Friday, September 21, 2007

நெருங்குதடா இருள் நெருங்குதடா ! நெருங்குவதோ காவி இருளடா !!

Get this widget Share Track details

பாடல்: காவி இருள், மகஇக வெளியீடு

பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

இரா. சீனிவாசன்,

No 18, முல்லை நகர் வணிக வளாகம்,

இரண்டாவது நிழற்சாலை,

அசோக் நகர்,

சென்னை - 83

தொலைபேசி: 23718706

Related:

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் வாவணிக்கு இராமன் பாலம்!

கண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்!

ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்

தனது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள் தரும் கல்விக் கடனை நம்பியிருந்தார். கார் வாங்கவும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும் ஆளைத் தேடிப் பிடித்து கடன் தரும் வங்கிகள், சிறு காய்கறி வியாபாரியான பன்னீர் செல்வத்தை அலைக்கழித்து, அவமானப்படுத்தி வெறும் கையாகத் திருப்பி அனுப்பி விட்டன.

ஓட்டுக் கட்சிகள், இது அதிகாரிகளின் தவறு எனக் குற்றம் சுமத்துகின்றன. வங்கி அதிகாரிகளோ, கடன் விதிமுறைகளைக் காட்டி நழுவிக் கொள்கிறார்கள். இந்த மழுப்பல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், காசில்லாதவன் உயர்கல்வி பெற முடியாது என்ற உண்மை நமது முகத்தில் அறைகிறது. உயர்கல்வி வழங்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்ட அரசு, அதை மூடி மறைப்பதற்காகக் கல்விக் கடன் என்ற கவர்ச்சி வியாபாரத்தை நடத்துகிறது.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, இயலாமையினால் நிகழ்ந்துவிட்ட துயரச் சம்பவம் அல்ல. அது, கல்விக் கொள்ளைக்கு எதிரான ஏழை மக்களின் கலகக் குரல்.

கல்விக் கடன் கேட்டு வங்கி அதிகாரிகள் முன் கைகட்டி நிற்பதைவிட, கல்வி தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுவதுதான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. போராடினால் படிப்பு பாழாகிவிடும் எனச் சிலர் மாணவர்களை அச்சுறுத்தலாம். ஆனால், கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து முழுவீச்சோடு போராடாமல் இருப்பதால்தான், கல்வி எட்டாக் கனியாக மாறி வருகிறது என்பதை வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

Tuesday, September 18, 2007

'வளர்ச்சி"யின் சீனா அவலத்தில் தொழிலாளர்கள்

உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒருவரல்ல, இருவரல்ல; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொத்தடிமைக் கொடூரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள்; மற்றவர்கள் கிராமப்புற விவசாயிகள்.

ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணிநேர ஓய்வில்லாத வேலை; சோர்ந்து உட்கார்ந்தால் கங்காணிகளின் சவுக்கடி; வேலை செய்ய மறுத்தால் சம்மட்டி அடி அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போடப்படும். அங்கிருந்து யாரும் தப்பச் செல்ல முடியாதபடி வேட்டை நாய்களும் துப்பாக்கி ஏந்திய கங்காணிகளும் காவலுக்கு நிற்பர். வெற்றுக் கால்களுடன் பாதுகாப்புச் சாதனங்கள் ஏதுமின்றி வேலை செய்யும் இக்கொத்தடிமைகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் ஏராளம். ஆனாலும் எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. படுகாயமடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ ஒரு தொழிலாளி மரணமடைந்தால், அவர் அங்கேயே புதைக்கப்படுவார். சீனாவின் ஷான்சி, ஹோனான் மாநிலங்களிலுள்ள செங்கற் சூளைகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அளித்த சாட்சியங்களைக் கண்டு அந்நாட்டு மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

சீனாவின் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், சோசலிச விவசாயக் கூட்டுப் பண்ணைகளைத் தகர்த்து தனியாருக்கு நிலத்தைச் சொந்தமாக்கி, முதலாளித்துவத்தை நிலைநாட்டியதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றனர். நகரங்களுக்கு நாடோடிகளாக ஓடி, அங்கும் பிழைக்க வழியின்றி செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாகி உழல்கின்றனர்.

இக்கொத்தடிமைத் தொழிலில் கொழுத்த ஆதாயம் கிடைப்பதால், சமூக விரோத கும்பல்களால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். தமது அன்புக் குழந்தைகளைக் காணவில்லை என்று துடிக்கும் பலநூறு பெற்றோர்களின் கண்ணீர் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டிய பிறகு, அதிகார வர்க்கமும் போலீசும் வேறுவழியின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டபோதுதான், இக்கொத்தடிமைக் கூடாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்கள் அதிகார வர்க்கம்போலீசின் ஆதரவோடு நடந்து வந்துள்ளன என்றும், உள்ளூர் போலி கம்யூனிஸ்டு தலைவர்களின் பினாமிகளே இவற்றை நடத்தி வந்துள்ளனர் என்றும் பத்திரிகைகள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருகின்றன. பெய்ஜிங்கிலுள்ள சீன மக்கள் பல்கலைக் கழக சமூகவியலாளரான சௌ ஷியோ ஜெங், ""சீனாவில் ஏறத்தாழ 2 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்; அமைப்பு ரீதியில் திரண்டுள்ள புதுப்பணக்கார குற்றக் கும்பல்களே நாட்டை வழிநடத்துகின்றன'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நாட்டில் கொத்தடிமைக் கொடூரங்கள் நீடிப்பதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், இது வெறும் காகித அறிவிப்பாகவே முடிந்து போய்விட்டது. கொத்தடிமைக் கூடாரங்கனை நடத்தி வந்த புதுப்பணக்கார குற்றக் கும்பல்களில் ஒரு சிலரைப் போலீசார் கைது செய்த போதிலும், அவர்கள் அனைவரும் விரைவிலேயே விடுதலையாகி விட்டனர். அவர்கள் மீது பெயரளவுக்குக்கூட வழக்குகள் போடப்படவில்லை. காரணம், இக்குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலி கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீன போலி கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் அங்கம் வகித்த முக்கிய புள்ளியான லீ பெங்கும் அவரது குடும்பமும் வீட்டுமனை ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் கோடி கோடியாய் சுருட்டிய விவகாரம் நாடெங்கும் நாறியது. அந்த விவகாரம் அடங்குவதற்குள் சியாமென் துறைமுக நகரைச் சேர்ந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஊழல்கடத்தல் மோசடிகளில் சிக்கினார். அதைத் தொடர்ந்து பல போலி கம்யூனிஸ்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. சீன போலி கம்யூனிஸ்டு அரசாங்கம் ஊழல் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்ததோடு, சிலருக்குத் தூக்குத் தண்டனை விதித்து, இத்தகைய ஊழல்மோசடிகளை ஒடுக்க முயற்சித்தது.ஆனால், அதற்குப் பின்னரும் ஷாங்காய் நகர போலி கம்யூனிஸ்டுத் தலைவர் சென் லியாங் யூ, காண்டன் நகர செயலாளர், வூஹான் மாநிலச் செயலர் எனப் பலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானது. இப்போது, குற்றக் கும்பல்களோடு கூட்டுச் சேர்ந்து போலி கம்யூனிஸ்டு பிரமுகர்கள் கொத்தடிமைக் கூடாரங்களை நடத்தி வந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

செங்கற் சூளைகள், சுரங்கங்கள் மட்டுமல்ல; நகரங்களில் கட்டுமானத் தொழில், ஆயத்த ஆடை தயாரிப் புக் கூடங்கள், ஏற்றுமதிக்கான விளையாட்டு பொம்மை தயாரிப்பு, நெசவு மற் றும் காலணி தயாரிப்பு நிலையங்களிலும் அறிவிக்கப்படாத கொத்தடிமைத்தனம் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி, சீன ஆட்சியாளர்கள் இத்தகைய தொழிற்கூடங்களில் தொழிலாளர்கள் சங்கமாகத் திரளவும் தடை விதித்துள்ளனர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா வின் முதலாளிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு சம்ப ளம் கூட கொடுக்காமல் ஏய்க்கின்றனர்.

பெய்ஜிங் நகரில் ஓராண்டு காலமாக சம்பளம் தராமல் ஏய்த்த அன்னிய கட்டுமான நிறுவன முதலாளிகளின் பங்களாக்களை முற்றுகையிட்டு, தடுப்பரண்களை எழுப்பி 2003ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளிகள் போராடினர். ஷென்சென் நகரில் சம்பளம் தராமல் ஏய்த்த முதலாளிகளின் கார்களை சாலைப் பணியாளர்கள் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே போல தெற்கே ஃபூஷன் நகரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களும், வட கிழக்கே டா குயிங் எண்ணெய் துரப்பணத் தொழிலாளர்களும், ஜியாங்ஷி மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் சம்பள பாக்கிக்காகவும் பென்ஷன் தொகை முடக்கப்பட்டதை எதிர்த்தும் போராடினர்.

முறையாக சம்பளப் பாக்கியைக் கொடுக்காவிடில் உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்று சீன ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த போதிலும் எந்த முதலாளியும் அதைப் பொருட்படுத்துவதில்லை. முதலாளிகளின் சட்டைப் பையிலுள்ள சீன அரசாங்கம் அதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. தீவிரமாகிவிட்ட வேலையின்மையைச் சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி முதலாளிகள் சுரண்டுவதும், சம்பளம் கூடத் தராமல் ஏய்ப்பதும் நாடெங்கும் தீவிரமாகிவிட்டது. சீனாவின் நகர்ப்புற வேலையின்மை 7%க்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இது 9%க்கு எட்டிவிட்டால் சமூகக் கொந்தளிப்புகள் தீவிரமாகிவிடும் என்று சீனாவின் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், சீனாவின் யதார்த்த நிலைமைகளை மூடிமறைத்துவிட்டு, சீனா பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டிவிட்டதாகவும், வல்லரசாகப் பரிணமித்து வருவதாகவும் ஏகாதிபத்தியவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து, அன்னிய மூலதனத்தைத் தாராளமாக அனுமதித்து, பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளதாக ஏற்றிப் போற்றுகின்றனர். வரைமுறையற்ற சுரண்டல்சூறையாடலுக்கு கதவை அகலத் திறந்து விட்டுள்ள ""சீனாவைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று இங்குள்ள போலி கம்யூனிசத் துரோகிகளுக்கு உபதேசிக்கின்றனர். சீன போலி கம்யூனிச ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய தனியார் முதலாளித்துவ சேவையை, சோசலிசத்தை நோக்கிய வளர்ச்சியாகச் சித்தரித்து இங்குள்ள இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் துதிபாடுகின்றனர்.

ஆனால், சோசலிசம் பூத்துக் குலுங்கிய சீனாவோ, இன்று கொத்தடிமைத்தனத்திலும் கொடூர சுரண்டலிலும் சிக்கிக் குமுறிக் கொண்டிருக்கிறது. சீன மக்களோ, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் தலை மையை எதிர்நோக்கி மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சிக்காகக் காத்திருக்கிறார்கள்.
· குமார்

Saturday, September 15, 2007

பாலஸ்தீனப் பிளவும் அமெரிக்கச் சதியும்

பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, ஆஸ்லோ ஒப்பந்தம் என்ற பெயரில் ஓர் "அமைதி' ஒப்பந்தத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியம் பாலஸ்தீன மக்கள் மீது திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்பொழுது பாலஸ்தீன பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்படும் மேற்குக் கரையையும், காசா முனையையும் நிர்வகிப்பதற்காக, பாலஸ்தீன ஆணையம் என்ற பெயரில் ஓர் அதிகார நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.

சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாகப் போவதன் தொடக்கப்புள்ளி என வருணிக்கப்பட்ட இந்த பாலஸ்தீன ஆணையம், நடைமுறையில், அமெரிக்கஇசுரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ஏஜெண்டாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஒரு முனிசிபாலிடிக்கு இருக்க வேண்டிய சுய அதிகாரம் கூட இல்லாத இந்த பாலஸ்தீன ஆணையத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் இந்த நாய்ச் சண்டையின் காரணமாக, இன்று பாலஸ்தீனப் பிராந்தியம் இரண்டாகப் பிளவுபட்டுப் போய்விட்டது.

மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டதன் மூலம், ஒரு உள்நாட்டுப் போரைச் சந்திக்க வேண்டிய அபாயத்தில் பாலஸ்தீன மக்களைத் தள்ளிவிட்டுள்ளன. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்த பிறகுதான், பாலஸ்தீனத்தில் அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இரண்டாவது இண்டிஃபதா (சுதந்திரப் போர்) நடந்தது. அதனால், இந்தப் பிளவை, ஏகாதிபத்தியவாதிகள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.

2005ஆம் ஆண்டு இறுதியில், பாலஸ்தீன ஆணையத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற பொழுதே, இந்தப் பிளவிற்கான விதை தூவப்பட்டது. அத்தேர்தலில் அமெரிக்க இசுரேல் கூட்டணி ஃபதா இயக்கத்தையும், அதன் தலைவரான முகம்மது அப்பாஸையும் ஆதரித்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அத்தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தின் அதிபராக முகம்மது அப்பாஸும், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஹனியா பிரதமராகவும் இருக்கும் எதிரும், புதிருமான நிலையை 2005 தேர்தல் உருவாக்கியது. பாலஸ்தீன ஆணையத்தின் பெரும்பான்மை ஹமாஸிடம் இருந்தபொழுதும், அதிகார வர்க்கப் பதவிகளில் ஃபதா இயக்கத்தினர் நிரம்பியிருந்தனர்.

""ஹமாஸின் தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது'' என அறிவித்த அமெரிக்கா, தனது தலையாட்டி பொம்மையான அதிபர் முகம்மது அப்பாஸ் மூலம், ஹமாஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முயன்றது. மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, பாலஸ்தீனத்துக்குத் தர வேண்டிய நிதி உதவிகளைத் தராமல் முடக்கி வைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து இசுரேலும், பாலஸ்தீன ஆணையத்தின் சார்பாக வசூலித்த வரிப் பணத்தைத் தராமல் முடக்கியது.

இப்பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ""பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களுக்குச் சம்பளம் தர முடியாமல் போனது. மேற்குக் கரையிலும், காசா முனையிலும் 12 இலட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்'' என ஐ.நா. மன்றமே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு, பாலஸ்தீனத்தில் அன்றாட வாழ்க்கை மோசமடைந்தது. இன்னொருபுறமோ, இப்பொருளாதார நெருக்கடி முற்ற, முற்ற ஃபதாவிற்கும் ஹமாஸுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது.

ஹமாஸோடு நேரடியாக மோதி, அவ்வமைப்பை நிர்மூலமாக்கும் திட்டத்தோடு ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த 500 பேருக்கு ஆயுதப் பயிற்சியும், உதவியும் அளித்து, எகிப்தின் வழியாக காசா முனைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது; அதிபர் அப்பாஸின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிறப்பு அதிரடிப் படைக்கும் அமெரிக்காவால் 160 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு, இந்தச் சகோதரச் சண்டை கொம்பு சீவிவிடப்பட்டது.
இசுரேலோ, தனது இராணுவச் சிப்பாய் ஒருவரை ஹமாஸ் இயக்கம் கடத்தி விட்டது எனக் குற்றஞ்சுமத்தி, ஹமாஸ் அமைப்பின் தலைமையிடம் இருக்கும் காசா முனைப் பகுதி மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவரும் பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமருமான இஸ்மாயில் ஹனியா உள்ளிட்டு, ஹமாஸ் இயக்கத்தின் அமைச்சர்களையும், ஆணைய உறுப்பினர்களையும் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப் போவதாக அறிவித்ததோடு, அவர்களின் மீது ""ராக்கெட்'' தாக்குதல்களையும் நடத்தியது.

இப்பொருளாதார நெருக்கடியும், இராணுவ முற்றுகையும் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்திய விளைவுகளால், தங்கள் நாடுகளும் பாதிக்கப்படுமோ எனப் பயந்து போன சௌதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஃபதாவிற்கும், ஹமாஸிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, ""மெக்கா ஒப்பந்தத்தை'' உருவாக்கின. இதன்படி, சில முக்கிய அமைச்சர் பதவிகளை, ஹமாஸ் இயக்கம் ஃபதாவிற்கு விட்டுக் கொடுப்பது என்றும், அதற்கு ஈடாக, ஹமாஸின் ஆயுதப் படையைப் பாலஸ்தீன ஆணையத்தின் படையோடு இணைத்துக் கொள்வது என்றும் இதன் அடிப்படையில் தேசிய ஐக்கிய அரசை அமைப்பது என்றும் முடிவானது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா விரும்பாததால், அதிபர் முகம்மது அப்பாஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார். மேலும், பாலஸ்தீன ஆணையத்திற்குப் புதிதாகத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால், பதவிஅதிகாரத்துக்காக நடந்த இந்தச் சண்டை முற்றி, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசா முனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டுவிட்டன.

ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே மோதல் நடந்து வந்தபொழுது, ""இந்த வன்முறையை நாங்கள் வரவேற்கிறோம்'' என வெளிப்படையாக அறிவித்த அமெரிக்கா, இப்பொழுது, ""நாம் இரண்டுவிதமான பாலஸ்தீனத்தை எதிர்கொள்கிறோம்; ஃபதாவின் மேற்குக் கரைக்கு தேவையான உதவிகளைச் செய்வது; ஹமாஸின் காசா முனையைக் கசக்கிப் பிழிவது'' என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கொக்கரிக்கிறது.

""அமைதி'' ""சமாதானம்'' என்ற பெயரில் தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை மூடி மறைத்துவந்த ஃபதா இயக்கம், இப்பொழுது அம்மணமாக நிற்கிறது. இந்தப் பிளவுக்குப் பிறகு, அதிபர் அப்பாஸ், ஹமாஸ் அரசைக் கலைத்துவிட்டதோடு, அமெரிக்காவின் விருப்பப்படி உலக வங்கியின் முன்னாள் ஊழியரான சலாம் ஃபய்யத்தை பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமராகவும்; அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் பயிற்சி அளிக்கப்பட்ட முகம்மது தஹ்லானைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்திருக்கிறார்.

""இது, காசா முனையின் இரண்டாவது விடுதலை'' என ஹமாஸ் தனது வெற்றியைப் பீற்றிக் கொண்டாலும், இந்த இரண்டாவது விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதனிடம் அரசியல் திட்டமோ, சமூக ஆதரவோ கிடையாது. தனது வெளியுலகத் தொடர்புக்கு மட்டுமல்ல, தண்ணீர், மின்சாரம், எரிசக்தி, வேலை வாய்ப்பு, வர்த்தகம், மருத்துவ வசதிகள் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் இசுரேலின் தயவை நாடியே காசாமுனை இருக்கிறது.

ஏறத்தாழ 14 இலட்சம் பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் காசா முனை மிகப் பெரிய அகதிகள் முகமாகத்தான் இருந்து வருகிறது. அங்கு வசிப்போரில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வேலை வாய்ப்பு அற்றவர்களாக, வறுமையோடு உழன்று வருகின்றனர். இவர்களை மேலும், மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸை அடக்கிவிட முடியும் என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டம்.

மேலும், ஈராக் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மேற்காசிய நாடுகளைத் தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யும் திட்டத்தோடு அமெரிக்கா இயங்கி வருகிறது. இப்பொழுது, அதிகாரப் போட்டியால் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, அமெரிக்காவைப் பொறுத்தவரை, பழம் நழுவி பாலில் விழுந்த கதையைப் போன்றதாகும். ஈராக்கை, சன்னி, ஷியா, குர்து என மூன்று பகுதிகளாகக் கூறு போடும் அமெரிக்காவின் சதி, அங்கு முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும், பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தி வந்தாலும், அதனின் நடைமுறை நோக்கம், தனது ஆயுதப் படைகளை, பாலஸ்தீன ஆணையத்தின் படைகளோடு இணைத்து ""அதிகாரத்தைப்'' பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறில்லை. இதனால்தான், ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் புறக்கணிப்பதாக கூறிவந்த ஹமாஸ், பின்னர் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன ஆணையம், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் பங்கு பெறும் சமரச நிலையை மேற்கொண்டது.

மேலும், ஏகாதிபத்திய அடிவருடித்தனம், ஊழல், கோஷ்டி சண்டையால் ஃபதா இயக்கம் சீரழிந்து போய்விட்டதால்தான், ஹமாஸ் இயக்கத்திற்கு பாலஸ்தீன மக்கள் வாக்களித்தார்களேயன்றி, அதனுடைய மத அடிப்படைவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஹமாஸுக்கு வெற்றியை அளிக்கவில்லை. எனவே, காசா முனையில் ஹமாஸ் அடைந்திருக்கும் ""வெற்றியை'' நீண்ட நாட்களுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஃபதா இயக்கத்தோடு சமரசம் செய்து கொள்வது; இல்லையென்றால், அமெரிக்க இசுரேல் கூட்டணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கிச் செல்வது என்பதுதான் இந்த ""வெற்றி''யின் எதிர்கால முடிவாக இருக்கும்.
· செல்வம்

Wednesday, September 12, 2007

அமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் ""நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்!

நாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்க அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, இப்போது ""கூட்டுச் சேரா இயக்கத்திலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கி வரவேண்டும்'' என்று அமெரிக்க அரசுச் செயலர் கண்டலீசா ரைஸ் விடுத்த எச்சரிக்கைக்கு விசுவாசமாகப் பணிந்து இப்போர்க்கப்பலை அனுமதித்துள்ளது. அண்மை ஆண்டுகளில் இதேபோல் 5 அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்தியுள்ளன.

இந்த உண்மைகளுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் மக்களைக் கொன்றொழித்த இப்போர்க் கப்பலை அனுமதிப்பதென்பது நாட்டுக்கே அவமானம் என்று விளக்கி, கடந்த ஜூலை 2ஆம் நாளன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்ற தோழர் சுப.தங்கராசு அறை கூவினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், திரளாக வந்த உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.பு.ஜ. செய்தியாளர்கள்

Monday, September 10, 2007

கட்டபொம்மனைப் பாடாத பாரதி!

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமரிசிக்கும் போதெல்லாம், ""பாரதியை அவரது வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்'' என்றும் கூறி விமரிசிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி. வரலாற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசீலிப்போம். பாரதி, சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக் கிறார். கோகலே, தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதி ராய் போன்ற வட இந்தியத் தலைவர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம், ரசியாவைப் பற்றியெல்லாம் பாடியிருக்கிறார். காக்கை, குயில், கிளி, மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்.

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனைப் பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை. சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்ற இலக்கிய அறிவோ, உலக ஞானமோ இல்லாத அந்தப் பகுதி மக்கள் கட்டபொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங் களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் எழுதாதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்! ""எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து, எட்டப்பனின் வாரிசான "மன்னனுக்கு'த் தோழனாக இருந்து அவனை அண்டிப் பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம் மனைப் பற்றி எப்படி எழுத முடியும்?'' என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக்கூடும்.

""நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி'', ""அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்'' ... அடேயப்பா! ஈட்டி போல் பாயும் சொற்கள்! பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய "நேர்மைத் திறத்தைப் பற்றி' பாரதி ஏதாவது சொல்லியிருக் கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத் தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலி யினர் தம்முடைய ஆய்வுகளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருக் கிறார்களா?

வே.மாணிக்கம் எழுதிய "தானாபதிப் பிள்ளை வரலாறு' என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்ட வாறு குறிப்படுகிறார் ஆய்வாளர், ஆ.இரா.வேங்கடாசலபதி:

""கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைப் பற்றியோ, பாஞ்சாலங்குறிச்சி பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியி லிருந்து மீண்டு, மிகுந்த நலிவுற்று, பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1919இல் ஓலைத்தூக்கும் சீட்டுக் கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில், ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய "வம்சமணி தீபிகை' (1878) நூலைச் செம்மைப்படுத்தித் தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள் ளாத நிலையில், கட்டபொம்மனைப் பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்.''

அதாவது, எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வேங்கடாசலபதி. அத்தகைய தீயூழிலிருந்து பாரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்! ·

அபு கிரைப் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி !

Sunday, September 9, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நீர்க்குமிழி பெருத்தால்..

""எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.'' (தினமணி, 26.6.07)

""சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் ஈர்க்கப்படும் தொழில் நிறுவனங்களுள், பெரும்பாலானவை மிகப் பெரும் முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. எந்தவிதமான தொழில்நுட்பப் பயிற்சியும் பெறாத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, இது ஒன்றுதான் தக்க வழியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.'' (தி ஹிந்து, 24.5.07, பக்: 23)

மேலே காணப்படும் இரண்டு கருத்துக்களும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பவர்களால் கூறப்பட்டவையல்ல. முன்னது, ""தினமணி'' நாளிதழின் தலையங்கக் கருத்து. பின்னது, இந்தியாவின் வர்த்தகக் கொள்கை மீளாய்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில், உலக வர்த்தகக் கழகம் முன்வைத்த அறிக்கையில் கூறப்பட்ட விமர்சனம்.

""எந்தவிதமான அதிகார வர்க்கத் தடைகளுமின்றி, அந்நிய மூலதனத்தையும், அதி உயர் தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்வது; ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அந்நியச் செலாவணி ஈட்டுவதை உயர்த்துவது; வேலை வாய்ப்பைப் பெருக்குவது'' ஆகிய நோக்கங்களுக்காகத்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதாக இந்திய அரசு கூறி வருகிறது. ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே ஒத்துக் கொள்ளத் தயங்குகின்றன. ""தினமணி''யின் தலையங்கமும், உலக வர்த்தகக் கழகத்தின் அறிக்கையும் இந்தத் தயக்கத்தின் வெளிப்பாடுகள்தான்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2001ஆம் ஆண்டே 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இம்மண்டலத்தில் அமையும் ஆலைகள் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்; இதனால் அப்பகுதியில் சாதிக் கலவரம் நடப்பது தடுக்கப்படும் என்றெல்லாம் அன்று கதையளந்தார்கள். ஆனால், ஆறாண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணிதான் நான்குநேரியில் நடந்து கொண்டிருக்கிறது. ""வேலி அமைத்தவுடன், அங்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கும்; அது முடிந்தபிறகுதான் ஆலைகள் வரும்'' என்று இப்பொழுது புதுக்கதை சொல்கிறார்கள்.

நான்குநேரி திட்டம் இப்படி ஆமை வேகத்தில் நகர, ""இந்த ஆண்டிற்குள் தமிழகத்தில் 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 7,107 கோடி ரூபாய் மூலதனத்தில் அமையும்; இதன் மூலம் 1,76,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்'' என டாம்பீகமாக அறிவித்தது தி.மு.க. அரசு. ஆனால், இத்திட்டங்களுக்காக இதுவரை வெறும் 772.50 கோடி ரூபாய்தான் மூலதனம் போடப்பட்டிருப்பதாக அழுது புலம்பும் ""ஃபிக்கி'' என்ற தரகு முதலாளிகள் சங்கம், தமிழக அரசு இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தியாவின் உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது பயன் கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களுள் 63 சதவீத விண்ணப்பங்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கத்தான் அனுமதி கோரியுள்ளன.

இதுவொருபுறமிருக்க, ஏற்கெனவே நடந்து வரும் தொழில்கள், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இடம் பெயர்வதை ""வளர்ச்சி'' என்று சொல்ல முடியாது; சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் பண்டங்கள், உள்நாட்டுச் சந்தைக்குள் நுழைந்தால், இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே அச்சப்படுகின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தாராளமயத்தின் தீவிர பக்தரான நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் மைய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் எனக் கூறி, வர்த்தக அமைச்சர் கமல்நாத்தோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். உலக வர்த்தகக் கழகம் கூட இந்த வரி இழப்பு பற்றிக் கவலைப்படுகிறது.

தனியார்மயம் தாராளமயத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் என ஆளும் கும்பல் ஊதிப் பெருக்குவதெல்லாம், அடுத்த நிமிடமே நீர்க்குமிழி போல உடைந்து வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலமும் இந்தத் தோல்வியில் இருந்து தப்பப் போவதில்லை.

Wednesday, September 5, 2007

பிள்ளைகள் படிப்புக்கு வாங்கிய கடனைஅடைக்க முடியாத தந்தை தற்கொலை !!


செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2007

சென்னை:மகன் மற்றும் மகள் ஆகியோரின் படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார்.
..
இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சீனிவாசன், சரவணன் என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர்.பிள்ளைகள் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களை தனது சக்தியையும் மீறி கடன் வாங்கிப் படிக்க வைத்தார் பழனிவேல்.
..
இப்படி வாங்கிய கடன் மலை போல உயர்ந்தது. இதனால் கடனை அடைக்க முடியாமல் திணறினார் பழனிவேலு. கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்னர்.
..
இதனால் மன வேதனை அடைந்து அதை மறக்க குடிப் பழக்கத்தை நாடினார்.இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போய், வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
..
இந்த நிலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார் பழனிவேலு.பதறிப் போன இரு மகன்களும் தந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
..
இரவில் தூங்கப் ேபாகும் முன் விஷத்தை குடித்துள்ளார் பழனிவேலு.
Related:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது