Monday, December 10, 2007

உ.பி.:தலித்திய ஆட்சி பார்ப்பனிய நீதி

உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் இருக்கும் பாதேவெரா எனும் சிற்×ரின் தலித் குடியிருப்பை சேர்ந்தவர், 21 வயது நிரம்பிய சக்ராசென் கவுதம். சாமர் எனும் தலித் சாதியை சேர்ந்த சக்ராசென் பி.ஏ. பட்டம் முடித்து, எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனும் முயற்சியில் ரயில்வே உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டும், ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டும் இருந்தார். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட சக்ராசென்னையும் அவரது இரு சகோதரர்களையும் அவர்களின் தாத்தா, சிவ்மூர்த்திதான் படிக்க வைத்து வந்தார்.

2004இல் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவராக தலித் ஒருவர் இருந்தபோது, ரேசன் கடை நடத்தும் உரிமையை இவர்களின் குடும்பத்திற்கு வழங்கி இருந்தனர். தலித் சேரியின் அண்மையில் இருக்கும் பார்ப்பன குடியிருப்பை சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா, தான் நடத்தி வரும் கடையில் சந்தை விலைக்கு விற்று லாபமீட்டுவதற்காக, சிவ்மூர்த்தி, தனது ரேஷன் கடையில் இருந்து அதிக அளவில் ரேசன் பொருட்களைத் தந்தாக வேண்டுமென நிபந்தனை விதித்தார். இதற்கு உடன்பட சிவ்மூர்த்தி மறுத்து விடவே சந்தோஷ் மிஷ்ரா, இந்த தலித் குடும்பத்தினர் மீது வன்மம் கொண்டிருந்தார்.மேலும், தலித் இளைஞரான சக்ராசென் உயர்கல்வி கற்றுள்ளதைக் கண்டு பொறாமையும் ஆத்திரமும் கொண்டிருந்தார்.

பத்து மாதங்களுக்கு முன்பு கூட மிஸ்ரா, ""உங்கள் பேரனை அதிகம் படிக்க வைத்து விட்டீர்கள். ஆனாலும் அவனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை, பாருங்கள்!'' என்று சக்ராசென்னை ஒழித்துக் கட்ட இருப்பதாக சிவ்மூர்த்தியிடம் மிரட்டி இருக்கிறார். உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டதால் மிஸ்ரா விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். உடனே உள்ளூர் தாக்குர்கள் (ஆதிக்க சாதியினர்) சிவ்மூர்த்தியிடம் "இது உள்ளூர் விசயம். நமக்குள் பேசித் தீர்க்கலாம்' என்று கூறி புகாரை திரும்பப் பெற வைத்தனர். ஆயினும், அவரின் பேரன் உயிருக்கிருந்த ஆபத்து நீங்கிவிடவில்லை. ""உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' என்றும் ""ஒழித்துக்கட்டுவேன்'' என்றும் பார்ப்பன மிஸ்ரா பகிரங்கமாக மிரட்டிக் கொண்டிருந்தார்.

கடந்த ஜூலை 30ஆம் நாள் இரவு அலகாபாத்தில் இருந்து ஊர் திரும்பிய சக்ராசென் கவுதம், வழக்கம்போல மறுநாள் அதிகாலையில் ஓட்டப்பயிற்சி செய்ய வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். அவரை இன்னொரு தலித்தான இந்திரஜித் பாஸ்வான் என்பவரின் வீட்டில் வைத்து கட்டிப் போட்டு ஒரு கும்பல் அடித்து உதைத்துக் கொண்டிருக்கும் தகவலை அறிந்த சக்ராசென்னின் தாத்தாவும் தம்பியும் விரைந்து சென்று பார்த்தபோது, இரத்த வெள்ளத்தில் கிடந்த சக்ராசென்னுக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

""பாஸ்வானின் குடிசைக்கு நீ எப்படி வந்தாய்?'' என அவர்கள் கேட்டதற்கு, சந்தோஷ் மிஸ்ரா மற்றும் ஆகாஷ் துபே ஆகிய இரு பார்ப்பனர்களின் பெயர்களை உச்சரித்து விட்டு குற்றுயிராய்க் கிடந்த சக்ராசென் மரணமடைந்தார். கொலையாளிகள் இருவரும் தலைமறைவானார்கள். போலீசோ பாஸ்வானையும் அவரின் இரு சகோதரர்களையும் கைது செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்ட இன்னொரு தலித்தைக் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளது.

கொலைகார பார்ப்பனர்களைக் கைது செய்யவிடாமல் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராம் ஷிரோன்மணி சுக்லா தடுத்து வருகிறார். பார்ப்பன சாதியை சேர்ந்த ஆளும்கட்சி எல்.எல்.ஏ.வான இவருக்கு, கொலையாளிகள் இருவரும் நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமல்ல; ஒரே சாதியையும் சேர்ந்தவர்கள்.5 லட்ச ரூபாய் தருவதாயும், இரண்டு பார்ப்பனர்கள் மீதான புகார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்த எல்.எல்.ஏ. பேரம் பேசியுள்ளார். சக்ராசென் கவுதமின் குடும்பமோ கொல்லப்பட்ட சக்ராசென்னின் உடலை காரில் கொண்டு சென்று மாயாவதி வீட்டு முன் வைக்க முயன்றது. ஆனால் சுக்லாவும் போலீசாரும் கார் ஓட்டுநரை மிரட்டி இதனைத் தடுத்து விட்டனர். கொலையாளிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வே உதவுகிறார் என்பதை அம்மாவட்ட பகுஜன் சமாஜின் தலைவராக இருக்கும் தலித் ஒருவரிடம் சென்று சக்ராசென் குடும்பத்தார் முறையிட்டனர். தலித்தாக இருந்தாலும் அவரோ அந்த ""சட்டமன்ற உறுப்பினர், அவரின் சாதிக் கடமையைச் செய்யத்தானே செய்வார்'' என்று சாதி வெறியர்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.

இக்கொலைக்குப் பின்னர் அந்த வட்டாரத்தில் இருக்கும் பார்ப்பன சங்கமான "பிராமண சகோதரத்துவக் குழு'வுக்கு புதுத்தெம்பு பிறந்து விட்டது. பாதேவெரா கிராமத்தின் தலித் சேரியைச் சுற்றி வந்து நக்கலான முழக்கம் ஒன்றை அக்கும்பல் முழக்கிச் செல்கின்றது. ""பிராமணர்கள் சங்கு ஊதட்டும்... பகுஜன் சமாஜிகள் தில்லிக்கு செல்லட்டும்'' என்பதே அந்த முழக்கம்.

சக்ராசென் கொலை செய்யப்பட காரணம், அவர் தலித் என்பதால் மட்டுமல்ல; சுயமரியாதையோடு படித்து முன்னேறத் துடித்த தலித் இளைஞர் என்பதால்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த உண்மை ஒருபுறமிருக்க, தலித் ஒருவர் முதல்வராக இருந்து ஆட்சி செய்தாலும், இன்றைய அரசியலமைப்பு முறையின் மூலம் சாதிவெறிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்பதையும் தனது உயிர்த்தியாகத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார், சக்ராசென்.

ஆனால், பகுஜன் சமாஜின் பார்ப்பனக் கூட்டை சாதி ஒழிப்புக் குரிய போர்த்தந்திரமாகக் கருதி பல அறிவாளிகளும் அரசியல் விற்பன்னர்களும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தலித்களும் பிற சாதி உழைக்கும் மக்களும் ஒன்றுபடாமல் வெறுமனே ஓட்டுப் பொறுக்கித் தலைவர்களிடையேயான கூட்டணியால் தலித்கள் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதும், பார்ப்பனர்களுடனான கூட்டணி தலித்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி விடும் என்பதும் எவ்வளவு மோசடியானது என்பதை மாயாவதியின் தலித்திய ஆட்சியே நிரூபித்துக்காட்டிவிட்டது.
· கவி

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது