Friday, June 29, 2007

அந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்லையா?




வீட்டில் புரையேறும்போதும்
யாரோ நினைப்பதாய்
உறவு பாராட்டும் உள்ளங்களே
வெளியே சிலர் போராடும்போது
நீங்கள் உறவாக நினைத்ததுண்டா?

தனது நெல்லுக்கும் கரும்புக்கும்
நியாயா விலை கேட்கிறான் விவசாயி
அவனது தற்கொலைக்கான மருந்தையும்
அந்நியக் கம்பெனிகளிடம்
வாங்கச் சொல்லி
வர்த்தகச் சட்டம் போடுகிறது அரசு.

கடனும் வட்டியுமே
கண்ணிகைகள் ஆனதனால்
தூக்கம் தொலைந்து
கண்ணின் நிறம்மாறிக்
கருஞ்சிவப்பு ஆனாலும்
அந்தக் கண்களின் ஈரத்தையும்
கரும்பின் கால்களுக்குத் தந்து நிதம்
பச்சையம் மாறாமல் பார்த்துக்
கொள்வான்
கரும்பு விவசாயி.

சமைந்து விட்டதற்கான சமிக்ஞையை
தோகைத் தாவணி அசைவிற்காட்டும்
கருப்பங்கொலை.

கட்டிக் கொள்ள
கவர்மெண்டும் தயாரில்லை
கட்டுப்படியான விலைக்குத்
தரகர்களும் வருவதில்லை.

கணுக் கணுவாய்
காயும் இளமை கண்டு சகிக்காமல்
கோதிவிட்ட தன் கைகளாலேயே
கொள்ளி வைக்கிறான் விவசாயி
அந்த நெருப்பின் அவலம்
உங்கள்
நெஞ்சத்தைப் பற்றவில்லையா?
..
பூ லாரி தூக்கிக் கோவிலுக்குப்
போகையிலும் "நீ வாயும் வயிறுமா இருக்குறவ.
இங்ககொடு"
எனத் தான் வாங்கும் உள்ளங்களே.
..
அதோ...தார்வாளியோடு
நடுரோட்டில் ஒருத்தி
அவளது கர்ப்பவெப்பத்தின்
காங்கல் தாங்காமல்
கருங்கல் ஜல்லியும் இடிந்து நொறுங்கும்
நீங்கள் ?
..
எத்தனைச் சாலைகள் போட்டாலும்
ஊர்போய்ச் சேருவதில்லை
ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை.
கால் இடித்தாலும்
"கட்டைல போவ!
ரோடு போட்டுவச்சானுவ"
என்று பொதுவாக திட்டும் உங்களுக்கு
..
"சாலைப் பணியாளர்களை நிரந்தரமாக்கு
தனியாராக்காதே" என்று
கொதிக்கும் தாரிலிருந்து
ஒலிக்கும் அவர்களது குரல்
உறவில்லையா?
..
ஐஸ் வச்ச மீனு நல்லாயிருக்காது
அப்படியே வேணுமென்று
ஆசைப்படுவோரே.
உப்புக்காற்றை உள்ளே வாங்கி
வெறும் பீடி நெருப்ப்பில் இரவைத் தீய்த்து
ஆழ்கடலெங்கும் அலசினாலும்,
அந்நியக்கப்பல் மேய்ந்து விடுவதால்
வலைக்குள் வறுமையே அகப்படும்
நித்தம்
..
ஐசில் வைத்துப் பாதுகாக்க
அவர்களுக்கு வசதியில்லை
அதோ அப்படியே கிடக்கிறது
மீனவன் பிணம்
ருசித்துத் தின்ற சொந்தங்களே
என்ன? இதையும்
ரசித்துப் பார்க்க இயலுமா?
..
மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன் என்பதை
மனப்பாடப் பகுதியில் வைத்து
மரியாதை செய்யும் சுற்றத்தீரே!
இந்த மாகணத்துக்கே போர்வை தந்த
ஈரோடு, பவானி நெசவாளர்கள்
இப்போது அரசின்
இறக்குமதிக் கொள்கைக்கெதிராய்
வீதியிலே!
..
என்ன மயிருக்குடா போராட்டம் என
மிரட்டும் தடைச் சட்டம்.
..
உயிரிழை உருகும்
அந்த நெசவாளர்களுக்கும்
உங்கள் மானத்திற்கும்
உறவில்லையா, சொல்லுங்கள்?
..
மின்சாரக் கட்டுமானப் பணியின் போது
காக்கை குருவிகள் போல
கம்பிகளில் அடிபட்டுச் செத்துப்போன
தொழிலாளர்களின் சாவை விடக்
கொடூரமானது
அதை
அந்நியன் ஆக்கிரமிக்குபோது
அசையாமல்
பார்த்துக் கொண்டிருப்பவர்களின்
வாழ்வு.
..
உங்கள் இருப்புப் பாதையின்
தாதுப் பொருள்
அதற்காக இறந்த தொழிலாளர்களின்
தண்டுவடம் என்றால் தப்பில்லை.

தேசத்தின் மிகப்பெரிய துயரம்
ஒருவேளை சோறில்லை என்பதல்ல
இந்தத் தேசம் நமதல்ல என்பதுதான்.

யார் தடுத்தாலும்
யார் தடை செய்தாலும் அதோ அவர்க்ள்
தொழிலாளர்கள், விவசயிகள்
மாணவர்கள்
வீதிக்கு வருகிறார்கள்.
..
ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்க்கும் விசித்திரங்களே
உங்களுக்கு வேறு வேலை இருக்கிறதா?
போங்கள்
..
வீட்டு வாசலில் உங்களுக்கான
அடிமை வரி காத்திருக்கிறது
" அய்யோ எங்களுக்குமா? " என்று
அலறும்போது
நீங்களும் தடை செய்யப்படுவீர்கள் !

Thursday, June 28, 2007

கண்ணீர் இல்லை

இனி-
எங்களிடம் கண்ணீர் இல்லை
இருப்பதெல்லாம்
நெருப்பும் வெறுப்பும்.
வீழ்ந்த உங்களின் ஈட்டிகளை
வீணாக்க மாட்டோம்.
எங்கள் கரங்களில்
ஏந்துவோம்;
எதிர்ப்போம்.
இருட்டையும் மரணத்தையும்
செயிப்போம்.
  • கொலை செய்யப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் கல்லறைமேல் யாரோ பொறித்து வைத்த சீனக் கவிதை.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் :சூதாடித் தோற்ற பன்னாட்டு நிறுவனங்கள்!

மேற்கிந்தியத் தீவுகள், மார்ச் 23. முதலில் ஆடிய இலங்கை அணி 254 ஓட்டங்களை எடுக்க, நடுத்தரமான இந்த இலக்கை இந்திய அணி சும்மா ஊதித் தள்ளிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தால் புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
..
அதன் காரணம் கடந்த ஒரு வருடமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றியும் அதில் இந்திய அணி வெல்லப் போவது குறித்தும் நாடு முழுக்க வெறியும் விளம்பரமும் போதையும் வகை தொகை இல்லாமல் ஏற்றப்பட்டிருந்தன. சொல்லப் போனால் இந்திய அணி ஏற்கெனவே கோப்பையை வென்றுவிட்டது போலவும், சும்மா மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஜாலியாகப் பயணம் செய்து கோப்பையைப் பெட்டியில் எடுத்து வரவேண்டியதுதான் பாக்கி எனுமளவுக்கு பக்தி முற்றியிருந்தது.
..
இந்தக் களிவெறி பக்தியில் மஞ்சள் தண்ணி தெளித்து விடப்பட்ட பலியாடுகளைப் போன்ற இரசிகர்களின் பங்கு பாதி. மீதி இந்தப் பலியாடுகளைச் சாமியாட வைத்து அவைகளிடம் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், கோலாக்களையும், பிஸ்கட் சாக்லெட்டுகளையும், செல்பேசிகளையும், இரு சக்கர வாகனங்களையும் விற்று இலாபமள்ள நினைத்த பன்னாட்டு நிறுவனங்கள், இவற்றுக்கான விளம்பரங்களை வெளியிட்டு ஆதாயமடைய முயன்ற ஊடக முதலாளிகள், இந்த விளம்பரங்களில் நடித்து கோடிகளில் ஊதியம் பெற்ற கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்கள்.முதலாளிகளின் கனவு இலாபம்.
..
இரசிகர்களின் கனவு இந்திய அணியின் வெற்றி. ஆயினும் இந்திய அணி களத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஆடவேண்டும் என்ற உண்மையை மட்டும் யாரும் சட்டை செய்யவில்லை.பரஸ்பரக் கனவு புஸ்வாணமானது. இலங்கையின் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி படுதோல்வியடைந்தது. ஒவ்வொரு வீரரும் அவுட்டாகித் திரும்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏனைய வீரர்கள் தங்களது முகங்களைச் சோகமாக வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள்.
..
விளம்பரப் படங்களில் மட்டுமல்ல, இங்கும் நடிப்பதற்கு அவசியம் இருந்தது. இந்தத் தோல்வியின் மூலம் போட்டியிலிருந்தே வெளியேற்றப்படுவதால் வரும் நாட்களில் இந்திய ரசிகர்களிடமிருந்து கிடைக்கப் போகும் அர்ச்சனை குறித்து அவர்களுக்குத் தெரியும். அதை குறைக்கும் முகமாகத்தான் வலிந்து வரவழைத்துக் கொண்ட இந்த சோகம்.மற்றப்படி உலகக் கோப்பைத் தோல்வியெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆடுவதால் வரும் வருவாயை விட நடிப்பதால் வருவதுதான் அதிகம். டெண்டுல்கரின் ஒருவருட விளம்பர ஊதியம் குறைந்த பட்சமாக 2.5 கோடி, திராவிடுக்கு 1.5 கோடி, யுவராஜ் சிங்குக்கு 1 கோடி, கங்குலி தோனிக்கு தலா 80 இலட்சம், சேவாக்குக்கு 50 இலட்சம், இன்னும் நட்சத்திரமாகாத வீரர்களுக்கு குறைந்தது 30 இலட்சம் என்று போகிறது பட்டியல்.எனில் பத்து வருடமாக ஆடுபவர்கள் எவ்வளவு சுருட்டியிருப்பார்கள்?
..
இந்திய அணியில் இடம்பிடித்ததை விட விளம்பர உலகில் இடம் பிடிப்பதுதான் இவர்களின் இலட்சியம். ஜட்டியைத் தவிர உடம்பு, உடை முழுக்க நிறுவன முத்திரைகளை பச்சை குத்தியிருக்கும் இந்த "விலைமாந்தர்களிடம்' தேச பக்திக் கற்பை எதிர்பார்ப்பது எங்ஙனம்?இரண்டு இந்திய ஆட்டக்காரர்களோடு முதலாளிகள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவர்கள் களத்தில் மட்டையுடன் எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் ஊதியம் அதிகரிக்குமாம்.
..
இந்தப் பச்சையான மோசடியை விரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.அடித்து ஆடவேண்டிய கடைசி 10 ஓவர்களின்போது இவர்கள் களத்திலிருந்தால் என்ன ஆகும்? அடித்து ஆடமாட்டார்கள். கட்டை போடுவதிலேயே குறியாயிருப்பார்கள். பந்துவீச்சைக் கவனிப்பதை விட தனது மட்டையிலிருக்கும் நிறுவன முத்திரைகளை கேமராவுக்கு காண்பிப்பதிலேயே கருத்தாயிருப்பார்கள். ஆக, களத்துக்கு வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் வீரர்கள் விளம்பரத்துக்காக நடித்துக் கொண்டிருக்க, இரசிகர்களோ அவர்கள் கிரிக்கெட் ஆடுவதாக முட்டாள்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.அடுத்த அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒரு ஆண்டில் விளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும் 75 நாட்கள் செலவழிக்கிறார்கள்.
..
இதன்படி 365 நாட்களில் பந்தய நாட்களை விட, பந்தயத்திற்காகப் பயிற்சி பெறும் நாட்களை விட நடிக்கும் நாட்களே அதிகம் என்றாகிறது. நடிகர்கள் எப்படி கிரிக்கெட் ஆட முடியும்?இந்த நடிகர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் கிரிக்கெட் வைத்துச் சம்பாதிப்பதை நிறுத்துவதில்லை. உலகக் கோப்பைக் கிரிக்கெட் குறித்து இந்திய ஆங்கிலஇந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் அரட்டையடிப்பதற்காக முன்னாள் ஆட்டக்காரர்களுக்கான ஊதியத்தைப் பாருங்கள், கபில்தேவுக்கு 2 கோடி, சித்துவுக்கு 1.5 கோடி, அமர்நாத்துக்கு 60 இலட்சம். இப்படி ஒவ்வொரு பந்தயத்திற்கும் தனிக்கட்டணம். அப்புறம் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில், போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுவது, வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று கிரிக்கெட் அட்சயபாத்திரம் வற்றாமல் அள்ளிக் கொடுக்கிறது.எனவே அணிக்குத் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ஒரு சில போட்டிகளில் நூறு அடித்துவிட்டு 25 வயதிற்குள் நட்சத்திர வீரராகிவிட வேண்டியது. நட்சத்திரமானதும் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர நாயகர்களாக மாற்றிவிடும். அப்புறம் இவர்களின் கிரிக்கெட் வாழ்வின் பாதுகாப்பை முதலாளிகளே பார்த்துக் கொள்வார்கள்.
..
ஊடகங்களும்இந்த நாயகத்தனத்தை ஊதிப் பெருக்குவார்கள். பிறகு இவர்களின் ஆதிக்கம் அணியில் தொடரும். அணியிலும் கோடிகோடியாய்ச் சம்பாதிப்பவர்கள், அப்படிச் சம்பாதிக்க வக்கற்றவர்கள் என்று ஏற்றத்தாழ்வு வரும்.விளையாட்டில் தேர்ச்சி பெறுவதைவிட இந்த நட்சத்திரப் பாதையில் வெற்றி பெறுவது எப்படி என்பதே வீரர்களுக்கு கனவாய் இருக்கும். முன்னணி வீரர்களை விளம்பரத் தூதர்களாக வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் புரவலர்களாக இருக்கின்றன. அதனால் வாரியங்களும் விளையாட்டில் திறமை பெற்றவர்களைக் கண்டுபிடித்துச் சேர்ப்பதற்குப் பதில் நிறுவனங்களின் நட்சத்திர வீரர்களைத் தக்கவைப்பதிலேயே கருத்தாயிருக்கின்றன.
..
இந்திய அணியிலிருக்கும் மூத்த வீரர்கள் மாஃபியாக்கள் போல ஆதிக்கம் செய்வதாக பயிற்சியாளர் கிரேக் சாப்பலே கூறியிருக்கிறார். ஆக வர்த்தகச் சூதாடிகளின் விளையாட்டாக மாறிவிட்ட கிரிக்கெட்டில் "விளையாட்டு' எப்படி இருக்க முடியும்?இந்திய அணியை வங்கதேசமும், இலங்கையும் தோற்கடிப்பதற்கு முன்னரே விஷ மரமாக வளர்ந்துவிட்ட வணிக ஆதிக்கம் அதனைத் தோற்கடித்து விட்டது. வெறியேற்றப்பட்ட இரசிகர்களோ உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதும், ஆற்றாமை தீர துக்கம் அனுசரித்தார்கள்.உலகமயத்தின் பெயரால் வாழ்வு சூறையாடப்படும் போதெல்லாம் சுரணையற்றுக் கிடக்கும் தேசத்தின் மனசாட்சி, கிரிக்கெட்டின் தோல்விக்காகச் சிலிர்த்தெழுந்தது. இந்த நொறுக்குத் தீனி தேசபக்தியின் இரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக யாகம் வளர்த்தவர்கள், வீர்களின் படங்களை எரித்தார்கள். வீரர்களுக்குப் பூஜை செய்து ஆராதித்தவர்கள், வீரர்களின் உருவபொம்மைகளுக்குப் பாடைகட்டி ஈமச்சடங்கு செய்தார்கள்.
..
வீரர்களின் தரிசனத்திற்குத் தவம் கிடந்தவர்கள் வீரர்களின் வீடுகள் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.ஆயினும் செயற்கையாகத் தூக்கிவிடப்பட்ட இந்த கிரிக்கெட் தேசபக்தி வெறி வேறுவழியின்றி இயற்கையாக ஒரு சில நாட்களில் வடிந்துவிட்டது. இரசிகர்களும் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.இந்த உணர்ச்சி அலையின் சூத்திரதாரிகளான பன்னாட்டு நிறுவனங்களால் அப்படி இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. இந்தியா குறைந்தபட்சம் சூப்பர்8 பிரிவுக்காவது தகுதி பெற்று பின் அரை இறுதிக்குச் சென்றுவிடும், இந்த நாட்களில் விளம்பரங்கள் மூலம் பொருட்களை விற்றுக் கல்லா கட்டலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்கள் இன்று பொறிகலங்கிக் கிடக்கிறார்கள். கிரிக்கெட்டுக்காகப் போடப்பட்ட கோடிக்கணக்கான முதலீடு அத்தனையும் வீண்.
..
இந்த ஒரு விசயத்திற்காகவே நாம் இந்தியாவின் தோல்வியை மனதாரக் கொண்டாடலாம்.1975ஆம் ஆண்டு கிளைவ் லாயிடு தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது அளிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ. 4 இலட்சம். 2007இல் பரிசுத்தொகை ரூ. 10 கோடி. இந்த 200 மடங்கு வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது?இத்தனைக்கும் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை இந்த 32 ஆண்டுகளில் கூடிவிடவில்லை. இங்கிலாந்தின் காலனிய நாடுகளில் மட்டும்தான் கிரிக்கெட் பிரபலம். அதிலும் இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் மோகம் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனால் உலகமயத்தின் தயவால் இந்தியாவில் குதித்த பன்னாட்டு நிறுவனங்கள் கிரிக்கெட்டின் உதவியால் தங்களது சந்தையை விரிவுபடுத்த முடியும் என்று கண்டுகொண்டன. அதனால்தான் இந்த வளர்ச்சி.
..
ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் 75% பங்கை இந்தியச் சந்தையில் கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுமே அளிக்கின்றன. உலகில் கிரிக்கெட் உயிர்த்திருப்பதன் பொருளாதாரக் காரணமே இந்தியச் சந்தைதான். இதன் பொருள் இந்திய மக்களைச் சுரண்டுவதற்காக கிரிக்கெட் மோகம் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது என்பதே. இந்த உலகக்கோப்பைப் போட்டிக்காக பெப்சியும், எல்.ஜி.யும் தலா 315 கோடி ரூபாயையும், ஹீரோ ஹோண்டா 180 கோடியும், ஹட்ச் நிறுவனம் 90 கோடிகளையும் ஐ.சி.சிக்கு ஸ்பான்சர் தொகையாக அளித்திருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகளின் மைதானங்களை இந்த நிறுவனங்களின் பெயர்கள்தான் ஆக்கிரமித்திருந்தன.
..
போட்டியை ஒட்டி இந்திய ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்கான தயாரிப்பு மற்றும் ஒளிபரப்புச் செலவு மட்டும் 1000 கோடி ரூபாய்களாகும். இது போக போட்டியை வைத்து பல நிறுவனங்களும் தத்தமது பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மட்டும் 800 கோடி ரூபாய்களை முதலீடு செய்தன. உலகக் கோப்பையை அதிகாரபூர்வமாக ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் 1100 கோடிகள் செலுத்திப் பெற்றிருந்தது.ஆக, இத்தனை ஆயிரம் கோடிகளும் ஏதோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து தர்மகாரியம் செய்வதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பதல்ல. இரசிகர்கள் தொலைக்காட்சியில் பந்தயத்தைப் பார்க்கும்போது அவர்களுக்குத் தெரியாமல் திருடப்படும் பணம்தான் இது. இந்த மோடிமஸ்தான் கொள்ளைக்கு ஒரே ஒரு நிபந்தனை இரசிகர்கள் பந்தயத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பதே.இந்தியாவில் 28 கோடிப் பேர் கிரிக்கெட்டை பார்ப்பார்கள் என்று கணக்கிட்டிருந்தார்கள். ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததும் இந்தக் கணக்கு அதோகதியானது. முதலாளிகள் எவ்வளவு வேகத்தில் கிரிக்கெட் பரபரப்பை எழுப்பியிருந்தார்களோ அதைவிட அதிகவேகத்தில் அந்த அலை சரிந்து போனது. வாலறுந்த நரி போல நிறுவனங்கள் ஊளையிடுகின்றன.
பெப்சி ப்ளூ பில்லியன் என்ற பெயரில் இந்திய அணி வீரர்களை வைத்து ஹாலிவுட் திரைப்படம் போல எடுத்த விளம்பரப்படம், இந்திய அணி தோல்விக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. மேலும் இந்திய அணி தங்கக் கோப்பையை வென்று வருவதாக நம்பி தங்கநிற கோலாவையும் பெப்சி இறக்கியது. தற்போது அவற்றை கூவத்தில் ஊற்றிவிட்டார்களா, தெரியவில்லை.இந்திய அணியின் சீருடையில் கிரிக்கெட் உபகரணங்களை விற்கத் திட்டமிட்டிருந்த நைக் நிறுவனம் தற்போது அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து வருகிறது. சாம்சங், எல்.ஜி, வீடியோகான் போன்ற நிறுவனங்கள் பழைய டி.வி.க்களை மாற்றிவிட்டு உலகக் கோப்பையை அகன்ற பிளாஸ்மா, எல்.சி.டி டி.வி.க்களில் பார்க்குமாறு விளம்பரம் செய்து இலட்சக்கணக்கில் விற்கத் திட்டமிட்டிருந்தன.
..
சூடுபட்ட வீடியோகோனின் தலைவர் வேணுகோபால் இனிமேல் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதில் கவனமாயிருப்போம் என்கிறார்.போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருந்த சோனி நிறுவனம் விளம்பரங்களின் மூலம் பிரம்மாண்டமாய் வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. ஓவருக்கிடையில் வீரர்கள் குனிந்து நிமிர்ந்தால், அவுட்டானால், போட்டி நடப்பதற்கு முன்னும் பின்னும் என ஆயிரம் வழிகளில் விளம்பரம். 10 விநாடிகளுக்கு 2 இலட்சம், 30 விநாடிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் என 50% விளம்பர நேரத்தை விற்றுவிட்டு, இந்தியா சூப்பர் 8க்குத் தேர்வானதும் மீதி 50% விளம்பரங்களை 30 விநாடிகளுக்கு 8 இலட்சம் என வசூலிக்க சோனி நிறுவனம் முடிவு செய்திருந்தது.
..
இந்தியா தோல்வியுற்றதும் போட்ட காசைக்கூட எடுக்க முடியவில்லையே என சோனி முதலாளிகள் புலம்புகின்றனர். விளம்பரம் கொடுத்த மற்ற முதலாளிகளோ கட்டணத்தை மலிவு விலைக்குக் குறைக்குமாறு வற்புறுத்துகின்றனர். சோனி மறுத்து வருகிறது. முதலாளிகளுக்கிடையில் நடக்கும் இந்தச் சண்டையில் ஒரு உண்மை வெளிவந்து விட்டது.சோனியின் தலைமை நிர்வாகி குனல் தாஸ்குப்தா, ""கேசினோவில் பணம் கட்டிச் சூதாடுபவர்கள் தோற்று விட்டால் பணத்தைத் திரும்பத் தருமாறு கோர முடியுமா? அது போல இந்தியா வெற்றிபெறும் என்று நம்பி விளம்பரக்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது இந்தியா தோல்வியுற்றதும் தங்கள் கட்டணத்தைத் திரும்பக் கோருவது முறையல்ல'' என்று பச்சையாக குட்டை உடைத்து விட்டார். தேசபக்தி, விளையாட்டு உணர்வு என்ற பசப்பல்களையெல்லாம் ஒதுக்கி விட்டு இது ஒரு சூதாட்டம்தான் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே ஒப்புக் கொண்டு விட்டன.இது சட்டபூர்வச் சூதாடிகளின் கதை. இந்த உலகக்கோப்பையை ஒட்டி நடைபெற்ற சட்டவிரோதச் சூதாட்டத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் புழங்கியதாம்.
..
ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் அந்த ஒரு போட்டியில் மட்டும் 1350 கோடி ரூபாய் சூதாடப்பட்டிருக்குமாம். இதில் ஒரு நூறு கோடிரூபாயை வீரர்களுக்கு வீசியெறிந்தால் அவர்கள் ஆட்டத்தைத் தூக்கி எறிந்திருக்க மாட்டார்களா என்ன?இத்தனைக் கோடிப்பணம் சட்டவிரோதமாகப் புழங்குவதைக் கண்டு கண்ணீர் விடும் இந்தியா டுடே பத்திரிக்கை முதலாளிகள் இந்தச் சூதாட்டத்தை சட்டபூர்வமாகவே அங்கீகரித்து விடலாமே என்று கோருகிறார்கள். அங்கீகரித்தாலும் அங்கீகரிப்பார்கள்! சூதாட்டப் பிரச்சினைக்காக பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டது உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் யோக்கியதைக்கு எடுத்துக்காட்டு! உலகக் கோப்பை ஆட்டங்கள் முடிவதற்கு முன் குற்றவாளியே நேரில் ஆஜராகி நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டாலும் இந்தப் புலன் விசாரணை முடிவுக்கு வராது. உண்மை வெளிவராமலேயே போவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை.இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கிரிக்கெட் காய்ச்சல் அடங்கிவிட்டது. இருப்பினும் போட்ட காசை எடுப்பதற்காக ஊடகங்கள் இன்னமும் கிரிக்கெட் குறித்த அற்ப விசயங்களை ஊதிப் பெரிதாக்குகின்றன.தோல்விக்குப் பிறகு காப்டன் மாற்றமா, பயிற்சியாளர் மாற்றமா, அடுத்த காட்பன் டெண்டுல்கரா, வாரியத்தின் அவசரக்கூட்டம், அதில் முக்கிய முடிவுகள், டெண்டுல்கர் மீது சாப்பல் விமரிசனம், அதற்கு டெண்டுல்கர் விளக்கம் என்று தினம் ஒரு செய்தி பரபரப்பாக ஊடகங்களால் உருவாக்கப்பட்டன. எப்படியும் கிரிக்கெட் கிளர்ச்சியைத் தணியவிடக்கூடாது என்பது அவர்களது நோக்கம். தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் ஒன்றுமில்லாமல் விரயமாகக்கூடாதல்லவா!ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் பிரச்சினையைப் பார்ப்பதற்கு நேரமற்ற விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கீழே விழுந்துவிட்ட கிரிக்கெட் மோகத்தை எழுப்புவதற்கு பலநாட்களைச் செலவிட்டார்.
..
இவர்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பி.சி.சி.ஐ.இன் தலைவர். ஊடகங்களும் இவரை எப்போதும் வேளாண்துறை அமைச்சராகக் கருதாமல் கிரிக்கெட் பிரச்சினைகளுக்காக மட்டும் இவரிடம் பேட்டி எடுக்கின்றன.மறுபுறம் இரசிகர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக பி.சி.சி.ஐ. சில யோசனைகளைத் தெரிவித்தது. இதன்படி இனி ஒவ்வொரு வீரரும் இரண்டு நிறுவனங்களுக்கு மேல் விளம்பரங்களுக்காக நடிக்கக் கூடாது, பந்தயத்திற்கு முந்தைய 15 நாட்களில் விளம்பரப் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது, வீரர்களை பிராந்திய முறையில் தெரிவு செய்யப்படும் முறை ரத்து செய்யப்படும். போட்டிகளில் வெல்லுவதற்கேற்ப ஊதியம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று போகிறது அந்த ஆலோசனைப் பட்டியல். இவையெல்லாம் வெறும் யோசனைகள் என்பதுதான் முக்கியம்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்த ஆலோசனைகளை உடனே கடுமையாக எதிர்த்தனர்.
..
பி.சி.சி.ஐ.யும் இவையெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்காகச் சொன்னது என்று தனது முன்மொழிதலிலிருந்து பின்வாங்கி விட்டது. ஏனெனில் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்துவது வாரியமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள்தான். வாரியத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வருமானமாகக் கொடுப்பது முதலாளிகள்தான். எனவே அவர்களைப் பகைத்துக் கொண்டு எந்த ஆலோசனைகளையும் அமல்படுத்த முடியாது. இரண்டு நிறுவனங்களுக்கு மேல் விளம்பர நடிகராக இருக்க முடியாது எனும்போது, வாரியத்திற்கு ஸ்பான்சர் தொகையை வழங்க முடியாது என்று நிறுவனங்கள் அறிவித்து விட்டால் என்ன ஆகும்?அதேபோல பிராந்திய முறை தேர்வு ரத்து என்று பி.சி.சி.ஐ. அறிவித்தாலும் வீரர்களின் தேர்வு என்பது சுயேச்சையாக நடக்க முடியாது. விளம்பரங்களில் நடிக்கும் நட்சத்திர வீரர் ஒருவர் சரியாக ஆடவில்லை என்றாலும் அவரை வாரியம் நீக்க முடியாது என்பதே உண்மை. அவரை அணியிலிருந்து எடுப்பதற்கு அவரை விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சம்மதிக்காது என்பதுதான் யதார்த்தம்.
..
எனவே வீரர்களைத் தேர்வு செய்வதும், நீக்குவதும் நிறுவனங்களின் தயவைப் பொறுத்ததுதான். மற்ற நாட்டு அணிகளில் வீரர்கள் திறமையினால் இடம்பெறும் நிலை இந்தியாவில் இல்லை. இனி எப்போதும் இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற முடியாது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?ஆயினும் இந்திய அணி வெற்றி பெறுவது நிறுவனங்களுக்கு அவசியம் என்பதால் அதற்கேற்ற வகையில் கிரிக்கெட் விளையாட்டையே மாற்றியமைக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்திய அணி வெற்றி பெறுவதற்கேற்ப ஆடுகளங்கள் தயாரிக்கப்படலாம். இந்திய அணி இறுதிப் போட்டிகளுக்குச் செல்லும் வகையில் பந்தய விதிகளையே வடிவமைக்கலாம். இந்திய அணியை வெற்றிபெறச் செய்ய மற்ற அணிகளைப் பணம் கொடுத்து வாங்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்களே செய்யலாம். திறமையுள்ள ஒரு சில வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அணியை வலுப்படுத்தலாம் என்று கூட இவர்கள் திட்டமிடலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.முன்பு போட்டிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க சூதாட்டக்காரர்கள் முயன்றார்கள்; தற்போது அதை பன்னாட்டு நிறுவனங்களே செய்யக்கூடும். ஏனெனில், கிரிக்கெட்டினால் சூதாடிகள் பெறும் இலாபத்தை விட பன்னாட்டு நிறுவனங்கள் அடையும் இலாபம் பன்மடங்கு அதிகம்.
..
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நட்சத்திரங்கள் வேண்டும். அத்தகைய நட்சத்திர வீரர்களை உலகம் முழுவதிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஐரோப்பியக் கால்பந்து கிளப்புகளைப் போல கிரிக்கெட் கிளப்புகளை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஜீ டி.வியின் முதலாளி. தேசவெறிக்கே கிரிக்கெட் ரசனை என்ற முகமூடி அணிவித்து அதனைத் தூண்டி வளர்த்த முதலாளிகள் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.மூவர்ணக் கொடியை அணியாத இந்த கிளப் நட்சத்திரங்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க முதலாளிகள் இங்கே தொழில் தொடங்குவதை இந்தியாவின் முன்னேற்றம் என்று மக்களை நம்ப வைக்க முடிகிறது; ஆனால், ஆஸ்திரேலிய ஆட்டக்காரரை இந்திய வீரர் என்று கொண்டாடும் மனப்பக்குவத்தை இந்திய ரசிகர்களுக்கு உருவாக்க முடியுமா? தேசிய உணர்வையே சரக்காக்கி விற்றார்கள் பன்னாட்டு முதலாளிகள்; இப்போது அந்தச் சரக்கை விற்கவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை.
· இளநம்பி

தோழருக்காக ஒரு உதவி

ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.

மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ....ழ....ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.

அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.

மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர்மகன் பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.

தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.

'நானொரு பாப்பாத்தி' என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற...ஜனநாயக....முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.

இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
" மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல"
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் செப் 2003 இருந்து

Wednesday, June 27, 2007

கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்

கருணாநிதியின் சாணக்கிய அரசியல், பரமபத விளையாட்டில் நடப்பதைப் போல வெற்றியின் இறுதிப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து, சரிந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்தி, இரத்தத்தின் இரத்தமான தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக முடிசூட்டுவதற்கான எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டதாகப் பெருமூச்சுவிட்டு, தன் சட்டமன்ற வாழ்வுக்குப் பொன்விழாக் கொண்டாடும் வேளையில் அரசியலில் அவர் வளர்த்தகடாவே மார்பில் முட்டிவிட்டது. கருணாநிதி தனது எழுபதாண்டு அரசியல் வாழ்வில் நடிக்காத ஒரு சில தருணங்களில் ஒன்று அவரது மருமகனும் அரசியல் சகுனியுமான முரசொலி மாறன் இறந்தபோது இடிந்து போய் கதறி அழுததாகும். முரசொலி மாறனின் இழப்புக்கு ஈடுகட்டுவதற்காக தனக்கு நெருக்கமான, விசுவாசமான, ஆங்கிலம்இந்திப் புலமையுள்ள, உலகமயமாக்கச் சூழலுக்கேற்ற கல்வியும் பயிற்சியும் பெற்ற அரசியல்தொழில் தரகனாக தயாநிதி மாறனைத் தெரிவு செய்தார் கருணாநிதி.
..
கருணாநிதியின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமர் மன்மோகன், காங்கிரசுத் தலைவர் சோனியா முதல் பில்கேட்சு போன்ற பன்னாட்டுத் தொழில் கழகத் தலைவர் வரை பேரங்கள் நடத்தும் அதிகாரத்தைப் பெற்றார், தயாநிதி மாறன். செய்தி ஊடகத்தில் மாறன் சகோதரர்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றிகரமான, திறமையான மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்ற கருத்தை உருவாக்கினார். உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் வரைவுத் திட்டப்படி நீட்டிய கோப்பில் கையொப்பமிடுவதோடு, தனது குடும்பத் தொழில் குழுமத்துக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் போடுவதும் சாதனையாகச் சித்தரிக்கப்பட்டன. இருபது தொலைகாட்சி அலைவரிசைகள், ஏழு பண்பலை வானொலி அலைவரிசைகள், மூன்று நாளிதழ்கள், மூன்று பருவ இதழ்கள் ஆகியவற்றோடு தென்னக செய்தி ஊடகத் துறையில் ஏகபோக நிலையை அடைந்த மாறன் சகோதரர்கள், தகவல் தொழில் நுட்ப சாதன உற்பத்தி மற்றும் விமான சேவை என்று தமது தொழிலை விரிவுபடுத்தி, மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டிலேயே 13வது பணக்கார நிறுவனமாக சன் குழுமம் வளர்ச்சியுற்றது. மேலிருந்து கட்சிக்குள்ளும் அரசியலிலும் திணிக்கப்பட்டதால் தயார் நிலையில் கிடைத்த ஆதிக்கத்தை உண்மையான செல்வாக்கென்று அவர்கள் நம்பிவிட்டனர். தயாநிதி மாறனின் அரசியல் ரீதியிலான திடீர் வளர்ச்சியும், கலாநிதி மாறனின் தொழில் ரீதியிலான அசுர வளர்ச்சியும் மாறன் சகோதரர்களிடையே அதிகார ஆசைகளைக் கிளப்பி விட்டன.முரசொலி மாறனைப் போல கருணாநிதியின் நிழலிலேயே, அவரது குடும்பத்துக்கு விசுவாசமாகவே எப்போதும் இருப்பதற்கு அவரது பிள்ளைகளான மாறன் சகோதரர்கள் விரும்பவில்லை. தி.மு.க.வின் தலைமையையும், மாநில அதிகார மையத்தையும் இலக்கு வைத்து மாறன் சகோதரர்கள் காய்களை நகர்த்தினர். இதுதான் தி.மு.கழகத்துக்குள்ளேயும், கருணாநிதிமாறன் குடும்பத்திற்கிடையேயும் புகைச்சல், மோதல், வாரிசுச் சண்டை என்று பல மாதங்கள் நீறுபூத்த நெருப்பாக நீடித்திருந்ததற்குக் காரணம்.
..
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் மு.க. ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியும், அரசு செலவில் சென்னை சங்கமம் நடத்தியதைச் சாதனையாகக் காட்டிக் கனிமொழிக்கு எம்.பி. பதவியளித்து அரசியலில் நுழைப்பதையும் கருணாநிதி திட்டமிடுவதை அறிந்த மாறன் சகோதரர்கள், அம்முயற்சிகளைச் சீர்குலைக்கும் வேலையில் விரைந்தனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள ஸ்டாலினின் நிர்வாகத் திறமையை மறைமுகமாக விமர்சனம் செய்து வருவதோடு, தாத்தாவான பிறகு கூட, இளைஞரணித் தலைவராக ஸ்டாலின் நீடிப்பதைக் குறிக்கும் வகையில் கிண்டலடித்தது மாறன் சகோதரர்களின் தினகரன். கனிமொழி தலைமையேற்று நடத்தும் ""கருத்து'' அமைப்பு மற்றும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை இருட்டடிப்புச் செய்தது, சன்தினகரன் செய்தி ஊடகம். ஆனால், கடந்த மாத ஆரம்பத்தில், கருணாநிதி கேட்டுக் கொண்டதையும் மீறி இரண்டு கருத்துக் கணிப்புகளை சன்தினகரன் குழுமம் வெளியிட்டது. இந்தக் கணிப்புகள் தயாநிதி மாறனைத் தமிழக அரசியலில் வளரும் மாற்றுத் தலைமையாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
..
இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மதுரை மேயர், அவரது கணவன், மற்றும் முன்னாள் மேயர் தலைமையில் திரண்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் தி.மு.க. ரௌடிகளால் தினகரன் நாளிதழ் எரிப்பு, நகரம் முழுவதும் பேருந்துகள் உடைப்பு, கல்லெறிதல், தினகரன்சன் குழும அலுவலகங்கள் சூறையாடப்படுதல், தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மூன்று ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலித்தனங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும் ""வீடியோ'' காட்சிகளாகவும் ஆதாரம்சாட்சியமாகப் பதிவு செய்யப்படுவதைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் போலீசுப் பாதுகாப்பு உதவியுடன் உடந்தையுடன் மிகவும் நிதானமாகவும், அலட்சியமாகவும் இது ""நம்ம ஆட்சி, நம்ம போலீசு'' என்ற திமிரோடும் நடத்தப்பட்டுள்ளன.
..
தான் சொல்லியும் கேளாமல், தினகரன் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டதுதான் வன்முறைக்கு காரணம் என்றும், ஆத்திரமுற்ற கழகத் தொண்டர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டனர் என்று அழகிரியின் ரௌடித்தனத்துக்கு நியாயம் கற்பித்துள்ளார், கருணாநிதி. அவரது பொறுப்பிலுள்ள போலீசு அழகிரிக்கு உடந்தையாகவும், அவரது ஆணையின் கீழ் செயலிழந்தும் போயுள்ளது அம்பலப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மகன் மு.க. அழகிரியைக் குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நோக்கத்தோடு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார். தர்மபுரி மாணவிகள் எரிப்புக்கு இணையான மூன்று அப்பாவி ஊழியர்கள் படுகொலையின் சூத்திரதாரி மு.க.அழகிரிதான் என்று ஊரே, நாடே அறிந்திருந்தபோதும் அவர் கைது செய்யப்படவுமில்லை; அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட சேர்க்கப்படவில்லை; அழகிரியின் அல்லக்கைகள் சிலர் மட்டுமே பெயருக்குக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
..
மு.க.அழகிரியின் செல்வாக்கை "இருட்டடிப்பு' செய்து பொய்யான கருத்துக் கணிப்புகள் வெளியிட்டதனால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டது இயல்பானதுதான்; அதனால் 3 ஊழியர்கள் இறக்க நேர்ந்தது ஒரு பிரச்சினையே இல்லை என்பது போலவும் கருணாநிதியின் தலைமை நடந்து கொள்கிறது. ""தி.மு.க.வின் கட்டமைப்பையே குலைத்துவிடும் முயற்சியில் மாறன் சகோதரர்கள் கடந்த சில மாதங்களாகவே இறங்கி வந்தார்கள்; ஆனாலும் கலைஞர் பொறுமை காத்தார். இப்போது தலைவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார், கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்து விட்டார், கட்சிக்குக் களங்கம் விளைவித்து விட்டார்'' என்று குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் பதவியைப் பறித்ததோடு, கழகத்தில் இருந்தும் தயாநிதி மாறன் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் அகராதியில் ஒரே பொருள் தான் இருக்கிறது. கருணாநிதியின் பிள்ளைகளிடையே ""குழப்பத்தை விதைத்து, மோதலை உருவாக்கி, கழகத் தலைமையைக் கைப்பற்ற சதி செய்தார்'' என்பதுதான் அது. ஆனால், கருணாநிதியோ, கட்சியைக் குடும்பத்தின் சொத்தாகவும், அரசு அதிகாரத்தை குடும்பத்துக்கான சொத்துச் சேர்க்கும் கருவியாகவும் கருதி, அதன் கட்டுக்கோப்புக் கலையாமல் மகன்களுக்கும், மகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பதவி வழங்குபவர்; தனது குடும்ப வாரிசுகளுக்கிடையே சுமுகமான பஞ்சாயத்து செய்து சொத்துக்களையும், பதவிகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிப்பதற்குத் திட்டமிட்டு வாரிசு அரசியலின் ஆபாசங்கள் அனைத்தையும் உருவாக்கி வளர்ப்பவர்.
..
குடும்பச் சொத்தும் அதிகாரமும்தான் குறிக்கோள் என்றான பிறகு குடும்பத்துக்குள் குத்து வெட்டு நடப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. குடும்பத்துக்குள் குடுமிப்பிடிச் சண்டை வந்துவிட்ட காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதராகக் கருணாநிதியைக் கருதுவது முட்டாள்தனம். பரந்து விரிந்து கிடக்கும் தமிழகத்தையும் அரசு அதிகாரம் அளிக்கும் ஆதாயங்களையும் சுமுகமாகப் பகிர்ந்து கொண்டு வாழாமல், தனது அரசியல்வாரிசுகள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்பதும், சட்ட விரோத மாற்று அதிகார மையமாகிவிட்ட அழகிரி கும்பலால் தனது வாரிசு அரசியலுக்குக் களங்கம் ஏற்படுகிறதே என்பதும்தான் கருணாநிதியின் ""துயரம்''.
..
""அண்ணன் அழகிரியின் ரவுடித்தனங்களையும், கட்டைப் பஞ்சாயத்துக்களையும் எதிர்த்துக் கொண்டு மதுரையிலும், தென்மாவட்டங்களிலும் யாரும் உயிரோடு இருக்க முடியாது. அப்படிப்பட்ட கொலைகளுக்கு போலீசும் துணை நிற்கும்'' என்பதுதான் இந்தச் சம்பவத்திலிருந்து வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கும் இடையிலான அதிகார அரசியல் சண்டை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அதற்காக பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதும், பொதுமக்களுக்கு எதிராக வன்முறை ரௌடித்தனங்களை நடத்துவதும் அப்பாவி ஊழியர்களைப் படுகொலை செய்வதையும் யார்தான் சகித்துக் கொள்ள முடியும்?
..
தி.மு.க.வின் மாவட்ட செயலர் த.கிருட்டிணன் கொலை விவகாரத்தில் அழகிரிக்கு கருணாநிதி வக்காலத்து வாங்கினார்; தானே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, இதே வகையான ரவுடித்தனங்களை அவரது கும்பல் அரங்கேற்றியபோதும் பிள்ளை பாசம் கருணாநிதியின் கண்களை மறைத்தது. தென் மாவட்டங்களில் மதுரை முத்துவுக்குப் பிறகு தேர்தலில் ஜெயிப்பதற்கு தேவையான கிரிமினல் நடவடிக்கைகளுக்காகவே கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டு ஊட்டி வளர்க்கப்படுபவர்தான் மு.க.அழகிரி. ஆனால், கருணாநிதியின் வாரிசு குடும்ப அரசியலையும் கிரிமினல் அரசியலையும் மறைத்துவிட்டு, ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் வகையில் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து விட்டதாக வருத்தம் தெரிவிக்கும் "தோழமை'க் கட்சிகளோ, பெயர் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிநியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோருகின்றன. தாமே குடும்பவாரிசு அரசியலை ஊட்டி வளர்க்கும் வைகோவும், சசிகலா கும்பல் வடிவில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு அதிகார மையத்தை உருவாக்கிப் பராமரிக்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் வாரிசுகுடும்ப அரசியல் பற்றிக் கூச்சல் போடுவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது.
..
தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கும் மறுகாலனியாக்க அரசியல் குறித்து கவனம் செலுத்தாமல், யாருக்கு இளவரசுப் பட்டம் என்ற அரண்மனைக் குத்து வெட்டை அரசியலாகக் கருதிப் பேசிக் கொள்வதற்கும், பதவிக்காக அடித்துக் கொள்பவர்களில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொள்வதற்கும் ஊடகங்கள் மக்களைப் பயிற்றுவிக்கின்றன. இது ஒரு புதிய சுவாரசியமான தொலைக்காட்சி சீரியல் போல மக்களை ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. பிழைப்புவாத அரசியல், வாரிசு அரசியல், கிரிமினல் அரசியல், கோஷ்டி அரசியல் போன்ற நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளின் வெளிப்பாடுதான் கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் சகோதரர்களுக்கிடையிலான மோதலாக வெடித்திருக்கிறது.

உ.பி.:தலித் ஆட்சியா?பார்ப்பன மீட்சியா?

உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவியான மாயாவதி, உ.பி.யில் 4வது முறையாக முதல்வராகியுள்ளார்.

பத்திரிகைகளும் கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் உருவாக்கிய மணற்கோட்டைகள் அனைத்தும் சரிந்து, காங்கிரசு, பா.ஜ.க., சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன. கடந்த தேர்தலில் 143 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி இம்முறை 97 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க. 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ராகுல்காந்தி சூறாவளிப் பிரச்சாரம் செய்தும் கூட காங்கிரசு கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. "இடதுசாரிகள்' 46 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. உ.பி.யில் பிரபலமான கட்சிகள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு விட்டன என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே குறிப்பிடுமளவுக்கு இத்தேர்தலில் மாயாவதி அலை சுழன்று வீசியது.

தனிப்பெரும்பான்மையுடன் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் கடந்த 16 ஆண்டுகாலமாக உ.பி.யில் நிலவி வந்த கூட்டணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

""இது மகத்தான வெற்றி; இந்திய நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள வெற்றி; ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு தலித் அதிலும் ஒரு பெண், கட்சியின் நிறுவனரான கன்ஷிராம் மறைந்துவிட்ட நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து நின்று, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதி இம்மாபெரும் வெற்றியைச் சாதித்துள்ளார். ஒடுக்கப்பட்ட தலித் சாதியைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டியாளப் போகிறார்'' என்று பார்ப்பன பத்திரிகைகளே வியந்து பாராட்டுமளவுக்கு இந்தியாவையே தனது தேர்தல் வெற்றியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் மாயாவதி.

""மாயாவதியின் வெற்றியானது, இந்தியாவின் அரசியல் போக்குகளையும் சமூக உறவுகளையும் மாற்றப் போகிறது; 2008இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள ம.பி., ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த வெற்றியானது தீவிரமான தொடர் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது'' என்றெல்லாம் முதலாளித்துவ அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். ""உ.பி.யில் மட்டுமின்றி இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என்கிறார் திருமாவளவன்.

சாதி அரசியலும் கிரிமினல் அரசியலும் கொடிகட்டிப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், தனித்து நின்று ஒரு தலித்திய கட்சியால் எப்படி இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது? பெரும்பான்மையினரான ஆதிக்கசாதி மக்களை எவ்வாறு மாயாவதியால் ஈர்க்க முடிந்தது? ஒரே வரியில் சொல்வதாயின், மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பகிரங்கமாக அறிவித்ததைப் போல, மாயாவதியும் தனது கட்சியின் கொள்கைகளைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு விட்டார். அதனாலேயே அவரால் இவ்வெற்றியைச் சாதிக்க முடிந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ""திலக், தராஜு, அவுர் தல்வார், இன்கோ மாரோ ஜூட்சார்'' என்று மேடைகளில் முழங்கியவர்தான் மாயாவதி. அதாவது, திலக் நெற்றியில் பொட்டு வைக்கும் பார்ப்பனரையும், தராஜு பனியா எனும் வணிக சாதியினரையும், தல்வார் தலைப்பாகை அணியும் ராஜபுத்திர சத்திரிய சாதியினரையும் செருப்பால் (தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரது தொழில்) அடிப்போம் என்று அவர் முழங்கி வந்தார். ஆதிக்கசாதி இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக பா.ஜ.க. வுக்கு எதிராக ஆவேசமாக முழங்கி வந்தார். ""எங்கள் ஓட்டு; உங்கள் ஆட்சியா? இனி அது நடக்காது'' என்று மேடைகளில் நெருப்பைக் கக்கினார்.

""சாதியத்தை உடைப்போம்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை ஒருங்கிணைப்போம்'' என்று கன்ஷிராமை நிறுவனராகக் கொண்டு முழங்கிவந்த பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையும் லட்சியமும் மாயாவதியின் வீரவசனங்களும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் இன்று காலிப் பெருங்காய டப்பாவாகிவிட்டன. ""தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும்; தலித்துகளுக்கு தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்'' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த ""பகுஜன்'' சமாஜ் கட்சி இன்று பார்ப்பனர்களும் பிற ஆதிக்க சாதியினரும் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் ""சர்வஜன்'' (அனைத்து சாதியினருக்குமான) கட்சியாகி விட்டது. மாயாவதியும் தமது கட்சி ""சர்வஜன்'' கட்சிதான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

ஆதிக்க சாதியினரையும் அவர்களது கட்சிகளையும் மனுவாதிகள் என்று சாடிவந்த பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது அதே மனுவாதிகளைத் தமது கட்சியின் முக்கிய பிரமுகர்களாக பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது. பார்ப்பன எதிர்ப்பு ஆதிக்க சாதி எதிர்ப்பு என்றெல்லாம் சவடால் அடித்து வந்த அக்கட்சி, இன்று மனுவாதிகளின் நம்பகமான கூட்டாளியாகி விட்டது.

கடந்த 2002 உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலின்போது பார்ப்பனர்களுடன் சங்கமித்த மாயாவதி, தமது கட்சியின் சார்பில் 36 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 96 ஆதிக்க சாதியினரை வேட்பாளராக நிறுத்தினார். தற்போதைய 2007 தேர்தலில் 86 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 139 ஆதிக்க சாதியினரை தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். தலித்துகளுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று சவடால் அடித்துவந்த மாயாவதி, சதிஷ்சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனரையே தமது கட்சியின் பொதுச் செயலாளராக்கினார். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பேர் கொண்ட ""சகோதரத்துவ மேம்பாட்டு கமிட்டி''களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுவியுள்ளது. இக்கமிட்டிகளின் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் பார்ப்பனர்கள் இருக்க, தாழ்த்தப்பட்டோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு கட்சியும் பார்ப்பனர்களுக்கு இப்படி அரசியல் மேடையை அமைத்துக் கொடுத்ததில்லை என்று பார்ப்பனர்களே புகழும் அளவுக்கு மாயாவதியின் பார்ப்பன சேவை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.

இது மட்டுமா? உ.பி.யில் "சிறுபான்மை'யினரான பார்ப்பனர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பரிதவிக்கிறார்களாம். எனவே "ஒடுக்கப்பட்ட', "சிறுபான்மை'யினரான பார்ப்பனர்களைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் மாநிலமெங்கும் 22 வட்டார மாநாடுகளை நடத்திய மாயாவதி, கடந்த 2005ஆம் ஆண்டில் லக்னோ நகரில் மிகப்பெரிய பார்ப்பன மாநில மாநாட்டையும் நடத்தினார். அம்பேத்கரின் புகழ்பாடி ""ஜெய் பீம்'' என்று முழங்கி வந்த தாழ்த்தப்பட்டோர், இம்மாநாட்டுப் பேரணியில் பார்ப்பனரோடு சேர்ந்து ""ஜெய் பரசுராம்'' என்று முழங்கினர். இம்மாநாட்டில் பார்ப்பனர்கள், பரசுராமனின் நினைவாக வெள்ளிக் கோடாரியை மாயாவதிக்குப் பரிசளித்து கௌரவித்தனர்.

இந்தப் பரசுராமன் என்ற பார்ப்பனர், சத்திரியர்களை (சூத்திரர்களை) கோடாரியால் தாக்கி அழித்து பார்ப்பனச் சாதியைப் பாதுகாத்து, அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டினார் என்பது பார்ப்பன புராணக் கதை. ஏடறிந்த வரலாற்றில் புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பன மன்னன், சத்திரிய மன்னனைக் கொன்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டியவன் என்பதால், பார்ப்பன ஆதிக்கச் சின்னமாகக் கருதப்படுவதைப் போல, புராண காலத்தின் பார்ப்பன ஆதிக்கச் சின்னமாக பரசுராமன் கருதப்படுகிறான். பரசுராமனைப் போல, தலித் சகோதரி மாயாவதியும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் அவருக்கு வெள்ளிக் கோடாரியைப் பரிசளித்தனர்.

வேத மந்திரங்கள் முழங்க பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் தனக்களித்த வரவேற்பைக் கண்டு பூரித்துப் போன மாயாவதி, ""எங்கள் கட்சியின் தேர்தல் சின்னம் வெறும் யானை அல்ல; பார்ப்பனர்களின் முழுமுதற் கடவுளாகிய கணேசமூர்த்தியின் அவதாரம்; அது பிரும்மா, விஷ்ணு, மகேசனின் ஒருங்கிணைந்த உருவம். எங்கள் கட்சியை பார்ப்பனர்களுக்கும் மேல்சாதியினருக்கும் எதிரான கட்சி என்று சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். எமது நடைமுறையே இந்த அவதூறுகளை வீழ்த்தி விடும். இனிமேலும் பார்ப்பனர்கள் இதர கட்சிகளை நம்பி ஏமாற மாட்டார்கள். பார்ப்பனர்தலித் கூட்டணியானது உ.பி.யில் புதிய மாற்றங்களையும் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வையும் கொண்டு வரும்'' என்று முழங்கினார். பின்னர், இதுவே அவரது தேர்தல் பிரச்சாரமாகியது.

சாதி அரசியல் கொடி கட்டப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், வெறும் தலித்முஸ்லீம் கூட்டணியை வைத்துக் கொண்டு சாதிய ஓட்டு வங்கிகளைத் தகர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்டதாகவும், எனவேதான் தலித்முஸ்லிம்பார்ப்பனர் மற்றும் பிற சாதியினருடன் புதிய கூட்டணி அமைத்துள்ளதாகவும் தமது பிழைப்புவாதத்துக்கு சித்தாந்த விளக்கமளிக்கிறார் மாயாவதி. இது வெளியே தெரிந்த உண்மை. தமது சாதிய ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சியால் எந்த இடையூறும் ஏற்படாது என்ற உத்தரவாதமும் நம்பிக்கையும் கிடைத்ததால்தான், பார்ப்பனர்களும் மற்றும் பிற ஆதிக்க சாதியினரும் பகுஜன் சமாஜ் கட்சியை தமது சொந்தக் கட்சியாகக் கருதி ஆதரிக்கின்றனர். இது வெளியே தெரியாத உண்மை.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்புகளில் உள்ள பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் தாங்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகவோ, தமது சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவிவரும் அடக்குமுறை சுரண்டலை எதிர்ப்பதாகவோ வாயளவில் கூட வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனாலும், பார்ப்பனஆதிக்க சாதியினருடன் கூட்டணி கட்டிக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்டப் போவதாகச் சூளுரைக்கிறார் மாயாவதி.

மாயாவதியின் பார்ப்பன சேவை இன்னும் ஒருபடி முன்னேறி, இப்போது மேல்சாதியினரில் பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கும் இடஒதுக்கீடு சலுகை அளிக்கவும் அவர் கிளம்பியுள்ளார். அதேநேரத்தில், ஒடுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோரைக் கை தூக்கி விடுவதற்கு, நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை.

எனவேதான், ""இன்று உ.பி.யில் இரண்டாவது பா.ஜ.க. உருவாகியிருக்கிறது. "உயர் ஜாதியினரை செருப்பால் அடி' என்ற போர்க்குரல் மாறி, ஹிந்துக் கடவுள்களான "விநாயகர், பிரம்மா, விஷ்ணு, சிவன்' இவர்களைத் துதிக்கும் பாடலாக மாறி, உயர் ஜாதியினரின் மனதை குளிர வைத்திருக்கிறது. திராவிடர் கழகம் போல் கசப்பை வளர்த்துவந்த ப.ச.க. (பகுஜன் சமாஜ் கட்சி) "பா.ஜ.க.2' ஆக மாறியுள்ளது, உ.பி. மாநிலத்துக்கும் நாட்டுக்கும் நல்லதே'' என்று ""வருகிறது பா.ஜ.க. ஐஐ'' எனும் தலைப்பில் துக்ளக் ஏட்டில் (16.5.07) எழுதியுள்ளார், இந்துவெறி அறிவுஜீவியான எஸ்.குருமூர்த்தி. மாயாவதி அரசில் பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகள் அளிக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியும், இந்த நிலைமை மேலும் தொடர வேண்டும் என்றும் மாயாவதியின் ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவும் வேண்டி காசியில் வைதீக பார்ப்பன சங்கம் சிறப்பு பூசைகளையும் வழிபாடுகளையும் நடத்தியுள்ளது. இந்துத்துவத்துடன் மென்மையாக அணுகுமுறை கொண்ட நவீன இந்திரா காந்தி என்று மாயாவதிக்குப் புகழாரம் சூட்டுகிறது, இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.இன் பத்திரிகையான ""ஆர்கனைசர்''.

முலயம்சிங்கின் ஊழல்ஒடுக்குமுறை ஆட்சியின் மீதான மக்களின் வெறுப்பு; முலயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியுடனான பா.ஜ.க.வின் சமரசம் கள்ளக்கூட்டைக் கண்டு பார்ப்பனமேல் சாதியினரின் அதிருப்தி, காங்கிரசு, "இடது'சாரிகள் மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளின் கையாலாகாத்தனம், வானவில் கூட்டணியை உருவாக்கி அனைத்து சாதிகளும் அரசாங்கப் பதவி, சலுகைசன்மானங்களைப் பொறுக்கித் தின்ன மாயாவதி உருவாக்கிய புதிய ஏற்பாடு — ஆகிய அனைத்தும் சேர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாகியுள்ளனவே தவிர, இது தலித் அரசியலின் செல்வாக்குவலிமையினால் ஏற்பட்ட விளைவு அல்ல.

பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியை தலித்திய பிழைப்புவாதிகளும் பார்ப்பன பத்திரிகைகளும் பலவாறாக வியந்து போற்றினாலும், இது அரசாங்கப் பதவிகளையும் சன்மானங்களையும் பொறுக்கித் தின்பதற்காக உருவாகியுள்ள சர்வஜன சாதியக் கூட்டணிதான். சமுதாயத்தை சாதி அடிப்படையில் மேலும் உறுதிப்படுத்தி, சாதியக் கலவரங்களுக்கு வித்திடும் பிற்போக்குக் கூட்டணி தான்.

இருப்பினும், உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியானது, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் பா.ம.க.வின் ராமதாசு. உ.பி. மக்கள் மதவெறிக் கட்சியான பா.ஜ.க.வை நிராகரித்து விட்டனர் என்று கூத்தாடுகிறது, சி.பி.எம். கட்சி. மாயாவதியோ, டெல்லிக்குச் செல்வதற்கான பாதை தெளிவாகிவிட்டது என்கிறார். திருமாவளவனோ, உயர்சாதி இந்துக்கள் மாயாவதியின் தயவை நடுமளவுக்கு, மாயாவதியின் தலைமை வலிமை மிக்கதாக வளர்ந்துள்ளது என்கிறார்.

உண்மைதான்; சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு ""சாதிக்காக இனி ரத்தம் சிந்த நாங்கள் தயாராக இல்லை'' என்று முழங்கிய திருமாவுக்கு "தமிழ்ப் பாதுகாப்பு இயக்க'த்தின் தலைமைப் பதவி கிடைத்தது. பார்ப்பனஆதிக்க சாதிகளுடன் கூட்டணி கட்டிக் கொண்டு சர்வஜன கட்சித் தலைவியாகிவிட்ட மாயாவதிக்கு முதல்வர் பதவி கிடைத்திருக்கிறது. இதுதான் "வலிமையான' தலித் தலைமையின் மகிமை!

புரட்சிகர அரசியல்சித்தாந்தம் எதுவுமின்றிச் சீரழியும் இத்தகைய தலித்திய பிழைப்புவாத இயக்கங்களை நிறுவனமயமாக்கிக் கொண்டு ஆதாயமடையும் ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சாதிகளும், ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் தலைநிமிர்வைத் தந்துள்ளதாக மாயாவதியின் வெற்றியை ஏற்றிப் போற்றுகின்றன. நாமும் மாயாவதியின் வெற்றியைப் பாராட்டத்தான் வேண்டும் தலித்தியம் என்றால் பார்ப்பனஆதிக்க சாதி சேவையுடன் கலந்த கடைந்தெடுத்த பிழைப்புவாதம்தான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியதற்காக.
..
· தனபால்
..
புதிய ஜனநாயகம் ஜூன் 2006

நிலத்தைப் பழிக்கும் நெல்லுமிரட்டிகள்?

"கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்
கருத்துரிமை பறிபோகு" மென்று
முறுக்கிக் கொண்டு போன
கதாசிரிய நண்பனைக்
காணநேர்ந்தபோது
தயாரிப்பாளர் சொல்லச் சொல்ல
தயக்கமில்லாமல் தனது கதையை
நறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்.
..
"புரட்சி, போராட்டம் இதெல்லாம்
என் இளகிய இதயத்தில் - இயலாது
இயக்கத்தில் சேரமாட்டேன்" என
பழக்கத்தை முறித்துக் கொண்ட
பழைய நண்பனைப் பார்க்கப் போனால்
ஆட்டுக்கறி உரிப்பது போல
ஒரு பெண்ணின் அங்க அவயங்களை
பாட்டில் பச்சையாக உரித்துக் கொண்டிருந்தான்
" என்னடா இப்படி" என்றால்
சினிமாவில் சேர்ந்துவிட்டேன் என
சிரிக்கிறான் கோரமாக.

"இலக்கியவாதிகளுக்கே உரிய அடையாளம் கிடைப்பதில்லை....
கட்சிகள் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என
காட்டமாகப் பேசிய இலக்கியவாதியை தேடிப் போனால்
" ஓ அந்த ஆம்வே (AMMY) ஏஜெண்ட்டா" என
அடையாளம் காட்டிகிறார்கள் தெருவாசிகள்.

"எனக்கு இலக்கியம் பண்ணத் தெரியும்
அரசியல் பண்ணத் தெரியாது" என்று
இரட்டுற மொழிந்து
விலகிச் சென்ற நண்பனை விசாரித்தால்
இப்போது பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வீடாம்.
எப்படியெனக் கேட்டால்
கனிமொழியின் இலக்கியச் சந்திப்பால் வந்த கோட்டா
என்கிறார்கள் கூட இருப்பவர்கள்.
..
"வீரமிக்க தமிழ்மணம்
இப்போது ஈழத்திலிருக்கிறது" என்று
கவியரங்குகளில் கைதட்டல்களை எழுப்பும்
அண்ணணைத் தேடினேன்,
'வாடி வாடி நாட்டுக்கட்டை' க்கு அடுத்த வரிகளைத் தேடி
அவர் ஆத்துப் பக்கம் போயிருப்பதாய்த் தம்பிகள் சொன்னார்கள்.

மலம் உருட்டும் வண்டுகள் கூட
வெளிப்படையாய் இறங்குகின்றன
மனங்கரத் துடிக்கும் இலக்கியவாதிகளே
நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் ஜூலை 2003 இருந்து
************************************************

(குறிப்பு: நெல்லுமிரட்டி என்பது நெல்லுடன் சேர்ந்து வாழும் நெற்பயிரைப் போலவே தோற்றமளிக்கும் களை)

செவியில் விழுந்து இதயம் நுழையும் இசை ! கோபுரத்தின் விரிசலில் விழுந்த விதை !

ஒரு சிறுகதை அல்லது நாவலை ஆளும் வர்க்க இலக்கியம், பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பது, சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துவது என்று விமரிசிப்பதை போல இசையை விமரிசிக்க முடிவதில்லை. ஒரு கவிதையை விமரிசிப்பதைப் போலக்கூட இசையை விமரிசிக்க இயலுவதில்லை. ஏனென்றால் கவிதை என்பது சொற்களால் தீட்டப்படும் மன உணர்வு; இசையோ ஒலியால் தீட்டப்படும் மன உணர்வு.

தன்னுடைய ராமன் மொம்மையை காவிரியில் தொலைத்து விட்டதற்காகத் தியாகய்யர் கண்ணீர் விட்டெழுதிய பாடல் 150 ஆண்டுகளுக்குப் பின்னும் கலைத்தரம் கொண்டதாக நீடிக்க முடியும் என்றால், நேற்று தாமிரவருணியில் முக்கிக் கொல்லப்பட்ட தொழிலாளர்களைப் பற்றிய பாடலில், ஏன் உணர்ச்சியும் கலைத்தரமும் இருக்க முடியாது? அவ்வாறு ஏன் இசையமைக்க முடியாது?

காதலைப் பாலியல் வெறியாகவும் மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசை ரசனையையும், வாழ்வியல் மதிப்பீடு களையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.

நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும், அடிமையை சுதந்திர மனிதானாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதைச் சாதிக்க வேண்டுமெனில் வெகுசன ரசனையின் இசை மொழியை, அதன் தன்மையை நாம் அறிந்திருக்க வேண்டும். வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கைக்கான அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இசை நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.இது ஒரு கடினமான ஆனால் அவசியமான பணி.

நாம் காலத்தைக் கைப்பற்ற வேண்டியவர்கள். நம்க்குத்தேவை அதற்கான இசை. அந்த வகையில் நம்முடைய இசை நாம் வாழ்கின்ற காலத்தின் இசையில் குறுக்கிட வேண்டும். மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும். "புரட்சிப் போரின் ஒரு சிப்பாய்" தான் நமது இசைப் பாடல். சிப்பாய்க்குப் போரிடத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?
..
-மருதையன்
..
இதன் முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
****************************************************************
.
.

Tuesday, June 26, 2007

காலைச் சுற்றும் பார்ப்பனீய பாம்புகள்!!

நன்றி ராஜாவனஜ்
*********************
நான் பொழுது போகாமல் இருக்கும் சமயங்களில் என் அறைத் தோழன் அனந்த கிருஷ்ணனுடன் அரட்டை அடிப்பதுண்டு.. வேறென்ன எப்போதாவது UNIX LINUX என்று போகும் எங்கள் உரையாடல் பெறும்பாலான நேரங்களில் அரசியலுக்குள் புகுந்து விடுவதுண்டு.. என் நன்பன் கடுமையான சனாதனி ( ஹிஹி நம்ம கூட சேர்ந்த பின்னாடி இப்ப தம்மடிக்க ஆரம்பிச்சுட்டான்) ஏதாவது விரதம் சந்தியா வந்தனம் காயத்திரி என்று கரடி விட்டுக் கொண்டிருப்பான். நேற்று அவனுடன் பார்ப்பனீயம் பற்றி கொஞ்சம் சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டது அதில் அவன் முன் வைத்த சில கேள்விகளும் அதற்கு நான் சொன்ன பதில்களும் கொஞ்சம் சுவையானது அது மட்டுமல்ல பொதுவாகவே பார்ப்பனீய பண்பாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எவரும் ஆரம்பத்தில் எதிர் கொள்ளும் கேள்விகளே அவை. இப்போது வேறு தமிழ்மணத்தில் இது தானே டிரெண்டு... எனவே எங்கள் விவாதத்தையே ஒரு பதிவாக்கி விட்டேன் ( ofcourse with the permission of my friend) ..
.
இனி... Over to - AK (அனந்த கிருஷ்ணன்) & RV (ராஜாவனஜ்)
*******************************************************************
AK : வர்க்கபேதமற்ற, சாதிபேதமற்ற சமுதாயம் வேண்டும் என்று சொல்லும் பொதுவுடைமைவாதிகளான நீங்கள் ஏன் குறிப்பிட்டு பிராமண சாதியை மட்டும் எதிர்க்கிறீர்கள்?
.
RV : இல்லை பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை. இன்னும் பார்ப்பனீய ஸ்ம்ருதிகளின் அடிப்படையில் இன்று நிலவும் எல்லா உயர் சாதி ஒடுக்குமுறைகளையும் சேர்த்தே தான் எதிர்க்கிறோம். மேலும் இந்திய சமூக அமைப்பில் வர்க்கம் என்பது சாதி அடுக்குகளுடன் பின்னிப் பினைந்தே இருக்கிறது. வேலை அடிப்படையில் பிரிக்கப் பட்டிருந்த வர்ணங்கள் இப்போது பல்வேறு சாதிகளாக பிளவு பட்டு நிற்கிறது. பார்ப்பனீயம் தெளிவாக பல்வேறு வேதங்கள் மூலமும் ஸ்ம்ருதிகள் மூலமும் சொல்வதை சுருக்கமாக சொல்வதானால் - “நீ ஒருவனை அடிமைப் படுத்திக் கொள். நீயும் எனக்கு அடிமையாக இரு” என்பதே. இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கை கொண்ட தலித்துகள் தான் விவசாயக் கூலிகளாகவும் மற்றவர்களால் கேவலம் ஒதுக்கப் பட்ட இன்னபிற வேலைகளை செய்து வருகிறார்கள். இடைச்சாதிகளிலும் உற்று நோக்கினால் உட்பிரிவுகளில் உயர்ந்தோரிடமே மதிப்புடன் தொழில் செய்யும் அளவிற்கு பணவசதியும் தொழிற் சாலைகளில் உயர் வேலை பெறும் அளவிற்கு கல்வி பெறும் வசதியுமுள்ளது. உம்மால் தேடிக் கண்டுபிடித்து அங்கொன்றும் இங்கொன்றுமான விதிவிலக்குகளைத் தான் இதற்கு மாற்றாக காட்ட முடியும். எனவே பார்ப்பன சாதியை மட்டும் எதிர்க்கிறோம் என்பது திரிபுவாதம். நாங்கள் பார்ப்பனீயத்தை தாங்கிப் பிடிக்கும் எல்லா உயர்சாதி ஒடுக்குமுறையாளர்களையும் சேர்ந்தே எதிர்க்கிறோம்.
.
AK : அது என்ன பார்ப்பனீயம்?
.
RV : Simple... காந்தி முன்வைத்த சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றைத் தொகுத்து காந்தீயம் என்று சொல்கிறோம். இதை நடைமுறை படுத்துவோரை காந்தியவாதி என்கிறோம். அவர்கள் எந்த சாதி, இனம், மொழி, நாடு அல்லது வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை காந்தியவாதிகள் என்கிறோம். இன்றைக்கு ‘இந்து’ என்று வெளிநாட்டுக்காரனால் நாமகரணம் சூட்டப் பட்டுள்ள இந்த மதம், முன்னர் வேத மதம், வைதீக மதம் என்று அழைக்கப்பட்டது. இதன் சித்தாந்த தலைவர்களாக விதிமுறைகளை வரையறுப்போராக இருந்தவர்கள் பார்ப்பனர்கள். மேலும் அவ்வாறான உரிமை இறைவனால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டார்கள். அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு நூல்களை வேறு எவரும் படிக்க வாய்ப்பளிக்கப் படாத மொழியில் எழுதி வைத்துக் கொண்டனர். மீறி சூத்திர சாதிக்காரன் (அதாவது உழைக்கும் மக்கள்) கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் திமிருடன் நடந்து கொண்டவர்கள் பார்பனர்கள்.
.
இந்த வேதங்கள், மனுதர்மம், நாரத சம்ஹிதை போன்ற குப்பைகளின் அடிப்படையில் நிலவுகின்ற இறை சித்தாந்தம், பண்பாடு, வாழ்க்கை முறைகள், ஆகிய அனைத்தையும் சேர்த்து பார்ப்பனீயம் என்று வரையறுக்கிறோம். ஏனென்றால், இதன் சித்தாந்த படைப்பாளியாக ஏகபோக உரிமை கொண்டிருந்தவர்கள், பார்ப்பனர்களே. எனவே இதை பார்ப்பனீயம் என்பதே சரியான பதம். இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறையில் கடைபிடிப்பவர்கள் எவரையும் - அவர்கள் சூத்திர/ தலித் சாதியினராக இருந்தாலும் சரி - அவர்களையும் பார்ப்பனீயவாதிகள் என்று அழைக்கிறோம்.
.
சரி பிறப்பால் பார்ப்பனராய் இருந்து மேற் சொன்ன கொள்கைகளை தூக்கியெரிந்து விட்டு வாழ்கின்றவர்களை பற்றி எமது கருத்தென்ன? அவர்களை நாங்கள் பார்ப்பனராய் பார்ப்பதில்லை!
AV : நீங்கள் சொல்வது போல் இப்போதும் பார்ப்பனர்கள் செல்வாக்குடன் தான் இருக்கிறார்களா? இல்லையே.. நீங்கள் மக்களை ஏமாற்றத் தானே ‘பார்ப்பன பூச்சாண்டி’ காட்டுகிறீர்கள்...
.
RV : இல்லை!! பெரியாரும் அம்பேத்கரும் அதிகாரத்துடன் பார்ப்பனர்களுக்கும் இந்த சித்தாந்தத்தை தலையில் சுமந்தவர்களுக்கும் இருந்து வந்த செல்வாக்கை கட்டுடைத்த பின்னர் இப்போது முன் போல் நேரடியாக வெளிப்படையாக உங்களால் ஏமாற்ற முடிவதில்லை என்பது உண்மையே. ஆனால் subtleஆக இன்னும் நுண்ணியமான தளங்களில் உங்கள் பண்பாட்டு, சித்தாந்த சொருகல் நீடிக்கிறது. எப்படி?? பார்ப்போம்,
  • கல்யாணம் முதல் கருமாதி வரை சடங்கு என்ற பெயரில் எமது உழைக்கும் மக்களுக்குப் புரியாத மொழியில் உளறிக்கொட்டி காசு பார்ப்பது பார்ப்பனர்கள். இது சாதாரணமாக வெளியே இருந்து பார்த்தால் நமது இகலோக நலத்திற்கும் பரலோக முக்திக்கும் சாமியிடம் புரோக்கர் வேலை பார்த்ததிற்கு கமிசன் என்று மட்டும் புரியும்.. ஆனால் இது சராசரி மக்களின் உளுணர்வு தளத்தில் ‘இந்த மந்திரம் சொல்கிற பார்ப்பான்’ ஏதோ சராசரிக்கு மேல் உள்ளவனோ என்கிற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.. புரோகிதத்தில் கிடைக்கும் காசு கம்மி தான் . எல்லா பார்ப்பனரும் புரோகிதத்தில் ஈடுபடுவதில்லை . மிகச்சிறிய அளவில் தான் ஈடுபடுகின்றனர் என்பதும் உண்மையே ஆனால் இந்த புனித பிம்பம் மொத்த பார்ப்பனர்களின் மேலும் விரிகிறது.
  • இப்போதும் பெரும்பாலான சினிமாக்களில் மகா உத்தமர்களாக மகா அப்பாவிகளாக காட்டப் படும் பார்ப்பன கதாபாத்திரங்கள். ஏன் சினிமா தானே என்று விட்டுவிட முடியாது. பார்வையாளன் மனதின் உளுணர்வில் அவனை அறியாமல் ‘அய்யிருங்க பாவம் ரொம்ப நல்லவங்க’ என்று எழுதுகிறது அந்தக் காட்சிகள். சாதிப் பிரச்சினைக்கு “தீர்வு” சொல்லும் படங்கள் கூட எங்கே துவங்கியது சாதி? எது இந்த பிரச்சினையின் மூலம் என்று கேட்பதில்லை.
  • உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் செத்த பாஷையை அரசு வளர்க்கிறது. எதிர்த்துக் கேட்க எந்த ஓட்டுக் கட்சியாலும் முடியாது . செயலலிதா ‘ஆலய பாதுகாப்பு நிதி’ என்று அறிவிக்கிறார் - உடனே தொழிலதிபர்கள், நடிகர்கள், சாராய முதலைகள் என்று காணிக்கை செலுத்த முண்டியடிக்கிறார்கள்.. இது மதச்சார்பற்ற அரசாயிற்றே இப்படிச் செய்யலாமா என்று கோர்டுக்குப் போனால் - இல்லை, வேதம் நமக்குப் பொதுவானது. கோயில் இந்து மதத்திற்கு மட்டும் உரியதல்ல; அவை நமது பண்பாட்டுச் சின்னங்கள் என்கிறது சென்னை உயர்நீதி மன்றம். யார் செல்வாக்கிழந்தது??
  • முதல் நாள் செயலலிதா ஊத்தைவாயன் காம கேடி செயேந்திரனைப் பார்க்கப் போகிறார். இருவரும் சமமான நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் நாளிதழ்களில் படம் வருகிறது. இரண்டாம் நாள் நாட்டின் சனாதிபதியே பார்க்கப் போகிறார்; அவர் செயேந்திரன் முன் கைகட்டி நிற்பது போல் நாளிதழ்களில் படம் வருகிறது. இரண்டையும் பார்க்கும் பாமரன் மனதில் என்ன பதியும்?
  • அண்ணா “திராவிட” முன்னேற்ற கழகத்தின் தலைவி; மான்புமிகு முதல்வர் - ‘நான் பாப்பாத்தி தான்’ என்று சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார்... ‘என்ன சொன்னாலும் இது நம்மவா ஆட்சி’ என்று தமிழக பிராமணர் சங்கம் புளகாங்கிதப் பட்டுக் கொள்கிறது... ·
  • கொலை செய்து மாட்டினான் பெரிய காம கேடி. உள்ளம் கொதிக்கிறது ‘தினமலத்’திற்கு. சின்ன காம கேடி டி.வி நடிகையுடன் ரிக்கார்டு டான்ஸ் ஆடியது அம்பலமானவுடன் ‘அக்கார்டிங் டு லா’ என்கிறான் ‘சோ’மாறி. இது ஏற்கனவே உண்டான புனித பிம்பம் கலைந்து விடுமோ என்ற பயத்தினால் அல்லாமல் வேறெதற்கு? இது இவர்கள் வாசகர்களின் மேலான மறைமுக கருத்து சொருகல் அல்லாமல் வேறென்ன? இவர்கள் எழுத்துக்கள் படிக்கும் வாசகன் மேல் செல்வாக்கு செலுத்துவதில்லையா?·
  • காம கேடி சிறையில் பூசை செய்ய வசதி.. நெய்யும் பருப்பும் தின்று விட்டு புளுக்கை போட வாழையிலை அப்புறம் எதற்கு ‘இப்ப எல்லாம் முன்ன மாதிரி செல்வாக்கில்லை’ புலம்பல்... நாட்டையே விழுங்க வரும் மறுகாலனியாதிக்க அபாயத்தை சுவற்றில் எழுதும் தேசபக்தர்களுக்கு போலீஸின் அடிஉதை!! யாரிடம் உள்ளது செல்வாக்கு?
  • இன்றும் உள்ளதே சாதி..! எங்கே உள்ளது இதன் மூலம்? யார் இதை போற்றி பாதுகாக்கிறார்கள்? “நோய் முதல் நாடி” என்று இன்றைய சாதி அமைப்பை trace செய்தால் எங்கே போய் முடிகிறது? பின் ஏன் செல்வாக்கில்லை என்ற புலம்பல்? வேதங்களும் ஸ்மிருதிகளும் செல்வாக்கிழந்தது என்கிறவர்கள், அப்படியானால் ஏன் அதில் சொல்லப் பட்ட கருத்துக்கள் மட்டும் செல்வாக்கிழக்கவில்லை என்ற இரகசியத்தை சொல்வார்களா?
    இது போல் இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்; ம.க.இ.க தோழர் மருதையனின் உரைவீச்சில் அவர் சொன்னது போல் , இது ஒரே இழையின் தொடர்ச்சி தான் - சாணக்கியன், ஆதிசங்கரன், புஷ்யமித்ர சுங்கன், ஞானசம்பந்தன், ராஜகோபாலாச்சாரி, வெங்கட்ராமன், ஜெயலலிதா.....


A.V : பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நீங்கள் செய்வது இனவாதம் பரப்புவது தானே? பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டுமானால் அதை வேறு பெயரில் சொல்லி எதிர்க்கலாமே? ஏன் பார்ப்பனர் பெயரையும் சேர்த்துச் சொல்கிறீர்கள்? இது எங்களை புன்படுத்துகிறதே?

.
RV : இல்லை ஏற்கனவே சொன்னது போல பார்ப்பனீய எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இன/சாதி எதிர்ப்பு அல்ல. உழைக்கும் மக்களுக்கு இந்த சித்தாந்தத்தின் மேல் உள்ள மயக்கத்தை கலைக்க வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் ஏற்படுத்திய கொழுப்பில் ஒடுக்குமுறையில் ஈடுபடுவது ஒரு சில உயர் சாதியினரே அவர்களை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் இந்த சித்தாந்தத்தை இருபத்தோராம் நூற்றாண்டிலும் வேதபாடசாலைகள் வைத்து போற்றி பாதுகாக்கும் சாதியையும் எதிர்க்க வேண்டியுள்ளது. தயவு செய்து வேறு பாட்டை புரிந்து கொள்ளுங்கள் - "நீங்கள் ஒரு பஞ்சமனை ஒடுக்குவது அவன் அந்த சாதியில் பிறந்தான் என்ற ஒரே காரணத்திற்காக. நாங்கள் உங்களை எதிர்ப்பது நீங்கள் பார்பனராய் பிறந்த காரணத்திற்காக அல்ல!! பார்ப்பனீயத்தை முன்னெடுத்து செல்வதற்காக. இது உங்களை புன்படுத்துகிறதென்றால்; எங்களுக்கு வேறு வழியில்லை அப்படித்தான் புன்படுத்துவோம்!!

.
AV : நீங்கள் வர்க்கப் போராட்டக்காரர்கள் தானே பின் எதற்கு நாத்திகப் பிரச்சாரம்? உங்களுக்கே நம்பிக்கை இல்லை ஆயிற்றே, பின் ஏன் கடவுள் விஷயத்திலும் கோயில் நடைமுறைகளிலும் தலையிடுகிறீர்கள்?

.
RV : மதம் ஒடுக்கப்பட்டவனிடம் சொல்வது என்ன? “நீ அடங்கி ஒடுங்கி நடந்து கொள் பரலோக ராச்சியத்தில்(இங்கே சொர்க்கம்) உனக்கு இடம் கிடைக்கும்; ஒடுக்குபவனிடமோ நீ உன் அடிமைகளிடம் கருனையோடு நடந்து கொள் தான தருமங்கள் செய்” அதாவது இருக்கும் systemஐ குலைக்க வேண்டாம் அதற்குள் இருவரும் சன்டை போடாமல் இருங்கள் என்று வலியுறுத்துகிறது... நாங்கள் ஒடுக்கப்பட்டவன் தன்னெழுச்சியாய் கிளர்ந்தெழ வேண்டும் என்கிறோம். அதற்கு தடையாய் உள்ள மதம் என்னும் மயக்கம் கலைக்கப் பட வேண்டியது மிக அவசியம்..

.
மேலும் மார்க்ஸியத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம். இது எந்த ஒரு மதத்திற்கும் மிகக் கடுமையான எதிரி. அடிப்படையிலேயே கருத்துமுதல்வாதமான மதத்துடன் நேரடியான முரண்பாடுகள் கொண்டது. மதம் பரப்பி விட்டுள்ள சமுதாய வேர்களை கலைவது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தன்னெழுச்சியுடன் நேரடி தொடர்புடையதாகும்.. இங்கே மதம் என்று நாம் குறிப்பிடுவது இந்து முசுலிம் கிருத்துவம் யூதம் புத்தம் சமனம் என்று அனைத்துக்கும் பொருந்தும்


இங்கே ஆகப் பெரும்பான்மையான மதம், இந்து மதம் என்று சொல்லப் படும் பார்ப்பனீய மதம். எனவே நாங்கள் உம்மை மட்டும் target செய்வது போன்ற தோற்றம் ஏற்படுவது தவிர்க்கவியலாதது... உலகளவில் பொதுவுடைமைவாதிகள் அனைத்து மதம் மற்றும் கடவுள் கோட்பாடுகளையும் எதிர்த்தே வந்துள்ளனர்.


நம்பிக்கையை பொருத்தமட்டில் - உம்முடைய நம்பிக்கை எம்முடைய மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கினால், நாங்கள் உமது நம்பிக்கையின் இருப்பின் மேல் கேள்வி எழுப்புவது தவிர்க்க இயலாதது.


AV : ஒரு தலைவன் சொன்னான் என்பதற்காக “கடவுள் இல்லை” என்பதும் கேள்விகள் இல்லாமல் அதை ஏற்றுக் கொள்வதும் அந்த தலைவன் சொன்ன சித்தாந்தத்தையே ஒரு மதம் க்குவது தானே?

.
RV : நாம் எதிர்ப்பது யாரோ சொன்னார் என்ற வெறும் நம்பிக்கை என்னும் கருத்தியல் அடிப்படையில் அல்ல.. பொருள்முதல்வாதம் என்னும் விஞ்ஞான பார்வையில்.. மேலும் மார்க்ஸோ ஏங்கெல்ஸோ எவரும் கேள்விகளுக்கப்பாற் பட்ட ‘கடவுள்’கள் இல்லை..
***********************************************************************
பொதுவாக விவாதத்தில் நன்பர்களை இழப்பது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு விஷயம்...(இங்கே கூட ஒரு முறை அப்படி நிகழ்ந்து விட்டது ஒரு பதிவர் என் கமெண்டால் வருத்தப் பட்டு தனி மடல் கூட அனுப்பினார்) எனவே இந்த அளவில் எங்கள் விவாதம் ஒரு நிறுத்தத்திற்கு வந்து விட்டது. அனந்தாவை இதற்குப் பின் சகஜ நிலைக்கு கொண்டு வர அரை பாக்கெட் சிகரெட் செலவாகி விட்டது.....
***********************************************************************

சரி... இந்த இடத்தில் தமிழ்மணத்தில் உலவும் சமரசவாதிகளையும் அவர்கள் நடுநிலைமையையும் கொஞ்சம் கவனிக்கலாமா?
  • முதலில் ‘நடுநிலை’ என்ற ஒன்று கிடையவே கிடையாது.. ஒன்று பிரச்சினை மற்றொன்று அதன் தீர்வு... இடைப்பட்ட அனைத்தும் திரிபுவாதங்களே. அவை பிரச்சினை வளரவே உதவும்
  • சாதி பாகுபாடு ஒழிக்கப் பட வேண்டும்... ஆனால் பாகுபாட்டுக்கு காரணமான சாதி பற்றி பேசக் ,கூடாது. ஒடுக்குமுறை கூடாது; ஆனால் ஒடுக்குபவரைப் பற்றி.... மூச்!!! என்னே ஒரு நடுநிலை!!
  • வேதங்கள் புனிதம்; வேதியர்கள் பாவம் அப்பாவிகள்... அதன் உள்ளடக்கத்தை பற்றி எவனாவது கேட்டு விட்டால் போதும் நேரடியாக பதில் வராது - வெங்காயத்தலையன் என்று பதிவு வரும்.. பரவாயில்லை அந்த மனிதர் வாழும் காலத்தில் இதை விட எதிர்ப்புகளைப் பார்த்தவர்.
  • இந்த சமாதானப் புறாக்களின் யோக்கியதையைப் பாருங்கள்... எங்கேயாவது பார்ப்பனர்களுக்கு எதிராக எவனாவது கேள்வி கேட்டு விட்டால் போதும்; “ஐயோ சாதி வெறி அம்மா இனவெறி” என்று ஜராகிவிடுவர். "ஆமாம், சாதி என்பது யார் கண்டுபிடிப்பு" என்று கேளுங்கள்... அவர்களே ஞானஸ்நானம் கொடுத்து உங்களை ‘பெரியார்மதத்தில்’ சேர்த்து விடுவார்கள்·
  • ஐயா உங்கள் விவாதத்தில், பதிவுகளில் உள்ள முரண்களே உங்களை அம்பலப் படுத்துகிறது..
  • எதிர்ப்பாளர்களைப் பொருத்தவரையில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் - உங்கள் ஏதிர்ப்புகள் தான் எங்களை வளர்க்கும் ‘எதிர் எதிரான சக்திகளின் முரண்பாடுகள் வளர்ச்சிப் போக்கின் கூறுகள்’ என்ற இயக்கவியல் தத்துவத்தை நம்புகிறவர்கள் நாங்கள்..
    ____________________________________________________________________

ராஜாவனஜ்


Monday, June 25, 2007

வெனிசூலாவின் போர்ப்பிரகடனம்!

இரண்டாவது முறையாக தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபராகப் பதவி யேற்ற ஹீயுகோ சாவேஸ், இவ்வாண்டு மே தினத்திற்குள் நாட்டின் முக்கியத் தொழிற் துறைகளை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் அரசியல் சாசனத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார்.

இந்த மே நாளன்று நடைபெற்ற தொழிலாளர்கள் பேரணியில் உரையாற்றிய சாவேஸ், ஒரினோகோ எண்ணெய்ப் படுகையில் இருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமான முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நாட்டுடைமையாக்கும் முடிவை வெளியிட்டிருக்கிறார். இந்நிறுவனங்களில்பன்னாட்டு முதலாளிகளின் பங்குகள் சிறுபான்மையாகக் குறைக்கப்பட்டிருக் கின்றன. விலக விரும்புகிறவர்களுக்கு பழைய மதிப்பீட்டின்படி நட்ட ஈடு வழங்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, ஐ.எம்.எப் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக்கொள்வதாகவும் வெனிசூலா அறிவித்திருக்கிறது. இந்நிறுவனங்களை இனிமேலும் விட்டுவைத்தால் வெனிசூலாவைச் சூறையாடி விடுவார்கள் என்றும், இதுநாள் வரை அவர்கள் வெனிசுலாவிலிருந்து சுருட்டியதை திரும்பத் தரவேண்டும் என்றும் தேசியத் தொலைக்காட்சியில் முழங்கியிருக்கிறார் சாவேஸ்.

மேலும் மின்சாரம் தொலைபேசித்துறை போன்றவையும் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன. உள்நாட்டுத் தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்குப் பன்னாட்டு வங்கிகள் மறுத்தால், அவையும் வெளியேற வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. வெனிசூலாவின் இரும்புச் சுரங்கங்களைத் தம் பிடியில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், வெட்டி யெடுக்கும் இரும்பு அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்குத் தேவையான இரும்பு எஃகுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை நிலவுகிறது. உற்பத்தியாகும் இரும்பை உள் நாட்டில் விற்க மறுத்தால், இரும்புக் கம்பெனிகளும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் சாவேஸ்.

ஒடுக்கப்பட்ட நாடுகளைக் கேட்பாரின்றிச் சுரண்டி வரும் பன்னாட்டு முதலாளி கள் வெனிசூலாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். அமெரிக்க அதிபர் புஷ்ஷும், ஏகாதிபத்திய ஊடகங்களும் சாவேஸை சர்வாதிகாரி யென்றும், வெனிசூலாவில் ஜனநாயகம் இல்லையென்றும் ஏற்கெனவே அவதூறுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இனி அத்தகைய கூச்சலும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளும் தீவிரமடையும் என்பதில் ஐயமில்லை.

90களிலேயே புதிய தாராளவாதக் கொள்ளைக்குப் பலியாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில், அவற்றுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த பல போராட்டங்களின் ஒரு விளைவுதான் சாவேஸ். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை அரசுகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், திவாலான பொருளாதாரங்கள், உணவுக் கலகங்கள்.. என்பவைதான் 90களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தின் வரலாறு. வெனிசூலாவின் அரசு ஒரு கம்யூனிஸ்டு அரசு அல்ல என்ற போதிலும், சாவேஸின் நடவடிக்கைகள் முழு நிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்ற போதிலும் தனது நடவடிக்கைகளின் மூலம், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார் சாவேஸ்.

பொதுத்துறைகளையும், காடுகளையும், கனிவளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குவதன் விளைவு முன்னேற்றமல்ல, பேரழிவுதான் என்பதற்கு வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடந்த கால வரலாறு ஒரு பாடம். ""இன்றைய உலக நிலைமைகளில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் தவிர்க்கவியலாதவை'' என்று கூறி நந்திக்கிராமத்தையும் சிங்குரையும் நியாயப்படுத்தும் மார்க்சிஸ்டுகளுக்கோ, சாவேஸின் நடவடிக்கைகள் ஒரு சாட்டையடி. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் வெல்லப்பட முடியாதவை என்றும் அவற்றின் முன் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆளும் வர்க்கங்களும் போலி கம்யூனிஸ்டுகளும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரத்தைத் தனது நடவடிக்கைகளின் மூலம் பொய்ப்பித்திருக்கிறார் சாவேஸ்.

உலக முதலாளித்துவம் வெல்லப்பட முடியாதது அல்ல. இறையாண்மைக்கும் சுயசார்புக்கும் சோசலிசத்துக்குமான போராட்டங்கள் மென்மேலும் தீவிரமடையுமே யன்றித் தணிந்து விடாது என்ற உண்மையையும் வெனிசூலா நிரூபித்திருக்கிறது.

Sunday, June 24, 2007

ஐயா, எங்கள் சாதி எது?

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?
..
உங்களுக்காக ஒரு வீட்டை நாங்கள் கட்டுகிற போது
களிமண்ணைப் பிசைந்து செங்கல் செய்கிற போது
உங்களுக்காக தானிய மூட்டைகளைச் சுமக்கிற போது
காலி வயிற்றுடன் நிலத்தை நாங்கள் உழுகிற போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

புகைக் கூண்டுகளைப்போல எங்கள் குடல்கள்
ஆவியையும் நெருப்பையும் கக்கிய போது
காசநோயால் இருமிக் கொண்டு
மலைபோல் நிலக்கரியைத் தோண்டி எடுத்த போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

தீய்ந்து போன ரொட்டி மண்டைகளைத் தின்று கொண்டு
ஈரமான நிலத்தை நாங்கள் கிளறிய போது
எரிக்கும் வெயிலில் சாமி சிலைகளை
நாங்கள் தூக்கிய போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

கோயிலுக்கு நீங்கள் பூக்களை எடுத்துச் செல்வதற்காக,
பூக்கூடைகளை நாங்கள் பின்னியபோது
நீங்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவற்காக
காகிதங்களை நாங்கள் செய்த போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

மிருகங்களை நாங்கள் சாகடித்து
உங்களுக்காக செருப்புகளைச் செய்தபோது
உண்பதற்கு சிறு பருக்கை கூட இல்லாமல்
உங்களுக்காக நாங்கள் பானைகள் செய்தபோது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

நீங்கள் சாமியார்களாவதற்காக
உங்கள் தலைகள் நாங்கள் மொட்டையடித்த போது
உங்கள் அழுக்குத் துணிகளை
மல்லிகைப்பூ வெண்மையாக நாங்கள் துவைத்த போது

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

உங்கள் நீண்ட கதைகள் எல்லாம்
அழுகிப் போய்க் கொண்டிருக்கின்றன.
இன்னும் கதைகள் தேவையில்லை.
உலுத்துப் போன உங்கள் தேர்
இனியும் ஓடாது.
அது உடைந்தே விட்டது.

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?

நீங்கள் எங்களைச் சாதிகளாக
சாதிகளுக்குள் கோந்திரங்களாக பிரித்தீர்கள்.
ஆனால்
நாங்கள்
ஒருங்கிணைந்து கை கோர்த்து நின்றுவிட்டால்

ஐயா, எங்கள் சாதி எது?
சாமி, எங்கள் சமயம் எது?
-- -
- செரபண்ட ராஜூ

Saturday, June 23, 2007

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர்.
..
""சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார்.
..
அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ""இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ""சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
..
இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.""ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.
..
சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.
..
மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர்.சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ""பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ""மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார்.
..
சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த "மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ""காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
..
சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது.உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ""கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார்.
..
""இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.
..
இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ""எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார்.
.
இதே சமயத்தில், ""கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு.குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ""ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை.

···
இது போன்ற மர்மம் நிறைந்த ""தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று.
""சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ""குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.
இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ""சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ""தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான்.
.
இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ""இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.
.
பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ""குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ""இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

···
சோராபுதீன் கொலையை இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு நியாயப்படுத்தி வரும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொருபுறம், ""மற்ற மாநிலங்களில் போலி மோதல் கொலைகளே நடப்பதில்லையா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டது.""மோதல்'' கொலைகளின் மூலம்தான் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் என்ற பொதுக் கருத்தை, ஓட்டுக் கட்சிகளும், போலீசு அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் இணைந்து உருவாக்கி வருகின்றன. மேலும், ""தீவிரவாதி யார்?'' என்ற கேள்விக்கு, வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி இடதுசாரி போலி கம்யூனிஸ்டுகள் வரை, அனைத்து ஓட்டுக் கட்சிகளின் பதிலும் ஒன்றுதான்.அதனால்தான், காங்கிரசாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் சோராபுதீன் கொலையை நியாயப்படுத்தும் மோடியின் ""தேச பக்த'' அரசியலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ""சோராபுதீன் கொலையை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை'' என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் மூக்கறுந்து போய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.
..
மோதல் கொலைகள், தடா, பொடா போன்ற அரசு பயங்கரவாதத்தையும், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ""நக்சல்பாரிகள், தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள்'' என இந்திய ஆளும் கும்பல் உருவாக்கி வைத்துள்ள கருத்தை முதலில் அடியோடு புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதையும், வன்சாரா போன்ற காக்கிச் சட்டை கொலைகாரர்கள் ""ஹீரோ''க்களாக வலம் வருவதையும் தடுக்க முடியாது.
· குப்பன்
......
புதிய ஜனநாயகம் ஜூன் 2006

Thursday, June 21, 2007

தில்லை போராட்டம்: வெற்றியை நோக்கி ஒரு படி!

தில்லை போராட்டம் :
வெற்றியை நோக்கி ஒரு படி!

தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் வடலூரில் வள்ளலார் வழிபாட்டு முறையைப் பார்ப்பனமயமாக்கிய சதிக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. தில்லைக் கோயில் கருவறையின் எதிரில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தேவாரம்திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத்துறையின் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல, மதங்களையும் உருவ வழிபாட்டையும் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் மறுத்து வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் சத்திய ஞான சபையில், சிவலிங்க வழிபாடும் பார்ப்பனச் சடங்குகளும் தடை செய்யப்பட வேண்டுமென்றும் வள்ளலார் உருவாக்கிய சோதி வழிபாடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

""தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடக்கூடாது'' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் விதித்திருக்கும் தடைக்கு எதிராக சிவனடியார் ஆறுமுகசாமி மேற்கொண்டு வரும் போராட்டம் நெடியது. ஆதீனங்கள், மடங்கள், சைவப் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள் என்று பல பேரையும் பல ஆண்டுகளாகச் சந்தித்து இந்த அநீதியைத் தட்டிக் கேட்குமாறு மன்றாடியிருக்கிறார் ஆறுமுகசாமி. தனியொரு மனிதனாக கையில் துண்டறிக்கைகளை அச்சிட்டு வைத்துக் கொண்டு, சிதம்பரம் மக்கள் மத்தியிலெல்லாம் விநியோகித்திருக்கிறார். கோரிக்கையின் நியாயத்தை மக்கள் ஆதரித்தனரெனினும், "எல்லாம் வல்ல' தீட்சிதர்களை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த அமைப்பும் முன்வரவில்லை.

எனினும், மனம் தளராமல் 8.5.2000 அன்று தனியொரு மனிதனாகச் சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி. அந்தக் கணமே தீட்சிதக் காலிகளால் அடித்து தூக்கியெறியப்பட்டார். கையொடிந்த நிலையிலும் அந்தக் காலிகளுக்கு எதிராகக் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். ஆனால், தீட்சிதர்களின் கூலிப்படையாகவே இயங்கும் போலீசு, திட்டமிட்டே வழக்கை பலவீனமாக்கி தீட்சிதக் காலிகளின் விடுதலைக்கு உதவியது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு மூலம், தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம். தில்லைக் கோயிலில் தமிழில் பாட வைப்போம்'' என்று விழா மேடையிலேயே அறிவித்தோம்.

2004இல் இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று போராட்டத்தையும் தொடங்கியவுடன் தங்களுடைய நிலையை நியாயப்படுத்திக் கொள்ள இந்து அறநிலையத் துறையையே பயன்படுத்திக் கொண்டது தீட்சிதர் கும்பல். இணை ஆணையர் மூலம் ""தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடுவது மரபுக்கு விரோதமானது'' என்று ஒரு உத்தரவைப் பெற்றது. பிறகு, ""தமிழில் பாடினால் கோயிலின் புனிதம் கெட்டு விடும். சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்'' என்று முன்சீப் கோர்ட்டில் ஒரு தடையாணையையும் வாங்கி வைத்துக் கொண்டது.

இந்தத் தடையாணைகளைத் தகர்ப்பதற்காக, கடந்த 4 ஆண்டுகளாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து எமது தோழர்கள் பல்வேறு முனைகளிலும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சிதம்பரம் நகரெங்கும் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாகத் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம், தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றங்களில் வழக்குகள், கோயிலுக்குள் நடந்த கொலைகள், திருட்டுகள் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கும் போலீசுக்கு எதிரான வழக்குகள், இப்பிரச்சினையை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்..
இறுதியாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு மேல்முறையீட்டு மனு! இம்முயற்சிகளில் பா.ம.க.வைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எம்.எஸ்., முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.எஸ்., திரு.சக்திவேல் முருகனார் போன்றவர்கள் துணை நின்றிருக்கின்றனர். இந்த நீண்ட போராட்டத்தின் இறுதியில்தான் அறநிலையத்துறை ஆணையரின் தற்போதைய உத்தரவு வெளி வந்துள்ளது.

""தில்லைக் கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல; திருச்சிற்றம்பல மேடையிலிருந்து தமிழ்த் திருமுறைகளை தீட்சிதர்கள் மட்டுமே "தொன்று தொட்டு' ஓதி வருகின்றனர் என்பது உண்மையல்ல; பக்தர்கள் வழிபடலாம், ஆனால் தமிழை உச்சரிக்கக் கூடாது என்பதும் அது கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் என்பதும் தமிழுக்கு இழைக்கப்படும் பேரிழுக்காகும். கோயில் நிர்வாகத்தை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் தீட்சிதர்களே உருவாக்கிய கட்டுப்பாடாகத்தான் இது தோன்றுகிறது'' என்று கூறுகிறது ஆணையரின் உத்தரவு.

எனினும், ""கால பூசைகளின்போது திருக்கோயிலால் நியமிக்கப்படும் ஓதுவார்களைத் தவிர வேறு யாரும் திருமுறைகளைப் பாடக்கூடாது; பக்தர்கள் பூசை முடிந்தபிறகுதான் பாடலாம்'' என்று கூறுகிறது இந்த உத்தரவு. "பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்' தி.மு.க. அரசின் மழுங்கத்தனத்துக்குப் பொருத்தமான வகையிலும், தீட்சிதர்களின் சாதி உரிமையில் தலையிடாத வகையிலும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதிலும், தீட்சிதப் பார்ப்பனக் கும்பல் இதை ஏற்பதற்குக் கூடத் தயாராக இல்லை.

இந்த உத்தரவு கையில் கிடைத்தவுடனே, ""மே 17ஆம் தேதியன்று சிற்றம்பல மேடையேறி ஆறுமுகசாமி தேவாரம் பாடுவார்'' என்ற அறிவிப்பை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டது. ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் செங்கொடிகளுடன் திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள், தி.க. ஆகியோருடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் பலரும் அணிதிரண்டனர். பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டவுடன் அங்கேயே வழிமறித்தது போலீசு. ""அறநிலையத்துறையின் ஆணை இருக்கிறது, வழிபாட்டு உரிமையை மறுக்க போலீசுக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்ற வாதங்கள் எதையும் போலீசு காதில் வாங்கவில்லை. தீட்சிதர்கள் முன்சீப்பு கோர்ட்டில் ஏற்கெனவே தடை வாங்கியிருப்பதாகவும், எனவே எல்லோரும் கலைந்து செல்லவேண்டும் என்றும் கூறியது போலீசு. கலைந்து செல்ல மறுத்து கொளுத்தும் வெயிலில் 4 மணிநேரம் சாலையை மறித்தனர் தோழர்கள். அனைவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தது போலீசு.

பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்கள் எதுவும் போலீசின் காதுகளில் ஏறவில்லை.
ஏறாததில் வியப்புமில்லை. ஏனென்றால், தீட்சிதர்களின் கேவலமான எடுபிடிகளாகவே உடம்பை வளர்த்திருப்பவர்கள் சிதம்பரம் காவல்துறை அதிகாரிகள். கோயிலுக்குள்ளேயே நடைபெற்ற 3 கொலைகள், நகைத்திருட்டுகள், இரவு நேரத்தில் கோயிலே விபச்சார விடுதியாகவும் மதுபான கேளிக்கை விடுதியாகவும் மாற்றப்படுவது ஆகியவை பற்றிக் கொடுக்கப்பட்ட எந்தப் புகார் மீதும் எந்தக் காலத்திலும் சிதம்பரம் போலீசு வழக்கு பதிவு செய்ததில்லை. இவை பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. இதுதான் போலீசின் யோக்கியதை.

தங்களுக்கு அரணாக போலீசு நிற்கிறது என்ற போதிலும், இந்தப் போராட்டம் தீட்சிதர் கும்பலுக்குப் பீதியை ஏற்படுத்திவிட்டது. ""நாங்களே ஆறுமுகசாமியை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்று பாட வைக்கிறோம். பிரச்சினையை இத்தோடு விட்டுவிடச் சொல்லுங்கள்'' என்று தூது விட்டது தீட்சிதர் கும்பல். "நந்தனை உரிய மரியாதையுடன் அழைத்துச் சென்ற' இந்தக் கிரிமினல் கும்பல், அடுத்த சதிக்கு அவகாசம் வாங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டோம். ஆணையரின் உத்தரவுக்கு எதிராக காதும் காதும் வைத்தாற்போல உயர்நீதி மன்றத்தில் தடையுத்தரவு வாங்கி விடுவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதால் விழிப்புடன் இருந்தோம். எதிர்பார்த்தபடியே தமிழுக்கு இடைக்காலத் தடை கேட்டு உயர்நீதி மன்றம் வந்தார்கள். அதனையும் கடுமையாக எதிர்த்து முறியடித்தோம். இறுதியாக ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் ஆறுமுகசாமியை மிரட்டியிருக்கிறார்கள் தீட்சிதக் காலிகள். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகார் மீது இந்தக் கணம் வரை போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எத்தனை தடைகள் வந்தாலும் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தே தீரும். அதனை எந்த தீட்சிதனாலும் தடுக்க முடியாது. திருவரங்கம் கருவறைக்குள் பெரியாரையும் அம்பேத்கரையும் கொண்டு சென்ற எமது தோழர்கள் இதையும் செய்தே தீருவார்கள். ஆனால், வெறும் 250 தீட்சிதர்கள் ஒரு லட்சம் மக்கட் தொகை கொண்ட சிதம்பரத்தை எப்படி ஆட்டி வைக்க முடிகிறது? ஆறு கோடித் தமிழ் மக்களை எப்படி இழிவுபடுத்த முடிகிறது? இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலாக நீடிக்க இன்னமும் அரசு ஏன் அனுமதித்திருக்கிறது? — என்ற கேள்விகளுக்குத்தான் நமக்கு விடை வேண்டும்.

···
ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, ஆதீனங்கள், மடங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பன எடுபிடிகளான "சூத்திரர்களின்' ஆதரவும், பார்ப்பனரல்லாத பக்தர்களின் சொரணையற்ற நிலையும்தான் தீட்சிதர்களின் திமிரைச் சாத்தியமாக்கியிருக்கிறது. சைவத்தையும் தமிழையும் சொல்லி சொத்து சேர்த்திருக்கும் கோடீசுவரர்களான ஆதீனங்கள் ஆறுமுகசாமியைத் தம் பக்கம் அண்டவிடுவதேயில்லை. தமிழில் பாடத் தடை விதிக்கும் தீட்சிதர்களுக்கெதிராக ஒரு இலட்சம் சிதம்பரம் மக்களிடமும் கையெழுத்து வாங்கியிருக்கிறோம். ஆனால், அந்த மனுவை வாங்கிக் கொள்வதற்குக் கூட அறிவாலயம் என்ற அரசியல் ஆதீனத்துக்கு நேரமில்லை.

சிதம்பரம் நகர தி.மு.க.வினர் தீட்சிதர் குடும்பங்கள் நடத்தும் பால்ய விவாகத்துக்குத் துணை நிற்கிறார்கள். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சித் தலைவர்களின் மனைவிமார்கள் தீட்சிதர்களிடம் பிரசாதம் வாங்கக் கையேந்தி நிற்கிறார்கள். தீட்சிதர்களைப் "பார்ப்பான்' என்று நாங்கள் கூறுவதைக் கண்டிக்கிறது "மார்க்சிஸ்டு' கட்சி. அதன் நகரத் தலைவரான மூசாவைக் (பிறப்பால் இசுலாமியர்) கோயிலுக்குள் வரவேற்று பரிவட்டம் கட்டி மரியாதை செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள் என்பது அப்புறம் நமக்குத் தெரியவந்த சேதி.
ஆறுமுகசாமி எனும் தனி மனிதர் சிற்றம்பல மேடையேறிப் பாடியிருக்கிறார். தாக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் தளராமல் போராடுகிறார். ஆனால், மேடைதோறும் தமிழ் கூறி வயிறு வளர்க்கும் அறிஞர்களோ, தொலைக்காட்சி மேடைகளில் தம்முடைய தமிழ்ப்பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளும் சான்றோர்களோ இந்தச் சிற்றம்பல மேடையேறும் கவுரவத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்து விடுகிறார்கள்.

இந்திய தேசியம் என்றாலே பார்ப்பனியம், ம.க.இ.க. மறைமுகப் பார்ப்பனியம் என்று எழுதித் தள்ளும் தமிழ்ப் "போராளி'கள் இந்த நேரடிப் பார்ப்பனியத்தின் சிண்டைப் பிடித்து உலுக்கியிருக்கலாம். தமிழகத்துக்குள்ளேயே தமிழனை மிரட்டும் இந்த ஆபத்தை அடித்து நொறுக்கியிருக்கலாம்.

எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் தில்லையில் தீட்சிதர்களின் ஆட்சி தடையின்றி நடக்கிறது. "நாங்கள்தான் செய்தோம்' என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்காக இவற்றையெல்லாம் கூறவில்லை. இந்தப் "பெருமை வேண்டாமென்று ஒதுங்கியிருக்கும் கட்சிகளின் "பெருந்தன்மையையும்', எமது அமைப்புகளின் முயற்சியைக் கவனமாக இருட்டடிப்பு செய்யும் அவர்களுடைய கீழ்மையையும் வாசகர்களுக்குப் புரிய வைப்பதற்காகக் கூறுகிறோம். அவ்வளவே.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்பவர்கள். தில்லையில் தீட்சிதர்கள் ஆக்கிரமிப்பாகட்டும், வடலூரில் பார்ப்பனமயமாகட்டும், தமிழிசையில் பார்ப்பனத் திருட்டாகட்டும், சிறுவணிகத்தை ரிலையன்ஸ் ஆக்கிரமிப்பதாகட்டும் — இவை ஒவ்வொன்றுக்கும் எதிராக எம்மைப் பேச வைப்பது வர்க்கப் பார்வை. போராடத் தூண்டுவது வர்க்க உணர்வு.

""பல்வேறு அமைப்புகள் இருக்க, தேவாரம்திருவாசகத்துக்காக நாத்திகர்களாகிய நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோமே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஐயா?'' என்று ஆறுமுகசாமியிடம் கேட்டார் ஒரு தோழர். ""அந்தச் சிவபெருமான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறான்'' என்று பதிலளித்தார் அந்தச் சிவனடியார்.

எங்களை "உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சிவபெருமான்', பாட்டாளி வர்க்க உணர்வுதான் என்ற உண்மையை அந்தப் பெரியவர் ஒருநாள் புரிந்து கொள்வார். சிவபெருமானும் விரைவில் புரிந்து கொள்வார்.—
.
ம.க.இ.க., வி.வி.மு.,பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.
.
.
இதனுடன் தொடர்புடைய கட்டுரை
***********************************
.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது