Saturday, April 5, 2008

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை- மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் கைது

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.

http://thatstamil.oneindia.in/news/2008/04/05/tn-chennai-bjp-office-sieged.html

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது