பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதுபோன்ற திட்டங்களை மாநில முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர்தான் தொடங்கி வைப்பார்கள். ஆனால், அரசுத் தலைவரே முக்கியத்துவமளித்து இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதைக் கண்டு வியந்த மக்கள், விழா மேடையைப் பார்த்தார்கள். அங்கே அரசுத் தலைவருடன் தி.க.வின் வீரமணியும் அருகே அமர்ந்திருக்க, இக்குடிநீர் திட்டத்தை ""பெரியார் புரா'' நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
அது என்ன ""பெரியார் புரா''? நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கும் அளித்தல் எனும் ஆங்கில பெயர்ச் சுருக்கம்தான் ""புரா''. . இதனை தி.க.வின் வீரமணி நடத்திவரும் வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பொயியற் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்தி வருவதால் ""பெரியார் புரா'' திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் வழங்கல் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு சில மாதங்கள் முன்பு, ""பெரியார் புரா'' திட்டத்துக்கு நிதியும் தொழில்நுட்ப உதவியும் அளித்துவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பியூர்ஓடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பூதலூர் அருகிலுள்ள ஆவாரம்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்த்தனர். இக்கிராமங்களில் நிலத்தடி நீரில் புளூரைடு எனும் வேதிப் பொருள் அதிகமாக உள்ளதால், குடிநீருக்காக மக்கள் பல மைல் தூரம் சென்று அவதிப்படுவதை அறிந்து, தாங்களே தண்ணீர் குடத்துடன் நடந்து பார்த்து வேதனையடைந்து, அதைப் புகைப்படம் எடுத்து நாளேடுகளில் வெளியிட்டு, உடனடியாக சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவி புளுரைடு இல்லாத குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
குடிநீர் வழங்குவதோடு ""பெரியார் புரா'' திட்டம் முடிவடைந்து விடவில்லை. கிராம மக்களுக்கு சுயதொழில் பயிற்சி, மூலிகைச் செடி பயிரிட உதவி, சிறு தொழில் பட்டறை நிறுவ உதவி, இணையதள மையங்கள், காட்டாமணக்கு பயிரிட்டு பயோடீசல் தயாரிக்கப் பயிற்சி என அடுக்கடுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கல்வி வியாபாரக் கம்பெனி நடத்தி வரும் தி.க.வும் வீரமணியும் திடீரென கிராமப்புற சமூக சேவை நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஏன்? அடிப்படைத் தேவைகளை அரசே செய்வதற்குப் பதிலாக, அரசும் வீரமணியின் கல்லூரி நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து ""புரா'' என்ற புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஏன்? இத்திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனம் நிதியும் தொழில்நுட்ப உதவியும் செய்வது எதற்காக? என்ற கேள்விகளுடன் ""புரா'' திட்டத்தை ஆராயும்போது அதன் பின்னணியில் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதித்திட்டம் ஒளிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எதற்காக இந்த ""புரா'' திட்டம்? அதன் பின்னணி என்ன?
ராஜீவ் காந்தி அரசால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 73வது திருத்தமாகக் கொண்டு வரப்பட்ட ""பஞ்சாயத்து ராஜ்'' சட்டம்தான், இன்றைய ""புரா'' திட்டத்தின் தாயும் தந்தையுமாவார். இப்பஞ்சாயத்துராஜ் சட்டமானது, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வ நிறுவனங்களை (அரசு சாரா நிறுவனங்களை) கிராம நிர்வாகத்துக்கு இழுத்து வந்தது. இச்சட்டத்திற்கு வலுவூட்ட பிறப்பிக்கப்பட்ட இதர அரசாணைகள், இத்தன்னார்வ நிறுவனங்களைச் சட்டரீதியாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் இணைத்து விட்டது.
இவ்வாறு சட்டபூர்வமாக தன்னார்வ நிறுவனங்களை கிராம நிர்வாகத்துக்குள் நுழைய விட்ட இந்திய அரசு, தனித்தனியாக இயங்கி வந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து, அந்த வட்டாரத்தில் ஏகாதிபத்திய வல்லரசுகளின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் விவசாய உற்பத்தியை மாற்றியமைத்து, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே ""புரா''.
கிராமப்புறங்களில் மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைப்பது, சமூக சேவையிலிருந்து தொடங்கி பின்னர் அக்குழுக்களின் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவது என்பதுதான் இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொண்டுள்ள புதிய உத்தி.
இப்புதிய உத்தியும் செயல்பாடுகளும் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தனியார் பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றையும் அரசின் சில துறைகளையும் ஒருங்கிணைத்து ஏகாதிபத்திய வல்லரசுகளின் நிதியுதவியோடு கிராமப்புறங்களை ஒரு வட்டார அளவுக்கு சுயநிர்வாகப் பிரதேசங்களாக மாற்றுவது; அப்பிராந்தியத்தில் பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு ஏகாதிபத்திய தேவைக்கேற்ற ஏற்றுமதி சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மண்டலமாக மாற்றுவது என்ற திட்டத்துடன் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக சமூக சேவை என்ற முகமூடியுடன் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ""புரா''.
நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிரண்டு ""புரா'' மண்டலங்கள் அமைய உள்ளன. இப்""புரா'' அமைப்பின் கீழ் அவ்வட்டாரத்தில் பல வகையான தன்னார்வக் குழுக்கள் செயல்படும். கிராமப்புற மக்களின் விவசாயம், கைவினைத் தொழில், சுகாதாரம், சுற்றுச்சூழல், அடிக்கட்டுமானம், கல்வி, மகளிர் நலம் முதலான அனைத்தையும் இத்தன்னார்வக் குழுக்கள் மேற்பார்வையிட்டு வழி காட்டி நெறிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், கிராமப்புறங்களில் தன்னார்வக் குழுக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான துவக்கப் புள்ளிதான் ""புரா''.
கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், சமூக இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியன தனியாகவோ கூட்டு சேர்ந்தோ ""புரா'' மண்டலங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம். இவை, இப்பகுதியிலுள்ள பஞ்சாயத்துராஜ் அமைப்பைக் கலந்தாலோசித்து திட்டத்தை முன்வைத்து அனுமதி பெறலாம். இத்திட்டத்திற்காக தனிச்சிறப்பான தொழில்நுட்பம் அல்லது உரிய உற்பத்தி முறையை முடிவு செய்து அரசே அதற்குத் தேவையான நிலம் அளிக்கும். பின்னர், ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளிடமிருந்து நிதியாதாரம் திரட்டப்பட்டு ""புரா'' செயல்படத் தொடங்கும். ""புரா''வுக்கு இசைவாக, அரசின் பிற திட்டங்களது நிதியும் அவசியம் கருதி ""புரா''வுக்குத் திருப்பப்படும். இவ்வாறாக, போலீசு, நீதித்துறை தவிர பிற அனைத்து அதிகாரங்களையும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான தன்னார்வக் குழுக்களின் கைகளில் ஒப்படைத்து தனி சுயாட்சி பிராந்தியங்களை நிறுவுவதுதான் ""புரா'' திட்டம்.
காலனிய ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பிரிட்டிஷ் இந்தியா என்றும், பெயரளவுக்கு அதிகாரம் கொண்ட 526 சரிகைக் குல்லா மன்னர்களின் குட்டி சமஸ்தானங்களுமாக அன்றைய இந்தியா இருந்தது. இன்று மறுகாலனியாக்கத்தின் கீழ், விக்டோரியா மகாராணிக்குப் பதிலாக, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், குட்டி சமஸ்தானங்களுக்குப் பதிலாக ""புரா'' மண்டலங்களும் உருவாகியுள்ளன.
பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.க.வின் வீரமணி, தான் நடத்தி வரும் வல்லம் பெரியார்மணியம்மை பொறியியற் கல்லூரி எனும் கம்பெனி மூலம் மூன்றாண்டுகளுக்கு முன்பு ""புரா'' திட்டத்தைத் தொடங்கி, அதற்குப் ""பெரியார் புரா'' என்று பெயரிட்டுள்ளார். பெரியாரின் பெயரால் ""புரா'' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், இது சமூக சேவையுடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப் போகிறது என்று நீங்கள் கருதினால், அதைவிட ஏமாளித்தனம் இருக்க முடியாது. பெயரில் மட்டும்தான் பெரியார் இருக்கிறாரே தவிர, ""பெரியார் புரா'' செய்து வருவது ஏகாதிபத்திய அடியாள் வேலைதான்!
தஞ்சை மாவட்டமும் அதை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டமும் ""பெரியார் புரா'' திட்டத்துக்கென இனங்காணப்பட்டு, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 65 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ""புரா'' கிராமங்களிலுள்ள பலநூறு சுய உதவிக் குழுக்களுக்கு பால் பண்ணை நடத்துவது, உயிர்ம வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, கக்கூசுக்கான பீங்கான் செய்வது, மண்புழு உரம் தயாரிப்பது, தரிசு நில மேலாண்மை, சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்துவது முதலானவற்றில் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் ""வேன்''கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வெண்டையம்பட்டி, ஆவாரம்பட்டி, திருமலை சமுத்திரம், குரும்பூண்டி, வளம்பக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் இணையதள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வல்லம் கல்லூரி வாயிலாக அளிக்கப்பட்டுள்ள பயிற்சியைக் கொண்டு எரிபொருளுக்காக காட்டாமணக்கு செடியும், மருந்து மற்றும் சாய உற்பத்திக்காக அவுரியும், கத்தாழையும் பயிரிடப் போகின்றனர், ""பெரியார் புரா'' கிராமத்தினர். தேங்காய் நாரிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பதை அச்சம்பட்டி கிராமமும், மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பை குமாரபுரம் கிராமமும், மூலிகைச் செடி பயிரிடுவதை பழையபட்டி கிராமமும், பால் பொருட்கள் உற்பத்தியை ராயமுண்டன்பட்டி கிராமமும், சுடுமண் பொம்மைகள்பானைகள் தயாரிப்பதை மனையேறிப்பட்டி கிராமமும், பித்தளைப் பொருட்கள் உற்பத்தியை நாச்சியார்கோயில் கிராமமும் ஒருங்கிணைக்கும் மையங்களாக மாறப் போகின்றன.
""பெரியார் புரா''வின் துணை அமைப்பான (தி.க.வால் நடத்தப்படும்) ""பவர்'' நிறுவனம், ஒரத்தநாடு, பூதலூர், தஞ்சை, திருவாணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் ஆடவர் சுயஉதவிக் குழுக்களைக் கட்டி நிதிக்கடன் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. ரூ. 1.3 கோடியை சுழற்சி மூலதனமாகக் கொண்ட இத்தன்னார்வ நிறுவனம் தெக்கூரிலும் மனையேறிப் பட்டியிலும் மட்பாண்டங்களைச் செய்ய பயிற்சி அளித்து வருகிறது. களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், சணல் பைகள், தரைவிரிப்புகள் தயாரிப்பு, உள்கூடான செங்கல் தயாரிப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மையமாக தெக்கூர் மண்டலம் செயல்படத் தொடங்கியுள்ளது. காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங் அட்டைகள், வற்றல், ஊறுகாய் தயாரிப்பு ஆகியவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக ஒரத்த நாடு மற்றும் வல்லம் மண்டலங்கள் செயல்படவுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், தாராளமயத்தால் விவசாயம் திவாலாகி, விவசாயத்தை விட்டே விவசாயிகள் விரட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியும் கோபமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகமாக மாறிவிடுவதைத் தடுத்து சாந்தப்படுத்தி, மாற்றுப் பயிர் மாற்றுத் தொழில் என்ற பெயரில் வடிகால் வெட்டி, அவற்றை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவதற்கான ஏற்பாடுகளே இவை. இதற்காகவே ""பெரியார் புரா'' கிராமப் பள்ளிக் குழந்தைகளை வைத்து நாட்டு நலத் திட்ட முகாம் என்ற பெயரில் மூளைச் சலவையையும், வல்லம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மூலம் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிடச் சொல்லும் பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார் வீரமணி. இதுவும் போதாதென்று, தன்னார்வக் குழுக்கள் பண்பலை ஒலிபரப்பைத் தொடங்க இந்திய அரசு அனுமதித்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, ""பெரியார் புரா'' மூலம் சமுதாய வானொலி எனும் பண்பலை ஒலிபரப்பையும் தொடங்கியுள்ளார்.
அப்படியானால் யார் நெல் பயிரிடுவது? ""உலகச் சந்தையில் நெல்லும் கோதுமையும் "மலிவான' விலைக்குக் கிடைக்கும் போது, நாம் ஏன் அவற்றைப் பயிரிட்டு நட்டப்பட வேண்டும்? நாம் கள்ளியும் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு ஏற்றுமதி செய்வோம்; அதற்கீடாக நெல்லையும் கோதுமையையும் இறக்குமதி செய்து கொள்வோம்'' என்கிறார்கள், ""புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் ""ஜெட்ரோ'' எனும் ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரிகள்.
ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய வல்லரசுகளின் உணவு வர்த்தக நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து'' என்று உத்தர விடுகிறது உலக வங்கி. "மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொள்ளுமாறும், உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் ஏழை நாடுகளை நிர்பந்திக்கின்றன. எனவேதான் ""கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப்பண்ணை போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார் அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் இதனைச் செயல்படுத்தி, ஏகாதிபத்திய சேவையில் ஓட்டுக் கட்சிகளையெல்லாம் விஞ்சி முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி.
வீரமணியின் ""பெரியார் புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் தலைமைக் குருபீடமான ஜப்பானிய முதலாளிகளது ""ஜெட்ரோ'' நிறுவனத்தின் இயக்குநர் கவர்ச்சிகரமான முறையில் ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். ""ஒரு கிராமம்; ஓர் உற்பத்திப் பொருள்'' என்பதுதான் அத்திட்டத்தின் பெயர். இதன்படி ""புரா'' மண்டலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கத்தாழை பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; மற்றொரு கிராமத்தில் காட்டாமணக்கு பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; இன்னொரு கிராமத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இக்கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சியளித்து, உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதை ""புரா'' அமைப்பினர் கண்காணித்து வழிகாட்டுவர்.
கடந்த பிப்ரவரி 2007இல் டெல்லியில் ""ஜெட்ரோ'' நிறுவனம் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட ""பெரியார் புரா''வின் தயாரிப்புகளில், 40 பொருட்கள் இந்நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களின் மாதிரிகள் வரும் ஜூலையில் ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களைக் கேட்டு வந்து, அதன்படி ""பெரியார் புரா'' மண்டலத்திலுள்ள கைவினைஞர்களுக்கு வேலை கொடுத்து, அப்பொருட்களை ஏற்றுமதி செய்து, கிராமப்புற கைவினைஞர்களுக்கு வாழ்வளிக்கப் போவதாக ""பெரியார் புரா'' அறிவித்துள்ளது.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய விண்வெளித் துறை ஆகிய மைய அரசின் நிறுவனங்களோடு, கனடா நாட்டின் வட அட்லாண்டிக் கல்லூரி, அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்க ஜப்பானிய ஏகபோக கம்பெனிகள் ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ""பெரியார் புரா'' கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ""புரா'' நிர்வாகிகள் திட்டப் பரிசீலனைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக, தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களின் குக்கிராமங்கள் அன்னிய மூலதனத்துடன் பிணைக்கப்பட்டு அதன் அடியாளாகச் செயல்படும் ""பெரியார் புரா''விடம் கிராமப்புற உற்பத்தியும் நிர்வாகமும் மாற்றப்பட்டு வருகிறது.
தி.க.வின் வீரமணி இப்போதெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னார்வக் குழுக்களுக்காகவும் ""புரா'' கிராமங்களுக்காகவும் ""வாழ்வியல் சிந்தனைகள்'' எனும் பெயரில் சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதத் தொடங்கி விட்டார். பெருந்தொழில் நிறுவனங்களில் மேலாண்மை செய்யும் நிர்வாகிகளுக்குக் கற்றுத் தரப்படும் விதிமுறைகளையே தேனில் குழைத்துத் தரும் வேலையை வீரமணி செய்து வருகிறார். ""வேலை வெட்டியின்றி இருக்கும் இளைஞர்கள் சுய தொழில் செய்ய முனைய வேண்டும்,'' ""இருப்பதை வைத்து சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்'', ""மேலை நாட்டினர் நம் அருகில் உள்ளபோது நாம் தாய்மொழியில் பேசிக் கொள்வது, அவர்களது மனதப் புண்படுத்தும்'' என்றெல்லாம் தனது அடிமைத்தனத்தையே "உரை நடைத் திருக்குறளாக' (வாழ்வியல் சிந்தனைகள் நூலுக்கான விளம்பர வாசகம்) எழுதித் தள்ளுகிறார்.
வீரமணி புதிய நூல் எழுதுவது சுய விளம்பரத்திற்கல்ல; அது ஏகாதிபத்திய சேவையின் புதிய அத்தியாயம். ""பெரியார் புரா'' திட்டம் என்பது வெறுமனே சமூக சேவைக்கும் கைவினைப் பொருள் ஏற்றுமதிக்குமானதல்ல; அது விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியின் ஓர் அங்கம். உணவு தானிய உற்பத்தியை ஒழித்து, ஒற்றைப் பயிர்முறைக்கு விவசாயம் மாற்றப்பட்டால் பேரழிவுகளே விளையும். ""புரா'' திட்டப்படி, ஒரு ஊர் முழுக்க அவுரிச் செடியும் மற்றொரு ஊர் முழுக்க காட்டாமணக்கும் பயிரிடப்பட்டால் உயிர்மப் பன்மம் பாழாகி நிலம் மலடாகிப் போகும். சுற்றுச்சூழல் நாசமாகி இயற்கையின் முறைகுலைவுகள் ஏற்படும். அதன்பிறகு, இன்னுமொரு சோமாலியா, எத்தியாப்பியாவாக இந்தியா மாறிப் போகும்.
ஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய நுட்பமான வழிமுறைகளைக் கொண்டு மீண்டும் காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன. இதர தன்னார்வக் குழுக்களையும் ஓட்சிக் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய அடியாள் வேலையில் முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி. ஏகாதிபத்தியங்களின் நூதன வடிவிலான காலனியாதிக்கத்துக்கும், பெரியார் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நவீன எட்டப்பர்களுக்கும் எதிராக, உழைக்கும் மக்களை காலனியாதிக்க எதிர்ப்புப் போருக்கு அணிதிரட்டுவதே இன்று நம் முன் அவசர அவசியக் கடமையாக உள்ளது.
· இரணியன்
ஒரே புற்று இரண்டு பாம்புகள்!
கொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் ""புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய பங்காளிகளாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள தீனதயாள் ஆய்வு மையம் எனும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனம் நடத்தி வரும் ""புரா'' திட்டம்தான் இந்தியாவின் முன்னோடித் திட்டம். இதனையடுத்துதான் வீரமணியின் ""பெரியார் புரா'' திட்டம் தொடங்கப்பட்டது. ""சித்ரகூடம் புரா'' எனப்படும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ""புரா'' திட்டம் பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை, பழங்குடியினர் மேம்பாடு, பசு பாதுகாப்பு என பல அரங்குகளிலும் நுழைந்து 100 மண்டலங்களில் காலூன்றியுள்ளது. பார்ப்பனியத்துடன் ஏகாதிபத்திய சேவையை விசுவாசமாகச் செய்துவரும் ""அம்பி''கள் இப்போது ""பெரியார் புரா''வின் சேவையைப் பாராட்டி ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.
நகர்ப்புறங்கள் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர் என்றும் இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை உணர்த்தி இந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே ""புரா'' திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ்.இன் ""சித்ரகூடம் புரா'' கூறுகிறது. ஏகாதிபத்திய அடியாள் வேலையை மறைத்து இந்து வெறியர்கள் இப்படியொரு காரணத்தை அவிழ்த்து விட்டுள்ளபோது, "தளபதி' வீரமணியின் ""பெரியார் புரா'' வேறொரு காரணத்தைச் சொல்கிறது.
1944ஆம் ஆண்டு கிராம முன்சீப்கள் பயிற்சி மைய விழாவில் பேசிய பெரியார், ""நகரத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டாராம். எனவேதான், பெரியார் கொள்கை வழியில் ""புரா'' திட்டத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வீரமணி கும்பல் பாடுபடுகிறதாம்! இதே பாணியில், பெரியாரின் பேச்சுகள் எழுத்துக்களிலிருந்து இன்னும் பல புதிய காரணங்களை வீரமணி கும்பல் கண்டுபிடித்து, அவிழ்த்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
""புரா'' திட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சேவையுடன் ""கோமாதா பாதுகாப்பு'' எனும் கொள்கையை செயல்திட்டமாக வைத்து ஆர்.எஸ்.எஸ்.இன் சித்ரகூடம் புரா இயங்கி வருகிறது. ஆனால், பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் வீரமணி கும்பலின் பெரியார் புரா திட்டத்தில், ஏகாதிபத்திய அடியாள் வேலையைத் தவிர, பெயரளவுக்குக்கூட பெரியாரின் கொள்கையோ வெங்காயமோ இல்லை.
No comments:
Post a Comment