Thursday, July 5, 2007

சொல்லுங்கள்

தொழிற் சாலையின்
உயர்ந்த கூரைகளிலும்
மெளனம் கவிந்தது.

மெர்க்க்குரி விளக்குகளும்
துருப்பிடித்துப் போயின
..
ஆதிகாலக்
குகையைப் போன்ற
அர்த்தமற்ற இருளுக்கும்
நிசப்த்த்திற்கும்
யார் பொறுப்பு?
..
சுழன்று கொண்டிருந்த
எல்லாச் சக்கரங்களையும்
இயங்கிக் கொண்டிருந்த
எல்லா உயிர்களையும்
ஒரு நொடிக்குள்
நிறுத்தி வைத்தது
யார்?
..
தங்களின்
கவலைகளையும்
கனவுகளையும்
சோகங்களையும்
நம்பிக்கைகளையும்
சுமந்து வந்த
நம்மை
முடமாக்கியது யார்?
..
கண்களை
எதிர் காலத்தைக்
குருடாக்கியது யார்?
..
அரை வயிற்றுக் கஞ்சிக்கும்
ஆடைக்கும்
நம்மை
அலைய விட்டவர்கள்
யார்?
..
அவர்கள்-
.
நிரம்பி வழியும்
மதுக் கிண்ணங்களோடு
தொழிற்சங்கத் தலைவரின்
தோள் மீது கைபோட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
ஒநாய்களையும்
நாய்களையும்
சட்டத்தையும்
காவலுக்கு வைத்துவிட்டு
குண்டு துளைக்காத
கூண்டுகளுக்குள்
பாதுகாப்பாக
இருக்கிறார்க்ள்.
..
வேதப்புத்தகங்களை
பகவத் கீதைகளை
ரத்தக் கறைபடிந்த
விரல்களால்
புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்
.
வருத்தப்பட்டு
பாரம் சுமக்கிறவர்களே
இவர்களை நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..
உங்கள் குழந்தைகளின்
சின்னஞ்சிறு குடல்
குளிர்வதெப்போது?
..
உங்கள் பானைகளில்
சந்தோஷம், பொங்கி
வழிவதெப்போது?
..
உங்களை முடமாக்கியவர்களை
நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..
சொல்லுங்கள்.
*****************
-புதியஜீவா

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது