உலகக் கோப்பைக் கிரிக்கெட் :சூதாடித் தோற்ற பன்னாட்டு நிறுவனங்கள்!
மேற்கிந்தியத் தீவுகள், மார்ச் 23. முதலில் ஆடிய இலங்கை அணி 254 ஓட்டங்களை எடுக்க, நடுத்தரமான இந்த இலக்கை இந்திய அணி சும்மா ஊதித் தள்ளிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தால் புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
..
அதன் காரணம் கடந்த ஒரு வருடமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றியும் அதில் இந்திய அணி வெல்லப் போவது குறித்தும் நாடு முழுக்க வெறியும் விளம்பரமும் போதையும் வகை தொகை இல்லாமல் ஏற்றப்பட்டிருந்தன. சொல்லப் போனால் இந்திய அணி ஏற்கெனவே கோப்பையை வென்றுவிட்டது போலவும், சும்மா மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஜாலியாகப் பயணம் செய்து கோப்பையைப் பெட்டியில் எடுத்து வரவேண்டியதுதான் பாக்கி எனுமளவுக்கு பக்தி முற்றியிருந்தது.
..
இந்தக் களிவெறி பக்தியில் மஞ்சள் தண்ணி தெளித்து விடப்பட்ட பலியாடுகளைப் போன்ற இரசிகர்களின் பங்கு பாதி. மீதி இந்தப் பலியாடுகளைச் சாமியாட வைத்து அவைகளிடம் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், கோலாக்களையும், பிஸ்கட் சாக்லெட்டுகளையும், செல்பேசிகளையும், இரு சக்கர வாகனங்களையும் விற்று இலாபமள்ள நினைத்த பன்னாட்டு நிறுவனங்கள், இவற்றுக்கான விளம்பரங்களை வெளியிட்டு ஆதாயமடைய முயன்ற ஊடக முதலாளிகள், இந்த விளம்பரங்களில் நடித்து கோடிகளில் ஊதியம் பெற்ற கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்கள்.முதலாளிகளின் கனவு இலாபம்.
..
இரசிகர்களின் கனவு இந்திய அணியின் வெற்றி. ஆயினும் இந்திய அணி களத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஆடவேண்டும் என்ற உண்மையை மட்டும் யாரும் சட்டை செய்யவில்லை.பரஸ்பரக் கனவு புஸ்வாணமானது. இலங்கையின் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி படுதோல்வியடைந்தது. ஒவ்வொரு வீரரும் அவுட்டாகித் திரும்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏனைய வீரர்கள் தங்களது முகங்களைச் சோகமாக வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள்.
..
விளம்பரப் படங்களில் மட்டுமல்ல, இங்கும் நடிப்பதற்கு அவசியம் இருந்தது. இந்தத் தோல்வியின் மூலம் போட்டியிலிருந்தே வெளியேற்றப்படுவதால் வரும் நாட்களில் இந்திய ரசிகர்களிடமிருந்து கிடைக்கப் போகும் அர்ச்சனை குறித்து அவர்களுக்குத் தெரியும். அதை குறைக்கும் முகமாகத்தான் வலிந்து வரவழைத்துக் கொண்ட இந்த சோகம்.மற்றப்படி உலகக் கோப்பைத் தோல்வியெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆடுவதால் வரும் வருவாயை விட நடிப்பதால் வருவதுதான் அதிகம். டெண்டுல்கரின் ஒருவருட விளம்பர ஊதியம் குறைந்த பட்சமாக 2.5 கோடி, திராவிடுக்கு 1.5 கோடி, யுவராஜ் சிங்குக்கு 1 கோடி, கங்குலி தோனிக்கு தலா 80 இலட்சம், சேவாக்குக்கு 50 இலட்சம், இன்னும் நட்சத்திரமாகாத வீரர்களுக்கு குறைந்தது 30 இலட்சம் என்று போகிறது பட்டியல்.எனில் பத்து வருடமாக ஆடுபவர்கள் எவ்வளவு சுருட்டியிருப்பார்கள்?
..
இந்திய அணியில் இடம்பிடித்ததை விட விளம்பர உலகில் இடம் பிடிப்பதுதான் இவர்களின் இலட்சியம். ஜட்டியைத் தவிர உடம்பு, உடை முழுக்க நிறுவன முத்திரைகளை பச்சை குத்தியிருக்கும் இந்த "விலைமாந்தர்களிடம்' தேச பக்திக் கற்பை எதிர்பார்ப்பது எங்ஙனம்?இரண்டு இந்திய ஆட்டக்காரர்களோடு முதலாளிகள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவர்கள் களத்தில் மட்டையுடன் எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் ஊதியம் அதிகரிக்குமாம்.
..
இந்தப் பச்சையான மோசடியை விரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.அடித்து ஆடவேண்டிய கடைசி 10 ஓவர்களின்போது இவர்கள் களத்திலிருந்தால் என்ன ஆகும்? அடித்து ஆடமாட்டார்கள். கட்டை போடுவதிலேயே குறியாயிருப்பார்கள். பந்துவீச்சைக் கவனிப்பதை விட தனது மட்டையிலிருக்கும் நிறுவன முத்திரைகளை கேமராவுக்கு காண்பிப்பதிலேயே கருத்தாயிருப்பார்கள். ஆக, களத்துக்கு வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் வீரர்கள் விளம்பரத்துக்காக நடித்துக் கொண்டிருக்க, இரசிகர்களோ அவர்கள் கிரிக்கெட் ஆடுவதாக முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.அடுத்த அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒரு ஆண்டில் விளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும் 75 நாட்கள் செலவழிக்கிறார்கள்.
..
இதன்படி 365 நாட்களில் பந்தய நாட்களை விட, பந்தயத்திற்காகப் பயிற்சி பெறும் நாட்களை விட நடிக்கும் நாட்களே அதிகம் என்றாகிறது. நடிகர்கள் எப்படி கிரிக்கெட் ஆட முடியும்?இந்த நடிகர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் கிரிக்கெட் வைத்துச் சம்பாதிப்பதை நிறுத்துவதில்லை. உலகக் கோப்பைக் கிரிக்கெட் குறித்து இந்திய ஆங்கிலஇந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் அரட்டையடிப்பதற்காக முன்னாள் ஆட்டக்காரர்களுக்கான ஊதியத்தைப் பாருங்கள், கபில்தேவுக்கு 2 கோடி, சித்துவுக்கு 1.5 கோடி, அமர்நாத்துக்கு 60 இலட்சம். இப்படி ஒவ்வொரு பந்தயத்திற்கும் தனிக்கட்டணம். அப்புறம் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில், போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுவது, வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று கிரிக்கெட் அட்சயபாத்திரம் வற்றாமல் அள்ளிக் கொடுக்கிறது.எனவே அணிக்குத் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ஒரு சில போட்டிகளில் நூறு அடித்துவிட்டு 25 வயதிற்குள் நட்சத்திர வீரராகிவிட வேண்டியது. நட்சத்திரமானதும் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர நாயகர்களாக மாற்றிவிடும். அப்புறம் இவர்களின் கிரிக்கெட் வாழ்வின் பாதுகாப்பை முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்.
..
ஊடகங்களும்இந்த நாயகத்தனத்தை ஊதிப் பெருக்குவார்கள். பிறகு இவர்களின் ஆதிக்கம் அணியில் தொடரும். அணியிலும் கோடிகோடியாய்ச் சம்பாதிப்பவர்கள், அப்படிச் சம்பாதிக்க வக்கற்றவர்கள் என்று ஏற்றத்தாழ்வு வரும்.விளையாட்டில் தேர்ச்சி பெறுவதைவிட இந்த நட்சத்திரப் பாதையில் வெற்றி பெறுவது எப்படி என்பதே வீரர்களுக்கு கனவாய் இருக்கும். முன்னணி வீரர்களை விளம்பரத் தூதர்களாக வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் புரவலர்களாக இருக்கின்றன. அதனால் வாரியங்களும் விளையாட்டில் திறமை பெற்றவர்களைக் கண்டுபிடித்துச் சேர்ப்பதற்குப் பதில் நிறுவனங்களின் நட்சத்திர வீரர்களைத் தக்கவைப்பதிலேயே கருத்தாயிருக்கின்றன.
..
இந்திய அணியிலிருக்கும் மூத்த வீரர்கள் மாஃபியாக்கள் போல ஆதிக்கம் செய்வதாக பயிற்சியாளர் கிரேக் சாப்பலே கூறியிருக்கிறார். ஆக வர்த்தகச் சூதாடிகளின் விளையாட்டாக மாறிவிட்ட கிரிக்கெட்டில் "விளையாட்டு' எப்படி இருக்க முடியும்?இந்திய அணியை வங்கதேசமும், இலங்கையும் தோற்கடிப்பதற்கு முன்னரே விஷ மரமாக வளர்ந்துவிட்ட வணிக ஆதிக்கம் அதனைத் தோற்கடித்து விட்டது. வெறியேற்றப்பட்ட இரசிகர்களோ உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதும், ஆற்றாமை தீர துக்கம் அனுசரித்தார்கள்.உலகமயத்தின் பெயரால் வாழ்வு சூறையாடப்படும் போதெல்லாம் சுரணையற்றுக் கிடக்கும் தேசத்தின் மனசாட்சி, கிரிக்கெட்டின் தோல்விக்காகச் சிலிர்த்தெழுந்தது. இந்த நொறுக்குத் தீனி தேசபக்தியின் இரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக யாகம் வளர்த்தவர்கள், வீர்களின் படங்களை எரித்தார்கள். வீரர்களுக்குப் பூஜை செய்து ஆராதித்தவர்கள், வீரர்களின் உருவபொம்மைகளுக்குப் பாடைகட்டி ஈமச்சடங்கு செய்தார்கள்.
..
வீரர்களின் தரிசனத்திற்குத் தவம் கிடந்தவர்கள் வீரர்களின் வீடுகள் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.ஆயினும் செயற்கையாகத் தூக்கிவிடப்பட்ட இந்த கிரிக்கெட் தேசபக்தி வெறி வேறுவழியின்றி இயற்கையாக ஒரு சில நாட்களில் வடிந்துவிட்டது. இரசிகர்களும் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.இந்த உணர்ச்சி அலையின் சூத்திரதாரிகளான பன்னாட்டு நிறுவனங்களால் அப்படி இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. இந்தியா குறைந்தபட்சம் சூப்பர்8 பிரிவுக்காவது தகுதி பெற்று பின் அரை இறுதிக்குச் சென்றுவிடும், இந்த நாட்களில் விளம்பரங்கள் மூலம் பொருட்களை விற்றுக் கல்லா கட்டலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்கள் இன்று பொறிகலங்கிக் கிடக்கிறார்கள். கிரிக்கெட்டுக்காகப் போடப்பட்ட கோடிக்கணக்கான முதலீடு அத்தனையும் வீண்.
..
இந்த ஒரு விசயத்திற்காகவே நாம் இந்தியாவின் தோல்வியை மனதாரக் கொண்டாடலாம்.1975ஆம் ஆண்டு கிளைவ் லாயிடு தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது அளிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ. 4 இலட்சம். 2007இல் பரிசுத்தொகை ரூ. 10 கோடி. இந்த 200 மடங்கு வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது?இத்தனைக்கும் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை இந்த 32 ஆண்டுகளில் கூடிவிடவில்லை. இங்கிலாந்தின் காலனிய நாடுகளில் மட்டும்தான் கிரிக்கெட் பிரபலம். அதிலும் இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் மோகம் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனால் உலகமயத்தின் தயவால் இந்தியாவில் குதித்த பன்னாட்டு நிறுவனங்கள் கிரிக்கெட்டின் உதவியால் தங்களது சந்தையை விரிவுபடுத்த முடியும் என்று கண்டுகொண்டன. அதனால்தான் இந்த வளர்ச்சி.
..
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் 75% பங்கை இந்தியச் சந்தையில் கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுமே அளிக்கின்றன. உலகில் கிரிக்கெட் உயிர்த்திருப்பதன் பொருளாதாரக் காரணமே இந்தியச் சந்தைதான். இதன் பொருள் இந்திய மக்களைச் சுரண்டுவதற்காக கிரிக்கெட் மோகம் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என்பதே. இந்த உலகக்கோப்பைப் போட்டிக்காக பெப்சியும், எல்.ஜி.யும் தலா 315 கோடி ரூபாயையும், ஹீரோ ஹோண்டா 180 கோடியும், ஹட்ச் நிறுவனம் 90 கோடிகளையும் ஐ.சி.சிக்கு ஸ்பான்சர் தொகையாக அளித்திருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகளின் மைதானங்களை இந்த நிறுவனங்களின் பெயர்கள்தான் ஆக்கிரமித்திருந்தன.
..
போட்டியை ஒட்டி இந்திய ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கான தயாரிப்பு மற்றும் ஒளிபரப்புச் செலவு மட்டும் 1000 கோடி ரூபாய்களாகும். இது போக போட்டியை வைத்து பல நிறுவனங்களும் தத்தமது பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மட்டும் 800 கோடி ரூபாய்களை முதலீடு செய்தன. உலகக் கோப்பையை அதிகாரபூர்வமாக ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் 1100 கோடிகள் செலுத்திப் பெற்றிருந்தது.ஆக, இத்தனை ஆயிரம் கோடிகளும் ஏதோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து தர்மகாரியம் செய்வதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பதல்ல. இரசிகர்கள் தொலைக்காட்சியில் பந்தயத்தைப் பார்க்கும்போது அவர்களுக்குத் தெரியாமல் திருடப்படும் பணம்தான் இது. இந்த மோடிமஸ்தான் கொள்ளைக்கு ஒரே ஒரு நிபந்தனை இரசிகர்கள் பந்தயத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பதே.இந்தியாவில் 28 கோடிப் பேர் கிரிக்கெட்டை பார்ப்பார்கள் என்று கணக்கிட்டிருந்தார்கள். ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததும் இந்தக் கணக்கு அதோகதியானது. முதலாளிகள் எவ்வளவு வேகத்தில் கிரிக்கெட் பரபரப்பை எழுப்பியிருந்தார்களோ அதைவிட அதிகவேகத்தில் அந்த அலை சரிந்து போனது. வாலறுந்த நரி போல நிறுவனங்கள் ஊளையிடுகின்றன.
பெப்சி ப்ளூ பில்லியன் என்ற பெயரில் இந்திய அணி வீரர்களை வைத்து ஹாலிவுட் திரைப்படம் போல எடுத்த விளம்பரப்படம், இந்திய அணி தோல்விக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. மேலும் இந்திய அணி தங்கக் கோப்பையை வென்று வருவதாக நம்பி தங்கநிற கோலாவையும் பெப்சி இறக்கியது. தற்போது அவற்றை கூவத்தில் ஊற்றிவிட்டார்களா, தெரியவில்லை.இந்திய அணியின் சீருடையில் கிரிக்கெட் உபகரணங்களை விற்கத் திட்டமிட்டிருந்த நைக் நிறுவனம் தற்போது அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து வருகிறது. சாம்சங், எல்.ஜி, வீடியோகான் போன்ற நிறுவனங்கள் பழைய டி.வி.க்களை மாற்றிவிட்டு உலகக் கோப்பையை அகன்ற பிளாஸ்மா, எல்.சி.டி டி.வி.க்களில் பார்க்குமாறு விளம்பரம் செய்து இலட்சக்கணக்கில் விற்கத் திட்டமிட்டிருந்தன.
..
சூடுபட்ட வீடியோகோனின் தலைவர் வேணுகோபால் இனிமேல் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதில் கவனமாயிருப்போம் என்கிறார்.போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருந்த சோனி நிறுவனம் விளம்பரங்களின் மூலம் பிரம்மாண்டமாய் வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. ஓவருக்கிடையில் வீரர்கள் குனிந்து நிமிர்ந்தால், அவுட்டானால், போட்டி நடப்பதற்கு முன்னும் பின்னும் என ஆயிரம் வழிகளில் விளம்பரம். 10 விநாடிகளுக்கு 2 இலட்சம், 30 விநாடிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் என 50% விளம்பர நேரத்தை விற்றுவிட்டு, இந்தியா சூப்பர் 8க்குத் தேர்வானதும் மீதி 50% விளம்பரங்களை 30 விநாடிகளுக்கு 8 இலட்சம் என வசூலிக்க சோனி நிறுவனம் முடிவு செய்திருந்தது.
..
இந்தியா தோல்வியுற்றதும் போட்ட காசைக்கூட எடுக்க முடியவில்லையே என சோனி முதலாளிகள் புலம்புகின்றனர். விளம்பரம் கொடுத்த மற்ற முதலாளிகளோ கட்டணத்தை மலிவு விலைக்குக் குறைக்குமாறு வற்புறுத்துகின்றனர். சோனி மறுத்து வருகிறது. முதலாளிகளுக்கிடையில் நடக்கும் இந்தச் சண்டையில் ஒரு உண்மை வெளிவந்து விட்டது.சோனியின் தலைமை நிர்வாகி குனல் தாஸ்குப்தா, ""கேசினோவில் பணம் கட்டிச் சூதாடுபவர்கள் தோற்று விட்டால் பணத்தைத் திரும்பத் தருமாறு கோர முடியுமா? அது போல இந்தியா வெற்றிபெறும் என்று நம்பி விளம்பரக்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது இந்தியா தோல்வியுற்றதும் தங்கள் கட்டணத்தைத் திரும்பக் கோருவது முறையல்ல'' என்று பச்சையாக குட்டை உடைத்து விட்டார். தேசபக்தி, விளையாட்டு உணர்வு என்ற பசப்பல்களையெல்லாம் ஒதுக்கி விட்டு இது ஒரு சூதாட்டம்தான் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே ஒப்புக் கொண்டு விட்டன.இது சட்டபூர்வச் சூதாடிகளின் கதை. இந்த உலகக்கோப்பையை ஒட்டி நடைபெற்ற சட்டவிரோதச் சூதாட்டத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் புழங்கியதாம்.
..
ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் அந்த ஒரு போட்டியில் மட்டும் 1350 கோடி ரூபாய் சூதாடப்பட்டிருக்குமாம். இதில் ஒரு நூறு கோடிரூபாயை வீரர்களுக்கு வீசியெறிந்தால் அவர்கள் ஆட்டத்தைத் தூக்கி எறிந்திருக்க மாட்டார்களா என்ன?இத்தனைக் கோடிப்பணம் சட்டவிரோதமாகப் புழங்குவதைக் கண்டு கண்ணீர் விடும் இந்தியா டுடே பத்திரிக்கை முதலாளிகள் இந்தச் சூதாட்டத்தை சட்டபூர்வமாகவே அங்கீகரித்து விடலாமே என்று கோருகிறார்கள். அங்கீகரித்தாலும் அங்கீகரிப்பார்கள்! சூதாட்டப் பிரச்சினைக்காக பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டது உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் யோக்கியதைக்கு எடுத்துக்காட்டு! உலகக் கோப்பை ஆட்டங்கள் முடிவதற்கு முன் குற்றவாளியே நேரில் ஆஜராகி நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டாலும் இந்தப் புலன் விசாரணை முடிவுக்கு வராது. உண்மை வெளிவராமலேயே போவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை.இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கிரிக்கெட் காய்ச்சல் அடங்கிவிட்டது. இருப்பினும் போட்ட காசை எடுப்பதற்காக ஊடகங்கள் இன்னமும் கிரிக்கெட் குறித்த அற்ப விசயங்களை ஊதிப் பெரிதாக்குகின்றன.தோல்விக்குப் பிறகு காப்டன் மாற்றமா, பயிற்சியாளர் மாற்றமா, அடுத்த காட்பன் டெண்டுல்கரா, வாரியத்தின் அவசரக்கூட்டம், அதில் முக்கிய முடிவுகள், டெண்டுல்கர் மீது சாப்பல் விமரிசனம், அதற்கு டெண்டுல்கர் விளக்கம் என்று தினம் ஒரு செய்தி பரபரப்பாக ஊடகங்களால் உருவாக்கப்பட்டன. எப்படியும் கிரிக்கெட் கிளர்ச்சியைத் தணியவிடக்கூடாது என்பது அவர்களது நோக்கம். தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் ஒன்றுமில்லாமல் விரயமாகக்கூடாதல்லவா!ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் பிரச்சினையைப் பார்ப்பதற்கு நேரமற்ற விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கீழே விழுந்துவிட்ட கிரிக்கெட் மோகத்தை எழுப்புவதற்கு பலநாட்களைச் செலவிட்டார்.
..
இவர்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பி.சி.சி.ஐ.இன் தலைவர். ஊடகங்களும் இவரை எப்போதும் வேளாண்துறை அமைச்சராகக் கருதாமல் கிரிக்கெட் பிரச்சினைகளுக்காக மட்டும் இவரிடம் பேட்டி எடுக்கின்றன.மறுபுறம் இரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக பி.சி.சி.ஐ. சில யோசனைகளைத் தெரிவித்தது. இதன்படி இனி ஒவ்வொரு வீரரும் இரண்டு நிறுவனங்களுக்கு மேல் விளம்பரங்களுக்காக நடிக்கக் கூடாது, பந்தயத்திற்கு முந்தைய 15 நாட்களில் விளம்பரப் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது, வீரர்களை பிராந்திய முறையில் தெரிவு செய்யப்படும் முறை ரத்து செய்யப்படும். போட்டிகளில் வெல்லுவதற்கேற்ப ஊதியம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று போகிறது அந்த ஆலோசனைப் பட்டியல். இவையெல்லாம் வெறும் யோசனைகள் என்பதுதான் முக்கியம்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்த ஆலோசனைகளை உடனே கடுமையாக எதிர்த்தனர்.
..
பி.சி.சி.ஐ.யும் இவையெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்காகச் சொன்னது என்று தனது முன்மொழிதலிலிருந்து பின்வாங்கி விட்டது. ஏனெனில் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்துவது வாரியமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள்தான். வாரியத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வருமானமாகக் கொடுப்பது முதலாளிகள்தான். எனவே அவர்களைப் பகைத்துக் கொண்டு எந்த ஆலோசனைகளையும் அமல்படுத்த முடியாது. இரண்டு நிறுவனங்களுக்கு மேல் விளம்பர நடிகராக இருக்க முடியாது எனும்போது, வாரியத்திற்கு ஸ்பான்சர் தொகையை வழங்க முடியாது என்று நிறுவனங்கள் அறிவித்து விட்டால் என்ன ஆகும்?அதேபோல பிராந்திய முறை தேர்வு ரத்து என்று பி.சி.சி.ஐ. அறிவித்தாலும் வீரர்களின் தேர்வு என்பது சுயேச்சையாக நடக்க முடியாது. விளம்பரங்களில் நடிக்கும் நட்சத்திர வீரர் ஒருவர் சரியாக ஆடவில்லை என்றாலும் அவரை வாரியம் நீக்க முடியாது என்பதே உண்மை. அவரை அணியிலிருந்து எடுப்பதற்கு அவரை விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சம்மதிக்காது என்பதுதான் யதார்த்தம்.
..
எனவே வீரர்களைத் தேர்வு செய்வதும், நீக்குவதும் நிறுவனங்களின் தயவைப் பொறுத்ததுதான். மற்ற நாட்டு அணிகளில் வீரர்கள் திறமையினால் இடம்பெறும் நிலை இந்தியாவில் இல்லை. இனி எப்போதும் இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற முடியாது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?ஆயினும் இந்திய அணி வெற்றி பெறுவது நிறுவனங்களுக்கு அவசியம் என்பதால் அதற்கேற்ற வகையில் கிரிக்கெட் விளையாட்டையே மாற்றியமைக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்திய அணி வெற்றி பெறுவதற்கேற்ப ஆடுகளங்கள் தயாரிக்கப்படலாம். இந்திய அணி இறுதிப் போட்டிகளுக்குச் செல்லும் வகையில் பந்தய விதிகளையே வடிவமைக்கலாம். இந்திய அணியை வெற்றிபெறச் செய்ய மற்ற அணிகளைப் பணம் கொடுத்து வாங்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்களே செய்யலாம். திறமையுள்ள ஒரு சில வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அணியை வலுப்படுத்தலாம் என்று கூட இவர்கள் திட்டமிடலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.முன்பு போட்டிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க சூதாட்டக்காரர்கள் முயன்றார்கள்; தற்போது அதை பன்னாட்டு நிறுவனங்களே செய்யக்கூடும். ஏனெனில், கிரிக்கெட்டினால் சூதாடிகள் பெறும் இலாபத்தை விட பன்னாட்டு நிறுவனங்கள் அடையும் இலாபம் பன்மடங்கு அதிகம்.
..
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நட்சத்திரங்கள் வேண்டும். அத்தகைய நட்சத்திர வீரர்களை உலகம் முழுவதிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஐரோப்பியக் கால்பந்து கிளப்புகளைப் போல கிரிக்கெட் கிளப்புகளை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஜீ டி.வியின் முதலாளி. தேசவெறிக்கே கிரிக்கெட் ரசனை என்ற முகமூடி அணிவித்து அதனைத் தூண்டி வளர்த்த முதலாளிகள் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.மூவர்ணக் கொடியை அணியாத இந்த கிளப் நட்சத்திரங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க முதலாளிகள் இங்கே தொழில் தொடங்குவதை இந்தியாவின் முன்னேற்றம் என்று மக்களை நம்ப வைக்க முடிகிறது; ஆனால், ஆஸ்திரேலிய ஆட்டக்காரரை இந்திய வீரர் என்று கொண்டாடும் மனப்பக்குவத்தை இந்திய ரசிகர்களுக்கு உருவாக்க முடியுமா? தேசிய உணர்வையே சரக்காக்கி விற்றார்கள் பன்னாட்டு முதலாளிகள்; இப்போது அந்தச் சரக்கை விற்கவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை.
· இளநம்பி
No comments:
Post a Comment