Monday, June 4, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் : சர்வகட்சி பித்ததலாட்டம்


சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது, மைய அரசு. இதன் மூலம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு எதிரானவையல்ல எனக் காட்டிக் கொள்வதோடு, அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கவும் முயலுகிறது.

""குறைந்தபட்சம் 1,000 ஹெக்டேர் (2,500 ஏக்கர்) நிலப்பரப்பில் தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும்; அதிகபட்ச நில உச்ச வரம்பு எதுவும் கிடையாது'' என்ற 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில், தற்பொழுது, ""சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 5,000 ஹெக்டேருக்கு மேல் நிலம் ஒதுக்கக் கூடாது'' என உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

""மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களே நேரடியாக விவசாயிகளிடம் பேரம் பேசி, நிலங்களை வாங்கிக் கொள்ளலாம்.''

""சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்களை விற்கும் விவசாயிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசு நிர்ணயிக்கும் வரையறைபடி, மறுவாழ்வுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது. மேலும், நிலத்தை விற்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்'' என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மீது கை வைக்க விரும்பாத மைய அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கட்டிடங்களைக் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த வரிச் சலுகைகளை அளிக்கும் மாற்றத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி அளிக்கும் காலக் கெடுவை மூன்று ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைப்பதனைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதென்றும் மைய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களையும், சலுகைகளையும் அறிவித்த கையோடு, மேலும் 83 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்குவதற்கான அறிவிக்கையினை வெளியிடும் அனுமதியையும் வழங்கி விட்டது. இந்த 83ஐயும், சேர்த்து இதுவரை 162 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது; 325 விண்ணப்பங்கள் அனுமதி வழங்கப்படுவதற்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
···
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் கதையாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள், இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதென அறிவித்துள்ளன.

""சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்குக் குறைந்தபட்சம் 400 ஹெக்டேர் (1,000 ஏக்கர்) நிலமும், அதிகபட்சமாக 2,000 ஹெக்டேர் (5,000 ஏக்கர்) நிலமும் போதுமானது; மாநில அரசுகளை ஒதுக்கிவிட்டு, முதலாளிகளே விவசாயிகளிடம் பேரம் பேசி நிலத்தை வாங்குவதை அனுமதிக்கக் கூடாது; நிலங்களைக் குத்தகைக்குத்தான் விட வேண்டுமெயொழிய, நிலத்தை முதலாளிகளுக்குச் சொந்தமாகக் கிரையம் செய்து கொடுக்கக் கூடாது; வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும்; எல்லாவிதமான தொழில்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்க அனுமதிக்கக் கூடாது; நிலத்தை விற்கும் விவசாயிகளைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதோடு, தொழிலாளர்களுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளேயே குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்'' என இடதுசாரிகள் மாற்று ஆலோசனைகளை மாற்றங்களை முன் வைத்துள்ளனர்.

இடதுசாரிக் கூட்டணியால் முன் வைக்கப்படும் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால்கூட, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சொக்கத் தங்கமாகி விடாது என்பது ஒருபுறமிருக்க, இந்த ஆலோசனைகளைப் போலி கம்யூனிஸ்டுகளே கடைப்பிடிப்பதில்லை என்பதே உண்மை.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அதிகபட்ச நில உச்சவரம்பு (2,000 ஹெக்டேர்) 5,000 ஏக்கர் என நிர்ணயிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் 14,500 ஏக்கர் நிலத்தை சலீம் குழுமத்திற்குத் தூக்கிக் கொடுக்கத் திட்டம் போட்டனர்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் இடதுசாரிக் கூட்டணி, சிங்குரில் 140 கோடி ரூபாய் பெறுமான 1,000 ஏக்கர் நிலத்தை வெறும் 20 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் விற்றுள்ளனர். இந்த 20 கோடி ரூபாயையும் டாடா 20 ஆண்டுகளில் செலுத்தலாம் எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்பொழுது கொண்டு வரப்பட்ட 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்ற வேண்டும் எனக் கோரும் இவர்கள், சிங்குரில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி டாடாவிற்காக நிலங்களைப் பிடுங்கினார்கள்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படும் நிலங்களை முதலாளிகளுக்குக் கிரையம் செய்து கொடுக்கலாம் என்கிறது, மைய அரசு; கூடாது, நிலங்களைக் குத்தகைக்குத் தான்விட வேண்டும் என அடித்துப் பேசுகிறது சி.பி.எம். நிலத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்கும் விவசாயியைப் பொருத்தவரை, இந்த இரண்டுமே ஒன்றுதான்.

நிலத்தைப் பறி கொடுத்த பிறகு, விவசாயி கூலித் தொழிலாளியாகி விடுகிறான். ஆனால், சி.பி.எம்.மோ, அவனைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பங்குதாரராக மாற்றப் போவதாகப் பொறி வைக்கிறது. எத்தனை சிங்குர் விவசாயிகளை டாடா கார் தொழிற்சாலையின் பங்குதாரர்களாக மாற்றியிருக்கிறது சி.பி.எம்.?

நர்மதா அணை போன்ற பெரிய திட்டங்களுக்காக விரட்டியடிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்காமல் அரசே ஏய்க்கும்பொழுது, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் தனியார் முதலாளிகள் மறுவாழ்வு கொடுப்பதில் சட்டப்படியும், நியாயப்படியும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

பொதுத்துறை நிறுவனங்களுக்காக நிலத்தைக் கொடுத்த விவசாயக் குடும்பங்களில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு வேலை கொடுக்காமல் அந்த நிறுவனங்களே ஏய்த்து வரும்பொழுது, நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலை கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
···
நிலச் சீர்திருத்தம் ஓரளவிற்கு வெற்றிகரமான முறையில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க மாநிலத்திலேயே, மொத்த விளைநிலத்தில் 15 சதவீத விளைநிலங்கள்தான் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்; நிலச் சீர்திருத்தம் மூலம் நிலம் பெற்றவர்களில் 13 சதவீதம் பேர் தங்களது நிலத்தைப் பல்வேறு காரணங்களால் இழந்து விட்டதாகவும்; மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற கிராம மக்கள் எண்ணிக்கை 39.6 சதவீதத்தில் இருந்து (198788) 49.8 சதவீதமாக அதிகரித்து விட்டதாகவும் (200001) அம்மாநில அரசு வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்புள்ளி விவரம், நாடெங்கும் நிலச்சீர்திருத்தம் தீவிரமாக, புரட்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் நேரத்தில், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், அரசே நிலப்பறி இயக்கம் நடத்துவதைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.

இந்த நிலப்பறி இயக்கம் நடுத்தர ஏழை கூலி விவசாயிகளைப் போண்டியாக்கி, உயிர் வாழ்வதற்கு உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெதுவும் இல்லாத கூலித் தொழிலாளிகளாக உழைப்புச் சந்தைக்குள் தள்ளி விடுகிறது. வேலைக்குப் போட்டி போடும் பெரும் கூலிப் பட்டாளத்தைக் காட்டி, குறைந்தபட்ச கூலியை மேலும் மேலும் குறைப்பதற்கான வாய்ப்பை முதலாளிகளுக்குத் தருகிறது. விவசாயம் ஏற்கெனவே நெருக்கடியில் சிக்க வைக்கப்பட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைகின்றன.

மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது மறுகாலனி ஆதிக்கத்தின் துலக்கமான வடிவம். அம்மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்பதும்; இந்திய நாட்டவர் அம்மண்டலங்களுக்குள் நுழையத் தனி அடையாள அட்டைகள் வேண்டும் என்பதும்; அம்மண்டலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் / தரகு முதலாளிகளின் தனி சமஸ்தானங்களாக விளங்கும் என்பதும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி புதிய வடிவத்தில் மக்கள் மீது திணிக்கப்படுவதை நிரூபிக்கின்றன.

எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான போராட்டம் என்பது சாராம்சத்தில் மறுகாலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ இப்போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரிக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியமானவை என்ற ஓட்டுக் கட்சிகளின் வாதத்தை, அவைகளின் குருபீடமான உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கூட ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளோ இந்த விசயத்தில் அரசனை விஞ்சிய விசுவாசிகளாக நடந்து கொள்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற இந்த நிலப்பறி இயக்கத்தை, மறுகாலனி ஆதிக்கத் தாக்குதலை சில சில்லறை சீர்திருத்தங்களால் தடுத்து விட முடியாது. அப்படிச் சொல்வது, கத்தியின்றி, ரத்தமின்றி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கூறப்படும் மோசடிக்கு ஈடானது.
·குப்பன்

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது