Friday, July 6, 2007

பிரேம்குமார் பதவி நீக்கம் :இது தண்டனை அல்ல!

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் திரு. நல்லகாமன் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும் மேலும் 3 போலீசு அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து 3.4.07 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்த செய்தி சென்ற பு.ஜ. இதழில் வெளியாகியிருந்தது. மே 21ஆம் தேதியன்று பிரேம்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு அவரது வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
..
நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர் யாராக இருந்தாலும், எவ்வித விளக்கமும் கோராமல், மறுகணமே அவரை அரசியல் சட்டப்பிரிவு 311(அ) வின் கீழ், அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி அரசு நிரந்தர வேலை நீக்கம் செய்யும். மற்றெல்லா அரசு ஊழியர்களின் விசயத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை இதுதான். ஆனால், குற்றவாளி பிரேம்குமாரைப் பணிநீக்கம் செய்வதற்கு மட்டும் அரசுக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
..
இதனை வெற்றி என்று அழைக்கலாமெனில், இது திரு.நல்லகாமனின் தளராத உறுதிக்கும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியே அன்றி, நிச்சயமாக இது நீதிக்குக் கிடைத்த வெற்றி அல்ல. இந்தப் பணிநீக்கம் என்பதும்கூட வேறு வழியில்லாத நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைதான்.
..
3.4.07 அன்று தீர்ப்பு வெளியானவுடனே, பிரேம்குமாரும் அவருடன் தண்டிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையை தமிழக காவல்துறை செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. பிறகு மதுரை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் பிரேம்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கச் செய்தனர். அதன் பிறகும் போலீசு அசையவில்லை. பிரேம்குமாரும் மற்ற மூவரும் தலைமறைவானார்கள்.இன்று பணிநீக்க உத்தரவை பிரேம்குமார் வீட்டுக் கதவில் ஒட்டும் காவல்துறை, அன்றே பிரேம்குமாரின் படத்தைப் போட்டு "தலைமறைவுக் குற்றவாளி' என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். காசைக் கொடுத்து, கம்ப்ளெயிண்டையும் கொடுத்தால், உடனே ஆட்டோவில் வந்து இறங்கும் காக்கி உடை யோக்கியர்கள், பிரேம்குமாரின் பெண்டாட்டி, பிள்ளை, மாமன், மச்சான் அனைவரையும் அடித்து இழுத்து வந்து அண்டிராயரோடு ஸ்டேசனில் உட்கார வைத்து, "அய்யா எங்கே?' என்று விசாரித்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பிரேம்குமார் தப்பிப்பதற்குப் போதுமான அவகாசத்தைத்தான் தமிழக அரசு வழங்கியது.
..
அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிரேம்குமார், தான் தஞ்சை மாவட்ட போலீசு கண்காணிப்பாளராகப் பதவி வகிப்பதால் "போலீசிடம் சரணடைவதிலிருந்து விலக்கு தரவேண்டும்' என்று கோரி, உச்சநீதி மன்றத்தில் உத்தரவும் வாங்கி விட்டார். இப்படியொரு சலுகை எல்லா கிரிமினல்களுக்கும் வழங்கப்படுகிறதா அல்லது "போலீசு கிரிமினல்களுக்கு' மட்டுமே உச்சநீதி மன்றம் வழங்கும் சிறப்புச் சலுகையா என்று தெரியவில்லை. ஆனால், பொய் வாக்குமூலம் கொடுத்து உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிய பிரேம்குமாரின் இந்த மனுவைக் கூட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் எதிர்க்கவில்லை.
..
தமிழக அரசின் இந்தக் கள்ள மவுனத்தை அம்பலப்படுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தின் வாயிலாக, இது எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாரையும் மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று நல்லகாமன் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனுக் கொடுத்தார். அதன் பிறகும் தமிழக அரசு அசையவில்லை.
..
பிறகு 4.5.07 அன்று ""தண்டனை பெற்ற குற்றவாளி பிரேம்குமாரைக் கைது செய்!'' என்று கோரும் போராட்டத்தை வீதிக்குக் கொண்டு வந்தனர் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை வழக்குரைஞர்கள். ""அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வது சட்டவிரோதம்'' என்று வழக்குரைஞர்களை மிரட்டிப் பார்த்தது போலீசு. ""முதலில் பிரேம்குமாரைக் கைது செய்துவிட்டு அப்புறம் இங்கே வந்து சட்டத்தை நிலைநாட்டு'' என்று பதிலடி கொடுத்த வழக்குரைஞர்கள், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தச் செய்தியும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது.அதன் பிறகும் தமிழக அரசு பிரேம்குமாரை கைது செய்யவில்லை.இதனைத் தொடர்ந்து ""தண்டனை பெற்ற குற்றவாளியான பிரேம்குமாரையும் மற்ற 3 அதிகாரிகளையும் கைது செய்யவும், பணி நீக்கம் செய்யவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் வழக்குரைஞர் ராஜு. பதிலில்லை.
..
பிறகு 7.5.07 அன்று மக்கள் தொலைக்காட்சியின் "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களான ராஜு, சகாதேவன் ஆகியோர், ""தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒரு போலீசு அதிகாரி என்பதால் தமிழக அரசு அவரைச் சட்ட விரோதமாகப் பாதுகாக்கிறது'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். ""தன்னுடைய சாதியைச் சேர்ந்த அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு சட்டத்தை வளைக்கிறான் பிரேம்குமார்'' என்று அம்பலப்படுத்தினார் நல்லகாமன். இதற்கு அப்புறமும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.இதற்கிடையில் உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பிரேம்குமார், சிறை செல்வதைத் தவிர்க்க பிணை மனுவையும் தாக்கல் செய்தார். ""பிரேம்குமாரின் பிணை மனுவையும், மேல் முறையீட்டு மனுவையும் நிராகரிக்க வேண்டுமென்றும், பொய்யான தகவல் கொடுத்து உச்சநீதி மன்றத்தை பிரேம்குமார் மோசடி செய்திருக்கிறார்'' என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், பிரேம்குமாருக்கு பிணை வழங்கியது உச்சநீதி மன்றம். உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரேம்குமார் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இப்போது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.பிரேம்குமாருடன் ஒரு மாத தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 போலீசு அதிகாரிகளையும் கூட, அரசு இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை.
..
உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத அரசுக்கு எதிராக மறுபடியும் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். மீண்டும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம், வக்கீல், வாய்தா, அலைச்சல், பணம்...!1982ஆம் பிப்ரவரி முதல் தேதியன்று, தன்னுடைய கட்டப் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமனையும், அவரது குடும்பத்தினரையும் கொலைவெறி கொண்டு தாக்கி, சங்கிலியால் பிணைத்து வாடிப்பட்டியின் தெருக்களில் இழுத்துச் சென்ற பிரேம்குமார் என்ற மிருகத்தின் வெறியாட்டம் அந்த ஒருநாளுடன் முடிந்து விட்டது. அந்தக் காக்கி உடைக் கிரிமினலைத் தண்டிக்கக் கோரி, சட்டபூர்வமாக முயற்சித்து வரும் அந்த முதியவரை 25 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வருகின்றது இந்த அரசமைப்பு. பிரேம்குமாரின் சித்திரவதை வாடிப்பட்டி வீதியுடன் முடிந்து விட்டது. தமிழக அரசும், நீதித்துறையும் அவரை வாடிப்பட்டியிலிருந்து டெல்லிக்கும் சென்னைக்கும் மதுரைக்கும் ஆயிரம் முறை இழுத்து அலைக்கழித்து வருகின்றன.
..
இந்தத் தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருந்த அதே 25 ஆண்டுகளில்தான் வெறும் துணை ஆய்வாளராக இருந்த பிரேம்குமாரைப் படிப்படியாக உயர்த்தி, எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. 1982இல் நடைபெற்ற ஆர்.டி.ஓ. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, வலது கையால் பிரேம்குமார் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துவிட்டு, இடது கையால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கலைஞர் அரசு, ஜெயலலிதா அரசு, ஜானகி அரசு என எந்த அரசிலும் இந்தக் கிரிமினலின் கொடி மட்டும் இறங்கவேயில்லை.
..
ஏழு கடல், ஏழு மலை தாண்டி இலட்சக்கணக்கில் செலவு செய்து, ""ஒரு மாதச் சிறை'' என்ற இந்த "பயங்கரமான தண்டனையை' உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து வரவழைத்த பின்னர், அந்தத் தீர்ப்பை அமல்படுத்த வைப்பதற்கு, அதாவது ஒரு காக்கி உடைக் குற்றவாளியைக் கைது செய்ய வைப்பதற்கு, ஒரு குடிமகன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்த விவரங்களைத் தந்திருக்கிறோம். இவையெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். இப்படி 300 மாதங்கள் 25 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, இந்த "நீதி'யை வாங்குவதற்கு!"
..
"25 ஆண்டு காலம் போராடி இந்தத் தீர்ப்பை வாங்கியிருக்கிறீர்களே, நீங்கள் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று "நீதியின் குரல்' நிகழ்ச்சியில் மக்கள் தொலைக்காட்சியின் நிருபர் நல்லகாமனிடம் கேட்டார். ""கோர்ட்டு கேசெல்லாம் வேலைக்கு உதவாது மாமா; நான் அவனை உலக்கையைக் கொண்டு அடிச்சிடறேன்னு என் மருமவன் அன்னைக்கே சொன்னான். வேண்டாம்பா; நாம முறையாத்தான் போகணும்''னு அன்னக்கி அவன்கிட்ட சொன்னேன். இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது அன்னைக்கே உலக்கையைக் கொண்டு அடிச்சிருக்கலாமேன்னு தோணுது'' என்று பதிலளித்தார் நல்லகாமன்.
..
25 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து "இந்திய ஜனநாயகம்' வரவழைத்திருக்கும் சொற்கள் இவை ""உலக்கையைக் கொண்டு அடிக்கணும்!''.
..
இந்த "உலக்கை அடி' பிரேம்குமாருக்கு அல்ல; சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மேலாண்மை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இந்த அரசமைப்புக்கு. இந்த மக்கள் விரோத அரசமைப்பு நீடிக்கும் வரை நல்லகாமனைப் போன்ற சாதாரணக் குடிமக்களுக்கு நீதி கிடைக்காது என்பதுதான் நல்லகாமனின் நீண்ட நெடிய போராட்டம் கூறும் நீதி.
..
பு.ஜ. செய்தியாளர்கள்.

2 comments:

அசுரன் said...

இந்திய ஜனநாயகத்தின் பெருமை பேசும் அல்பைகள் இது குறித்து என்ன் கருத்துச் சொல்வார்கள்? நர்மாதா அணை பிரச்சனை முதல் நல்லகாமன் வரை புளுத்து நாறும் இந்த போலி ஜனநாயகத்தின் புனிதம் காக்க பிற நேரங்களில் காவடி தூக்கி வரும் சமரசவாதிகள் என்ன சொல்வார்கள்?

இவர்கள் எல்லாருக்கும் ஒரேஒரு கணக்குதான். தனக்கு இதுவரை எந்த ஆபத்தும் இல்லை என்ற சுயநலமே, பிழைப்புவாதமே இந்த போலி ஜனநாயகத்தின் புனிதம் காக்கும் புரவலர்களாக இவர்களை அவதாரமெடுக்க வைக்கீறது.

மேலும், காட்டுக்குள் இருந்து போராடுபவர்கள் என்று மக இக குறித்து புரளியையும் பொய்யையும் பேசும் கயவர் சந்திப்புக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் லக்கிலுக் போன்ற நண்பர்கள் இதோ நல்லகாமன் விசயத்தில் கூட இவர்களின் போலி ஜனநாயக வரையறைக்குட்ப்பட்டு நீதி கிடைக்கப் போராடிய மக இகவின் நட்பு அமைப்பு குறித்து என்ன கருத்துச் சொல்வார்கள். வழக்கம் போல கள்ளமௌனம் அதன் பிறகு புரளி.... நல்ல நேர்மை

அசுரன்

Anonymous said...

\\எப்படியோ மாநகரத்தில் தனியார் மயத்திற்கு எதிராக போராடியது சி.பி.எம். என்று ஒத்துக் கொண்டீர்களே அதற்கு கோடி நன்றிகள்...

காட்டுக்குள் இருக்கும் புரட்சியாளர்களுக்கு புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறு ஒன்றும்அவர்கள் கழட்டுவதில்லை. மேலும் இடஒதுக்கீட்டுக்கே எதிரானவர்கள் அவர்கள். எனவே தலித் மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இடஒதுக்கீட்டில் அதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற மூன்றாவது நிலை எடுத்த அதி மேதாவிகள். இதையெல்லாம் நீங்கள் பார்ப்பனீம் என்று கூறினால் தடியெடுத்துக் கொண்டு அலைவார்கள்//



சந்திப்பு ரொம்ப ஒளராத;

நாட்டை விற்க்கும் காங்கிரசு துரேகிகளுக்கு கோவனமும் நீங்கள் தான்,
ஜட்டியும் நீங்கள் தான் என்பது ஊரெ நாறி நாற்றமெடுக்கும்
விசயம் அப்புறம்
என்ன வெங்காயத்துக்கு தனியார்மய எதிர்ப்பு வேசம் போடுற நீ.

தனியார்மய தாசர்கள்.
------------------------
சாதி ஒடுக்குமுறையை பற்றி பேச சந்திப்பு உனக்கு துளி கூட
அருகதையே இல்லை ஏன்னென்றால் உன்னுடைய கட்சியில் சாதி
வெறியன்களும்,கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் இல்லை என்று சொல்ல முடியுமா
உன்னால் ?

உதாரனத்திற்கு நான் ஒரு அண்னனை சொல்கிறேன் அவர் KK நகர் DYF1
தலைவர் காமராஜ்,அவ்ருடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான்.

அப்புறம் நம்ம மேற்கு வங்க "தோழர்",
அதான் நான்
முதலில் பாப்பான் அப்புறம் தான் கம்யூனிஸ்டுனு சொன்னாரில்ல
அந்த "தோழர்"

எனவே சந்திப்பு ஒன் கட்சி இருக்கிற லட்சணத்தில் நீ சாதி பற்றியெல்லாம்
பேசவே கூடாது.

லும்ப்பன் பார்ட்டி ஆப் இந்தியா
----------------------------

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று சொன்னாயே உன்னிடம்
எந்த முட்டாள் அப்படி சொன்னான்?
சரிசரி CPM முட்டாளாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லையே!

அறிவு கெட்ட சந்திப்பே ஆளும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும்
உன்னுடைய கட்சி தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது,
உன்னுடைய
கட்சி எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அந்த கேடுகெட்ட நிலைப்பாட்டை
விளக்க உன் தலைவர்களுக்கு அறிக்கை ஒரு கேடு?

உன் கட்சியிலுள்ள மீசை முறுக்கும் வீரருக்கும் [தோழருக்கு] இட ஒதுக்கீடு
கீழ் வெண்மனியை சாம்லாக்கியவர்களுக்கும்,
லீலாவதியை கூறு போட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு வேண்டுமோ ?

ஆனால் நீ அதற்கும் மேலே போய்
வறலாற்றில் என்னுடைய பாட்டன் முப்பாட்டனுடைய
நாக்கை அறுத்தவனுக்கும்,காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியவனுக்கும்
கூட இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறாய்.

இட ஒதுக்கீட்டில் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனமான
நிலைப்பட்டை வைத்துக்கொண்டுள்ள நீ
ம.க.இ.க வை பார்த்து பேசுகிறாயா ?

போ,போய் ஒழுங்கா இட ஒதுக்கீடு பற்றிய ம.க.இ.க வின்
வெளியீடை
மறுபடியும் ஒரு முறை தெளிவாக படிச்சுட்டு வந்து பேசு.


அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சந்திப்பு ?

நீ ஆறறிவுள்ள மனிதனா இல்லை கிளியா !

காடு,துப்பாக்கின்னு சொன்னதையே சொல்லிக்கிட்ருக்கியே
அதான் கேட்டேன்,

ஒன்னு பன்னலாம் ஒன் செல் நம்பரை போடு நான்
வந்து ஒன்னையெ எங்க ஆபிசுக்கே
கூட்டிட்டு போய் காட்டுறேன்.

அதே போல அவதூறு சேற்றை வாரியிரைக்கிறார்கள்
என்பதும் கூட உனக்கு
மனப்பாடமாகிவிட்ட ஒரு சொற்றொடர்.

நீயும் உன் கட்சியும் அவதூறு
செய்யுமளவுக்கு யோக்கிய
சிகாமனிகள் என்கிற நினைப்பா உனக்கு ?

கோமாளி சந்திப்பே கேட்டுக்கொள்

உன்னுடைய கட்சியையும்,திரிபுவாத ஆளும் வர்க சித்தாந்தத்தையும்
சுக்கு நூறாக உடைத்தெறிவது தான் புரட்சிகர சக்திகளின் முதல் வேலை,
நீயும் பார்க்கத்தானே போகிறாய்,
பார்ப்பது மட்டுமின்றி
பேசவும் செய்வாய் கைகூலியின் குரலில்,
நாங்களும் பார்ப்போம்
ஆனால் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்
கைக்கூலிகளிடம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது