Sunday, December 16, 2007

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுனத்துவம் இல்லாத ஒருவர் சோசலிசத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்.

..
உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடுகள் மற்ற நாடுகளை அடிமைபடுத்தி வாழ்கின்றன. தோல்வி அடைந்த நாடுகளின் செல்வங்களைச் சுரண்டுவதோடு அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிவிடுகிறார்கள்.

..
இதை சமூக வளர்ச்சியில் 'காட்டுமிராண்டிக்கட்டம்" எனலாம். நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து விடவில்லை சோசலிசத்தின் நோக்கம் இந்த கட்டத்தைக் கடந்து சென்று உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். சோசலிசம் என்பது ஒருசமூக-அறவியல் இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்ற இயக்கமாகும்.

..
மனிதசமூகம் ஒரு மாபெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது: அதன் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில் தனிநபர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது அக்கறையில்லாதிருப்பதும், சமூக நலங்களுக்கு எதிராக நடந்து கொள்வதும் இயல்பே.
மேலே கூறியதை விளக்கும் வகையில் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒருஉதாரணத்தை தருகிறேன் இன்னொரு உலகப்போர் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் அத்தகைய போரில் மனித குலம் பூண்டற்றுப் போய்விடும் என்பதையும் அறிவும் பண்பும் அமையப் பெற்ற ஒருவரிடம் விளக்கி கூறினேன. "மனிதகுலம்அழிந்துவிடக்கூடாது என்று நீங்கள் கவலைப்படுவது ஏன்?" என்று அவர் என்னிடம் கேட்டார்.

..
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாதிரி அலட்சியமாக யாரும் பேசியிருக்க மாட்டர்கள். தன்னுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்து, அந்த முயற்ச்சியில் தோல்வி கண்ட ஒருவரின் அழுகுரல் என்று இதை கூற வேண்டும். நிராசையும், அவநம்பிக்கையும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கும் இன்று ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இதை மாற்றும் வழி என்ன? என்னாலியன்ற வரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.

..
மனிதன் ஒரே சமயத்தில் தனிநபராகவும் சமூகப் பிராணியகவும் இருக்கிறான். தனிநபர் என்ற முறையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவும், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும் பாடுப்படுகிறான். சமூகப்பிராணி என்றமுறையில் மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தையும் பாரட்டையும் பெறுவதற்கும், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொள்ளவும் சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறான். இந்த இருவகை தன்மைகளும் அடிக்கடி மோதிக்கொள்ள நேர்ந்தாலும், இவையே மனிதனின் சிறப்பியல்புகளாகும். இவை இரண்டும் எந்தஅளவில் இணைகின்றன் என்பதை பொறுத்தே மனிதனின் அக வாழ்க்கை அமைகிறது.
ஒரு தனிமனிதனுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுக்கின்ற நேரடியான, மறைமுகமான உறவுகளின் மொத்ததையே "சமூக ம்" என்றகருத்து குறிப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு தனி நபரால் சிந்திக்கவும் தானாக வேபாடுபடவும் முடியும். ஆனால் அவனுடைய உடல், உணர்ச்சி, அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தினால் மட்டுமே முடியும். ஊடை, உணவு, வீடு, மொழி உழைப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை அவனுக்கு தருவது சமூகமே. அவனுடைய சிந்தனை வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிப்பது சமூகமே. "சமூகம்" என்ற சிறுவார்த்தையில் மறைந்திருக்கும் பல் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் சாதனைகளுமே அவன் வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றது. இந்த கோடிக்கணக்கான மக்களில் அவனுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்களின் பங்கும் உண்டு.

..
நம் காலத்திய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அது சமூகத்துக்கும் தனிநபருக்கும் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் அதிகமான அளவுக்கு சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் இது ஒரு இயல்பான பினைப்பு என்றோ, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றோ, அவன் கருதுவதில்லை. தன்னுடைய நியாயமான உரிமைகளை கட்டுப்படுத்தும் சக்தியாகவே சமூகத்தை கருதுகிறான். மேலும் இன்றைய சமூகத்தில் தனிநபர் போக்குகள் தீவிரம்டைகின்றன: சமூகப் பிணைப்புகள் மேன்மேலும் பலவீனமடைகின்றன. மனிதர்கள் அனைவரும் இத்தகைய படிப்படியான சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தனிமை சூழ்ந்து, கவலை அதிகரிக்கிறது எளிமையான வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பரிசுத்தமான் மகிழ்ச்சியை அவர்கள் பெறமுடிவதில்லை. வாழ்க்கை என்பது குறுகியதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னைச் சமுதாயத்துக்கு அர்பணித்துக் கொள்வதன் மூலம்தான், வாழ்க்கையின் நிறைவை பெற முடியும்.

..
முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம். உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக இருக்கின்ற சமுதயத்தில் நாம் வாழ்கிறோம். இவர்கள் சட்டபூர்வமாகவே மற்றவர்கள் தங்களுடைய பயனைப் பெறமுடியாதவாறு செய்கிறார்கள். உழைப்புச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கின்ற காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களுடைய உழைக்கும் சக்தியை விலைக்கு வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும்பொருள் முதலாளிக்குச் சொந்தமாகிறது. அந்தப் பொருளின் மதிப்பு அதிகம், ஆனால் அவனுக்குத் தரப்படுகின்ற ஊதியம் குறைவு. இந்த வேறுபாட்டை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலாளிகளிடையே போட்டியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மூலதனம் சிலரிடத்தில் குவிகிறது. இவர்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். சட்டமன்றத்தின் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாண்மையான ஏழைகளின் பிரதிநிதிகள் அல்ல. மேலும் பத்திரிக்கைகள். வானொலி, கல்வி அமைப்பு ஆகியவற்றை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிப்பதால். மக்களாலும் தங்கள் அரசியல் உரிமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை இவர்கள் உற்பத்தி செய்வதில்லை. அதிகமான லாபமே இவர்களது குறிக்கோள். எல்லோருக்கும் வேலை கிடைப்பத்தில்லை. வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை போய்விடுமோ என்ற பயம் நிரந்தரமாக இருக்கிறது. லாப நோக்கம், தங்கு தடையில்லாத போட்டி ஆகியவையால் உழைப்பு அதிகமான அளவுக்கு வீணாவதையும், தனி நபர்களின் சமூகஉணர்வு சிதைக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது முதலாளித்துவ சமூகத்தின் படு மோசமான நோய். '

..
சோசலிச அமைப்பு மூலம்தான் இவற்றை ஒழிக்கமுடியும் என்பதில் எனக்குசிறிதும் சந்தேகமில்லை. சோசலிசப் பொருளாதாரத்தில் சமூக உடைமையாக இருக்கின்ற உற்பத்தி சாதனங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தால் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி நடைபெறுவதால் வேலை பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்-பெண், குழந்தை-வயோதிகர் அனைவருக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் திறமையும் ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் பதவிக்கும் பணத்துக்கும் நடைபெறும் போட்டிக்கு பதிலாக, "மற்றவர்களுக்காக நான்" என்ற உணர்வு வளர்க்கப்படும். எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.

..
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(Monthly Review, May 1949)
**
முருகன் என்ற பெயரில் ஒரு அன்பர் இந்த கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்

..
பதிந்தவர் அசுரன்

நன்றி அசுரன்

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது