Saturday, January 26, 2008

"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

நன்றி: இரும்பு
டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது