Tuesday, November 27, 2007

'நாட்டாமை' யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை

""நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார். அவரது இரசிகர்களால் "பச்சைத் தமிழர்' என்று அழைக்கப்படும் சரத்குமாரை கழிசடை என்றும் சுயநலவாதி என்றும் மதிப்பீடு செய்வதற்குக் காரணம் நமது விருப்பமல்ல; இந்த "சுப்ரீம் ஸ்டாரி'ன் வரலாறே அப்படித்தான் உள்ளது.

தான் விஜயகாந்த் போல திடீரென்று அரசியலுக்கு வரவில்லை எனவும், பதினைந்து ஆண்டுகளாக இரண்டு கழகங்களிலும் தீவிரமாகப் பணியாற்றியவன் என்றும் தனது கட்சியைத் தொடங்கியதற்கான தகுதிகளை சரத்குமார் முன்வைக்கிறார். உண்மையில் இவரது தீவிரப் பணி என்னவாக இருந்தது?

இளைஞனாக இருந்த போது பெங்களூரு தினகரனில் பணியாற்றினார். பின்னர், பம்பாய் சென்று ஆணழகன் ஆனார். பிறகு, சென்னை வந்து வட்டித்தொழில் செய்தார். சினிமாவுக்கும் பைனானைஸ் செய்தார். சினிமாத் தொடர்பு வந்த பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து, வில்லனாக அறிமுகம் ஆனவர், இறுதியில் கதாநாயகனானார். ""நாட்டாமை'' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு வந்த ஜெயலலிதா முன்பு இரட்டை இலை சட்டை போட்டு சேவகம் செய்தார்.

இந்த அடிமையிடம் அனுமதி பெறாமலேயே ஜெயா டி.வியில் ""நாட்டாமை'' படம் வெளியிடப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தி.மு.க.வில் இணைந்தார். இப்படி இவர் அரசியலில் இணைந்ததற்கும், பிரிந்ததற்கும் கொள்கையோ, மக்கள் நலனோ காரணமல்ல. பால்கனியிலிருந்து இரசிகர்களை மந்தைபோலப் பார்க்கும் ஒரு நட்சத்திர கதாநாயகனது திமிர்தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கி வைத்தது. இடையில், தங்களது பைனான்ஸ் தொழிலுக்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கி ராயப்பேட்டை நிதி நிறுவனத்தை திவாலாக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவராக இருந்தார். சொத்துப் பிரச்சினையாலும், நக்மா பின் சுற்றியதாலும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ராதிகாவின் கம்பெனிக்காக டி.வியில் ""கோடீஸ்வரன்'' நிகழ்ச்சியை நடத்தியபோது, ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. சரத்குமாரின் கடனை ராதிகா அடைப்பது எனவும், சரத்குமார், ராதிகா கம்பெனிக்காக திரைப்படத்தில் நடிப்பது என்றும் வர்த்தக ரீதியில் பேசிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நடிகர் என்ற முறையிலும், ராதிகாவுக்கு கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தாலும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்து, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல், தி.மு.க. தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் பின்புலமாக நாடார் சாதி பத்திரிகை அதிபர்களும், தொழிலதிபர்களும் சாதியை வைத்து சரத்குமாரை முன்நிறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தி.மு.க.விடமிருந்து இராஜ்ய சபா உறுப்பினர் பதவி சன்மானமாகக் கிடைக்கிறது.

ஆயினும் அவரது அதிகார வெறி அடங்கவில்லை. தனது இரசிகர்களை வைத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என சுவரொட்டி ஒட்டச் செய்தார். நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என அச்சாதி பிரமுகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார். ஏதோ ஒரு பொங்கல் விழாவில் தயாநிதி மாறன், நடிகர் விஜயை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டார். இதனால் தன்னைப் புறக்கணித்து விட்டதாகப் புரளி பேசினார். அறிவாலயத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவமரியாதை அடைந்ததால் தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகக் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பினார். எல்லாம் எலும்புத் துண்டு கிடைக்காதா என்ற நப்பாசைதான்.

ஆயினும் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் சாகும் வரை கலைஞரின் தலைமையில் செயல்படுவதாகவும், செத்தால்கூட தன் உடல் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப் படவேண்டும் என முழங்கினார். முழங்கிய எச்சில் உலருவதற்குள் 2006 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவில் இணைந்தார். இதற்காக சாராய மன்னன் விஜய மல்லையாவின் தனி விமானத்தில் பச்சைப்புடவை கட்டிய ராதிகாவுடன் மதுரை சென்று, பின்னர் ஆண்டிப்பட்டியில் பாசிச ஜெயாவிடம் போஸ் கொடுத்தவாறு சரணடைந்தார். இந்தச் சரணடைவு உண்மையில் ஒரு வர்த்தக பேரமாகும். இதன் வரவுசெலவு அம்சங்கள் சிங்கப்பூரில் சசிகலா நடராஜனுடன் பேசி முடிவு செய்யப்பட்டன. இதன்படி சரத்குமாருக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான தொகையும், ராடன் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் தொலைக்காட்சி நேரமும் உறுதி செய்யப்பட்டது.

ஆயினும் பேசியபடி எலும்புத் துண்டுகள் ஜெயலலிதாவால் தரப்படவில்லை. இதனால் கசமுசா ஏற்பட்டு ராதிகா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். சரத்குமாரும் தனக்கு அரசியல் செய்ய நேரமில்லை என்று யாரையும் குற்றம் சாட்டாமல் நாசூக்காக அ.தி.மு.கவிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதியில் நாடார் சாதி பிரபலங்கள், சரத்குமாரை வைத்து தனி ஆவர்த்தனம் தொடங்கினால் மற்ற கட்சிகளிடம் பேரம் நடத்த தோதாய் இருக்கும் என்று முடிவு செய்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டனர். நாடார் சாதி மக்களை விற்றுக் காசு பார்ப்பதற்கென்றே "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தொடங்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரிடமிருந்து வரும் ஒவ்வொரு அரசியல் ரீதியான அறிக்கையிலும் அவரது வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும். தற்போது சன் டி.வி.யில் ராடன் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், சன் டி.வி.யின் டி.டி.எச். ஒளிபரப்பை ஆதரித்தும் தி.மு.வைக் கண்டித்தும் சரத்குமார் அறிக்கை வெளியிடுகிறார்.

தற்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி பா.ஜ.க எழுப்பிய இராமர் பாலம் பிரச்சினையில் இந்து மதவெறியர்களின் அணியில் இருந்து கொண்டு, ""இந்துக்களைப் புண்படுத்தியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கொழுப்புடன் அறிக்கை விடுகிறார். "எதிர்காலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் மந்திரியாக மாட்டோமா' என்ற பேராசைதான்!

1966இல் காமராசரைக் கொலை செய்ய டெல்லியில் அவரது வீட்டுக்குத் தீ வைத்த இந்து மதவெறியர்களை ஆதரித்துக் கொண்டே, சாதி ஒட்டுக்களைக் கவர்வதற்காகவும், காசு வசூல் செய்து தின்னவும், காமராசருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக முழங்கும் இந்தப் பிழைப்புவாதி, தென்மாவட்ட மக்களுக்கும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் அப்பட்டமான எதிரி என்பதே உண்மை.

தனது சாதி மக்களை வைத்து உயர் பதவி அடையவேண்டும் என்று அரசியலில் குதிக்கும் சரத்குமார், உண்மையில் நாடார் மக்களுக்குச் செய்தது என்ன? தாமிரபரணி நீரை கொக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சி எடுப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு — அதில் கணிசமானோர் நாடார்கள் — இழைக்கப்படும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராக சரத்குமார் வாய்திறக்கவில்லை என்பது மட்டுமல்ல; சமீபத்தில் கோக்கில் பூச்சி மருந்து கலந்திருப்பது சந்தி சிரித்து அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா, ""கொக்கோ கோலா பாதுகாப்பானது''' என்று விளம்பரப் படத்தில் நடித்துச் சிபாரிசு செய்தார். நாடே காறி உமிழ்ந்தது. ஆனால், "நாட்டாமை'க்கு எச்சில் பிரச்சினை அல்ல; காசு மட்டும்தான் குறி.

சில்லறை வணிகர்களில் பெரும்பாலானோர் நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள். இவர்கள் வாழ்வை அழிக்க வந்துவிட்ட ரிலையன்ஸை எதிர்த்து வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தபோது, "நாட்டாமை' ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தன் சொந்த சாதி மக்கள் மீது இந்த வேடதாரி வைத்திருக்கும் நேசத்தின் இலட்சணம் இதுதான். தற்போது டைட்டானியம் ஆலை விவகாரத்திலும் ""இந்தியாவின் தொழில் தந்தையான டாடாவை நான் எதிர்க்கவில்லை. உரிய விலை கொடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை'' என்று தரகு வேலை பார்த்தார் இந்த வியாபாரி.

இத்தகைய பச்சையான சுயநல, சந்தர்ப்பவாத, துரோகிகள் கட்சி ஆரம்பிப்பதும், முதல்வராகப் போவதாகப் பேசித் திரிவதும் மக்களுக்கு மாபெரும் அவமானம். இந்த அவமானத்தைத் தீர்க்கவேண்டுமெனில் இத்தகைய பேர்வழிகள் அரசியல் என்று பேசினாலே அடித்துத் துரத்தவேண்டும் அல்லது முளைக்கும் போதே "மணிமண்டபம்' கட்டி விடவேண்டும். அதையும் குறிப்பாக நாடார் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களே செய்து முடித்தால், சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.

பச்சையப்பன்

1 comment:

கருப்பன் (A) Sundar said...

சரத்குமாரெல்லாம் அரசியலில் நிலைப்பது அவ்வளவு எளிதில்லை. அவருடய மாநாடு நடந்த அதே நாளில் எனது தங்கையின் கல்யாணமும் மதுரையில் நடந்தது. நெரிசல் அதிகமாக இருக்கும் என லேசாக பயந்தேன் ஆனால் சுத்தமாக கூட்டமே இல்லை. விஜயகாந்த் மாநாடு நடத்திய அன்றும் மதுரையில் தான் இருந்தேன், அன்றைக்கு மதுரையில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இருப்பினும் விஜயகாந்த்தால் குறிப்பிடத்தக்க அளவு சாதிக்க முடியவில்லை, சரத்குமாரெல்லாம் நிச்சயம் காமடியன்தான்!!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது