அமெரிக்க எதிர்ப்பு: சி.பி.எம். -யின் பித்தலாட்டம்
நிமிட்ஸ் கப்பலை அனுமதிக்காதே,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கனும் என்று துள்ளி குதித்த சி.பி.எம் யோக்கியதை பற்றி புதிய ஐனநாயகத்தில் (டிசம்பர் 2005) வந்த கட்டுரையை மீண்டும் பதிவிட்டு உள்ளோம்.
**********************************************************************************
"இந்திய வான்வெளி. அமெரிக்காவின் விற்பனைக்கு அல்ல! அமெரிக்காவின் இராணுவத் தளமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! கொலைகார அமெரிக்க போர் விமானப் படையுடன் நடத்தும் கூட்டுப் பயிற்சியை நிறுத்து!'' கைகளிலே செங்கொடியும் கருப்புக் கொடியும் ஏந்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நவம்பர் 7ஆம் நாளன்று மே.வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்திலுள்ள களைகுண்டா விமானப் படைத்தளம் அருகே விண்ணதிர முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல், வடக்கே சிலிகுரி அருகிலுள்ள பக்டோக்ரா விமானப் படைத்தளம் அருகேயும், கொல்கத்தாவின் டம்டம் விமானத்தளம் அருகிலும் இந்திய அமெரிக்க போர் விமான கூட்டுப் பயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
வாஜ்பாய் ஆட்சியின்போதும் இதேபோல் இந்திய அமெரிக்கப் போர் விமானங்களின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அப்போது சி.பி.எம். தலைமையிலான "இடதுசாரி'க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதே கூட்டுப் பயிற்சி இப்போது சி.பி.எம். தலைமையிலான "இடதுசாரி' கூட்டணி ஆளும் மே. வங்கத்தில் நடைபெற்றது. அதை எதிர்த்துத்தான் "இடதுசாரி' கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன. "இடது' முன்னணித் தலைவர்களும், ஊழியர்களும் உழைக்கும் மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி என்கிறது சி.பி.எம். கட்சி.
இச்செய்தியைப் படிக்கும் எவரும், சி.பி.எம். கட்சி அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கட்சி; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் போர்க்குணமிக்க கட்சி என்றுதான் கருதுவர். ஆனால், மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஒப்புதலுடன்தான் இந்தப் போர் விமான கூட்டுப் பயிற்சியே நடந்துள்ளது.
மே.வங்கத்தில் போர் விமான கூட்டுப் பயிற்சி வேண்டாம்; வேறிடத்தில் நடத்தலாம் என்று அமெரிக்கா கூடத் தயங்கியது. இதைப் பற்றி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது, ""இது தொடர்பாக மே.வங்க முதல்வர் புத்ததேவிடம் பேசிவிட்டோம். அவர் கூட்டுப் பயிற்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு மாநிலத்தில் நடத்தலாம் என்று கருதினோம். ஆனால் சி.பி.எம். முதல்வரே உறுதியளித்துள்ளதால் திட்டமிட்டபடி மே.வங்கத்திலேயே இக்கூட்டுப் பயிற்சி நடைபெறும். இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களது ஜனநாயக உரிமை. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புத்ததேவ் உறுதி கூறியுள்ளார்'' என்று விளக்கியுள்ளார், பிரணாப் முகர்ஜி.
""மைய அரசு அமெரிக்காவுக்கு விசுவாசமாக போர் விமானக் கூட்டுப் பயிற்சியை நடத்துவதென்பது அவர்களது உரிமை; எதிர்ப்பு காட்டுவதென்பது எங்களது உரிமை; அதேநேரத்தில் மைய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது மாநில அரசின் கடமை'' என்று பித்தலாட்டம் செய்கிறது சி.பி.எம். கட்சி. மே.வங்கத்தில் இக்கூட்டுப் பயிற்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று மாநில அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து தடுத்திருக்கலாமே என்று கேட்டால், ""அப்படிச் செய்தால் மே.வங்கத்தைப் பற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்குத் தவறான கருத்து ஏற்பட்டு விடும். அந்நிய முதலீடுகள் வராமல் போய்விடும்'' என்கிறார் மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர்.
ஆர்ப்பாட்டம் நடந்த களைகுண்டா போர் விமானப் படைத்தளத்துக்கு 2 கி.மீ. தூரத்துக்கு அப்பால் போலீசு தடுப்பரண்களை நிறுவி, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியது, ஆளும் "இடது முன்னணி' அரசு. கேட்டால் ""சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது மாநில அரசின் கடமை'' என்கிறார் புத்ததேவ். வேறு மாநிலத்தில் இக்கூட்டுப் பயிற்சி நடந்திருந்தால் இப்படி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி பரபரப்பூட்டியிருக்க முடியாது. எனவேதான், மே.வங்கத்தில் நடத்த ஒப்புதல் அளித்துவிட்டு, எதிர்ப்பும் காட்டி பித்தலாட்டம் செய்கிறது சி.பி.எம். கட்சி. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் புரட்சி செய்வது எப்படி? தெரியாவிட்டால் சி.பி.எம். கட்சியினரிடம் கேளுங்கள்.
குமார்
No comments:
Post a Comment