Sunday, December 9, 2007

இந்திய ஆட்சியாளர்களின் ட்ரையாஜ் கொள்கை !!

சாலை சந்திப்புகளில் நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஒட்டிகள்,அதில் பயணம் செய்பவர்களுக்கு ரூ 600 அபராதம் விதிக்கப்படும் இப்படி டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர். ஏன்னா வரும் 2012-ல் டெல்லில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. காமன்வெல்த் போட்டி நடைபெறும் போது பிச்சைக்காரர்கள் இருந்தால் வருகின்ற பன்னாட்டு வீரர்கள் இந்திய நாட்டை கேவலமாக பார்ப்பார்கள் என்று பிச்சைக்காரர்களை ஒழிக்க அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்காக யோசிக்கும் போது இப்படி பிச்சைக்காரர்களை ஒழிக்கவே ஒரு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2002-ல் நிறைவேற்றப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்தது. அதன் படி சாலை சந்திப்புகளில் காத்து நிற்கும்போது பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஓட்டுனர்களுக்கும், அதில் பயணம் செய்பவர்களுக்கும் அபராதமாக ரூ 600 /- விதிக்கப்படும். இதனை தற்போது அமுலாக்க முடிவு செய்து உள்ளனர்.

-
"பிச்சை போடுபவர்கள் இருந்தால்தான் பிச்சை எடுப்பவர்கள் இருப்பார்கள் எனவே பிச்சை போடுவதை தடுக்கிறோம்" என்கிறார்கள்.இதே கண்டுபிடிப்பைக் கொண்டு தான் மும்பையில் நகரை அழகுபடுத்த போகிறோம் என்று தாரவி பகுதியில் இருந்த சேரிகளை காலிசெய்தார்கள், சென்னையில் மெரீனா கடற்கரையை அழகுபடுத்த என்று கடலோர குப்பங்களை காலிசெய்தார்கள்.
-
இன்றைக்கு இந்த பெரிய நகரங்களின் ஜொலிக்கும் கட்டிடங்களும், மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும் இந்த மக்களின் உழைப்பில் உருவானது. ஒவ்வொரு கட்டிடம் கட்டும்போது ஒரு தொழிலாளி உயிரிழக்கிறான்.இப்படி தங்களது உயிரையே கொடுத்துதான் பெரிய நகரங்களை உருவாக்கினார்கள்.இன்று இந்த மக்களையே அசிங்கம் என்று ஒழிக்க முடிவு செய்து குப்பைப்போல வீசியெறிய முடிவு செய்து விட்டார்கள்.
-
இவ்வாறு நாட்டின் பெரும்பான்மை மக்கள் இவர்களின் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினால் வாழ்க்கையை இழந்து தெருக்களில் வீசியெறியப்பட்டு வருகின்றனர்.
-
இதை நேரடியாக நீங்கள் பார்க்கலாம்.சில்லரை வணிகத்தில் இன்றைக்கு ரிலையன்ஸ் உள்ளிட்ட பராசுர கம்பெனிகளை அனுமதித்து சிறு மளிகை கடைகாரர்களையும், சிறு காய்கறி கடைக்காரர்களையும் வெளியேற்றுகிறார்கள்.இதனால் சிறுகடை வைத்து இருப்பவர்கள் தள்ளுவண்டி கடைக்கு மாறி வருகின்றனர். அதேபோல தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் தரைக்கடைக்காரர்களாகவும், தரைக்கடைக்காரர்கள் கூலி தொழிலாளர்களாகவும் மாறி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் சொல்கிறார்கள் தாங்கள் தங்கள் உணவை இரண்டு வேலையாக குறைத்து கொண்டோம் என்று.
-
ஏற்கனவே கூலித்தொழிலாளர்கள் போன்றவர்கள் வாழவழியற்று ஒன்று தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது சிலர் பிச்சையெடுக்கின்றார்கள்.இப்படி இந்த அரசின் மூலம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டவர்களுக்கு இன்று பிச்சைபோடுவதை தடுக்கப் போகிறார்கள். இது பிச்சைக்காரர்களை கொலைசெய்வதே ஆகும்.நேரடியாக பிச்சைக்காரர்களை கொல்ல இன்றைய சமுதாயம் ஒத்துக்கொள்ளாது என்பதால் இப்படி பிச்சை போடுபவர்களை நிறுத்தி விட்டால் தன்னாலே பிச்சைக்காரர்கள் செத்து விடுவார்கள்.
-

-
இவ்வாறு இவர்கள் எடுக்கும் நடவடிக்கை ஒரு வகையில் ட்ரையாஜ் கொள்கை போல தான் உள்ளது.அது என்ன ட்ரையாஜ் கொள்கை என்கீற்களா. ட்ரையாஜ் என்பது மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தை.அதாவது ஒரு விபத்து ஏற்பட்டவுடன் அதில் ஒரு சிலர் எப்படியும் இறந்து விடுவார்கள் எனில் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வது வீண் என்று விட்டுட்டு மற்றவர்களை காப்பாற்றுவது.
-
"எப்படியும் எதிர்காலத்தில் மக்கள் பெருக்கத்தினால் சாப்பாடு, நீர் இல்லாமல் பலர் இறக்கத்தான் போகிறார்கள், அதனால் எல்லோரையும் அழைத்து செல்வதை விட அதில் பாதிப் பேரை பட்டினி போட்டே கொன்ற வேண்டியது தான்" இதுதான் அமெரிக்கா போன்ற வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட ட்ரையாஜ் கொள்கை.
-
இதனைதான் ஏழை, எளிய நாடுகளின் மீது இவர்கள் இன்று நடைமுறைப்படுத்துகிறார்கள்.தனக்கு கொள்ளையடிக்க அனுமதிக்காத நாடுகளின் மீதும்,
தன் முடிவுகளை ஏற்காத - ஆதரிக்காத நாடுகளின் மீது பொருளாதார தடை என்ற பெயரில் இந்த ட்ரையாஜ் கொள்கை நடைமுறைப்படுத்துகின்றனர்.
-
"நாம் உதவிகள் அளித்துக்கொண்டே இருக்கத்தான் இந்த நாடுகளின் மக்கள் குழந்தைகளை மட்டும் பெற்று கொண்டே திரிகிறார்கள்"இப்படிதான் இன்று ஆப்பிரிக்க, ஆசிய போன்ற மூன்றாம் ஏழை எளிய நாடுகள் பற்றி அமெரிக்க பிரஜைகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
ஒட்டுமொத்த உலகத்திற்கும் அமெரிக்காதான் படியளப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏழை நாடுகளின் மக்கள் உழைக்காமல் அமெரிக்காவின் பிச்சைக்காசில் உயிர் வாழ்வதாகக் கருதுகிறார்கள்.
-
"பிச்சைகாரர்களை ஒழிக்க ,பிச்சைப்போடுவதை நிறுத்தினாலே போதும்" என்று "இந்தியா போன்ற ஏழை நாட்டுப் பிரஜைகளை (பிச்சைக்காரர்களை) ஒழிக்க (பட்டினி போட்டு சாகடிக்க) அமெரிக்கா தரும் உதவிகளை நிறுத்த வேண்டும்",-இப்படி தான் சிந்தனைரிதியிலே அமெரிக்கனை மாற்றி உள்ளார்கள்.
-
ஆனால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் இப்படி வறுமையில் இருப்பதற்கே இவர்கள் கொளுத்து திரிவது தான் காரணம். இன்றைக்கு உலக மக்கள் தொகை 600 கோடி. இதில் அமெரிக்க மக்கள் தொகை 36 கோடி. அதாவது 6%. ஆனால் இந்த 6% தான் உலக உற்பத்தியில் 40% சாப்பிடுகின்றனர். மீதம் உள்ள 564 கோடிப்பேர் அதாவது 94% பேர் 60% உற்பத்தியை சுவீகரிக்கிறார்கள்.
-
இப்படி ஒட்டுமொத்த உலகின் உழைப்பை உறிஞ்சிக் குடித்துவிட்டு, அவர்களைப் பிச்சைக்காரர்களாக பார்க்கிறான் அமெரிக்கன்.இதேபோலத்தான் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சிலர் 5 இலக்க, 6 இலக்க சம்பளம் வாங்க பல லட்சம் பேரைப் பிச்சைகாரர்களக மாற்றி, அவர்களை ஒழிக்கிறோம் என்று இப்போது கிளம்பியுள்ளார்கள்.
-
பிச்சைக்காரர்களை ஒழிக்க, பிச்சை போடுபவர்களுக்கு அபராதம் என்பதா தீர்வாக இருக்க முடியும். ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு இந்த அரசாங்கம் தான் 300,400 என பிச்சை போட்டு வருகிறது. ஆனால் உண்மையாக பிச்சைக்காரர்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும், பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
-
அதற்கு இவர்கள் தங்களின் தனியார்மய, தாராளமய , உலகமய கொள்கைகளை கைவிட்டு , பன்னாட்டு & தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு பதில், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஆனால் இதை இந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா இந்த அமைப்பே பன்னாட்டு,தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதற்குள் மக்கள் நலன் என்று ஒன்றை சித்திக்க கூட முடியாது.
--
--நன்றி கோபா
Related :
-
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
-
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
-
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
-
சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!
-
பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்!

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது