Wednesday, November 28, 2007

டாடாவின் டைட்டானியம் ஆலை:மண்ணைப் பறித்து முன்னேற்றமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகியிருந்தது. சாத்தான் குளம், திசையன் விளைப் பகுதிகளில் உள்ள செம்மண் மிகுந்த தேரிக்காடுகளில் என்னென்ன அரிய உலோகங்கள் உள்ளன என சோதனைகளைச் செய்து முடித்த டாடா நிறுவனம், ஆலைக்கான அனுமதிக்கு விண்ணப்பித்து காத்து நின்றது.

அதற்குள் தேர்தல் நடந்து, ஆட்சி மாறிவிடவே இன்றைய அரசுடன் மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக சுமார் பத்தாயிரத்து ஜநூறு ஏக்கர் நிலங்களை அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு வழங்கும்; நிலம் வழங்கியவர்களுக்கு டாடா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்; வீடு இழந்தவர்களுக்கு டாடா நிறுவனமே மாற்று வீடுகள் கட்டித் தரும் என்பது ஒப்பந்தத்தின் சாரம்சம்.
அன்று டாடாவுடன் ஒப்பந்தம் போட்ட "ஜெ' உட்பட ஏறக்குறைய எல்லாக் கட்சிகளும், இன்றைய டாடாவுடனான ஒப்பந்தத்தை எதிர்த்து அறிக்கைகள் விடத் தொடங்கினர். பா.ம.க., போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைவருமே மக்களிடம் கருத்தறிவது எனக் குதிக்கவே, கருணாநிதியும் மக்களின் கருத்தறிந்த பின்பே ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனக் கூறி இப்போதைக்கு சிக்கலை ஆறப்போட்டுவிட்டார்.

அருகாமை நெல்லை மாவட்டத்தில் அமெரிக்க கோக்கிற்கு தாமிரவருணியையே விற்றபோது, அதை எதிர்த்து யாரும் போராடவில்லை. போலி கம்யூனிஸ்டுகள் பெயரளவுக்கு எதிர்ப்பு வேசம் கட்டி, சூட்கேசு வந்ததும் ஒதுங்கிக் கொண்டனர். ஏற்கெனவே மே.வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலையை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டு நாடெங்கும் போலி கம்யூனிஸ்டுகளின் யோக்கியதை நாறுகிறது. கருணாநிதியோ, எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் பித்தலாட்டத்தை முறியடிக்க, கருத்துக் கணிப்பு என்று இன்னோரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

தேரிக்காட்டில் கிடைக்கும் இல்மனைட் மணலை எடுத்து, அதை சுத்திகரித்து டைட்டேனியம் டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து டைட்டேனியம் என்ற ஆற்றல்மிக்க உலோகம் தயாரிக்கப்படுகிறது. இது இரும்பை விட எடை குறைவும், பன்மடங்கு ஆற்றலும் கொண்டது என்பதால் விண்ணூர்திகள், விண்கலங்கள், ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகைகளில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இதே தேரிக்காட்டுப் பகுதிகளில் வைகுண்டராஜன் என்பவர் அடாவடியாகவும், சட்டபூர்வசட்டவிரோத வழிகளிலும் இல்மனைட் மணலை சுத்திகரித்து மூலப்பொருளாகவே ஏற்றமதி செய்து வருகிறார். டாடா ஆலை வந்தால், தனது தொழில் பாதிப்படையும் என்பதால் இது வரை சில கோடிகள் செலவு செய்து சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள், நாளிதழ்களில் விளம்பரம் என பலவழிகளிலும் மக்களிடையே பயத்தையும் எதிர்ப்புணர்வையும் உருவாக்கி, அரசுக்கு எதிராகவே செயல்பட்டார்.

டாடாவின் எடுபிடியாகச் செயல்படும் தமிழக அரசோ, நேற்று வரை வைகுண்டராஜனின் அடாவடிகளையும் சட்டவிரோத வழிகளையும் அனுமதித்துதான் வந்தது. இன்றோ, பல்வேறு வழக்குகள் போட்டது மட்டுமின்றி "தாதா' தொழிலதிபர் என பட்டமும் சூட்டி தேடுதல் வேட்டை நடத்துகிறது. பத்திரிக்கைகளோ வழக்கம் போல இவற்றையே லைகுண்டராஜனின் சாதனைகளாக்கி பரபரப்பூட்டுகின்றன. தலைமறைவாயுள்ள வைகுண்டராஜன், தற்போது ஒரு சரணாகதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வைகுண்டராஜன் செய்து வந்த வேலையை அரசாங்கமே இப்போது, டாடா செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே வறண்டு பாலைவனம் போலுள்ள அந்த தேரிக்காட்டுப் பகுதி முற்றிலும் பாலைவனமாகி, மக்கள் வசிப்பதற்கும் கூட பயனற்றதாக மாறுகின்ற அபாயமே உள்ளது. டாடா நிறுவனம் கூறுவது போல வெறும் 7 மீட்டருடன் மண்ணள்ளுவது நிற்காது. அதற்கும் மேலாக 20, 25 மீட்டர் ஆழம் கூட மணல் அள்ளும் அபாயமுள்ளது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மொத்த நிலத்தடி நீருமே காணாமற் போய், கிராமங்களையே மக்கள் காலி செய்ய வேண்டிய மிகப்பெரும் அபாயம் உள்ளது.

இதுதவிர, டாடாவின் டைட்டேனியம் ஆலைக் கழிவால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன், கடலும் மாசுபடுகின்ற அபாயமுள்ளது. மேலும், டைட்டேனியம்டைஆக்சைடு தயாரிப்புக்கு நாளொன்றுக்கு 4.5 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போவதாகவும், அந்த சுத்திகரிப்பு ஆலைக்கும் டாடா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. சுத்திகரிப்பு ஆலை எப்போது முடியும் என்பது பற்றிய காலம் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு முன் உற்பத்தி தொடங்கப்பட்டால், நிச்சயம் தாமிரவருணி ஆற்றுநீரே உறிஞ்சப்படும் அபாயமும் இணைந்துள்ளது.

சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் டாடாவின் ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு கூறுகிறது. இவை மண்ணின் மைந்தர்க்கே கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாமுமில்லை. ஏனெனில், ஆலையிலுள்ள வேலைகளுக்கு தொழில்நுட்ப தேர்ச்சி தேவை என்பது ஒரு முன் நிபந்தனை.

40 ஆயிரம் குடும்பங்களை அகதிகளாக்கி, டைட்டேனியம் ஆலை தொடங்கப்பட்டால், டைட்டேனியம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடு என்ற பெருமை கிடைக்கலாம். ஆனால் மண்ணையும், வாழ்வுரிமையையும் இழந்து தேரிக்காடுகளையும் விட்டோடுகின்ற மக்களின் அவலம் டாடா எனும் தனியொரு முதலாளியை மட்டும் வாழவைப்பதற்குத்தான் என்பதை சொரணையுள்ள யாரும் ஏற்க முடியாது.

ஏற்கெனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக ஓட்டுக் கட்சிகள் சூரத்தனம் காட்டின. சூட்கேசும் அன்பளிப்பும் வந்தபின் முடங்கிப் போயின. மக்களுக்கு பாதிப்பு வராது, வந்தால் டாடா நிறுவனம் மாற்றீடு செய்யும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது. ஏற்கெனவே நெய்வேலி சுரங்கத்திற்கு நிலமளித்தவர்களும் கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்திற்கு நிலமளித்தவர்களும் இந்த அரசாலேயே புறக்கணிக்கப்படுள்ளனர். மக்களுக்கு பதில் கூற பொறுப்புள்ள அரசாங்கமே மக்களை நிர்கதியாக வீதிக்கு விரட்டும் போது, லாப வெறி பிடித்த டாடா நிறுவனம் உரிய மாற்றீடு செய்யும் என்பதற்கும் எவ்வித உத்திரவாதமுமில்லை.

டாடாவா, வைகுண்டராஜனா என்ற போட்டியில் அப்பகுதி மக்கள் மண்ணிலிருந்தே விரட்டப்படும் அபாயம் முதன்மையாக உள்ளது. மக்கள் தமது மண்ணையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க ஓட்டுக் கட்சிகளை நம்பினால் அது மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்கிய கதையாகவே முடியும். மூலவளங்களையே சூறையாடும் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான போராட்டத்திற்கு அணிதிரள்வதே மண்ணையும் வாழ்வுரிமையையும் மீட்கும் பாதை! டாடாவை விரட்டும் பாதை!·
முத்து

சாட்டை இங்கே ராமதாஸ் எங்கே ?

ராமதாஸ் ஆகிய நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீதான சத்தியம்:

1. நான் எந்த காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்!

2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும், எனது சொந்தச் செலவில்தான் வந்து போவேன். ஒரு கால கட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல் போனால் நான் ஓய்வு எடுத்துக் கொள்வேனேயொழிய, ஒரு போதும் மற்றவர் செலவில் வந்து போகமாட்டேன்!

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். எனது கால் செருப்புக்கூட சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது!

4.எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் - எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!

5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி; ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி. இந்த ராமதாஸ் விலை போகமாட்டாள் - இது சத்தியம்! என் தாய்மீது சத்தியம்!

இதையெல்லாம் உங்கள் டையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி, நான் நடந்தால் என்னை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து, சவுக்கால் அடியுங்கள்!

இந்த சத்தியங்களை மிஞ்சும் வகையில் ராமதாஸ், இன்று ஓட்டுப்பொறுக்கி கட்சியாகவும், குடும்ப அரசியல்வாதியாகவும் ஆனது மட்டுமல்ல, போராட்டம் என்ற பெயரில் பணம் கொழுக்கும் பெரிய NGO ஆக மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்.

இவரையும், இவரைப் போல ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு வருகின்ற விஜயகாந்த், சரத்குமார் போன்ற கழிசடைகள் ஆனாலும் சரி இவர்கள் ஆரம்பகட்ட வாழ்க்கை , பேசிய பேச்சுக்களை என்ன வென்று சற்று புரட்டினாலும் தெரிந்து கொள்ள முடியும், இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என.
நன்றி இரும்பு

Tuesday, November 27, 2007

'நாட்டாமை' யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை

""நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார். அவரது இரசிகர்களால் "பச்சைத் தமிழர்' என்று அழைக்கப்படும் சரத்குமாரை கழிசடை என்றும் சுயநலவாதி என்றும் மதிப்பீடு செய்வதற்குக் காரணம் நமது விருப்பமல்ல; இந்த "சுப்ரீம் ஸ்டாரி'ன் வரலாறே அப்படித்தான் உள்ளது.

தான் விஜயகாந்த் போல திடீரென்று அரசியலுக்கு வரவில்லை எனவும், பதினைந்து ஆண்டுகளாக இரண்டு கழகங்களிலும் தீவிரமாகப் பணியாற்றியவன் என்றும் தனது கட்சியைத் தொடங்கியதற்கான தகுதிகளை சரத்குமார் முன்வைக்கிறார். உண்மையில் இவரது தீவிரப் பணி என்னவாக இருந்தது?

இளைஞனாக இருந்த போது பெங்களூரு தினகரனில் பணியாற்றினார். பின்னர், பம்பாய் சென்று ஆணழகன் ஆனார். பிறகு, சென்னை வந்து வட்டித்தொழில் செய்தார். சினிமாவுக்கும் பைனானைஸ் செய்தார். சினிமாத் தொடர்பு வந்த பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்து, வில்லனாக அறிமுகம் ஆனவர், இறுதியில் கதாநாயகனானார். ""நாட்டாமை'' திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு வந்த ஜெயலலிதா முன்பு இரட்டை இலை சட்டை போட்டு சேவகம் செய்தார்.

இந்த அடிமையிடம் அனுமதி பெறாமலேயே ஜெயா டி.வியில் ""நாட்டாமை'' படம் வெளியிடப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தி.மு.க.வில் இணைந்தார். இப்படி இவர் அரசியலில் இணைந்ததற்கும், பிரிந்ததற்கும் கொள்கையோ, மக்கள் நலனோ காரணமல்ல. பால்கனியிலிருந்து இரசிகர்களை மந்தைபோலப் பார்க்கும் ஒரு நட்சத்திர கதாநாயகனது திமிர்தான் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கி வைத்தது. இடையில், தங்களது பைனான்ஸ் தொழிலுக்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கி ராயப்பேட்டை நிதி நிறுவனத்தை திவாலாக்கிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவராக இருந்தார். சொத்துப் பிரச்சினையாலும், நக்மா பின் சுற்றியதாலும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ராதிகாவின் கம்பெனிக்காக டி.வியில் ""கோடீஸ்வரன்'' நிகழ்ச்சியை நடத்தியபோது, ராதிகாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. சரத்குமாரின் கடனை ராதிகா அடைப்பது எனவும், சரத்குமார், ராதிகா கம்பெனிக்காக திரைப்படத்தில் நடிப்பது என்றும் வர்த்தக ரீதியில் பேசிக்கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நடிகர் என்ற முறையிலும், ராதிகாவுக்கு கருணாநிதியுடன் உள்ள நெருக்கத்தாலும் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்து, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். இதை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளாமல், தி.மு.க. தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் பின்புலமாக நாடார் சாதி பத்திரிகை அதிபர்களும், தொழிலதிபர்களும் சாதியை வைத்து சரத்குமாரை முன்நிறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தி.மு.க.விடமிருந்து இராஜ்ய சபா உறுப்பினர் பதவி சன்மானமாகக் கிடைக்கிறது.

ஆயினும் அவரது அதிகார வெறி அடங்கவில்லை. தனது இரசிகர்களை வைத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என சுவரொட்டி ஒட்டச் செய்தார். நாடார்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என அச்சாதி பிரமுகர்களை வைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தார். ஏதோ ஒரு பொங்கல் விழாவில் தயாநிதி மாறன், நடிகர் விஜயை வைத்து அஞ்சல் தலை வெளியிட்டார். இதனால் தன்னைப் புறக்கணித்து விட்டதாகப் புரளி பேசினார். அறிவாலயத்திற்கு வந்த சோனியா காந்தியிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவமரியாதை அடைந்ததால் தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகக் கிசுகிசுக்களை உற்பத்தி செய்து பரப்பினார். எல்லாம் எலும்புத் துண்டு கிடைக்காதா என்ற நப்பாசைதான்.

ஆயினும் திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் சாகும் வரை கலைஞரின் தலைமையில் செயல்படுவதாகவும், செத்தால்கூட தன் உடல் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப் படவேண்டும் என முழங்கினார். முழங்கிய எச்சில் உலருவதற்குள் 2006 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.கவில் இணைந்தார். இதற்காக சாராய மன்னன் விஜய மல்லையாவின் தனி விமானத்தில் பச்சைப்புடவை கட்டிய ராதிகாவுடன் மதுரை சென்று, பின்னர் ஆண்டிப்பட்டியில் பாசிச ஜெயாவிடம் போஸ் கொடுத்தவாறு சரணடைந்தார். இந்தச் சரணடைவு உண்மையில் ஒரு வர்த்தக பேரமாகும். இதன் வரவுசெலவு அம்சங்கள் சிங்கப்பூரில் சசிகலா நடராஜனுடன் பேசி முடிவு செய்யப்பட்டன. இதன்படி சரத்குமாருக்குக் கிடைக்க வேண்டிய கணிசமான தொகையும், ராடன் நிறுவனத்துக்கு அளிக்கப்படும் தொலைக்காட்சி நேரமும் உறுதி செய்யப்பட்டது.

ஆயினும் பேசியபடி எலும்புத் துண்டுகள் ஜெயலலிதாவால் தரப்படவில்லை. இதனால் கசமுசா ஏற்பட்டு ராதிகா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். சரத்குமாரும் தனக்கு அரசியல் செய்ய நேரமில்லை என்று யாரையும் குற்றம் சாட்டாமல் நாசூக்காக அ.தி.மு.கவிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதியில் நாடார் சாதி பிரபலங்கள், சரத்குமாரை வைத்து தனி ஆவர்த்தனம் தொடங்கினால் மற்ற கட்சிகளிடம் பேரம் நடத்த தோதாய் இருக்கும் என்று முடிவு செய்து தனிக்கட்சி ஆரம்பித்து விட்டனர். நாடார் சாதி மக்களை விற்றுக் காசு பார்ப்பதற்கென்றே "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தொடங்கப்பட்டிருக்கிறது. சரத்குமாரிடமிருந்து வரும் ஒவ்வொரு அரசியல் ரீதியான அறிக்கையிலும் அவரது வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும். தற்போது சன் டி.வி.யில் ராடன் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், சன் டி.வி.யின் டி.டி.எச். ஒளிபரப்பை ஆதரித்தும் தி.மு.வைக் கண்டித்தும் சரத்குமார் அறிக்கை வெளியிடுகிறார்.

தற்போது சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி பா.ஜ.க எழுப்பிய இராமர் பாலம் பிரச்சினையில் இந்து மதவெறியர்களின் அணியில் இருந்து கொண்டு, ""இந்துக்களைப் புண்படுத்தியதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கொழுப்புடன் அறிக்கை விடுகிறார். "எதிர்காலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் மந்திரியாக மாட்டோமா' என்ற பேராசைதான்!

1966இல் காமராசரைக் கொலை செய்ய டெல்லியில் அவரது வீட்டுக்குத் தீ வைத்த இந்து மதவெறியர்களை ஆதரித்துக் கொண்டே, சாதி ஒட்டுக்களைக் கவர்வதற்காகவும், காசு வசூல் செய்து தின்னவும், காமராசருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக முழங்கும் இந்தப் பிழைப்புவாதி, தென்மாவட்ட மக்களுக்கும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் அப்பட்டமான எதிரி என்பதே உண்மை.

தனது சாதி மக்களை வைத்து உயர் பதவி அடையவேண்டும் என்று அரசியலில் குதிக்கும் சரத்குமார், உண்மையில் நாடார் மக்களுக்குச் செய்தது என்ன? தாமிரபரணி நீரை கொக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சி எடுப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு — அதில் கணிசமானோர் நாடார்கள் — இழைக்கப்படும் அநீதியாகும். இந்த அநீதிக்கு எதிராக சரத்குமார் வாய்திறக்கவில்லை என்பது மட்டுமல்ல; சமீபத்தில் கோக்கில் பூச்சி மருந்து கலந்திருப்பது சந்தி சிரித்து அதன் விற்பனை வீழ்ச்சியடைந்தபோது, சரத்குமாரின் மனைவி ராதிகா, ""கொக்கோ கோலா பாதுகாப்பானது''' என்று விளம்பரப் படத்தில் நடித்துச் சிபாரிசு செய்தார். நாடே காறி உமிழ்ந்தது. ஆனால், "நாட்டாமை'க்கு எச்சில் பிரச்சினை அல்ல; காசு மட்டும்தான் குறி.

சில்லறை வணிகர்களில் பெரும்பாலானோர் நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள். இவர்கள் வாழ்வை அழிக்க வந்துவிட்ட ரிலையன்ஸை எதிர்த்து வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தபோது, "நாட்டாமை' ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். தன் சொந்த சாதி மக்கள் மீது இந்த வேடதாரி வைத்திருக்கும் நேசத்தின் இலட்சணம் இதுதான். தற்போது டைட்டானியம் ஆலை விவகாரத்திலும் ""இந்தியாவின் தொழில் தந்தையான டாடாவை நான் எதிர்க்கவில்லை. உரிய விலை கொடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை'' என்று தரகு வேலை பார்த்தார் இந்த வியாபாரி.

இத்தகைய பச்சையான சுயநல, சந்தர்ப்பவாத, துரோகிகள் கட்சி ஆரம்பிப்பதும், முதல்வராகப் போவதாகப் பேசித் திரிவதும் மக்களுக்கு மாபெரும் அவமானம். இந்த அவமானத்தைத் தீர்க்கவேண்டுமெனில் இத்தகைய பேர்வழிகள் அரசியல் என்று பேசினாலே அடித்துத் துரத்தவேண்டும் அல்லது முளைக்கும் போதே "மணிமண்டபம்' கட்டி விடவேண்டும். அதையும் குறிப்பாக நாடார் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களே செய்து முடித்தால், சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.

பச்சையப்பன்

Monday, November 26, 2007

"பிரெடரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள் "


மார்க்சிய ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸின் பிறந்தநாள்

நவம்பர் 28'
..
"நாடு மறுகாலனியாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் எதிரிகளை எதிர்கொண்டு போலிகளை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்க மார்க்சிய ஆசானின் பிறந்த நாளில் உறுதி எடுப்போம்."

நந்திகிராமம் : 'மார்க்சிஸ்டு'களின் கொலை வெறியாட்டம்


Saturday, November 24, 2007

உனக்கு செங்கொடி எதற்கு !



ரிலையன்ஸ் எதிர்ப்பு ஒட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!

மே. வங்கத்தில் ஏகபோக ""பெண்டலூன்'' சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கி வைத்து "புரட்சி' செய்து வரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், இப்போது ""ரிலையன்ஸ் பிரஷ்'' காய்கறி அங்காடிகள் மற்றும் ரிலையன்ஸ் பேரங்காடிகளைத் தொடங்க கதவை அகலத் திறந்து விட்டுள்ளனர். கொல்கத்தா நகரின் 76 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ""பார்க் சர்க்கஸ்'' காய்கறி அங்காடியை ரிலையன்சுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்குக் கையளித்துள்ளனர். இதுதவிர ""பஜார்கள்'' என்று குறிப்பிடப்படும் நகரின் பல்வேறு அங்காடிகளையும் ரிலையன்சுக்குத் தாரை வார்த்துள்ளனர்.


இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு மாதத்தில் கொல்கத்தா நகரின் கிரிஷ்பார்க் போலீசு நிலையம் அருகே நந்தாமுல்லக் தெருவில், ரிலையன்ஸ் பிரஷ் காய்கறி அங்காடி தொடங்க ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தன. தங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக குமுறி எழுந்த சில்லறை வியாபாரிகள், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமையில் திரண்டு கடந்த ஆகஸ்டு 18ஆம் நாளன்று முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று அந்த ரிலையன்ஸ் கடையை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த "இடதுசாரி' போலீசு, சில்லறை வியாபாரிகள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து, ரிலையன்ஸ் கடையைப் பாதுகாக்க போலீசு பட்டாளத்தை குவித்துள்ளது.


சில்லறை வியாபாரிகளின் திடீர் போராட்டத்தைக் கண்டு பீதியடைந்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்காலிகமாக, காய்கறி அங்காடிகளைத் திறப்பதை நிறுத்தி வைத்துள்ளது. ""ஐயோ, அப்படிச் செய்யாதீர்கள்! ரிலையன்ஸ் கடைகளுக்கு இம்மாநில அரசு முழுப்பாதுகாப்பு அளிக்கும்'' என்று உறுதியளித்து அழைக்கிறார், மே.வங்க அரசுச் செயலரான அமித்கிரண்தேப். இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்டு கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ரிலையன்சுக்கு எதிராக சில்லறை வியாபாரிகளை அணிதிரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரான பினாய் கோனார், ""இடது முன்னணியிலுள்ள கட்சிகளே இப்படிச் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்; பெண்டலூன் கடைகள் திறக்கப்பட்டபோது எதிர்ப்பு காட்டாக இக்கட்சிகள், ரிலையன்சை மட்டும் இப்போது எதிர்ப்பது சந்தர்ப்பவாதமாகும்'' என்று பொரிந்து தள்ளுகிறார்.


ரிலையன்ஸ், பெண்டலூன் முதலான பேரங்காடிகளுக்குத் தாராள அனுமதி அளிப்பது மட்டுமல்ல; 1972ஆம் ஆண்டின் சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி தாராளமயமாக்கலுக்கு விசுவாச சேவை செய்யவும் மே.வங்க போலி கம்யூனிச அரசு தீர்மானித்துள்ளது. இச்சட்டத் திருத்தம், உள்நாட்டுவெளிநாட்டு பெருந் தொழில் நிறுவனங்கள் சில்லறை வணிகத்திலும், விவசாய நேரடிக் கொள்முதலிலும் ஈடுபட தாராள அனுமதி அளிப்பதோடு, ஒப்பந்த விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகளையும் அளித்துள்ளது; ஒப்பந்த விவசாயம் என்பது மிகப் பெரிய மோசடி என்று அம்பலப்பட்டுப் போயுள்ளதால், இத னைக் ""கூட்டுப் பங்கு விவசாயம்'' என்று பெயரை மாற்றி பித்தலாட்டம் செய்கிறது. இச்சட்டத் திருத்தம் மே.வங்க சட்டப் பேரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.


விவசாயத்தில் தாரளமயமாக்கலைத் திணித்து, விவசாய சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்த மே.வங்க அரசு முயற்சித்துவரும் வேளையில், ஏற்கெனவே இதனைச் செயல்படுத்தி வரும் 11 மாநிலங்களின் வரிசையில் 12வது மாநிலமாக உ.பி.யை இணைத்து, புதிய சந்தை சீர்திருத்தக் கொள்கையை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று அறிவித்தார், அம்மாநில முதல்வரான மாயாவதி. தமது வாழ்வைச் சூறையாட வந்துள்ள இக்கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து உ.பி. விவசாயிகளும் சிறுவணிகர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தின் போதுதான் லக்னோ மற்றும் ராஞ்சி நகரங்களில் ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.


இத்தருணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, மத்தியிலுள்ள காங்கிரசு கூட்டணி அரசு நெருக்கடிக்குள்ளாகி, ஆட்சி கவிழ்ந்து மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற ஊகமும் வதந்தியும் நிலவியது. அப்படி ஒருவேளை திடீரெனத் தேர்தல் வந்துவிட்டால், ஓட்டுப் பொறுக்குவதற்குத் தடையாக இக்கொள்கை அமைந்துவிடும் என்பதாலேயே திடீர் ""பல்டி''யடித்து இத்தாராளமயக் கொள்கையைச் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்து, ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார்; சாதகமான சூழலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.இந்நிலையில், போலி கம்யூனிஸ்டுகள் முதல் தலித்திய தலைவி மாயாவதி வரையிலான அனைத்து ஓட்டுக் கட்சி துரோகிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்காமல், விவசாயிகளும் சிறுவணிகர்களும் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது; தாராளமயமாக்கலை வீழ்த்தவும் முடியாது.


குமார்

Tuesday, November 20, 2007

கள்ளசாராயம், சட்டபூர்வ சாராய கடைகளை மூடிட போராடுவோம்!

டாஸ்மாக் கடையை இழுத்து மூடு!
கள்ள சாராயக்கடையை ஒழித்து கட்டு!



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது