Wednesday, December 19, 2007

"தோழர் ஸ்டாலின்" - வெல்லமுடியாத சகாப்தம்


ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
..
பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் "கோபா"
..
1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு "டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது" என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.
..
1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் "தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு" என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு "இரும்பு மனிதன்" எனும் பொருள் கொண்ட "ஸ்டாலின்" என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் "ஸ்டாலின்" என்ற பெயர் இணைக்கப்பட்டது.
..
தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.
..
1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
..
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.
..
முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி " இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்" என்றார். உடனடியாக குழந்தைகள் "ஆறுமாதம் சிறை கிடைக்கும்" என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
..
உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது..
....

நாடுகள் -----------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933
..
அமெரிக்கா -----------100 -----. 80.7 ---- 63.1 ------- 59.3 -------64.9
பிரிட்டன் -----------100 ------ 92.4 ------ 83.8 ------ 83.8 -------- 86.3
ஜெர்மனி ----------100 ------- 88.3 ------- 73.7 ----- 59.8 -------- 66.8
பிரான்ஸ் ------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4
சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 -- ----- 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)
..
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.
..
இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.
..
'கிரெம்ளினைக் கைப்பறுவேன்' என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.

இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!

ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.
.

ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.
..
ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.
..
1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.
..
உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.
..
சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.
..
எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.
..
மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.
..
உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.
..
நன்றி இரும்பு

Tuesday, December 18, 2007

"தோழர் ஸ்டாலின்" - பிறந்த தினம்

"சோசலிசத்தை உருவாக்கிய தோழர் ஸ்டாலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டு, மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ வழிகாட்டுதலில் உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவ உறுதி ஏற்போம் இந்நாளில்"

Sunday, December 16, 2007

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுனத்துவம் இல்லாத ஒருவர் சோசலிசத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்.

..
உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடுகள் மற்ற நாடுகளை அடிமைபடுத்தி வாழ்கின்றன. தோல்வி அடைந்த நாடுகளின் செல்வங்களைச் சுரண்டுவதோடு அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிவிடுகிறார்கள்.

..
இதை சமூக வளர்ச்சியில் 'காட்டுமிராண்டிக்கட்டம்" எனலாம். நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து விடவில்லை சோசலிசத்தின் நோக்கம் இந்த கட்டத்தைக் கடந்து சென்று உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். சோசலிசம் என்பது ஒருசமூக-அறவியல் இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்ற இயக்கமாகும்.

..
மனிதசமூகம் ஒரு மாபெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது: அதன் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில் தனிநபர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது அக்கறையில்லாதிருப்பதும், சமூக நலங்களுக்கு எதிராக நடந்து கொள்வதும் இயல்பே.
மேலே கூறியதை விளக்கும் வகையில் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒருஉதாரணத்தை தருகிறேன் இன்னொரு உலகப்போர் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் அத்தகைய போரில் மனித குலம் பூண்டற்றுப் போய்விடும் என்பதையும் அறிவும் பண்பும் அமையப் பெற்ற ஒருவரிடம் விளக்கி கூறினேன. "மனிதகுலம்அழிந்துவிடக்கூடாது என்று நீங்கள் கவலைப்படுவது ஏன்?" என்று அவர் என்னிடம் கேட்டார்.

..
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாதிரி அலட்சியமாக யாரும் பேசியிருக்க மாட்டர்கள். தன்னுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்து, அந்த முயற்ச்சியில் தோல்வி கண்ட ஒருவரின் அழுகுரல் என்று இதை கூற வேண்டும். நிராசையும், அவநம்பிக்கையும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கும் இன்று ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இதை மாற்றும் வழி என்ன? என்னாலியன்ற வரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.

..
மனிதன் ஒரே சமயத்தில் தனிநபராகவும் சமூகப் பிராணியகவும் இருக்கிறான். தனிநபர் என்ற முறையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவும், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும் பாடுப்படுகிறான். சமூகப்பிராணி என்றமுறையில் மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தையும் பாரட்டையும் பெறுவதற்கும், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொள்ளவும் சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறான். இந்த இருவகை தன்மைகளும் அடிக்கடி மோதிக்கொள்ள நேர்ந்தாலும், இவையே மனிதனின் சிறப்பியல்புகளாகும். இவை இரண்டும் எந்தஅளவில் இணைகின்றன் என்பதை பொறுத்தே மனிதனின் அக வாழ்க்கை அமைகிறது.
ஒரு தனிமனிதனுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுக்கின்ற நேரடியான, மறைமுகமான உறவுகளின் மொத்ததையே "சமூக ம்" என்றகருத்து குறிப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு தனி நபரால் சிந்திக்கவும் தானாக வேபாடுபடவும் முடியும். ஆனால் அவனுடைய உடல், உணர்ச்சி, அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தினால் மட்டுமே முடியும். ஊடை, உணவு, வீடு, மொழி உழைப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை அவனுக்கு தருவது சமூகமே. அவனுடைய சிந்தனை வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிப்பது சமூகமே. "சமூகம்" என்ற சிறுவார்த்தையில் மறைந்திருக்கும் பல் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் சாதனைகளுமே அவன் வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றது. இந்த கோடிக்கணக்கான மக்களில் அவனுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்களின் பங்கும் உண்டு.

..
நம் காலத்திய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அது சமூகத்துக்கும் தனிநபருக்கும் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் அதிகமான அளவுக்கு சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் இது ஒரு இயல்பான பினைப்பு என்றோ, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றோ, அவன் கருதுவதில்லை. தன்னுடைய நியாயமான உரிமைகளை கட்டுப்படுத்தும் சக்தியாகவே சமூகத்தை கருதுகிறான். மேலும் இன்றைய சமூகத்தில் தனிநபர் போக்குகள் தீவிரம்டைகின்றன: சமூகப் பிணைப்புகள் மேன்மேலும் பலவீனமடைகின்றன. மனிதர்கள் அனைவரும் இத்தகைய படிப்படியான சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தனிமை சூழ்ந்து, கவலை அதிகரிக்கிறது எளிமையான வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பரிசுத்தமான் மகிழ்ச்சியை அவர்கள் பெறமுடிவதில்லை. வாழ்க்கை என்பது குறுகியதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னைச் சமுதாயத்துக்கு அர்பணித்துக் கொள்வதன் மூலம்தான், வாழ்க்கையின் நிறைவை பெற முடியும்.

..
முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம். உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக இருக்கின்ற சமுதயத்தில் நாம் வாழ்கிறோம். இவர்கள் சட்டபூர்வமாகவே மற்றவர்கள் தங்களுடைய பயனைப் பெறமுடியாதவாறு செய்கிறார்கள். உழைப்புச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கின்ற காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களுடைய உழைக்கும் சக்தியை விலைக்கு வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும்பொருள் முதலாளிக்குச் சொந்தமாகிறது. அந்தப் பொருளின் மதிப்பு அதிகம், ஆனால் அவனுக்குத் தரப்படுகின்ற ஊதியம் குறைவு. இந்த வேறுபாட்டை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலாளிகளிடையே போட்டியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மூலதனம் சிலரிடத்தில் குவிகிறது. இவர்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். சட்டமன்றத்தின் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாண்மையான ஏழைகளின் பிரதிநிதிகள் அல்ல. மேலும் பத்திரிக்கைகள். வானொலி, கல்வி அமைப்பு ஆகியவற்றை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிப்பதால். மக்களாலும் தங்கள் அரசியல் உரிமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை இவர்கள் உற்பத்தி செய்வதில்லை. அதிகமான லாபமே இவர்களது குறிக்கோள். எல்லோருக்கும் வேலை கிடைப்பத்தில்லை. வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை போய்விடுமோ என்ற பயம் நிரந்தரமாக இருக்கிறது. லாப நோக்கம், தங்கு தடையில்லாத போட்டி ஆகியவையால் உழைப்பு அதிகமான அளவுக்கு வீணாவதையும், தனி நபர்களின் சமூகஉணர்வு சிதைக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது முதலாளித்துவ சமூகத்தின் படு மோசமான நோய். '

..
சோசலிச அமைப்பு மூலம்தான் இவற்றை ஒழிக்கமுடியும் என்பதில் எனக்குசிறிதும் சந்தேகமில்லை. சோசலிசப் பொருளாதாரத்தில் சமூக உடைமையாக இருக்கின்ற உற்பத்தி சாதனங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தால் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி நடைபெறுவதால் வேலை பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்-பெண், குழந்தை-வயோதிகர் அனைவருக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் திறமையும் ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் பதவிக்கும் பணத்துக்கும் நடைபெறும் போட்டிக்கு பதிலாக, "மற்றவர்களுக்காக நான்" என்ற உணர்வு வளர்க்கப்படும். எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.

..
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(Monthly Review, May 1949)
**
முருகன் என்ற பெயரில் ஒரு அன்பர் இந்த கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்

..
பதிந்தவர் அசுரன்

நன்றி அசுரன்

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!

சோவியத் யூனியன் உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றிகரமாக சோசலிசத்தை சாதிக்க முடியும் என்று நிரூபித்த நாடு. அதே நாடுதான் முதலாளித்துவத்தின் தோல்விக்கும் உதாரணமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. அது 1920களை ஒட்டிய கறுப்பு வெள்ளை காலகட்டம், உலக ஏகாதிபத்திய நாடுகள் முதல் உலகப் போர் முடிந்து ஒரு பத்தாண்டுகளிலேயே மீண்டும் ஒரு உலக யுத்தம் செய்வதற்க்கான தாயாரிப்புகளில் தீவிரமாக இருக்கின்றன. இந்த முறை அரசியல் களம் சிகப்பு நிறமாக இருந்தது ஒரு முக்கிய வித்தியாசம்.
..
துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் 'மார்க்ஸ் முதல் மாவோ வரை' புத்தகத்திலிருந்து:

"சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.

பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்."

"மேற்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட ஹிட்லர் இப்போது கிழக்கில் தாக்குதல் தொடுக்கத் தாயாராக இருந்தான். பிரிட்டனின் ஆதரவைப் பெற ஒரு முயற்சி செய்தான்; ஆனால் சர்ச்சில் பிரிட்டிசு மக்களின் ஆதரவுடன் பிரிட்டனை சோவியத் யூனியன் பக்கம் நிறுத்தி தன் பதிலை வழங்கினார். இதன் பொருள் பிரிட்டிசு ஆளூம் வர்க்கம் தனது குறிக்கோளைக் கைவிட்டு விட்டது என்பதல்ல, அதன் நடைமுறைத் தந்திரம் மட்டுமே மாறியது. சர்ச்சிலின் நோக்கம் என்னவென்றால், ஜெர்மனியைத் தோற்கடிக்க சோவியத் யூனியனுக்கு இயலும் வகையில் ஆதரவு தருவது; இதன் மூலம் சோவியத் யூனியன் தனது சக்தி அனைத்தையும் செலவிடும்; அதன் பிறகு பிரிட்டன் உண்மையான வெற்றியாளனாகி விரும் என்பதுதான். மீண்டும் ஒரு முறை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். சோவியத் மக்கள் அளவிட முடியாத இழப்புகளை அனுபவித்தனர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்தனர்; இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் பலன்களைக் காட்டிலும் அதிகமான பொருள்வகைச் சேதம் ஏற்பட்டது; ஆயினும் அவர்கள் வெற்றி பெற்றனர். முதல் சோசலிச அரசு பாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றியது."

நீலகண்டன் என்பவர் தனது பொய்யுரைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் இன்னுமொரு பொய்யை எழுதியிருந்தார். அதாவது ஹிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏதோ பெரிய துரோகம் செய்தது போல அதில் சித்தரித்திருந்தார். இவர்கள் அரைப் பொய்யர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதாவது உண்மையில் ஸ்டாலின் பிரிட்டிஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் போட கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் மறுக்கவும் வேறு வழியின்றி ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டதன் மூலம் ஒரு வருடம் போருக்கான தயாரிப்புக்கு அவகாசம் கிடைப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். இந்த உண்மையின் கடைசிப் பாதியை மட்டும் வைத்து பொய்யுரைகளை எழுதும் இது போன்ற ஜென்மங்களை எந்த லிஸ்டில் சேர்க்க? மேலும் அவரது அந்த கட்டுரையில் ஸ்டாலின்தான் உண்மையில் ஹிட்லரை வளர்த்தார் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் நெருக்கடியை தவிர்க்க ஒரு வருட அவகாச காலகட்டத்தில் ஹிட்லருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி சில அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை ஹிடலரின் ஜெர்மனியுடன் செய்து கொண்டதை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வாறு அவதூறு கிளப்புகிறார் பொய்கண்டன்.

இதில் குறிப்பாக ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது,

பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா?

ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள்.
..
ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களூம் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.
..
சரி இங்கு சுருக்கமாக ரஸ்யாவில் கடும் நெருக்கடியான சூழலில் வர்கக் போராட்டம் கைவிடப்பட்ட சூழல் எது என்பதையும். அது எப்படி எதிர் வர்க்கங்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைத்தது என்பதனையும் பார்ப்போம்.
..
ஸ்டாலினின் இரு தடுமாற்றங்கள் - தொடர் புரட்சி:
..
இரண்டாம் உலகப் போரில் வெளிநாட்டு எதிரிகளை வெற்றிகரமான செயல் தந்திரத்தின் மூலம் முறியடித்த ஸ்டாலின் உள்நாட்டு எதிரிகளை அவ்வாறூ முறியடிப்பதில் தோல்வியுற்றார். இது குறித்து ஒரு சின்ன சித்திரம்.
1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:
..
"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "
..
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க வேலைப்பாணியே.முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:
..
"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."
..
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.
..
இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.
..
இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளீயே உள்ளா சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார்.
..
ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள்.
..
எங்கே தவறு நிகழ்கிறது?
..
1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.
ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார்.
..
இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சி நிறைவு பெறுவதில்லை என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.
..
இதில் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்ற வித்தியாசம் எதிரிகளுக்கெதிரான வன்முறையின் வடிவத்தையும், அரசுக்கும் மக்களுக்கு இடையிலான உறவை இயல்பானதாக மாற்றும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றுமே தவிர்த்து, வன்முறையையும், போராட்டத்தையும் முற்றிலும் விட்டொழித்து விடுவதில்லை. இன்னும் சொன்னால் அவற்றை இன்னும் மோசமானதாக்குகிறது. உண்மையில் புரட்சிக்கு பின்புதான் பாட்டாளி வர்க்கம் மிக நெருக்கடியான நிலையை சந்திக்கிறது.
..
இந்த காலகட்டத்தில் மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வது குறித்து அவர்களிடம் நிலவும் தேவையற்ற தயக்கம், அச்சம் இவற்றை களையச் செய்யும் வகையிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உயிராதாரமான ஒரு விசயமாக உள்ளது. குறுகிய காலத்தில் எதிர்புரட்சி கும்பலை முறியடித்த அதே வேளையில் இரு தடுமாற்றங்கள் மூலம் அவர்களை வேறு வடிவங்களில் நிலைபெறச் செய்த இந்த அம்சத்தில்தான் தோழர் ஸ்டாலின் மீது நாம் விமர்சனம் வைக்கிறோம். நாமும் பாடம் கற்றுக் கொள்கிறோம்.
..
ஸ்டாலின் எமது அதி உன்னத தோழர்:
//
ரஸ்யாவின் மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(மாபெரும் சதி). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்஢லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்:
..
"இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை."
..
எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
..
ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார்.
...
'தோழர் ஸ்டாலின்' - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சும்ந்துக் கொண்டிருப்பதற்க்காகவும்'.

அசுரன்

தொடர்புடைய சுட்டிகள்:
..
நன்றி அசுரன்

Tuesday, December 11, 2007

பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை

இந்து மதவெறியின் மிதவாத முகமாக பாரதியின் முகத்திரையினை கிழித்தெறியும் இப்பதிவு இன்றைய நாளில் அவசியம் கருதி மறு பிரசிரிக்கப்படுகிறது.


பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்


1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.


கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.


தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் "டயர் மடையன்" போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.


அதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.


"மாட்சிமை தாங்கிய" கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட "தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு" சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.


பாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.


கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.
மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.


அப்பாட்டு
"அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே....இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ....உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்பதாகும்.
இந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம 'சத்திய ஆவேசம்' கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.
8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை' என்று எழுதினார்.
1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.
பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், 'ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்' என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.
2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே "தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி" என்று எழுதியதில்தான் 'இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான' விதை இருக்கிறது.
3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?
4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா?
5) "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது?
6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. 'ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்' என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை "வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்" எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா?
இல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.
1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை "பெருந்தன்மை" எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை "டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்" என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.
தன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே "மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை" என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார்? பாரதிக்கு 'அக்கிரகாரம் மட்டுமே தேசம்' என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.
..
வெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் "ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது" எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி? 'நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே' எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது?
..
7) "சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்" என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே!. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார்? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்!
..
எவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.
..
8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய "ஈனப் பிறவி", "கொழுப்பு" எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.
..
பார்ப்பனர் மனைவியிடம் நாராயணப்பிள்ளை உறவு வைத்திருந்ததை மலர்மன்னன் "கொழுப்பு" என்கிறார். பார்ப்பனரின் மனைவியிடம் தகாத செயல் செய்வது 'கொழுப்பு' என்றால், இன்றைக்கு வேலை பார்ர்க்கும் இடங்களில் நடப்பவற்றுக்கு, சிறு பட்டறைத் தொழிலாளிகளிடம், அச்சுக் கோர்க்கும் தொழிலாளிகளிடம் முயற்சி நடந்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? - இது மலர்மன்னனுக்கு புரியும்.
..
"பாரதிதாசன், பாரதியை 'அய்யர்' என்று மரியாதையுடன் (!) அழைத்தார்" என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, 'அய்யர்' என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
..
9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. உடனே மலர்மன்னன், பெங்களூரில் தான் தோசை சாப்பிடுவதே தலித் காலனியில்தான் என்றும், காலனியில் முந்தா நாள் வைத்த மீன் குழம்பை அகப்பையோடு சாப்பிடுவேன் என்றும் பாவண்ணனை சாட்சிக்கு அழைப்பார். இதெல்லாம் ஒருவித முன்னேற்பாடுதான். பெங்களூரில் நடந்த சுந்தரராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், 'எங்கள் வீட்டில் சு.ரா. தோசை சாப்பிட்டார்' எனச் சொல்லி எழுத்தாளர்கள் தேம்பித் தேம்பி அழுதது, பின்னாளில் என்ன நடக்கக்கூடும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.
..
10) 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி? வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?
..
11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் "அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்" என்று கோரஸ் பாடுவது வழக்கம்.
..
இதற்கு மதிமாறன் "பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால்? பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்" எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.

12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் "இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்" என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்?

முஸ்லிம்களை "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.

சிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட "வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே" என்று பாடி வைத்து, குரானை 'பேதை' நூல் என்று சொல்லியவர்தான்.
..
13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம்!" என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் "மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்" என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.
..
முன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.." என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.

துவேஷத்துக்கு ஓர் எல்லையில்லையா? மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.
..
பாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.
கேள்வி:- "இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது?"
//
பதில்:- "பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது"
..
மேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.

14) மலர்மன்னனின் பார்வையில் 'பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்'. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது "அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது" என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.

ஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.

இதே பெரியார்(?)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட 'பெட்டைப் புலம்பல்' என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் "ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து" என்றும், "பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்" என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.
..
பெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை? எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா?'சிறந்த பெண்மணி' எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா?"(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்" என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.
..
15) 'வாழ்க நீ எம்மான்' எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த 'ஒத்துழையாமை' தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் 'அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்' வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா? அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா?
..
16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாரா?சாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா?
..
17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா?
..
சாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா?
..
தமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.
..
பாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த 'இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்' சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.
..
'நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்?' என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.
..
"திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.
..
ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்."

18) பின்னிணைப்பு:

கடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!

Monday, December 10, 2007

உ.பி.:தலித்திய ஆட்சி பார்ப்பனிய நீதி

உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் இருக்கும் பாதேவெரா எனும் சிற்×ரின் தலித் குடியிருப்பை சேர்ந்தவர், 21 வயது நிரம்பிய சக்ராசென் கவுதம். சாமர் எனும் தலித் சாதியை சேர்ந்த சக்ராசென் பி.ஏ. பட்டம் முடித்து, எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனும் முயற்சியில் ரயில்வே உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டும், ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டும் இருந்தார். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட சக்ராசென்னையும் அவரது இரு சகோதரர்களையும் அவர்களின் தாத்தா, சிவ்மூர்த்திதான் படிக்க வைத்து வந்தார்.

2004இல் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவராக தலித் ஒருவர் இருந்தபோது, ரேசன் கடை நடத்தும் உரிமையை இவர்களின் குடும்பத்திற்கு வழங்கி இருந்தனர். தலித் சேரியின் அண்மையில் இருக்கும் பார்ப்பன குடியிருப்பை சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா, தான் நடத்தி வரும் கடையில் சந்தை விலைக்கு விற்று லாபமீட்டுவதற்காக, சிவ்மூர்த்தி, தனது ரேஷன் கடையில் இருந்து அதிக அளவில் ரேசன் பொருட்களைத் தந்தாக வேண்டுமென நிபந்தனை விதித்தார். இதற்கு உடன்பட சிவ்மூர்த்தி மறுத்து விடவே சந்தோஷ் மிஷ்ரா, இந்த தலித் குடும்பத்தினர் மீது வன்மம் கொண்டிருந்தார்.மேலும், தலித் இளைஞரான சக்ராசென் உயர்கல்வி கற்றுள்ளதைக் கண்டு பொறாமையும் ஆத்திரமும் கொண்டிருந்தார்.

பத்து மாதங்களுக்கு முன்பு கூட மிஸ்ரா, ""உங்கள் பேரனை அதிகம் படிக்க வைத்து விட்டீர்கள். ஆனாலும் அவனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை, பாருங்கள்!'' என்று சக்ராசென்னை ஒழித்துக் கட்ட இருப்பதாக சிவ்மூர்த்தியிடம் மிரட்டி இருக்கிறார். உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டதால் மிஸ்ரா விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். உடனே உள்ளூர் தாக்குர்கள் (ஆதிக்க சாதியினர்) சிவ்மூர்த்தியிடம் "இது உள்ளூர் விசயம். நமக்குள் பேசித் தீர்க்கலாம்' என்று கூறி புகாரை திரும்பப் பெற வைத்தனர். ஆயினும், அவரின் பேரன் உயிருக்கிருந்த ஆபத்து நீங்கிவிடவில்லை. ""உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' என்றும் ""ஒழித்துக்கட்டுவேன்'' என்றும் பார்ப்பன மிஸ்ரா பகிரங்கமாக மிரட்டிக் கொண்டிருந்தார்.

கடந்த ஜூலை 30ஆம் நாள் இரவு அலகாபாத்தில் இருந்து ஊர் திரும்பிய சக்ராசென் கவுதம், வழக்கம்போல மறுநாள் அதிகாலையில் ஓட்டப்பயிற்சி செய்ய வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். அவரை இன்னொரு தலித்தான இந்திரஜித் பாஸ்வான் என்பவரின் வீட்டில் வைத்து கட்டிப் போட்டு ஒரு கும்பல் அடித்து உதைத்துக் கொண்டிருக்கும் தகவலை அறிந்த சக்ராசென்னின் தாத்தாவும் தம்பியும் விரைந்து சென்று பார்த்தபோது, இரத்த வெள்ளத்தில் கிடந்த சக்ராசென்னுக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

""பாஸ்வானின் குடிசைக்கு நீ எப்படி வந்தாய்?'' என அவர்கள் கேட்டதற்கு, சந்தோஷ் மிஸ்ரா மற்றும் ஆகாஷ் துபே ஆகிய இரு பார்ப்பனர்களின் பெயர்களை உச்சரித்து விட்டு குற்றுயிராய்க் கிடந்த சக்ராசென் மரணமடைந்தார். கொலையாளிகள் இருவரும் தலைமறைவானார்கள். போலீசோ பாஸ்வானையும் அவரின் இரு சகோதரர்களையும் கைது செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்ட இன்னொரு தலித்தைக் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளது.

கொலைகார பார்ப்பனர்களைக் கைது செய்யவிடாமல் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராம் ஷிரோன்மணி சுக்லா தடுத்து வருகிறார். பார்ப்பன சாதியை சேர்ந்த ஆளும்கட்சி எல்.எல்.ஏ.வான இவருக்கு, கொலையாளிகள் இருவரும் நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமல்ல; ஒரே சாதியையும் சேர்ந்தவர்கள்.5 லட்ச ரூபாய் தருவதாயும், இரண்டு பார்ப்பனர்கள் மீதான புகார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்த எல்.எல்.ஏ. பேரம் பேசியுள்ளார். சக்ராசென் கவுதமின் குடும்பமோ கொல்லப்பட்ட சக்ராசென்னின் உடலை காரில் கொண்டு சென்று மாயாவதி வீட்டு முன் வைக்க முயன்றது. ஆனால் சுக்லாவும் போலீசாரும் கார் ஓட்டுநரை மிரட்டி இதனைத் தடுத்து விட்டனர். கொலையாளிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வே உதவுகிறார் என்பதை அம்மாவட்ட பகுஜன் சமாஜின் தலைவராக இருக்கும் தலித் ஒருவரிடம் சென்று சக்ராசென் குடும்பத்தார் முறையிட்டனர். தலித்தாக இருந்தாலும் அவரோ அந்த ""சட்டமன்ற உறுப்பினர், அவரின் சாதிக் கடமையைச் செய்யத்தானே செய்வார்'' என்று சாதி வெறியர்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.

இக்கொலைக்குப் பின்னர் அந்த வட்டாரத்தில் இருக்கும் பார்ப்பன சங்கமான "பிராமண சகோதரத்துவக் குழு'வுக்கு புதுத்தெம்பு பிறந்து விட்டது. பாதேவெரா கிராமத்தின் தலித் சேரியைச் சுற்றி வந்து நக்கலான முழக்கம் ஒன்றை அக்கும்பல் முழக்கிச் செல்கின்றது. ""பிராமணர்கள் சங்கு ஊதட்டும்... பகுஜன் சமாஜிகள் தில்லிக்கு செல்லட்டும்'' என்பதே அந்த முழக்கம்.

சக்ராசென் கொலை செய்யப்பட காரணம், அவர் தலித் என்பதால் மட்டுமல்ல; சுயமரியாதையோடு படித்து முன்னேறத் துடித்த தலித் இளைஞர் என்பதால்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த உண்மை ஒருபுறமிருக்க, தலித் ஒருவர் முதல்வராக இருந்து ஆட்சி செய்தாலும், இன்றைய அரசியலமைப்பு முறையின் மூலம் சாதிவெறிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்பதையும் தனது உயிர்த்தியாகத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார், சக்ராசென்.

ஆனால், பகுஜன் சமாஜின் பார்ப்பனக் கூட்டை சாதி ஒழிப்புக் குரிய போர்த்தந்திரமாகக் கருதி பல அறிவாளிகளும் அரசியல் விற்பன்னர்களும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தலித்களும் பிற சாதி உழைக்கும் மக்களும் ஒன்றுபடாமல் வெறுமனே ஓட்டுப் பொறுக்கித் தலைவர்களிடையேயான கூட்டணியால் தலித்கள் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதும், பார்ப்பனர்களுடனான கூட்டணி தலித்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி விடும் என்பதும் எவ்வளவு மோசடியானது என்பதை மாயாவதியின் தலித்திய ஆட்சியே நிரூபித்துக்காட்டிவிட்டது.
· கவி

Sunday, December 9, 2007

இந்திய ஆட்சியாளர்களின் ட்ரையாஜ் கொள்கை !!

சாலை சந்திப்புகளில் நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஒட்டிகள்,அதில் பயணம் செய்பவர்களுக்கு ரூ 600 அபராதம் விதிக்கப்படும் இப்படி டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர். ஏன்னா வரும் 2012-ல் டெல்லில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. காமன்வெல்த் போட்டி நடைபெறும் போது பிச்சைக்காரர்கள் இருந்தால் வருகின்ற பன்னாட்டு வீரர்கள் இந்திய நாட்டை கேவலமாக பார்ப்பார்கள் என்று பிச்சைக்காரர்களை ஒழிக்க அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்காக யோசிக்கும் போது இப்படி பிச்சைக்காரர்களை ஒழிக்கவே ஒரு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2002-ல் நிறைவேற்றப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்தது. அதன் படி சாலை சந்திப்புகளில் காத்து நிற்கும்போது பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஓட்டுனர்களுக்கும், அதில் பயணம் செய்பவர்களுக்கும் அபராதமாக ரூ 600 /- விதிக்கப்படும். இதனை தற்போது அமுலாக்க முடிவு செய்து உள்ளனர்.

-
"பிச்சை போடுபவர்கள் இருந்தால்தான் பிச்சை எடுப்பவர்கள் இருப்பார்கள் எனவே பிச்சை போடுவதை தடுக்கிறோம்" என்கிறார்கள்.இதே கண்டுபிடிப்பைக் கொண்டு தான் மும்பையில் நகரை அழகுபடுத்த போகிறோம் என்று தாரவி பகுதியில் இருந்த சேரிகளை காலிசெய்தார்கள், சென்னையில் மெரீனா கடற்கரையை அழகுபடுத்த என்று கடலோர குப்பங்களை காலிசெய்தார்கள்.
-
இன்றைக்கு இந்த பெரிய நகரங்களின் ஜொலிக்கும் கட்டிடங்களும், மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும் இந்த மக்களின் உழைப்பில் உருவானது. ஒவ்வொரு கட்டிடம் கட்டும்போது ஒரு தொழிலாளி உயிரிழக்கிறான்.இப்படி தங்களது உயிரையே கொடுத்துதான் பெரிய நகரங்களை உருவாக்கினார்கள்.இன்று இந்த மக்களையே அசிங்கம் என்று ஒழிக்க முடிவு செய்து குப்பைப்போல வீசியெறிய முடிவு செய்து விட்டார்கள்.
-
இவ்வாறு நாட்டின் பெரும்பான்மை மக்கள் இவர்களின் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினால் வாழ்க்கையை இழந்து தெருக்களில் வீசியெறியப்பட்டு வருகின்றனர்.
-
இதை நேரடியாக நீங்கள் பார்க்கலாம்.சில்லரை வணிகத்தில் இன்றைக்கு ரிலையன்ஸ் உள்ளிட்ட பராசுர கம்பெனிகளை அனுமதித்து சிறு மளிகை கடைகாரர்களையும், சிறு காய்கறி கடைக்காரர்களையும் வெளியேற்றுகிறார்கள்.இதனால் சிறுகடை வைத்து இருப்பவர்கள் தள்ளுவண்டி கடைக்கு மாறி வருகின்றனர். அதேபோல தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் தரைக்கடைக்காரர்களாகவும், தரைக்கடைக்காரர்கள் கூலி தொழிலாளர்களாகவும் மாறி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் சொல்கிறார்கள் தாங்கள் தங்கள் உணவை இரண்டு வேலையாக குறைத்து கொண்டோம் என்று.
-
ஏற்கனவே கூலித்தொழிலாளர்கள் போன்றவர்கள் வாழவழியற்று ஒன்று தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது சிலர் பிச்சையெடுக்கின்றார்கள்.இப்படி இந்த அரசின் மூலம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டவர்களுக்கு இன்று பிச்சைபோடுவதை தடுக்கப் போகிறார்கள். இது பிச்சைக்காரர்களை கொலைசெய்வதே ஆகும்.நேரடியாக பிச்சைக்காரர்களை கொல்ல இன்றைய சமுதாயம் ஒத்துக்கொள்ளாது என்பதால் இப்படி பிச்சை போடுபவர்களை நிறுத்தி விட்டால் தன்னாலே பிச்சைக்காரர்கள் செத்து விடுவார்கள்.
-

-
இவ்வாறு இவர்கள் எடுக்கும் நடவடிக்கை ஒரு வகையில் ட்ரையாஜ் கொள்கை போல தான் உள்ளது.அது என்ன ட்ரையாஜ் கொள்கை என்கீற்களா. ட்ரையாஜ் என்பது மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தை.அதாவது ஒரு விபத்து ஏற்பட்டவுடன் அதில் ஒரு சிலர் எப்படியும் இறந்து விடுவார்கள் எனில் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வது வீண் என்று விட்டுட்டு மற்றவர்களை காப்பாற்றுவது.
-
"எப்படியும் எதிர்காலத்தில் மக்கள் பெருக்கத்தினால் சாப்பாடு, நீர் இல்லாமல் பலர் இறக்கத்தான் போகிறார்கள், அதனால் எல்லோரையும் அழைத்து செல்வதை விட அதில் பாதிப் பேரை பட்டினி போட்டே கொன்ற வேண்டியது தான்" இதுதான் அமெரிக்கா போன்ற வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட ட்ரையாஜ் கொள்கை.
-
இதனைதான் ஏழை, எளிய நாடுகளின் மீது இவர்கள் இன்று நடைமுறைப்படுத்துகிறார்கள்.தனக்கு கொள்ளையடிக்க அனுமதிக்காத நாடுகளின் மீதும்,
தன் முடிவுகளை ஏற்காத - ஆதரிக்காத நாடுகளின் மீது பொருளாதார தடை என்ற பெயரில் இந்த ட்ரையாஜ் கொள்கை நடைமுறைப்படுத்துகின்றனர்.
-
"நாம் உதவிகள் அளித்துக்கொண்டே இருக்கத்தான் இந்த நாடுகளின் மக்கள் குழந்தைகளை மட்டும் பெற்று கொண்டே திரிகிறார்கள்"இப்படிதான் இன்று ஆப்பிரிக்க, ஆசிய போன்ற மூன்றாம் ஏழை எளிய நாடுகள் பற்றி அமெரிக்க பிரஜைகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
ஒட்டுமொத்த உலகத்திற்கும் அமெரிக்காதான் படியளப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏழை நாடுகளின் மக்கள் உழைக்காமல் அமெரிக்காவின் பிச்சைக்காசில் உயிர் வாழ்வதாகக் கருதுகிறார்கள்.
-
"பிச்சைகாரர்களை ஒழிக்க ,பிச்சைப்போடுவதை நிறுத்தினாலே போதும்" என்று "இந்தியா போன்ற ஏழை நாட்டுப் பிரஜைகளை (பிச்சைக்காரர்களை) ஒழிக்க (பட்டினி போட்டு சாகடிக்க) அமெரிக்கா தரும் உதவிகளை நிறுத்த வேண்டும்",-இப்படி தான் சிந்தனைரிதியிலே அமெரிக்கனை மாற்றி உள்ளார்கள்.
-
ஆனால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் இப்படி வறுமையில் இருப்பதற்கே இவர்கள் கொளுத்து திரிவது தான் காரணம். இன்றைக்கு உலக மக்கள் தொகை 600 கோடி. இதில் அமெரிக்க மக்கள் தொகை 36 கோடி. அதாவது 6%. ஆனால் இந்த 6% தான் உலக உற்பத்தியில் 40% சாப்பிடுகின்றனர். மீதம் உள்ள 564 கோடிப்பேர் அதாவது 94% பேர் 60% உற்பத்தியை சுவீகரிக்கிறார்கள்.
-
இப்படி ஒட்டுமொத்த உலகின் உழைப்பை உறிஞ்சிக் குடித்துவிட்டு, அவர்களைப் பிச்சைக்காரர்களாக பார்க்கிறான் அமெரிக்கன்.இதேபோலத்தான் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சிலர் 5 இலக்க, 6 இலக்க சம்பளம் வாங்க பல லட்சம் பேரைப் பிச்சைகாரர்களக மாற்றி, அவர்களை ஒழிக்கிறோம் என்று இப்போது கிளம்பியுள்ளார்கள்.
-
பிச்சைக்காரர்களை ஒழிக்க, பிச்சை போடுபவர்களுக்கு அபராதம் என்பதா தீர்வாக இருக்க முடியும். ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு இந்த அரசாங்கம் தான் 300,400 என பிச்சை போட்டு வருகிறது. ஆனால் உண்மையாக பிச்சைக்காரர்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும், பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
-
அதற்கு இவர்கள் தங்களின் தனியார்மய, தாராளமய , உலகமய கொள்கைகளை கைவிட்டு , பன்னாட்டு & தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு பதில், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஆனால் இதை இந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா இந்த அமைப்பே பன்னாட்டு,தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதற்குள் மக்கள் நலன் என்று ஒன்றை சித்திக்க கூட முடியாது.
--
--நன்றி கோபா
Related :
-
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
-
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
-
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
-
சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!
-
பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்!

Friday, December 7, 2007

மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?

இந்தியப் பொதுடைமை இயக்கம் வலது, இடது வரலாறு:

மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாக கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் "மண்ணுக்கேற்ப மார்க்சியம்" என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்திய வாதிகள் மட்டுமல்ல. இந்துமதவெறி பாசிச-பார்ப்பன சனாதனிகள் கூட "மண்ணுக்கேற்ப மார்க்சியம்" பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்.

"புதிய கலாச்சாரம்" அக்டோபர் 1999 இதழில் வந்த இதன் முழு கட்டுரையும் கீழே க்ளிக் செய்து படிக்கவும்:
..
..
..
..
..

தஞ்சை அகிலாண்டேஸ்வரி கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் சேதுபதி மாணிக்கத்தை தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Thursday, December 6, 2007

குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க
தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.


கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.


தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை.


கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும்.


இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)


இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.


தீர்ப்பின் முழு விவரம்:


அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர்.


அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது.


இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.


தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு:குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க

Sunday, December 2, 2007

பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதுபோன்ற திட்டங்களை மாநில முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர்தான் தொடங்கி வைப்பார்கள். ஆனால், அரசுத் தலைவரே முக்கியத்துவமளித்து இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதைக் கண்டு வியந்த மக்கள், விழா மேடையைப் பார்த்தார்கள். அங்கே அரசுத் தலைவருடன் தி.க.வின் வீரமணியும் அருகே அமர்ந்திருக்க, இக்குடிநீர் திட்டத்தை ""பெரியார் புரா'' நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

அது என்ன ""பெரியார் புரா''? நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கும் அளித்தல் எனும் ஆங்கில பெயர்ச் சுருக்கம்தான் ""புரா''. . இதனை தி.க.வின் வீரமணி நடத்திவரும் வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பொயியற் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்தி வருவதால் ""பெரியார் புரா'' திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் வழங்கல் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு சில மாதங்கள் முன்பு, ""பெரியார் புரா'' திட்டத்துக்கு நிதியும் தொழில்நுட்ப உதவியும் அளித்துவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பியூர்ஓடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பூதலூர் அருகிலுள்ள ஆவாரம்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்த்தனர். இக்கிராமங்களில் நிலத்தடி நீரில் புளூரைடு எனும் வேதிப் பொருள் அதிகமாக உள்ளதால், குடிநீருக்காக மக்கள் பல மைல் தூரம் சென்று அவதிப்படுவதை அறிந்து, தாங்களே தண்ணீர் குடத்துடன் நடந்து பார்த்து வேதனையடைந்து, அதைப் புகைப்படம் எடுத்து நாளேடுகளில் வெளியிட்டு, உடனடியாக சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவி புளுரைடு இல்லாத குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

குடிநீர் வழங்குவதோடு ""பெரியார் புரா'' திட்டம் முடிவடைந்து விடவில்லை. கிராம மக்களுக்கு சுயதொழில் பயிற்சி, மூலிகைச் செடி பயிரிட உதவி, சிறு தொழில் பட்டறை நிறுவ உதவி, இணையதள மையங்கள், காட்டாமணக்கு பயிரிட்டு பயோடீசல் தயாரிக்கப் பயிற்சி என அடுக்கடுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கல்வி வியாபாரக் கம்பெனி நடத்தி வரும் தி.க.வும் வீரமணியும் திடீரென கிராமப்புற சமூக சேவை நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஏன்? அடிப்படைத் தேவைகளை அரசே செய்வதற்குப் பதிலாக, அரசும் வீரமணியின் கல்லூரி நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து ""புரா'' என்ற புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஏன்? இத்திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனம் நிதியும் தொழில்நுட்ப உதவியும் செய்வது எதற்காக? என்ற கேள்விகளுடன் ""புரா'' திட்டத்தை ஆராயும்போது அதன் பின்னணியில் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதித்திட்டம் ஒளிந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எதற்காக இந்த ""புரா'' திட்டம்? அதன் பின்னணி என்ன?

ராஜீவ் காந்தி அரசால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 73வது திருத்தமாகக் கொண்டு வரப்பட்ட ""பஞ்சாயத்து ராஜ்'' சட்டம்தான், இன்றைய ""புரா'' திட்டத்தின் தாயும் தந்தையுமாவார். இப்பஞ்சாயத்துராஜ் சட்டமானது, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வ நிறுவனங்களை (அரசு சாரா நிறுவனங்களை) கிராம நிர்வாகத்துக்கு இழுத்து வந்தது. இச்சட்டத்திற்கு வலுவூட்ட பிறப்பிக்கப்பட்ட இதர அரசாணைகள், இத்தன்னார்வ நிறுவனங்களைச் சட்டரீதியாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் இணைத்து விட்டது.

இவ்வாறு சட்டபூர்வமாக தன்னார்வ நிறுவனங்களை கிராம நிர்வாகத்துக்குள் நுழைய விட்ட இந்திய அரசு, தனித்தனியாக இயங்கி வந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து, அந்த வட்டாரத்தில் ஏகாதிபத்திய வல்லரசுகளின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் விவசாய உற்பத்தியை மாற்றியமைத்து, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே ""புரா''.

கிராமப்புறங்களில் மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைப்பது, சமூக சேவையிலிருந்து தொடங்கி பின்னர் அக்குழுக்களின் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவது என்பதுதான் இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொண்டுள்ள புதிய உத்தி.

இப்புதிய உத்தியும் செயல்பாடுகளும் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தனியார் பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றையும் அரசின் சில துறைகளையும் ஒருங்கிணைத்து ஏகாதிபத்திய வல்லரசுகளின் நிதியுதவியோடு கிராமப்புறங்களை ஒரு வட்டார அளவுக்கு சுயநிர்வாகப் பிரதேசங்களாக மாற்றுவது; அப்பிராந்தியத்தில் பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு ஏகாதிபத்திய தேவைக்கேற்ற ஏற்றுமதி சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மண்டலமாக மாற்றுவது என்ற திட்டத்துடன் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக சமூக சேவை என்ற முகமூடியுடன் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ""புரா''.

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிரண்டு ""புரா'' மண்டலங்கள் அமைய உள்ளன. இப்""புரா'' அமைப்பின் கீழ் அவ்வட்டாரத்தில் பல வகையான தன்னார்வக் குழுக்கள் செயல்படும். கிராமப்புற மக்களின் விவசாயம், கைவினைத் தொழில், சுகாதாரம், சுற்றுச்சூழல், அடிக்கட்டுமானம், கல்வி, மகளிர் நலம் முதலான அனைத்தையும் இத்தன்னார்வக் குழுக்கள் மேற்பார்வையிட்டு வழி காட்டி நெறிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், கிராமப்புறங்களில் தன்னார்வக் குழுக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான துவக்கப் புள்ளிதான் ""புரா''.

கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், சமூக இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியன தனியாகவோ கூட்டு சேர்ந்தோ ""புரா'' மண்டலங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம். இவை, இப்பகுதியிலுள்ள பஞ்சாயத்துராஜ் அமைப்பைக் கலந்தாலோசித்து திட்டத்தை முன்வைத்து அனுமதி பெறலாம். இத்திட்டத்திற்காக தனிச்சிறப்பான தொழில்நுட்பம் அல்லது உரிய உற்பத்தி முறையை முடிவு செய்து அரசே அதற்குத் தேவையான நிலம் அளிக்கும். பின்னர், ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளிடமிருந்து நிதியாதாரம் திரட்டப்பட்டு ""புரா'' செயல்படத் தொடங்கும். ""புரா''வுக்கு இசைவாக, அரசின் பிற திட்டங்களது நிதியும் அவசியம் கருதி ""புரா''வுக்குத் திருப்பப்படும். இவ்வாறாக, போலீசு, நீதித்துறை தவிர பிற அனைத்து அதிகாரங்களையும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான தன்னார்வக் குழுக்களின் கைகளில் ஒப்படைத்து தனி சுயாட்சி பிராந்தியங்களை நிறுவுவதுதான் ""புரா'' திட்டம்.

காலனிய ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பிரிட்டிஷ் இந்தியா என்றும், பெயரளவுக்கு அதிகாரம் கொண்ட 526 சரிகைக் குல்லா மன்னர்களின் குட்டி சமஸ்தானங்களுமாக அன்றைய இந்தியா இருந்தது. இன்று மறுகாலனியாக்கத்தின் கீழ், விக்டோரியா மகாராணிக்குப் பதிலாக, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், குட்டி சமஸ்தானங்களுக்குப் பதிலாக ""புரா'' மண்டலங்களும் உருவாகியுள்ளன.

பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.க.வின் வீரமணி, தான் நடத்தி வரும் வல்லம் பெரியார்மணியம்மை பொறியியற் கல்லூரி எனும் கம்பெனி மூலம் மூன்றாண்டுகளுக்கு முன்பு ""புரா'' திட்டத்தைத் தொடங்கி, அதற்குப் ""பெரியார் புரா'' என்று பெயரிட்டுள்ளார். பெரியாரின் பெயரால் ""புரா'' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், இது சமூக சேவையுடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப் போகிறது என்று நீங்கள் கருதினால், அதைவிட ஏமாளித்தனம் இருக்க முடியாது. பெயரில் மட்டும்தான் பெரியார் இருக்கிறாரே தவிர, ""பெரியார் புரா'' செய்து வருவது ஏகாதிபத்திய அடியாள் வேலைதான்!

தஞ்சை மாவட்டமும் அதை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டமும் ""பெரியார் புரா'' திட்டத்துக்கென இனங்காணப்பட்டு, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 65 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ""புரா'' கிராமங்களிலுள்ள பலநூறு சுய உதவிக் குழுக்களுக்கு பால் பண்ணை நடத்துவது, உயிர்ம வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, கக்கூசுக்கான பீங்கான் செய்வது, மண்புழு உரம் தயாரிப்பது, தரிசு நில மேலாண்மை, சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்துவது முதலானவற்றில் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் ""வேன்''கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வெண்டையம்பட்டி, ஆவாரம்பட்டி, திருமலை சமுத்திரம், குரும்பூண்டி, வளம்பக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் இணையதள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வல்லம் கல்லூரி வாயிலாக அளிக்கப்பட்டுள்ள பயிற்சியைக் கொண்டு எரிபொருளுக்காக காட்டாமணக்கு செடியும், மருந்து மற்றும் சாய உற்பத்திக்காக அவுரியும், கத்தாழையும் பயிரிடப் போகின்றனர், ""பெரியார் புரா'' கிராமத்தினர். தேங்காய் நாரிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பதை அச்சம்பட்டி கிராமமும், மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பை குமாரபுரம் கிராமமும், மூலிகைச் செடி பயிரிடுவதை பழையபட்டி கிராமமும், பால் பொருட்கள் உற்பத்தியை ராயமுண்டன்பட்டி கிராமமும், சுடுமண் பொம்மைகள்பானைகள் தயாரிப்பதை மனையேறிப்பட்டி கிராமமும், பித்தளைப் பொருட்கள் உற்பத்தியை நாச்சியார்கோயில் கிராமமும் ஒருங்கிணைக்கும் மையங்களாக மாறப் போகின்றன.

""பெரியார் புரா''வின் துணை அமைப்பான (தி.க.வால் நடத்தப்படும்) ""பவர்'' நிறுவனம், ஒரத்தநாடு, பூதலூர், தஞ்சை, திருவாணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் ஆடவர் சுயஉதவிக் குழுக்களைக் கட்டி நிதிக்கடன் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. ரூ. 1.3 கோடியை சுழற்சி மூலதனமாகக் கொண்ட இத்தன்னார்வ நிறுவனம் தெக்கூரிலும் மனையேறிப் பட்டியிலும் மட்பாண்டங்களைச் செய்ய பயிற்சி அளித்து வருகிறது. களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், சணல் பைகள், தரைவிரிப்புகள் தயாரிப்பு, உள்கூடான செங்கல் தயாரிப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மையமாக தெக்கூர் மண்டலம் செயல்படத் தொடங்கியுள்ளது. காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங் அட்டைகள், வற்றல், ஊறுகாய் தயாரிப்பு ஆகியவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக ஒரத்த நாடு மற்றும் வல்லம் மண்டலங்கள் செயல்படவுள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், தாராளமயத்தால் விவசாயம் திவாலாகி, விவசாயத்தை விட்டே விவசாயிகள் விரட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியும் கோபமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகமாக மாறிவிடுவதைத் தடுத்து சாந்தப்படுத்தி, மாற்றுப் பயிர் மாற்றுத் தொழில் என்ற பெயரில் வடிகால் வெட்டி, அவற்றை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவதற்கான ஏற்பாடுகளே இவை. இதற்காகவே ""பெரியார் புரா'' கிராமப் பள்ளிக் குழந்தைகளை வைத்து நாட்டு நலத் திட்ட முகாம் என்ற பெயரில் மூளைச் சலவையையும், வல்லம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மூலம் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிடச் சொல்லும் பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார் வீரமணி. இதுவும் போதாதென்று, தன்னார்வக் குழுக்கள் பண்பலை ஒலிபரப்பைத் தொடங்க இந்திய அரசு அனுமதித்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, ""பெரியார் புரா'' மூலம் சமுதாய வானொலி எனும் பண்பலை ஒலிபரப்பையும் தொடங்கியுள்ளார்.

அப்படியானால் யார் நெல் பயிரிடுவது? ""உலகச் சந்தையில் நெல்லும் கோதுமையும் "மலிவான' விலைக்குக் கிடைக்கும் போது, நாம் ஏன் அவற்றைப் பயிரிட்டு நட்டப்பட வேண்டும்? நாம் கள்ளியும் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு ஏற்றுமதி செய்வோம்; அதற்கீடாக நெல்லையும் கோதுமையையும் இறக்குமதி செய்து கொள்வோம்'' என்கிறார்கள், ""புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் ""ஜெட்ரோ'' எனும் ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரிகள்.

ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய வல்லரசுகளின் உணவு வர்த்தக நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து'' என்று உத்தர விடுகிறது உலக வங்கி. "மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொள்ளுமாறும், உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் ஏழை நாடுகளை நிர்பந்திக்கின்றன. எனவேதான் ""கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப்பண்ணை போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார் அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் இதனைச் செயல்படுத்தி, ஏகாதிபத்திய சேவையில் ஓட்டுக் கட்சிகளையெல்லாம் விஞ்சி முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி.

வீரமணியின் ""பெரியார் புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் தலைமைக் குருபீடமான ஜப்பானிய முதலாளிகளது ""ஜெட்ரோ'' நிறுவனத்தின் இயக்குநர் கவர்ச்சிகரமான முறையில் ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். ""ஒரு கிராமம்; ஓர் உற்பத்திப் பொருள்'' என்பதுதான் அத்திட்டத்தின் பெயர். இதன்படி ""புரா'' மண்டலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கத்தாழை பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; மற்றொரு கிராமத்தில் காட்டாமணக்கு பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; இன்னொரு கிராமத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இக்கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சியளித்து, உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதை ""புரா'' அமைப்பினர் கண்காணித்து வழிகாட்டுவர்.

கடந்த பிப்ரவரி 2007இல் டெல்லியில் ""ஜெட்ரோ'' நிறுவனம் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட ""பெரியார் புரா''வின் தயாரிப்புகளில், 40 பொருட்கள் இந்நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களின் மாதிரிகள் வரும் ஜூலையில் ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களைக் கேட்டு வந்து, அதன்படி ""பெரியார் புரா'' மண்டலத்திலுள்ள கைவினைஞர்களுக்கு வேலை கொடுத்து, அப்பொருட்களை ஏற்றுமதி செய்து, கிராமப்புற கைவினைஞர்களுக்கு வாழ்வளிக்கப் போவதாக ""பெரியார் புரா'' அறிவித்துள்ளது.

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய விண்வெளித் துறை ஆகிய மைய அரசின் நிறுவனங்களோடு, கனடா நாட்டின் வட அட்லாண்டிக் கல்லூரி, அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்க ஜப்பானிய ஏகபோக கம்பெனிகள் ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ""பெரியார் புரா'' கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ""புரா'' நிர்வாகிகள் திட்டப் பரிசீலனைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக, தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களின் குக்கிராமங்கள் அன்னிய மூலதனத்துடன் பிணைக்கப்பட்டு அதன் அடியாளாகச் செயல்படும் ""பெரியார் புரா''விடம் கிராமப்புற உற்பத்தியும் நிர்வாகமும் மாற்றப்பட்டு வருகிறது.

தி.க.வின் வீரமணி இப்போதெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னார்வக் குழுக்களுக்காகவும் ""புரா'' கிராமங்களுக்காகவும் ""வாழ்வியல் சிந்தனைகள்'' எனும் பெயரில் சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதத் தொடங்கி விட்டார். பெருந்தொழில் நிறுவனங்களில் மேலாண்மை செய்யும் நிர்வாகிகளுக்குக் கற்றுத் தரப்படும் விதிமுறைகளையே தேனில் குழைத்துத் தரும் வேலையை வீரமணி செய்து வருகிறார். ""வேலை வெட்டியின்றி இருக்கும் இளைஞர்கள் சுய தொழில் செய்ய முனைய வேண்டும்,'' ""இருப்பதை வைத்து சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்'', ""மேலை நாட்டினர் நம் அருகில் உள்ளபோது நாம் தாய்மொழியில் பேசிக் கொள்வது, அவர்களது மனதப் புண்படுத்தும்'' என்றெல்லாம் தனது அடிமைத்தனத்தையே "உரை நடைத் திருக்குறளாக' (வாழ்வியல் சிந்தனைகள் நூலுக்கான விளம்பர வாசகம்) எழுதித் தள்ளுகிறார்.

வீரமணி புதிய நூல் எழுதுவது சுய விளம்பரத்திற்கல்ல; அது ஏகாதிபத்திய சேவையின் புதிய அத்தியாயம். ""பெரியார் புரா'' திட்டம் என்பது வெறுமனே சமூக சேவைக்கும் கைவினைப் பொருள் ஏற்றுமதிக்குமானதல்ல; அது விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியின் ஓர் அங்கம். உணவு தானிய உற்பத்தியை ஒழித்து, ஒற்றைப் பயிர்முறைக்கு விவசாயம் மாற்றப்பட்டால் பேரழிவுகளே விளையும். ""புரா'' திட்டப்படி, ஒரு ஊர் முழுக்க அவுரிச் செடியும் மற்றொரு ஊர் முழுக்க காட்டாமணக்கும் பயிரிடப்பட்டால் உயிர்மப் பன்மம் பாழாகி நிலம் மலடாகிப் போகும். சுற்றுச்சூழல் நாசமாகி இயற்கையின் முறைகுலைவுகள் ஏற்படும். அதன்பிறகு, இன்னுமொரு சோமாலியா, எத்தியாப்பியாவாக இந்தியா மாறிப் போகும்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய நுட்பமான வழிமுறைகளைக் கொண்டு மீண்டும் காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன. இதர தன்னார்வக் குழுக்களையும் ஓட்சிக் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய அடியாள் வேலையில் முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி. ஏகாதிபத்தியங்களின் நூதன வடிவிலான காலனியாதிக்கத்துக்கும், பெரியார் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நவீன எட்டப்பர்களுக்கும் எதிராக, உழைக்கும் மக்களை காலனியாதிக்க எதிர்ப்புப் போருக்கு அணிதிரட்டுவதே இன்று நம் முன் அவசர அவசியக் கடமையாக உள்ளது.

· இரணியன்

ஒரே புற்று இரண்டு பாம்புகள்!

கொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் ""புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய பங்காளிகளாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள தீனதயாள் ஆய்வு மையம் எனும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனம் நடத்தி வரும் ""புரா'' திட்டம்தான் இந்தியாவின் முன்னோடித் திட்டம். இதனையடுத்துதான் வீரமணியின் ""பெரியார் புரா'' திட்டம் தொடங்கப்பட்டது. ""சித்ரகூடம் புரா'' எனப்படும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ""புரா'' திட்டம் பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை, பழங்குடியினர் மேம்பாடு, பசு பாதுகாப்பு என பல அரங்குகளிலும் நுழைந்து 100 மண்டலங்களில் காலூன்றியுள்ளது. பார்ப்பனியத்துடன் ஏகாதிபத்திய சேவையை விசுவாசமாகச் செய்துவரும் ""அம்பி''கள் இப்போது ""பெரியார் புரா''வின் சேவையைப் பாராட்டி ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

நகர்ப்புறங்கள் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர் என்றும் இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை உணர்த்தி இந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே ""புரா'' திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ்.இன் ""சித்ரகூடம் புரா'' கூறுகிறது. ஏகாதிபத்திய அடியாள் வேலையை மறைத்து இந்து வெறியர்கள் இப்படியொரு காரணத்தை அவிழ்த்து விட்டுள்ளபோது, "தளபதி' வீரமணியின் ""பெரியார் புரா'' வேறொரு காரணத்தைச் சொல்கிறது.
1944ஆம் ஆண்டு கிராம முன்சீப்கள் பயிற்சி மைய விழாவில் பேசிய பெரியார், ""நகரத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டாராம். எனவேதான், பெரியார் கொள்கை வழியில் ""புரா'' திட்டத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வீரமணி கும்பல் பாடுபடுகிறதாம்! இதே பாணியில், பெரியாரின் பேச்சுகள் எழுத்துக்களிலிருந்து இன்னும் பல புதிய காரணங்களை வீரமணி கும்பல் கண்டுபிடித்து, அவிழ்த்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

""புரா'' திட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சேவையுடன் ""கோமாதா பாதுகாப்பு'' எனும் கொள்கையை செயல்திட்டமாக வைத்து ஆர்.எஸ்.எஸ்.இன் சித்ரகூடம் புரா இயங்கி வருகிறது. ஆனால், பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் வீரமணி கும்பலின் பெரியார் புரா திட்டத்தில், ஏகாதிபத்திய அடியாள் வேலையைத் தவிர, பெயரளவுக்குக்கூட பெரியாரின் கொள்கையோ வெங்காயமோ இல்லை.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது