சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!
""ஜெகந்நாபாத் சிறைச்சாலையின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நடத்திய அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதலானது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக் குறைபாடுகள் குறித்த பல பாரிய கேள்விகளை எழுப்புகின்றது. தேர்தல் ஆணையத்தின் கட்டளையின்படி சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக பாதுகாப்புப் படைகள் ஈடுபடுமாறு திருப்பி விட்டிருந்தது கூட, இந்தச் "சிறைத் தகர்ப்பு நடவடிக்கை'க்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த அமைப்பு அதிநவீன ஆயுதங்களை எவ்வாறு அடைய முடிந்தது; அவர்களின் தொழில்முறைப் பயிற்சி மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்புகள் ஆகியவை குறித்துப் பாரிய கேள்விகளைக் கூட இந்த ஒட்டு மொத்த நிகழ்வு எழுப்புகிறது. இவற்றிலெல்லாம் அரசாங்கமும் அதன் (ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை) முகமைகளும் கவனம் செலுத்த வேண்டும்; அதேசமயம் விவாதிக்கப்பட வேண்டிய பிற பிரச்சினைகளும் இருக்கின்றன.''
இது அருண்சௌரி, ""துக்ளக் சோ'' போன்ற கம்யூனிச எதிர்ப்பு பார்ப்பன பாசிசக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எழுதியதல்ல. ஏகாதிபத்திய மேலாதிக்கம், மறுகாலனியாதிக்கம், உலகமயமாக்கம் ஆகிய புதிய காலகட்டத்திற்கேற்ற நவீன திருத்தல்வாதத்தின் புதிய தலைமுறைத் தலைவர் சீதாராம் யெச்சூரியின் கூப்பாடு.
ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு குறித்து எழுதும் முதலாளியத் தாராளவாத விமர்சகர்களே கூட, நக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சிக்கான சமூக, அரசியல், பொருளாதார காரணிகளைச் சுட்டுகின்றனர்; தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பின்தங்கிய நிலை, அரசாங்கங்கள் அம்மக்களின் நல்வாழ்வில் அக்கறையின்றிப் புறக்கணிப்பது மட்டுமல்ல. அரசின் மக்கள் விரோதச் செயல்களையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியோ துரோகத்தனமான, கேவலமான எதிரிவர்க்கக் கைக்கூலியாகவே மாறி மேற்கண்டவாறு தமது அதிகாரபூர்வ ஆங்கில ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்ரசி''யில் எழுதியிருக்கிறார்.
அதாவது, இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நவீன ஆயுதங்களை அடைந்தது, தொழில்முறை பயிற்சி பெற்றது, பிற குழுக்களுடனான அதன் தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து ஒடுக்கும் வேலைகளை அரசும் அதன் ஆயுத உளவுப் படைகளும் செய்ய வேண்டும், தம் தரப்புக்கு அக்கட்சி எழுப்பியுள்ள அரசியல், சித்தாந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாக எழுதுகிறார்.
நக்சல்பாரி இயக்கத்துக்கு எதிரான அரசியல் சித்தாந்த விளக்கம் என்று எண்ணிக் கொண்டு வழக்கமான தனது புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார், அந்தத் திருத்தல்வாதி. சிறைத்தகர்ப்பு போன்ற வன்முறை ""இடது தீவிரவாதம்'' என்றும் அவற்றை வைத்து கம்யூனிசம் வன்முறையை வழிபடுவதாகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இம்மாதிரி அராஜகத்தையும் சி.பி.எம். கட்சியின் புரட்சிகர வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ். சமப்படுத்துவதாகவும் புளுகுகிறார். அராஜக வன்முறையை இசுலாமிய அடிப்படைவாதிகளோடு வேண்டுமென்றே சமப்படுத்தி வைப்பது போலத்தான் சி.பி.எம். கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து ஆர்.எஸ்.எஸ். குழப்புவதாகப் புளுகுகிறார்.
நக்சல்பாரி இயக்கத்தின் புரட்சிகர வன்முறையை, சி.பி.எம்.இன் நாடாளுமன்றப் பன்றி அரசியல் வேலைகளுக்குச் சமமாகப் பேசினால், நக்சல்பாரி இயக்கத்துக்குதான் இழப்பு, அவப்பெயர் அவமரியாதை சி.பி.எம். கட்சிக்கு அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, கொஞ்சமாவது பொது அரசியல் அறிவுள்ள எல்லோருக்குமே நக்சல்பாரி இயக்கத்துக்கும், சி.பி.எம். கட்சிக்கும் இடையிலுள்ள அடிப்படை வேறுபாடு தெரியும். அதாவது சி.பி.எம். ஒரு நாடாளுமன்றக் கட்சி, புரட்சிக்கு வன்முறையில் நம்பிக்கை வைக்காத கட்சி. நக்சல்பாரி இயக்கம் புரட்சிகர வன்முறையில் நம்பிக்கையுள்ள கட்சி, நாடாளுமன்ற அரசியலை எதிர்த்துப் புறக்கணிக்கும் இயக்கம். எப்படியிருந்தாலும் (புரட்சிகர) வன்முறை இரண்டு இயக்கங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, வேறு யார்தான் இரண்டின் நடைமுறைகளைச் சமன்படுத்திப் பேசமுடியும்? அப்படிப் பேசினால் யார்தான் அதை நம்பப் போகிறார்கள்?
ஆக, திருத்தல்வாதி இங்கேயும் உண்மையைத் திரித்து எழுதியிருக்கிறார். ஏதோ, தனது கட்சியும் புரட்சிகரக் கட்சி என்பதாகக் காட்டிக் கொள்வதற்காக, அப்பட்டமான புளுகு வாதத்தை முன்வைத்து புரட்சிகர இயக்கத்தின் மீது அவதூறு செய்ய முயன்றிருக்கிறார். இவர்கள் அமைப்பைச் சேர்ந்த 42 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட போதும், கான்பூரில் இவர்களின் கலைக்குழு அமைப்பாளர் சப்தார் ஹாஸ்மி பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட போதும், அதேபோல, இவர்களின் மதுரை மாநகர உறுப்பினர் லீலாவதி கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும் கோழைத்தனமாக செயலிழந்து ஒடுங்கிக் கிடந்துவிட்டு, அவற்றை ஓட்டுப்பொறுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் இந்தப் போலி கம்யூனிஸ்டுகளோடு, புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தை சமன்படுத்திவிடுவார்கள் என்பது ஒரு சிகப்புப் பொய் அல்லவா?
அதோடு, ஜெகந்நாபாத் சிறைத்தகர்ப்பு ஒரு அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதல் என்றும், வன்முறை வழிபாடு என்றும், அராஜக வன்முறை என்றும் யெச்சூரி சித்தரிக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியினர் உட்பட நக்சல்பாரி இயக்கத்தினர் ஆயிரக்கணக்கில் இந்தியச் சிறையில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல், விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். பதின்வயதுச் சிறுவர்கள், பெண்கள் கூட ""பொடா'' சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜெகந்நாபாத் கொடுஞ்சிறையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுப் புரட்சியாளர்கள் விசாரணைக் கைதிகளாக ஆண்டுக்கணக்கில் அடைபட்டுக் கிடந்தார்கள். அதனால்தான் இந்தச் சிறைத் தகர்ப்பே தவிர, வெறுமனே வன்முறைக்காக வன்முறை, வன்முறை வழிபாடு என்பதெல்லாம் போலி கம்யூனிஸ்ட் மூளைகளில் உதித்த திருத்தல்வாதம்தான்!
நக்சல்பாரி இயக்கம் பிளவுபட்டுப் போனது, குழுக்களாக செயல்படுவது பற்றி நக்கலாக எழுதுகிறார் யெச்சூரி. இந்தக் குழுக்களிடையே நிலவுவது, புரட்சியை எப்படிச் சாதிப்பது என்கிற வேறுபாடுதானே தவிர, கேரளத்திலும், மே.வங்கத்திலும் சி.பி.எம். கட்சிக்குள் நடப்பதைப் போல பதவிச் சண்டையோ, இலஞ்ச ஊழல் போட்டியோ அல்ல. சினிமாக்காரன்களின் புகழ்பாடியோ ""புரட்சித் தலைவி ஆசி பெற்ற சி.பி.எம். வேட்பாளர்'' என்று கூறியோ ஓட்டுப் பொறுக்கும் கட்சியின் தலைவருக்கு இதெல்லாம் தெரியாததில்லை!
மு சுப்பு
No comments:
Post a Comment