கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும் 'சிறுவணிகத்தை அழிக்கும் ரிலையன்ஸ் ·ப்ரஸ்'
இன்று நீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு தடை என்று உத்தரவு பிறப்பித்தவுடன் "அது சமுக நீதிக்கு எதிரானது" என்றும், "நீதிமன்றத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை" என்றும் கூறி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து பந்த் நடத்தினார் கலைஞர். ரிலையன்ஸ் கடைதிறப்பதால் பாதிக்கப்படும் சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம் நடத்தும் போது அதே சமூக நீதி அமைதி காக்கிறது.
இடஒதுக்கீட்டுக்குத் தடை என்றால் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமுகநீதி பேசும் இவர்கள், ரிலையன்ஸ் பிரஷ் வருவதால் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் என்று தெரிந்தும் உயர் ஜாதி பனியாவான அம்பானியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.
இன்று ரிலையன்ஸ் செல்போனில் 24 மணி நேரமும் சன் டி.வியை கண்டுகளிக்கலாம் என்று விளம்பரம் செய்கிறான், இதனை சிவப்பு கம்பளத்தோடு சேர்த்து பார்க்கும் போது அம்பானிக்குள் கலைஞரும் அடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
14..... 24....ரிலையன்ஸ் கடைகள் திறப்பு...கோயம்பேட்டில் 40% வியாபாரம் பாதிப்பு, சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம், கடையடைப்பு என தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கும் போது கலைஞர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
பா.விஜய் எழுதிய நூல் வெளியீட்டுக்கு சென்று கொண்டும் (இந்த வித்தக கவிஞர்தான் 'சின்ன விடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா' என்று பாடல் எழுதியவர்), அம்மாவின் கருத்து மிக்க விமர்சன அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
மற்றபடி ரிலையன்ஸால் பாதிப்பு இல்லை என்று குங்குமத்தில் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ரிலையன்ஸ் பிரஷ்-ஆல் எந்த பாதிப்புமில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே, அவனை ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டால் பதில் இல்லை...
சரி இந்த விஷயத்தில் மற்ற தலைவர்களை பார்த்தால், பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் எதிர்கட்சியான அம்மா.. போராட்டம் நடக்க ஆரம்பித்தவுடன் ரிலையன்ஸை எதிர்த்து அறிக்கை விட்டார். இப்ப உத்திரபிரதேசத்திற்கு சென்று அம்பானியின் கூட்டாளியான முலாயம் சிங்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். இவர் இங்கு அம்பானியின் ரிலையன்ஸை எதிர்ப்பார், மேடை போட்டுப் பேசுவார் என்று எதிர் பார்க்க முடியுமா? அப்படி யோசிப்பதற்குத்தான் என்ன அடிப்படை உள்ளது?
அடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.
இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?
அடுத்து சொல்லில் மட்டும் மார்க்சியம் பேசும் சி.பி.எம் யின் DYFI..இன்று மாநாட்டு கோஷங்களுடன் சேர்த்து ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்தும் சுவரொட்டி எழுதி வருகின்றனர். இதை விட மோசடி இருக்க முடியாது. ஏனெனில் இவர்கள் ஆட்சியின் இருக்கும் மேற்கு வங்காளத்தில் தான் ரிலையன்ஸின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. டாட்டா, சலிம் நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை பறி கொடுத்துவிட்டுப் போராடும் மக்களைச் சுட்டு கொன்றும் , ஒடுக்கியும் வருகிறது, சிபிஎம் அரசு. இதே ரிலையன்ஸ் பிரஷ்க்கு கூட அனுமதி வழங்க புத்ததேவ் பட்டாச்சாரியா தயாராகி விட்டார்.ஆனால் DYFI இங்கு ரிலையன்ஸை எதிர்க்கின்றனர்.
மற்றொரு தலைவர் திருமா.. இவர் எல்லாரையும் விட மிக அறிவுடன் ரிலையன்ஸால் பாதிப்பே இல்லை என்று சொல்லி விட்டார். இவர் கட்சியின் சங்கம் தான் கோயம்பேட்டில் பெரியது. கோயம்பேட்டில் மூட்டை தூக்கி , கூறு போட்டு காய்கறி வாங்கி விற்பனை செய்யும் தலித் மக்கள் தாங்கள் பாதிக்கப் படுவதாகச் சொல்லிப் போராடுகின்றனர். ஆனால் இந்த 'வாழும் அம்பேத்கர்' பாதிப்பு இல்லை என்கிறார்.
இன்று சட்டசபையின் ரிலையன்ஸ் பிரஷ் பற்றி இவர்களின் எவரும் வாய்திறப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் அனைவருக்கும் அம்பானிக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை அறியலாம்.
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மக்கள் போராட்டங்களை நாம் திரும்பிப் பார்ப்போமானால் அவை 'வேலைகொடு' என்றோ, 'சோறு போடு' என்றோ, 'கல்வி, மருத்துவமனை வேண்டும்' என்றோ இருப்பதை விட 'எங்களை வாழவிடு' என்றுதான் இருக்கிறது.
கடந்த மாதம் நந்திகிராமத்தில் மக்கள் தங்களது உயிராதாரமான நிலத்தைப் பன்னாட்டுக் கம்பெனியின் லாபத்திற்காகக் கொடுக்க முடியாது என்று போராடினார்கள். அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கு முன்பு, கலிங்க நகர் பழங்குடி மக்களின் வாழ்விடமான, கனிமவளம் மிக்க காடுகளை டாட்டாவுக்கு விற்பதை எதிர்த்துப் போராடிய பழங்குடிமக்களைச் சுட்டு வீழ்த்தினர். அதற்கு முன்பு டெல்லி விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களது போராட்டமும் வீணாகி டெல்லி விமான நிலையம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, இன்று சென்னை விமான நிலையத்தையும் தனியாருக்கு விற்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
வீட்டைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து விட்டுக் கடைசியில் அந்த வீட்டுப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியைக் குறிவைத்துப் பறிக்கும் போது அப்பெண் "இதைமட்டுமாவது விட்டுவிடு" என்று கதறுவதைப் போலத்தான், 'எல்லாவற்றையும் கொள்ளையடித்தாய் பொறுத்துக்கொண்டோம் ஆனால் இன்றைக்கு எங்களை உயிர்வாழக்கூட விடாமல் தாலியறுக்கிறாயேடா நாயே!' என்று மக்கள் போராடுகிறார்கள்.
இப்படி அரசாங்கம் - தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத் தான் செயல்படுகிறது என்பதனை மறைக்கத்தான் மக்களுக்கு 'இரண்டு ரூபாய்க்கு அரிசி', 'இலவச டி.வி' என்று கலைஞர் வழங்குகிறார். இது கூட இவர்கள் கண்டுபிடித்தது அல்ல.அன்று ஜெர்மனியில் நாஜிக்கட்சி தொடர்ந்து மக்களுக்கு எதிராக அடக்குமுறை செலுத்தி வரும் போது மக்கள் நமக்கு எதிராக போராட மாட்டார்களா என்று கட்சிக்குள்ளே ஒரு விவாதம் வந்த போது ஹிட்லர் கூறினான் ' மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும் , சர்க்கஸ் மட்டுமே' என்று. அதைத்தான் இன்று மக்களுக்கு ரொட்டித் துண்டுக்குப் பதிலாக 2 ரூபாய் அரிசியும், சர்க்கஸ¤க்குப் பதிலாக கலர் டி.வி யும் வழங்குகிறார் கலைஞர்.
இன்றைக்குக் காசு இருந்தால் மட்டுமே நல்ல கல்வி பெற முடியும். இல்லையென்றால் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும். பணவசதியிருந்தால் மட்டுமே அப்பல்லோவுக்குப் போய் மருத்துவம் பார்க்க முடியும். இல்லையென்றால் அரசு மருத்துவமனைக்குப் போய் இன்னும் பல வியாதிகளை வாங்க வேண்டும். என்று பணம் இருத்தால்தான் உயிர்வாழலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இப்படி மக்களைப் பற்றி எந்தக் கவலையுமின்றி இந்த அரசு இருக்கையில் மக்களாகப் பார்த்து தாங்கள் உயிர் வாழத் தானாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, 5 வட்டி 10 வட்டிக்குக் கடன் வாங்கி, ஒரு சிறு தள்ளுவண்டி, தரைக்கடை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கும் ஆப்பு வைக்க அம்பானியைக் கொண்டு வருகின்றனர்.
இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு எல்லா முயற்சிகளும் செய்து விட்டுக் கடைசியில் வேறு வழியின்றி விவசாய நிலத்தை, குடியிருந்த வீட்டை விற்றுப் பணம் கொண்டுவந்து ஒரு சிறு மளிகைக் கடை நடத்தி எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்று நம்பி இருக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட வந்தது 'ரிலையன்ஸ் பிரஷ்'
'போட்டி போடு' என்று வாதாடும் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கும் இவர்கள்தான், 250 ரூபாய் காய்கறி கடை வைத்துப் பிழைக்கும் ஒரு பெண்னை , 25,000 கோடி போட்டு தொழில் நடத்தும் அம்பானியுடன் போட்டு போடச் சொல்கிறார்கள்.
ரிலையன்ஸ் பிரஷ்ஷால் நன்மை என்ன? என்று கேட்டால் , வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார் ப சிதம்பரம். சரி. எத்தனை பேருக்கு? புதிதாக வேலை வாய்ப்பை அம்பானி உருவாக்குகிறானா என்றால் அது இல்லை. இருக்கின்ற 18 லட்சம் சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகளின் வேலையைப் பறித்து விட்டு வெறும் ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை தருவானாம். இந்த அயோக்கியத்தனத்தைத் தைரியமாக இந்த ஏகாதிபத்திய அடிமை கூறுகிறது.
இத்தகையதொரு தனியார்மயம், தாராளாமயம் , உலகமய நடவடிக்கை தான் அனைத்துத் துறைகளில் முழு வீச்சாக இந்த ஆளும் வர்க்க அடிமைகளால் தினத்தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தான் நாடு மறுகாலனியாக்கத்துக்கு உட்பட்டு வருகிறது என்று நாம் சொல்கிறோம்.
இன்று நாட் டில் இருப்பது இரண்டே அணிகள் தான்.
ஒன்று அம்பானி, டாடா , வால்மார்ட் போன்ற பன்னாட்டு,தரகு முதலாளிகள் - அவர்களுக்காக ஏவல் வேலை செய்யும் ஓட்டு கட்சிகள் இவை அனைத்தும் ஒரு அணி.
சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகள்,தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் மக்கள் ஆகிய நாம் ஒரு அணி.
நாமாக ஓரணியில் திரளாவிட்டாலும் அவன் இன்று நம்மை ஓரணியில் திரள வைக்கிறான்.
அரசாங்கமே அவன் பின்னால் உள்ளது, அரசாங்கமே முடிவு செய்து விட்டது என்று புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை, துணிந்து அவனா , நம்மளா என்று பார்த்து விடுவோம். நம் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குபவனை பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா ? போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா? வாருங்கள், அத்தகையதொரு போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் என்று அழைக்கின்றோம்.
(27-4-07 புரசைவாக்கத்தில் தோழர் மருதையன் உரையில் இருந்து தொகுக்கப்பட்டது)
RELATED
1 comment:
சொல்லும் சில கருத்துக்களுடன் ஒத்துப் போக முடியவில்லை எனினும் மொத்தத்தில்
சிறந்த முறையில் தொகுக்கப் பட்ட கட்டுரை..பாராட்டுக்கள்
Post a Comment