Tuesday, April 22, 2008

தோழர் லெனின் பிறந்த நாள்


"தோழர்களே, புலம்பாதீர்கள்.நாம் வெற்றி பெற்றே தீருவோம்.ஏனெனில், நம்முடைய நிலைப்பாடு சரியானது."
- தோழர் லெனின்

Related:

Friday, April 18, 2008

தில்லைச் சமரில் வென்றது தமிழ்! காட்சி பதிவுகள்!!







நன்றிஇவான்

மே நாள் பேரணி & பொதுக்கூட்டம்

மாலை 4 மணி
பேரணி
மணலி, மாத்தூர், மீன் மார்க்கெட்

மாலை 6 மணி
பொதுக்கூட்டம்
சின்னக்சேக்காடு, மணலி

தலைமை
தோழர் பா.விஜயகுமார்
மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு

..
சிறப்புரை
தோழர் சுப.தங்கராசு
பொதுச் செயலாளர் பு.ஜ.தொ.மு தமிழ்நாடு

..
தோழர் உஷா

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

Thursday, April 17, 2008

ராஜ்தாக்கரேயின் இனவெறிமும்பையைக் கவ்விய பயங்கரம்!

ராஜ்தாக்கரேயின் இனவெறிமும்பையைக் கவ்விய பயங்கரம்!

இந்தியாவில் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி; பீகார் மாநில உழைக்கும் மக்கள், நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் இன்று...? டாக்சி ஓட்டுநர்களாகவும் நடைபாதை வியாபாரிகளாகவும் தள்ளுவண்டிக்காரர்களாகவும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் உள்ள வடஇந்திய சாமானிய மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது பிழைப்புக்கான சாதனங்களும் அற்ப உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. போஜ்புரி மொழியில் வெளியான திரைப்படத்தைத் திரையிட்ட அரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் வட இந்திய உழைக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மும்பையை விட்டுத் தப்பியோடுகிறார்கள்.

மும்பை, புனே மற்றும் நாசிக் நகரங்களில் இக்காட்டுமிராண்டித்தனமான இனவெறித் தாக்குதலை ""மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா'' என்ற கட்சியின் குண்டர்கள் கடந்த பிப்ரவரி முதல் இரு வாரங்களில் கட்டவிழ்த்து விட்டனர். இந்துவெறி இனவெறி பிடித்த பாசிச சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேயின் சகோதரர் மகனாகிய ராஜ்தாக்கரே என்பவர்தான் இக்கட்சியின் தலைவர். சிவசேனாவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய அவர், ""இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் வசித்துக் கொண்டு கோடிகோடியாய் சம்பாதித்த பணத்தை மகாராஷ்டிராவில் அல்லாமல் உ.பி.யில் முதலீடு செய்கிறார்; ரயில்வே துறையில் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகாரிகளுக்கே வேலை வாய்ப்பளிக்கிறார்; மாநிலமானது வந்தேறிகளின் வேட்டைக் காடாகி விட்டது'' என்றெல்லாம் அவர் குறுகிய இனவெறியைத் தூண்டிவிட, அவரது கட்சிக்குண்டர்கள் வடமாநில உழைக்கும் மக்கள் மீது வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

மும்பை போன்ற வர்த்தகப் பெருநகரங்களில் ஏற்கெனவே பிறமாநிலத்தவர் கணிசமான அளவில் குடியேறி பல்வேறு மொழிஇன மக்களும் கலந்து வாழ்வது இயல்பானதாகி விட்டது. குறிப்பாக, தாராளமயம்உலகமயத்தால் விவசாயம் நாசமாக்கப்பட்டதன் விளைவாக, வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக மும்பை போன்ற நகரங்களில் குடியேறுகிறார்களேயன்றி, இவர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், இச்சாமானிய மக்களைக் குறிவைத்துத் தாக்கி, வடஇந்தியர்களுக்கெதிராக குறுகிய இனவெறியூட்டி, மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களை தம்பக்கம் இழுக்க ராஜ்தாக்கரே கும்பல் முயற்சிக்கிறது.

இருவாரங்களாக ராஜ்தாக்கரே கும்பலின் வெறியாட்டங்கள் தொடர்ந்த போதிலும் மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரசுதேசியவாத காங்கிரசு கூட்டணி அரசு கைகட்டி நின்றுவிட்டு, பின்னர் கண்துடைப்புக்காக ராஜ்தாக்கரேவைக் கைது செய்து அடுத்த நிமிடமே பிணையில் விடுவித்து விட்டது. தமது மராத்திய ஓட்டு வங்கிக்கு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

பொதுவாகவே பல மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து தேசியக் கட்சிகளும் தமது ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்தாக்கரே அளவுக்கு இல்லையென்றாலும், இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமது மாநிலத்தின் நலன் என்ற பெயரால் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடைவதில் கர்நாடகாகேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இதே வழியில் ஓரணியில் நிற்கின்றன.

மண்ணின் மைந்தர்களான உழைக்கும் மக்களை அவர்களது சொந்த பூமியிலிருந்து அடித்து விரட்டி வாழ்வைப் பறிப்பதும், மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் தேசிய இனமொழிபண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும் தாராளமயமும் உலகமயமும் தான். அதற்கெதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும் குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே போன்ற பாசிச இனவெறி சக்திகள் கிளம்பியுள்ளனர். சட்டத்தின் மூலமாகவோ, தாராளமயம் உலகமயத்தின் அடியாட்களான ஓட்டுக்கட்சிகளின் மூலமாகவோ இத்தகைய பாசிச இனவெறி சக்திகளை முறியடிக்க முடியாது. இனமொழி வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கெதிராகப் போராடாமல், மண்ணின் மைந்தர்கள் தமது நிலத்தையும், வாழ்வையும் இனமொழி உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.

Wednesday, April 16, 2008

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை :
நரியின் சாயம் வெளுத்தது


போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது கடைசி ஒட்டுத் துணியையும் அவிழ்த்து வீசிவிட்டு நிர்வாணமாய் நிற்கிறது. இதுவரை அக்கட்சி நடத்திவந்த மிக மோசமான சந்தர்ப்பவாத அரசியல் ஆட்டத்தில், ""மதச்சார்பின்மை என்ற ஒரே ஒட்டுத் துணி''யால் மானத்தைக் காத்துக் கொண்டிருந்தது.

வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவிலிருந்து சதித்தனமாக ""நாடு கடத்தியதில்'' இருந்து போலி மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கமும் தமது சுயரூபத்தைத் தாமே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.

போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது எல்லா சந்தர்ப்பவாதங்களையும் நியாயப்படுத்துவதற்கு வைத்துள்ள ஒரே அரசியல் ஆயுதம் மதச்சார்பின்மை. ஆனால், இந்த மதச்சார்பின்மையையேகூட அக்கட்சி ஒரு சந்தர்ப்பவாத ஆயுதமாகவே கொண்டிருக்கிறது. காங்கிரசு கட்சியைப் போலவே, மிதவாத இந்துத்துவா அரசியலைக் கொண்டிருக்கிறது.

அதாவது இக்கட்சிகள் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியலைத்தான் எதிர்க்கின்றனதே தவிர, அக்கும்பலின் இந்துத்துவமயமாக்கலை எதிர்ப்பதில்லை. அதேசமயம் மதச்சார்பின்மை நாடகமாடி, முஸ்லீம்களின் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு ஓட்டுப் பொறுக்குவதற்காக இசுலாமிய மதவெறியர்களின் நிலையை ஆதரிக்கின்றனர்.

தஸ்லிமா வங்கதேசத்தவர் என்றாலும், ""லஜ்ஜா'' நாவலை வெளியிட்டதிலிருந்து அந்நாட்டு முஸ்லீம் மதவெறியர்கள் அவரது தலைக்கு விலை வைத்து வேட்டையாடத் தொடங்கிய பிறகு, சுவீடன் நாட்டில் தஞ்சமடைந்தார்; அவர் விரும்பியிருந்தால் எத்தனையோ மேலைநாடுகளில் மருத்துவத் தொழில் செய்து கொண்டோ, எழுத்தாளராகவோ சுதந்திரமாகவும் சொகுசாகவும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், தஸ்லிமா ஒரு படித்த அறிவுஜீவி என்றாலும், அரசியல் அறிவற்ற பேதை.

திபேத்தின் தலாய்லாமா மற்றும் ஆயிரக்கணக்கான அவரது சீடர்கள்; "ஜனநாயக'த்துக்குப் போராடும் நேபாளி காங்கிரசுத் தலைவர்கள்; ஃபைஸ் அகமது ஃபைஸ், ஃபாமிதா ரியாஸ் ஆகிய பாகிஸ்தானிய எழுத்தாளர்கள்; வங்கதேசத்தின் சேக் முஜிபூர் ரஹ்மான் மகளும் முன்னாள் பிரதமருமான சேக் ஹசினா வாஜீத், ஈழத் துரோகி வரதராஜப் பெருமாள் இப்படி ஏராளமான அந்நிய தேசத்தினர் இந்தியாவில் அரசு விருந்தினர்களாக வாழ்கின்றனர்.

அவர்களைப் போல, இந்தியாவில் அமைதியான, சுதந்திரமான வாழ்வு தனக்குக் கிடைக்கும் என்று தஸ்லிமா நம்பினார். அதாவது இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு; இங்கு சுதந்திரமாக எழுதவும், பேசவும், வெளிப்படையாக வாழவும் முடியும் என்றும் மேலோட்டமாகக் கருதினார். தஸ்லிமாவின் பார்வையின்படி ஜனநாயகத்துக்காகவும் சுதந்திர உரிமைகளுக்காகவும் போராடிய பலருக்கு இந்தியா புகலிடம் கொடுத்து வாழ்வித்து வருகிறது. ஆனால், மேற்படி நபர்களுக்கு இந்தியா தஞ்சமளித்து அரசு விருந்தினர்களாகவும் பாதுகாப்பாகவும் வாழ்விப்பதற்கு உண்மையான காரணங்கள் வேறுவேறாக உள்ளன. சீனா, பாக். எதிர்ப்பு அரசியல் நோக்கத்துக்காக சிலரையும், இந்தியா கடைப்பிடித்த வெளியுறவு ஆக்கிரமிப்பு, விரிவாக்க, ஆதிக்க கொள்கைகள் தோல்வியுற்றதால் வந்த பாவத்தைச் சுமக்கும் வகையில் சிலரையும் பேண வேண்டியதாகியது.

இந்தியாவிலேயே இந்துத்துவ மதவெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமைகளோடும் வாழவும், பணியாற்றவும் முடியவில்லை. அவர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி ஓவியர் எம்.எஃப். உசேன் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்து மதவெறியர்கள் மட்டுமல்ல; முஸ்லீம் மற்றும் கிறித்துவ மதவாதிகளின் கூச்சல்களுக்குப் பயந்து, இந்திய அரசு சல்மான் ருஷ்டி நூலுக்கும், "டாவின்சி கோடு' திரைப்படத்துக்கும் தடை விதித்தது. இதையெல்லாம் அறிந்தும் இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும், சுதந்திரமும் இருப்பதாக தஸ்லிமா நஸ்ரின் நம்புவது பேதமைதானே!

அதுமட்டுமல்ல; தஸ்லிமா தனது தாய்மொழியான வங்காள மொழியில் எழுதுவதையும், தனது தாய்மொழியினரிடையே, அவர்களின் பண்பாடுகளுடன் சேர்ந்து வாழ்வதையும் நேசித்தார். அதற்காக, மதச்சார்பின்மை, ஜனநாயகம், முற்போக்கு பேசும் "இடதுசாரிகள்' 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மேற்கு வங்காளமும் ஜனநாயகம், சுதந்திர எண்ணங்கொண்ட அறிவுஜீவிகள் அதிகமாக வாழும் கொல்கத்தாவும் தனக்குப் பாதுகாப்பும் ஆதரவும் நல்கும் என்று நம்பி அங்கு குடியேறினார்.

இதுவும் ஏமாளித்தனமாகவே முடிந்தது. மேற்கு வங்க போலி மார்க்சிஸ்ட் தலைமையிலான "இடதுசாரி' கூட்டணி அரசு ஆரம்பம் முதலே சதி செய்து தஸ்லிமாவை கொல்கத்தாவில் இருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தது. முஸ்லீம் மதவாதிகள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதபோதே தானே முன்வந்து 2003ஆம் ஆண்டே தஸ்லிமாவின் சுயசரிதை நூலைத் தடை செய்தது. கொல்கத்தா அறிவுஜீவிகள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு அத்தடையை நீக்கியது. அதன்பிறகு, போலீசை ஏவி நிர்பந்தித்தும் மிரட்டியும் வெளியேறி விடும்படி எச்சரித்தது.

கடைசியாக, கடந்த நவம்பரில் தஸ்லிமாவை நாட்டைவிட்டுத் துரத்தும்படி கோரி முஸ்லீம் மதவெறிக் கும்பல் கொல்கத்தா நகரில் கலவரங்களில் இறங்கியது. அப்போதைக்கு இராணுவத்தை இறக்கி கொல்கத்தாவில் ""அமைதி''யை ஏற்படுத்தினாலும், போலி மார்க்சிஸ்டு தலைமையிலான "இடதுசாரி' முன்னணி அரசு நேரடியான வெட்கக் கேடான செயலில் இறங்கியது. இரவோடு இரவாக போலீசு அதிகாரிகளை ஏவிவிட்டு, கட்டிய துணியோடு தஸ்லிமா நஸ்ரினை ஒரு விமானத்தில் தூக்கிப் போட்டு பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றது. அங்கே ஒரு விடுதியில் தள்ளிவிட்டுவிட்டு ஓடிவந்து விட்டது. அங்கிருந்து ஓரிரு நாட்களில் ராஜஸ்தான் போலீசு தஸ்லிமாவை டெல்லிக்குக் கடத்திக் கொண்டு போய், ஜெய்ப்பூர் மாளிகையில் அடைத்து வைத்தது. பின்னர் மத்திய அரசின் தேசிய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, இடம் விட்டு இடம் மாற்றி, இறுதியில் தலைநகரின் தென்மேற்கில் உள்ள அப்படையின் விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டார்.

முஸ்லீம் மதவாதிகளால் தஸ்லிமாவின் தலைக்கு விலையும் உயிருக்குக் குறியும் வைக்கப்பட்டிருக்கிறது. இதையே சாக்கு வைத்து, இந்தியாவில் இருந்த கடந்த நான்காண்டுகளாக அவர் ஏறக்குறைய சிறையிலடைக்கப்பட்டதைப் போல, கொல்கத்தா போலீசால் வீட்டுக் காவலில்தான் வைக்கப்பட்டிருந்தார். தைவான் தலைநகர் தாய்பெய் நகரில் நடந்த கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டுமே இருமுறை வெளியில் விடப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்திருப்பதாகக் கூறி வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்த போலீசு, எவ்விதப் பாதுகாப்புமின்றி கொல்கத்தாவிலிருந்து ஜெய்ப்பூருக்கும் அங்கிருந்து டெல்லிக்கும் விரட்டியது.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் பந்தாடப்பட்ட விவகாரம் மூலம் நாட்டின் மூன்று முக்கிய ஓட்டுக் கட்சி அணிகளின் அரசியல் ஓட்டாண்டித்தனம் வெட்டவெளிச்சமாகியது. இந்த வகையில் முதலிடத்தில் நிற்பது போலி மார்க்சிஸ்ட் கட்சியாகும். எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி பாயும் போதெல்லாம் தவறாது சவடால் அடிக்கும் போலி மார்க்சிஸ்டு கட்சிக்கு தஸ்லிமாவைப் பாதுகாப்பதைவிட, மதச்சார்பின்மை நாடகமாடி இசுலாமிய மதவாதிகளின் ஆதரவைப் பெற்று ஓட்டுப் பொறுக்குவது முக்கியமானதாக உள்ளது.

ஏற்கெனவே நந்திகிராமத்தில் போலி மார்க்சிஸ்டுகளின் பாசிச ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் விவசாயிகள். அதோடு தற்போது ரிஸ்வான் ரஹ்மான் "தற்கொலை' விவகாரமும் அக்கட்சிக்கு எதிரான முஸ்லீம் மக்களின் வெறுப்பை அதிகரித்துள்ளது. அதாவது தன் பெண்ணைக் காதலித்து மணம் செய்யவிருந்த முஸ்லீம் பொறியாளர் ரிஸ்வானை கொல்கத்தா போலீசை ஏவி, மிரட்டி, "தற்கொலை' (!) செய்ய வைத்தான் ஒரு இந்து முதலாளி. அந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று அம்பலமாகிப் போனது, போலி மார்க்சிஸ்டு அரசு.

இவற்றால், மேற்கு வங்க வாக்காளர்களில் 26 சதவீதத்தினராக உள்ள இசுலாமியர்களின் ஆதரவை இழந்து விடும் பீதியிலுள்ள போலி மார்க்சிஸ்டுகள், தஸ்லிமா நஸ்ரினை பலி கொடுப்பது என்று தீர்மானித்து, அவரை நாடு கடத்தும் சதித்தனமான வேலையைச் செய்து முடித்தனர். முதலாளித்துவ ஊடகத்தின் கள்ளக் காதலனும் அக்கட்சியின் கோயாபல்சுமான சீத்தாராம் யெச்சூரி, தஸ்லிமா மீதான நடவடிக்கைக்கும் தனது கட்சிக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்று அப்பட்டமாகப் புளுகித் தள்ளினார்.

ஆனால், இசுலாமிய மதவெறியர்கள் கொல்கத்தா நகரின் தெருக்களில் இறங்கிக் கலவரம் செய்த உடனே, அக்கட்சியின் மாநிலச் செயலாளரான குண்டர்படைத் தலைவன் பீமன் பாசு, ""மேற்கு வங்காளத்தில் தஸ்லிமா தங்கியிருப்பதில் மைய அரசின் பங்கு பற்றி விரிவாக நான் பேச விரும்பவில்லை. ஆனால், அவரது இருப்பு அமைதிக்கு ஒரு பிரச்சினையை உருவாக்குமானால், மாநிலத்தை விட்டு அவர் வெளியேறி விடவேண்டும்'' என்று தஸ்லிமா நஸ்ரினுக்கு எச்சரிக்கையும் மிரட்டலும் விடுத்தார்.

இதற்கு இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கண்டனம் தெரிவித்தவுடன், பீமன் பாசு ""தஸ்லிமாவுக்குக் கடவுச் சீட்டு வழங்குவதிலோ அல்லது அதை ரத்து செய்வதிலோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசுதான் இதில் முடிவு செய்ய முடியும்; இந்தப் பிரச்சினையில் மைய அரசே பொருத்தமான முடிவெடுக்கட்டும். இதை நான் தெளிவான மொழியில் சொல்லியிருக்க வேண்டும். மாநிலக் கட்சி (சி.பி.எம்) சார்பாக, நேற்று இரவு விடுத்த அறிக்கையை திருத்திக் கொள்கிறேன் என்பதை மக்களுக்கு விளக்க விரும்புகிறேன்'' என்றார் பீமன் பாசு. போலீசை விட்டு, மிரட்டி, நிர்பந்தமாக ""நாடு கடத்தி விட்டு'', பிறகு இப்படித் திரித்துப் புரட்டி, பூசி மழுப்பினார் பீமன் பாசு. இப்படிப் புரட்டுவதுதான் போலி மார்க்சிஸ்டுகளின் வாடிக்கையாக உள்ளது.

ஆனால், சீத்தாராம் யெச்சூரி தனக்கே உரிய நயவஞ்சகத்தோடும் நம்பூதிரித்தனமாகவும், ""தஸ்லிமா விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது மைய அரசின் சட்ட உரிமையாகும். அதுதான் அவருக்கு கடவுச் சீட்டு வழங்கியுள்ளது'' என்று பேசி கைகழுவி விட்டார். மைய அரசு தனக்குள்ள அதிகாரம், உரிமைகளை வைத்து எடுக்கும் எல்லா விவகாரங்களிலும் இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் இப்படித்தான் ஒதுங்கிக் கொள்கின்றனரா? முற்போக்கு முகமூடியும் வேண்டும்; முஸ்லீம்களின் வாக்குகளும் வேண்டும் என்பதற்காகத்தானே இப்படி சந்தர்ப்பவாதம் பேசுகிறார் சீத்தாராம் யெச்சூரி. முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் இன்னொரு கள்ளக் காதலியும், பெண்ணுரிமை, ஜனநாயக உரிமை பற்றியெல்லாம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாய் கிழியப் பேசுபவருமான பிருந்தா காரத் உட்பட போலி மார்க்சிஸ்டுகள் மேற்கொண்டு எதுவும் பேசாது ஓடி ஒளிகின்றனர்.

அதேசமயம், ""தஸ்லிமா கொல்கத்தா திரும்புவதை வரவேற்கிறோம்'' என்று அதிகாரிகளை விட்டு ஒருபுறம் பேட்டியளிப்பதும்; மறுபுறம், ""அரசின் போலீசுத் துறையிடமிருந்து உடனடியாக தஸ்லிமாவை மூட்டை கட்டி அனுப்பிவிடும்படி உத்தரவு வந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக (யாருடைய பாதுகாப்பு?) அவரை அனுப்பி விட்டோம். மற்றபடி எந்தக் கருத்தும் கூற முடியாது'' என்கிறார் கொல்கத்தா போலீசு துணை ஆணையாளர் வினீத் கோயல்.

போலி மார்க்சிஸ்டுகளின் ஆதரவோடு ஆட்சி புரியும் மைய அரசின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, ""பாதுகாப்பைக் கோரி வரும் யாருக்கும் தஞ்சமளிக்க இந்தியா எப்போதுமே மறுத்ததில்லை. நஸ்ரினுக்கும் புகலிடம் அளிப்போம்'' என்று யோக்கியன் போல தொடங்கி, ""ஆனால், எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நடவடிக்கைகளிலோ, கருத்துக்களைச் சொல்வதிலோ எங்கள் விருந்தினர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று நிபந்தனைகள் போட்டார். அதாவது, இந்தியாவில் வாழலாம், ஆனால், சுதந்திரமாக எழுதும் உரிமை கிடையாது என்கிறார்.

இந்துக் கடவுளர்களை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி பிரபல ஓவியர் எம்.எஃப். உசைனின் கண்காட்சியைத் தாக்கி, மிரட்டி, அவரை வெளிநாட்டிற்கு விரட்டியவர்கள்; எம்.எஸ். பல்கலைக்கழக மாணவரைத் தாக்கி பொய் வழக்குப் போட்டவர்கள்; இந்து சமுதாயத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் திரைப்படம் எடுத்த பெண் இயக்குநரின் படப்பிடிப்புக் குழுவினரைத் தாக்கியவர்கள்; வீதி நாடகம் நடத்திய சப்தார் ஹாஸ்மியை அந்த இடத்திலேயே படுகொலை செய்தவர்கள்; குஜராத்தில் அமீர்கானின் திரைப்படத்தைத் திரையிட முடியாமல் தடை விதித்தவர்கள்; மோடியின் முஸ்லீம் படுகொலைகளை அம்பலப்படுத்திய தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடைவிதித்தவர்கள் — பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால், முஸ்லீம் மதவாதிகள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துரிமை சுதந்திரத்தை காக்கும் அவதாரம் எடுத்தார்கள். தஸ்லிமா இஸ்லாமியப் பிற்போக்குத்தனத்தை எதிர்ப்பதைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கோணல் புத்திதான் இந்த ஆதரவுக்குக் காரணம்.

கொல்கத்தாவிலிருந்து விரட்டப்பட்ட தஸ்லிமாவுக்கு ராஜஸ்தானை ஆளும் முதல்வர் விஜயராஜே வரவேற்றுத் தஞ்சமளித்தார். தேர்தல் பிரச்சாரத்திலிருந்த மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், பா.ஜ.க.வின் மக்களவை பேச்சாளர் மல்கோத்ரா எனப் பலரும் கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஏவிப் படுகொலைகள் நடத்தி, அதைப் பகிரங்கமாகவே நியாயப்படுத்தும் மோடி, ""சாத்தான் வேதம் ஓதுவது போல'' ""அடிப்படைவாதிகளுக்கு எதிராகத் தஸ்லிமா துணிச்சலோடு பேசுகிறார். மைய அரசு அவரைப் பேண முடியவில்லை என்றால் குஜராத்துக்கு அனுப்பட்டும். குஜராத் மக்களும் அரசும் அவரைப் பேணிக் கொள்வார்கள். அவரைப் பாதுகாக்கும் துணிவு எனக்கிருக்கிறது'' என்கிறார். பில்கிஸ் பானு போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் தமது உயிருக்கும் மானத்துக்கும் அஞ்சி அகதிகள் முகாம்களிலும் வெளிமாநிலங்களிலும் தஞ்சமடையக் காரணமான காட்டுமிராண்டி மோடி, மான்களுக்குப் பாதுகாப்பளிப்பதாக ஓநாயைப் போல இளிக்கிறார்.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் இந்த நாட்டில் வேட்டையாடப்படுவதற்குத் தலைமை தாங்குபவர், ஜமாத் உலேமா இந்த் என்ற முஸ்லீம் மதவெறி அமைப்பின் பொதுச் செயலாளர் மகமது மதானி. அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூலமாக தஸ்லிமா வேட்டையை நடத்தும் இவர், நாடு முழுவதும் உள்ள தியேõபந்த் மதராசா பள்ளிகளைக் கட்டுப்படுத்துபவர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு எதிராக, நாட்டிலேயே அதிகமாக மதச்சார்பின்மை கூச்சல் போடும் ""சமூக நீதி'' ராமபக்தன் லாலுபிரசாத் யாதவ் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர். தஸ்லிமா முஸ்லீம் சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பற்றி மட்டுமல்ல, குரானையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி தனது மூன்றாம் பகுதி சுயசரிதையில் எழுதிக் கோடிக்கணக்கான முஸ்லீம் மக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் என்பதுதான் அவர்களின் புகார். அது உண்மைதான் என்றால், சட்டப்படியான நடவடிக்கைதான் எடுக்க வேண்டுமே தவிர, அவரது தலைக்கு விலை வைத்து ""மதக் கட்டளை'' விதிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமைஅதிகாரம் இருக்கிறது? மதத்தின் பெயரால் இப்படி நடவடிக்கைகளில் இறங்குவதற்கு மதவாதிகளுக்கு உரிமை இருக்கிறது என்றால், அப்புறம் எல்லா மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இந்த நாடும் சமுதாயமும் பலியாகி விடும்.

· மாணிக்கவாசகம்


டாடாயிஸ்ட் சந்திப்பும் நந்திக்கிராமமும்

சந்திப்புக்கு தன்னைத்தவிர ஊரில் உள்ளவன் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு. நந்திக்கிராம மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி சொச்சைப்படுத்த, சி.பி.ஐ.(எம்) இது போன்ற நிகழ்சிகளை செய்வதில்லை என்று கதை சொல்ல முனைகின்றார். மூலதனத்தின் அரசியல் குண்டர்களான சி.பி.ஐ.(எம்) இன் வக்கிரத்தை, அறிவும் நேர்மையும் தர்க்கம் எதுவுமின்றி போராடும் மக்கள் மீது காறித் துப்புகின்றனர்.


சி.பி.ஐ.(எம்) டாடாயிஸ்டடுகள் சிறப்பு பொருளாதார சட்ட விதிக்கு மாறாக விளை நிலங்களை கையகப்படுத்தவில்லையா? சிங்கூரில் டாடா கார் தொழிற சலைக்கு 997,1 ஏக்கர் நிலத்தை மக்களிடம் இருந்து திருடவில்லையா? இதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்படவில்லையா? அந்த நிலத்தில் உழைத்த 1320 குத்தகை விவசாயிகள், 3000 நிலமற்ற கூலிகள், இதை அண்டி தொழில் செய்த 10000 பேரின் கதி என்ன? சி.பி.ஐ.(எம்) காரன் மக்கள் வரிப்பணத்தில் மூலதனத்துக்காக திருடிய 120 கோடியில் வாங்கிய நிலத்தை, வெறும் 20 கோடிக்கு டாடாவிடம் கொடுத்த மாமாக்களின் மர்மம் என்ன? இப்படி நிலத்தை சலுகை விலையில் கொடுக்கவில்லையா? இந்த நிலத்துக்கு இதை விட சலுகைகள் பல. ஆட்சியில் உள்ள சி.பி.ஐ.(எம்) காரன், தனது புரட்சியில் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு என்ன தான் செய்துள்ளான். மற்றைய மாநிலங்களை விட எதைத்தான் சிறப்பாக செய்துள்ளான்? தான் கொழுத்ததைத் தவிர வேறு எதையுமல்ல. 250 ஏக்கர் மட்டும் தேவைப்பட, ஏன் 1000 ஏக்கரை சி.பி.ஐ.(எம்) இடமிருந்து பறித்து கொடுத்தது? சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களிடம் திருடி கொழுப்பதே புரட்சியாகிவிட்டது.

அடுத்து அதேவழியில் நந்திக்கிராமமும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் சி.பி.ஐ.(எம்) உருவாக்கியது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும், 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்குமாக தாரை வார்க்கப்பட இருந்தது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். மக்களின் போராட்டமே இதை தடுத்து நிறுத்தியுள்ளது.

ி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல் 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்பது உண்மையல்ல. மக்கள் போராடி தமது சொந்த உயிரை இழந்து அதைத் தடுத்துள்ளனர். இது தான் புரட்சி. இதற்கு எதிரான வகையில் சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் புலம்புவது எதிர் புரட்சி.

மக்கள் நடத்திய இந்த நில கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தை சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் தமது எதிர்புரட்சிகர வழியில் எப்படி வருணிக்கின றனர். 'நந்திகிராமத்தையே கடந்த மூன்று வாரங்களாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்குள்ள சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்கின்றனர். நல்ல வேடிக்கை. 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்று கூறும் இந்த முட்டாள்கள் தான் இதையும் சொல்லுகின்றனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல், மக்கள் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு.

'..மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றால் அது படுகொலை மூலம் தான . இது சரி என்றால், 'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." இது என்ன புளுடாவா! இதில் எது சரி? எதிர்புரட்சிகர சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களின் புரட்சிகர போராட்டத தின் முன்னால் தோற்ற போது, இப்படி அங்குமிங்குமாக சாக்கடை புழுககள் போல் நெளிகின்றனர். இதை அப்படியும் இப்படியும் நெளியவைப்பத்து சந்திப்பின் திருகுதாளமாகும்.

'சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு" என்றால் சி.பி.ஐ.(எம்) காரனின் தேவைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்லவா! அதைத்தானே இது வெளிப்படுத்துகின்றது. சரி மக்கள் விரோத சி.பி.ஐ.(எம்) காரன் ஏன் அங்கிருந்து ஓடினான்? அதற்கு ஏன் துப்பாக்கி சூட்டை நடத்த வேண்டும்?

இதற்கு சற்று முன்னால் அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்

சோனாசுரா கிராமத்தில் 'நந்திகிராம நிலப பாதுகாப்பு கமிட்டி" கூட்டம் நடத்துவதை அறிந்து, சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் அக்கிராமத்தை தாக்கினர். சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் வெளியில் இருந்து திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்களே இத்தாக்குதலை நடத்தினர். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது. இப்படி சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ரவுடிகளாக அந்த மக்களை தாக்கி கொன்றனர். இந்த மக்கள் விரோத ரவுடிகள் மக்கள் எதிர்ப்பதும , அதில் இருந்த தப்பி ஒடுவதும் இயல்பு.

ஒருவரல்ல, இருவரல்ல, ஆறு பேர் கொலை. அந்த மண்ணில் 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. எல்லாம் எதற்கு? சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் கையகப்படுத்த முடியாத அந்த நிலத்துக்காக. அதாவது '.. நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்ற உண்மையை பொய்யாக்குவதற்காகத்தான் 'மார்க்சிஸ்ட்" எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ஒருபுறம் வன்முறை, மறுபுறம் பணத்தைக் காட்டி விலை பேசுவது என்று மூலதனத்தக்காக புரட்சி செய்கினறனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும் அவர்களின் எடுபிடிகளும். இவவனைததையும செய்துவிட்டு ஊரையும் உலகத்தையும ஏமாற்ற நக்சலைட் அவதூறுகள்.

மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தான் எதிர் வன்முறையாகின்றது. பின் அந்த குண்டர்படைகளினதும் பொலிசாரினதும் மனிதாபிமானப் பிரச்சனை பற்றி ஒப்பாரி வைப்பது தொழிலாகிவிட்டது.

அந்த மக்களின் நிலத்தை அபகரிக்க சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கு துணையாக பொலிசாரும் கூட்டாகவே களமிறங்கினர். இங்கு ஒரு கேள்வி. 'மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்கு" பதில் தான் இந்த படுகொலை என்கின்றார் சந்திப்பு. நல்ல அரசியல் வேடிக்கை. சரி எதிர்க கட்சி போராடக் கூடாதோ! போராடாமல் இருத்தல் தான் ஜனநாயகமோ! சரி எதிர் கட்சிகள் எங்கு இருந்து உருவாகின்றது. அதே மக்களில் இருந்து தானே. அந்த மக்கள் ஆளும் மூலதனத்தின் எடுபிடிகளுக்கு எதிராக போராடக் கூடாது. மேற்கு வங்கத்தில் கம்யூனிச ஆட்சியா நிலவுகின்றது. அப்பட்டமான மூலதனத்தின் கெடுபிடியான பாசிச ஆட்சியே அங்கு நிலவுகின்றது.

யார் பயங்கரவாதி? யார் எதிர்வினையையும் அது சார்ந்த வன்முறையையும் உற்பத்தி செய்கின்றனர். சி.பி.ஐ.(எம்) காரன் மூலதனத்துக்காக சேவை செய்யும் போது, மக்களின் போராட்டத்தைக் கண்டு மூலதனத்தின் எடுபிடிகள் ஒடுகின்றனர். மக்கள் புரட்சி இப்படித்தான் நடக்கும். மக்களை படுகொலை செய்வதே மூலதனத்தின் ஜனநாயகமாக இருக்கின்றது.

மக்கள் போராடுவதே தவறு என்பதே சந்திப்பின் மைய விளக்கம். மக்களை கொள்ளை அடிப்பதை அனுமதிப்பது தான் சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி. ஜனவரி 6ஆம் திகதி சி.பி.ஐ.(எம்) காரனினால் கொல்லப பட்டவர்கள் யார்? அந்த ஊரில் வாழும் உழைக்கும் மக்கள். சி.பி.ஐ.(எம்)காரன் பொலிசார் மூலம் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களும் மக்கள் தான். ஆயிர ஆயிரமாக திரண்ட மக்கள், எதிர்கட்சியோ, நக்சலைட்டுகளோ அல்ல. சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் வாழ்வு இழக்கப்பட்ட சாதாரணமான உழைக்கும் மக்கள். இப்படி கொல்லப படுவது தான், சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி என்பதே சந்திப்பின் தர்க்கம்.

அதை அவரின் கட்சியைச் சோந்த மூலதனத்தின் எடுபிடி குண்டர்கள் 'சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்கியுள்ளன. இவர்கள் யாரும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக்கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள்." என்கின்றனர்.

காயமடைந்த, கொல்லபட்டவர்கள் யார் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அது தெரிவதில்லை. வெளியார் என்கின்றனர்.பார்ப்பனிய எடுபிடிகள் வழமையாக கூறுவது போல், பாகிஸ்தானிய முஸ்லீம் கைக் கூலிகளோ!

இதே அளவைக கொண்டே ம.க.இ.க நடத்திய கோக்கோலா எதிர்ப்பு போராட்டம் முதல் அனைத்தையும் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒடுக்கமுடியும் என்பதே, சந்திப்பின் அரசியல் தர்க்கம். சி.பி.ஐ.(எம்) துப்பாக்கி சூட்டை நடத்தலாம் என்றால், ஏன் மற்றவர்கள் அதே காரணத்தை கூறி நடத்த முடியாது?

குஜராத்தில் பார்ப்பனிய மோடி நடத்திய வெறியாட்டமும் இதே காரணத்தைச் சொல்லி நடந்தது, அதை பார்ப்பனிய பாதம் நக்கிகள் நியாயப்படுத்தினர். போராடிய மக்களை, புரட்சிகர மக்களை கொன்று போட்டுவிட்டு, பாசிச கோயபலஸ் பாணியில் விளக்கம் சொல்வதிலும் இந்த குண்டர்கள் மூலதனத் திமிர் வெளிப்படுகின்றது.

'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." என்ன வேடிக்கை. நியாயப்படுத்தப்படும் போது, அன்னியர், அது நக்சலைட்டுகளின் சதி என்று புலம்பல். 'தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று அக்கட்சி மூலதனத்துகாக விளக்கம் தருகின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகின்றார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன. இப்படி ஒன்றுக்கொன று முரணாக புலம்பும் இந்த மூலதனத்துக்கு வாலாட்டும் நாய்களுக்கு சூடுசுரணை இருப்பதில்லை.

ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடக்க முன்னம் புலம்பினார். 'நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டு விட்டன." என்கின்றனர். என்ன முரண்பாடு. இவர்கள் செய்வது என்ன?

1. மக்களை ஒடுக்கி அவர்களின் மேல் நடத்துகின்ற வெறியாட்டம்

2. மறுபக்கம் அதை தாம் செய்யவில்லை என்று ஊரையும் உலகத்தையும ஏமாற்றும் வக்கிரம்.

3. செய்ததை நியாயப்படுத்த, அதை மற்றவர்களின் குற்றமாக காட்டும் சூழ்ச்சிகளும், சதிகளும்

4. மூலதனத்துக்காக நாயாக நக்கி உழைப்பதே புரட்சி என்பது இவர்களின் வாழ்க்கை நெறி

மக்களின் எதிரிகளை, எதிர்புரட்சிகர சக்திகளை எந்தவகையில் மக்கள் தண்டிக்க விரும்புகின்றனரோ, அந்த வகையில் சி.பி.ஐ.(எம்) கட்சியை தண்டிப்பார்கள். சந்திப்பின் (5) கேள்விகள் எல்லாம் பிரச்சனையை திசை திருப்புகினற பார்ப்பனிய அரசியல் வித்தைகள்.

குறிப்பு.:
1.அரவிந்தன் நீலகண்டன் என்ற நபர் இந்திய மக்களின் கடைந்தெடுத்த எதிரி. உள்ளடக்க ரீதியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம கடடமைத்துள்ள அனைத்து மக்கள் விரோத செயற்பாட்டுக்கும் துணை நிற்கும் ஒரு பூணூல். பார்ப்பனிய வழியாக கட்டிப பாதுகாக்கும் மூலதனத்தின் அசலான அடிவருடி. இந்த பூணூல் மார்க்சியமும் அறிவியலும் என்ற தலைப்பில், தனது பூணூல் வழியாக ஒரு பதிவைப் போட்டுள்ளது.

பார்ப்பனிய மூலதன அரசியல் அமைப்புக்கு பூணூல் அணிந்த குலைக்கும் ஒருவன் அறிவாளியாக, அறிவியலாக இருக்கவே முடியாது. அதுவும் பார்ப்பனியத்தை ஆதரிப்பவனாக இருந்தால், அதன் அறிவு என்பது சதியும் சூழ்ச்சியும் தான் அதன் மூலதனமாகும். விரைவில் தனிப்பதிவு மூலம் அதைப் பார்ப்போம்.

2 .புரட்சிகர வன்முறை குறித்தும், புரட்சிகர மனிதாபிமானம் குறித்தும தனிப்பதிவாக பார்க்கவுள்ளோம். வன்முறையை வாழ்க்கையாக, மனிதாபிமானத்துக்கு எதிராக வாழ்வதையே நாகரிகமாக கொண்ட சமூகவிரோத ஓட்டூண்ணிகளை தோலுரிப்பது அவசியமல்லலா!
பி.இரயாகரன்21.03.2006

கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)


சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையைக் கொண்டிருப்போரை போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பதில் நமக்கு தயக்கமிருந்ததில்லை. ஆனால், சொல்லிலும் செயலிலும் முரண்பாடு ஏதுமின்றி ""சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'' என்று கொள்கைக் குன்றுகளாக வலம் வரும் "மார்க்சிஸ்டு'களை இனிமேலும் போலி கம்யூனிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டிருப்பது பொருத்தம் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.

""முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு கம்யூனிசச் சொற்களால் விளக்கமளிக்க வேண்டும்; அத்தகைய விளக்கம் முதலாளி வர்க்கத்தின் கோபத்தைத் தூண்டிவிடும்படி இருக்கக் கூடாது; அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் அதிருப்தியையும் தோற்றுவித்து விடக்கூடாது.'' — இப்படியாக, கம்பி மேல் நடப்பதையும், கடுகைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவதையும் விடக் கடினமானதும் அபாரமான மொழி வல்லமையையும், ராஜதந்திரத்தையும், கலைத்திறனையும் கோருவதுமான இந்தச் சாகசத்தைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து சிங்குர் பிரச்சினை "மார்க்சிஸ்டு'களை விடுவித்திருக்கிறது. தங்களுடைய உண்மையான சிந்தனையை இயல்பாகப் பேசுவதற்கான சுதந்திரத்தையே ஒரு நிர்ப்பந்தமாக "மார்க்சிஸ்டு'களின் மீது திணித்திருக்கிறது சிங்குர்.

எனவே, ""விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி, டாடாவுக்கும் ஜின்டாலுக்கும் ரூயாவுக்கும் மலேசியாவின் சலீம் குழுமத்திற்கும் வழங்குவது நியாயம்தானா'' என்று மார்க்சிஸ்டுகளிடம் இனிமேலும் கேட்டுக் கொண்டிருப்பது அசட்டுத்தனம். "மார்க்சிஸ்டு'களின் இந்தப் புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், இந்தக் கொள்கை பிறப்பெடுக்கும் மூளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கூற்றுகள் வழியாகவே அதனைப் புரிந்து கொள்வோம்.

···

"மார்க்சிஸ்டு' கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசி, வார இதழில் (செப்.11, 2006) அவர்களது கட்சியைச் சார்ந்த பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். "வக்கிரப் பொருளாதாரத்தின் தாக்குதல்' (கூடஞு அண்ண்ச்தடூt ணிஞூ ஙதடூஞ்ச்ணூ உஞிணிணணிட்தூ) என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை, ""தேசிய உற்பத்தி வளர்ந்தால் வறுமை ஒழிந்து விடும், செல்வம் பெருகினால் வறுமை ஒழிந்து விடும்'' என்று கூறும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பொய்களை அம்பலப்படுத்துகிறது.

எந்த அறிவியல்பூர்வமான அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத இந்தப் பொருளாதாரக் கொள்கையை வக்கிரப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் அழைத்ததை அக்கட்டுரையில் விளக்கும் பட்நாயக், இது ஒரு முதலாளித்துவப் பித்தலாட்டம் என்று ஆணியடித்தாற் போலக் கூறி முடிக்கிறார்.
பட்நாயக் அடித்த ஆணியை இரண்டே வரிகளில் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடுங்கி எறிகிறார் யெச்சூரி. ""கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதில்லை என்பது ஒரு தவறான அபிப்ராயம், உண்மை அதுவல்ல. ஏனென்றால் செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனை என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கல்கத்தா முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. (இந்து, ஜன. 5, 2007)

செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனையாம்!

இதையே கொஞ்சம் எளிமையாக ரஜினிகாந்த் படத்தின் வசன மொழியில் சொல்வதென்றால், முதலாளி நல்லா இருந்தாத்தானே தொழிலாளி நல்லா இருக்க முடியும் என்று சொல்லலாம். அதாவது, பணக்காரர்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஏழ்மை ஒழியும் என்கிறார் யெச்சூரி.

···

மார்க்ஸ் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? ""ஒரு முனையில் செல்வம் குவிவது என்பதன் பொருள், அதே நேரத்தில், அவ்வாறு செல்வம் குவிவதன் விளைவாக வறுமையும் உழைப்பின் துயரமும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடூரமும் சிந்தனைச் சீரழிவும் இன்னொரு முனையில் அதிகரிப்பது என்பதுதான்'' என்று கூறும் மார்க்ஸ், வறுமை என்பதே ஒரு குறிப்பிட்ட சமூக உறவின் வெளிப்பாடுதான் என்பதை நிலைநாட்டுகிறார். தொழிலாளிகள் எந்த அளவுக்கு செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு வறியவர்கள் ஆக்கப்படுவார்கள். உற்பத்திச் சாதனங்களைத் தம் உடைமையாக வைத்திருக்கக் கூடிய முதலாளிகள் ஒருபுறம், உழைப்பை விற்று வயிற்றைக் கழுவும் தொழிலாளிகள் மறுபுறம் என்று இருக்கும் முதலாளித்துவச் சமூக அமைப்பில் செல்வம் உருவாவது என்பதன் உடனடி விளைவு வறுமைதான் என்பதே மார்க்சியப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி.

உலகத்தைக் கண்திறந்து பார்ப்பவன் எவனும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அல்லது, தங்கள் கட்சியின் மத்தியக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தைப் படித்துப் பார்த்தும்கூட மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

""தேசிய நிகர உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக மைய அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை... இந்த வளர்ச்சியின் விளைவாக பணக்காரர்கள்தான் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 40 பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் 61 பில்லியன் டாலரிலிருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அரசாங்கப் புள்ளிவிவரப்படியே கூட 30 கோடி மக்கள் நாளொன்றுக்கு 45 ரூபாய் கூட வருமானமின்றி வறுமையில் உழல்கிறார்கள்'' என்று கூறுகிறது மத்தியக் குழு தீர்மானம்.

மக்கள் மென்மேலும் வறுமையில் தள்ளப்படுவதுதான் முதலாளித்துவச் சமூகத்தில் செல்வம் உருவாவதற்குரிய முன்நிபந்தனை. ஆனால் யெச்சூரியோ, செல்வம் உருவாவதுதான் மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான முன்நிபந்தனை என்று ப.சிதம்பரத்தின் சித்தாந்தத்தை அப்படியே வழிமொழிகிறார்.

""வக்கிரப் பொருளாதாரத்தை முன்மொழிபவர் நம்முடைய ஆதரவு பெற்ற பிரதமர் என்பதால் நாம் சும்மா இருந்து விட முடியாது'' என்று கொதிக்கிறார் பட்நாயக். அவரே நம்முடைய தோழர் புத்ததேவ் பட்டாசார்யாவாக இருக்கும்போது என்ன செய்வதாம்?

சிங்குர், நந்திக்கிராமம் பிரச்சினைகளில் மார்க்சிஸ்டு அரசின் அணுகுமுறையைக் கண்டித்து இடதுசாரி வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட அறிவுத்துறையினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்குப் பதிலளிக்கு முகமாக பகிரங்கக் கடிதமொன்றை அவர்களுக்கு எழுதியிருக்கிறார் முதல்வர் புத்ததேவ். (பைனா. எக்ஸ். ஜன.19, 2007.) விவசாயிகளிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி டாடாவுக்கு வழங்க நேர்ந்ததற்கான பொருளாதார நியாயத்தை அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

""சிங்குரில் இருக்கும் அந்தச் சில துண்டு நிலங்களில் விவசாயம் செய்து கிடைக்கக்கூடிய வருவாயைக் காட்டிலும் மிகப் பன்மடங்கு அதிகமான பொருளாதார ஆதாயத்தை இந்தத் தொழிற்சாலை வழங்கும்'' என்கிறார் புத்ததேவ்.

உண்மைதான். 250 ஏக்கர் நிலத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் கார்களை டாடா அறுவடை செய்வார்; பல கோடி ரூபாய்களை மூட்டை கட்டுவார். விவசாயிகள் மிஞ்சிப் போனால் எத்தனை கலம் நெல்லை அறுத்துவிடுவார்கள்? எத்தனை ரூபாயை மூட்டை கட்டிவிடுவார்கள்?

புத்ததேவின் இந்தக் கூற்றைத்தான் ""வக்கிரப் பொருளாதாரத்தின் உச்சகட்டம்'' என்று சாடுகிறார் பட்நாயக். ""கேக் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது எல்லாருக்கும் நல்லது என்று கூறுவது, வறுமையென்பது குறிப்பிட்ட சமூக உறவின் விளைவுதான் என்ற உண்மையையே இருட்டடிப்பு செய்வதாகும்'' என்கிறார்.

""தொழிலாளர்கள் எந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்கிறார்களோ அது தேசிய உழைப்பின் முழு உற்பத்தியாலும் நிரம்பியிருக்கையில், அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தடுப்பது பாத்திரத்தின் அளவுக் குறைவோ அல்லது அதிலுள்ள பண்டங்களின் போதாமையோ அல்ல; தொழிலாளர்களுடைய கரண்டிகள் சிறிதாக இருப்பதுதான்'' என்றார் மார்க்ஸ்.

டாடா தொழிற்சாலை வழங்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தை அறுவடை செய்யப் போவது யார்?

சிங்குரின் நேற்றைய விவசாயிகளா, அல்லது நாளை அங்கே வேலைக்குச் சேரவிருக்கும் தொழிலாளிகளா?

சிங்குரின் 1000 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பவர்கள் 1320 குத்தகை விவசாயிகள், சுமார் 3000 நிலமற்ற கூலி விவசாயிகள், காய்கனி வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 4475 பேர், வெளியூர்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சுமார் 5000 தொழிலாளர்கள். இந்த 12,000 பேருக்கு டாடா ஆலை வழங்கப் போவது என்ன?

ஆலையைச் சுற்றி அமையவிருக்கும் அபார்ட்மென்டுகளில் விவசாயிகள் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். சிறு வியாபாரிகள் அயர்ன் வண்டி தள்ளலாம், நாற்று நட்ட பெண்கள் அபார்ட்மென்டு அம்மணிகளுக்குத் துணி துவைத்துப் போடலாம். இவ்வாறாக மேட்டுக்குடி வர்க்கத்துக்குப் பலவிதமாகச் சேவை செய்து அவர்கள் வழங்கும் மிச்சம் மீதியை வாங்கித் தின்னலாம். இதுதான் டாடா ஆலை உருவாக்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தில் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கப் போகும் பங்கு.

···

""ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி அலைகிறார்கள், அவர்களை நாம் கைவிட்டு விட முடியுமா?'' என்று தன் கடிதத்தில் உணர்ச்சி பொங்கக் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். தன்னுடைய சுரண்டலுக்காகவும் லாப நோக்கத்துக்காகவும் அன்றி வேறு எந்தச் சமூக நோக்கத்துக்காகவும் ஒரு முதலாளி தொழிற்சாலையைத் தொடங்குவதில்லை. மார்க்சியம் தெரியாத பாமரத் தொழிலாளிக்குக் கூடத் தெரிந்திருக்கும் இந்த உண்மை புத்ததேவுக்கு மறந்துவிட்டது போலும்! முதலாளி வர்க்கத்தின் ஆவி புத்ததேவுக்குள் புகுந்து கொண்டு அவரைச் சாமியாட வைக்கிறது.

12,000 பேரை வேலையைவிட்டு விரட்டிய இந்த ஆலை எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்? கிட்டத்தட்ட இதே அளவு மூலதனத்துடன் சென்னையில் இயங்கிவரும் ஃபோர்டு, ஹூண்டாய் ஆலைகள் ஆயிரத்துக்கும் குறைவான தொழிலாளர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. தினக்கூலிகளையும் துணைத்தொழில்களில் ஈடுபட்டிருப்போரையும் சேர்த்தால் கூட வேலை வாய்ப்பு ஓரிரு ஆயிரங்களைத் தாண்டாது.

பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு சிங்குரில் அமையவிருப்பது சைக்கிள் தொழிற்சாலை அல்ல. கார் உற்பத்தி என்பதே உயர் தொழில்நுட்பம் சார்ந்தது. டாடாவோ குறைந்த விலையில் (ஒரு லட்சம் ரூபாயில்) கார் தயாரிக்கவிருக்கிறார். அதி உயர் தொழில் நுட்பம் இல்லாமல் இந்த விலைக் குறைப்பு சாத்தியமில்லை. உயர் தொழில் நுட்பம் இருந்தாலோ வேலை வாய்ப்பு சாத்தியமில்லை. உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படாமல் குறைந்த விலையிலான கார் சாத்தியமே இல்லை. இவையனைத்தும் மிக எளிய பொருளாதார உண்மைகள்.

ஆனால் உண்மைகள் யாருக்கு வேண்டும்? ""ஒரு கருத்தாக்கம் அறிவியல் பூர்வமாகச் சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. சர்வதேச நிதிமூலதனத்துக்கும், அதன் கூட்டாளிகளான இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அந்தக் கருத்தாக்கம் உகந்ததாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் வக்கிரப் பொருளாதாரம் நிர்ணயிக்கும் அளவுகோல்'' என்று தனது கட்டுரையில் சாடுகிறார் பட்நாயக்.

சிங்குர் பிரச்சினை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நியாயமாகவோ, அறிவியல் பூர்வமாகவோ பதிலளிக்க முடியாத புத்ததேவ், சென்டிமென்டுக்குத் தாவுகிறார். ""ரத்தன் டாடாவை நான் அரும்பாடு பட்டு அழைத்து வந்தேன். சிங்குர் நிலம் இல்லை என்று நான் டாடாவிடம் எப்படிச் சொல்ல முடியும்? இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறாவிட்டால் நான் தலைநிமிர்ந்து நடக்கவே முடியாது,'' (இந்து, டிச.27, 2006) என்று கூறி டாடா என்ற முதலாளியின் வியாபாரப் பிரச்சினையை, தன்னுடைய மானப் பிரச்சினையாக மாற்றுகிறார்.

""இத்தனைப் பிரச்சினைகள் இருக்கும்போது ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியதுதானே'' என்று கேள்வி எழுப்பியபோது, ""டாடா நிறுவனத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு இருக்கிறது'' (இந்து, நவ. 26, 2006) என்று பதிலளித்திருக்கிறார் டாடா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ரவி காந்த்.

இலாப உணர்ச்சி தவிர வேறெந்த உணர்ச்சியையும் அறியாத முதலாளி வர்க்கம் இந்த அளவுக்கு உணர்ச்சி வயப்படுவதிலிருந்தே, காப்பியச் சிறப்பு மிக்க இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

""நாங்கள் 6 இடங்களைக் காட்டினோம். சிங்குர் தான் வேண்டும் என்று டாடா நிறுவனம் கூறிவிட்டது'' என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் "மார்க்சிஸ்டு' எம்.பி.நீலோத்பல் பாசு. அவர்கள் விரும்பிய சிங்குர் நிலம் 120 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொடுத்து வாங்கப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார் தொழிற்சாலைக்கு 250 ஏக்கருக்கு மேல் தேவையில்லை எனும்போது 1000 ஏக்கர் எதற்கு என்ற கேள்விக்கும் பதில் இல்லை. தண்ணீர், மின்சாரம், சாலைகள் முதலானவற்றில் இன்னும் என்னென்ன சலுகைகள் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்துவது நட்புக்கு இலக்கணமாகாது என்று புத்ததேவ் கருதுகிறார் போலும்!

Saturday, April 5, 2008

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை- மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் கைது

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.

http://thatstamil.oneindia.in/news/2008/04/05/tn-chennai-bjp-office-sieged.html

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது