Tuesday, July 31, 2007

"விறலி விடு தூது"

அயல்நாட்டுக் கடனில்
அலங்காரம் செய்கிறாரகள் 'பாரதமாதாவுக்கு'
..
உதட்டு சாயத்திற்கு மட்டும்
உனது இரத்தம்
..
ஒப்பனைகளின் சுமைதாளாமல்
நெளிகிறது தேசியக்கொடி
..
பொட்டுவைப்பதும் இந்து தர்மம்
பொட்டுக் கட்டுவதும் இந்துதர்மம்
..
தயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லி
தாராளமாய் விடுகிறார்கள் தூது
..
அப்பன் வருவான் மகன் வருவான்
ஜப்பான் வருவான் , அமெரிக்க வருவான்
தப்பென்று தள்ளாதே
எவன் வந்தாலும் 'இருப்பு' கொள்வாய்
இளைய பாரதமே !
..
காவிரியின் கழிமுகம் காய்ந்தாலென்ன
கருகும் குருத்துக்களை
கடல் நீரால் தலைமுழுகி
பெரும் இலாபமே ஒழுக்கமென்று
கயல்விழி காட்டி வலைகளோடு இணங்குவாய்
வளமான இறால் குஞ்சே!
..
குறிஞ்சி மலைத்தேனை
எவன் கொண்டு போனாலென்ன
வேப்பங்கனிகளையும்
வெளிநாட்டான் கொண்டாலென்ன
'கோக்கோ கோலாவின்' குளிரில் நனைந்தபடி
தேசம் ஒரு தேன் கிண்ணம்
திருமுடுதற்கோர் விலையென்று
உலகத்தரம் நோக்கி
உயர்ந்திடுவாய் பொன் வண்டே !
..
வலையோசை எழுப்புதல் போல்
உன் அலையோசை கடல்மேனி
அந்நியனுக்களித்தாலோ அன்னியச் செலவாணி
உள்ளூர்ப் படகுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு
பன்னாட்டு திமிங்கலத்தை
நெஞ்சாரத்ட் தழுவிடுவாய் நெய்தல் நித்திலமே!
..
தமிழனா,இந்தியனா?
தரம்பார்க்க தேவையில்லை
கடின உழைப்பாற்ற கைகள் இருந்தாலும்
இடமில்லையெனச் சொல்லி எறிந்துவிட்டு
'முதல்' கொண்டு வருபவனை
முல்லை மணங்கமழ வரவேற்று
கதவை திறப்பாய் கனிவான பாரதமே!
..
மருதத்தை நெய்தலாக்கி
மண்ணையெல்லாம் பாலையாக்கி
'தூது' தொடர்கிறது
'தூ'...மானம் போகிறது.
..
துரை. சண்முகம்
நன்றி: புதிய கலாச்சாரம் ஆக,செப்,அக் 1994

Monday, July 30, 2007

ரிலையன்ஸ் ஃபிரெஷ் எதிர்ப்பு : வாழ்வுரிமைக்கான போராட்டம்

""சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் நுழைவதால், சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது'' என ஆளும் கும்பலும், அவர்களது எடுபிடிகளும் நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு, சிறுவணிகர்கள் ஏமாந்து போய்விடவில்லை.
..
மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும், சிறு வணிகர்களின் ஆதரவோடு, மே 1, தொழிலாளர் தினத்தன்று, சென்னையில் ரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தின.
..
மே 5 அன்று சேலத்தில் நடந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில், சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சில்லறை வணிகத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி சிறு வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மே 18ஆம் நாளன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தியதோடு, ஈரோடு நகரில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் நடத்தியுள்ளனர்.
..
ஜார்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மே 12 அன்று, சிறு வணிகர்களும், காய்கறி வியாபாரிகளும் இணைந்து ரிலையன்ஸ் பிரெஷ்ஷûக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பொழுது, அவர்கள் ரிலையன்ஸின் கடைகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு, அக்கடைகளுக்குள் நுழைந்து கலகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஞ்சி நகரிலுள்ள ஐந்து ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைகளையும் இனி போலீசு பாதுகாப்போடுதான் நடத்த முடியும் என்ற அச்சுறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
..
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், காய்கறி வியாபாரிகள் மே 20 அன்று முகேஷ் அம்பானியின் உருவ பொம்மையை எரித்துத் தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
சிறு பொறியாக எழுந்துள்ள இப்போராட்டங்களை ""வன்முறை'' என்றும், வளர்ச்சிக்கு எதிரானவை என்றும் ஆளும் கும்பல் அவதூறு செய்து வருகிறது.
..
இந்தியாவில் ஏறத்தாழ 4 கோடி குடும்பங்கள் சிறு வணிகத்தை நம்பித்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றன. சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள அம்பானியும், டாடாவும், பிர்லாவும், பாரதியும், அவர்களின் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளான வால் மார்ட்டும், காரஃபோரும் இந்த 4 கோடி குடும்பங்களை அழித்துத்தான், 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் சில்லறை வணிகச் சந்தையைக் கைப்பற்றத் திட்டம் போடுகின்றன. நான்கைந்து முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக, 4 கோடி குடும்பங்கள் அழிக்கப்படுவது வன்முறை இல்லையாம்; அது பொருளாதார வளர்ச்சியாம்! தனியார்மய தாராளமயத்தின் நீதி எப்படியிருக்கிறது பாருங்கள்.
..
சட்டமே, இந்தச் சந்தை பயங்கரவாதத் தாக்குதலைப் பாதுகாக்கும் பொழுது, நாம் ஏன் இந்தச் சட்டத்திற்கு அடிபணிந்து நடந்து கொண்டு போராட வேண்டும்? சட்டத்தையும், ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணித்து விட்டு, கலகத்திலும், போராட்டத்திலும் இறங்குவதன் மூலம் மட்டுமே, இச்சந்தை பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.
..
ராஞ்சி நகர சிறு வியாபாரிகள் ரிலையன்ஸ் பிரெஷ்ஷûக்கு எதிராக நடத்தியிருக்கும் ""சட்டத்தை மீறிய வன்முறை போராட்டம்'' இந்த உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.
Related:

Saturday, July 28, 2007

அமெரிக்க அருவருடிகளின் அடிமைச்சாசனம்

அனுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளீயிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அருவருடிகள் "இதில் அனுகுண்டு வெடிக்க கூடாது என்ற நிபந்தனை இல்லை, இதன் மூலம் நாம் எதையும் அடகு வைக்கவில்லை; நமது உரிமைகளை அதிரிகரித்து உள்ளோம்" என மீண்டும் விளக்கம் தருகின்றனர்.
..
ஆனால் இந்த ஒப்பந்தம் ஒரு "அடிமைச் சாசனம்" என புதிய ஜனநாயகம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.இந்த கெளரவ அடியாட்களின் யோக்கியதை என்ன என்று அறிய இது தொடர்பாக புதிய ஜனநாயகம் ஜனவரி 2007 இதழில் வந்த கட்டுரையை மறு பிரசுரமிட்டு உள்ளோம்.
..
இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்:
அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது
**********************************************************************************************
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக''க் கூறி, இந்திய மக்களின் காதுகளில் பூ சுற்றி வந்தார்கள். இந்தக் கெட்டிக்காரர்களின் குட்டை, இன்று அமெரிக்காவே புட்டு வைத்து விட்டது.
..
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிபந்தனையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் இந்தியா அமைதிக்கான அணுசக்தி கூட்டுறவுச் சட்டம், ""இந்தியா எவ்வளவு யுரேனியத்தைக் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதில் தொடங்கி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது முடிய அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை இனி இந்திய நாடாளுமன்றத்திற்குக் கிடையாது; அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தான் உண்டு'' எனப் பச்சையாகக் குறிப்பிட்டுள்ளது.
..
காலனிய ஆட்சி காலத்தில் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் கீழ் காலனிய இந்திய அரசு செயல்பட்டதைப் போல, இப்பொழுது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் "சுதந்திர' இந்திய அரசு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
..
இந்திய நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரிவிக்காமல், அமெரிக்காவில் வைத்துதான் கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டார். இந்த அறிக்கை கையெழுத்தாகி (ஜூலை, 2005) ஒன்பது மாதங்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வந்தபொழுது, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான், ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை, சிவில் அணு உலைகள், இராணுவ அணு உலைகள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா முன்வர வேண்டும்; அணுகுண்டுகள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனிய வகைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'' என்பன உள்ளிட்டு, அமெரிக்கா விதித்த பல்வேறு நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மறுக்க வழியின்றி அம்பலமானது. இதன் பிறகுதான், இந்திய அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கினர்.
..
இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முகமாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே சில வாக்குறுதிகளைக் கொடுத்தார்; அணுசக்தி விஞ்ஞானிகளையும் நேரடியாகச் சந்தித்துப் பேசியதோடு, இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ""ஹைட் சட்டம்'' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமெரிக்கச் சட்டமோ, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது.
···
""சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஆற்றல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும்; சிவில் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் செறிவூட்டுவது; கனநீரை உற்பத்தி செய்வது உள்ளிட்ட உரிமைகளை இந்தியாவிற்குத் தருவதோடு, அவற்றுக்கான தொழில்நுட்பத்தையும்; சாதனங்களையும் பெறும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும்; சிவில் அணு ஆற்றல் தொடர்பாக மேலை நாடுகள் அனுபவிக்கும் அதே உரிமைகள் இந்தியாவிற்கும் கிடைக்கும் என்ற வாக்குறுதியை அமெரிக்கா வழங்க வேண்டும்'' இது, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளுள் ஒன்று.

அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியத்தைச் செறிவூட்டவும், மீண்டும் புத்தாக்கம் செய்யவும் பயன்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்துள்ள இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து முன்னேறிய தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக, உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் யுரேனியம் இந்தியாவின் தேவைகளை ஈடு செய்ய முடியாமல் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தியபிறகு, அதனை இந்தியாவிலேயே செறிவூட்டிக் கொள்ளும் உரிமையும் கிடைக்கும் என இந்திய அரசு எதிர்பார்த்தது.

ஆனால், அமெரிக்கச் சட்டமோ, இந்த உரிமைகளையும், இதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்டு 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அணுஆற்றல் வழங்குவோர் குழுமம், இந்த உரிமையை தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விடாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையே அணு ஆற்றல் கூட்டுறவு தொடர்பாகப் பேச்சு வார்த்தை தொடங்கிய பொழுது, இந்தியா, ""தனது சிவில் அணு உலைகளை, தனது விருப்பப்படிதான் சர்வதேச அணு ஆற்றல் கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தும்'' எனக் கூறியதாகவும், அதன் பின்னர்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு, ""தனது சிவில் அணு உலைகளை, அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் எவ்வித நிபந்தனையும் இன்றி சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதித்ததாகவும்'' கூறப்படுகிறது. ""இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை, அந்த அணுஉலைகளின் ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்த பிறகே, இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டதாக'' மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டமோ, ""இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு எவ்வித உறுதியும் அளிக்காததோடு, இந்த அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்தியா இறக்குமதி செய்து சேமித்து வைக்கவும்'' தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவை ஓரங்கட்டிவிட்டு, அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தைச் சேர்ந்த மற்ற நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா முயன்றால், அதனையும் தடுக்க வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது.

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது போல, அமெரிக்காவின் விருப்பம், கண்காணிப்பின்றி, இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை இயக்கும் சுதந்திரத்தை இந்தியாவிற்குத் தரக்கூடாது என்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம்.

""அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியிருப்பதால், இந்தியாவிற்கு அணுஆயுத வல்லரசு என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்; அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய ஐந்து அணு ஆயுத வல்லரசுகளை எந்தளவிற்கு சர்வதேச அணுசக்தி கமிசன் கண்காணிக்குமோ, அதைப் போலத்தான் இந்தியாவையும் கண்காணிக்க வேண்டும்; இதற்காக, சர்வதேச அணுசக்தி கமிசனில் இந்தியாவிற்கெனத் தனி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' எனக் கோரியிருப்பதாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டம் இவற்றுள் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, இந்தியாவின் 14 அணு ஆலைகள் அணு சக்தி கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்மோகன் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, அணுசக்தி கமிசனின் கண்காணிப்புக்கு இந்தியா உட்படுத்தப்பட்ட பிறகுதான், ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என அமெரிக்கச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

""அமெரிக்காவின் கண்காணிப்பாளர்கள் இந்திய அணு உலைகள் பக்கம் சுற்றுவதை அனுமதிக்க மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார், மன்மோகன் சிங். அமெரிக்கச் சட்டமோ, ""அமெரிக்கா அணுசக்தித் துறையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவின் சிவில் அணு உலைகளைக் கண்காணித்து, அவை பயன்படுத்தப்படும் விதம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

""அமெரிக்க அதிபர், இந்தியாவின் அணுசக்தி பயன்பாடு குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தரவேண்டும்; அதன் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்ற நிபந்தனையை அமெரிக்கா இப்பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே விதித்தது. இந்த நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் வந்த எதிர்ப்பையடுத்து, மன்மோகன் சிங், ""இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார்.

அமெரிக்கச் சட்டமோ, ""சான்றிதழ்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ""மதிப்பீடு'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மேல், வேறெந்த சலுகையினையும் வழங்கவில்லை.

""இந்தியாவில் கட்டப்படும் புதிய அணுக்கரு உலைகள் பற்றி; அணு ஆயுத உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டால், அம்மாற்றங்கள் பற்றி; அணுகுண்டினைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளின் சேமிப்பு பற்றி; அவை என்னென்ன வகையான மூலப்பொருள் என்பது பற்றி; சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வராத, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அணு உலைகளின் செயல்பாடு பற்றி; ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே வெட்டி எடுக்கப்படுகிறது; அதில் எவ்வளவு யுரேனியம் அணுகுண்டு தயாரிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது; அணுசக்தியின் மூலம் ஓர் ஆண்டில் எவ்வளவு யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது'' என்பது பற்றியெல்லாம் அமெரிக்க அதிபர் ""மதிப்பீடு'' செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.
""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.''

""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை (அணுகுண்டு) உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஈரானைக் கட்டுப்படுத்தவும்; தேவை ஏற்பட்டால் ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா முழுமையாகவும், ஊக்கத்தோடும் ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என அமெரிக்கச் சட்டம் குறிப்பிடுகிறது. இதனைப் பச்சையாகச் சொன்னால், இந்தியா, அமெரிக்காவின் உளவாளியாக, அடியாளாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

இந்தியா வருங்காலத்தில் புதிதாக அணுகுண்டு சோதனைகளை நடத்தாமல் தடுப்பதற்காக, ""அணுகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் இச்சட்டம், ""எந்தக் காரணத்தை முன்னிட்டாவது, இந்தியா மீண்டும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துமானால், அமெரிக்கா இந்தியா அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ஒருதலைபட்சமாக முறித்துக் கொள்ளலாம்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு அளித்த சாதனங்கள் அனைத்தையும், அமெரிக்கா திரும்பப் பெற்றுவிட வேண்டும்; ஒப்பந்தம் முறிந்து போன பிறகும்கூட, இந்தியாவின் சிவில் அணுஉலைகளை மூன்றாவது நபர்கள் கண்காணிப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
···
இந்தியாவின் அரைகுறை இறையாண்மையைக் கூட உருவிக் கொண்டுவிட்ட இந்தச் சட்டம், இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளுமே, இந்த விசயம் குறித்து கூட்டுக் களவாணிகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளன.

அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரானையே தூக்கியெறியத் தெம்பில்லாத பா.ஜ.க., இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோருவதை, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையோடுதான் ஒப்பிட முடியும்.

1998இல் பா.ஜ.க. ஆட்சியில் இரண்டாம் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியபின், ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, ""இனி இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தாது'' என ஐ.நா. மன்றத்திலேயே வாக்குறுதி அளித்தார். அப்பொழுது பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் அணு உலைகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரச் சம்மதிப்பதாக, அமெரிக்காவின் உள்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல்லிடம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு இவைதான் அடிப்படைகள் என்கிறது அமெரிக்கா. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க. போட்டுச் சென்ற கோட்டில், காங்கிரசு ரோடு போட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
···
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவோ, இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்திற்காகவோ உருவாக்கப்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் ஈரான் நாடுகளிடையே உருவாகவிருந்த எரிவாயு ஒப்பந்தத்தைத் தகர்ப்பதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அரசுதந்திரம்தான் இந்த ஒப்பந்தம்.

""ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், இந்தியாவிற்கு அணுசக்தி துறையில் உதவுவோம்; இந்தியாவை வல்லரசாக்குவோம்'' என ஆசைகாட்டிய அமெரிக்கா, ""இதற்கு மறுத்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்போம்'' என கடந்த மார்ச் 2005இல் மிரட்டல் விட்டது
.
இது ஒருபுறமிருக்க, ""புதிய நூற்றாண்டுக்கான அமெரிக்காவின் திட்டம்'' ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்டுத்தக் கோருகிறது. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நோக்கத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது, அமெரிக்கா. ஏற்கெனவே சீன எதிர்ப்பில் மூழ்கிப் போயிருக்கும் இந்தியா; தெற்காசியாவில் அமெரிக்காவின் அடியாளாக அங்கீகாரம் பெறுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த இந்தியா, அமெரிக்கா வீசியெறிந்த இந்த எலும்புத் துண்டை, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியா இடையே நடக்கவிருக்கும் அணுசக்தி வியாபாரத்தில் தனியார் முதலாளிகளும் பங்கு பெறலாம் என்பதால், இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள். 4,50,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவே, ""இறையாண்மை, சுயசார்பு'' போன்ற பழைய முகமூடிகளை அவிழ்த்து வீசிவிடத் தயாராகி வருகிறார்கள்.

அதனால்தான், நாட்டின் சுயமரியாதைக்கே எதிராக உள்ள இந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணியாத மன்மோகன் சிங் கும்பல், ""இந்தச் சட்டம் அமெரிக்க அதிபரைத்தான் கட்டுப்படுத்தும்; இந்தியாவை அல்ல'' என சால்ஜாப்பு சொல்கிறார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே உருவாகவுள்ள ""123 ஒப்பந்தத்தில்'' ங்""ஹைட்'' சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தாகவிருக்கும் ஒப்பந்தத்தின் பெயர் தான் "123 ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் இந்தியாஅமெரிக்கா இடையே அணுசக்தி கூட்டுறவும், வர்த்தகமும் தொடங்கப்படும்.சி இந்த விதிகளைச் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என வீராப்பு பேசுகிறார்.

""அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்து போன இரகசியம் மார்ச் மாதம் அம்பலமானபொழுது, அமெரிக்கச் சட்டம் வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கினார்கள்; அமெரிக்க சட்டம் வந்த பிறகு "123 ஒப்பந்தம்' வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்'' என மன்மோகன் சிங்கின் வீராப்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.என். பிரசாத் அம்பலப்படுத்துகிறார்.

சர்வதேச அணுசக்தி கமிசனில் ஈரானுக்கு எதிராக இந்தியா மூன்று முறை வாக்களித்தது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வெனிசுலாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வெள்ளை மாளிகையில் இருந்துவந்த தொலைபேசி மிரட்டலைப் பூசி மெழுகியது போன்ற விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காதான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு துப்பாக்கி ரவையைக் கூடச் சுட முடியாது என்ற கேவலமான உண்மையும், நாடாளுமன்றத் தாக்குதலின் பின் நடத்தப்பட்ட படை திரட்டலின் பொழுது பச்சையாகத் தெரிந்துவிட்டது. எனவே, புதிய அணுகுண்டு சோதனைகள் நடத்த வேண்டிய தேவையும் இந்தியாவிற்குக் கிடையாது.இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகள், ""123 ஒப்பந்தத்தில்'' சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும், இந்தியாவின் அமெரிக்க அடிவருடித்தனத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதே உண்மை.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடே மறுகாலனியாக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், அணுசக்திக் கொள்கையும் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடின்றிச் சுதந்திரமாக இயங்க முடியும் என நம்புவதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ, கடந்த ஆண்டு ஜூலையில் புஷ்ஷûக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அமெரிக்கச் சட்டமும், 123 ஒப்பந்தமும் இருக்க வேண்டும் எனக் கூச்சல் போடுகிறார்கள். அடியாளாக இருந்தாலும், கொஞ்சம் கௌரவமான அடியாளாக இருக்க வேண்டும். (இசுரேலைப் போல!) என்பதுதவிர, இந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் கிடையாது.
..
· செல்வம்
Related:
.............

Friday, July 27, 2007

தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு:குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க

சரியாக ஏழாண்டுகள் ஏழு நாட்களுக்குப் பிறகு பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல் ஏற்படுத்திய பல்வேறு தடைகளயும் மீறி தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க வின் மூன்று பிரமுகர்களுக்குத் தூக்குத் தண்டனையும் மேலும் அபராதத்தோடு ஏழாண்டு சிறையும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அக்கட்சியின் 25 பிரமுகர்களுக்கு அபராதத்தோடு ஏழாண்டு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
..
கொடைக்கானல் சொகுசு ஓட்டல் முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 2000-ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது அதற்கு எதிராக மாநிலம் முழுவதும் அக்கட்சி அராஜகம் - வன்முறை வெறியாட்டம் நடத்தியது. அப்போது கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேருந்தை மறித்துக் கொளுத்தியதில் , மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில்தான் இத்தீர்ப்பு வந்துள்ளது.
..
கடுகளவு பெறாத விவகாரங்களில் எல்லாம் நாளும் அறிக்கை விடுவதையே அரசியல் அரும்பணியாகக் கொண்டுள்ள ஜெயலலிதாவோ, காயடிக்கப்பட்ட பன்றியைப் போல மேடைகள் தோறும் கதறும் வைகோவோ, அவர்களின் பக்கபலமாக நிற்கும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன ஊதுகுழல்களோ முன்வாயையும் பின்வாயையும் பொத்திக் கொண்டுள்ளது வியப்புக்குரியதில்லை. ”மரண தண்டனை எதிர்ப்பு மனிதாபிமானிகளும்” அவர்கள் அடியொற்றி மௌனம் சாதிப்பதும் வியப்புக்குரியதில்லை.
..
அதேசமயம் நடந்தவை முன் கூட்டியே திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட கொலைகள் அல்ல என்பதால் மரணதண்டனை மிகையானதென்று அ.இ.அ.தி.மு.க அனுதாபிகள் முணுமுணுக்கின்றனர். இந்தக் கொலைகளில் உள்நோக்கம் எதுவுமில்லை என்று கூறுவதே தவறானது. ” அரசியல் பதவி ஆதாயத்துக்காக மட்டுமே இந்த மனிதத்தன்மையற்ற, கொடூரமான பயங்கரமான கொலைகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று நீதிபதி விளக்கியிருக்கிறார்.
..
ஆயிரத்தெட்டு கனவுகளோடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுப்பப்பட்ட தம் மக்கள், கதறித் துடிதுடிக்க எரிந்துக் கரிக்கட்டைகளாக் கிடந்ததைப் பார்த்த பெற்றோர், ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நீதி கிடைத்ததாக ஆறுதல் பெருமூச்சு விடுகின்றனர். தங்கள் அன்பு மகள்கள் துடிதுடித்து இறந்ததைப் போல, குற்றவாளிகளும் துடிதுடித்துச் சாக வேண்டும், தங்கள் மகள்களுக்கு நேர்ந்த கதி இனி யாருக்கும் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இத் தீர்ப்பு உறுதியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் வற்றிய துயர முகத்தோடு கூறுதிறார்கள்.
..
அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொண்ட நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள், தமது கோபாவேசத்தை தொலைக்காட்சிகளில் குறுஞ் செய்திகளாகவும், செய்தி ஏடுகளில் ஆசிரியருக்கு வாசகர் கடிதங்களாகவும் அனுப்பிக் குவித்தனர். அவர்கள் தமது ஆத்திரத்தை அரசியலற்றவாதத்தில் தோய்த்து பொதுவில் தமது வர்க்க எதிரிகளாகக் கருதும் அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சீறினர்.
..
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தரப்பட்டுள்ள தீர்ப்பு சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அராஜக- வன்முறை மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்ட எல்லா அரசியல்வாதிகளுக்கும் ” குற்றம் புரிந்துவிட்டு தப்பி விட முடியாது” என்றவாறு தரப்பட்டுள்ள எச்சரிக்கை –தண்டனை – படிப்பினை என்று சித்தரித்தனர். ஆனால், இந்தப் பார்வை முழுக்கவும் காலியாகிக் கொண்டிருக்கும் அக்கிரகாரத் திண்ணையில் சாய்ந்து கொண்டுள்ள பழைய பஞ்சாங்கப் பார்ப்பன அறிவுஜீவிகளின் புலம்பல்கள் தவிர வேறொன்றுமில்லை.
..
பேருந்துக்குத் தீ வைத்தபோது ” எல்லோரையும் சேர்த்துக் கொளுத்துங்கடா .. அப்போது தான் புத்தி வரும்” என்று கொலையாளி கூச்சலிட்டிருக்கிறான். ஆனால் அதனைக் கண்டும் அனுபவித்தும் கூட சிறிய அதிர்வுக்கும் கூட அஞ்சி கூட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் இந்த எலும்பில்லாத நடுத்தரவர்க்க நத்தைகளுக்கு ”புத்தி” வரவில்லை. வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கை, படிப்பினை என்றால் இந்தக் குற்றச் சம்பவமோ, அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் தன்னலத்தோடு, பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிக் கொள்ள எப்போதும் எத்தனிக்கும் நடுத்தரவர்க்கத்திற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை படிப்பினை அல்லவா ? ” இராமன் ஆண:டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையுமில்லை” என்ற நடுத்தர வர்க்கத்தின் விட்டேத்தித்தனம் உண்மையில் ஒரு வகை பிழைப்புவாதம் தான். போட்டி போட்டுக் கொண்டு கட்சித்
தலைமைக்குத் தனது விசுவாசத்தைக் காட்டி, அரசியல் பதவி ஆதாயம் அடைவதற்கான வேறொரு வகை பிழைப்புவாதம்தான், இந்த மனிதத் தன்மையற்ற, கொடூரமான கொலைவெறிக்கு அடிப்படையாய் இருந்தது.
..
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கையும், தீர்ப்பையும் மேலவளவு சாதிவெறிப் படுகொலை வழக்கையும் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. இரண்டு வழக்குகளுமே கொஞ்சமும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான முறையில் கும்பல் வெறியால் நிகழ்த்தப்பட்டவை. முதல் சம்பவம் பிழைப்புவாத அரசியல் நோக்கில் நடத்தப்பட்டது இரண்டாவது, சாதிவெறி அரசியல் நோக்கில் நடத்தப்பட்டவை. இரண்டுமே, கொடூரம் நிகழ்ந்த மாவட்டங்களில் வழக்கு நடத்தப்பட்டால் நீதி கிடைக்காதென்று சேலம் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. மேலவளவு படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்கப்படவில்லை.
..
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், அவர்களையும் பிணையில் அனுப்பி சுதந்திரமாக திரியவிட்டும் ஆதிக்க சாதிவெறிக்குக் கருணை காட்டியது நீதித்துறை. ஆனால், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நடுத்தர வர்க்கத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிஅக்கிரமம் கண்டு கொதித்துப்போன நீதித்துறை, அதன் மீதே நம்பிக்கை இழந்துவிடக் கூடாதென்று அதிகபட்சத் தண்டனையான மரண தண்டனையை வழங்கியது.
..
அதிகபட்சத் தண்டனையாக மரண தண்டனை எதற்காக விதிக்கப்படுகிறது? ""குற்றவாளிகள் வெளியே வந்தால் சமூ கம் நிம்மதியாக வாழ முடியாது'' என்கிறார் அரசு வக்கீல். ""இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது'' என்கிறார், மாணவி கோகிலவாணியின் தந்தை. ""எங்கள் மகளுக்கு ஏற்பட்ட கதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாது... இத்தீர்ப்பு உறுதியாக நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள்'' என்கிறார் மற்றொரு மாணவி காயத்ரியின் தந்தை.
..
அவர்களின் நம்பிக்கை பலிக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்த நம்பிக்கை நிச்சயமாக பலிக்காது தோற்றுப்போகும். இந்தக் கேள்விக்கான பதில், தீர்ப்பிலேயே பொதிந்திருக்கிறது. ""பயங்கரமான கொடூரமான இந்தச் செயல்களின் நோக்கம் அரசியல் லாபத்திற்காகவும் தங்களுடைய தலைவர்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் கொஞ்சம் கூட இரக்கமற்றமுறையில், இருதயம் இல்லாதவர்களாக கொலைகள் செய்துள்ளனர்'' என்கிறார் நீதிபதி. இத்தகைய பிழைப்புவாத கிரிமினல் குற்றவாளிகளை ஊட்டி வளர்க்கும் ஒரு அரசியல் கட்சி இந்த மாநிலத்தில் பத்தாண்டுகள் ஆளுங்கட்சியாகவும், இப்போதும் முதன்மையான எதிர்க்கட்சியாகவும் இருக்கிறது.
..
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் என்னென்ன குற்றங்களுக்காக ஏழாண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோ, அதே குற்றங்களை அதேநாளில் அக்கட்சியின் பலநூறு உறுப்பினர்கள் புரிந்துள்ளனர். மேலும், தர்மபுரி கொலைக்குற்ற வழக்கில் தடையங்களை அழிப்பது, குற்றவாளிகளுக்கு மாதம் 5000 ரூபாய்வரை ஊதியம் வழங்குவது, சாட்சியங்களைப் பிறழச் செய்வது போன்ற பல குற்றங்களை அக்கட்சியும் அதன் அரசாங்கமும் செய்திருக்கிறது. கிருட்டிணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, இரண்டே நாட்களில் 22 அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.
..
கொளுத்தப்பட்ட மாணவி கோகிலவாணியின் தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு, அரசும், போலீசும் கடும் கண்டனத்துக்குள்ளாகி, வழக்கு சேலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் உயர்நீதி மன்றம் பரிந்துரைத்தவரை சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மறுத்து, மேலும் மேலும் மேல் முறையீடு செய்து வழக்கை இழுத்தடித்தது. ஜெயலலிதா அரசும், அதிகாரிகளும் நீதிமன்ற அவமதிப்புத் தண்டனையிலிருந்து தப்பமுடியாத நிலையில் அரசு வழக்கறிஞரை நியமித்தனர். பிறகும், வழக்குத் தொடர முடியாதவாறு வழக்கு ஆவணங்கள் தொலைந்து போனதாக நாடகமாடியது. கொளுத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கோடீசுவர முதலாளிகளை அனுப்பி விலைக்கு வாங்கிடச் செய்த முயற்சி பலிக்காதபோது, கொலைமிரட்டல்கள் விடப்பட்டன. எல்லாத் தடைகளையும் கடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, அவர்களின் குடும்பங்களுக்குப் பல இலட்சம் ரூபாய் ""கருணைத் தொகை'' ஏற்பாடு செய்துள்ளது ஜெயலலிதா கட்சி.
..
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மட்டுமல்ல, பொதுவில் ஓட்டுக்கட்சி அரசியலில் கொள்கை, கோட்பாடு, தத்துவம் ஏதுமற்ற பிழைப்புவாதமே மேலோங்கியுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு. க.வோ, முழுக்கவும் அரசியல் பிழைப்புவாதக் கிரிமினல்களின் கட்சியாக உள்ளது. கட்சிக்குள்ளேயே சுயநலத்துக்காக ஒருவரை ஒருவர் படுகொலைகள் செய்வதும், கட்சித் தலைமையே தனது கட்சிப் பிரமுகர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல்களை ஏவி விடுவதும், பதவி ஆதாயத்துக்காகவும் தலைமையின் கருணைப் பார்வையை ஈர்ப்பதற்காகவே நாக்கை அறுத்துக் கொள்வதும், விரலைத் துண்டித்துக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.
..
இப்படிப்பட்ட குற்றவாளிகளின் கூடாரமாகிய ஒரு அமைப்பும் அது ஒரு அரசியல் கட்சியாகவும் நீடிப்பதே சமூகத்துக்கு தீங்கும் ஆபத்தும் விளைவிப்பதாக உள்ளது. இந்த உண்மைகளை முன்வைத்து அந்தப் பிழைப்புவாதக் கிரிமினல் கட்சியைத் தடை செய்யும்படி கோரும் அருகதையும் அக்கறையும் வேறு எந்த ஓட்டுக் கட்சிக்கும் கிடையாது. இதுதுõன் ஜெயலலிதா கும்பலின் பலத்திற்கும் துணிவுக்கும் அடிப்படை.
..
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாட்சிமை குறித்து சண்டப்பிரசண்டம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, அதன் ஒரு அங்கமான ஓட்டுக்கட்சி அரசியல் இவ்வளவு தூரம் சீரழிந்து கழிசடை நிலையை அடைந்து, பெரும் சவாலாக வளர்ந்திருப்பது மட்டும் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது.
..
Related:
***********
..
..
..

Thursday, July 26, 2007

"புயல் மையம்"

தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்
..
உங்களால் சாவதைவிடவும்
உங்களால் வாழ்வது கொடிது.
..
விதைக்க அகழந்த மண்ணையும்
வேரிலேயே பொத்திவைத்து
வியர்வையில் குளிர்விக்கும்
எங்கள் மேல்
எப்படி வந்தது இயற்கையில் சீற்றம்?
..
மாங்குரோவ் காடுகளை
நீங்கள் மேய்ந்தபோது
அறியவில்லை நாங்கள் -
..
உங்கள் வங்கிக் கணக்கில்
வலுவாக மையம் கொண்டுருக்கும்
மூலதனம்
வங்காள விரிகுடாவிலிருந்து
எங்களைக் காவு கொள்ளும் என்பதை.
..
காற்றுக்கு
உயிர்களை சுவாசிக்கவும்
தண்ணீருக்கு
இரத்தத்தைக் குடிக்கவும்
பயிற்றுவித்தது யார்-
நீங்கள்தானே?
..
புவி ஈர்ப்பு விசைகூடப்
பொதுவாக இல்லாத
நாடு இது - விளங்கிக் கொண்டோம்.
..
தண்ணீர் வடிய வடிய
ஊற்றெடுக்கும் பிணங்களின்
விழிகளில் இருக்கிறது
எங்கள் வெள்ளை அறிக்கை.
..
எஙக்ள் சாவுக்கு
என்ன விடை?
..
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
முணுமுணுக்கிறார்கள் -
"உலகம் அழியப் போகிறது"
..
உண்மைதான்
உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.
..
துரை. சண்முகம்
நன்றி டிசம்பர் 1999 புதிய கலாச்சாரம்

சாயி பாபா: ஆண்டவனுக்குத் தரகனா? ஆள்பவருக்குத் தரகனா?

"முப்படைகளின் தளபதி முதல், அரசியல்வாதிகள், முக்கிய வர்த்தகப் புள்ளிகள் வரை ஒன்று கலக்கும் 'திரிவேணி சங்கமாய்' சாட்சியளிக்கும் புட்டபர்த்தி, இதுதான் நிலைமை என்று கணிக்க முடியாதபடி தரகர்களின் தலை நகரமாகவே விளங்குகிறது."

"அறக்கட்டளைப் போர்வையில் வரி ஏய்ப்பு, ஆசிரம சேவை என்ற பெயரால் நிலக்கொள்ளை, அயல் நாட்டு நன்கொடை சாக்கில் அந்நிய செலவாணி மோசடி என்ற அனைத்து விவகாரங்களையும் தனது 'மாயக்கவர்ச்சியால்' சரிகட்டி அற்புதங்களில் அரசியல் அமைப்பையே விஞ்சி நிற்கிறார் சாயிபாபா. கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் அதிகாரிகள் சாயிபாபாவின் - 'தாள்' பணிவதன் இரகசியம் இதுதான்."
..
முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
***********************************************************
..
..
..
நன்றி பிப் 1996 புதிய கலாச்சாரம்
..
Related:
**********
..

Wednesday, July 25, 2007

புரட்சி என்பது அழகானதல்ல ! எதார்த்தமானது !

"இடதுசாரி எழுத்தாளர் கழகத்தின் மீது சில சிந்தனைகள்"
****************************************************************************

மார்ச் 2, 1930-ல் உதயமான இக்கழகத்தின் தொடக்க விழாவில் தோழர் லூசுன் ஆற்றிய உரை.
****************************************************************************
"புரட்சியின் சரியான குணாம்சத்தை விளங்கிக் கொள்ளாதவர்களும் 'வலதுசாரி' யாகத் திரிந்து விடுவது மிகமிக எளிதானது; புரட்சி என்பது கசப்பானதுதான்; சகதியும் ரத்தமும் கசப்பானதுதான்; ஆனால் கவிஞர்கள் கருதுவது போல அழகானதல்ல; கச்சிதமாக வடிவெடுப்பதல்ல; அது எதார்த்தமானது; மிகமிகச் சிறிய அதே போல களைப்பூட்டும் அலுப்பூட்டும் அளவு வேலைகளைக் கொண்டிருக்கும்; கவிஞர்கள் கருதுவது போல கற்பனார்த்தமல்ல; உண்மைதான், புரட்சியிலே அழிவு ஓர் மாற்றுக் கட்டுமானப் பணிக்காகத்தான் அழிக்கிறது.

அழிப்பது உடனடியாகச் சட்டென்று நடந்து முடிந்துவிடும்; ஆனால் கட்டுமானப் பணி மிகமிக இன்னல்கள் நிறைந்தது. எனவே தான் புரட்சி பற்றிய கனவுகளில் மிதக்கும் கவிஞர்கள் புரட்சி அருகே வரவர அல்லது புரட்சியை நேருக்கு நேர் சந்திக்கும்போது தங்க்ள் கற்பனைகள் நொறுங்கிப் போய் விடவே, திணறுகிறார்கள்."
..
..
"ஒர் ஐக்கிய முன்னணிக்கு அவசியம் ஒரு பொதுவான இலக்கு இருக்க வேண்டும். யாரொ இப்படிச் சொன்னார்கள். " பிற்போக்குவாதிகளுக்கு ஏற்கெனவே ஐக்கிய முன்னணி உள்ளது; ஆனால் நாம் தான் இன்னும் ஐக்கியமாக வில்லை" என்று. உண்மையில் அவர்களது ஐக்கிய முன்னணி திட்டமிட்ட ஒன்றல்ல; அவர்களுக்கு நோக்கம் ஒன்றாகவும், செயல்பாடு தொடர்ச்சியாகவும் உள்ளதால் பார்ப்பதற்கு அது போலத் தோற்றமளிக்கிறது, அவ்வளவுதான்.
..
மறுபுறத்தில், நாம் ஐக்கியப் படாமல் இருப்பது, நோக்க்ங்களிலே நாம் பிளவுபட்டிருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது. நம்மிலே சிலர் சிறு சிறு குழுக்களுக்கோ அல்லது தங்கள் குழுக்களுக்கே மட்டும் சேவை செய்கிறோம்.

நாமெல்லோருமே பாட்டாளிகள், உழைக்கும் விவசாயிகள் ஆகியோருக்குச் சேவை செய்ய விரும்பினாலே போதும்; நமது முன்னணி வெகு எதார்த்தமாகவே ஐக்கியப் பட்டு விடும்."
-உரையிலிருந்து
முழு உரையையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
*********************************************************
..
..

வைகோ 'டூ' அழகிரி- சேரன் அடித்த செம 'பல்டி'!


முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை 'வாய்க்கு வாய்' அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார்.


தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார்.
..
மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன், தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர்.
..
யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.
..
வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார்.
..
வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
..
Related:

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு

Monday, July 23, 2007

சில அடிமைகளால் துதிபாடப்படும் தனியார்மயத்தின் யோக்கியதை !

இதையே தமிழ்நாட்டில் எப்படி நடைமுறைப்படுத்துறாங்க பாருங்க....


காசு இருந்தா சொகுசு பஸ்.... காசு இல்லைன்னா போலீஸ் அடி !

இன்றைக்கு நாட்டை விற்கிறதை தீவிரமாக செய்துக்கிட்டு இருக்கிறார்கள். அதையே வளர்ச்சி , தவிர்க்க முடியாது (போலிகள் சாரி துரோகிகள்) என்கிற பேரில் நாடு முழுக்க முழுவேகத்தோடு இப்ப இந்த ஓட்டுக்கட்சிக்காரங்க அன்றாடம் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

அதுல ஒன்னுதான் பேருந்து விசயத்துல இன்றைய அரசாங்கம் செய்து உள்ளது. முன்பு வெள்ளை கலர், மஞ்சள் கலர் என்றும் பச்சை கலர் போர்டு என்றும் பேருந்து வீட்டார்கள். பின்பு M சர்வீஸ் என்றும் பேருந்து விட்டார்கள்.

இப்ப கலைஞர் அரசாங்கம் ,ஏற்கனவே இருந்த மூனு கலர் பேருந்துல பாதி வண்டி ஒட்ட ஒடசலா இயக்காம நின்னுக்கிறுந்தப்ப புதிசா வண்டிகளை வாங்கி ஆரங்சு கலர் போர்டு, நீலக்கலரு போர்டு, ஏர்பஸ் என விட்டு இருக்கிறார்கள்.

இப்படி குறைந்த கட்டணமே ஐந்து ரூபாய் என பேருந்து விட்டுட்டு, யாராவது இதை எதிர்த்து போராட்டம் , ஆர்ப்பாட்டம் என இறங்குனா அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து பயமுறுத்துகிறார்கள்.

இப்படி உள்ளுர் மாநகராட்சி பேருந்து வண்டில மட்டும் இல்லாமல், வெளியூர் பேருந்துலேயும் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என்கிற வண்டிதான் இப்ப எல்லா வழித்தடங்கலிலும் அதிகமாக போகிறது.

சரி நல்லது தானுங்க நாடு முன்னேறுது, தனியாருக்கு நிகராக அரசு சொகுசு பேருந்து விடுவது, காசு இருக்கிரவங்க எங்க கஸ்டப்படனும் என்று சிலர் யோசிக்கலாம்.

ஆனா நாட்ல ஆக பெரும்பான்மையான மக்களை வாழவழியற்றவர்களாக ஆக்கிட்டு, ஒரு சிறு கூட்டம் வசதி வாய்ப்பாக இருக்கிறதை காண்பித்து இதை செய்கிறார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் சம்பளத்துல சென்னையில வாழ்க்கையை நடத்துகின்ற தொழிலாளிகள்,படிச்சுட்டு வேலைக் கிடைக்காம வேலை தேடுறதே வேலையாக வைத்து உள்ள இளைஞர்கள் என பெரும்பான்மை மக்களை ஆக்கிட்டு இதை பண்ணுகிறார்கள்.

காசு இல்லாதவனுக்கு இங்கு எதுவும் சொந்தம் இல்லை. வாழ உரிமையும் இல்லை என்கிற உலகமயமாக்கலோட ஒரு பகுதிதான் இந்த வர்க்கத்துக்கு ஏற்ற மாதிரி பேருந்து விட்டது.இன்றைக்கு வெளை கலர் போர்டுல மக்கள் அதிகம் பயணம் செய்றதை பார்க்கிறோம். ஏன்னா அவர்ங்களால பத்து ரூபாய் கட்டணம் கொடுக்க முடியாததுதான்.

இப்படி பெரும்பான்மை மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் உழன்று கொண்டு இருக்குமாறு வாழ்க்கையை ஆக்கிட்டு, இங்க ஒரு சிறு கூட்டமான ஐ.டி, மற்ற மோசடி,பிழைப்புவாத கும்பல் சொகுசாக வாழ்க்கை வாழ இன்று ஏர் பஸ் விட்டு இருக்கிறார்கள்.

வெள்ளை கலர் போர்டு பேருந்துல மக்களை அனுப்பிட்டு, பின்னாடியே போலீசுக்காரங்களை அனுப்பி அடிக்கிறார்கள்.
..
ஆனால் அதிகமான மக்கள் வெள்ளை கலர்போர்டு பேருந்துல போறதுக்கும், படிக்கட்டில் பயணம் செய்யிறதுக்கும் யார் காரணம் ? மக்களா என்றால் இல்லை, இவர்களை இந்த நிலைக்கு தள்ளிய அரசு தான் காரணமாக இருக்கிறது.

இந்த உண்மைகளை எந்த பத்திரிக்கையும் எழுதுறது இல்ல. இவங்களோட செய்தி என்னான்னா "படிக்கட்டுல பயணம் செய்கின்றவர்களை போலீஸ்காரங்க அடிக்கிறாங்க" என்பது தான்.

ஆனால் உண்மையை பரிசீலித்தால்தான் தெரிஞ்சுக்க முடியும், இந்த " மக்கள் விரோத அரசின் யோக்கியதையும்", "நாலாவது தூணோட யோக்கியதையும்".

நன்றி கோபா

தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்! தொடரும் பிரச்சார இயக்கம்


""தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் அடிப்படையில் மறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான ""கோக்''கிற்கு எதிராகவும் தமிழகமெங்கும் ம.க.இ.க.; வி.வி.மு.; பு.மா.இ.மு.; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த செப்.12ஆம் தேதியன்று நெல்லையில் மிகப்பெரிய பேரணி ஆர்ப்பாட்டத்தையும், "கோக்' ஆலை அமைந்துள்ள நெல்லை கங்கை கொண்டானில் மறியல் போராட்டத்தையும் நடத்தின.

தாமிரவருணியை நம்பியிருக்கும் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் வேளையில் தாமிரவருணியை உறிஞ்ச கோக்கிற்கு தாராள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் ""சிப்காட்'' நிறுவனம் கோக்கிற்கு தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் 1 லிட்டர் கோக் தயாரிக்கும் போது, நிலத்தடியில் உள்ள 48 லிட்டர் நல்ல நீர் கழிவு நீராக மாறும். இதனால்தான் கேரளாவில் கோக் ஆலை இயங்கிய பிளாச்சிமடா கிராமம் சுடுகாடாகிப் போய்விட்டது. கோக் ஆலை அமையவுள்ள கங்கை கொண்டான் பஞ்சாயத்தில் அடங்கியுள்ள மானூர் ஊராட்சி மன்றத் தலைவர் கம்சன், கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய பிறகு மர்மமான முறையில் இறந்து போயுள்ளார். கோக்கை அனுமதித்தால் தாமிரவருணி ஆறும் இந்த மண்ணும்கூட மர்மமான முறையில் மரணமடையும்.

இந்த உண்மைகளை விளக்கியும், தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்ட அணிதிரள அறைகூவியும் புரட்சிகர அமைப்புகள் நெல்லைதூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை ஏறத்தாழ 20 தோழர்கள் தாமிரவருணி கரையோரக் கிராமங்களில் அன்றாடம் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தெருமுனைக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக இப்பிரச்சாரத்தை மேற்கொண்ட தோழர்கள், கிராம மக்களிடம் கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் விண்ணப்பத்தில் கையொப்பமும் பெற்றனர்.

புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதைக் கண்டு பீதியடைந்த நெல்லை மாவட்டப் போலீசு, வெளிப்படையாகவே கோக்கின் அடியாளாகச் செயல்பட்டது. மாவட்டம் முழுவதும் 302ஏ பிரிவு சட்டத்தை ஏவி பிரச்சாரத்துக்குத் தடை விதித்தது. பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டியது. கிராம மக்களிடம் ""இவர்கள் நக்சல்பாரி தீவிரவாதிகள்; கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் அவர்களது விண்ணப்பத்தில் கையெழுத்து போடாதீர்கள்; மீறி கையெழுத்து போட்டால் உங்கள் மீது வழக்கு போடுவோம்; கோர்ட் வாய்தா என்று நீங்கள் அலைய வேண்டி வரும்'' என்று அச்சுறுத்தியது.

போலீசின் தடைகள், அச்சுறுத்தல்களையும் மீறி நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் பிரச்சாரம் மற்றும் மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தோழர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுள்ளதோடு, பல பத்தாயிரக்கணக்கான மக்களிடம் கோக்கிற்கு எதிரான பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளனர்.

ஏறத்தாழ 45 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த 20க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு உண்ண உணவும் இரவில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மக்கள், தாராளமாக நன்கொடை அளித்து இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். சில கிராமங்களில், உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்து, தோழர்களைக் கைது செய்ய போலீசு தேடி வந்தபோது, கிராம மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்து ஆதரித்தனர். ""தாமிரவருணி எங்கள் ஆறு; அமெரிக்க கோக்கே வெளியேறு'' என்ற போராட்டப் பாடல், இப்போது எல்லா கிராம மக்களும் விரும்பி இசைக்கும் பாடலாகியுள்ளது.
..
கோக் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு விளக்கியதைத் தொடர்ந்து, கோக் ஆலைக்கு வேலைக்குச் செல்வதை அவமானமாகக் கருதி, பல கூலித் தொழிலாளிகள் அவ்வேலையிலிருந்து விலகி விட்டனர். சில இளைஞர்கள், கோக் ஆலையில் வேலைக்குச் சேருவதற்காக வாங்கி வைத்திருந்த விண்ணப்பத்தை, மக்கள் முன்பாக சுக்குநூறாகக் கிழித்தெறிந்து தங்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தினர். பல கிராமங்களில், கோக் ஆலைக்கு ஆதரவாகப் பேசும் ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களிடம் வாதம் செய்து மக்கள் காறி உமிழ்ந்து, அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர்.
..
பணபலத்தையும் அரசு மற்றும் போலீசின் அதிகார பலத்தையும் கொண்டு, ஆலையின் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியைத் தொடங்கப் போவதாகக் கொக்கரிக்கிறது அமெரிக்க கோக் நிறுவனம். அதற்கெதிராக மக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்கும் மகத்தான பணியை புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தொடரும் பிரச்சார இயக்கத்தால் உணர்வு பெற்று வரும் மக்கள், நாளை பெரும் சூறாவளியாகத் திரண்டெழுந்து அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
..
பு.ஜ. செய்தியாளர்கள்.

Saturday, July 21, 2007

முன்னேறுகிறது இந்தியா

30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் பயணம் !!

ரேவண்டாபாய் காம்ளே தனது ஆறு வயது மகனோடு பேசிப் பல மாதங்களாகி விட்டது. ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள், ஆனால் இப்படியொரு நிலைமை. பூரிபாய் நாக்புரேவுக்கும் அப்படித்தான் சில சமயம் பெரிய மகனோடு பேச நேரம் கிடைக்கும், அதுவும் அவன் விழித்துக் கொண்டிருந்தால்.
..
மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டம், திரோடா என்ற சிற்ரில் ரேவண்டாபாய், பூரிபாய் போலவேதான் நூற்றுக்கணக்கான பெண்களின் அன்றாட வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் நான்கே மணி நேரம்தான் வீட்டில் ஓய்வெடுக்க முடியும் (அது ஓய்வா உறக்கமா?) இப்படி வயிற்றுப்பாடுக்காக நாள்தோறும் போக, வர சுமார் 150 கி.மீ. பயணப்பட்டு அல்லல்படும் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்பக்கூலி வெறும் முப்பது ரூபாய்.விடியற்காலை 6 மணி நாங்கள் அவர்களோடு சேர்ந்து ரயிலுக்குப் புறப்பட்ட நேரம் அது. அவர்கள் அதற்கு இரண்டு மணி நேரம் முன்பு எழுந்திருந்தால்தான் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்ப முடியும்.

""சாப்பாடு செய்து முடிச்சு, துவைத்து, பெருக்கி, சுத்தம் செய்து, கழுவி எல்லா வேலையும் முடித்து விட்டேன்'' பூரிபாயின் குரலில் ஒரு நிறைவு ""இப்ப நாம எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்'', என்றார். அந்த நேரத்தில் அவர் வீட்டில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ""பாவம், பொழுதுக்கும் வேல செஞ்சி சோர்ந்து போயிடுதுங்க'' என்றார் பூரிபாய். ""நீங்க சோர்ந்து போவலியா?'' என்ற என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: ""இல்லாம? வேறென்ன செய்ய? வேற வழியில்லே.''

ரயில் நிலையம் சென்றபோது பூரிபாய் போலவே வேறு வழியில்லாத ஏராளமான பெண்கள் ரயிலுக்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு விசித்திரமாகத் தோன்றியது. அவர்களில் யாருமே வேலைதேடி கிராமத்திலிருந்து நகரங்களுக்கு ஓடவில்லை; மாறாக, சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப் போகும் அவர்கள் நாடோடிக் கூலிகள்.
ஒவ்வொரு நாளும் கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்ய வேண்டும். வார விடுமுறை என்ற பேச்சே இல்லை. திரோடாவில் எந்த வேலைகளும் கிடையாது. கோண்டியாவில் உள்ள "கிசான்சபா'வின் (விவசாயச் சங்கம்) செயலர் மகேந்திர வால்டே சொன்னார்: ""இந்த வட்டாரத்தில் பீடித் தொழில் அழிஞ்சபிறகு இங்க ஒரு வேலையும் இல்லே.''

அக்கம் பக்கத்திலிருந்து 5,6 கி.மீ. நடந்துதான் தினமும் அவர்கள் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். ""விடியக் காலமே 4 மணிக்கு எழுந்திருச்சி, வேல எல்லாம் முடிச்சு ஸ்டேசனுக்கு நடந்தமுன்னா போய்ச் சேர 7 மணி ஆயிடும்.'' அடிச்சுப் பிடிச்சு வண்டிக்குள் ஏறினா, கூட்டத்தோட கூட்டமா சால்வா கிராமத்துக்குப் பயணம் போக 2 மணி நேரம் பிடிக்கும்.

அந்தப் பெண்களின் கண்களில் சோர்வு, முகங்களில் கனத்த களைப்பு, பசி, அரைத்தூக்கம். அமர்ந்து ஓய்வாகப் பயணம் செய்யலாம் என்றால் இடமும் கிடைக்காது. அப்படி அப்படியே தரையில் உட்கார்ந்தவாறும், ரயில் பெட்டிகளின் உள் சுவரில் சாய்ந்தவாறும் அந்த இரண்டு மணி நேரத்துக்குள் அவரவர் வேலை செய்யும் இடம் வருவதற்குள் முடிந்தவரை குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டே வந்தார்கள்.

""திரும்ப வீடு போய்ச் சேர ராவுலே 11 மணி ஆயிரும். தலையச் சாச்சுப் படுக்கறதுக்குள்ளாற நடுநிசி ஆயிரும். மறுபடி அடுத்தநாள் காலையில 4 மணிக்கு முழிக்கணும்'' என்று விவரித்த ரேவண்டா பாய் ""என்னோட சின்னப் பையன் முழிச்சிருந்து பாத்துப்பேசி ரொம்ப நாளாயிடுச்சி'' என்று சொல்லிச் சிரித்தார். சிரிப்பு வருத்தத்தில் நனைந்திருந்தது — ""அப்படி என்னைக்காவது ஒரு நா, பசங்க அவுங்கவுங்க பெத்தவங்களப் பாத்தாக்க அவுங்கதான் அம்மாவான்னு தோணிரும்'' என்றார் அவர்.

நிறைய பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகாம பாதியிலேயே நின்று போகும் படிக்க வைக்க வசதி கிடையாது; அப்படியும் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்காது. ""வீட்டுல இருந்து கவனிக்க, படிச்சியான்னு கேக்க, கொள்ள ஆளு கிடையாது'' என்றார் பூரிபாய். சில பிள்ளைகள் கிடைக்கிற வேலையச் செய்யப் போவதும் உண்டு.

திரோடா பள்ளி ஆசிரியர் லதா பாபங்கர் சொல்வதுபோல, ""அவங்க நல்லா படிக்க மாட்டாங்க. அதுக்கு அவுங்கள குத்தம் சொல்ல முடியாது.'' மகாராஷ்டிர அரசாங்கத்தைத்தான் குறை சொல்ல வேணடும்; இந்தப் பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், பள்ளிக்கூடம் சரியாகச் செயல்படவில்லை என்று காட்டி அரசாங்கமே உதவிகளை நிறுத்தி விடுகிறது; மாணவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளை ஆசிரியர்கள் செய்தாலும், தேர்வுகளில் தேர்வு விகிதம் சரியில்லை என்று அந்த ஆசிரியர்களையே அரசாங்கம் தண்டிக்கிறது. இதனாலும் கூட மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது மெள்ள மெள்ளக் குறைந்து நின்றும் போகிறது.
ரயில் ஓட்டத்தோடு குலுங்கும் தரையில் உட்கார்ந்திருந்த சகுந்தலா பாய் அகோஷே கடந்த 15 வருடமாக இப்படித்தான் வேலைக்குப் போய் வருவதாகச் சொன்னார். பண்டிகைகள் ஏதாவது வந்தாலோ, மழை வந்தாலோதான் இடையில் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
""ரொம்ப அபூர்வமாக ஒருநாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும். மத்தப்படி எல்லா நாளுலயும் இருபத்தஞ்சுலேர்ந்து முப்பது ரூபாதான் கூலி'' என்றார் சகுந்தலா பாய். வெளி வேலையை விட்டால் உள்ளூரிலேயே செய்வதற்கு எந்த ஒரு வேலையும் இல்லை.

சிறு நகரங்களிலிருந்து இப்போதெல்லாம் பணம் பெரு நகரங்களுக்கு நகர்ந்து விட்டது. இங்கிருந்த மிச்ச மீதி சிறு தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் மூடப்பட்டு விட்டன. சிறு நகரங்கள் கண் எதிரே அழிகின்றன. அனேகமாக, பயணம் செய்து கொண்டிருக்கும் அத்தனைப் பெண்களும் முன்பு பீடி சுற்றிக் கொண்டிருந்தவர்கள். ""பீடித் தொழில் நசிஞ்சவுடனே எல்லாமே அத்துப் போச்சி'' என்றார் பூரிபாய்.

""பீடித் தொழிலே சிறு தொழில்தான். எங்கே மலிவான உழைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்துக்கு பீடித் தொழில் நகர்ந்துவிடும்'' என்கிறார் கே.நாகராஜ் என்கிற "மிட்ஸ்' (வளர்ச்சி பற்றிய ஆய்வு நிறுவனம், சென்னை) நிறுவன ஆய்வாளர். அவரது ஆய்வின்படி, ""பீடித்தொழில் வெகுவேகமாக இடம் மாறிவிடும். இதனால் கூலிகள் படுகிற பாடு சொல்லிமாளாது. கடந்த 15 வருடங்களில் நிலைமை படுமோசமாகி விட்டது.''

கிசான் சபாவைச் சேர்ந்த பிரதீப் கூற்றுப்படி, ""கோண்டியா பகுதியின் பீடித்தொழில் உத்தரப்பிரதேசத்துக்கும் சட்டீஸ்கருக்கும் இடம் பெயர்ந்து விட்டது.''
ஒரு பெண் ரயிலில் தினமும் நடக்கிற ஒரு வேடிக்கையான அவலத்தை விவரித்தார். அவர்கள் யாருமே பயணச்சீட்டு வாங்குவதில்லை. சீட்டு வாங்குவதானால் வாங்கும் கூலி இதற்கே காணாது. அதனால், அவர்களாகவே ஒரு "சிம்பிள் வழி' கண்டுபிடித்தார்கள்.

டிக்கட் பரிசோதகர் வந்தால் ஆளுக்கு 5 ரூபா லஞ்சம் கொடுத்து விடுவார்கள். ரயில் பயணச்சீட்டு இப்படியும் தனியார்மயமாகி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த 5 ரூபா கூட அவர்களின் உழைப்பை, கூலியை வைத்து ஒப்பிட்டால் பெரிய தொகைதான்; ஆனால் பரிசோதகர்கள் சும்மா விட்டுவிடுவதில்லை, மிரட்டிப் பறித்து விடுவார்கள்.

""என்னோட பெரிய பையன் சில சமயம் சைக்கிளில் கொண்டு போய் ரயில்வே ஸ்டேசனுக்கு விடுவான். அன்றைக்கெல்லாம் அங்கேயே இருந்து கொண்டு ஏதோ கொஞ்சம் கூலிக்கு வேல கிடைச்சாலும் தேடிப் பிடிப்பான். என்னோட பொண்ணு வீட்டுல சமைக்கும். அடுத்தவன் அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுப்பான்'' என்று தன் குடும்பத்தின் பாடுகளைச் சொன்னார் பூரிபாய்.

இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார் கிசான்சபா செயலர் வால்டே: ""ஒருத்தர் கூலிக்கு மூணு பேர் உழைக்கிறாங்க பாருங்க.'' பூரிபாயின் கணவர் ஏதாவது வேலை கிடைத்துப் போனால், அதையும் சேர்த்து, ஒரு நாளைக்கு அந்தக் குடும்பத்திற்கு 100 ரூபாய் கிடைப்பதே பெரிசு. சில நாட்களில் பெரியவனுக்கும் சரி, தந்தைக்கும் சரி இரண்டு பேருக்கும் வேலை கிடைக்காமல் போய் விடும். ரேசன் கார்டு கூட இல்லாத அந்தக் குடும்பம் அப்படிப்பட்ட நாட்களில் தவித்துப் போகும்.

பயணத்தில் வழியேற ரயில் நிலையங்களில் கான்டிராக்டர்கள் மலிவான கூலிக்கு உழைப்பாளிகளைப் பிடிக்க, கழுகுபோலக் காத்திருந்தார்கள்.
···பூரிபாய், ரேவண்டா பாயோடு பயணம் செய்த நாங்கள் சால்வா நிலையத்துக்குப் போய்ச் சேர காலை 9 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து வேலை நடந்த கிராமம் ஒரு கி.மீ. தொலைவு; பிறகு வயல்களை நோக்கிப் போக கூடுதலாக ஒரு 3 கி.மீ. அந்த 3 கி.மீ. தொலைவும் தலையில் தண்ணீர்ப் பானையைச் சுமந்து கொண்டு பூரிபாய் போட்ட நடையோடு எங்களால் போட்டி போட முடியவில்லை.

அற்பக்கூலிக்கு அவர்கள் வேலை செய்த நிலத்தின் சொந்தக்காரர் பிரபாகர் வஞ்சாரேவுக்கும் போதாத காலம்தான். விவசாய நெருக்கடி அவரையும் பதம் பார்த்துவிட்டது. அவருக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருந்தது; தவிர அவர் 10 ஏக்கரா குத்தகைக்கு எடுத்திருந்தார். ""கட்டுப்படியாகாத விற்பனை விலை எங்களையும் வயிற்றில் அடிக்கிறது'' என்றார் பிரபாகர். ""கிராமப்புற வறுமையைச் சமாளிக்க முடியாத பாரம்பரியக் குடிகளும் எங்கெங்கோ இடம் பெயர்ந்து விட்டதால்தான் திரோடாவிலிருந்து பொம்பிளை ஆட்களைக் கூலிக்கு வைக்கிறோம்'' என்றார் அவர்.

இந்தக் கிராமம் உள்ள இடம் கிழக்கு விதர்பா தற்கொலைகள் பெருகி அழிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்குரிய பருத்தி விளையும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது இப்பகுதி. வஞ்சாரே நெல் பயிரிடுகிறார். மிளகாய் போல வேறு சில பயிர்களும் போடுகிறார். தற்சமயம் அதற்குத்தான் ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்வேலை முடிவதற்குள் பொழுது சாய்ந்துவிடும். பிறகு ஆட்கள் ரயிலடியை நோக்கி நடப்பார்கள் அதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.

அதற்குப் பிறகும் ஊர் திரும்பும் ரயில் வருவதற்காக ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். இரவு 8 மணிக்குத்தான் ரயில். திரோடா போய்ச்சேர 10 மணியாகும், அதற்குள் உறவுகள் உறங்கிப் போகும். விடியலில் வேலைக்கு அவர்கள் கிளம்பும் போதும் குடும்பம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். ""இதுல எங்களுக்கு என்ன குடும்பம், என்ன வாழ்க்க, சொல்லுங்க'' என்று கேட்டார் ரேவண்டா பாய்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பி, இரவு திரும்பி வந்து சேருவதற்குள்ளாக அவர்கள் சுமார் 170 கி.மீ. தூரம் பயணம் முடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், வாரம் முழுக்க, ஒரு 30 ரூபாய் கூலிக்காக.

""11 மணிக்கு வீடு திரும்புவோம். சாப்புடுவோம், தூங்குவோம்'' பூரிபாய் விவரித்தார். இதோ, இன்னமும் நான்கே மணிநேரம்தான் மறுபடி அவர்கள் எழுந்திருக்க வேண்டும். மறுபடி ஓடத் தொடங்கி விடவேண்டும்.

கட்டுரையாளர்: பி. சாய்நாத்.
மூலம்: தி இந்து, 24.1.2007.
மொழியாக்கம்: பஷீர்.

Friday, July 20, 2007

பாசிஸ்டின் நகைச்சுவை ஒன்று இதோ !

எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே முடிவு செய்துஓட்டுப் போட்டார்களாம்- ஜெ சொல்கிறார்.

ஜூலை 19, 2007 thatstamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக தேதர்தல் ஆணையம் கொடுத்த குளறுபடியான விளக்கத்தால், அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசித்து, அவர்களாகவே முடிவு செய்து வாக்களித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலை 3வது அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதிமுக மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஓட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் வாக்குப் பதிவு முடியும் தருவாயில், ஜெயலலிதாவிடம் ஒரு விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது, கடந்த 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டளிப்பது அனைவரின் கடமை. இருப்பினும் ஓட்டளிப்பதும், ஓட்டளிக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். மேலும், தேர்தலில் ஓட்டளிப்பதை கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.

இந்த விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் மதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே ஆலோசனை நடத்தி இறுதியில் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அடிப்படையாக் கொண்டு ஓட்டளித்துள்ளனர் என்று சுற்றி வளைத்து விளக்கம் அளித்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த அறிக்கை படு குழப்பமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. அதிமுக உறுப்பினர்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது என்று கூறியுள்ளாரா அல்லது தன்னுடன் ஆலோசிக்காமல், அவர்களாகவே முடிவெடுத்து விட்டனர் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பழியைப் போடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மொத்தத்தில் அதிமுக இன்று அடித்த பல்டி சாதாரண பல்டி அல்ல. டபுள் அந்தர் பல்டி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்க எதிர்ப்பு: சி.பி.எம். -யின் பித்தலாட்டம்

நிமிட்ஸ் கப்பலை அனுமதிக்காதே,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கனும் என்று துள்ளி குதித்த சி.பி.எம் யோக்கியதை பற்றி புதிய ஐனநாயகத்தில் (டிசம்பர் 2005) வந்த கட்டுரையை மீண்டும் பதிவிட்டு உள்ளோம்.
**********************************************************************************
"இந்திய வான்வெளி. அமெரிக்காவின் விற்பனைக்கு அல்ல! அமெரிக்காவின் இராணுவத் தளமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! கொலைகார அமெரிக்க போர் விமானப் படையுடன் நடத்தும் கூட்டுப் பயிற்சியை நிறுத்து!'' கைகளிலே செங்கொடியும் கருப்புக் கொடியும் ஏந்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நவம்பர் 7ஆம் நாளன்று மே.வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்திலுள்ள களைகுண்டா விமானப் படைத்தளம் அருகே விண்ணதிர முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல், வடக்கே சிலிகுரி அருகிலுள்ள பக்டோக்ரா விமானப் படைத்தளம் அருகேயும், கொல்கத்தாவின் டம்டம் விமானத்தளம் அருகிலும் இந்திய அமெரிக்க போர் விமான கூட்டுப் பயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

வாஜ்பாய் ஆட்சியின்போதும் இதேபோல் இந்திய அமெரிக்கப் போர் விமானங்களின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அப்போது சி.பி.எம். தலைமையிலான "இடதுசாரி'க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதே கூட்டுப் பயிற்சி இப்போது சி.பி.எம். தலைமையிலான "இடதுசாரி' கூட்டணி ஆளும் மே. வங்கத்தில் நடைபெற்றது. அதை எதிர்த்துத்தான் "இடதுசாரி' கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன. "இடது' முன்னணித் தலைவர்களும், ஊழியர்களும் உழைக்கும் மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி என்கிறது சி.பி.எம். கட்சி.

இச்செய்தியைப் படிக்கும் எவரும், சி.பி.எம். கட்சி அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கட்சி; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் போர்க்குணமிக்க கட்சி என்றுதான் கருதுவர். ஆனால், மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஒப்புதலுடன்தான் இந்தப் போர் விமான கூட்டுப் பயிற்சியே நடந்துள்ளது.
மே.வங்கத்தில் போர் விமான கூட்டுப் பயிற்சி வேண்டாம்; வேறிடத்தில் நடத்தலாம் என்று அமெரிக்கா கூடத் தயங்கியது. இதைப் பற்றி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது, ""இது தொடர்பாக மே.வங்க முதல்வர் புத்ததேவிடம் பேசிவிட்டோம். அவர் கூட்டுப் பயிற்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு மாநிலத்தில் நடத்தலாம் என்று கருதினோம். ஆனால் சி.பி.எம். முதல்வரே உறுதியளித்துள்ளதால் திட்டமிட்டபடி மே.வங்கத்திலேயே இக்கூட்டுப் பயிற்சி நடைபெறும். இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களது ஜனநாயக உரிமை. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புத்ததேவ் உறுதி கூறியுள்ளார்'' என்று விளக்கியுள்ளார், பிரணாப் முகர்ஜி.

""மைய அரசு அமெரிக்காவுக்கு விசுவாசமாக போர் விமானக் கூட்டுப் பயிற்சியை நடத்துவதென்பது அவர்களது உரிமை; எதிர்ப்பு காட்டுவதென்பது எங்களது உரிமை; அதேநேரத்தில் மைய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது மாநில அரசின் கடமை'' என்று பித்தலாட்டம் செய்கிறது சி.பி.எம். கட்சி. மே.வங்கத்தில் இக்கூட்டுப் பயிற்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று மாநில அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து தடுத்திருக்கலாமே என்று கேட்டால், ""அப்படிச் செய்தால் மே.வங்கத்தைப் பற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்குத் தவறான கருத்து ஏற்பட்டு விடும். அந்நிய முதலீடுகள் வராமல் போய்விடும்'' என்கிறார் மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர்.

ஆர்ப்பாட்டம் நடந்த களைகுண்டா போர் விமானப் படைத்தளத்துக்கு 2 கி.மீ. தூரத்துக்கு அப்பால் போலீசு தடுப்பரண்களை நிறுவி, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியது, ஆளும் "இடது முன்னணி' அரசு. கேட்டால் ""சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது மாநில அரசின் கடமை'' என்கிறார் புத்ததேவ். வேறு மாநிலத்தில் இக்கூட்டுப் பயிற்சி நடந்திருந்தால் இப்படி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி பரபரப்பூட்டியிருக்க முடியாது. எனவேதான், மே.வங்கத்தில் நடத்த ஒப்புதல் அளித்துவிட்டு, எதிர்ப்பும் காட்டி பித்தலாட்டம் செய்கிறது சி.பி.எம். கட்சி. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் புரட்சி செய்வது எப்படி? தெரியாவிட்டால் சி.பி.எம். கட்சியினரிடம் கேளுங்கள்.

குமார்

Thursday, July 19, 2007

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

எடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.

எதிரொளிக்கும் ஃபுளோரசென்ட் பட்டைகள் கொண்ட சீருடை, தொப்பி, ஆரஞ்சு நிறக் கையுறை, ஆள் உயர இரும்பு பிரஷ், மண் அள்ளும் ஷவல், சாம்பல் நிறத்தில் நடமாடும் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி, உதிரிக் குப்பைகளை ஒய்யாரமாக ஏற்றிச் செல்லும் சிறிய ரக வாகனங்கள், வீதிகளின் மூலையில் கரும்பச்சை நிறத்துடன் இருப்புக் கொண்டிருக்கும் பெரிய குப்பைத்தொட்டி, அதை அப்படியே அலக்காகத் தூக்கித் தனது முதுகில் சாய்த்துக் கொள்ளும் தானியங்கி லாரிகள், சிப்பாய்களைப் போல அவற்றின் ஓரங்களில் தொங்கிக் கொண்டு செல்லும் துடிப்பான தொழிலாளிகள், சாலையில் படிந்திருக்கும் மண்ணை நக்கித் துடைக்கும் நவீன எந்திரங்கள் எழுப்பும் விநோத ஓசை, வாக்கி டாக்கியுடன் சுற்றித் திரிந்து இவற்றை மேற்பார்வையிடும் சூபர்வைசர்களின் மிடுக்கு... இது ஓனிக்ஸ்.

""அடடா... இது சென்னை நகரமா, அல்லது ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கும் ஐரோப்பிய நகரமா'' என்று பார்ப்பவர்களையெல்லாம் வியக்க வைக்கிறது; ""எவ்வளவு நீட்டா இருக்கு பாருங்க, என்ன இருந்தாலும் பிரைவேட்னா பிரைவேட்தான் சார்.'' என்று தனியார்மயக் கொள்கைக்கு "ஜே' போடவும் வைக்கிறது சென்னையில் இயங்கும் ஓனிக்ஸ் எனும் பன்னாட்டுத் துப்புரவுத் தொழில் நிறுவனம்.

சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை 2000 என்றெல்லாம் கனவு கண்ட முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்கப்பூராக்க வேண்டுமானால் அங்கே குப்பை அள்ளும் கம்பெனியை வைத்து சென்னையிலும் குப்பை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். லண்டன் மாநகரத்திலும் சிங்கப்பூரிலும் குப்பை அள்ளும் ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் வந்து இறங்கியது. துப்புரவுப் பணியிலும் தனியார்மயம் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் மந்தைவெளி, ஐஸ் ஹவுஸ், கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணியை ஏழேகால் ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது ஓனிக்ஸ் நிறுவனம்.
""காசுக்கு வழியில்லாதவன்தான் குப்பை பொறுக்குவான், இவ்வளவு பெரிய வெளிநாட்டுக் கம்பெனி நம்ம நாட்டுல வந்து குப்பை பொறுக்குறான்னா அவனுக்கு என்ன காலக்கொடுமையோ'' என்று நினைத்து விடவேண்டாம். கொடுமை பன்னாட்டுக் கம்பெனிக்கல்ல, அதன் பணியாளர்களுக்குத்தான்.
""ஓனிக்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்! மலையாய்க் குவிந்தன குப்பைகள்! நோய் பரவும் அபாயம்!'' என்று அலறின சென்னை நாளிதழ்கள். ஆனால் மலையாய்க் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் துயரம்தான் அவர்களை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளியிருக்கிறது என்ற உண்மையை மட்டும் அவை அணுவளவும் வெளியிடவில்லை. "வழக்கமான சம்பள உயர்வு, போனஸ் பிரச்சினைதான்' என்று பொய்யாகச் சித்தரித்து ஓனிக்ஸின் மேனாமினுக்கித் தோற்றத்திற்கு உள்ளே புழுத்து நெளிந்து கொண்டிருந்த அடக்குமுறைகள் அம்பலமாகாமல் இருட்டடிப்பு செய்தன.

ஓனிக்ஸ் தொழிலாளர்களை நேரில் சந்தித்த போதுதான் அழகு, சுத்தம் என்ற சொற்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது ஒரு அப்பட்டமான பயங்கரவாதம் என்பது தெரியவந்தது.

""எங்களை மனிதர்களாக நடத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களாக நடத்து'' என்ற ஒரு வரியில் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிவிடுகின்றன. ""தொழிலாளர்களை ரீ டிரெய்னிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தாதே; விசாரணை என்ற பெயரில் வேலை நீக்கம் செய்யாதே; தொழிலாளர்களைக் கேவலமாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு; ஆட்குறைப்புசெய்வதை நிறுத்து; சம்பளப் பாக்கிகளைக் கொடு'' என்பவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளின் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய பணிநிலைமைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
போகிற போக்கில் அலட்சியமாக நாம் வீசும் குப்பை, மூக்கைப் பிடித்துக் கொண்டு தெருவில் விட்டெறியும் செத்த எலி, கடைக்காரர்கள் கொட்டும் அழுகிய காய்கறிகள், ஓட்டல்கள் வெளியேற்றும் கெட்டுப்போன சோறு, கருச்சிதைவில் வெளியேறிய குழந்தை உள்ளிட்ட மருத்துவமனையின் ஆபத்தான கழிவுகள், லாரியில் அடிபட்டுச் செத்த நாய்கள்... இவையனைத்தும் நாட்கணக்கில் அகற்றப்படாமல் கிடக்கும் காட்சியைக் கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். துப்புரவுப் பணியாளர்கள் இயங்கினால்தான் சென்னை என்பது மாநகரம், இல்லையேல் மறுநாளே இது நரகம். ஆனால் அவர்கள் இயக்கப்படுவது எப்படி?

ஓனிக்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை நகரின் 3 மண்டலங்களுடைய துப்புரவுப் பணிக்காக ஏற்கெனவே மாநகராட்சி ஒதுக்கியிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6000. அதே பணியை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வைத்து முடித்து வருகிறது ஓனிக்ஸ் நிறுவனம். தனியாரின் திறமை இங்கிருந்து தொடங்குகிறது.

130 பெண்கள் உட்பட ஓனிக்ஸ் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 2300. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 டிவிசன்கள், ஒரு டிவிசனுக்கு 60 தொழிலாளர்கள், ஒரு சூபர்வைசர், லாரி டிரைவர். 8 மணி நேரத்தில் ஒரு தொழிலாளி சுத்தம் செய்ய வேண்டிய சாலையின் நீளம் 1400 மீட்டர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர். ஒரு துளி தூசும் இல்லாதபடி மறுபடி மறுபடி பெருக்க வேண்டும். வெறும் 300 சதுர அடி வீட்டைக் கூட்டி முடிப்பதற்குள் முதுகு பிடித்துக் கொண்ட கதையை இலக்கியமாகப் பேசும் நபர்கள் 1400 மீட்டர் கடைவீதியைக் கற்பனையிலாவது ஒருமுறை கூட்டிப் பார்க்க வேண்டும்.
..
இரும்புத் துடைப்பானால் குப்பையைத் தள்ளிக் கொண்டும், பொடி மண்ணை பிரஷ்ஷால் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டும் குனிந்த தலையுடன் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளியின் கைகள் ஓய்ந்து ஒரு கணம் நிற்பதையோ, அவர்கள் உட்கார்ந்திருப்பதையோ சென்னைவாசிகள் யாராவது எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் 5,6 பேராக டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்த்திருப்பீர்கள். 4 ஓனிக்ஸ் தொழிலாளிகள் சேர்ந்து டீ குடித்தபடி நிற்பதை யாராவது பார்த்ததுண்டா?

இதுவரை கவனித்திராதவர்கள் இனி கவனித்துப் பாருங்கள். வியர்வையைத் துடைப்பதற்காகக் கூட அவர்கள் ஒரு கணம் ஓய முடியாது. வயர்லெஸ்ஸ{டன் வண்டியில் சுற்றிக் கொண்டே இருக்கும் சூபர்வைசரின் கண்ணில் பட்டால் எந்த விளக்கத்தையும் அவன் காதில் வாங்க மாட்டான். உடனே மெமோ. சூபர்வைசரின் அனுமதியில்லாமல் சிறுநீர் கழிக்கக் கூட ஒதுங்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களிடம் பேசக்கூடாது. முகவரியை வைத்துக் கொண்டு வழிகேட்கும் மக்களிடம் கூடப் பேசக் கூடாது. நட்புணர்ச்சியுடன் கடைக்காரர்கள் ரெண்டு வாழைப்பழமோ டீயோ கொடுத்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது. குடித்தால், சாப்பிட்டால் மறுகணமே வேலைநீக்கம்.

இரண்டு பத்து நிமிடங்கள் தேநீர் இடைவேளை, சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் போக, 8 மணி நேர வேலை. கல்லாய்ச் சமைந்திருக்கும் சந்து முனீஸ்வரன்களுக்குக் கூட கழிவை வெளியேற்ற வழியுண்டு; ஒன்றரை கி.மீ. துப்புரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளிக்கு 10 நிமிட இடைவேளைக்குள் சிறுநீர் கழிக்க இடம் தேடுவதே பெரும் போராட்டம்.

எந்தச் சோற்றுக்காக இத்தனைப் பாடுபடுகிறார்களோ அதை நிம்மதியாகத் தின்ன முடியாது. அன்றைக்கு ஒதுக்கப்பட்ட சாலையில் ஏதாவது ஒரு கடையில் சோற்று டப்பாவைக் கொடுத்து வைத்து, இடைவேளை நேரத்தில் அந்தக் கடைக்கு ஓடிவந்து அள்ளி விழுங்கி விட்டு 30 நிமிடத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர வேண்டும். துர்நாற்றம் போகக் கை கால் முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடவோ, சாப்பிட்ட பின் சற்று அமரவோ கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

அன்றாடம் 8 மணி நேரம் சாலையோரக் குப்பையையும் மண்ணையும் அழுந்தத் தேய்த்துச் சுத்தம் செய்யும் உள்ளங்கை புண்ணாகும். ஒரு தானியங்கி எந்திரத்தைப் போல நிமிடத்திற்கு 25,30 முறை முன்னும் பின்னும் இயங்கும் தோள்பட்டை மூட்டுக்கள் என்னாகும்? ஒரே ஆண்டில் சவ்வுகள் கிழிந்து தேய்ந்து போன எந்திரம்போல "கடக் கடக்' என்று ஓசை எழுப்புகின்றன தொழிலாளர்களின் தோள்பட்டைகள். ஆண்டுக்கு இரண்டு மாதம் வேகப்பந்து வீசும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே பிரச்சினை வருகிறது. அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை, 20 லட்சம் செலவு!

இப்படித் "தேய்ந்து' போகும் தொழிலாளர்களைக் கழித்துக் கட்ட கொடூரமான தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது ஓனிக்ஸ் நிர்வாகம். வேகம் குறைந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு "நின்னால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம்' என்று அவர்களுக்கு அடுக்கடுக்காக மெமோ கொடுத்து அலுவலகத்துக்கு அலைய வைப்பது; அப்போதும் வேலையை விட்டு ஓடவில்லையென்றால் "ரீ டிரெய்னிங்' என்ற பெயரில் இறுகிப் போன மண் மேடுகளைத் தன்னந்தனியாக சவல் போட்டு பெயர்த்தெடுக்கும் கொடிய தண்டனையை வழங்குவது இந்தக் கொடுமைகள் தாளாமல் பரிதாபத்துக்குரிய அந்தத் தொழிலாளர்கள் தானே வேலையை விட்டு ஓடுகிறார்கள்.

ஆனால் தேய்ந்து போன லாரிகளை ஓனிக்ஸ் இவ்வாறு கழித்துக்கட்டுவதில்லை. ""ஆரம்பத்துலதான லாரியெல்லாம் பந்தாவா இருந்திச்சு. இப்ப எந்த வண்டியிலுமே ஷாக் அப்சர்வர் வேலை செய்யறதில்லை. குப்பைய ஓவர் லோடு ஏத்தி வண்டி ஓட்ட முடியாம இடுப்பு வலி தாங்கல சார். குப்பை கொட்றப்ப எரிஞ்சு புகைமூட்டமாக இருக்கும். எதிர்ல வர்ற ஆளும் தெரியாது. வண்டியும் தெரியாது. குப்ப பொறுக்குறவங்க மேல வண்டி ஏறிடும். நைட்ல எங்காளுகளே வண்டி ஏறி செத்ததுண்டு டிரைவர்னு வேலைக்கு சேர்ந்தேன். தினம் 3 டிரிப் அடிக்கணும். முடிச்சிட்டா நீயும் போய் குப்பை வாருன்னு கட்டாயப்படுத்துறாங்க. முடியலீங்க. வேலைய விட்டுரலாம்னு இருக்கேன்.'' இது ஒரு டிரைவரின் குமுறல்.

ஓனிக்ஸிலிருந்து ராஜினாமா செய்து விட்டு ஓடிய தொழிலாளர்கள் சுமார் 4000 பேர். சில ஆண்டுகளிலேயே இத்தனைப் பெரிய வெளியேற்றம். வேறெந்தத் தொழிலிலும் காண முடியாதது. இளம் குருத்துக்களை வேலைக்கு எடுத்து, அவர்களுடைய எலும்பையும் தசையையும் கரும்புச் சாறு பிழியும் எந்திரம் போல முறுக்கிப் பிழிந்து 4000 பேரைத் துப்பியிருக்கிறது ஓனிக்ஸ்.
ஒரு தொழிலாளியின் சம்பளம் 2300 ரூபாய். ஆண்டுக்கு 24 நாட்கள் விடுப்பு. மூட்டு வலி, சுவாசக் கோளாறு, வயிற்று வலி, குடலிலும் சீறுநீரகத்திலும் மண் தங்குதல் இவை எல்லாத் தொழிலாளர்களுக்கும் வரும் நோய்கள். எனவே கூடுதல் விடுப்பு எடுப்பது தவிர்க்க முடியாதது. கூடுதலாக விடுப்பு எடுத்தாலோ, முன் அனுமதியின்றி எடுத்தாலோ, ஒருநாள் விடுப்புக்கு 4 நாள் சம்பளம் (ரூ. 340) வெட்டு.

சூபர்வைசர்களின் சம்பளம் 15,000 ரூபாய். ஒவ்வொருவரும் 60 தொழிலாளிகள் மற்றும் சுமார் 40 கி.மீ நீளச் சாலைக்குப் பொறுப்பு. இந்தப் பணிச்சுமையால் வேட்டை நாய்களாகவே அவர்களை மாற்றியிருக்கிறது நிர்வாகம். குப்பையின் எடையும் தண்டிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடக் கூட அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து, பரிசுகள்.
..
டன் ஒன்றுக்கு 650 ரூபாய் என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 1200 டன் குப்பை அள்ள வேண்டுமென்பது மாநகராட்சிக்கும் ஓனிக்ஸ{க்கும் இடையிலான ஒப்பந்தம். இந்தக் கணக்கின்படி ஓனிக்ஸின் மாத வருவாய்
ரூ. 2 கோடி 35 லட்சம். 2300 தொழிலாளர்களுக்கு (மொத்த ஊதியம் சராசரி ரூ. 3000 என்ற கணக்கில்) வழங்கப்படும் ஊதியம் 69 லட்சம் மட்டுமே. பிற செலவினங்கள் போனாலும் தோராயமாக மாத லாபம் ஒரு கோடி ரூபாய். குப்பையின் எடையைக் கூட்டுவதற்காக கட்டிடம் இடித்த கற்களை அள்ளி, குப்பைக் கணக்கில் சேர்த்துக் காசு பார்க்கிறது ஓனிக்ஸ். அவ்வப்போது பிடிபடும் இந்த மோசடியை லஞ்சத்தால் சரிக்கட்டியும் விடுகிறது.

இந்த ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காக ஓனிக்ஸ் இறக்கியிருக்கும் தொழில் நுட்பமென்ன? போட்ட முதலீடு என்ன? நம்மூர்க் குப்பைதான் முதலீடு. கசக்கிப் பிழியப்படும் நம் தொழிலாளர்களின் உழைப்புதான் தொழில்நுட்பம். கம்ப்யூட்டர் திரையையும் லாபக் கணக்கையும் தவிர வேறெதுவும் தெரியாத ஒரேயொரு வெள்ளைக்கார நிர்வாகியை மட்டும்தான் சென்னையில் இறக்கியிருக்கிறது ஓனிக்ஸ். வந்திறங்கிய ஒருசில ஆண்டுகளிலேயே 4000 இளைஞர்களை உயிருள்ள குப்பைகளாக்கி வீசியிருப்பதுதான் ஓனிக்ஸின் "திறமை'. ஈவிரக்கமற்ற சுரண்டல்தான் ஓனிக்ஸ் வழங்கும் சுத்தத்தின் இரகசியம்.

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோஹனஸ்பர்க்கில் குடிநீரைத் தனியார்மயமாக்கி, ""ப்ரீ பெய்டு அட்டை வாங்க முடிந்தவர்களுக்கு மட்டும்தான் குடிநீர்'' என்ற கொடிய திட்டத்தை அமல்படுத்திய வயோலியா என்ற பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தின் கிளைதான் ஓனிக்ஸ். காசில்லாதவனுக்குக் குடிநீரில்லை என்ற இந்தக் கொடிய திட்டத்தின் விளைவாக லட்சக்கணக்கான கறுப்பின ஏழைமக்கள் கழிவுநீரையும் குட்டை நீரையும் குடித்து காலராவுக்கு இரையாகினர்.

அதே வயோலியா நிறுவனம்தான் சென்னை மாநகரக் குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஆலோசகராகவும் அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குப்பையில் லாபம் பார்க்கும் ஓனிக்ஸ், குடிநீரில் லாபம் பார்ப்பதெப்படி என்பதை நமது மாநகராட்சிக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கிளைதான் கழிவுகளிலிருந்து நம்மைப் "பாதுகாக்க' வந்திறங்கியிருக்கிறது. ஓனிக்ஸின் ஒப்பந்தம் நீடிக்கப்படும்; மெல்ல மெல்ல சென்னை முழுவதுற்கும் அது விரிவுபடுத்தப்படும்.

ஏனென்றால், தனியார்மயம்தான் அரசின் கொள்கை. பணி உத்திரவாதம், குறைந்த பட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமைகள் போன்ற "தொந்திரவுகள்' நீக்கப்படாமல் இருப்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழையத் தயங்குகின்றன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை உடனே ஒழித்தால்தான் ஓனிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமென்றும் கூறுகிறார் மன்மோகன் சிங்.

அரசு இனி வழங்கவிருப்பதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்புகள்தான். ஓனிக்ஸ் தொழிலாளர்களில் பலர் எம்.ஏ., பி.ஏ. பட்டதாரிகள். பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அவர்களுடைய மாதச் சம்பளம் 2300 ரூபாய். குடியிருக்கும் இடத்திலிருந்து குப்பை அள்ளும் இடத்திற்கு வந்து போக பேருந்துக் கட்டணம் தினமும் 10 ரூபாய். தேநீர்ச் செலவு குறைந்தது 10 ரூபாய். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஒருநாள் சம்பளம் வெட்டு அந்த வகையில் மாதம் 340 ரூபாய். மிஞ்சுவது மாதம் 1340 ரூபாய். மருத்துவச் செலவு அதில்தான், சீருடையைத் துவைக்கும் செலவு அதில்தான். சோறும் வீட்டு வாடகையும் அதில்தான். இதுதான் தனியார்மயம் வழங்கும் "வேலை வாய்ப்பு'.

இனி இது ஓனிக்ஸ் தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, உங்கள் பிரச்சினை. இத்தகைய வேலைவாய்ப்புக்கு நீங்கள் தயாரா?

மு க.மு.

Wednesday, July 18, 2007

வென்றது வள்ளலார் நெறி! வீழ்ந்தது பார்ப்பனச் சதி!

சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில் உத்தரஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி 1872 முதல் ஏழைகளுக்கு உணவளித்து வந்த வள்ளலார், பார்ப்பனச் சடங்குகளையும், சாதிக் கொடுமையையும் மறுத்து புதியதொரு மார்க்கத்தை உருவாக்கினார். தீட்சிதர் கூட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆடூர் சபாபதி குருக்கள், வள்ளலார் கொள்கையை ஏற்பதாக நடித்து, அவர் மறைவுக்குப் பின், சைவ ஆகம நெறியைப் புகுத்தி சபையைப் பார்ப்பனமயமாக்கும் சதியைத் தொடங்கினார்.

சிவலிங்க வழிபாடு, பிரதோஷ பூசை, பூணூல் அணிந்த அர்ச்சகர், வள்ளலாருக்கே நெற்றியில் பட்டை போடுவது, சபைக்கு சொந்தமான நிலத்தை ஏப்பம் விட்டு சொத்து சேர்ப்பது என்று வள்ளலாரின் சன்மார்க்கத்தை ஒழித்து "சைவ மார்க்கத்தை' வளர்த்தார் தற்போதைய பூசகர் சபாநாத ஒளி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பொள் ளாச்சி மகாலிங்கத்தின் பின்புலத்தை வைத்துக் கொண்டு, தட்டிக்கேட்ட வள்ளலார் நெறியாளர்களை மிரட்டினார். இதற்கெதிராக வள்ளலார் நெறியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
..
இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனையொட்டி பெரியார் தி.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் மாவட்டமெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரமும் செய்தனர். ""பார்ப்பன மதத்தை மறுத்து வாழ்ந்த வள்ளலாரை பார்ப்பனமயமாக்கும் சதியை முறியடிப்போம்!'' என்ற தலைப்பில் பு.மா.இ.மு. வெளியிட்ட துண்டறிக்கை, பெரும் வரவேற்பைப் பெற்றது.
..
தைப்பூசத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் வடலூருக்கு வரும் மக்களிடமும், மாதந்தோறும் பூசத்தன்று திரளும் வள்ளலார் நெறியாளர்களிடமும் இந்தப் பார்ப்பனமயமாக்கத்தை எதிர்த்துப் போராடுமாறு செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள் திரளாக நின்று பிரச்சாரம் செய்தனர். துண்டறிக்கையை வரவேற்ற சன்மார்க்க சங்கத்தினர் தாமே முன்வந்து அதனை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினர்.
..
பார்ப்பனமயமாக்கத்துக்கு எதிரான வள்ளலார் நெறியாளர்களின் போராட்டம் மே 17ஆம் தேதி வெற்றி பெற்றது. சபாநாத ஒளி சிவாச்சாரியார் அறநிலையத் துறையால் வெளியேற்றப்பட்டார். வள்ளலார் வகுத்த வழியில் வடலூரில் மீண்டும் வழிபாடு தொடங்கியிருக்கிறது.

Tuesday, July 17, 2007

மீண்டும் படரும் காவி இருள்

மீண்டும் படரும் காவி இருள்மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.
..
தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.
..
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.
..
சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
..
உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
..
ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று தாலிபான்களை விஞ்சும் விதத்தில் பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.
..
1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.
..
ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.
..
ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.

···
ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.
..
இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
..
சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
..
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறது."
"இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.
..
''தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.···
..
குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.
..
''எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.
..
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்.
..
அழகு

சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!


""ஜெகந்நாபாத் சிறைச்சாலையின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நடத்திய அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதலானது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக் குறைபாடுகள் குறித்த பல பாரிய கேள்விகளை எழுப்புகின்றது. தேர்தல் ஆணையத்தின் கட்டளையின்படி சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக பாதுகாப்புப் படைகள் ஈடுபடுமாறு திருப்பி விட்டிருந்தது கூட, இந்தச் "சிறைத் தகர்ப்பு நடவடிக்கை'க்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த அமைப்பு அதிநவீன ஆயுதங்களை எவ்வாறு அடைய முடிந்தது; அவர்களின் தொழில்முறைப் பயிற்சி மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்புகள் ஆகியவை குறித்துப் பாரிய கேள்விகளைக் கூட இந்த ஒட்டு மொத்த நிகழ்வு எழுப்புகிறது. இவற்றிலெல்லாம் அரசாங்கமும் அதன் (ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை) முகமைகளும் கவனம் செலுத்த வேண்டும்; அதேசமயம் விவாதிக்கப்பட வேண்டிய பிற பிரச்சினைகளும் இருக்கின்றன.''

இது அருண்சௌரி, ""துக்ளக் சோ'' போன்ற கம்யூனிச எதிர்ப்பு பார்ப்பன பாசிசக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எழுதியதல்ல. ஏகாதிபத்திய மேலாதிக்கம், மறுகாலனியாதிக்கம், உலகமயமாக்கம் ஆகிய புதிய காலகட்டத்திற்கேற்ற நவீன திருத்தல்வாதத்தின் புதிய தலைமுறைத் தலைவர் சீதாராம் யெச்சூரியின் கூப்பாடு.

ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு குறித்து எழுதும் முதலாளியத் தாராளவாத விமர்சகர்களே கூட, நக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சிக்கான சமூக, அரசியல், பொருளாதார காரணிகளைச் சுட்டுகின்றனர்; தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பின்தங்கிய நிலை, அரசாங்கங்கள் அம்மக்களின் நல்வாழ்வில் அக்கறையின்றிப் புறக்கணிப்பது மட்டுமல்ல. அரசின் மக்கள் விரோதச் செயல்களையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியோ துரோகத்தனமான, கேவலமான எதிரிவர்க்கக் கைக்கூலியாகவே மாறி மேற்கண்டவாறு தமது அதிகாரபூர்வ ஆங்கில ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்ரசி''யில் எழுதியிருக்கிறார்.

அதாவது, இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நவீன ஆயுதங்களை அடைந்தது, தொழில்முறை பயிற்சி பெற்றது, பிற குழுக்களுடனான அதன் தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து ஒடுக்கும் வேலைகளை அரசும் அதன் ஆயுத உளவுப் படைகளும் செய்ய வேண்டும், தம் தரப்புக்கு அக்கட்சி எழுப்பியுள்ள அரசியல், சித்தாந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாக எழுதுகிறார்.

நக்சல்பாரி இயக்கத்துக்கு எதிரான அரசியல் சித்தாந்த விளக்கம் என்று எண்ணிக் கொண்டு வழக்கமான தனது புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார், அந்தத் திருத்தல்வாதி. சிறைத்தகர்ப்பு போன்ற வன்முறை ""இடது தீவிரவாதம்'' என்றும் அவற்றை வைத்து கம்யூனிசம் வன்முறையை வழிபடுவதாகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இம்மாதிரி அராஜகத்தையும் சி.பி.எம். கட்சியின் புரட்சிகர வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ். சமப்படுத்துவதாகவும் புளுகுகிறார். அராஜக வன்முறையை இசுலாமிய அடிப்படைவாதிகளோடு வேண்டுமென்றே சமப்படுத்தி வைப்பது போலத்தான் சி.பி.எம். கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து ஆர்.எஸ்.எஸ். குழப்புவதாகப் புளுகுகிறார்.

நக்சல்பாரி இயக்கத்தின் புரட்சிகர வன்முறையை, சி.பி.எம்.இன் நாடாளுமன்றப் பன்றி அரசியல் வேலைகளுக்குச் சமமாகப் பேசினால், நக்சல்பாரி இயக்கத்துக்குதான் இழப்பு, அவப்பெயர் அவமரியாதை சி.பி.எம். கட்சிக்கு அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, கொஞ்சமாவது பொது அரசியல் அறிவுள்ள எல்லோருக்குமே நக்சல்பாரி இயக்கத்துக்கும், சி.பி.எம். கட்சிக்கும் இடையிலுள்ள அடிப்படை வேறுபாடு தெரியும். அதாவது சி.பி.எம். ஒரு நாடாளுமன்றக் கட்சி, புரட்சிக்கு வன்முறையில் நம்பிக்கை வைக்காத கட்சி. நக்சல்பாரி இயக்கம் புரட்சிகர வன்முறையில் நம்பிக்கையுள்ள கட்சி, நாடாளுமன்ற அரசியலை எதிர்த்துப் புறக்கணிக்கும் இயக்கம். எப்படியிருந்தாலும் (புரட்சிகர) வன்முறை இரண்டு இயக்கங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, வேறு யார்தான் இரண்டின் நடைமுறைகளைச் சமன்படுத்திப் பேசமுடியும்? அப்படிப் பேசினால் யார்தான் அதை நம்பப் போகிறார்கள்?

ஆக, திருத்தல்வாதி இங்கேயும் உண்மையைத் திரித்து எழுதியிருக்கிறார். ஏதோ, தனது கட்சியும் புரட்சிகரக் கட்சி என்பதாகக் காட்டிக் கொள்வதற்காக, அப்பட்டமான புளுகு வாதத்தை முன்வைத்து புரட்சிகர இயக்கத்தின் மீது அவதூறு செய்ய முயன்றிருக்கிறார். இவர்கள் அமைப்பைச் சேர்ந்த 42 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட போதும், கான்பூரில் இவர்களின் கலைக்குழு அமைப்பாளர் சப்தார் ஹாஸ்மி பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட போதும், அதேபோல, இவர்களின் மதுரை மாநகர உறுப்பினர் லீலாவதி கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும் கோழைத்தனமாக செயலிழந்து ஒடுங்கிக் கிடந்துவிட்டு, அவற்றை ஓட்டுப்பொறுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் இந்தப் போலி கம்யூனிஸ்டுகளோடு, புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தை சமன்படுத்திவிடுவார்கள் என்பது ஒரு சிகப்புப் பொய் அல்லவா?

அதோடு, ஜெகந்நாபாத் சிறைத்தகர்ப்பு ஒரு அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதல் என்றும், வன்முறை வழிபாடு என்றும், அராஜக வன்முறை என்றும் யெச்சூரி சித்தரிக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியினர் உட்பட நக்சல்பாரி இயக்கத்தினர் ஆயிரக்கணக்கில் இந்தியச் சிறையில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல், விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். பதின்வயதுச் சிறுவர்கள், பெண்கள் கூட ""பொடா'' சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜெகந்நாபாத் கொடுஞ்சிறையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுப் புரட்சியாளர்கள் விசாரணைக் கைதிகளாக ஆண்டுக்கணக்கில் அடைபட்டுக் கிடந்தார்கள். அதனால்தான் இந்தச் சிறைத் தகர்ப்பே தவிர, வெறுமனே வன்முறைக்காக வன்முறை, வன்முறை வழிபாடு என்பதெல்லாம் போலி கம்யூனிஸ்ட் மூளைகளில் உதித்த திருத்தல்வாதம்தான்!

நக்சல்பாரி இயக்கம் பிளவுபட்டுப் போனது, குழுக்களாக செயல்படுவது பற்றி நக்கலாக எழுதுகிறார் யெச்சூரி. இந்தக் குழுக்களிடையே நிலவுவது, புரட்சியை எப்படிச் சாதிப்பது என்கிற வேறுபாடுதானே தவிர, கேரளத்திலும், மே.வங்கத்திலும் சி.பி.எம். கட்சிக்குள் நடப்பதைப் போல பதவிச் சண்டையோ, இலஞ்ச ஊழல் போட்டியோ அல்ல. சினிமாக்காரன்களின் புகழ்பாடியோ ""புரட்சித் தலைவி ஆசி பெற்ற சி.பி.எம். வேட்பாளர்'' என்று கூறியோ ஓட்டுப் பொறுக்கும் கட்சியின் தலைவருக்கு இதெல்லாம் தெரியாததில்லை!

மு சுப்பு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது