குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க
தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை.
கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும்.
இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)
இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.
தீர்ப்பின் முழு விவரம்:
அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர்.
அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது.
இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.
தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு:குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க
No comments:
Post a Comment