceptional examples be exist). இதை நேரு பல இடங்களில் பதிவு செய்துள்ளார். நேரு கூறுவதை தொகுப்பாக கூறினால் "அவர் எப்பொழுதும் குழப்பமான மனநிலையில் முடிவுகள் தெளிவாக எடுப்பதில் குளறுபடிகளுடனேயே இருந்தார்" என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இது மிக எடுப்பாக வெளிவந்தது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவரிடம் ஏற்பட்ட தடுமாற்றங்களின் போது. காந்திக்கும் அன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் இவ்விசயத்தில் சில புரிதல்களுக்கு உதவும்.

அவர் பெரும்பாலான நேரங்களில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்துள்ளார் சில நேரங்களில் மக்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார் (வைக்கம் போராட்டம், தெலுங்கான போராட்டம்- மேலும் பல எடுத்துக்காட்டுகள் ஞாபகம் இல்லை). ஆனால் மிக பெரும்பாலான நேரங்களில் ஆளூம் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி மக்களை கேட்கிறார்.

நிலபிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்த நிலங்களை திருப்பி கொடுக்க சொல்லி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர்களை கண்டித்து, தனது அரசு வரும் பொழூதும் இதே போல் நீங்கள் அடிபணியாமல் போக வாய்ப்புள்ளது என்று கண்டிக்கிறார். அவர்களுக்கு(57 வீரர்கள்) தண்டனை கொடுத்ததை சரி என்றவர். இவற்றின் மூலம் ஒரு அரசு என்ற அளவில் தானும் கூட வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துகிறார்.

அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை உந்தித் தள்ளுகிறது.

(//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //
//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//)
அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால் ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.

அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.

நான் மேலே சொல்லியிருந்தேனே காந்தியை ஆய்வு செய்வதில் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்று, அது இந்த விசயம்தான்:அதாவது காந்தியை போராட்டதுக்கு இழுத்த விசயத்தை அடையாளம் கண்ட தங்களால் அதுதான் அவரது ஒவ்வொரு முடிவையும் தீர்மானிக்கும் காரணியாக இருந்ததை கவனிக்காமல் விடுகிறேர்கள்.
## வன்முறையை ஆதரித்தாக சொல்லுவது அந்த துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையிலும், பகத்சிங் பிரச்சனையிலும் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்ததை. குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையில் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்ற வீரர்களை கண்டிக்கிறார்.
*****
*****
சிவகுமார்:
காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது

அசுரன்:
இது உண்மை. அன்றைய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்யுங்கள். சந்தைக்கான பகுதிகள் முற்றிலுமாக ஒரு சில ஏகாதிபத்தியங்களின் கையில் மாட்டிக்கொண்டு. சந்தைக்கு புதிதாக நாடுகள் இன்றி ஏகாதிபத்தியங்கள் நேரடியான ஒரு மோதலுக்கான சூழல். இவற்றை அன்றைய லெனினுடைய பல்வேறு புத்தகங்களில் காணலாம். அமேரிக்கா தனக்கு சந்தையில் பங்கு வேண்டி அரசியல் செய்தது, ரஸ்யா என்ற தத்துவம் நிதர்சனமான நிலை, ஜப்பானின் வளர்ச்சி, ஜெர்மனியின் தொழிற்புரட்சி, இந்தியாவில் ஒரு கம்யூனிச எழுச்சிக்கான சூழல் இப்படி இந்தியாவுக்கு கிடைத்த போலி சுதந்திரத்தில் உலக, உள்ளூர் நடப்புகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இதில் காந்தியின் பங்கு நிச்சயமாக நெகடிவ்தான்.

காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையுமே தொகுத்துப் பார்த்தால் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் இவர் மக்களின் குரலாக முன்வந்து பிசுபிசுத்துப் போகும் போராட்ட வழிமுறைகளை சொல்லுவார். பிறகு பின்வாங்குவார் . இதன் மூலம் தற்காலிகமாக மக்கள் மீண்டும் போராடும் மனநிலைக்கு வர இன்னும் ஒரு 5 அல்லது 10 வருட அவகாசம் கொடுப்பார். இதற்க்காக பல்வேறு போராட்டங்களில் பிரிட்டிஸ் அரசால் நன்றியுடன் நினைவுகூறப்பட்டுள்ளார்.

காந்தி உண்மையில் சுதந்திரம் என்ற விசயத்தை தள்ளிப் போட்டார். இது காந்தி என்ற தனிமனிதரை மட்டும் பார்க்காமல் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்தால் புரியும்.

காங்கிரஸ் என்ற கட்சியை ஆங்கிலேயனே உருவாக்கியது ஏன்?"வெடி மருந்துகள் நிரப்பட்ட பீரங்கி திரி கொழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக" அன்றைய பிரிட்டிஸ் அரசு இந்தியாவின் நிலையை சொல்லுகிறதே அப்பொழுது காந்தி சிறுவன்தான்.

எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அழிக்கும் பழைய தந்திரம் தான் அது(இன்றைக்கு WSF அதுபோன்ற ஒரு அமைப்புதான்). பிரிட்டிஸ் அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா தனக்கான அமைப்பை தானே கட்டிக்கொள்ளும் சூழல் அன்று நிலவியதால். பிரிட்டிஸ் அரசே அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் காங்கிரஸ்.

காங்கிரஸ் பத்தாத பொழுது பாராளுமன்ற செட்டப், தேர்தல் என்று சலுகைகளை கொடுத்து கொடுத்து போராட்டத்தை தள்ளிப் போட்ட பிரிட்டிஸ் அரசுக்கு காந்தியும் அப்படித்தான் பயன்பட்டார் என்பது பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து சூழல், அவற்றை காந்தி சுவிகரித்து நிர்முலமாக்கியதை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.

முதலுக்கே மோசமாக பம்பாய் தொழிலாளர் கலகம், தெலுங்கானா விவசாயிகல் கிளர்ச்சி, இரண்டாம் உலக்ப்போரால் பலவீனமான பிரிட்டிஸ் அரசு, அமேரிக்க பொருளாதார உதவி வேண்டி நிற்க்கும் பிரிட்டிஸ் அரசின் நிலை, சந்தையில் பங்கு கேட்கும் அமேரிக்கா.....

இச்சூழலில் ஏற்கனவே அவர்களது ஏஜன்டுகளாக, முகமூடிகளாக இருந்த காங்கிரஸ் பிற்போக்கு கோஸ்டிகளிடம் நாட்டை ஒப்புடைத்துவிட்டு. தங்களது தொடர் சுரண்டலுக்கு உறுதி செய்துகொண்டு கிளம்பிவிட்டனர்.(இது பற்றிய எனது ஆங்கில பதிவை பார்க்கவும் அதில் ஒரு தமிழ் கட்டுரை உள்ளது:http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html )
காமராசர் விசயத்தில் ராஜாஜிக்கு ஆதரவாக காந்தி செய்ததை எந்த லிஸ்டில் சேர்க்க. அதில் அவரது மேல்சாதி தாக்கம் வேலை செய்யவில்லை என்று கூறுகிறேர்களா?

மேலும் நீங்கள் சொல்லுவது போல் தீண்டாமை போராட்டத்தை காந்தி தொடங்கவில்லை. வைக்கம் போராட்டத்திற்க்கு தீர்மானம் இயற்றக்கூட தாயாராயில்லை அன்றைய காங்கிரஸ்.

அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர் தள்ளப்பட்டதுதான்.

அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல விரும்புவதில்லை.
காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.
*************

யாருக்கு அஹிம்சை:இவை தவிர்த்து அஹிம்சா தத்துவத்தின் மூல வேர் எங்குள்ளது என்று தேடினால், அது வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு நிலபிரபுத்துவ மயக்கத்தில் அதன் பின்பு அணி திரண்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நத்தை மனோபாவத்தில்(அடக்குமுறையைக் கண்டால் கூட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டு விதியை நொந்து மருகும் மனோபாவம்), அடிமை மனோபாவத்தில் உள்ளது.

ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.

அசுரன்
நன்றி. அசுரன்

குஜராத் - மருதையன் உரைகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது