ராஜ்தாக்கரேயின் இனவெறிமும்பையைக் கவ்விய பயங்கரம்!
ராஜ்தாக்கரேயின் இனவெறிமும்பையைக் கவ்விய பயங்கரம்!
இந்தியாவில் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி; பீகார் மாநில உழைக்கும் மக்கள், நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் இன்று...? டாக்சி ஓட்டுநர்களாகவும் நடைபாதை வியாபாரிகளாகவும் தள்ளுவண்டிக்காரர்களாகவும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் உள்ள வடஇந்திய சாமானிய மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது பிழைப்புக்கான சாதனங்களும் அற்ப உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. போஜ்புரி மொழியில் வெளியான திரைப்படத்தைத் திரையிட்ட அரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் வட இந்திய உழைக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மும்பையை விட்டுத் தப்பியோடுகிறார்கள்.
மும்பை, புனே மற்றும் நாசிக் நகரங்களில் இக்காட்டுமிராண்டித்தனமான இனவெறித் தாக்குதலை ""மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா'' என்ற கட்சியின் குண்டர்கள் கடந்த பிப்ரவரி முதல் இரு வாரங்களில் கட்டவிழ்த்து விட்டனர். இந்துவெறி இனவெறி பிடித்த பாசிச சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேயின் சகோதரர் மகனாகிய ராஜ்தாக்கரே என்பவர்தான் இக்கட்சியின் தலைவர். சிவசேனாவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய அவர், ""இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் வசித்துக் கொண்டு கோடிகோடியாய் சம்பாதித்த பணத்தை மகாராஷ்டிராவில் அல்லாமல் உ.பி.யில் முதலீடு செய்கிறார்; ரயில்வே துறையில் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகாரிகளுக்கே வேலை வாய்ப்பளிக்கிறார்; மாநிலமானது வந்தேறிகளின் வேட்டைக் காடாகி விட்டது'' என்றெல்லாம் அவர் குறுகிய இனவெறியைத் தூண்டிவிட, அவரது கட்சிக்குண்டர்கள் வடமாநில உழைக்கும் மக்கள் மீது வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
மும்பை போன்ற வர்த்தகப் பெருநகரங்களில் ஏற்கெனவே பிறமாநிலத்தவர் கணிசமான அளவில் குடியேறி பல்வேறு மொழிஇன மக்களும் கலந்து வாழ்வது இயல்பானதாகி விட்டது. குறிப்பாக, தாராளமயம்உலகமயத்தால் விவசாயம் நாசமாக்கப்பட்டதன் விளைவாக, வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக மும்பை போன்ற நகரங்களில் குடியேறுகிறார்களேயன்றி, இவர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், இச்சாமானிய மக்களைக் குறிவைத்துத் தாக்கி, வடஇந்தியர்களுக்கெதிராக குறுகிய இனவெறியூட்டி, மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களை தம்பக்கம் இழுக்க ராஜ்தாக்கரே கும்பல் முயற்சிக்கிறது.
இருவாரங்களாக ராஜ்தாக்கரே கும்பலின் வெறியாட்டங்கள் தொடர்ந்த போதிலும் மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரசுதேசியவாத காங்கிரசு கூட்டணி அரசு கைகட்டி நின்றுவிட்டு, பின்னர் கண்துடைப்புக்காக ராஜ்தாக்கரேவைக் கைது செய்து அடுத்த நிமிடமே பிணையில் விடுவித்து விட்டது. தமது மராத்திய ஓட்டு வங்கிக்கு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.
பொதுவாகவே பல மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து தேசியக் கட்சிகளும் தமது ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்தாக்கரே அளவுக்கு இல்லையென்றாலும், இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமது மாநிலத்தின் நலன் என்ற பெயரால் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடைவதில் கர்நாடகாகேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இதே வழியில் ஓரணியில் நிற்கின்றன.
மண்ணின் மைந்தர்களான உழைக்கும் மக்களை அவர்களது சொந்த பூமியிலிருந்து அடித்து விரட்டி வாழ்வைப் பறிப்பதும், மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் தேசிய இனமொழிபண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும் தாராளமயமும் உலகமயமும் தான். அதற்கெதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும் குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே போன்ற பாசிச இனவெறி சக்திகள் கிளம்பியுள்ளனர். சட்டத்தின் மூலமாகவோ, தாராளமயம் உலகமயத்தின் அடியாட்களான ஓட்டுக்கட்சிகளின் மூலமாகவோ இத்தகைய பாசிச இனவெறி சக்திகளை முறியடிக்க முடியாது. இனமொழி வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கெதிராகப் போராடாமல், மண்ணின் மைந்தர்கள் தமது நிலத்தையும், வாழ்வையும் இனமொழி உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.
No comments:
Post a Comment