Wednesday, January 23, 2008

நெஞ்சைச் சுடும் பிணங்கள்

செடி தூங்கும் விடிகாலை
பனித்துளி விறைத்தது பிணங்களைத் தீண்டி.
எல்லாமே அடையாளம் தெரியும் பிணங்கள்...
மழையில் குதிகால் வெளிறிக் கிடக்கு
விழியில் உறக்கம் எரிந்து கிடக்கு
முடிவாய் வந்த வார்த்தைகளோ,
காற்றின் அலறலில் உறைந்து கிடக்கு.
சீலை முடிப்பில் கொஞ்சம் சில்லறை இருக்கு
காலின் செருப்பு
உடல் தப்பித்துக் கிடக்கு.
அவள் தோலின் மேல் நசுங்கி
இரத்தம் கட்டிக் கிடக்கு.
முண்டியடித்த கூட்டத்தில்
அவள் மூச்சுப்பை திணறி வாய் மூடிக்கிடக்கு
கொண்டு வந்த கோணிப்பை
கொலைக்களத்தின் சாட்சியமாய் வாய் பிளந்து கிடக்கு.
நிலைதடுமாறி உயிரை விட்டாலும்
நிவாரண டோக்கனை விடாமல் பிடித்திருக்கும்
அந்தக் கைகளில் உழைப்பின் காய்ப்பிருக்கு.
மழைக்குத் தப்பிய உயிரை
அலைக்கழித்து மிதித்துக் கொன்றது யார்?
வேலைக்குப் போக வேனில் ஏறி
சேலத்துக்குப்போன யாரோ சிலபேர்
விபத்தில் சிக்கி மரணம் என்று ஊர் சொல்லுது.
தேசிய நெடுஞ்சாலையில் பிய்ந்து கிடக்கும்
ஐந்து பேரின் உடலைப் பார்த்தால்
தெளிவாய்த் தெரியுது அடையாளங்கள்.
குடலும் சதையும் என்று
குழம்பிப் போய் உற்றுப் பார்த்தால்
சும்மாட்டுத் துணியில்
இரத்தம் அடங்க மறுக்குது.
நசுங்கிக் கிடக்கும் சோற்று வாளிக்குள்
ஈக்கள் சில நடுங்கித் தவிக்குது.
பழைய சோற்றுப் பருக்கைச் சிதறலை
பச்சை இரத்தம் குடிப்பது கண்டு
மிரண்டு ஓடுது நாய்கள்.
கவனிப்பாரற்று பேசத் துடிக்கும்
இதயத்தின் நிணத்தில்
நசுங்கிக் கிடக்கும் பீடிக்கட்டு
மனிதர்கள்தான் என்ற அடையாளத்தை
பார்ப்பவர்களுக்குச் சொல்கிறது.
பாழாய் போன வயத்துக்காக
எங்கிருந்தோ வந்து
இப்படிக் கூழாய்ப் போகும்படி செய்த
கொலைகாரன் யார்?
அடையாளம் தெரியாத பிணங்கள்
அரசு மருத்துவமனையில் இருப்பதாய்
அடிக்கடி அறிவிப்புகள் வருகின்றன.
நரம்பு விடைத்த அந்தக் கைகள்
தன்னை ஒரு தறி நெசவாளி என்று
அடையாளம் காட்டுகிறது.
கைத்தோல் கிழிந்த அந்தக் கைகள்
தன்னை ஒரு கரும்பு விவசாயி என்று
அடையாளம் காட்டுகிறது.
இவ்வளவு பெரிய நகரத்தில்
இருப்பவர்களை நம்பிவந்து ஏமாந்து
கடைசியில்
உறவு சொல்லி அழுவதற்கும் ஒரு ஆளின்றி
ஒதுங்கிக் கிடக்கும் பிணங்களைப் பார்த்து
இனி ஒன்றுமில்லை என்று சென்றுவிட முடியுமா?
கருத்தின்றி இருப்பவர் கண்களை அருவெறுத்து
செத்தவர்களின் விழிகளில் குறிப்புணர்த்தும்
ஈக்களை விலக்கிப் பார்த்தால்
அங்கே கொலைப் பழி ஒன்று மிச்சமிருக்குது.
செத்தவர்கள்
விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
கொன்றவர்களின் அடையாளங்களை
பதிலேதும் இல்லாமல்
ஒரு தூசியைப் போல
துடைத்து விடமுடியுமா
உன் கண்ணில் விழுந்த பிணங்களை.
துரை. சண்முகம்

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது