Wednesday, November 28, 2007

டாடாவின் டைட்டானியம் ஆலை:மண்ணைப் பறித்து முன்னேற்றமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகியிருந்தது. சாத்தான் குளம், திசையன் விளைப் பகுதிகளில் உள்ள செம்மண் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என சோதனைகளைச் செய்து முடித்த டாடா நிறுவனம், ஆலைக்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்து நின்றது.

அதற்குள் தேர்தல் நடந்து, ஆட்சி மாறிவிடவே இன்றைய அரசுடன் மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக சுமார் பத்தாயிரத்து ஜநூறு ஏக்கர் நிலங்களை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு வழங்கும்; நிலம் வழங்கியவர்களுக்கு டாடா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்; வீடு இழந்தவர்களுக்கு டாடா நிறுவனமே மாற்று வீடுகள் கட்டித் தரும் என்பது ஒப்பந்தத்தின் சாரம்சம்.
அன்று டாடாவுடன் ஒப்பந்தம் போட்ட "ஜெ' உட்பட ஏறக்குறைய எல்லாக் கட்சிகளும், இன்றைய டாடாவுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து அறிக்கைகள் விடத் தொடங்கினர். பா.ம.க., போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைவருமே மக்களிடம் கருத்தறிவது எனக் குதிக்கவே, கருணாநிதியும் மக்களின் கருத்தறிந்த பின்பே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனக் கூறி இப்போதைக்கு சிக்கலை ஆறப்போட்டுவிட்டார்.

அருகாமை நெல்லை மாவட்டத்தில் அமெரிக்க கோக்கிற்கு தாமிரவருணியையே விற்றபோது, அதை எதிர்த்து யாரும் போராடவில்லை. போலி கம்யூனிஸ்டுகள் பெயரளவுக்கு எதிர்ப்பு வேசம் கட்டி, சூட்கேசு வந்ததும் ஒதுங்கிக் கொண்டனர். ஏற்கெனவே மே.வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலையை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு நாடெங்கும் போலி கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை நாறுகிறது. கருணாநிதியோ, எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் பித்தலாட்டத்தை முறியடிக்க, கருத்துக் கணிப்பு என்று இன்னோரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலை எடுத்து, அதை சுத்திகரித்து டைட்டேனியம் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து டைட்டேனியம் என்ற ஆற்றல்மிக்க உலோகம் தயாரிக்கப்படுகிறது. இது இரும்பை விட எடை குறைவும், பன்மடங்கு ஆற்றலும் கொண்டது என்பதால் விண்ணூர்திகள், விண்கலங்கள், ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகைகளில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இதே தேரிக்காட்டுப் பகுதிகளில் வைகுண்டராஜன் என்பவர் அடாவடியாகவும், சட்டபூர்வசட்டவிரோத வழிகளிலும் இல்மனைட் மணலை சுத்திகரித்து மூலப்பொருளாகவே ஏற்றமதி செய்து வருகிறார். டாடா ஆலை வந்தால், தனது தொழில் பாதிப்படையும் என்பதால் இது வரை சில கோடிகள் செலவு செய்து சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள், நாளிதழ்களில் விளம்பரம் என பலவழிகளிலும் மக்களிடையே பயத்தையும் எதிர்ப்புணர்வையும் உருவாக்கி, அரசுக்கு எதிராகவே செயல்பட்டார்.

டாடாவின் எடுபிடியாகச் செயல்படும் தமிழக அரசோ, நேற்று வரை வைகுண்டராஜனின் அடாவடிகளையும் சட்டவிரோத வழிகளையும் அனுமதித்துதான் வந்தது. இன்றோ, பல்வேறு வழக்குகள் போட்டது மட்டுமின்றி "தாதா' தொழிலதிபர் என பட்டமும் சூட்டி தேடுதல் வேட்டை நடத்துகிறது. பத்திரிக்கைகளோ வழக்கம் போல இவற்றையே லைகுண்டராஜனின் சாதனைகளாக்கி பரபரப்பூட்டுகின்றன. தலைமறைவாயுள்ள வைகுண்டராஜன், தற்போது ஒரு சரணாகதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வைகுண்டராஜன் செய்து வந்த வேலையை அரசாங்கமே இப்போது, டாடா செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே வறண்டு பாலைவனம் போலுள்ள அந்த தேரிக்காட்டுப் பகுதி முற்றிலும் பாலைவனமாகி, மக்கள் வசிப்பதற்கும் கூட பயனற்றதாக மாறுகின்ற அபாயமே உள்ளது. டாடா நிறுவனம் கூறுவது போல வெறும் 7 மீட்டருடன் மண்ணள்ளுவது நிற்காது. அதற்கும் மேலாக 20, 25 மீட்டர் ஆழம் கூட மணல் அள்ளும் அபாயமுள்ளது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்த நிலத்தடி நீருமே காணாமற் போய், கிராமங்களையே மக்கள் காலி செய்ய வேண்டிய மிகப்பெரும் அபாயம் உள்ளது.

இதுதவிர, டாடாவின் டைட்டேனியம் ஆலைக் கழிவால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன், கடலும் மாசுபடுகின்ற அபாயமுள்ளது. மேலும், டைட்டேனியம்டைஆக்சைடு தயாரிப்புக்கு நாளொன்றுக்கு 4.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போவதாகவும், அந்த சுத்திகரிப்பு ஆலைக்கும் டாடா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. சுத்திகரிப்பு ஆலை எப்போது முடியும் என்பது பற்றிய காலம் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு முன் உற்பத்தி தொடங்கப்பட்டால், நிச்சயம் தாமிரவருணி ஆற்றுநீரே உறிஞ்சப்படும் அபாயமும் இணைந்துள்ளது.

சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் டாடாவின் ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு கூறுகிறது. இவை மண்ணின் மைந்தர்க்கே கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாமுமில்லை. ஏனெனில், ஆலையிலுள்ள வேலைகளுக்கு தொழில்நுட்ப தேர்ச்சி தேவை என்பது ஒரு முன் நிபந்தனை.

40 ஆயிரம் குடும்பங்களை அகதிகளாக்கி, டைட்டேனியம் ஆலை தொடங்கப்பட்டால், டைட்டேனியம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடு என்ற பெருமை கிடைக்கலாம். ஆனால் மண்ணையும், வாழ்வுரிமையையும் இழந்து தேரிக்காடுகளையும் விட்டோடுகின்ற மக்களின் அவலம் டாடா எனும் தனியொரு முதலாளியை மட்டும் வாழவைப்பதற்குத்தான் என்பதை சொரணையுள்ள யாரும் ஏற்க முடியாது.

ஏற்கெனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக ஓட்டுக் கட்சிகள் சூரத்தனம் காட்டின. சூட்கேசும் அன்பளிப்பும் வந்தபின் முடங்கிப் போயின. மக்களுக்கு பாதிப்பு வராது, வந்தால் டாடா நிறுவனம் மாற்றீடு செய்யும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது. ஏற்கெனவே நெய்வேலி சுரங்கத்திற்கு நிலமளித்தவர்களும் கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்திற்கு நிலமளித்தவர்களும் இந்த அரசாலேயே புறக்கணிக்கப்படுள்ளனர். மக்களுக்கு பதில் கூற பொறுப்புள்ள அரசாங்கமே மக்களை நிர்கதியாக வீதிக்கு விரட்டும் போது, லாப வெறி பிடித்த டாடா நிறுவனம் உரிய மாற்றீடு செய்யும் என்பதற்கும் எவ்வித உத்திரவாதமுமில்லை.

டாடாவா, வைகுண்டராஜனா என்ற போட்டியில் அப்பகுதி மக்கள் மண்ணிலிருந்தே விரட்டப்படும் அபாயம் முதன்மையாக உள்ளது. மக்கள் தமது மண்ணையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க ஓட்டுக் கட்சிகளை நம்பினால் அது மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதையாகவே முடியும். மூலவளங்களையே சூறையாடும் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான போராட்டத்திற்கு அணிதிரள்வதே மண்ணையும் வாழ்வுரிமையையும் மீட்கும் பாதை! டாடாவை விரட்டும் பாதை!·
முத்து

சாட்டை இங்கே ராமதாஸ் எங்கே ?

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!

2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!

5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!

இதையெல்லாம் உங்கள் டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!

இந்த சத்தியங்களை மிஞ்சும் வகையில் ராமதாஸ், இன்று ஓட்டுப்பொறுக்கி கட்சியாகவும், குடும்ப அரசியல்வாதியாகவும் ஆனது மட்டுமல்ல, போராட்டம் என்ற பெயரில் பணம் கொழுக்கும் பெரிய NGO ஆக மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்.

இவரையும், இவரைப் போல ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருகின்ற விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடைகள் ஆனாலும் சரி இவர்கள் ஆரம்பகட்ட வாழ்க்கை , பேசிய பேச்சுக்களை என்ன வென்று சற்று புரட்டினாலும் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என.
நன்றி இரும்பு

Tuesday, November 27, 2007

'நாட்டாமை' யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை

""நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார். அவரது இரசிகர்களால் "பச்சைத் தமிழர்' என்று அழைக்கப்படும் சரத்குமாரை கழிசடை என்றும் சுயநலவாதி என்றும் மதிப்பீடு செய்வதற்குக் காரணம் நமது விருப்பமல்ல; இந்த "சுப்ரீம் ஸ்டாரி'ன் வரலாறே அப்படித்தான் உள்ளது.

தான் விஜயகாந்த் போல திடீரென்று அரசியலுக்கு வரவில்லை எனவும், பதினைந்து ஆண்டுகளாக இரண்டு கழகங்களிலும் தீவிரமாகப் பணியாற்றியவன் என்றும் தனது கட்சியைத் தொடங்கியதற்கான தகுதிகளை சரத்குமார் முன்வைக்கிறார். உண்மையில் இவரது தீவிரப் பணி என்னவாக இருந்தது?

இளைஞனாக இருந்த போது பெங்களூரு தினகரனில் பணியாற்றினார். பின்னர், பம்பாய் சென்று ஆணழகன் ஆனார். பிறகு, சென்னை வந்து வட்டித்தொழில் செய்தார். சினிமாவுக்கும் பைனானைஸ் செய்தார். சினிமாத் தொடர்பு வந்த பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து, வில்லனாக அறிமுகம் ஆனவர், இறுதியில் கதாநாயகனானார். ""நாட்டாமை'' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு வந்த ஜெயலலிதா முன்பு இரட்டை இலை சட்டை போட்டு சேவகம் செய்தார்.

இந்த அடிமையிடம் அனுமதி பெறாமலேயே ஜெயா டி.வியில் ""நாட்டாமை'' படம் வெளியிடப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தி.மு.க.வில் இணைந்தார். இப்படி இவர் அரசியலில் இணைந்ததற்கும், பிரிந்ததற்கும் கொள்கையோ, மக்கள் நலனோ காரணமல்ல. பால்கனியிலிருந்து இரசிகர்களை மந்தைபோலப் பார்க்கும் ஒரு நட்சத்திர கதாநாயகனது திமிர்தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கி வைத்தது. இடையில், தங்களது பைனான்ஸ் தொழிலுக்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கி ராயப்பேட்டை நிதி நிறுவனத்தை திவாலாக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவராக இருந்தார். சொத்துப் பிரச்சினையாலும், நக்மா பின் சுற்றியதாலும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ராதிகாவின் கம்பெனிக்காக டி.வியில் ""கோடீஸ்வரன்'' நிகழ்ச்சியை நடத்தியபோது, ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. சரத்குமாரின் கடனை ராதிகா அடைப்பது எனவும், சரத்குமார், ராதிகா கம்பெனிக்காக திரைப்படத்தில் நடிப்பது என்றும் வர்த்தக ரீதியில் பேசிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நடிகர் என்ற முறையிலும், ராதிகாவுக்கு கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தாலும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்து, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல், தி.மு.க. தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் பின்புலமாக நாடார் சாதி பத்திரிகை அதிபர்களும், தொழிலதிபர்களும் சாதியை வைத்து சரத்குமாரை முன்நிறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தி.மு.க.விடமிருந்து இராஜ்ய சபா உறுப்பினர் பதவி சன்மானமாகக் கிடைக்கிறது.

ஆயினும் அவரது அதிகார வெறி அடங்கவில்லை. தனது இரசிகர்களை வைத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என சுவரொட்டி ஒட்டச் செய்தார். நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என அச்சாதி பிரமுகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார். ஏதோ ஒரு பொங்கல் விழாவில் தயாநிதி மாறன், நடிகர் விஜயை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டார். இதனால் தன்னைப் புறக்கணித்து விட்டதாகப் புரளி பேசினார். அறிவாலயத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவமரியாதை அடைந்ததால் தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகக் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பினார். எல்லாம் எலும்புத் துண்டு கிடைக்காதா என்ற நப்பாசைதான்.

ஆயினும் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் சாகும் வரை கலைஞரின் தலைமையில் செயல்படுவதாகவும், செத்தால்கூட தன் உடல் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப் படவேண்டும் என முழங்கினார். முழங்கிய எச்சில் உலருவதற்குள் 2006 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவில் இணைந்தார். இதற்காக சாராய மன்னன் விஜய மல்லையாவின் தனி விமானத்தில் பச்சைப்புடவை கட்டிய ராதிகாவுடன் மதுரை சென்று, பின்னர் ஆண்டிப்பட்டியில் பாசிச ஜெயாவிடம் போஸ் கொடுத்தவாறு சரணடைந்தார். இந்தச் சரணடைவு உண்மையில் ஒரு வர்த்தக பேரமாகும். இதன் வரவுசெலவு அம்சங்கள் சிங்கப்பூரில் சசிகலா நடராஜனுடன் பேசி முடிவு செய்யப்பட்டன. இதன்படி சரத்குமாருக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான தொகையும், ராடன் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் தொலைக்காட்சி நேரமும் உறுதி செய்யப்பட்டது.

ஆயினும் பேசியபடி எலும்புத் துண்டுகள் ஜெயலலிதாவால் தரப்படவில்லை. இதனால் கசமுசா ஏற்பட்டு ராதிகா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். சரத்குமாரும் தனக்கு அரசியல் செய்ய நேரமில்லை என்று யாரையும் குற்றம் சாட்டாமல் நாசூக்காக அ.தி.மு.கவிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதியில் நாடார் சாதி பிரபலங்கள், சரத்குமாரை வைத்து தனி ஆவர்த்தனம் தொடங்கினால் மற்ற கட்சிகளிடம் பேரம் நடத்த தோதாய் இருக்கும் என்று முடிவு செய்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டனர். நாடார் சாதி மக்களை விற்றுக் காசு பார்ப்பதற்கென்றே "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தொடங்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரிடமிருந்து வரும் ஒவ்வொரு அரசியல் ரீதியான அறிக்கையிலும் அவரது வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும். தற்போது சன் டி.வி.யில் ராடன் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், சன் டி.வி.யின் டி.டி.எச். ஒளிபரப்பை ஆதரித்தும் தி.மு.வைக் கண்டித்தும் சரத்குமார் அறிக்கை வெளியிடுகிறார்.

தற்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி பா.ஜ.க எழுப்பிய இராமர் பாலம் பிரச்சினையில் இந்து மதவெறியர்களின் அணியில் இருந்து கொண்டு, ""இந்துக்களைப் புண்படுத்தியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கொழுப்புடன் அறிக்கை விடுகிறார். "எதிர்காலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் மந்திரியாக மாட்டோமா' என்ற பேராசைதான்!

1966இல் காமராசரைக் கொலை செய்ய டெல்லியில் அவரது வீட்டுக்குத் தீ வைத்த இந்து மதவெறியர்களை ஆதரித்துக் கொண்டே, சாதி ஒட்டுக்களைக் கவர்வதற்காகவும், காசு வசூல் செய்து தின்னவும், காமராசருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக முழங்கும் இந்தப் பிழைப்புவாதி, தென்மாவட்ட மக்களுக்கும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் அப்பட்டமான எதிரி என்பதே உண்மை.

தனது சாதி மக்களை வைத்து உயர் பதவி அடையவேண்டும் என்று அரசியலில் குதிக்கும் சரத்குமார், உண்மையில் நாடார் மக்களுக்குச் செய்தது என்ன? தாமிரபரணி நீரை கொக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சி எடுப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு — அதில் கணிசமானோர் நாடார்கள் — இழைக்கப்படும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராக சரத்குமார் வாய்திறக்கவில்லை என்பது மட்டுமல்ல; சமீபத்தில் கோக்கில் பூச்சி மருந்து கலந்திருப்பது சந்தி சிரித்து அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா, ""கொக்கோ கோலா பாதுகாப்பானது''' என்று விளம்பரப் படத்தில் நடித்துச் சிபாரிசு செய்தார். நாடே காறி உமிழ்ந்தது. ஆனால், "நாட்டாமை'க்கு எச்சில் பிரச்சினை அல்ல; காசு மட்டும்தான் குறி.

சில்லறை வணிகர்களில் பெரும்பாலானோர் நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள். இவர்கள் வாழ்வை அழிக்க வந்துவிட்ட ரிலையன்ஸை எதிர்த்து வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தபோது, "நாட்டாமை' ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தன் சொந்த சாதி மக்கள் மீது இந்த வேடதாரி வைத்திருக்கும் நேசத்தின் இலட்சணம் இதுதான். தற்போது டைட்டானியம் ஆலை விவகாரத்திலும் ""இந்தியாவின் தொழில் தந்தையான டாடாவை நான் எதிர்க்கவில்லை. உரிய விலை கொடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை'' என்று தரகு வேலை பார்த்தார் இந்த வியாபாரி.

இத்தகைய பச்சையான சுயநல, சந்தர்ப்பவாத, துரோகிகள் கட்சி ஆரம்பிப்பதும், முதல்வராகப் போவதாகப் பேசித் திரிவதும் மக்களுக்கு மாபெரும் அவமானம். இந்த அவமானத்தைத் தீர்க்கவேண்டுமெனில் இத்தகைய பேர்வழிகள் அரசியல் என்று பேசினாலே அடித்துத் துரத்தவேண்டும் அல்லது முளைக்கும் போதே "மணிமண்டபம்' கட்டி விடவேண்டும். அதையும் குறிப்பாக நாடார் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களே செய்து முடித்தால், சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.

பச்சையப்பன்

Monday, November 26, 2007

"பிரெடரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள் "


மார்க்சிய ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸின் பிறந்தநாள்

நவம்பர் 28'
..
"நாடு மறுகாலனியாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் எதிரிகளை எதிர்கொண்டு போலிகளை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்க மார்க்சிய ஆசானின் பிறந்த நாளில் உறுதி எடுப்போம்."

நந்திகிராமம் : 'மார்க்சிஸ்டு'களின் கொலை வெறியாட்டம்


Saturday, November 24, 2007

உனக்கு செங்கொடி எதற்கு !ரிலையன்ஸ் எதிர்ப்பு ஒட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!

மே. வங்கத்தில் ஏகபோக ""பெண்டலூன்'' சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கி வைத்து "புரட்சி' செய்து வரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், இப்போது ""ரிலையன்ஸ் பிரஷ்'' காய்கறி அங்காடிகள் மற்றும் ரிலையன்ஸ் பேரங்காடிகளைத் தொடங்க கதவை அகலத் திறந்து விட்டுள்ளனர். கொல்கத்தா நகரின் 76 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ""பார்க் சர்க்கஸ்'' காய்கறி அங்காடியை ரிலையன்சுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்குக் கையளித்துள்ளனர். இதுதவிர ""பஜார்கள்'' என்று குறிப்பிடப்படும் நகரின் பல்வேறு அங்காடிகளையும் ரிலையன்சுக்குத் தாரை வார்த்துள்ளனர்.


இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு மாதத்தில் கொல்கத்தா நகரின் கிரிஷ்பார்க் போலீசு நிலையம் அருகே நந்தாமுல்லக் தெருவில், ரிலையன்ஸ் பிரஷ் காய்கறி அங்காடி தொடங்க ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தன. தங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக குமுறி எழுந்த சில்லறை வியாபாரிகள், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமையில் திரண்டு கடந்த ஆகஸ்டு 18ஆம் நாளன்று முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று அந்த ரிலையன்ஸ் கடையை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த "இடதுசாரி' போலீசு, சில்லறை வியாபாரிகள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து, ரிலையன்ஸ் கடையைப் பாதுகாக்க போலீசு பட்டாளத்தை குவித்துள்ளது.


சில்லறை வியாபாரிகளின் திடீர் போராட்டத்தைக் கண்டு பீதியடைந்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்காலிகமாக, காய்கறி அங்காடிகளைத் திறப்பதை நிறுத்தி வைத்துள்ளது. ""ஐயோ, அப்படிச் செய்யாதீர்கள்! ரிலையன்ஸ் கடைகளுக்கு இம்மாநில அரசு முழுப்பாதுகாப்பு அளிக்கும்'' என்று உறுதியளித்து அழைக்கிறார், மே.வங்க அரசுச் செயலரான அமித்கிரண்தேப். இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்டு கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ரிலையன்சுக்கு எதிராக சில்லறை வியாபாரிகளை அணிதிரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரான பினாய் கோனார், ""இடது முன்னணியிலுள்ள கட்சிகளே இப்படிச் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்; பெண்டலூன் கடைகள் திறக்கப்பட்டபோது எதிர்ப்பு காட்டாக இக்கட்சிகள், ரிலையன்சை மட்டும் இப்போது எதிர்ப்பது சந்தர்ப்பவாதமாகும்'' என்று பொரிந்து தள்ளுகிறார்.


ரிலையன்ஸ், பெண்டலூன் முதலான பேரங்காடிகளுக்குத் தாராள அனுமதி அளிப்பது மட்டுமல்ல; 1972ஆம் ஆண்டின் சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி தாராளமயமாக்கலுக்கு விசுவாச சேவை செய்யவும் மே.வங்க போலி கம்யூனிச அரசு தீர்மானித்துள்ளது. இச்சட்டத் திருத்தம், உள்நாட்டுவெளிநாட்டு பெருந் தொழில் நிறுவனங்கள் சில்லறை வணிகத்திலும், விவசாய நேரடிக் கொள்முதலிலும் ஈடுபட தாராள அனுமதி அளிப்பதோடு, ஒப்பந்த விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகளையும் அளித்துள்ளது; ஒப்பந்த விவசாயம் என்பது மிகப் பெரிய மோசடி என்று அம்பலப்பட்டுப் போயுள்ளதால், இத னைக் ""கூட்டுப் பங்கு விவசாயம்'' என்று பெயரை மாற்றி பித்தலாட்டம் செய்கிறது. இச்சட்டத் திருத்தம் மே.வங்க சட்டப் பேரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.


விவசாயத்தில் தாரளமயமாக்கலைத் திணித்து, விவசாய சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்த மே.வங்க அரசு முயற்சித்துவரும் வேளையில், ஏற்கெனவே இதனைச் செயல்படுத்தி வரும் 11 மாநிலங்களின் வரிசையில் 12வது மாநிலமாக உ.பி.யை இணைத்து, புதிய சந்தை சீர்திருத்தக் கொள்கையை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று அறிவித்தார், அம்மாநில முதல்வரான மாயாவதி. தமது வாழ்வைச் சூறையாட வந்துள்ள இக்கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து உ.பி. விவசாயிகளும் சிறுவணிகர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தின் போதுதான் லக்னோ மற்றும் ராஞ்சி நகரங்களில் ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.


இத்தருணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, மத்தியிலுள்ள காங்கிரசு கூட்டணி அரசு நெருக்கடிக்குள்ளாகி, ஆட்சி கவிழ்ந்து மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற ஊகமும் வதந்தியும் நிலவியது. அப்படி ஒருவேளை திடீரெனத் தேர்தல் வந்துவிட்டால், ஓட்டுப் பொறுக்குவதற்குத் தடையாக இக்கொள்கை அமைந்துவிடும் என்பதாலேயே திடீர் ""பல்டி''யடித்து இத்தாராளமயக் கொள்கையைச் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்து, ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார்; சாதகமான சூழலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.இந்நிலையில், போலி கம்யூனிஸ்டுகள் முதல் தலித்திய தலைவி மாயாவதி வரையிலான அனைத்து ஓட்டுக் கட்சி துரோகிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்காமல், விவசாயிகளும் சிறுவணிகர்களும் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது; தாராளமயமாக்கலை வீழ்த்தவும் முடியாது.


குமார்

Tuesday, November 20, 2007

கள்ளசாராயம், சட்டபூர்வ சாராய கடைகளை மூடிட போராடுவோம்!

டாஸ்மாக் கடையை இழுத்து மூடு!
கள்ள சாராயக்கடையை ஒழித்து கட்டு!Friday, November 16, 2007

அன்னிய முதலீடுகள்: பகற்கொள்ளையின் மறுபெயர்

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா? அதற்கு அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? அதற்கும் அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அன்னிய நேரடி முதலீடு.

ஒரு அன்னிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெருமுதலாளிகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (ஊஈஐ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்தப் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதில்லை. இந்திய வங்கிகள் மூலம் அன்னிய நிறுவனங்கள் இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்கின்றன.

""பிரிட்ஜ் ஸ்டோன்'' என்ற ஜப்பானிய டயர் கம்பெனி, அமெரிக்காவின் ""ஃபயர் ஸ்டோன்'' டயர் கம்பெனியை 1988இல் கைப்பற்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் உதவின. இதேபோலத்தான், அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க இந்திய வங்கிகள் 40%க்கு மேல் நிதியுதவி செய்தன. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, அதன் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை, இந்திய மக்களின் தலையில் சுமத்தப்பட்டது.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரால் சூறையாடியது என்ரான். இப்படித்தான் பல அன்னிய நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்கின்றனவே தவிர, அன்னிய நாட்டிலிருந்து கோடி கோடியாய் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதில்லை. ஆனாலும் இந்தப் பித்தலாட்டத்தை மூடி மறைத்துவிட்டு இதுவும் அன்னிய நேரடி முதலீடுதான் என்று தாராளமய தாசர்கள் துதிபாடி வரவேற்கின்றனர்.

""உலக வங்கியிடம் கடன் வாங்கினால் நாம் வட்டியோடு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது; ஆனால், அன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை நாம் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்தப் போவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?'' என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் நியாயவாதம் பேசுகின்றனர்.
ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில்நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் எனப் பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுச் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. மகாராஷ்டிராவில் என்ரான் நிறுவனம் தபோல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே திறன் கட்டணம் என்ற பெயரில் மாதமாதம் ரூ. 95 கோடி வீதம் விழுங்கியது. இப்படி பல்வேறு அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பல வடிவங்களில் உறிஞ்சுவதால் உள்நாட்டின் கையிருப்பான அன்னியச் செலாவணி வெகு விரைவில் கரைந்து விடுகிறது. இவ்வாறு காலியாக்கப்படும் அன்னியச் செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமாக இருந்தால், அது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?

ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு இதைத்தான் செய்துள்ளது. போஸ்ட்வானா நாட்டில் 19952003 காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு முதலான வடிவங்களில் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்! காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல; தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டிலும் இதுதான் நடந்தது. அந்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு பெருகப் பெருக, அந்நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ. 148 கோடியாக இருந்தது. 1998இலோ இது ரூ. 28,000 கோடியாக உயர்ந்தது. (ஆதாரம்: க்Nஇகூஅஈ அறிக்கை, 2005)

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்களால் இந்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட, அந்நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டணம், மூலப்பொருள் இறக்குமதி முதலானவற்றுக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலாவணியே அதிகமாக உள்ளது. இவ்வாறு நாட்டின் செலாவணி இருப்பைக் கரைக்கும் நிதிச்சேவை, தொலைத் தொடர்பு, அடிக்கட்டுமான துறை, மின்சக்தி, சில்லறை வணிகம் முதலான துறைகளிலேயே பெருமளவு அன்னிய மூலதனம் நுழைகிறது.

அன்னியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அன்னிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டில் முதலீடு செய்த மூலதனத்தையே அவை படிப்படியாகக் கடத்திச் சென்று விடுகின்றன. மேலும், இத்தகைய மோசடி கணக்கு வழக்குகளால் உலகெங்கும் பல நாடுகளில் கோடிகோடியாய் வரி இழப்பையும் ஏற்படுத்துகின்றன. பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் மோசடி தில்லுமுல்லு கணக்கு வழக்குகளால் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1,20,000 கோடிக்கு மேல் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு புலம்புகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் முதலீடு செய்தாலும், அந்நாட்டு அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்கவும் ஏய்க்கவும் தாங்கள் அடைந்த இலாபத்தைக் குறைத்துக் காட்டுவதென்பது இன்னுமொரு மோசடி உத்தி. உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனமான எக்சான், தென்னமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்நிறுவனத்துக்கு அங்கே சல்லிக் காசு கூட இலாபம் கிடைக்கவில்லையாம்! அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் நடத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கக் கூடாது. அது, சிலி நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாவதைத் தடுத்து விடும்!
இவை ஒருபுறமிருக்கட்டும். நேரடி அன்னிய முதலீடுகள் புதிதாக எந்தத் தொழிலையும் உருவாக்காமல், ஏற்கெனவே ஒருநாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றி பெயரை மட்டும் மாற்றிக் கொள்கின்றன. அல்லது ஒரு நாட்டில் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களை முற்றாக அழித்து விட்டு தனது தொழில் ஆதிக்கத்தை நிறுவுகின்றன. தமிழகத்தில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர் முதலான உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஆதிக்கம் செய்யும் கோக்கும் பெப்சியுமே இதற்குச் சான்று கூறப் போதுமானது.

அன்னிய முதலீடுகளால் வேலை வாய்ப்புப் பெருகும் என்பது அப்பட்டமான புளுகைத் தவிர வேறில்லை. ஏனெனில், இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவன முதலீடுகளாக பங்குச் சந்தை சூதாட்ட முதலீடுகளாகவே இருப்பதால், பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்க அடிப்படையே இல்லை. அடுத்து, சேவைத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்தக்காரர்கள் மூலமே வேலைகளை முடித்துக் கொள்கின்றன. வேலை வாய்ப்பை உருவாக்குவதைவிட, தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றியும் கைமாற்றியும், ஆட்குறைப்பு செய்தும் இலாபத்தைச் சுருட்டுவதிலேயே அன்னிய நிறுவனங்கள் குறியாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால், பல்லாயிரம் கோடிக்கும் மேல் அன்னிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்தும் கூட, அவை உருவாக்கியுள்ள வேலை வாய்ப்பு மிக அற்பமானதுதான் என்ற நடைமுறை உண்மையே இதை நிரூபித்துக் காட்டுகிறது.

""அதெல்லாம் இருக்கட்டும்; மும்பை பங்குச் சந்தை 15,000 புள்ளிகளைத் தாண்டி புதிய உயரத்துக்குத் தாவுகிறது பாருங்கள். அன்னிய முதலீடுகளால் இந்தியப் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது பாருங்கள்'' என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் உபதேசிக்கின்றனர்.

ஆனால், அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்திலும் ஆந்திராவிலும் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டிக் கொண்டிருக்கிறது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 3000க்கும் மேல் சென்றுவிட்டது.

இந்த உண்மை நிலவரங்களையெல்லாம் மூடிமறைத்துவிட்டு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசாங்கங்களும் அன்னிய முதலீடுகளை போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கின்றன. அன்னிய முதலீடுகளால் வளர்ச்சி பெருகிறது; கேழ்வரகில் நெய் வடிகிறது என்று கோயபல்சு பாணியில் புளுகி வருகின்றன. நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளி விட்டுள்ள அன்னிய முதலீடுகளையும் அதன் எடுபிடி ஆட்சியாளர்களையும் இன்னமும் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.

· தனபால்

Thursday, November 15, 2007

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

""இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொரு முறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். அனைத்துக்கும் மேலாக பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் ""யாரோ, எவரோ எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல். ""பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக ""கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, ""ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.

நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.
நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்:watch the video: http://www.ibnlive. com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே ""தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள் தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'', என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், ""நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், "" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, ""இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். ""கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கிறார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை.

""இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, ""உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி'கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று ""அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ""நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ ""அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!· சூரியன்

Saturday, November 10, 2007

ஆட்சியாளர்களை மாற்றினால் அரசை மாற்ற முடியுமா?

நன்றி இரும்பு


  1. சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டோடு 'வளர்ச்சி' க்கு என்று சொல்லி ஜெட் வேகத்தில் நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை சுட்டு கொல்லுகின்றனர்.

  2. கோடிக்கணக்கான மக்கள் இறுதிக்கட்ட வாழ்வாதாரமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட சில்லறை வணிகத்தில் இன்று ரிலையண்ஸ், டாடா, வால்மார்ட் போன்ற பெரிய கம்பெனிகளை அனுமதித்து அவர்களை குப்பைத்தொட்டியில் வீசுவது போல வீசுகின்றனர்.

3.

5 லட்சம் கோடிக்கு அணுசக்தி ஒப்பந்தம் என்கிற வழியில் அடிமைசரத்துகளுடன் வெளிப்படையாக தெரியக் கூடிய 123 ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கின்றனர். இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்தாக வரும் இதனை கடந்த BJP ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று நிறைவேற்றக்கூடிய நிலையில் வந்துவிட்டார்கள்.

அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' , பாதுகாப்பு உணர்வுடைய நாட்டிலேயே 2 1/2 சதவீதம் தான் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் உள்ளது, ஆனால் இவர்கள் நம்ம நாட்டில் இருக்கின்ற 3 சதவீதத்தை 7 ஆக மாற்ற போகின்றனராம். அதுவும் 2020-ல் தான் கிடைக்குமாம். ஆனால் நம் நாட்டிலே அதிகமாக உள்ள தோரியத்தை செறிவூட்டி மின்சாரம் கிடைக்க செய்வதில் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதில் வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் மின்சாரத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று உடனடியாக 123 இல்லைன்னா நாடே இருட்டாகி விடும் என்கிற சூழ்நிலையும் இல்லை என்ற இரண்டு அம்சங்களையும் தவிர்த்து விட்டு கூட பார்ப்போம்.

3 யை 7 ஆக மாத்துவதை அமெரிக்கா போன்ற 'முன்னேறிய' நாட்டில் செய்வதற்கே அந்நாட்டு மக்கள் ஒத்துக்குறது இல்லைங்கிற சூழ்நிலையில் அதை இந்தியா போன்ற ஏழை நாட்டில், பாதுக்காப்பு உணர்வுணா என்னவென்று தெரியாத நிலையில் ஆகப் பெரும்பாண்மை மக்களை வைத்து உள்ள நாட்டில் கொண்டு வரப்போறேன் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம். உலகம் முழுவதும் விலை போகாத இந்த உலைகள் மூலம் 5 லட்சம் கோடி கிடைக்கிறது என்றால் விடுவார்களா..

இது வெறும் 3 T0 7 என்கின்ற விஷயத்துக்கும் மட்டும். ஆனால் இவர்கள் சொல்கின்ற இராணுவ ஒப்பந்தத்தை எடுத்து கொண்டால் அதில் இருக்கின்ற அடிமைச் சரத்துகளை பற்றி நினைத்துப்பார்க்க கூட முடியாத அளவுக்கு, வெளிப்படையாகவே இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கி உள்ளார்கள்.

4.

அடுத்து நாட்டுல 83 கோடி பேருக்கு தினமும் ரூ20 சம்பளம் என்கிற லட்சணத்தில் ஆக்கிபுட்டு இவர்கள் சொல்கின்ற GTP 9 சதவிதம், பங்குசந்தை 20,000 புள்ளிகளை தாண்டி பறக்கிறது போன்றவை. ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி என்கிற ஒருத்தன் 2 1/2 லட்சம் கோடியை கொள்ளையடிக்க செய்து உலகின் நம்பர் ஒன் பணக்காரனாக்க தாங்கள் செய்த சாதனையும் சொல்லி 'நாடு வளர்ச்சி' அடைகிறது என்கிறார்கள்


இப்ப மேலே சொல்லியிருக்கின்ற சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை- தரகுமுதலாளிகளை அனுமதிப்பது, அமெரிக்க - இந்தியா இராணுவ ஒப்பந்தம் & 123 அக்ரிமெண்ட், தேசிய வளர்ச்சி என்கிற மோசடி பற்றி எல்லா ஆட்சியாளர்கள் ஓட்டுப்பொறுக்கிகள் என்ன கருதுகின்றனர். ஒன்று மின்சாரம் தேவை, வேலைவாய்ப்பு என்ற இரண்டு வார்த்தை கொண்டு சத்த்த்த்த்த்ததததததமாககககககக ஆதரவு குரல் அல்லது மெளனம் இது இரண்டும் தான் பதிலாக வருகிறது.இதனை கொண்டு தான் பதிவின் தலைப்பை விளக்க போகிறோம்.

ஆதரவு குரலில் இரண்டு வகையாக இருக்கின்றனர். ஒன்று ஆட்சியில் இருந்தவர்கள் -இருக்கின்றவர்களுடைய நேரடி ஆதரவு. மற்றொன்று கூட்டணி சுகத்தில் இருந்தவர்கள் - இருக்கின்றவர்களுடைய மறைமுக ஆதரவு. இந்த இரண்டு பேருக்கும் மேலே உள்ள விசயங்களை பற்றி தெட்ட தெளிவாக தெரியும். இதுவரை ஆட்சிக்கு வராதவர்களுக்கும் , விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடை அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இதை பற்றி தெரியாது.

அப்ப எதிர்ப்பு என்பதை பேசாத, அரை-குறையாக பேசுவது மாதிரி, தெரியாது என்கிற இந்த லிஸ்டை விரிவாக பார்த்தா புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும். இதுல முக்கியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டியது இதில் பேசாத, அரை-குறை பேசுவது மாதிரி இரண்டு பேருமே ஜான் பெர்க்கின்ஸ் (பொருளாதார அடியாள்) வரைக்கும் தெரிந்த ஆட்சியாளர்கள், பழம் தின்னவர்கள். என்ன வித்தியாசம் என்றால் கொட்டை போட்டவர், போடாதவர் என்பதுதான்.

முதல வருகிறவர்களை பார்ப்போம், பல்லாயிரக்கணக்கான கோடியினை இப்படி நாட்டை விற்க துணைபோய் சம்பாதித்த இவர்கள் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. எப்படி பேசுவார்கள் என்றால் நாடு வளர்ச்சியடைகிறது, போய்கொண்டு இருக்கிறது, இளைஞர்களே தியாகம் செய்ய வாருங்கள், ஒளிர்கிறது இந்தியா, தீவிரவாதத்தை நாங்கள் அடக்கியது போல இவர்கள் அடக்குவது இல்லை என்று ஆளே இல்லாத மேடையில் பேசுவது போல பேட்டி கொடுப்பார்கள். என்னா இப்ப இவர்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் 100% பிழைப்புவாதிகள்.

இந்த லிஸ்டில் IMF மண்மோகன், ENGLAND சோனியா, கலவர நாயகன் அத்வானி, எட்டப்பன் வாஜ்பாய், பன்னாட்டு நிறுவன வக்கில் சிதம்பரம் & சன், திமுக டிரஸ்ட் ஓனர் , அம்மா டிரஸ்ட் ஓனரம்மா , ஊழல் லாலு, ஹெரிடேஜ் சந்திரபாபு, இன்னும் காங்கிரஸ் அரச பரம்பரை, பா ஜ க அன் கோ வை சேர்ந்த ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்து இரண்டாவதாக முழுமையாக நாட்டை விற்று கொள்ளையடிக்காதவர்கள், கூட்டணி சுகத்தில் மட்டும், சிலர் சில மாநிலங்களில் ஆட்சி என இருக்கின்றவர்கள். இவர்களிலும் எவரும் இம்மியளும் இதை பற்றி எதிர்த்து பேசுவது இல்லை. இவர்கள் எப்படி பேசுவார்கள் என்றால் "ஆகக அதெல்லாம் முடியாது", மாற்றுங்க இதை, தள்ளி வைங்க இதை, மக்களே இவர்கள் கொள்கையினை நாம் எதிர்த்து போராடனும், துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது, நக்சல் சதி, நாடு தழுவிய போராட்டம், நீதியின் குரல் ஒலிக்கட்டும், மக்கள் புரட்சி வெடிக்கட்டும், தமிழ்நாடு 2020 ( இந்தியா 2020 வீட்டுக்குப் போன பின்) என்றும் முக்கியமாக எங்களால் "இவர்கள் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றும் அடிக்கடி பேட்டியும். அறிவிப்புகளும் செய்வார்கள்.

என்னா இப்ப இவர்கள் கட்சியில் பிழைப்புவாதிகளும், சரியான கட்சி என நம்பி சிலரும் இருக்கின்றனர்.தெரியாதவர்களுக்கு தெரியவரும் போது சிலர் சரியான புரட்சிக்கர அரசியலுக்கு வருகின்றனர் அல்லது அதே பிழைப்புவாத அரசியலில் மூழ்கிவிடுகின்றனர்.

இந்த லிஸ்டில் போலிக் கம்யூனிஸ்டுகள், ராமதாஸ் குடும்பம், அரசியல் அசிங்கம் வைகோ,வாழும் அம்பேத்கார் திருமா, மாயாவதி மாமி............ போன்றவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்து மூன்றாவதாக பணம் மற்றும் சாதி அடிப்படையில் கட்சி ஆரம்பித்து இன்னும் ஆட்சிக்கே வராதவர்கள், கழிசடையாக இருந்து சொத்து சேர்த்ததை வைத்து கட்சி உருவாக்கி எம்.ஜி.ஆர் போன்ற பேண்டஸி அரசியலை மட்டும் வைத்தே இன்றும் மக்களை மடையர்களாக்க களத்தில் இறங்கி இருப்பவர்கள். மேலே இருக்கின்ற விஷயத்துக்கே போக மாட்டார்கள்.

இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் என்றால் 'ஜிபூம்பா' ஸ்டையில இந்தியாவை மாத்திடலாம் என்பதும், நாங்க வந்தா திருந்திடும் என்பதும் தான். எப்படி இப்படி கேணத்தனமாக யோசிக்கிறார்கள் என்கிறீர்களா, அடிப்படையே எதுவும் தெரியாது என்கிற காரணம்தான்.

இந்த லிஸ்டில் கார்த்திக் தேவர், கருப்பு காவி விஜயகாந்த், சமத்துவ நாடார் சரத்குமார், புதிய நீதிக் கட்சி சங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
இந்த மூன்று லிஸ்டில் இரண்டாவதாக நீதி, போராட்டம் என்கிறவர்கள் ஒரு கட்டத்தில் சொத்து பல்லாயிரத்தை தாண்டியதும் அதாவது ஆட்சியினை முழுமையாக அனுபவிச்ச பிறகு முதல் லிஸ்டில் இருக்கின்றவர்கள் மாதிரி மாறிவிடுகிறார்கள்.

மூன்றாவதாக எதுவும் விஷயம் தெரியாமல் இருந்தவர்கள் வளர்ச்சியடையந்த உடன் 'ஜிபூம்பா' இனி பலிக்காது என்று இரண்டாவது லிஸ்டில் இருக்கின்றவர்களுடைய நீதி, போராட்டம், தமிழ் என தங்கள் பாதையினை மாற்றி கொள்கின்றனர்.

இப்படி எல்லா ஓட்டுக் கட்சிகளையும் இந்த மூன்று லிஸ்டில் முழுவதும் வகைப்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். மக்களுக்கான எதையுமே இவர்கள் செய்வதும் இல்லை, செய்யவும் முடியாது. ஏனென்றால் இந்த அமைப்பே தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த லிஸ்டில் உள்ள யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செயல்படுவது இந்தப் தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்குத்தான்.

அப்ப இந்த அமைப்பில் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. தரகு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் இருக்கக்கூடிய இந்த அமைப்பையே தூக்கியெரிய வேண்டும், அப்போதுதான் பெரும்பான்மையான மக்களின் நலன்கொண்ட ஒரு அரசை அமைக்கமுடியும்.
...
நன்றி இரும்பு

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!

""ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''

— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது. இதனை வெறுப்பில் விழைந்த வசவாக எடுத்துக் கொள்ள முடியாது. மும்பய் மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட விதத்தையும்; மும்பய் மற்றும் கோவை கலவர சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே, அவ்வழக்குகளில் நீதி மறுக்கப்பட்டு விடுவதையும் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜாகீர் உசேனின் விமர்சனத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுத்துவிட முடியாது.

1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும்; 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மதானி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

""தடா''சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் கூட , நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டு பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலோ, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 168 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. மதானிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டுக்கால ""தண்டனையை''அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில், தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

மதானி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போல பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.
ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், ""இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக'' "கண்டுபிடித்து' தீர்ப்பளித்தது. ""இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்'' என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ""இந் நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக'' எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலீசும், நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.
கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நட வடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின் படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும்; எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

""இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்து போலீசுக்காரர் சில முசுலீம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; இந்து தீவிரவாதிகளும் போலீசும் கைகோர்த்து கொண்டு நடத்திய வன்முறை'' என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முசுலீம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, சிறப்பு நீதிமன்றம் கோவை கலவரத்தைப் பற்றி வாய் திறக்கவே மறுத்துவிட்டது.

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே, ""அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை'' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. ""குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ""உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக''க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாபை சாட்சி சொல்ல போலீசார் அழைத்து வந்தனர். முனாப் நீதிமன்றத்திலேயே, ""தனது அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீசார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை'' அம்பலப்படுத்தியதோடு, போலீசார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.

விசாரணையின் பொழுது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறிய பொழுது, போலீசாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உதவினர். நீதிபதியோ, போலீசாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

குற்றவாளிகளைச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழும், சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் காட்டியிருக்கின்றனர். போலீசாரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும் கூட, சாட்சிகளை போலீசார் தயார்படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. ""இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரை போலீசில் அன்றே ஒப்படைத்ததையும்; போலீசார் இவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16..02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும்; இந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும்; இவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும்'' எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முசுலீம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு; சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் குண்டு வைத்த தீவிரவாதிகளை நேரில் பார்த்த சாட்சியாக விஜயகுமார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், பல இடங்களில் குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை நேரில் பார்த்த சாட்சிகளாக நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், ""இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்'' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கின் மிக முக்கியமானகுற்றவாளியாக முன் நிறுத்தப்பட்டவர் மதானி. அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீசாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீசு தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள் அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின் பொழுதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, இவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் கூட மறுத்துவிட்டது.

தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சங்கராச்சாரிக்குச் சிறைச்சாலையில் தனிச்சமையல் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த மதானிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'', ""இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு'' என இந்திய அரசியல் சாசனம் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இது ஒரு மோசடி என்பதை நிரூபிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீதிமன்றங்களே அந்தத் திருப்பணியைச் செய்து விடுகின்றன.

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றி தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முசுலீம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.

18 முசுலீம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட ஏறத்தாழ 100 வழக்குகள், போதிய சாட்சியம் இல்லாததால் விசாரிக்க முடியாது எனக் கூறிக் கைவிடப்பட்டது நம்முன் எத்தனை பேருக்குத் தெரியும்? போலீசுக்கு மாமூல் கொடுக்க மறுத்து வந்த முசுலீம்களின் வியாபார மேலாண்மை தகர்க்கப்பட்டதையும்; குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டிருக்கும் பல முசுலீம்கள் நடைபாதை வியாபாரிகள் என்பதையும் எந்த ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன?

மும்பய் வெடிகுண்டு தாக்குதலின் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம் ""ஓடி ஒளிந்து வாழும்'' குற்றவாளியாக ""தடா'' நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மும்பய் கலவரத்தின் தளபதியாகச் செயல்பட்டதாக, அக்கலவரத்தை விசாரித்த சீறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சிவசேனாதலைவர் பால் தாக்கரேயை, மும்பய் நீதிமன்றமே வழக்குகளில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. அவர் கலவரத்தைத் தூண்டிவிடவில்லை என காங்கிரசு கூட்டணி ஆட்சியே நற்சான்றிதழ் வழங்கிவிட்டது. சிறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ் சுமத்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த மதுகர் சர்போத்தர், பா.ஜ.க.வைச் சேர்ந்த கோபிநாத் முண்டே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மீது சட்டத்தின் சுண்டு விரல் கூட படவில்லை.

கலவரத்தின் பொழுது ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு புகுந்து, அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முசுலீம்களைச் சுட்டுக் கொன்ற நிகில் காப்ஸே என்ற போலீசு துறை ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்ல. மாறாக, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதுகுத் தண்டில் சுடப்பட்ட ஃபருக் மாப்கர், கலவரத்தில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிற்காக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு வந்து போகிறார்.

சுலைமான் பேக்கரி எனும் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கு பாதுகாப்பிற்காகப் பதுங்கியிருந்த முசுலீம்களின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டு, ஆறு பேரைக் கொன்ற ஆர்.டி.தியாகி என்ற போலீசு அதிகாரி, நிரபராதி என விடுவிக்கப்பட்டதோடு, அவர் பதவியில் இருந்து நிம்மதியாக ஓய்வும் பெற்றும் விட்டார்.

சிறீகிருஷ்ணா கமிசன் நிகில் காப்ஸே, ஆர்.டி. தியாகி உள்ளிட்டு 31 போலீசு அதிகாரிகளைக் குற்றவாளிகள் என ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளது. எனினும், அக்காக்கி சட்டை கிரிமினல்கள், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மட்டுமல்ல, காங்.கூட்டணி ஆட்சியிலும் வழக்குவிசாரணை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2,300 வழக்குகளில் 1,371 வழக்குகள், மதச்சார்பற்ற காங்கிரசு ஆட்சியில்தான், கலவரம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, போதிய சாட்சியம் இல்லை என்ற காரணத்தால் கைவிடப்பட்டன.

மகாராஷ்டிரம் இந்து மதவெறியர்களின் செல்வாக்கு மிக்க மாநிலம் என்றாலும், மும்பய் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பையடுத்து, மும்பய் கலவர வழக்குகளிலும் நீதி வேண்டும் எனப் பல்வேறு முசுலீம் அமைப்புகளும், சனநாயக சக்திகளும் குரல் எழுப்பி வருகின்றன. தனது மதச்சார்பற்ற முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரசு கூட்டணி ஆட்சி, கலவரம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆராய கமிட்டியொன்றை நியமிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஆனால், கோவை கலவரம் தொடர்பாக இப்படிப்பட்ட வெற்று அறிவிப்பை வெளியிடக்கூட "சமூக நீதிக் காவலர்' மு.க.வின் ஆட்சி தயாராக இல்லை; தமிழகமும் வாய்மூடி மௌனம் காக்கிறது. இந்த மௌனத்தை உடைக்காமல், இந்து மதவெறியர்களை வீழ்த்த முடியாது; தண்டிக்கவும் முடியாது!
· வசந்தன்

Tuesday, November 6, 2007

நவம்பர் புரட்சிநாள் வாழ்த்துக்கள் !


முதலாளித்துவ மீட்சி யாருக்கானது என்பதற்கு வறுமையும், போர்களுமே சாட்சி !

ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி !அபு கிரைப் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி !


சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:சீழ் பிடித்து நாறும் இரணங்கள்

பாலஸ்தீனப் பிளவும் அமெரிக்கச் சதியும்

'வளர்ச்சி"யின் சீனா அவலத்தில் தொழிலாளர்கள்

சதாம் படுகொலை!அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்

ஈழம் : தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்!அனாதைகளாகும் தமிழ் மக்கள்!

காஷ்மீர்:இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!

தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

பஞ்சாப்:பறிபோகும் விளைநிலங்கள் பரிதவிக்கும் விவசாயிகள்

உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் : மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது

திரவ வெடிகுண்டு பீதிஅமெரிக்க பிரிட்டிஷ் கோயபல்சுகளின் கூத்து

லெபனான் :அமெரிக்கா-இஸ்ரேலிய பயங்கரவாதம் போருக்குப் பின்னே மேலாதிக்கம்

கோல் போடாமலேயே வென்றது அடிடாஸ்

83 கோடி மக்களுக்கு தினசரி வருமானம் ரூபாய் 20..

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்:அடிமைக்கு எதற்கு அணு ஆயுதம்?..இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்:அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது..

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!..

எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே... ..

கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!..

நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண் ..

சில்லறை வணிகம் : மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா..

விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை..பருத்தி விவசாயிகள் - பரிசோதனைச்சாலை எலிகளா? ..

வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SENs) இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு!..கருணாநிதி – அன்புமணி – புத்ததேவ் 'கோக்"கின் புதிய அடியாட்கள்..

பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா? ..


Saturday, November 3, 2007

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சிக் கனலை மூட்டுவோம்!!

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக் கனலை மூட்டுவோம்!!

1917 நவ 7.

"உழைக்கும் மக்களால் வாழவே முடியாது,
இதில் ஒரு நாட்டை ஆளமுடியுமா?"என்று இறுமாப்புடன்
ஏளனம் பேசியது முதலாளித்துவம்.

உழைக்கும் மக்களால் மட்டுமே
இழிவான தனியுடைமைச் சுரண்டல் இல்லாமல்
ஒரு நாட்டை ஆளமுடியும்
என்ற உண்மையை எடுத்துக் காட்டியது கம்யூனிசம்.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரங்களும் என்ற
உயரிய நாகரிகத்தை - ஒரு சோசலிச அரசை
உலகுக்கு அறிவித்தது ரசியப்புரட்சி.

ரசியாவிலும், சீனாவிலும் - முதலாளித்துவ மீட்சி,
ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்கக் கந்தகம்.
ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும் நேரடியாக நுழையும்
அமெரிக்கத் தலைமையிலான இராணுவக் கம்பெனிகள்

123 லெ·ப்ட் ரைட்
ஒப்பந்தத்தைத் திணித்து
அரைகுறை இறையாண்மையையும் பறித்து
இந்தியாவை அடிமையாக்கி
ஆசிய அடியாளாக்கவும் துடிக்கிறது
உலக ரவுடி அமெரிக்கா

ஏனைய நாடுகளையும், இந்தியாவையும் மறுகாலனியாக்கும்
ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டுக் கம்பெனிகள்;
விவசாயத்தைச் சின்னாபின்னமாக்கி
அடிமாட்டு விலைக்கு நம் நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளும்
அந்நியக் கம்பெனிகளுக்கே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

விளைப்பொருளுக்கு விலையின்றி வேலை வாய்ப்புக்கு வழியின்றி
அலைக்கழிக்கப்படும் நமக்கும் நம் வாரிசுகளுக்கும்
மலேசிய நீல் மெட்டலின் குப்பைத் தொட்டிகள்.
சீரழிய வழி நெடுக டாஸ்மார்க் புட்டிகள்.

வர்க்க உணர்வை சீரழிக்க
பார்ப்பன இந்துமதவெறிப்
பாசிஸ்டுகளின் இராம அவதாரங்கள்
உழைக்காமல் உடலை வளர்க்கும்
ஊதாரிச் சாமியார்களின் ஆன்மீகப் போதனைகள்.

ஆற்றுநீரும், ஆழ்கடலும், நீள் மலையும்
காற்று மண்டலமும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
அவன் கார் கம்பெனி கருக்கிவிடும்
தூசு மண்டலமும் தொற்று நோயும் நமக்கு.

பன்னாட்டுக் கம்பெனிகள் காட்டுவதைப் படித்து
பன்னாட்டுக் கம்பெனிகள் நீட்டுவதைக் குடித்து
இந்நாட்டுக் குடிமகன் போல் என்னமாய் நடித்து
போதும்...... இன்றோடு இந்தக் கேவலத்தை நிறுத்து!

அந்நியனுக்குப் பண்ணைவேலை செய்யும்
ஒரு கால் செண்டர் வேலையா உன் கனவு?
நம்முடையது இந்த நாடு, நமக்கெதற்கு அந்நியக் கம்பெனிகள்?

நாடு நம்முடையது என்றால்....
உழைக்கும் மக்களுக்கே அதிகாரம் என்றால்....
எண்ணிப்பாருங்கள்.... இது தான் உண்மையான மகிழ்ச்சி!
இனைந்து செயலாற்ற வாருங்கள்,
இங்கும் நடக்கும் ஒரு நவம்பர் புரட்சி!

பார்ப்பன இந்து மதவெறிப்
பாசிசத்தை வேரறுப்போம்!
தமிழகத்தில் வேரூன்ற அனுமதியோம்!

ஆபாச, நுகர்வு வெறிக் கலாச்சாரத்தைத்
தூக்கி எறிவோம்!

அருவெறுப்பான பிழைப்புவாதக்
கண்ணோட்டத்தைத் துடைத்தெறிவோம்;
அனைத்து உழைக்கும் மக்களுக்கான
புரட்சி அரசியலைப் படைத்திடுவோம்!

மறு காலனியாக்கத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

[மக்கள் கலை இலக்கியக் கழகம் - நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு வெளியிட்ட நோட்டீஸ் -ல் இருந்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது