Monday, October 15, 2007

வந்தே மாதரம்:எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!


சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.

மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.

இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.

முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.
..

மு அன்பு

1 comment:

╬அதி. அழகு╬ said...

'தேசபக்தி' முகமூடியைக் கிழித்தெறிந்த பதிவு; பாராட்டுகள்!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது