Wednesday, April 16, 2008

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை :
நரியின் சாயம் வெளுத்தது


போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது கடைசி ஒட்டுத் துணியையும் அவிழ்த்து வீசிவிட்டு நிர்வாணமாய் நிற்கிறது. இதுவரை அக்கட்சி நடத்திவந்த மிக மோசமான சந்தர்ப்பவாத அரசியல் ஆட்டத்தில், ""மதச்சார்பின்மை என்ற ஒரே ஒட்டுத் துணி''யால் மானத்தைக் காத்துக் கொண்டிருந்தது.

வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவிலிருந்து சதித்தனமாக ""நாடு கடத்தியதில்'' இருந்து போலி மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கமும் தமது சுயரூபத்தைத் தாமே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.

போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது எல்லா சந்தர்ப்பவாதங்களையும் நியாயப்படுத்துவதற்கு வைத்துள்ள ஒரே அரசியல் ஆயுதம் மதச்சார்பின்மை. ஆனால், இந்த மதச்சார்பின்மையையேகூட அக்கட்சி ஒரு சந்தர்ப்பவாத ஆயுதமாகவே கொண்டிருக்கிறது. காங்கிரசு கட்சியைப் போலவே, மிதவாத இந்துத்துவா அரசியலைக் கொண்டிருக்கிறது.

அதாவது இக்கட்சிகள் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியலைத்தான் எதிர்க்கின்றனதே தவிர, அக்கும்பலின் இந்துத்துவமயமாக்கலை எதிர்ப்பதில்லை. அதேசமயம் மதச்சார்பின்மை நாடகமாடி, முஸ்லீம்களின் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு ஓட்டுப் பொறுக்குவதற்காக இசுலாமிய மதவெறியர்களின் நிலையை ஆதரிக்கின்றனர்.

தஸ்லிமா வங்கதேசத்தவர் என்றாலும், ""லஜ்ஜா'' நாவலை வெளியிட்டதிலிருந்து அந்நாட்டு முஸ்லீம் மதவெறியர்கள் அவரது தலைக்கு விலை வைத்து வேட்டையாடத் தொடங்கிய பிறகு, சுவீடன் நாட்டில் தஞ்சமடைந்தார்; அவர் விரும்பியிருந்தால் எத்தனையோ மேலைநாடுகளில் மருத்துவத் தொழில் செய்து கொண்டோ, எழுத்தாளராகவோ சுதந்திரமாகவும் சொகுசாகவும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், தஸ்லிமா ஒரு படித்த அறிவுஜீவி என்றாலும், அரசியல் அறிவற்ற பேதை.

திபேத்தின் தலாய்லாமா மற்றும் ஆயிரக்கணக்கான அவரது சீடர்கள்; "ஜனநாயக'த்துக்குப் போராடும் நேபாளி காங்கிரசுத் தலைவர்கள்; ஃபைஸ் அகமது ஃபைஸ், ஃபாமிதா ரியாஸ் ஆகிய பாகிஸ்தானிய எழுத்தாளர்கள்; வங்கதேசத்தின் சேக் முஜிபூர் ரஹ்மான் மகளும் முன்னாள் பிரதமருமான சேக் ஹசினா வாஜீத், ஈழத் துரோகி வரதராஜப் பெருமாள் இப்படி ஏராளமான அந்நிய தேசத்தினர் இந்தியாவில் அரசு விருந்தினர்களாக வாழ்கின்றனர்.

அவர்களைப் போல, இந்தியாவில் அமைதியான, சுதந்திரமான வாழ்வு தனக்குக் கிடைக்கும் என்று தஸ்லிமா நம்பினார். அதாவது இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு; இங்கு சுதந்திரமாக எழுதவும், பேசவும், வெளிப்படையாக வாழவும் முடியும் என்றும் மேலோட்டமாகக் கருதினார். தஸ்லிமாவின் பார்வையின்படி ஜனநாயகத்துக்காகவும் சுதந்திர உரிமைகளுக்காகவும் போராடிய பலருக்கு இந்தியா புகலிடம் கொடுத்து வாழ்வித்து வருகிறது. ஆனால், மேற்படி நபர்களுக்கு இந்தியா தஞ்சமளித்து அரசு விருந்தினர்களாகவும் பாதுகாப்பாகவும் வாழ்விப்பதற்கு உண்மையான காரணங்கள் வேறுவேறாக உள்ளன. சீனா, பாக். எதிர்ப்பு அரசியல் நோக்கத்துக்காக சிலரையும், இந்தியா கடைப்பிடித்த வெளியுறவு ஆக்கிரமிப்பு, விரிவாக்க, ஆதிக்க கொள்கைகள் தோல்வியுற்றதால் வந்த பாவத்தைச் சுமக்கும் வகையில் சிலரையும் பேண வேண்டியதாகியது.

இந்தியாவிலேயே இந்துத்துவ மதவெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமைகளோடும் வாழவும், பணியாற்றவும் முடியவில்லை. அவர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி ஓவியர் எம்.எஃப். உசேன் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்து மதவெறியர்கள் மட்டுமல்ல; முஸ்லீம் மற்றும் கிறித்துவ மதவாதிகளின் கூச்சல்களுக்குப் பயந்து, இந்திய அரசு சல்மான் ருஷ்டி நூலுக்கும், "டாவின்சி கோடு' திரைப்படத்துக்கும் தடை விதித்தது. இதையெல்லாம் அறிந்தும் இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும், சுதந்திரமும் இருப்பதாக தஸ்லிமா நஸ்ரின் நம்புவது பேதமைதானே!

அதுமட்டுமல்ல; தஸ்லிமா தனது தாய்மொழியான வங்காள மொழியில் எழுதுவதையும், தனது தாய்மொழியினரிடையே, அவர்களின் பண்பாடுகளுடன் சேர்ந்து வாழ்வதையும் நேசித்தார். அதற்காக, மதச்சார்பின்மை, ஜனநாயகம், முற்போக்கு பேசும் "இடதுசாரிகள்' 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மேற்கு வங்காளமும் ஜனநாயகம், சுதந்திர எண்ணங்கொண்ட அறிவுஜீவிகள் அதிகமாக வாழும் கொல்கத்தாவும் தனக்குப் பாதுகாப்பும் ஆதரவும் நல்கும் என்று நம்பி அங்கு குடியேறினார்.

இதுவும் ஏமாளித்தனமாகவே முடிந்தது. மேற்கு வங்க போலி மார்க்சிஸ்ட் தலைமையிலான "இடதுசாரி' கூட்டணி அரசு ஆரம்பம் முதலே சதி செய்து தஸ்லிமாவை கொல்கத்தாவில் இருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தது. முஸ்லீம் மதவாதிகள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதபோதே தானே முன்வந்து 2003ஆம் ஆண்டே தஸ்லிமாவின் சுயசரிதை நூலைத் தடை செய்தது. கொல்கத்தா அறிவுஜீவிகள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு அத்தடையை நீக்கியது. அதன்பிறகு, போலீசை ஏவி நிர்பந்தித்தும் மிரட்டியும் வெளியேறி விடும்படி எச்சரித்தது.

கடைசியாக, கடந்த நவம்பரில் தஸ்லிமாவை நாட்டைவிட்டுத் துரத்தும்படி கோரி முஸ்லீம் மதவெறிக் கும்பல் கொல்கத்தா நகரில் கலவரங்களில் இறங்கியது. அப்போதைக்கு இராணுவத்தை இறக்கி கொல்கத்தாவில் ""அமைதி''யை ஏற்படுத்தினாலும், போலி மார்க்சிஸ்டு தலைமையிலான "இடதுசாரி' முன்னணி அரசு நேரடியான வெட்கக் கேடான செயலில் இறங்கியது. இரவோடு இரவாக போலீசு அதிகாரிகளை ஏவிவிட்டு, கட்டிய துணியோடு தஸ்லிமா நஸ்ரினை ஒரு விமானத்தில் தூக்கிப் போட்டு பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றது. அங்கே ஒரு விடுதியில் தள்ளிவிட்டுவிட்டு ஓடிவந்து விட்டது. அங்கிருந்து ஓரிரு நாட்களில் ராஜஸ்தான் போலீசு தஸ்லிமாவை டெல்லிக்குக் கடத்திக் கொண்டு போய், ஜெய்ப்பூர் மாளிகையில் அடைத்து வைத்தது. பின்னர் மத்திய அரசின் தேசிய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, இடம் விட்டு இடம் மாற்றி, இறுதியில் தலைநகரின் தென்மேற்கில் உள்ள அப்படையின் விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டார்.

முஸ்லீம் மதவாதிகளால் தஸ்லிமாவின் தலைக்கு விலையும் உயிருக்குக் குறியும் வைக்கப்பட்டிருக்கிறது. இதையே சாக்கு வைத்து, இந்தியாவில் இருந்த கடந்த நான்காண்டுகளாக அவர் ஏறக்குறைய சிறையிலடைக்கப்பட்டதைப் போல, கொல்கத்தா போலீசால் வீட்டுக் காவலில்தான் வைக்கப்பட்டிருந்தார். தைவான் தலைநகர் தாய்பெய் நகரில் நடந்த கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டுமே இருமுறை வெளியில் விடப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்திருப்பதாகக் கூறி வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்த போலீசு, எவ்விதப் பாதுகாப்புமின்றி கொல்கத்தாவிலிருந்து ஜெய்ப்பூருக்கும் அங்கிருந்து டெல்லிக்கும் விரட்டியது.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் பந்தாடப்பட்ட விவகாரம் மூலம் நாட்டின் மூன்று முக்கிய ஓட்டுக் கட்சி அணிகளின் அரசியல் ஓட்டாண்டித்தனம் வெட்டவெளிச்சமாகியது. இந்த வகையில் முதலிடத்தில் நிற்பது போலி மார்க்சிஸ்ட் கட்சியாகும். எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி பாயும் போதெல்லாம் தவறாது சவடால் அடிக்கும் போலி மார்க்சிஸ்டு கட்சிக்கு தஸ்லிமாவைப் பாதுகாப்பதைவிட, மதச்சார்பின்மை நாடகமாடி இசுலாமிய மதவாதிகளின் ஆதரவைப் பெற்று ஓட்டுப் பொறுக்குவது முக்கியமானதாக உள்ளது.

ஏற்கெனவே நந்திகிராமத்தில் போலி மார்க்சிஸ்டுகளின் பாசிச ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் விவசாயிகள். அதோடு தற்போது ரிஸ்வான் ரஹ்மான் "தற்கொலை' விவகாரமும் அக்கட்சிக்கு எதிரான முஸ்லீம் மக்களின் வெறுப்பை அதிகரித்துள்ளது. அதாவது தன் பெண்ணைக் காதலித்து மணம் செய்யவிருந்த முஸ்லீம் பொறியாளர் ரிஸ்வானை கொல்கத்தா போலீசை ஏவி, மிரட்டி, "தற்கொலை' (!) செய்ய வைத்தான் ஒரு இந்து முதலாளி. அந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று அம்பலமாகிப் போனது, போலி மார்க்சிஸ்டு அரசு.

இவற்றால், மேற்கு வங்க வாக்காளர்களில் 26 சதவீதத்தினராக உள்ள இசுலாமியர்களின் ஆதரவை இழந்து விடும் பீதியிலுள்ள போலி மார்க்சிஸ்டுகள், தஸ்லிமா நஸ்ரினை பலி கொடுப்பது என்று தீர்மானித்து, அவரை நாடு கடத்தும் சதித்தனமான வேலையைச் செய்து முடித்தனர். முதலாளித்துவ ஊடகத்தின் கள்ளக் காதலனும் அக்கட்சியின் கோயாபல்சுமான சீத்தாராம் யெச்சூரி, தஸ்லிமா மீதான நடவடிக்கைக்கும் தனது கட்சிக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்று அப்பட்டமாகப் புளுகித் தள்ளினார்.

ஆனால், இசுலாமிய மதவெறியர்கள் கொல்கத்தா நகரின் தெருக்களில் இறங்கிக் கலவரம் செய்த உடனே, அக்கட்சியின் மாநிலச் செயலாளரான குண்டர்படைத் தலைவன் பீமன் பாசு, ""மேற்கு வங்காளத்தில் தஸ்லிமா தங்கியிருப்பதில் மைய அரசின் பங்கு பற்றி விரிவாக நான் பேச விரும்பவில்லை. ஆனால், அவரது இருப்பு அமைதிக்கு ஒரு பிரச்சினையை உருவாக்குமானால், மாநிலத்தை விட்டு அவர் வெளியேறி விடவேண்டும்'' என்று தஸ்லிமா நஸ்ரினுக்கு எச்சரிக்கையும் மிரட்டலும் விடுத்தார்.

இதற்கு இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கண்டனம் தெரிவித்தவுடன், பீமன் பாசு ""தஸ்லிமாவுக்குக் கடவுச் சீட்டு வழங்குவதிலோ அல்லது அதை ரத்து செய்வதிலோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசுதான் இதில் முடிவு செய்ய முடியும்; இந்தப் பிரச்சினையில் மைய அரசே பொருத்தமான முடிவெடுக்கட்டும். இதை நான் தெளிவான மொழியில் சொல்லியிருக்க வேண்டும். மாநிலக் கட்சி (சி.பி.எம்) சார்பாக, நேற்று இரவு விடுத்த அறிக்கையை திருத்திக் கொள்கிறேன் என்பதை மக்களுக்கு விளக்க விரும்புகிறேன்'' என்றார் பீமன் பாசு. போலீசை விட்டு, மிரட்டி, நிர்பந்தமாக ""நாடு கடத்தி விட்டு'', பிறகு இப்படித் திரித்துப் புரட்டி, பூசி மழுப்பினார் பீமன் பாசு. இப்படிப் புரட்டுவதுதான் போலி மார்க்சிஸ்டுகளின் வாடிக்கையாக உள்ளது.

ஆனால், சீத்தாராம் யெச்சூரி தனக்கே உரிய நயவஞ்சகத்தோடும் நம்பூதிரித்தனமாகவும், ""தஸ்லிமா விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது மைய அரசின் சட்ட உரிமையாகும். அதுதான் அவருக்கு கடவுச் சீட்டு வழங்கியுள்ளது'' என்று பேசி கைகழுவி விட்டார். மைய அரசு தனக்குள்ள அதிகாரம், உரிமைகளை வைத்து எடுக்கும் எல்லா விவகாரங்களிலும் இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் இப்படித்தான் ஒதுங்கிக் கொள்கின்றனரா? முற்போக்கு முகமூடியும் வேண்டும்; முஸ்லீம்களின் வாக்குகளும் வேண்டும் என்பதற்காகத்தானே இப்படி சந்தர்ப்பவாதம் பேசுகிறார் சீத்தாராம் யெச்சூரி. முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் இன்னொரு கள்ளக் காதலியும், பெண்ணுரிமை, ஜனநாயக உரிமை பற்றியெல்லாம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாய் கிழியப் பேசுபவருமான பிருந்தா காரத் உட்பட போலி மார்க்சிஸ்டுகள் மேற்கொண்டு எதுவும் பேசாது ஓடி ஒளிகின்றனர்.

அதேசமயம், ""தஸ்லிமா கொல்கத்தா திரும்புவதை வரவேற்கிறோம்'' என்று அதிகாரிகளை விட்டு ஒருபுறம் பேட்டியளிப்பதும்; மறுபுறம், ""அரசின் போலீசுத் துறையிடமிருந்து உடனடியாக தஸ்லிமாவை மூட்டை கட்டி அனுப்பிவிடும்படி உத்தரவு வந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக (யாருடைய பாதுகாப்பு?) அவரை அனுப்பி விட்டோம். மற்றபடி எந்தக் கருத்தும் கூற முடியாது'' என்கிறார் கொல்கத்தா போலீசு துணை ஆணையாளர் வினீத் கோயல்.

போலி மார்க்சிஸ்டுகளின் ஆதரவோடு ஆட்சி புரியும் மைய அரசின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, ""பாதுகாப்பைக் கோரி வரும் யாருக்கும் தஞ்சமளிக்க இந்தியா எப்போதுமே மறுத்ததில்லை. நஸ்ரினுக்கும் புகலிடம் அளிப்போம்'' என்று யோக்கியன் போல தொடங்கி, ""ஆனால், எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நடவடிக்கைகளிலோ, கருத்துக்களைச் சொல்வதிலோ எங்கள் விருந்தினர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று நிபந்தனைகள் போட்டார். அதாவது, இந்தியாவில் வாழலாம், ஆனால், சுதந்திரமாக எழுதும் உரிமை கிடையாது என்கிறார்.

இந்துக் கடவுளர்களை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி பிரபல ஓவியர் எம்.எஃப். உசைனின் கண்காட்சியைத் தாக்கி, மிரட்டி, அவரை வெளிநாட்டிற்கு விரட்டியவர்கள்; எம்.எஸ். பல்கலைக்கழக மாணவரைத் தாக்கி பொய் வழக்குப் போட்டவர்கள்; இந்து சமுதாயத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் திரைப்படம் எடுத்த பெண் இயக்குநரின் படப்பிடிப்புக் குழுவினரைத் தாக்கியவர்கள்; வீதி நாடகம் நடத்திய சப்தார் ஹாஸ்மியை அந்த இடத்திலேயே படுகொலை செய்தவர்கள்; குஜராத்தில் அமீர்கானின் திரைப்படத்தைத் திரையிட முடியாமல் தடை விதித்தவர்கள்; மோடியின் முஸ்லீம் படுகொலைகளை அம்பலப்படுத்திய தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடைவிதித்தவர்கள் — பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால், முஸ்லீம் மதவாதிகள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துரிமை சுதந்திரத்தை காக்கும் அவதாரம் எடுத்தார்கள். தஸ்லிமா இஸ்லாமியப் பிற்போக்குத்தனத்தை எதிர்ப்பதைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கோணல் புத்திதான் இந்த ஆதரவுக்குக் காரணம்.

கொல்கத்தாவிலிருந்து விரட்டப்பட்ட தஸ்லிமாவுக்கு ராஜஸ்தானை ஆளும் முதல்வர் விஜயராஜே வரவேற்றுத் தஞ்சமளித்தார். தேர்தல் பிரச்சாரத்திலிருந்த மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், பா.ஜ.க.வின் மக்களவை பேச்சாளர் மல்கோத்ரா எனப் பலரும் கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஏவிப் படுகொலைகள் நடத்தி, அதைப் பகிரங்கமாகவே நியாயப்படுத்தும் மோடி, ""சாத்தான் வேதம் ஓதுவது போல'' ""அடிப்படைவாதிகளுக்கு எதிராகத் தஸ்லிமா துணிச்சலோடு பேசுகிறார். மைய அரசு அவரைப் பேண முடியவில்லை என்றால் குஜராத்துக்கு அனுப்பட்டும். குஜராத் மக்களும் அரசும் அவரைப் பேணிக் கொள்வார்கள். அவரைப் பாதுகாக்கும் துணிவு எனக்கிருக்கிறது'' என்கிறார். பில்கிஸ் பானு போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் தமது உயிருக்கும் மானத்துக்கும் அஞ்சி அகதிகள் முகாம்களிலும் வெளிமாநிலங்களிலும் தஞ்சமடையக் காரணமான காட்டுமிராண்டி மோடி, மான்களுக்குப் பாதுகாப்பளிப்பதாக ஓநாயைப் போல இளிக்கிறார்.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் இந்த நாட்டில் வேட்டையாடப்படுவதற்குத் தலைமை தாங்குபவர், ஜமாத் உலேமா இந்த் என்ற முஸ்லீம் மதவெறி அமைப்பின் பொதுச் செயலாளர் மகமது மதானி. அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூலமாக தஸ்லிமா வேட்டையை நடத்தும் இவர், நாடு முழுவதும் உள்ள தியேõபந்த் மதராசா பள்ளிகளைக் கட்டுப்படுத்துபவர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு எதிராக, நாட்டிலேயே அதிகமாக மதச்சார்பின்மை கூச்சல் போடும் ""சமூக நீதி'' ராமபக்தன் லாலுபிரசாத் யாதவ் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர். தஸ்லிமா முஸ்லீம் சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பற்றி மட்டுமல்ல, குரானையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி தனது மூன்றாம் பகுதி சுயசரிதையில் எழுதிக் கோடிக்கணக்கான முஸ்லீம் மக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் என்பதுதான் அவர்களின் புகார். அது உண்மைதான் என்றால், சட்டப்படியான நடவடிக்கைதான் எடுக்க வேண்டுமே தவிர, அவரது தலைக்கு விலை வைத்து ""மதக் கட்டளை'' விதிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமைஅதிகாரம் இருக்கிறது? மதத்தின் பெயரால் இப்படி நடவடிக்கைகளில் இறங்குவதற்கு மதவாதிகளுக்கு உரிமை இருக்கிறது என்றால், அப்புறம் எல்லா மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இந்த நாடும் சமுதாயமும் பலியாகி விடும்.

· மாணிக்கவாசகம்


No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது