Monday, July 9, 2007

"லெனின்" - அரிய ஓவியங்களில்











































லெனின் பற்றிய மேலும் சில பதிவுகள்

Sunday, July 8, 2007

"எனது கவிதைகள்"

"எனது கவிதைகள்
சாகட்டும்
போர்க்களத்தின்
சாதாரணச்
சிப்பாயைப் போல"
...
-கவிஞர் மாயகாவ்ஸ்கி

Saturday, July 7, 2007

"தோழர் நார்மன் பெதூன்" - சித்திரக்கதை

தோழர் நார்மன் பெதூன், கனடா நாட்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர். உலகப்புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். 1937 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிராக சீன மக்கள் போரிட்டபோது கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பாக சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பில் மக்களுக்கு உதவ அனுப்பப்பட்டார். 1938 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனத்துக்கு வந்தார் தோழர் பெதூன்.
..
1938 வசந்தத்தில் சீனத்தின் புரட்சித் தொட்டிலான யெனானை அடைந்த தோழர் பெதூனை மக்கள் தலைவர் மாவோ எதிர்கொண்டு வரவேற்றார்.
..
விரைவிலேயே கட்சி வழிகாட்டுதலின் பேரில் தளப்பகுதியில் ஷொன்ஷி - சஹார் - ஹோபெய் ராணுவத் தளத்தின் மருத்துவ ஆலோசகராகப் பொறுப்பேற்றுப் பணி புரியத் தொடங்கினார். சீன மக்களின் விடுதலையைத் தனது கடமையாக ஏற்றுச் செயல்பட்டார் சர்வதேசப் பாட்டாளி வர்க்க வீரர் தோழர் பெதூன்.
..
"புதிய கலாச்சாரம்" டிசம்பர்1985, ஜனவரி 1986 இதழ்களில்
இருந்து எடுத்து இணைக்கப்பட்டு உள்ளது
****************************************************
கிழே க்ளிக் செய்து படிக்கவும்
**************************************
..
..
..
..
..
..
..
..

Friday, July 6, 2007

"சிவப்பு வீராங்கனைகள்"-சித்திரக்கதை

மக்கள் சீனத்தின் மகத்தான புரட்சியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழி நடத்தியது. கோடானு கோடி உழைக்கும் மக்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டினார்கள். இதில் ஆயுதமேந்தியப் போரிட்ட செம்படையின் பணி உலக வரலாற்றின் பொன்னேட்டிலே பதிக்கப்பட்டது. இன்றும் அக்காட்சிகளை நமக்கு எடுத்து வழங்குவது அந்நாட்களில் புரட்சிக் கலைஞர்கள் தீட்டிய அரும்பெரும் சித்திரங்களே.
..
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் மக்களோடு இணைந்து வாழ்ந்த அக்கலைஞர்கள் படக்கதை என்ற நேர்த்தியான கலை வடிவத்தைக் கையாண்டனர். அது அன்றைய படிப்பறிவற்ற ஏழை உழைக்கும் விவசாயிகள் இதயங்களைத் தட்டி எழுப்பியது.
..
அந்த வீர உணர்வுகளை கொண்ட அப்படக்கதையின் தமிழாக்கம்.
..
"புதிய கலாச்சாரம்" அக்டோபர் 1985, நவம்பர் 1985 இதழ்களில்
இருந்து எடுத்து இணைக்கப்பட்டு உள்ளது
****************************************************
கிழே க்ளிக் செய்து படிக்கவும்
**************************************
..
..
..
..
..
..
..

பிரேம்குமார் பதவி நீக்கம் :இது தண்டனை அல்ல!

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் திரு. நல்லகாமன் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும் மேலும் 3 போலீசு அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து 3.4.07 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்த செய்தி சென்ற பு.ஜ. இதழில் வெளியாகியிருந்தது. மே 21ஆம் தேதியன்று பிரேம்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு அவரது வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
..
நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர் யாராக இருந்தாலும், எவ்வித விளக்கமும் கோராமல், மறுகணமே அவரை அரசியல் சட்டப்பிரிவு 311(அ) வின் கீழ், அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி அரசு நிரந்தர வேலை நீக்கம் செய்யும். மற்றெல்லா அரசு ஊழியர்களின் விசயத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை இதுதான். ஆனால், குற்றவாளி பிரேம்குமாரைப் பணிநீக்கம் செய்வதற்கு மட்டும் அரசுக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
..
இதனை வெற்றி என்று அழைக்கலாமெனில், இது திரு.நல்லகாமனின் தளராத உறுதிக்கும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியே அன்றி, நிச்சயமாக இது நீதிக்குக் கிடைத்த வெற்றி அல்ல. இந்தப் பணிநீக்கம் என்பதும்கூட வேறு வழியில்லாத நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைதான்.
..
3.4.07 அன்று தீர்ப்பு வெளியானவுடனே, பிரேம்குமாரும் அவருடன் தண்டிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையை தமிழக காவல்துறை செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. பிறகு மதுரை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் பிரேம்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கச் செய்தனர். அதன் பிறகும் போலீசு அசையவில்லை. பிரேம்குமாரும் மற்ற மூவரும் தலைமறைவானார்கள்.இன்று பணிநீக்க உத்தரவை பிரேம்குமார் வீட்டுக் கதவில் ஒட்டும் காவல்துறை, அன்றே பிரேம்குமாரின் படத்தைப் போட்டு "தலைமறைவுக் குற்றவாளி' என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். காசைக் கொடுத்து, கம்ப்ளெயிண்டையும் கொடுத்தால், உடனே ஆட்டோவில் வந்து இறங்கும் காக்கி உடை யோக்கியர்கள், பிரேம்குமாரின் பெண்டாட்டி, பிள்ளை, மாமன், மச்சான் அனைவரையும் அடித்து இழுத்து வந்து அண்டிராயரோடு ஸ்டேசனில் உட்கார வைத்து, "அய்யா எங்கே?' என்று விசாரித்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பிரேம்குமார் தப்பிப்பதற்குப் போதுமான அவகாசத்தைத்தான் தமிழக அரசு வழங்கியது.
..
அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், தான் தஞ்சை மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பதவி வகிப்பதால் "போலீசிடம் சரணடைவதிலிருந்து விலக்கு தரவேண்டும்' என்று கோரி, உச்சநீதி மன்றத்தில் உத்தரவும் வாங்கி விட்டார். இப்படியொரு சலுகை எல்லா கிரிமினல்களுக்கும் வழங்கப்படுகிறதா அல்லது "போலீசு கிரிமினல்களுக்கு' மட்டுமே உச்சநீதி மன்றம் வழங்கும் சிறப்புச் சலுகையா என்று தெரியவில்லை. ஆனால், பொய் வாக்குமூலம் கொடுத்து உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிய பிரேம்குமாரின் இந்த மனுவைக் கூட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் எதிர்க்கவில்லை.
..
தமிழக அரசின் இந்தக் கள்ள மவுனத்தை அம்பலப்படுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தின் வாயிலாக, இது எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாரையும் மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று நல்லகாமன் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனுக் கொடுத்தார். அதன் பிறகும் தமிழக அரசு அசையவில்லை.
..
பிறகு 4.5.07 அன்று ""தண்டனை பெற்ற குற்றவாளி பிரேம்குமாரைக் கைது செய்!'' என்று கோரும் போராட்டத்தை வீதிக்குக் கொண்டு வந்தனர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை வழக்குரைஞர்கள். ""அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வது சட்டவிரோதம்'' என்று வழக்குரைஞர்களை மிரட்டிப் பார்த்தது போலீசு. ""முதலில் பிரேம்குமாரைக் கைது செய்துவிட்டு அப்புறம் இங்கே வந்து சட்டத்தை நிலைநாட்டு'' என்று பதிலடி கொடுத்த வழக்குரைஞர்கள், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தச் செய்தியும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது.அதன் பிறகும் தமிழக அரசு பிரேம்குமாரை கைது செய்யவில்லை.இதனைத் தொடர்ந்து ""தண்டனை பெற்ற குற்றவாளியான பிரேம்குமாரையும் மற்ற 3 அதிகாரிகளையும் கைது செய்யவும், பணி நீக்கம் செய்யவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் வழக்குரைஞர் ராஜு. பதிலில்லை.
..
பிறகு 7.5.07 அன்று மக்கள் தொலைக்காட்சியின் "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களான ராஜு, சகாதேவன் ஆகியோர், ""தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒரு போலீசு அதிகாரி என்பதால் தமிழக அரசு அவரைச் சட்ட விரோதமாகப் பாதுகாக்கிறது'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். ""தன்னுடைய சாதியைச் சேர்ந்த அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு சட்டத்தை வளைக்கிறான் பிரேம்குமார்'' என்று அம்பலப்படுத்தினார் நல்லகாமன். இதற்கு அப்புறமும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.இதற்கிடையில் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பிரேம்குமார், சிறை செல்வதைத் தவிர்க்க பிணை மனுவையும் தாக்கல் செய்தார். ""பிரேம்குமாரின் பிணை மனுவையும், மேல் முறையீட்டு மனுவையும் நிராகரிக்க வேண்டுமென்றும், பொய்யான தகவல் கொடுத்து உச்சநீதி மன்றத்தை பிரேம்குமார் மோசடி செய்திருக்கிறார்'' என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், பிரேம்குமாருக்கு பிணை வழங்கியது உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரேம்குமார் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இப்போது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.பிரேம்குமாருடன் ஒரு மாத தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கூட, அரசு இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை.
..
உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத அரசுக்கு எதிராக மறுபடியும் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். மீண்டும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம், வக்கீல், வாய்தா, அலைச்சல், பணம்...!1982ஆம் பிப்ரவரி முதல் தேதியன்று, தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமனையும், அவரது குடும்பத்தினரையும் கொலைவெறி கொண்டு தாக்கி, சங்கிலியால் பிணைத்து வாடிப்பட்டியின் தெருக்களில் இழுத்துச் சென்ற பிரேம்குமார் என்ற மிருகத்தின் வெறியாட்டம் அந்த ஒருநாளுடன் முடிந்து விட்டது. அந்தக் காக்கி உடைக் கிரிமினலைத் தண்டிக்கக் கோரி, சட்டபூர்வமாக முயற்சித்து வரும் அந்த முதியவரை 25 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வருகின்றது இந்த அரசமைப்பு. பிரேம்குமாரின் சித்திரவதை வாடிப்பட்டி வீதியுடன் முடிந்து விட்டது. தமிழக அரசும், நீதித்துறையும் அவரை வாடிப்பட்டியிலிருந்து டெல்லிக்கும் சென்னைக்கும் மதுரைக்கும் ஆயிரம் முறை இழுத்து அலைக்கழித்து வருகின்றன.
..
இந்தத் தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருந்த அதே 25 ஆண்டுகளில்தான் வெறும் துணை ஆய்வாளராக இருந்த பிரேம்குமாரைப் படிப்படியாக உயர்த்தி, எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. 1982இல் நடைபெற்ற ஆர்.டி.ஓ. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, வலது கையால் பிரேம்குமார் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துவிட்டு, இடது கையால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கலைஞர் அரசு, ஜெயலலிதா அரசு, ஜானகி அரசு என எந்த அரசிலும் இந்தக் கிரிமினலின் கொடி மட்டும் இறங்கவேயில்லை.
..
ஏழு கடல், ஏழு மலை தாண்டி இலட்சக்கணக்கில் செலவு செய்து, ""ஒரு மாதச் சிறை'' என்ற இந்த "பயங்கரமான தண்டனையை' உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து வரவழைத்த பின்னர், அந்தத் தீர்ப்பை அமல்படுத்த வைப்பதற்கு, அதாவது ஒரு காக்கி உடைக் குற்றவாளியைக் கைது செய்ய வைப்பதற்கு, ஒரு குடிமகன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்த விவரங்களைத் தந்திருக்கிறோம். இவையெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். இப்படி 300 மாதங்கள் 25 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, இந்த "நீதி'யை வாங்குவதற்கு!"
..
"25 ஆண்டு காலம் போராடி இந்தத் தீர்ப்பை வாங்கியிருக்கிறீர்களே, நீங்கள் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் நிருபர் நல்லகாமனிடம் கேட்டார். ""கோர்ட்டு கேசெல்லாம் வேலைக்கு உதவாது மாமா; நான் அவனை உலக்கையைக் கொண்டு அடிச்சிடறேன்னு என் மருமவன் அன்னைக்கே சொன்னான். வேண்டாம்பா; நாம முறையாத்தான் போகணும்''னு அன்னக்கி அவன்கிட்ட சொன்னேன். இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது அன்னைக்கே உலக்கையைக் கொண்டு அடிச்சிருக்கலாமேன்னு தோணுது'' என்று பதிலளித்தார் நல்லகாமன்.
..
25 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து "இந்திய ஜனநாயகம்' வரவழைத்திருக்கும் சொற்கள் இவை ""உலக்கையைக் கொண்டு அடிக்கணும்!''.
..
இந்த "உலக்கை அடி' பிரேம்குமாருக்கு அல்ல; சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மேலாண்மை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இந்த அரசமைப்புக்கு. இந்த மக்கள் விரோத அரசமைப்பு நீடிக்கும் வரை நல்லகாமனைப் போன்ற சாதாரணக் குடிமக்களுக்கு நீதி கிடைக்காது என்பதுதான் நல்லகாமனின் நீண்ட நெடிய போராட்டம் கூறும் நீதி.
..
பு.ஜ. செய்தியாளர்கள்.

நாடகத்தில் இந்த முறையும்.....





புதிதாய் ஏதும் போதை தேவையில்லை
வாக்குறுதிகளே போதும்
..
தேர்தல் காலம் விசித்திரமானது
திகைக்க வைக்கும் மாற்றம் நிறைந்தது
..
பாழாய்ப்போன குட்டிச் சுவரிலும்
சுவரொட்டி துளிர்க்கும்
சூரியஒளி புக முடியா
மூத்திரச் சந்திலும்
'சின்னங்கள்' பூக்கும்
ஒட்டடைக் கோலும் கையுமாய்
ஓடிவரும் சிலந்திகள் வீடுதேடி
..
வீடில்லாதவர் பக்கமோ
புதிய திட்டமிருப்பதாய்
கறையான்கள் கர்ஜிக்கும்
..
சாக்கடையை அறவே ஒழிக்கப்போவதாய்
கொசுக்கள் கோஷ்டி சேரும்.....
..
பழுத்த பன்றிகளோ
தங்கள் வாய் நாறாதென
சட்ட மலங்களுக்குள்ளேயே
சந்தனம் எடுப்பதாய்
'சிவப்பு' சூளுரைக்கும்.
..
இப்படிக்கூடவா?
கக்கூசுக்குள்ளும்
அக்கறையாய் பணி செய்ய காத்திருக்கும்
வேட்பாளர் பெயரோடு
'பெரியவாள்' ஆசி மணக்கும்.
..
வெறுங்கையை நக்கிய வாழ்க்கையில்
வேறேதோ மாற்றமென்று
ஓட்டுச்சீட்டை ஓட்ட நக்க வந்தால்
..
வாக்காளர் பட்டியல் மேல்
விலைப்பட்டியல் விழுந்து
திரும்பவும் குடல் சரியும்

-துரை.சண்முகம்

Thursday, July 5, 2007

சொல்லுங்கள்

தொழிற் சாலையின்
உயர்ந்த கூரைகளிலும்
மெளனம் கவிந்தது.

மெர்க்க்குரி விளக்குகளும்
துருப்பிடித்துப் போயின
..
ஆதிகாலக்
குகையைப் போன்ற
அர்த்தமற்ற இருளுக்கும்
நிசப்த்த்திற்கும்
யார் பொறுப்பு?
..
சுழன்று கொண்டிருந்த
எல்லாச் சக்கரங்களையும்
இயங்கிக் கொண்டிருந்த
எல்லா உயிர்களையும்
ஒரு நொடிக்குள்
நிறுத்தி வைத்தது
யார்?
..
தங்களின்
கவலைகளையும்
கனவுகளையும்
சோகங்களையும்
நம்பிக்கைகளையும்
சுமந்து வந்த
நம்மை
முடமாக்கியது யார்?
..
கண்களை
எதிர் காலத்தைக்
குருடாக்கியது யார்?
..
அரை வயிற்றுக் கஞ்சிக்கும்
ஆடைக்கும்
நம்மை
அலைய விட்டவர்கள்
யார்?
..
அவர்கள்-
.
நிரம்பி வழியும்
மதுக் கிண்ணங்களோடு
தொழிற்சங்கத் தலைவரின்
தோள் மீது கைபோட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
ஒநாய்களையும்
நாய்களையும்
சட்டத்தையும்
காவலுக்கு வைத்துவிட்டு
குண்டு துளைக்காத
கூண்டுகளுக்குள்
பாதுகாப்பாக
இருக்கிறார்க்ள்.
..
வேதப்புத்தகங்களை
பகவத் கீதைகளை
ரத்தக் கறைபடிந்த
விரல்களால்
புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்
.
வருத்தப்பட்டு
பாரம் சுமக்கிறவர்களே
இவர்களை நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..
உங்கள் குழந்தைகளின்
சின்னஞ்சிறு குடல்
குளிர்வதெப்போது?
..
உங்கள் பானைகளில்
சந்தோஷம், பொங்கி
வழிவதெப்போது?
..
உங்களை முடமாக்கியவர்களை
நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..
சொல்லுங்கள்.
*****************
-புதியஜீவா

Tuesday, July 3, 2007

கூந்தலைத் துறந்த வறுமை!

நக்கீரனில் ஒரு செய்தி படித்தேன். ஆந்திர எல்லையிலிருக்கும் திருவள்ளூர் மாவட்டக் கிராமங்களில் வாழும் ஏழைப்பெண்கள் அதிலும் தலித் பெண்கள், சிலர் வறுமை காரணமாக தம் முடியை விற்று வருகின்றனராம். ஒரு அடி கூந்தலின் விலை 100 ரூபாய். பெண்களிடம் முடி கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பும் தரகர்கள் கிராமங்களில் அலைகிறார்களாம்.
சென்னையில் இம்முடிகளுக்கு சாயம் தீட்டி வெளிநாடுகளுக்கு அழகான சவரிகளாக ஏற்றுமதி செய்கிறார்களாம். அடர்த்தியான ஒரு கிலோ கூந்தலின் விலை 5000 ரூபாயாம்.
..
சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கூந்தலைப் பற்றித்தான் எத்தனைக் கவிதைகள்! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற பிரச்சினையை நக்கீரனும், இறையனாரும் இன்றைக்கும் ஒலிபெருக்கி வைத்து விவாதித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். தம் கூந்தல் மீது பிற ஆடவரின் கை படுவதைக்கூட கற்புள்ள பெண்கள் ஒப்புவதில்லை என்கிறது பழந்தமிழ் இலக்கியம். அந்த அளவுக்கு கூந்தலின் மகிமை இங்கே வேர் பிடித்துள்ளது.துரியோதனன் வீழ்த்தப்பட்ட பின்புதான் அவிழ்த்த கூந்தலை அள்ளி முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் மகாபாரதப் போரின் துவக்கம்.மலரின் வாசமும், கள்ளின் போதையும் கொண்ட சீதையின் கூந்தலில் இராவணன் மயங்கினான், மடிந்தான் என்று தன் ஒப்பாரியில் மண்டோதரி புலம்புவதாய் கம்பராமாயணம் பாடுகிறது. இப்படி இதிகாச நாயகிகளின் கதைகளும் கூந்தலைத் தழுவியே செல்கிறது.
..
சிங்கத்துக்கு பிடரி, மயிலுக்குத் தோகை, சேவலுக்கு கொண்டை, யானைக்கு தந்தம் என எல்லா ஜீவராசிகளிடையேயும் ஆண் உயிரினங்கள் மட்டும் "அழகாய்' வலம் வர, மனித இனத்தில் மட்டும் பெண் "அழகான' கூந்தலோடு வலம் வருவதாய் சிலாகிக்கிறார் ஒரு சமகாலக் கவிஞர்.இப்படிக் கற்புக்கும், அழகுக்கும், கதைப்பாடலுக்கும் அடையாளமாய், அடிநாதமாய் அறியப்பட்ட கூந்தல்தான், ஒரு பெண் விதவையானதும் அவளிடமிருந்து இரக்கமின்றிப் பறிக்கப்பட்டது. மேல் சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் நேற்றுவரை நமது சமூகத்தில் இருக்கத்தானே செய்தது? இந்தக் கூந்தல் பறிப்பின் நோக்கம் அவளை யாரும் விரும்பக்கூடாது, அழகு அவளை அண்டக்கூடாது என்பதுதான். அழகு அசிங்கம் என்ற இரு துருவங்களை நோக்கியும் பெண்ணைத் தள்ளுவதற்கு ஆணின் கையில் சிக்கிய ஆயுதம் கூந்தல்.இப்படி புராண காலத்தில் பிடித்த முடியை ஆணாதிக்கம் இன்னமும் விடவில்லை.
..
பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்கள் அடைமழை போலப் பெய்யும் காலமிது. அழகு நிலையங்கள் பெண்களின் அழகு குறித்த கவலையை அன்றாடப் பிரச்சினையாக்கிவிட்டன. அழகின்மையின் ஆபத்துக்களை அச்சுறுத்தும் விதத்தில் உணரவைத்து அழகை விற்று வருகிறார்கள்.அதில் கூந்தலுக்கான விதவிதமான எண்ணெய்களும், பசைகளும், தைலங்களும் நூற்றுக்கணக்கில் சந்தையில் இருக்கின்றன. காத்திருக்க முடியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனே முடியை நட்டுத்தரும் ஆடம்பர அறுவைச் சிகிச்சைகளையும் "அறிவியல்' வளர்த்திருக்கிறது. ஆக, பெண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமது நேரத்தையும், பணத்தையும், கவலையையும் கூந்தலுக்காகச் செலவழிக்கின்றனர்.
..
அன்றும் இன்றும் கூந்தல் கவலையிலிருந்த தப்பிப் பிழைத்த பெண்கள் அநேகமாக இல்லை.இதனால்தான் திருவள்ளூர் மாவட்டப் பெண்கள் கூந்தலை விற்கும் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆயினும் உலகமயம் என்ற நாணயத்தின் மறுபக்கம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்! வழக்கமான உணவு வகைகளை ருசித்துச் சலித்து உலக ருசிகளுக்காக அலைபாயும் நாக்குகள் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் "இரண்டு ரூபாய் அரிசி' வாக்குகளை அள்ளித் தருகிறது. குளோனிங் முறையில் மனிதனையும் அவனுடைய உறுப்புகளையும் பிரதி எடுத்துவிட முடியும் என்று அறிவியல் முழங்கும் காலத்தில்தான் கருப்புச் சந்தையில் சிறுநீரகம் விற்பனையாகிறது.
..
தேசிய வளர்ச்சி விகிதம் பத்து சதவீதம் என்று ப.சிதம்பரம் கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது. நாட்டை முன்னேற்றுவதற்காக "மக்களை மொட்டையடிப்பது' என்ற உவமானம் அதன் நேர்ப்பொருளிலேயே இப்போது உண்மையாகி விட்டது.
..
மூன்றடிக் கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்ற பெண்களின் வாழ்க்கை கூறும் செய்தி என்ன? வறுமையின் முன் கூந்தல் தன் மரபுவழி மகிமையை உதிர்த்து விட்டது என்பதா? அல்லது தேசிய வளர்ச்சி வீதம் என்பது ஏழைப் பெண்களின் மயிருக்குச் சமம் என்று புரிந்து கொள்வதா?·
சாக்ரடீஸ்

Sunday, July 1, 2007

புதிய ஜனநாயகம் ஜுலை 2007 இதழ்

சவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில் அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது