Saturday, January 26, 2008

"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

நன்றி: இரும்பு
டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து

Wednesday, January 23, 2008

நெஞ்சைச் சுடும் பிணங்கள்

செடி தூங்கும் விடிகாலை
பனித்துளி விறைத்தது பிணங்களைத் தீண்டி.
எல்லாமே அடையாளம் தெரியும் பிணங்கள்...
மழையில் குதிகால் வெளிறிக் கிடக்கு
விழியில் உறக்கம் எரிந்து கிடக்கு
முடிவாய் வந்த வார்த்தைகளோ,
காற்றின் அலறலில் உறைந்து கிடக்கு.
சீலை முடிப்பில் கொஞ்சம் சில்லறை இருக்கு
காலின் செருப்பு
உடல் தப்பித்துக் கிடக்கு.
அவள் தோலின் மேல் நசுங்கி
இரத்தம் கட்டிக் கிடக்கு.
முண்டியடித்த கூட்டத்தில்
அவள் மூச்சுப்பை திணறி வாய் மூடிக்கிடக்கு
கொண்டு வந்த கோணிப்பை
கொலைக்களத்தின் சாட்சியமாய் வாய் பிளந்து கிடக்கு.
நிலைதடுமாறி உயிரை விட்டாலும்
நிவாரண டோக்கனை விடாமல் பிடித்திருக்கும்
அந்தக் கைகளில் உழைப்பின் காய்ப்பிருக்கு.
மழைக்குத் தப்பிய உயிரை
அலைக்கழித்து மிதித்துக் கொன்றது யார்?
வேலைக்குப் போக வேனில் ஏறி
சேலத்துக்குப்போன யாரோ சிலபேர்
விபத்தில் சிக்கி மரணம் என்று ஊர் சொல்லுது.
தேசிய நெடுஞ்சாலையில் பிய்ந்து கிடக்கும்
ஐந்து பேரின் உடலைப் பார்த்தால்
தெளிவாய்த் தெரியுது அடையாளங்கள்.
குடலும் சதையும் என்று
குழம்பிப் போய் உற்றுப் பார்த்தால்
சும்மாட்டுத் துணியில்
இரத்தம் அடங்க மறுக்குது.
நசுங்கிக் கிடக்கும் சோற்று வாளிக்குள்
ஈக்கள் சில நடுங்கித் தவிக்குது.
பழைய சோற்றுப் பருக்கைச் சிதறலை
பச்சை இரத்தம் குடிப்பது கண்டு
மிரண்டு ஓடுது நாய்கள்.
கவனிப்பாரற்று பேசத் துடிக்கும்
இதயத்தின் நிணத்தில்
நசுங்கிக் கிடக்கும் பீடிக்கட்டு
மனிதர்கள்தான் என்ற அடையாளத்தை
பார்ப்பவர்களுக்குச் சொல்கிறது.
பாழாய் போன வயத்துக்காக
எங்கிருந்தோ வந்து
இப்படிக் கூழாய்ப் போகும்படி செய்த
கொலைகாரன் யார்?
அடையாளம் தெரியாத பிணங்கள்
அரசு மருத்துவமனையில் இருப்பதாய்
அடிக்கடி அறிவிப்புகள் வருகின்றன.
நரம்பு விடைத்த அந்தக் கைகள்
தன்னை ஒரு தறி நெசவாளி என்று
அடையாளம் காட்டுகிறது.
கைத்தோல் கிழிந்த அந்தக் கைகள்
தன்னை ஒரு கரும்பு விவசாயி என்று
அடையாளம் காட்டுகிறது.
இவ்வளவு பெரிய நகரத்தில்
இருப்பவர்களை நம்பிவந்து ஏமாந்து
கடைசியில்
உறவு சொல்லி அழுவதற்கும் ஒரு ஆளின்றி
ஒதுங்கிக் கிடக்கும் பிணங்களைப் பார்த்து
இனி ஒன்றுமில்லை என்று சென்றுவிட முடியுமா?
கருத்தின்றி இருப்பவர் கண்களை அருவெறுத்து
செத்தவர்களின் விழிகளில் குறிப்புணர்த்தும்
ஈக்களை விலக்கிப் பார்த்தால்
அங்கே கொலைப் பழி ஒன்று மிச்சமிருக்குது.
செத்தவர்கள்
விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
கொன்றவர்களின் அடையாளங்களை
பதிலேதும் இல்லாமல்
ஒரு தூசியைப் போல
துடைத்து விடமுடியுமா
உன் கண்ணில் விழுந்த பிணங்களை.
துரை. சண்முகம்

Tuesday, January 22, 2008

விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?

எச்சரிக்கை! எய்ட்ஸ் வியாபாரிகள்
..
10 ஆண்டுகளுக்கு முன் புதிய கலாச்சாரத்தில் வந்த "விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?" என்ற கட்டுரை தற்போது ஆணுறை வியாபாரத்திற்கு NGO கள் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கும் காலத்தில் மறுபதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என பிரசுரிக்கப்பட்டு உள்ளது. இதில் என்ன கூடுதல் பொருத்தம் என்றால் அன்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சராக கருணாநிதி என்பது. இன்றும் இவர்கள் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன முன்னேற்றம் என்றால் லட்சக்கணக்கான கோடியினை தங்கள் முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுத்திய இவர்கள் தங்களது சொத்தை பல்லாயிரக்கணக்கான கோடியாக உயர்த்தியதும் 83 கோடி இந்திய மக்களின் தினசரி வருமானத்தை ரூ 20 ஆக ஆக்கியதும் தான்.

ஐம்பதாம் ஆண்டு சுதந்திரத்தின் (?) விழாவைக் கொண்டாடும் ஆட்சியாளர்கள் நாடெங்கும் 'தேசபக்தி' பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டை நோக்கி மக்களை இழுத்துப் போக இருபத்தியோரு சானல்களை திறந்து தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்று ஆரம்பித்தபோது எதிர்த்து விமர்சித்தவர்களைப் பார்த்து, "உலக நாடுகளோடு போட்டி போட்டு முன்னேற இதெல்லாம் அவசியம், சும்மா குறைசொல்வதை விட்டு பாசிட்டிவ்வான விசயத்தைப் பாருங்கள்", என்று அறிவுரை கூறினார்கள் அமைச்சர் பெருமக்கள். இவர்கள் தீட்டிய திட்டங்களினால் ஏழை, எளிய மக்களுக்கு என்னடா பாசிட்டிவ்வான சங்கதி என்று எட்டிப் பார்த்தால் நாடு முழுக்க ஓரே எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆக இருக்கிறது.

"லாரி வாகன தொழிலாளர்கள் தான் அதிகம்; இல்லை நடுத்தர வர்க்க ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகம்; பெண்கள்; குழந்தைகள் தப்பவில்லை என்று மக்களிடம் சதவிகித கண்க்கைக் காட்டிவிட்டு, எய்ட்ஸின் சமூக தோற்றுவாய்க்கு காரணமான அரசும், ஆளும் வர்க்கமும் தப்பித்துக் கொள்கிறது.

எந்தவொரு சமூக சீரழிவும் அரசாங்கத்தின், அதிகார வர்க்கத்தின் துணையின்றி நடப்பதில்லை என்பது நாடே அறிந்த சங்கதி. சாராயாம், சூதாட்டம், சுரண்டல் லாட்டரி, ஆபாச சினிமா, ஆபாச புத்தகம், விபச்சாரம் என ஒவ்னொன்றையும் மெல்லமெல்ல அறிமுகப்படுத்தி தொழிலாக்குவது பின்பு அது சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தி பிரச்சினைகள் கிளம்பியவுடன் "இனி என்ன செய்வது? சாராயத்தை ஒழிக்க முடியுமா? விபச்சாரத்தை ஒழிக்க முடியுமா? ஜனங்கதான் இதுக்கெல்லாம் போகாம இருக்கனும்; அவங்கதான் விரும்புறாங்க", என்று பழியை மக்கள் மீதே போட்டு, மேற்பூச்சு நடவடிக்கைகள் எடுப்பதுதான் அரசாங்கத்தின் வாடிக்கை.

சிகரெட் பெட்டியில் "புகை உடல்நலத்திற்கு தீங்கு" என்று எழுதி வியாபாரம் செய்வதுபோல, மதுப் புட்டியில் "குடும்பத்தைக் கெடுக்கும்" என்று எழுதி வியாபாரம் செய்வது போல "எய்ட்ஸை தடுக்க நிரோத் உபயோகியுங்கள்" என்று எய்ட்ஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற அரசும், தன்னார்வ அமைப்புகளும். ஒழுக்கம், அன்பு, அகிம்சை என்ற பாதையில் தொடர்ந்து முன்னேறிய "கதர் வியாபாரிகள்" இவ்வளவு சீக்கிரம் நிரோத் வியாபாரிகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்றால், எல்லாம் புதிய பொருளாத கொள்கையின் மகிமைதான்.

அன்னிய மூலதனத்தைப் புகுத்தி விவசாயம், கைதொழில், சிறு தொழில்களை நசுக்கி நாசமாக்கி ஆயிரக்கணக்கான மக்களை குடும்பம் குடும்பமாக விபச்சாரத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்க்கையை சீரழித்தது யார்? இதற்குக் காரணமான இந்த அரசாங்கமும், அதிகார கும்பலுக்கும் "எய்ட்ஸை" பற்றி விழிப்புணர்வூட்ட எந்த அருகதையும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க இவர்களின் அணுகுமுறையே, எய்ட்ஸை ஒழிக்கப் போவதில்லை என கட்டியம் கூறுகிறது.

எய்ட்ஸை ஒழிப்பதைவிட ஆணுறை விற்பதிலேயே அரசாங்கம் குறியாய் இருக்கிறது. இது மிகையில்லை. வக்கிர சிந்தனைகளை வாரி வழங்க வகைவகையான சானல்கள், ஆபாச திரைப்படக் காட்சிகள், நட்புத் தொலைபேசி என்ற பெயரில் பேச்சு விபச்சாரம், பாலியல் சுற்றுலா என்று அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே மக்களிடம் "மனக் கட்டுபாடு அவசியம்" என்று இரட்டை வேடம் போடும் இந்த அயோக்கியத்தனத்தை ஒழிப்பதல்லவா முதல் அவசியம்.

சமீபத்தில் மகாலிங்கபுரத்தில் சிறுவர்கள் விபச்சாரம் பற்றி தெய்தி வெளியே வந்தபோது இந்திய சுற்றுலாத் துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தொட்டு உதிர்த்த வாக்குமூலம் இது, "வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர்களின் வருகையே நின்றுபோகும். சுற்றுலா வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகையால் குற்றவாளிகளை கடுமையாக ஏதும் செய்ய முடியாது"

பார்த்தீங்களா? எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன கல்லா பெட்டிக்கு காசு வந்தால் போதும் என்று அரசியல் விபச்சாரம் செய்யும் இந்த ஆளும்வர்க்க கும்பலா எய்ட்ஸை ஒழிக்கப் போகிறது?!

இந்திய கலாச்சாரம், புனிதம் என பொய்த்திரைகள் களைந்து கூட்டாளி நிர்வாணப்பட்டு நிற்கும் போது பங்காளி பார்த்துக் கொண்டிருப்பானா? எய்ட்ஸின் பிதாமகன் அமெரிக்கா (USAID) உடுக்கை இழந்த இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

குறிப்பாக தமிழ் நாட்டில் வி.எச்.எஸ் (வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் என்ற தன்னார்வ அமைப்பிற்கு 36 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு ஆள் அமர்த்தியுள்ளது. யாரால் எய்ட்ஸ் தோன்றியதோ, அவனே இங்குவந்து யார், யாருக்கு 'எய்ட்ஸ்' இருக்கிறது என்று அக்கரை எதிர்க்கத் தோன்றுமா? இந்தியாவின் உறவு கொள்கை வரை ஆராய்வதற்கு அமெரிக்காவுக்கு இல்லாத உரிமையா?

அதாவது வியாபாரம் என்பது கேவலமில்லையாம், விபச்சாரி என அழைப்பதுதான் பாவமாம். ஆனால் பாலியல் தொழிலாளர் (Sex - worker) என பங்குவமாக அழைக்கச் சொல்கிறது. இந்த அறிவாளிகளின் அகராதிப்படி இனி திருடனை திருடன் என்று அழைக்கக் கூடாது. களவுத் தொழிலாளி என கவுரவமாக அழைக்க வேண்டும்.

புதுப்பட்ஜெட் தயாரித்து ப.சிதம்பரம் சொன்னதுபோல, இனி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. அப்படியே வெளுப்பாக்கி கொள்ளலாம் என்றார். அதன்படி விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. எனவெ அதையும் ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எந்தச் சீரழிவையுமே ஒழிப்பதற்கு பதில், அதை ஒரு தொழிலாக ஆக்குவதிலேயே தன்முனைப்பைக் காட்டுகிறது அரசாங்கம்.

எய்ட்ஸ், ஊழல் எதுவானாலும் "பாதுகாப்பாக விளையாடுங்கள்" என்பதையே பண்பாடாக உருவாக்குகிறது அரசு. இதற்கான வேலைகளையும் மும்மூரமாக நடக்கிறது.

மைல் கணக்கில் நடந்துபோய், மணிக்கணக்கில் காத்திருந்து ரேஷன் அரிசி வாங்கிவரும் சிரமத்திற்கு மாற்று ஏற்பாட்டிற்கு வழி செய்யாத அரசு, கைக்கெட்டும் தூரத்தில் ஆணுறைகளை அள்ளிக் குவிக்கிறது.

இவர்களின் 'எய்ட்ஸ் கட்டுப்பாட்டை' நிரோத் அட்டை கவர்ச்சியே எடுத்தெறியும் அளவுக்கு, தொழில் சூடு பிடித்துள்ளது. பிரபலங்கைன் டி.வி விளம்பரம் முதல், விலாசம் எழுதப்படாத (இன்லெண்ட்) உள்நாட்டு காகிதம் வரை எய்ட்ஸ் எச்சரிக்கையுடன் நிரோத் விளம்பரம் இளைய பாரதத்திற்கு வழிகாட்டுகிறது. தனித்தனி ஊசி, இலவச பரிசோதனை, இன்னும் ஒரு படி மேலேபோய் வரலாற்றில் பதிக்குமளவுக்கு சாலையோரங்களில் மரங்களை நட்ட பெருமை அசோகருக்கென்றால், ஆணுறை தானியங்கி நட்ட பெருமை கருணாநிதிக்கு எனுமளவுக்கு அப்படியொரு கட்டுமான வேலை நாடெங்கும் நடக்கிறது.

பாவம் இதையெல்லாம் கண்ணாரக் காண ஒருவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆசையாய் அறிமுகப்படுத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் இவ்வளவு சீக்கிரமாய் எச்.ஐ.வி பாசிட்சிவாக மலரும் என்று தெரிந்திருந்தால், போயும் போயும் போபர்ஸ் பீரங்கியில் பெயரைக் கெடுத்துக் கொண்ட ராஜீவ் காந்தி தேச பாதுகாப்புக்காக ஒரு ஆணுறை கம்பெனி ஒப்பந்தத்திலேயே பணத்தை கமுக்கமாக அள்ளியிருக்கலாம். அதை அளவிற்கு எய்ட்ஸை ஒழிப்பதற்கான அடிப்படையை மாற்றாமல், நோய்க்கு உறை தைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் வியாபாரிகள்.

இதில் பத்திரிகையில் வாளிப்பான உடலையும் , எலும்பு துருத்திய உடலையும் பக்கம் பக்கமாக போட்டு, இப்படி இருந்தவனை, இப்படி ஆக்கிவிட்டது "எய்ட்ஸ்" என்ற விளம்பரம் வேறு; ஆபத்தைத் தடுக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்த ஒரே வழி "எய்ட்ஸ்க்கு நிரோத்; இந்தியாவிற்கு காந்தியம்"

எலும்பும் தோலுமாக இருக்கும் தொழிலாளி; எப்பவுமே துருத்தி இருப்பதற்கு யார் காரணம்? எய்ட்ஸா? அரசா? நமக்குத் தெரியும் எய்ட்ஸை வியாபாரம் செய்யும் அரசும், அதிகார வர்க்கமுமே அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம்; இனியும் நம்முடைய இரத்தத்தை பசிசோதித்துக் கொண்டிருப்பதில் பலனில்லை; இந்திய ஆளும் வர்க்கத்தை ஒரு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எய்ட்ஸ் உள்ளிட்ட எதற்கும் தீர்வில்லை.

- சித்தன்
நன்றி இரும்பு

நன்றி புதிய கலாச்சாரம்

Wednesday, January 16, 2008

'வளர்ச்சி"யின் சீனா : அவலத்தில் தொழிலாளர்கள்

உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்...
சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒருவரல்ல, இருவரல்ல; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொத்தடிமைக் கொடூரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள்; மற்றவர்கள் கிராமப்புற விவசாயிகள்.

ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணிநேர ஓய்வில்லாத வேலை; சோர்ந்து உட்கார்ந்தால் கங்காணிகளின் சவுக்கடி; வேலை செய்ய மறுத்தால் சம்மட்டி அடி அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போடப்படும். அங்கிருந்து யாரும் தப்பச் செல்ல முடியாதபடி வேட்டை நாய்களும் துப்பாக்கி ஏந்திய கங்காணிகளும் காவலுக்கு நிற்பர். வெற்றுக் கால்களுடன் பாதுகாப்புச் சாதனங்கள் ஏதுமின்றி வேலை செய்யும் இக்கொத்தடிமைகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் ஏராளம். ஆனாலும் எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. படுகாயமடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ ஒரு தொழிலாளி மரணமடைந்தால், அவர் அங்கேயே புதைக்கப்படுவார். சீனாவின் ஷான்சி, ஹோனான் மாநிலங்களிலுள்ள செங்கற் சூளைகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அளித்த சாட்சியங்களைக் கண்டு அந்நாட்டு மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

சீனாவின் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், சோசலிச விவசாயக் கூட்டுப் பண்ணைகளைத் தகர்த்து தனியாருக்கு நிலத்தைச் சொந்தமாக்கி, முதலாளித்துவத்தை நிலைநாட்டியதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றனர். நகரங்களுக்கு நாடோடிகளாக ஓடி, அங்கும் பிழைக்க வழியின்றி செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாகி உழல்கின்றனர்.

இக்கொத்தடிமைத் தொழிலில் கொழுத்த ஆதாயம் கிடைப்பதால், சமூக விரோத கும்பல்களால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். தமது அன்புக் குழந்தைகளைக் காணவில்லை என்று துடிக்கும் பலநூறு பெற்றோர்களின் கண்ணீர் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டிய பிறகு, அதிகார வர்க்கமும் போலீசும் வேறுவழியின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டபோதுதான், இக்கொத்தடிமைக் கூடாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்கள் அதிகார வர்க்கம்போலீசின் ஆதரவோடு நடந்து வந்துள்ளன என்றும், உள்ளூர் போலி கம்யூனிஸ்டு தலைவர்களின் பினாமிகளே இவற்றை நடத்தி வந்துள்ளனர் என்றும் பத்திரிகைகள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருகின்றன. பெய்ஜிங்கிலுள்ள சீன மக்கள் பல்கலைக் கழக சமூகவியலாளரான சௌ ஷியோ ஜெங், ""சீனாவில் ஏறத்தாழ 2 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்; அமைப்பு ரீதியில் திரண்டுள்ள புதுப்பணக்கார குற்றக் கும்பல்களே நாட்டை வழிநடத்துகின்றன'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நாட்டில் கொத்தடிமைக் கொடூரங்கள் நீடிப்பதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், இது வெறும் காகித அறிவிப்பாகவே முடிந்து போய்விட்டது. கொத்தடிமைக் கூடாரங்கனை நடத்தி வந்த புதுப்பணக்கார குற்றக் கும்பல்களில் ஒரு சிலரைப் போலீசார் கைது செய்த போதிலும், அவர்கள் அனைவரும் விரைவிலேயே விடுதலையாகி விட்டனர். அவர்கள் மீது பெயரளவுக்குக்கூட வழக்குகள் போடப்படவில்லை. காரணம், இக்குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலி கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீன போலி கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் அங்கம் வகித்த முக்கிய புள்ளியான லீ பெங்கும் அவரது குடும்பமும் வீட்டுமனை ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் கோடி கோடியாய் சுருட்டிய விவகாரம் நாடெங்கும் நாறியது. அந்த விவகாரம் அடங்குவதற்குள் சியாமென் துறைமுக நகரைச் சேர்ந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஊழல்கடத்தல் மோசடிகளில் சிக்கினார். அதைத் தொடர்ந்து பல போலி கம்யூனிஸ்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. சீன போலி கம்யூனிஸ்டு அரசாங்கம் ஊழல் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்ததோடு, சிலருக்குத் தூக்குத் தண்டனை விதித்து, இத்தகைய ஊழல்மோசடிகளை ஒடுக்க முயற்சித்தது.ஆனால், அதற்குப் பின்னரும் ஷாங்காய் நகர போலி கம்யூனிஸ்டுத் தலைவர் சென் லியாங் யூ, காண்டன் நகர செயலாளர், வூஹான் மாநிலச் செயலர் எனப் பலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானது. இப்போது, குற்றக் கும்பல்களோடு கூட்டுச் சேர்ந்து போலி கம்யூனிஸ்டு பிரமுகர்கள் கொத்தடிமைக் கூடாரங்களை நடத்தி வந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

செங்கற் சூளைகள், சுரங்கங்கள் மட்டுமல்ல; நகரங்களில் கட்டுமானத் தொழில், ஆயத்த ஆடை தயாரிப் புக் கூடங்கள், ஏற்றுமதிக்கான விளையாட்டு பொம்மை தயாரிப்பு, நெசவு மற் றும் காலணி தயாரிப்பு நிலையங்களிலும் அறிவிக்கப்படாத கொத்தடிமைத்தனம் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி, சீன ஆட்சியாளர்கள் இத்தகைய தொழிற்கூடங்களில் தொழிலாளர்கள் சங்கமாகத் திரளவும் தடை விதித்துள்ளனர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா வின் முதலாளிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு சம்ப ளம் கூட கொடுக்காமல் ஏய்க்கின்றனர்.

பெய்ஜிங் நகரில் ஓராண்டு காலமாக சம்பளம் தராமல் ஏய்த்த அன்னிய கட்டுமான நிறுவன முதலாளிகளின் பங்களாக்களை முற்றுகையிட்டு, தடுப்பரண்களை எழுப்பி 2003ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளிகள் போராடினர். ஷென்சென் நகரில் சம்பளம் தராமல் ஏய்த்த முதலாளிகளின் கார்களை சாலைப் பணியாளர்கள் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே போல தெற்கே ஃபூஷன் நகரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களும், வட கிழக்கே டா குயிங் எண்ணெய் துரப்பணத் தொழிலாளர்களும், ஜியாங்ஷி மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் சம்பள பாக்கிக்காகவும் பென்ஷன் தொகை முடக்கப்பட்டதை எதிர்த்தும் போராடினர்.

முறையாக சம்பளப் பாக்கியைக் கொடுக்காவிடில் உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்று சீன ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த போதிலும் எந்த முதலாளியும் அதைப் பொருட்படுத்துவதில்லை. முதலாளிகளின் சட்டைப் பையிலுள்ள சீன அரசாங்கம் அதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. தீவிரமாகிவிட்ட வேலையின்மையைச் சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி முதலாளிகள் சுரண்டுவதும், சம்பளம் கூடத் தராமல் ஏய்ப்பதும் நாடெங்கும் தீவிரமாகிவிட்டது. சீனாவின் நகர்ப்புற வேலையின்மை 7%க்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இது 9%க்கு எட்டிவிட்டால் சமூகக் கொந்தளிப்புகள் தீவிரமாகிவிடும் என்று சீனாவின் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், சீனாவின் யதார்த்த நிலைமைகளை மூடிமறைத்துவிட்டு, சீனா பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டிவிட்டதாகவும், வல்லரசாகப் பரிணமித்து வருவதாகவும் ஏகாதிபத்தியவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து, அன்னிய மூலதனத்தைத் தாராளமாக அனுமதித்து, பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளதாக ஏற்றிப் போற்றுகின்றனர். வரைமுறையற்ற சுரண்டல்சூறையாடலுக்கு கதவை அகலத் திறந்து விட்டுள்ள ""சீனாவைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று இங்குள்ள போலி கம்யூனிசத் துரோகிகளுக்கு உபதேசிக்கின்றனர். சீன போலி கம்யூனிச ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய தனியார் முதலாளித்துவ சேவையை, சோசலிசத்தை நோக்கிய வளர்ச்சியாகச் சித்தரித்து இங்குள்ள இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் துதிபாடுகின்றனர்.

ஆனால், சோசலிசம் பூத்துக் குலுங்கிய சீனாவோ, இன்று கொத்தடிமைத்தனத்திலும் கொடூர சுரண்டலிலும் சிக்கிக் குமுறிக் கொண்டிருக்கிறது. சீன மக்களோ, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் தலை மையை எதிர்நோக்கி மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சிக்காகக் காத்திருக்கிறார்கள்.· குமார்

Tuesday, January 15, 2008

தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் இந்து மதவெறி பாசிஸ்ட் மோடியை அடித்துவிரட்டும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டக் காட்சிகள் !..

"சைதையில் சாலை மறியல்" தொடங்கியது வெறிநாய் மோடியை அடித்துவிரட்டும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்!!

இன்று காலை 11.30 மணியளவில், சைதை மாஜிஸ்திரேட் கோர்ட்டின் அருகில் திரண்ட ம.க.இ.கவின் தோழமை அமைப்பான, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், "குஜராத் மக்களை கொன்று குவித்த வெறிநாய் மோடியை தமிழத்திலிருந்து விரட்டியடிப்போம்" என்று முழக்கமிட்டபடி சாலை மறியலில் இறங்கினர்.,

இதனால் சைதையிலிருந்து அடையாறு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது, அவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அத்தோழர்கள் பின்பு கைது செய்யப்பட்டனர்!!

வெறிநாய் மோடியை அடித்துவிரட்ட அணிதிரண்ட அந்த தோழர்களுக்கு எங்களது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!!

குஜராத் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த "பயங்கரவாதியை" அடித்துவிரட்டுவோம்!!

பெரியார் பிறந்த மண்ணில் தலையெடுக்க துடிக்கும் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகளை ஒழித்துக்கட்டுவோம்!!

நன்றி ஸ்டாலின்

Monday, January 14, 2008

ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்த R.S.S – V.H.P காலிகளின் தலைவன் "பயங்கரவாதி" மோடியை விரட்டியடிப்போம்!!
ச‌ன‌வ‌ரி 14(இன்று) மாலை 6 ம‌ணிக்கு "மலம்" துடைக்குமளவு மதிக்கத்தக்க "துக்ளக்" என்ற‌ பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையின் 38ம் ஆண்டுவிழாவில் காட்டுமிராண்டி மோடி க‌ல‌ந்து கொள்கிறான், அந்த‌ விழா ந‌ட‌க்கும் காங்கிர‌ஸ் அர‌ங்க‌த்தை முற்றுகையிட‌ ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம்(ம‌.க‌.இ.க‌), புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌னி(பு.மா.இ.மு), புதிய‌ ஜன‌நாய‌க‌ தொழிலாள‌ர் முன்ன‌னி(பு.ஜா.தொ.மு) ஆகிய‌ புர‌ட்சிக‌ர‌ அமைப்புக‌ள் அழைப்பு விடுத்திருக்கின்ற‌ன‌, அத‌ற்கான‌ அணிதிர‌ட்ட‌லில் வீச்சாக‌ ஈடுப‌ட்டிருக்கும் அவ்வ‌மைப்புக‌ள் பொதும‌க்க‌ளிட‌ம் விநியோகித்து வ‌ரும் துண்டுபிர‌சுர‌ம் தாங்கியிருக்கும் வாசக‌ங்க‌ள் இவை...உழைக்கும் மக்களே!பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு


அமெரிக்க கைக்கூலி "சோ"வும்


பாசிசத் தலைவி ஜெயாவும்


அமோக வரவேற்பு!


காங்கிரசோ அதற்கு மேடைவிரிப்பு!!ஊமைகளாக இருந்து போலி கம்யூனிஸ்டுகள் அனுமதிப்பு!


இது தமிழகத்திற்கு மூக்கறுப்பு!!


இதை முறியடிக்க "நக்சல்பாரி" கம்யூனிஸ்டுகளின் அணிவகுப்பு!!காந்தியை கொன்ற காவிப்படை,


காம‌ராச‌ரை கொல்ல‌ முய‌ன்ற‌ காலிப்ப‌டை,


த‌மிழ‌க‌த்தை ர‌த்த‌க்கள‌ரியாக்க‌ வ‌ரும் கூலிப்ப‌டை...


இந்த‌ வெறிப்படைக‌ளை விர‌ட்டிய‌டிக்கநாம் க‌ட்டியமைப்போம் செம்ப‌டை!!"முசுலீம் பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்தோம்


அவ‌ர்க‌ளின் பிஞ்சுக‌ளை வெட்டியெறிந்தோம்


அப்பாவி முசுலீம்க‌ளை கொன்று குவித்தோம்


அவ‌ர்க‌ளை எரித்து சாம்ப‌லாக்கினோம்" இது


குஜ‌ராத் மோடி வாரிசுக‌ளின் வாக்குமூல‌ம்.


இந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை


பெரியார் பூமியில் அனும‌திப்ப‌து கேவ‌ல‌ம்!


.
ப‌ய‌ங்க‌ர‌வாதி மோடிக்கு அமெரிக்காவில் நுழைய‌த் த‌டை!இனப்படுகொலைக்காக‌ அய்ரோப்பாவில் ப‌ல‌ வ‌ழக்குக‌ள்!!


இந்த‌ கேடுகெட்ட‌ மோடியை


த‌மிழ‌க‌த்தில் அனும‌திக்க‌ நாம் ம‌ட்டும் என்ன‌ கேணைக‌ளா?ப‌ய‌ங்க‌ர‌வாதி மோடியை "ம‌ர‌ண‌ வியாபாரி"


என்றார் சோனியா காந்தி!


இந்த‌ மோடிக்குதான் காம‌ராச‌ர் அர‌ங்க‌த்தை


த‌ருகிறார்காங்கிர‌சு த‌லைவ‌ர் கிருஷ்ண‌சாமி!!


கேட்டால் "அர‌சிய‌ல் வேறு வியாபார‌ம் வேறு" என்கிறார்.
காவிக‌ளுட‌ன் க‌ல‌ந்துவிட்ட‌ இந்த‌ காலிக‌ளையும் முறிய‌டிப்போம்!


தேச‌விரோத‌ மோடியை


தேசிய‌நாய‌க‌னாக‌ச் சித்த‌ரிக்கும்


இல‌.க‌ணேச‌ன், "சோ" போன்ற


‌பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை


குஜ‌ராத் மோடியோடு சேர்த்து விர‌ட்டிய‌டிப்போம்!!அனைவரும் அணிதிரள்வீர்!!!


மக்கள் கலை இலக்கிய கழகம்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி.

குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ""துக்ளக்''இல் இருந்து ""இந்தியா டுடே'' போன்ற பத்திரிக்கைகள் வரை, ""குஜராத் முதல்வர் மோடி அம்மாநிலத்தை அதிநவீனமாக்கி, சந்திரபாபு நாயுடுவை விடவும் முனைப்போடு அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்கி, அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முன்னோடி மாநிலமாக்கி இருக்கிறார்'' எனப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ""ஊக்கமிகு குஜராத்'' எனப் பெயர் சூட்டி, அதன் நவீனமயத்தைப் புகழ்வது இருக்கட்டும். இந்தியாவிலேயே பருத்தி விளைச்சலுக்குப் பெயர் போன குஜராத்தில் விவசாயிகளின் நிலைமை என்ன?

பருத்தி விவசாயம் பொய்த்துப் போனதால் கடனாளிகளாகி தற்கொலை செய்து கொண்ட மராட்டிய , ஆந்திர விவசாயிகளின் நிலைமைதான் குஜராத்திலும் இன்று நிலவுகிறது. இத்தனைக்கும் குஜராத்தில் தான் உயர்ரகப் பருத்தி அதிகமாக விளைகிறது. அம்மாநிலத்தின் மொத்த விளைநிலப்பரப்பில் 44% நிலங்களில் நீர்ப்பாசன வசதியுடன் பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. அம்மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் பூபேந்திர சிங், ""குஜராத் விவசாயிகளில் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை'' என்கிறார். ஆனால் அரசாங்கமே, 2006 இல் மட்டும் 148 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. முதல்வர் மோடியோ, பொதுக் கூட்டங்களில் பேசும் போது, ""எங்கள் மாநில விவசாயிகள், கஷ்டமான வாழ்க்கை நடத்தவில்லை. அவர்களில் பலரிடம் மாருதி கார்கள் கூட உள்ளன''என்கிறார். இவற்றுள் எது உண்மை?

ராஜ்காட் அருகிலுள்ள சரப்தார் கிராமத்தைச் சேர்ந்த பிரபா பென்னின் கணவர் ரமேஷ் விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரமேஷûம் அவரின் சகோதரர்களும் இணைந்து 20 ஏக்கரில் சீரகமும், பருத்தியும் பயிர் செய்து வந்தõர்கள். தொடர்ந்து இரண்டாண்டுகளாய் விளைச்சல் இல்லாததால், ரமேஷ் வெறுப்புற்றுத் தூக்கு மாட்டிக் கொண்டார்.
ரமேஷின் தற்கொலையைப் பதிவு செய்த போலீசு, தற்கொலைக்குக் காரணமாய் விவசாயம் பொய்த்ததை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது. பின்னர் அதனைத் திருத்திய போலீசு, சாவுக்குக் காரணமாக குடும்பப் பிரச்சினையைச் சொன்னது. ""உண்மையான காரணத்தை எழுதிவிட்டால் அரசின் இழப்பீடு கிடைத்து விடும். இதையே முன்னுதாரணமாக்கிக் கொண்டு பணத்துக்காகப் பலரும் சாகத் துணிவர்'' என வக்கிரமாய்ப் பேசுகிறது போலீசு.

வாட்லி கிராமத்தில் நம்பிய விவசாயம் மோசம் செய்ததால் 50,000 ரூபாய்க்குக் கடனாளியாகி, கடனைத் திருப்ப முடியாத நிலையில் கடந்த ஜூலையில் பஹூபாய் எனும் 35 வயது விவசாயி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரின் விதவை மனைவி வஜூபென், இச்சாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்கவும் முடியவில்லை. ""புகாரைப் பதிவு செய்யக்கூடப் பணம் கேட்கும் போலீசுக்குத் தர என்னிடம் பணம் இல்லை'' எனும் வஜூபென்னால் சாதி வழக்கப்படி (தர்பார் சாதிராஜ்புத்) தண்ணீர் எடுக்கக்கூட வீட்டை விட்டு வெளியே வர இயலாது அவர் விதவை என்பதால்;வயிற்றுப் பாட்டுக்கு? தனது உறவினர்கள் செய்யும் சிறு உதவிகளாலும், தனது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதாலும் ஏதோ வாழ்க்கை ஓடுகிறது.

அதே ஊரில் தர்பார் சாதியைச் சேர்ந்த அனக்காய் தக்கடா (வயது 32) விவசாயத்தில் நட்டமடைந்து 2007 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் விதவையோ கூட்டுக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப் பாட்டைச் சமாளிக்கிறார்.

பெண்களின் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கடன் வாங்கிச் செலவழிக்கும் விவசாயிகள், கடனை அறுவடைக்குப் பின் அடைத்து விடலாம் என எண்ணினால், விவசாய இடுபொருளின் செலவைக் கூட விளைச்சல் ஈடுகட்டுவதில்லை. வாங்கிய கடனும், அதன் வட்டியும் வளர்ந்து அவர்களின் உயிரைப் பறித்து விடுகிறது.

பனியா தேவ் கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவர் வல்லப்பும் அவர் மனைவி, மகன்,மருமகள் ஆகியோரும் கடந்த நவம்பரில் சோமநாதபுரம் அருகே கடலில் குதித்து ஒட்டுமொத்தமாய் உயிரை மாய்த்துக் கொண்டனர். மின்சாரக் கட்டணப் பாக்கி கட்ட வேண்டி 5 வட்டிக்கு லேவாதேவிக்காரர்களிடமிருந்து ஒண்ணரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். விவசாயம் அவர்களை ஏய்த்து விட்டது. வட்டிக்கு மேல் வட்டி வளர்ந்து 12 லட்சமாய் ஆனபிறகு, தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுப் பார்த்தார், வல்லப். கடன்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. "எந்நேரம் கடன்காரன் வீட்டில் வந்து உட்காரப் போகிறானோ' எனும் திகிலிலேயே அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை. அந்த அவமானமே அவர்களைக் கடல் நோக்கித் தள்ளிவிட்டது.

மலாக்நெஸ் கிராமத்தில் 5000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத தலித் விவசாயியின் வீட்டையே எடுத்துக் கொண்டுள்ளனர், கந்துவட்டிக்காரர்கள். ""அவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியாது. சிறு விவசாயிகளில் ஒருத்தர் கூட நல்லா இல்லை. வாழ்வதற்கே பெரும் போராட்டமாய் இருக்கிறது'' என்கிறார் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கானுபாய் கன்னியா.

விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு ஓடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூச்சிக்கொல்லி, விதை ஆகியவற்றின் விலை ஏறிக் கொண்டு வருகிறது. பாசனத்துக்கு தேவைப்படும் தண்ணீரின் கட்டணத்தை ஆண்டுக்காண்டு ஏற்றி வருகின்றனர். மோடி அரசோ மின்கட்டணத்தை இருமடங்கு ஏற்றி விட்டது. ஆந்திர, மராட்டிய மாநில விவசாயிகளை ஏமாற்றிய பி.டி.பருத்தி விதையின் விலை அதிகமாகி விட்டதால், அதே விதையின் போலி குஜராத் சந்தையில் மலிவாய் விற்கப்படுகிறது. அதை வாங்கி விதைத்துக் காய்ப் புழுக்களால் நாசமாகியுள்ளனர் விவசாயிகள்.
பெருகிக் கொண்டிருக்கும் குஜராத் தற்கொலைகளை மூடி மறைக்கும் மோடி அரசை எதிர்த்து, அவரது பா.ஜ.க. கட்சியின் துணை அமைப்பான ""பாரதீய கிசான் சங்கம்'' போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர் பிரபுல் சஞ்சேலியா, ""தற்கொலை மொத்தம் 148 மட்டுமே எனப் புளுகுகிறது மோடி அரசு... எங்களுக்குத் தெரிந்தவரை இது 300க்கு மேல்'' என்கிறார்.

"தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை போலீசு முதல் தகவலறிக்கையில் எழுதி விட்டால், குஜராத்தில் கொந்தளிப்பு உருவாகிவிடும் என்பதால் பொய்யை எழுதி நிரப்புகிறார்கள்'' என அவர் சாடுகிறார்.

குஜராத் அரசின் விவசாய விரோதக் கொள்கையை அந்த அமைப்பே, ""அரசு விவசாயிக்கு ஒன்றுமே செய்வதில்லை. அதன் நோக்கமெல்லாம் விவசாய நிலத்தைக் கைப்பற்றி, அதைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வசம் ஒப்படைப்பதுதான்'' என அம்பலப்படுத்துகிறது.
மோடி, தனது மாநில விவசாயிகள் கார் வைத்திருப்பதாகச் சொன்னதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போன மலாக்நெஸ் கிராம விவசாயிகள், தங்கள் தேய்ந்து பிய்ந்து போன செருப்புகளைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்டி, ""நல்ல செருப்பு வாங்கவே வக்கற்ற நிலையில் இருக்கும் நாங்கள் காருக்கு எங்கே போவது? முடிந்தால் இந்தச் செருப்புகளை மோடிக்கு அனுப்புங்கள். அவரிடமே கார் வைத்திருக்கும் விவசாயியைக் காட்டச் சொல்லுங்கள்'' என்கிறார்கள்.

இந்துக்களின் ராஜ்ஜியம் என மோடியின் அரசைப் பாராட்டி மகிழ்கிறார்கள் இந்து வெறியர்கள். ஆனால், மோடியின் விவசாய விரோத கொள்கைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் "இந்துக்கள்'தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, முஸ்லிம், கிறிஸ்துவ விரோத அரசு மட்டுமல்ல. அது ஏழை "இந்து' விவசாயிகளுக்கும் எதிரான அரசுதான். ஆனால், முதலாளித்துவ பத்திரிக்கைகள் அனைத்தும், அம்மாநில அரசு போலி என்கவுண்டர் (போலி மோதல்)களை மூடி மறைப்பதைப் போலவே, கணினிமயமாக்கிய "ஹைடெக்' முதல்வர் எனும் முகமூடியை மோடிக்கு அணிவித்து, நாட்டு மக்களை ஏய்த்து வருகின்றன.
·கவி

Thursday, January 10, 2008

குஜராத் படுகொலையைக் கண்டித்து தோழர் மருதையன் ஆற்றிய உரை

..
நன்றி இரயாகரன்

ஸ்டாலின் பற்றிய அவதூறுகளின் தோற்றமும், அதன் உள்ளடக்கமும்

மறுகாலனியாக்கத்தை ஆதரிக்கும் சில அடிமைநாய்கள் , இந்த மண்ணில் சொர்க்கத்தை படைத்து காட்டிய மார்க்சியத் தத்துவத்தின் மீது அவதூறை அள்ளிவீசும் நிலையில் அதை முறியடிக்கும் விதமாக தோழர் இரயாகரன் அவர்கள் எழுதிய இந்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
*********************************************************
நாம் ஏகாதிபத்தியம் தனது மூலதனத்தின் சொர்க்கத்தை மீட்கவும், பாதுகாக்கவும் அவதூறு பொலிந்து முன் வைக்கும் மற்றைய புள்ளி விபரங்கள் சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

1.சோவியத் யூனியனில் வறுமையில் இறந்தோர்
1921-1922 -50 லட்சம்
1932-1933 -60 லட்சம்
1946-1947 -5 லட்சம்

2.முதலாம் உலக யுத்தம் முதல் சோவியத் புரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தில் இறந்தோர் எண்ணிக்கை
1914-1922 -150 லட்சம்

3.கூட்டுபண்ணை உருவாக்த்தில் நிலவுடமை உடைய குலாக்கள் (நிலப்பிரபுகள்) கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய கணக்கு

1930 முதல் 1950 வரை 15-25 லட்சம் கொல்லப்பட்டதாக கணக்கு காட்டுகின்றது.

4.உழைப்பு முகாமுக்கு அனுப்பியதாக
1930 - 1953 60 லட்சம்

4.1. இதில் 1930 இல் குலாக்கல் 18 லட்சம் என்று ஏகாதிபத்தியம் கணக்கு காட்டுகின்றது.

இந்த உழைப்பு முகமுக்கு இட்டுச் சென்றோரில் 1930 இறப்பு வீதம் 13.3 சத வீதமாகவும், 1933 இல் 6.8 சதவீதமாகவும் இருந்தாக காட்டி 6 முதல் 7 லட்சம் பேர் இறந்தாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் கணக்கு கூறுகின்றது.

4.2. 1940 இல் 32 லட்சம் பேரை யுத்த முனையில் இருந்து அகற்றியதில் இருந்து முன் வைக்கின்றது.

4.3. 1944 இல் யுத்த முனையில் இருந்து அகற்றிய 575 768 பேரில் 146 892 (25.5 சதவீதம்) இறந்தாக கணக்கு கூறுகின்றது.

4.4. 1944 இல் கிரிமினல் குற்றத்துக்காக 2,28,392 பேரை கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பிதாகவும் அதில் 44,887 (20 சதவீதம்) இறந்தாக கணக்கு காட்டுகின்றது

5. 1940 இல் போலந்து அரசியலில் இருந்த முக்கிய அதிகார வர்க்கம் மற்றும் பொலிஸ் இராணுவத்தை சேர்ந்த 25700 பேரை கைது செய்து 4500 பேரை கொன்றதாக கணக்கு காட்டுகின்றது.

6.உணவு பஞ்சத்தில் இறந்தோர் என்ற கணக்கில் ஏகாதிபத்தியம் வைக்கும் புள்ளி விபரங்கள்;

6.1.சோவியத்தில் 100 -120 லட்சம்
6.2.சீனா 300 -400 லட்சம்
6.3.கம்பூச்சியா 8 லட்சம்

7. சீனாவில் வாக்க அரசியல் கொலை 50-70 லட்சம் என்றும், இதில் கலாச்சார புரட்சி காலத்தில் 20-30 லட்சம் என்கின்றனர்.

என்று பல கணக்குகளை ஏகாதிபத்தியம் கூட்டி கழித்து உலகம் முழுக்க தொகுத்து, 10 கோடியாக முன்வைக்கின்றது. இப்படி கட்டும் கணக்கு சரி பிழைக்கு அப்பால், இன்று மூலதனத்தின் நலனுக்காக உலகில் வருடாந்தம் நீர் இன்றி, மருந்த இன்றி, உணவு இன்றி வருடாந்தம் 19 கோடி மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எதிரான யுத்தத்தில் கடந்த 100 வருடத்தில் 10 கோடி பேர் இறந்தை குற்றம் சாட்டும் போது, அவதூற்றின் நோக்கம் நிர்வாணமாகின்றது. இந்த பத்து கோடி பேர் என்பது வியட்நாம், கம்போடியா, லாவுஸ், இந்தோசீனா, மலேசியா, சிலி, சீனா உள் நாட்டு யுத்தம், நிக்கரகுவா, எல்சவடோர் என்ற நீளும் கடந்த வர்க்கப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை பட்டியல் உள்ளடக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் தமது ஆக்கிரமிப்பின் போதும், கைக்கூலி அரசுகள் மூலம் நடத்திய வெறியாட்ட படுகொலைகளையும் பட்டியல் உள்ளடக்கின்றது. குற்றத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது சாத்துகின்றது. அத்துடன ஏகாதிபத்திய ஜனநாயக விரோத பொருளாதார தடை மூலம் பட்டினி போட்டு கொன்ற பட்டடியலையும் சேர்க்க தவறவில்லை. தமக்கு அடங்கி நடக்க மறுத்தவர்களை கொன்று போடும் உரிமையை, அடங்கி நடக்க மறுத்தவர்கள் மேல் இந்த புள்ளவிபரம் பழிசாற்றுகின்றது. உதாரணமாக 1917 புரட்சியை தொடர்ந்து சோவியத் உள்நாட்டு யுத்தத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து ஆயுதங்களையும் ஆட்களையும்; வழங்கிய ஏகாதிபத்தியங்கள், பின்னால் தாமே நேரடியாக ஆக்கிரமித்தனர். மொத்தமாக அன்று 1.5 கோடி இறந்தனர். இந்த மரணங்களை 1914 முதல் மதிப்பிடப்பட்டு உள்ளது. கம்யூனிசம் 1914 முதல் யுத்தத்துக்கு எதிரான பிரச்சாரத்தால் தான் புரட்சி எற்பட்டு இவ்வளவு இறந்தாக கூறி, 1914 முதல் யுத்தத்தில் இறந்தோரின் பொறுப்பை கம்யூனிசம் மேல் குற்றம் சாட்டு;கின்றனர். இப்படி 10 கோடி குற்றம் பட்டியில் ஆபாசத்தால் நிறைந்து காணப்பின்றது. பிரான்சில் ஒரு ஜனநாயகம் பேசும் ஆபாச முண்டம் ஒன்று கம்யூனிசத்தால் 80 கோடி மக்கள் இறந்தாக குற்றம் சாட்டி உள்ளது. இது முதலாம், இரண்டாம் உலக யுத்தத்தைக் கூட கம்யூனிசத்துக்கு எதிரான குற்றமாக முன்வைத்தது. இதை நாசிகள் ஒரு பிரச்சார சுவரோட்டியாக கம்யூனிசம் சமம் 80 கோடி மக்களின் உயிர் என்று ஒட்டினர்?. இதில் வேடிக்கை என்னவென்றால் உலகை பங்கிட இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தி ஏகாதிபத்திய மற்றும் நாசிய படுகொலைகளையும் கம்யூனிசத்தின் குற்றமாக பூச்சூடியுள்ளனர்.
முழு கட்டுரையை படிக்க கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
..

Wednesday, January 9, 2008

நரேந்திர மோடியே ஒரு ""தேசிய''அவமானம்

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ""விசா'' (நுழைவுச் சீட்டு) மறுக்கப்பட்டதும் ஆத்திரம் பொங்கக் குரைக்கிறது இந்துமதவெறிப் பாசிசக் கூட்டம்; இந்தியாவுக்கே, இந்திய மக்களுக்கே, இதன் அரசியல் சட்டத்துக்கே அவமானம் நேர்ந்துவிட்டது, இந்தியாவின் இறையாண்மைக்கே, இதன் ஜனநாயக மரபுகளுக்கே ஆபத்து வந்துவிட்டது என்று கூச்சல் போடுகிறது; ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சியின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், அமெரிக்க விமான நிலையத்தில் அம்மணமாக்கி சோதனையிடப்பட்டார். போபால் விஷ வாயுப் படுகொலைகளுக்குக் காரணமான முதலாளி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டான், இந்திய ஏழை விவசாயி மக்கள் மீது பூச்சி மருந்து தெளித்து பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தினந்தோறும் இவ்வாறானவை நடக்கும் போது அவமானம் இழைக்கப்பட்டதாக இவர்கள் யாருமே கருதவில்லை.

நரேந்திர மோடிக்கு அமெரிக்க ""விசா'' மறுக்கப்பட்ட பிறகுதான் சில உண்மைகள் இந்துமதவெறி பாசிஸ்டுகளின் ஞானத்துக்கு உறைக்கின்றன. ஈராக் படுகொலைகளையும் ""அபுகிரைப்'' சிறைச் சித்திரவதைகளையும் சான்று காட்டி, மனித உரிமைகள் விஷயத்தில் அமெரிக்காவின் இரட்டைத் தரம்பற்றி இப்போது கதறுகின்றனர். இவர்கள் இதுவரை ""பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவின் போர்'' விஷயத்திலும் இரட்டை அளவுகோல் பின்பற்றப்படுவதாகக் கதறிவந்தார்கள். அது அமெரிக்காவுக்கு எதிராக அல்ல, ஆதரவாக. அதாவது இசுலாமிய சர்வதேச பயங்கரவாதம் என்று அறிவித்து அந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை (தன்னை) இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடினார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, மனித உரிமை மீறல்களைத் தடுப்பது, மதச் சுதந்திரத்தைப் பேணுவது, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை, சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர், அணு ஆயுத மற்றும் பேரழிவு ஆயுதக் குவிப்பைத் தடுப்பது என்ற பெயர்களில் அமெரிக்கா உலகம் முழுவதும் உளவுப் படைகளையும் இராணுவ அதிரடிப் படைகளையும் ஏவி மேலாதிக்க, பயங்கரவாத வெறியாட்டம் போடுகிறது. உலக நாடுகளின் இறையாண்மையை மதியாத இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் இதுவரை இந்தியாவும் குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகளும் துணை போயிருக்கிறார்கள்.

குஜராத்தில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது சின்னஞ்சிறிய பின்லாந்து நாடு கூட கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவோ மௌனம் சாதித்தது. இப்போது ஈராக் படையெடுப்பு அபுகிரைப் சித்திரவதை குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடியின் அரசியல் குருவும் முன்னோடியுமான அத்வானி அப்போது அமெரிக்காவிற்கே போய் இந்தியப் படையை அனுப்பித் தருவதாக உறுதியளித்தார். பா.ஜ.க. மற்றும் காங்கிரசு அரசுகளின் வெளியுறவு மந்திரிகளும் கூட அவ்வாறே செய்தனர். இங்குள்ள எதிர்ப்பு காரணமாக தனியார் படை திரட்டி அனுப்பியுள்ளனர். இந்த வகையில் இந்துமதவெறிப் பாசிஸ்டுகளுக்கும் காங்கிரசுக்கும் பெரும் வேறுபாடு இல்லை. அரசியல் மற்றும் அரசுதந்திர காரணங்களுக்காக வேண்டியபோது அன்னிய பிரமுகர்களை அழைத்து விருதுகளும் கையூட்டுகளும் வழங்குவதும், வேண்டாதபோது விசா மறுப்பு உட்பட எதிர் நடவடிக்கைகள் எடுப்பதும் புதிதல்ல. விசா வழங்குவது அல்லது மறுப்பதை அரசுதந்திர ஆயுதமாக இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகளும் பயன்படுத்துகின்றன. விடுதலைப்புலி கிட்டு, பாலசிங்கம் மட்டுமல்ல, உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த கார்த்திகேசு சிவத்தம்பிக்குக் கூட விசா மறுக்கப்பட்டது. சமீபத்தில் அசாம் மற்றும் வடகிழக்கிந்தியா குறித்த சிறப்பு ஆராய்ச்சியாளரான டச்சு பேராசிரியருக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.

மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்; இந்தியக் குற்றவியல் சட்டத்தால் குற்றவாளி என்று நிரூபித்து தண்டிக்கப்படாத அவருக்கு விசா மறுப்பது சரியல்ல என்று காங்கிரசு உட்பட போலி தேசபக்தர்களும் மதச்சார்பற்றவாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இட்லர் கூடத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஜெர்மன் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. மதவெறிப் படுகொலைகளுக்குத் தலைமையேற்ற மோடி இன்னமும் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்தியாவும் அதன் அரசியல் சட்டமும் தனக்குத்தானே அவமரியாதை செய்து கொள்வதாகும். வெட்கித் தலைகுனிய வேண்டியதாகும். நரேந்திர மோடிக்கு விசா மறுப்பு இந்துமதவெறியர்களுக்குக் கிடைத்த தக்க தண்டனை, அவர்கள் கன்னத்தில் விழுந்த அறை என்று சிலர் ஆறுதல் அடைகின்றனர். இது அநீதி, அக்கிரமங்களை எதிர்த்து போராடி வீழ்த்துவதற்குத் துணிவு கொள்ளாதவர்கள் ""கடவுளாகப் பார்த்துக் கூலி தருவான்'' என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் கையாலாகாத்தனம்தான். மோடிகள் இந்த நாடே, இந்தச் சமூகமே வெறுத்து அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

Tuesday, January 8, 2008

பார்ப்பன பயங்கரவாதிகள் நச்சுப் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி காமராசர் அரங்கத்தைத் தருவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Related:
..

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!


குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர்.

""சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார். அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ""இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ""சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

""ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர்.

சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ""பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ""மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த "மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ""காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது.

உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ""கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார்.

""இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.

இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ""எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார். இதே சமயத்தில், ""கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு.

குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ""ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை.

···

இது போன்ற மர்மம் நிறைந்த ""தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று.

""சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ""குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.

இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ""சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ""தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான். இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ""இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.

பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ""குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ""இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

···

சோராபுதீன் கொலையை இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு நியாயப்படுத்தி வரும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொருபுறம், ""மற்ற மாநிலங்களில் போலி மோதல் கொலைகளே நடப்பதில்லையா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டது.

""மோதல்'' கொலைகளின் மூலம்தான் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் என்ற பொதுக் கருத்தை, ஓட்டுக் கட்சிகளும், போலீசு அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் இணைந்து உருவாக்கி வருகின்றன. மேலும், ""தீவிரவாதி யார்?'' என்ற கேள்விக்கு, வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி இடதுசாரி போலி கம்யூனிஸ்டுகள் வரை, அனைத்து ஓட்டுக் கட்சிகளின் பதிலும் ஒன்றுதான்.

அதனால்தான், காங்கிரசாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் சோராபுதீன் கொலையை நியாயப்படுத்தும் மோடியின் ""தேச பக்த'' அரசியலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ""சோராபுதீன் கொலையை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை'' என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் மூக்கறுந்து போய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.

மோதல் கொலைகள், தடா, பொடா போன்ற அரசு பயங்கரவாதத்தையும், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ""நக்சல்பாரிகள், தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள்'' என இந்திய ஆளும் கும்பல் உருவாக்கி வைத்துள்ள கருத்தை முதலில் அடியோடு புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதையும், வன்சாரா போன்ற காக்கிச் சட்டை கொலைகாரர்கள் ""ஹீரோ''க்களாக வலம் வருவதையும் தடுக்க முடியாது.

· குப்பன்

Monday, January 7, 2008

சென்னை சங்கமம் : தி.மு.க.கம்பெனியின் புதிய வியாபாரம்


தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து, பொதுநூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உதவியுடன் தமிழ் மையம் எனும் தன்னார்வ நிறுவனம், ""சங்கமம்'' எனும் பெயரில் பிப்.20ஆம் தேதி தொடங்கி பிப்.26 முடிய, 6 நாட்களில் 400 நிகழ்ச்சிகளை, சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தியது.

கரகாட்டம், தப்பாட்டம், செண்டா மேளம், இவற்றுடன் சுதா ரகுநாதனின் கர்நாடக சங்கீதக் கச்சேரி என கதம்பமாக நடந்த இந்நிகழ்ச்சி, அந்நிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நடத்தப்பட்டதாக அரசு அறிவித்தது.

""திருவிழா நம்ம தெருவிழா'' எனும் விளம்பரத்துடன் பல கோடி செலவில் நடந்த இவ்விழாவை ஒருங்கிணைத்தவர், கருணாநிதியின் மகள் கனிமொழி. இதற்கான விளம்பரம், நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியவற்றுக்கு அரசுப் பணம் தாராளமாய் செலவிடப்பட்டது. வழக்கமான அரசு விழாக்களுக்கு செலவிடப்படும் விளம்பரச் செலவின் வரம்பு, சங்கமத்திற்கென்றே ஓர் அரசாணை மூலம் தளர்த்தப்பட்டது. தங்குதடையின்றி வந்த விளம்பரப் பணம், பெரும் பத்திரிக்கை முதலாளிகளின் பையை மட்டும்தானே நிறைக்கும்! பத்திரிக்கை நிருபர்களுக்கு? கனிமொழி பற்றி "கவர் ஸ்டோரி' எழுத என ரூபாய் 2,000ஐ கவரில் வைத்துத் தந்தார்கள்.

கனிமொழியின் தாயார் ராஜாத்தி இலக்கிய அரங்கு ஒன்றை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஸ்பென்சர் பிளாசா, கடற்கரை, பூங்காக்கள் எனப் பல்வேறு இடங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள், "கலைஞ'ரின் மகளுக்கு மட்டும் இன்றி, கலைஞரின் 7 வயதுப் பேரனுக்கும் சலாம் வைத்தனர். அன்று பண்ணையார் வீட்டு நாய்க்குட்டிக்கும் பயந்து வாழ்ந்த விவசாயக் கூலிகளின் அவல நிலைதான் நெஞ்சில் நிழலாடியது. கவிஞர் இளையபாரதி, ராசாத்தி அம்மையாரை மேடையிலே "சின்னம்மா' என அழைத்து தன் பெயரை கலைஞரின் இதயத்தில் பொறித்து விட்டார்!

தமிழ் மையத்தின் நிறுவனரான கஸ்பார், ஈழத் தமிழர்களுடன் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியதை மையாக்கி "புலிகளுடன் தொடர்புடையவர்கள் கனிமொழியுடன் இணைந்து நடத்திய விழா' என்றும், சங்கமம் விழா வழியாக புலிகளுக்குப் பணம் சென்றிருக்கின்றது என்றும் அறிக்கை விட்டு, மீண்டும் விடுதலைப் புலிகள், பயங்கரவாதம்' என்று பீதி கிளப்பினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த பயங்கரவாதப் பீதிக்கு துக்ளக் சோவும், ஜூனியர் விகடனும் பக்கமேளம் வசித்து, சங்கமம் நிகழ்ச்சியை விமர்சிக்கும் போர்வையில் தங்களது பார்ப்பன அரிப்பைச் சொறிந்து கொண்டனர். சாதாரண பால்ரஸ் குண்டுகள் பிடிபட்டதற்கே "வெடிகுண்டு செய்யப் பயன்படும் இரும்பு குண்டுகள் புலிகளுக்கு கடத்தல்' என்று பேனைப் பெருமாளாக்கும் துக்ளக்கும், ஜூ.வி.யும், ஜெயலலிதாவும் இணைந்து சங்கமத்திற்கும், கஸ்பாருக்கும் உள்ள உறவை, அமெரிக்காவில் கைதாகியுள்ள சாக்ரடீஸ் எனும் ஈழ ஆதரவாளர் வரை இணைத்து கருணாநிதி அரசுக்கு நெருக்கடி தர முயல்கின்றனர்.

சங்கமத்தில் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் இடம் பெற்றதாலோ என்னவோ, "சோ' எனும் பார்ப்பன அறிவுஜீவி, ""இக்கலைகளைக் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் ஏற்கெனவே காத்து வருகின்றன. எனவே, இதற்கென பொதுமக்கள் பணத்தை வீணாக்கக் கூடாது'' என விமர்சித்துள்ளார். உழைக்கும் மக்களின் இசையையும், நடனத்தையும், காலங்காலமாய் இழிவுபடுத்தும் பார்ப்பனிய அழகியலின் விமர்சனம்தான் அது. இத்தகைய கேடுகெட்ட காமாலைக் கண்ணுக்கு, வானொலியும், தூர்தர்சனும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அக்கிரஹாரத்தின் கர்நாடக சங்கீதக் கச்சேரி, பரத நாட்டியம் நிகழ்ச்சிகளை வழங்கி (ண்ணீணிணண்ணிணூ), பொதுமக்கள் பணத்தைச் சூறையாடி வருவதும் தெரியாது. அரசுப் பணத்தில் பத்மா சுப்ரமணியம் போன்ற பார்ப்பன நடனமணிகள் கோனார்க் கோவிலில் ஆட்டம் போட, கோடிகளை "ஸ்வாஹா' செய்ததும் தெரியாது.

ஏற்கெனவே பேரனை மத்தியிலும், மகனை மாநிலத்திலும், கட்சியிலும் பதவிகளால் அலங்கரித்து வைத்துள்ள கருணாநிதி, தனது மகளையும் சங்கமம் மூலம் வாரிசு அரசியலுக்கென்று அரங்கேற்றி அழகு பார்த்துள்ளார். சங்கமம் தொடக்க விழாவில் ""எனது வழித் தோன்றலாக கலை, இலக்கியத்தில் எனக்குப் பிறகு அப்பணியை ஆற்றிட ஒரு வழித்தோன்றல் உருவாகி இருக்கின்றது'' என்று அவர் உள்ளம் பூரித்துச் சொன்னதே இதற்குச் சான்று. ஓட்டுக் கட்சிகள் எவையும் இதனை விமர்சனம் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளும் சரி, காங்கிரசு, பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகளும் சரி, தனக்குப் பிறகும் அரசுப் பணத்தை ஆண்டு அனுபவிக்க தனது வாரிசுகளை உருவாக்குவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

சங்கமத்திற்கு பொருள் ரீதியில் உதவிய தமிழ் மையம் அமைப்பில் யார் யார் உள்ளனர் எனப் பார்த்தால் படித்த பட்டதாரிகளை குறைந்த கூலிக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கும் "மாஃபோய்'' நிர்வாகவியல் நிறுவன அதிபர் பாண்டியராஜன், நட்சத்திர அந்தஸ்து மருத்துவமனை மூலம் மருத்துவ வணிகம் நடத்தி வரும் மியாட், நெதர்லாந்து நாட்டின் கவுரவத் தூதர் என ஒரு வானவில் கூடடணியே உள்ளது. இவர்களுக்கும், சங்கமத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஃபோர்டு பவுண்டேசனின் கூத்துப் பட்டறைக்கும், நசிந்து கொண்டு வரும் தமிழர் பாரம்பரியக் கலைகள் மீது அப்படி என்னதான் ஆர்வம்?

கருணாநிதியும் கூட இந்தக் கூட்டணியுடன் சேர்ந்திசைந்து ""தமிழர் கலைகள் அழிந்துவிடாமல் காக்கப்படல் வேண்டும்'' என்று பேசுகிறார். தமிழ் மையத்தின் சார்பில் இனி ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்கிறார், கனிமொழி.

இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அள்ளித் தெளித்தவாறு அவசர கதியில் அரசே ஏற்று நடத்துவதால் மட்டும் தமிழர் கலைகளைக் காப்பாற்றி விட முடியுமா? அதன் உள்ளடக்கமாக இருக்கும் பெண்ணடிமைத்தனம், புராணப் புளுகுகள் போன்றவை, இன்றைக்குத் தேவைப்படும் பார்ப்பன எதிர்ப்புணர்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய முற்போக்கான கருத்துக்களால் மாற்றப்படாவிட்டால், எந்த அடித்தட்டு, நடுத்தர மக்களும் ""வாலிவதம்'' ""வள்ளி திருமணம்'' போன்றவற்றுக்கு ஆதரவு தரப் போவதில்லை. வடிவத்தை மட்டும் நாட்டார் கலைகளில் இருந்து சுவீகரித்துக் கொண்டு முற்போக்கு சிந்தனைகளை கலைவடிவத்தில் தந்தால் மட்டுமே தமிழர் கலைகள் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் கூத்துப்பட்டறை தயாரிக்கும் 50 பேர் மட்டுமே பார்த்து ரசிக்கும் "செத்த கலை'யாக மாறிவிடும்.

பெரும்பாலான தமிழர் கலைகள் இன்றைக்கு மரணப் படுக்கையில்தான் உள்ளன. சங்கமத்திற்கு எனப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கலைஞர்கள், ""சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமே இல்லை, கனிமொழி அம்மா புண்ணியத்திலே'' எனச் சொல்லும் நிலையில்தான் உள்ளனர். இது ஏதோ தற்செயலாக நடைபெற்றுவிட்ட செயலல்ல. நாட்டார் கலைகளின் பிறப்பிடமான விவசாயப் பொருளாதாரம் சூறையாடப்படுவதால், தமிழர்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டு, காய்ந்த சருகு காற்றில் பறப்பது மாதிரி வயிற்றைக் கழுவிக் கொள்ள ஏதாவது ஒரு தொழிலைப் பார்ப்போம் என்று பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஓடுகின்றனர். பறிக்கப்படும் அவர்களின் நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகின்றன. ஓர் இனத்தின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருப்பதுதானே அவ்வினத்தின் கலைகள்? தமிழன் மட்டும் பஞ்சைப் பராரியாய் ஆக்கப்படுகையில், தமிழ்க் கலைகள் மாத்திரம் காக்கப்படுமா என்ன?

உழைக்கும் மக்களின் நலனைக் கொள்ளையிடும் ஒரு கூட்டம், அவர்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் நரித்தந்திரம் இப்போது அனைத்து மட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. நம் நாட்டின் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, நீராதாரத்தை அழித்து வரும் கோக்கோ கோலா, சென்னைப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில், சங்கமம் எனும் பெயரில் தன்னார்வக் குழுக்களும், சில தரகு முதலாளிகளும், அரசும் இணைந்து தமிழர் கலைகளைக் காக்கப் புறப்பட்டிருப்பதும், அதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் கண்டுப் பிடித்திருக்கும் சடங்கே "சங்கமம்'.

உலகமய, தாராளமயக் கொள்கையால் கஞ்சித் தொட்டி நோக்கித் தள்ளப்படும் நெசவாளர்களின் பாரம்பரிய தறி நெசவை, "காட்சிப் பொருளாக்கிய' சங்கமத்தின் நிகழ்ச்சி ஒன்றே போதும், சங்கமத்தின் நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கு!·
கவி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது