Saturday, September 1, 2007

அணு ஒப்பந்தமும் அத்வானி சர்க்கஸும்!!

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாஜக நிலை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி மீண்டும் ஒரு நழுவல் விளக்கத்தை அளித்துள்ளார்.
..
அணு சக்தி ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் பாஜக எதிர்த்து வந்தது. பின்னர் இடதுசாரிகளுடன் சேர்ந்து மத்திய அரசை விமர்சித்து வந்தது.
.
ஆனால், திடீரெ அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. நாட்டு நலனைக் கருதி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அத்வானி அறிவித்தார். ஆனால் பாஜகவின் இந்த பல்டி கட்சிக்குள் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
..
இதையடுத்து தனது பேச்சு குறித்து அத்வானி புதிய விளக்கம் தந்துள்ளார். இது இன்னொரு 'அந்தர் பல்டி'யாக கருதப்படுகிறது. அவர் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாஜக நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நான் கூறியதற்கும், பாஜகவின் நிலைக்கும் எந்த முரண்பாடும் இல்லை. தற்போதுள்ள வடிவில் 123 ஒப்பந்தம் பாஜகவுக்கு உடன்பாடானது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் பேசிய பேச்சையும், எனது நிலையையும் பாஜக நாடாளுமன்றக் கட்சியிடம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளேன்.
..
அமெரிக்காவின் ஹைட் சட்டம், இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு உள்ளது என்று நான் கூறியுள்ளேன்.
..
இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால், அது நமது நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்கி விடும். நமது பாதுகாப்பு திட்டங்களும் கேள்விக்குறியாகி விடும் என்று நான் கூறியுள்ளேன்.
..
இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் ஹைட் சட்டம் உள்ளிட்ட பிற அமெரிக்க சட்டங்களை நாம் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவற்றை நாம் ஏற்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயல்படுவது என்பதை விட அமெரிக்காவிடம் சரணடைந்து செயல்படுவது என்ற நிலை ஏற்படும்.
..
அதை பாஜக ஏற்காது. 1962ம் ஆண்டு அணு சக்தி சட்டத்தை இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் 123 ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் சமாளிக்க முடியும். இந்திய, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணிக் கட்சிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவை பாஜக ஏற்காது.
..
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக முதலில் கூறிய அத்வானி தற்போது நான் முழுவதுமாக அதை ஆதரிக்கவில்லை என்ற ரீதியில் விளக்கமளித்திருப்பது அவரது குழப்பத்தையே காட்டுவதாக உள்ளது.
..
அத்வானியின் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அத்வானியின் விளக்கம் திருப்திகரமாக உள்ளது. அவர் எனது தலைவர், அவர் தவறு செய்ய மாட்டார் என்றார்.
..
மொத்தத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இன்ன நிலைதான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை பாஜகாவால் விளக்க முடியாத அளவுக்கு அங்கு குழப்பம் குடிகொண்டிருப்பது புரிகிறது.
..

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது