Tuesday, July 15, 2008

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?


விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப்பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி மோடி கும்பல் கூட வாதிடுகிறது. ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது. ""இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 201617 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம்தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணுஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.


இவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன்? ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன்? அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா? ""தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம்தான். அதனால் மன்மோகன் சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.


இந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், ""இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.


இதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் ""என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்) கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்சஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.


நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.


2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்தியஅமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.


அதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.


இதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.


இவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன் சோனியா மட்டுமல்ல. அத்வானி மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் ""ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.


நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசரசரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.
· ஆர்.கே.
புதிய ஜனநாயகம் july 2008

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது