முன்னேறுகிறது இந்தியா
30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் பயணம் !!
ரேவண்டாபாய் காம்ளே தனது ஆறு வயது மகனோடு பேசிப் பல மாதங்களாகி விட்டது. ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள், ஆனால் இப்படியொரு நிலைமை. பூரிபாய் நாக்புரேவுக்கும் அப்படித்தான் சில சமயம் பெரிய மகனோடு பேச நேரம் கிடைக்கும், அதுவும் அவன் விழித்துக் கொண்டிருந்தால்.
..
மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டம், திரோடா என்ற சிற்ரில் ரேவண்டாபாய், பூரிபாய் போலவேதான் நூற்றுக்கணக்கான பெண்களின் அன்றாட வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் நான்கே மணி நேரம்தான் வீட்டில் ஓய்வெடுக்க முடியும் (அது ஓய்வா உறக்கமா?) இப்படி வயிற்றுப்பாடுக்காக நாள்தோறும் போக, வர சுமார் 150 கி.மீ. பயணப்பட்டு அல்லல்படும் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்பக்கூலி வெறும் முப்பது ரூபாய்.விடியற்காலை 6 மணி நாங்கள் அவர்களோடு சேர்ந்து ரயிலுக்குப் புறப்பட்ட நேரம் அது. அவர்கள் அதற்கு இரண்டு மணி நேரம் முன்பு எழுந்திருந்தால்தான் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப முடியும்.
""சாப்பாடு செய்து முடிச்சு, துவைத்து, பெருக்கி, சுத்தம் செய்து, கழுவி எல்லா வேலையும் முடித்து விட்டேன்'' பூரிபாயின் குரலில் ஒரு நிறைவு ""இப்ப நாம எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்'', என்றார். அந்த நேரத்தில் அவர் வீட்டில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ""பாவம், பொழுதுக்கும் வேல செஞ்சி சோர்ந்து போயிடுதுங்க'' என்றார் பூரிபாய். ""நீங்க சோர்ந்து போவலியா?'' என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ""இல்லாம? வேறென்ன செய்ய? வேற வழியில்லே.''
ரயில் நிலையம் சென்றபோது பூரிபாய் போலவே வேறு வழியில்லாத ஏராளமான பெண்கள் ரயிலுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு விசித்திரமாகத் தோன்றியது. அவர்களில் யாருமே வேலைதேடி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு ஓடவில்லை; மாறாக, சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப் போகும் அவர்கள் நாடோடிக் கூலிகள்.
ஒவ்வொரு நாளும் கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்ய வேண்டும். வார விடுமுறை என்ற பேச்சே இல்லை. திரோடாவில் எந்த வேலைகளும் கிடையாது. கோண்டியாவில் உள்ள "கிசான்சபா'வின் (விவசாயச் சங்கம்) செயலர் மகேந்திர வால்டே சொன்னார்: ""இந்த வட்டாரத்தில் பீடித் தொழில் அழிஞ்சபிறகு இங்க ஒரு வேலையும் இல்லே.''
அக்கம் பக்கத்திலிருந்து 5,6 கி.மீ. நடந்துதான் தினமும் அவர்கள் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். ""விடியக் காலமே 4 மணிக்கு எழுந்திருச்சி, வேல எல்லாம் முடிச்சு ஸ்டேசனுக்கு நடந்தமுன்னா போய்ச் சேர 7 மணி ஆயிடும்.'' அடிச்சுப் பிடிச்சு வண்டிக்குள் ஏறினா, கூட்டத்தோட கூட்டமா சால்வா கிராமத்துக்குப் பயணம் போக 2 மணி நேரம் பிடிக்கும்.
அந்தப் பெண்களின் கண்களில் சோர்வு, முகங்களில் கனத்த களைப்பு, பசி, அரைத்தூக்கம். அமர்ந்து ஓய்வாகப் பயணம் செய்யலாம் என்றால் இடமும் கிடைக்காது. அப்படி அப்படியே தரையில் உட்கார்ந்தவாறும், ரயில் பெட்டிகளின் உள் சுவரில் சாய்ந்தவாறும் அந்த இரண்டு மணி நேரத்துக்குள் அவரவர் வேலை செய்யும் இடம் வருவதற்குள் முடிந்தவரை குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டே வந்தார்கள்.
""திரும்ப வீடு போய்ச் சேர ராவுலே 11 மணி ஆயிரும். தலையச் சாச்சுப் படுக்கறதுக்குள்ளாற நடுநிசி ஆயிரும். மறுபடி அடுத்தநாள் காலையில 4 மணிக்கு முழிக்கணும்'' என்று விவரித்த ரேவண்டா பாய் ""என்னோட சின்னப் பையன் முழிச்சிருந்து பாத்துப்பேசி ரொம்ப நாளாயிடுச்சி'' என்று சொல்லிச் சிரித்தார். சிரிப்பு வருத்தத்தில் நனைந்திருந்தது — ""அப்படி என்னைக்காவது ஒரு நா, பசங்க அவுங்கவுங்க பெத்தவங்களப் பாத்தாக்க அவுங்கதான் அம்மாவான்னு தோணிரும்'' என்றார் அவர்.
நிறைய பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகாம பாதியிலேயே நின்று போகும் படிக்க வைக்க வசதி கிடையாது; அப்படியும் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்காது. ""வீட்டுல இருந்து கவனிக்க, படிச்சியான்னு கேக்க, கொள்ள ஆளு கிடையாது'' என்றார் பூரிபாய். சில பிள்ளைகள் கிடைக்கிற வேலையச் செய்யப் போவதும் உண்டு.
திரோடா பள்ளி ஆசிரியர் லதா பாபங்கர் சொல்வதுபோல, ""அவங்க நல்லா படிக்க மாட்டாங்க. அதுக்கு அவுங்கள குத்தம் சொல்ல முடியாது.'' மகாராஷ்டிர அரசாங்கத்தைத்தான் குறை சொல்ல வேணடும்; இந்தப் பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், பள்ளிக்கூடம் சரியாகச் செயல்படவில்லை என்று காட்டி அரசாங்கமே உதவிகளை நிறுத்தி விடுகிறது; மாணவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளை ஆசிரியர்கள் செய்தாலும், தேர்வுகளில் தேர்வு விகிதம் சரியில்லை என்று அந்த ஆசிரியர்களையே அரசாங்கம் தண்டிக்கிறது. இதனாலும் கூட மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது மெள்ள மெள்ளக் குறைந்து நின்றும் போகிறது.
ரயில் ஓட்டத்தோடு குலுங்கும் தரையில் உட்கார்ந்திருந்த சகுந்தலா பாய் அகோஷே கடந்த 15 வருடமாக இப்படித்தான் வேலைக்குப் போய் வருவதாகச் சொன்னார். பண்டிகைகள் ஏதாவது வந்தாலோ, மழை வந்தாலோதான் இடையில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
""ரொம்ப அபூர்வமாக ஒருநாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும். மத்தப்படி எல்லா நாளுலயும் இருபத்தஞ்சுலேர்ந்து முப்பது ரூபாதான் கூலி'' என்றார் சகுந்தலா பாய். வெளி வேலையை விட்டால் உள்ளூரிலேயே செய்வதற்கு எந்த ஒரு வேலையும் இல்லை.
சிறு நகரங்களிலிருந்து இப்போதெல்லாம் பணம் பெரு நகரங்களுக்கு நகர்ந்து விட்டது. இங்கிருந்த மிச்ச மீதி சிறு தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் மூடப்பட்டு விட்டன. சிறு நகரங்கள் கண் எதிரே அழிகின்றன. அனேகமாக, பயணம் செய்து கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களும் முன்பு பீடி சுற்றிக் கொண்டிருந்தவர்கள். ""பீடித் தொழில் நசிஞ்சவுடனே எல்லாமே அத்துப் போச்சி'' என்றார் பூரிபாய்.
""பீடித் தொழிலே சிறு தொழில்தான். எங்கே மலிவான உழைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்துக்கு பீடித் தொழில் நகர்ந்துவிடும்'' என்கிறார் கே.நாகராஜ் என்கிற "மிட்ஸ்' (வளர்ச்சி பற்றிய ஆய்வு நிறுவனம், சென்னை) நிறுவன ஆய்வாளர். அவரது ஆய்வின்படி, ""பீடித்தொழில் வெகுவேகமாக இடம் மாறிவிடும். இதனால் கூலிகள் படுகிற பாடு சொல்லிமாளாது. கடந்த 15 வருடங்களில் நிலைமை படுமோசமாகி விட்டது.''
கிசான் சபாவைச் சேர்ந்த பிரதீப் கூற்றுப்படி, ""கோண்டியா பகுதியின் பீடித்தொழில் உத்தரப்பிரதேசத்துக்கும் சட்டீஸ்கருக்கும் இடம் பெயர்ந்து விட்டது.''
ஒரு பெண் ரயிலில் தினமும் நடக்கிற ஒரு வேடிக்கையான அவலத்தை விவரித்தார். அவர்கள் யாருமே பயணச்சீட்டு வாங்குவதில்லை. சீட்டு வாங்குவதானால் வாங்கும் கூலி இதற்கே காணாது. அதனால், அவர்களாகவே ஒரு "சிம்பிள் வழி' கண்டுபிடித்தார்கள்.
டிக்கட் பரிசோதகர் வந்தால் ஆளுக்கு 5 ரூபா லஞ்சம் கொடுத்து விடுவார்கள். ரயில் பயணச்சீட்டு இப்படியும் தனியார்மயமாகி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த 5 ரூபா கூட அவர்களின் உழைப்பை, கூலியை வைத்து ஒப்பிட்டால் பெரிய தொகைதான்; ஆனால் பரிசோதகர்கள் சும்மா விட்டுவிடுவதில்லை, மிரட்டிப் பறித்து விடுவார்கள்.
""என்னோட பெரிய பையன் சில சமயம் சைக்கிளில் கொண்டு போய் ரயில்வே ஸ்டேசனுக்கு விடுவான். அன்றைக்கெல்லாம் அங்கேயே இருந்து கொண்டு ஏதோ கொஞ்சம் கூலிக்கு வேல கிடைச்சாலும் தேடிப் பிடிப்பான். என்னோட பொண்ணு வீட்டுல சமைக்கும். அடுத்தவன் அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுப்பான்'' என்று தன் குடும்பத்தின் பாடுகளைச் சொன்னார் பூரிபாய்.
இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார் கிசான்சபா செயலர் வால்டே: ""ஒருத்தர் கூலிக்கு மூணு பேர் உழைக்கிறாங்க பாருங்க.'' பூரிபாயின் கணவர் ஏதாவது வேலை கிடைத்துப் போனால், அதையும் சேர்த்து, ஒரு நாளைக்கு அந்தக் குடும்பத்திற்கு 100 ரூபாய் கிடைப்பதே பெரிசு. சில நாட்களில் பெரியவனுக்கும் சரி, தந்தைக்கும் சரி இரண்டு பேருக்கும் வேலை கிடைக்காமல் போய் விடும். ரேசன் கார்டு கூட இல்லாத அந்தக் குடும்பம் அப்படிப்பட்ட நாட்களில் தவித்துப் போகும்.
பயணத்தில் வழியேற ரயில் நிலையங்களில் கான்டிராக்டர்கள் மலிவான கூலிக்கு உழைப்பாளிகளைப் பிடிக்க, கழுகுபோலக் காத்திருந்தார்கள்.
···பூரிபாய், ரேவண்டா பாயோடு பயணம் செய்த நாங்கள் சால்வா நிலையத்துக்குப் போய்ச் சேர காலை 9 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து வேலை நடந்த கிராமம் ஒரு கி.மீ. தொலைவு; பிறகு வயல்களை நோக்கிப் போக கூடுதலாக ஒரு 3 கி.மீ. அந்த 3 கி.மீ. தொலைவும் தலையில் தண்ணீர்ப் பானையைச் சுமந்து கொண்டு பூரிபாய் போட்ட நடையோடு எங்களால் போட்டி போட முடியவில்லை.
அற்பக்கூலிக்கு அவர்கள் வேலை செய்த நிலத்தின் சொந்தக்காரர் பிரபாகர் வஞ்சாரேவுக்கும் போதாத காலம்தான். விவசாய நெருக்கடி அவரையும் பதம் பார்த்துவிட்டது. அவருக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருந்தது; தவிர அவர் 10 ஏக்கரா குத்தகைக்கு எடுத்திருந்தார். ""கட்டுப்படியாகாத விற்பனை விலை எங்களையும் வயிற்றில் அடிக்கிறது'' என்றார் பிரபாகர். ""கிராமப்புற வறுமையைச் சமாளிக்க முடியாத பாரம்பரியக் குடிகளும் எங்கெங்கோ இடம் பெயர்ந்து விட்டதால்தான் திரோடாவிலிருந்து பொம்பிளை ஆட்களைக் கூலிக்கு வைக்கிறோம்'' என்றார் அவர்.
இந்தக் கிராமம் உள்ள இடம் கிழக்கு விதர்பா தற்கொலைகள் பெருகி அழிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்குரிய பருத்தி விளையும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது இப்பகுதி. வஞ்சாரே நெல் பயிரிடுகிறார். மிளகாய் போல வேறு சில பயிர்களும் போடுகிறார். தற்சமயம் அதற்குத்தான் ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்வேலை முடிவதற்குள் பொழுது சாய்ந்துவிடும். பிறகு ஆட்கள் ரயிலடியை நோக்கி நடப்பார்கள் அதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.
அதற்குப் பிறகும் ஊர் திரும்பும் ரயில் வருவதற்காக ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். இரவு 8 மணிக்குத்தான் ரயில். திரோடா போய்ச்சேர 10 மணியாகும், அதற்குள் உறவுகள் உறங்கிப் போகும். விடியலில் வேலைக்கு அவர்கள் கிளம்பும் போதும் குடும்பம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். ""இதுல எங்களுக்கு என்ன குடும்பம், என்ன வாழ்க்க, சொல்லுங்க'' என்று கேட்டார் ரேவண்டா பாய்.
காலையில் வீட்டிலிருந்து கிளம்பி, இரவு திரும்பி வந்து சேருவதற்குள்ளாக அவர்கள் சுமார் 170 கி.மீ. தூரம் பயணம் முடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், வாரம் முழுக்க, ஒரு 30 ரூபாய் கூலிக்காக.
""11 மணிக்கு வீடு திரும்புவோம். சாப்புடுவோம், தூங்குவோம்'' பூரிபாய் விவரித்தார். இதோ, இன்னமும் நான்கே மணிநேரம்தான் மறுபடி அவர்கள் எழுந்திருக்க வேண்டும். மறுபடி ஓடத் தொடங்கி விடவேண்டும்.
கட்டுரையாளர்: பி. சாய்நாத்.
மூலம்: தி இந்து, 24.1.2007.
மொழியாக்கம்: பஷீர்.
No comments:
Post a Comment