பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…
ஏய்! சாயிபாபா
வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்
வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?
வெயிலறியா உன் தலைமுடியிலிருந்துவிதவிதமாய்
கடிகாரங்களை வரவழைத்தாயே!
அதுவா அற்புதம்?
பசியறியா உன் வயிற்றியிலிருந்து
பலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!
அதுவா அற்புதம்?
அடே! சாயிபாபா
வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து
கடைசியில் கருணாநிதியை
வெளியே வரவழைத்தாயே!
அதுவன்றோ அற்புதம்!!
வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்று
விளங்காத உடன்பிறப்பே...
இருநூறு கோடி எதிரே வருகையில்
பெரியார் பார்வையா பார்க்க முடியும்?
கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!
யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையே
கோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்தது
ஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?
அதிசயம் அல்லவா?
அற்புதத்தில் விஞ்சி நிற்பது
பாபாவா? கலைஞரா? பார்!
வெறுங்கையிலிருந்து நோக்கியாவை
வரவழைத்தார்!
இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!
காலிக் கஜானாவிலிருந்து
கலர் டி.வி.யை வரவழைத்தார்!
அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;
வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தை
வரவழைத்தார்!
அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.
அது மட்டுமா...?
அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,
ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்து
குறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையை
ஓவியமாய்த் தீட்டும் அற்புதம்
அந்த பாபாவுக்கு வருமா?
அவரா, இவரா?
அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்
திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.
ஆசீர்வாதத்திற்குப் பயந்து
ஓடி ஒளிகிறது கூவம்!
துரை. சண்முகம்
நன்றி: தமிழரங்கம்
No comments:
Post a Comment