கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)
சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையைக் கொண்டிருப்போரை போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பதில் நமக்கு தயக்கமிருந்ததில்லை. ஆனால், சொல்லிலும் செயலிலும் முரண்பாடு ஏதுமின்றி ""சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'' என்று கொள்கைக் குன்றுகளாக வலம் வரும் "மார்க்சிஸ்டு'களை இனிமேலும் போலி கம்யூனிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டிருப்பது பொருத்தம் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.
""முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு கம்யூனிசச் சொற்களால் விளக்கமளிக்க வேண்டும்; அத்தகைய விளக்கம் முதலாளி வர்க்கத்தின் கோபத்தைத் தூண்டிவிடும்படி இருக்கக் கூடாது; அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் அதிருப்தியையும் தோற்றுவித்து விடக்கூடாது.'' — இப்படியாக, கம்பி மேல் நடப்பதையும், கடுகைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவதையும் விடக் கடினமானதும் அபாரமான மொழி வல்லமையையும், ராஜதந்திரத்தையும், கலைத்திறனையும் கோருவதுமான இந்தச் சாகசத்தைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து சிங்குர் பிரச்சினை "மார்க்சிஸ்டு'களை விடுவித்திருக்கிறது. தங்களுடைய உண்மையான சிந்தனையை இயல்பாகப் பேசுவதற்கான சுதந்திரத்தையே ஒரு நிர்ப்பந்தமாக "மார்க்சிஸ்டு'களின் மீது திணித்திருக்கிறது சிங்குர்.
எனவே, ""விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி, டாடாவுக்கும் ஜின்டாலுக்கும் ரூயாவுக்கும் மலேசியாவின் சலீம் குழுமத்திற்கும் வழங்குவது நியாயம்தானா'' என்று மார்க்சிஸ்டுகளிடம் இனிமேலும் கேட்டுக் கொண்டிருப்பது அசட்டுத்தனம். "மார்க்சிஸ்டு'களின் இந்தப் புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், இந்தக் கொள்கை பிறப்பெடுக்கும் மூளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கூற்றுகள் வழியாகவே அதனைப் புரிந்து கொள்வோம்.
···
"மார்க்சிஸ்டு' கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசி, வார இதழில் (செப்.11, 2006) அவர்களது கட்சியைச் சார்ந்த பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். "வக்கிரப் பொருளாதாரத்தின் தாக்குதல்' (கூடஞு அண்ண்ச்தடூt ணிஞூ ஙதடூஞ்ச்ணூ உஞிணிணணிட்தூ) என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை, ""தேசிய உற்பத்தி வளர்ந்தால் வறுமை ஒழிந்து விடும், செல்வம் பெருகினால் வறுமை ஒழிந்து விடும்'' என்று கூறும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பொய்களை அம்பலப்படுத்துகிறது.
எந்த அறிவியல்பூர்வமான அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத இந்தப் பொருளாதாரக் கொள்கையை வக்கிரப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் அழைத்ததை அக்கட்டுரையில் விளக்கும் பட்நாயக், இது ஒரு முதலாளித்துவப் பித்தலாட்டம் என்று ஆணியடித்தாற் போலக் கூறி முடிக்கிறார்.
பட்நாயக் அடித்த ஆணியை இரண்டே வரிகளில் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடுங்கி எறிகிறார் யெச்சூரி. ""கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதில்லை என்பது ஒரு தவறான அபிப்ராயம், உண்மை அதுவல்ல. ஏனென்றால் செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனை என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கல்கத்தா முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. (இந்து, ஜன. 5, 2007)
செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனையாம்!
இதையே கொஞ்சம் எளிமையாக ரஜினிகாந்த் படத்தின் வசன மொழியில் சொல்வதென்றால், முதலாளி நல்லா இருந்தாத்தானே தொழிலாளி நல்லா இருக்க முடியும் என்று சொல்லலாம். அதாவது, பணக்காரர்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஏழ்மை ஒழியும் என்கிறார் யெச்சூரி.
···
மார்க்ஸ் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? ""ஒரு முனையில் செல்வம் குவிவது என்பதன் பொருள், அதே நேரத்தில், அவ்வாறு செல்வம் குவிவதன் விளைவாக வறுமையும் உழைப்பின் துயரமும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடூரமும் சிந்தனைச் சீரழிவும் இன்னொரு முனையில் அதிகரிப்பது என்பதுதான்'' என்று கூறும் மார்க்ஸ், வறுமை என்பதே ஒரு குறிப்பிட்ட சமூக உறவின் வெளிப்பாடுதான் என்பதை நிலைநாட்டுகிறார். தொழிலாளிகள் எந்த அளவுக்கு செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு வறியவர்கள் ஆக்கப்படுவார்கள். உற்பத்திச் சாதனங்களைத் தம் உடைமையாக வைத்திருக்கக் கூடிய முதலாளிகள் ஒருபுறம், உழைப்பை விற்று வயிற்றைக் கழுவும் தொழிலாளிகள் மறுபுறம் என்று இருக்கும் முதலாளித்துவச் சமூக அமைப்பில் செல்வம் உருவாவது என்பதன் உடனடி விளைவு வறுமைதான் என்பதே மார்க்சியப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி.
உலகத்தைக் கண்திறந்து பார்ப்பவன் எவனும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அல்லது, தங்கள் கட்சியின் மத்தியக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தைப் படித்துப் பார்த்தும்கூட மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
""தேசிய நிகர உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக மைய அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை... இந்த வளர்ச்சியின் விளைவாக பணக்காரர்கள்தான் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 40 பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் 61 பில்லியன் டாலரிலிருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அரசாங்கப் புள்ளிவிவரப்படியே கூட 30 கோடி மக்கள் நாளொன்றுக்கு 45 ரூபாய் கூட வருமானமின்றி வறுமையில் உழல்கிறார்கள்'' என்று கூறுகிறது மத்தியக் குழு தீர்மானம்.
மக்கள் மென்மேலும் வறுமையில் தள்ளப்படுவதுதான் முதலாளித்துவச் சமூகத்தில் செல்வம் உருவாவதற்குரிய முன்நிபந்தனை. ஆனால் யெச்சூரியோ, செல்வம் உருவாவதுதான் மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான முன்நிபந்தனை என்று ப.சிதம்பரத்தின் சித்தாந்தத்தை அப்படியே வழிமொழிகிறார்.
""வக்கிரப் பொருளாதாரத்தை முன்மொழிபவர் நம்முடைய ஆதரவு பெற்ற பிரதமர் என்பதால் நாம் சும்மா இருந்து விட முடியாது'' என்று கொதிக்கிறார் பட்நாயக். அவரே நம்முடைய தோழர் புத்ததேவ் பட்டாசார்யாவாக இருக்கும்போது என்ன செய்வதாம்?
சிங்குர், நந்திக்கிராமம் பிரச்சினைகளில் மார்க்சிஸ்டு அரசின் அணுகுமுறையைக் கண்டித்து இடதுசாரி வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட அறிவுத்துறையினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்குப் பதிலளிக்கு முகமாக பகிரங்கக் கடிதமொன்றை அவர்களுக்கு எழுதியிருக்கிறார் முதல்வர் புத்ததேவ். (பைனா. எக்ஸ். ஜன.19, 2007.) விவசாயிகளிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி டாடாவுக்கு வழங்க நேர்ந்ததற்கான பொருளாதார நியாயத்தை அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:
""சிங்குரில் இருக்கும் அந்தச் சில துண்டு நிலங்களில் விவசாயம் செய்து கிடைக்கக்கூடிய வருவாயைக் காட்டிலும் மிகப் பன்மடங்கு அதிகமான பொருளாதார ஆதாயத்தை இந்தத் தொழிற்சாலை வழங்கும்'' என்கிறார் புத்ததேவ்.
உண்மைதான். 250 ஏக்கர் நிலத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் கார்களை டாடா அறுவடை செய்வார்; பல கோடி ரூபாய்களை மூட்டை கட்டுவார். விவசாயிகள் மிஞ்சிப் போனால் எத்தனை கலம் நெல்லை அறுத்துவிடுவார்கள்? எத்தனை ரூபாயை மூட்டை கட்டிவிடுவார்கள்?
புத்ததேவின் இந்தக் கூற்றைத்தான் ""வக்கிரப் பொருளாதாரத்தின் உச்சகட்டம்'' என்று சாடுகிறார் பட்நாயக். ""கேக் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது எல்லாருக்கும் நல்லது என்று கூறுவது, வறுமையென்பது குறிப்பிட்ட சமூக உறவின் விளைவுதான் என்ற உண்மையையே இருட்டடிப்பு செய்வதாகும்'' என்கிறார்.
""தொழிலாளர்கள் எந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்கிறார்களோ அது தேசிய உழைப்பின் முழு உற்பத்தியாலும் நிரம்பியிருக்கையில், அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தடுப்பது பாத்திரத்தின் அளவுக் குறைவோ அல்லது அதிலுள்ள பண்டங்களின் போதாமையோ அல்ல; தொழிலாளர்களுடைய கரண்டிகள் சிறிதாக இருப்பதுதான்'' என்றார் மார்க்ஸ்.
டாடா தொழிற்சாலை வழங்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தை அறுவடை செய்யப் போவது யார்?
சிங்குரின் நேற்றைய விவசாயிகளா, அல்லது நாளை அங்கே வேலைக்குச் சேரவிருக்கும் தொழிலாளிகளா?
சிங்குரின் 1000 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பவர்கள் 1320 குத்தகை விவசாயிகள், சுமார் 3000 நிலமற்ற கூலி விவசாயிகள், காய்கனி வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 4475 பேர், வெளியூர்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சுமார் 5000 தொழிலாளர்கள். இந்த 12,000 பேருக்கு டாடா ஆலை வழங்கப் போவது என்ன?
ஆலையைச் சுற்றி அமையவிருக்கும் அபார்ட்மென்டுகளில் விவசாயிகள் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். சிறு வியாபாரிகள் அயர்ன் வண்டி தள்ளலாம், நாற்று நட்ட பெண்கள் அபார்ட்மென்டு அம்மணிகளுக்குத் துணி துவைத்துப் போடலாம். இவ்வாறாக மேட்டுக்குடி வர்க்கத்துக்குப் பலவிதமாகச் சேவை செய்து அவர்கள் வழங்கும் மிச்சம் மீதியை வாங்கித் தின்னலாம். இதுதான் டாடா ஆலை உருவாக்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தில் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கப் போகும் பங்கு.
···
""ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி அலைகிறார்கள், அவர்களை நாம் கைவிட்டு விட முடியுமா?'' என்று தன் கடிதத்தில் உணர்ச்சி பொங்கக் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். தன்னுடைய சுரண்டலுக்காகவும் லாப நோக்கத்துக்காகவும் அன்றி வேறு எந்தச் சமூக நோக்கத்துக்காகவும் ஒரு முதலாளி தொழிற்சாலையைத் தொடங்குவதில்லை. மார்க்சியம் தெரியாத பாமரத் தொழிலாளிக்குக் கூடத் தெரிந்திருக்கும் இந்த உண்மை புத்ததேவுக்கு மறந்துவிட்டது போலும்! முதலாளி வர்க்கத்தின் ஆவி புத்ததேவுக்குள் புகுந்து கொண்டு அவரைச் சாமியாட வைக்கிறது.
12,000 பேரை வேலையைவிட்டு விரட்டிய இந்த ஆலை எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்? கிட்டத்தட்ட இதே அளவு மூலதனத்துடன் சென்னையில் இயங்கிவரும் ஃபோர்டு, ஹூண்டாய் ஆலைகள் ஆயிரத்துக்கும் குறைவான தொழிலாளர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. தினக்கூலிகளையும் துணைத்தொழில்களில் ஈடுபட்டிருப்போரையும் சேர்த்தால் கூட வேலை வாய்ப்பு ஓரிரு ஆயிரங்களைத் தாண்டாது.
பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு சிங்குரில் அமையவிருப்பது சைக்கிள் தொழிற்சாலை அல்ல. கார் உற்பத்தி என்பதே உயர் தொழில்நுட்பம் சார்ந்தது. டாடாவோ குறைந்த விலையில் (ஒரு லட்சம் ரூபாயில்) கார் தயாரிக்கவிருக்கிறார். அதி உயர் தொழில் நுட்பம் இல்லாமல் இந்த விலைக் குறைப்பு சாத்தியமில்லை. உயர் தொழில் நுட்பம் இருந்தாலோ வேலை வாய்ப்பு சாத்தியமில்லை. உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படாமல் குறைந்த விலையிலான கார் சாத்தியமே இல்லை. இவையனைத்தும் மிக எளிய பொருளாதார உண்மைகள்.
ஆனால் உண்மைகள் யாருக்கு வேண்டும்? ""ஒரு கருத்தாக்கம் அறிவியல் பூர்வமாகச் சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. சர்வதேச நிதிமூலதனத்துக்கும், அதன் கூட்டாளிகளான இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அந்தக் கருத்தாக்கம் உகந்ததாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் வக்கிரப் பொருளாதாரம் நிர்ணயிக்கும் அளவுகோல்'' என்று தனது கட்டுரையில் சாடுகிறார் பட்நாயக்.
சிங்குர் பிரச்சினை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நியாயமாகவோ, அறிவியல் பூர்வமாகவோ பதிலளிக்க முடியாத புத்ததேவ், சென்டிமென்டுக்குத் தாவுகிறார். ""ரத்தன் டாடாவை நான் அரும்பாடு பட்டு அழைத்து வந்தேன். சிங்குர் நிலம் இல்லை என்று நான் டாடாவிடம் எப்படிச் சொல்ல முடியும்? இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறாவிட்டால் நான் தலைநிமிர்ந்து நடக்கவே முடியாது,'' (இந்து, டிச.27, 2006) என்று கூறி டாடா என்ற முதலாளியின் வியாபாரப் பிரச்சினையை, தன்னுடைய மானப் பிரச்சினையாக மாற்றுகிறார்.
""இத்தனைப் பிரச்சினைகள் இருக்கும்போது ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியதுதானே'' என்று கேள்வி எழுப்பியபோது, ""டாடா நிறுவனத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு இருக்கிறது'' (இந்து, நவ. 26, 2006) என்று பதிலளித்திருக்கிறார் டாடா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ரவி காந்த்.
இலாப உணர்ச்சி தவிர வேறெந்த உணர்ச்சியையும் அறியாத முதலாளி வர்க்கம் இந்த அளவுக்கு உணர்ச்சி வயப்படுவதிலிருந்தே, காப்பியச் சிறப்பு மிக்க இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
""நாங்கள் 6 இடங்களைக் காட்டினோம். சிங்குர் தான் வேண்டும் என்று டாடா நிறுவனம் கூறிவிட்டது'' என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் "மார்க்சிஸ்டு' எம்.பி.நீலோத்பல் பாசு. அவர்கள் விரும்பிய சிங்குர் நிலம் 120 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொடுத்து வாங்கப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார் தொழிற்சாலைக்கு 250 ஏக்கருக்கு மேல் தேவையில்லை எனும்போது 1000 ஏக்கர் எதற்கு என்ற கேள்விக்கும் பதில் இல்லை. தண்ணீர், மின்சாரம், சாலைகள் முதலானவற்றில் இன்னும் என்னென்ன சலுகைகள் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்துவது நட்புக்கு இலக்கணமாகாது என்று புத்ததேவ் கருதுகிறார் போலும்!
No comments:
Post a Comment