Friday, July 20, 2007

அமெரிக்க எதிர்ப்பு: சி.பி.எம். -யின் பித்தலாட்டம்

நிமிட்ஸ் கப்பலை அனுமதிக்காதே,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கனும் என்று துள்ளி குதித்த சி.பி.எம் யோக்கியதை பற்றி புதிய ஐனநாயகத்தில் (டிசம்பர் 2005) வந்த கட்டுரையை மீண்டும் பதிவிட்டு உள்ளோம்.
**********************************************************************************
"இந்திய வான்வெளி. அமெரிக்காவின் விற்பனைக்கு அல்ல! அமெரிக்காவின் இராணுவத் தளமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! கொலைகார அமெரிக்க போர் விமானப் படையுடன் நடத்தும் கூட்டுப் பயிற்சியை நிறுத்து!'' கைகளிலே செங்கொடியும் கருப்புக் கொடியும் ஏந்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நவம்பர் 7ஆம் நாளன்று மே.வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்திலுள்ள களைகுண்டா விமானப் படைத்தளம் அருகே விண்ணதிர முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல், வடக்கே சிலிகுரி அருகிலுள்ள பக்டோக்ரா விமானப் படைத்தளம் அருகேயும், கொல்கத்தாவின் டம்டம் விமானத்தளம் அருகிலும் இந்திய அமெரிக்க போர் விமான கூட்டுப் பயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

வாஜ்பாய் ஆட்சியின்போதும் இதேபோல் இந்திய அமெரிக்கப் போர் விமானங்களின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அப்போது சி.பி.எம். தலைமையிலான "இடதுசாரி'க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதே கூட்டுப் பயிற்சி இப்போது சி.பி.எம். தலைமையிலான "இடதுசாரி' கூட்டணி ஆளும் மே. வங்கத்தில் நடைபெற்றது. அதை எதிர்த்துத்தான் "இடதுசாரி' கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன. "இடது' முன்னணித் தலைவர்களும், ஊழியர்களும் உழைக்கும் மக்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றி என்கிறது சி.பி.எம். கட்சி.

இச்செய்தியைப் படிக்கும் எவரும், சி.பி.எம். கட்சி அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கட்சி; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் போர்க்குணமிக்க கட்சி என்றுதான் கருதுவர். ஆனால், மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஒப்புதலுடன்தான் இந்தப் போர் விமான கூட்டுப் பயிற்சியே நடந்துள்ளது.
மே.வங்கத்தில் போர் விமான கூட்டுப் பயிற்சி வேண்டாம்; வேறிடத்தில் நடத்தலாம் என்று அமெரிக்கா கூடத் தயங்கியது. இதைப் பற்றி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது, ""இது தொடர்பாக மே.வங்க முதல்வர் புத்ததேவிடம் பேசிவிட்டோம். அவர் கூட்டுப் பயிற்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு மாநிலத்தில் நடத்தலாம் என்று கருதினோம். ஆனால் சி.பி.எம். முதல்வரே உறுதியளித்துள்ளதால் திட்டமிட்டபடி மே.வங்கத்திலேயே இக்கூட்டுப் பயிற்சி நடைபெறும். இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களது ஜனநாயக உரிமை. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புத்ததேவ் உறுதி கூறியுள்ளார்'' என்று விளக்கியுள்ளார், பிரணாப் முகர்ஜி.

""மைய அரசு அமெரிக்காவுக்கு விசுவாசமாக போர் விமானக் கூட்டுப் பயிற்சியை நடத்துவதென்பது அவர்களது உரிமை; எதிர்ப்பு காட்டுவதென்பது எங்களது உரிமை; அதேநேரத்தில் மைய அரசின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது மாநில அரசின் கடமை'' என்று பித்தலாட்டம் செய்கிறது சி.பி.எம். கட்சி. மே.வங்கத்தில் இக்கூட்டுப் பயிற்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று மாநில அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து தடுத்திருக்கலாமே என்று கேட்டால், ""அப்படிச் செய்தால் மே.வங்கத்தைப் பற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்குத் தவறான கருத்து ஏற்பட்டு விடும். அந்நிய முதலீடுகள் வராமல் போய்விடும்'' என்கிறார் மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர்.

ஆர்ப்பாட்டம் நடந்த களைகுண்டா போர் விமானப் படைத்தளத்துக்கு 2 கி.மீ. தூரத்துக்கு அப்பால் போலீசு தடுப்பரண்களை நிறுவி, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியது, ஆளும் "இடது முன்னணி' அரசு. கேட்டால் ""சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது மாநில அரசின் கடமை'' என்கிறார் புத்ததேவ். வேறு மாநிலத்தில் இக்கூட்டுப் பயிற்சி நடந்திருந்தால் இப்படி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி பரபரப்பூட்டியிருக்க முடியாது. எனவேதான், மே.வங்கத்தில் நடத்த ஒப்புதல் அளித்துவிட்டு, எதிர்ப்பும் காட்டி பித்தலாட்டம் செய்கிறது சி.பி.எம். கட்சி. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் புரட்சி செய்வது எப்படி? தெரியாவிட்டால் சி.பி.எம். கட்சியினரிடம் கேளுங்கள்.

குமார்

Thursday, July 19, 2007

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

எடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.

எதிரொளிக்கும் ஃபுளோரசென்ட் பட்டைகள் கொண்ட சீருடை, தொப்பி, ஆரஞ்சு நிறக் கையுறை, ஆள் உயர இரும்பு பிரஷ், மண் அள்ளும் ஷவல், சாம்பல் நிறத்தில் நடமாடும் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி, உதிரிக் குப்பைகளை ஒய்யாரமாக ஏற்றிச் செல்லும் சிறிய ரக வாகனங்கள், வீதிகளின் மூலையில் கரும்பச்சை நிறத்துடன் இருப்புக் கொண்டிருக்கும் பெரிய குப்பைத்தொட்டி, அதை அப்படியே அலக்காகத் தூக்கித் தனது முதுகில் சாய்த்துக் கொள்ளும் தானியங்கி லாரிகள், சிப்பாய்களைப் போல அவற்றின் ஓரங்களில் தொங்கிக் கொண்டு செல்லும் துடிப்பான தொழிலாளிகள், சாலையில் படிந்திருக்கும் மண்ணை நக்கித் துடைக்கும் நவீன எந்திரங்கள் எழுப்பும் விநோத ஓசை, வாக்கி டாக்கியுடன் சுற்றித் திரிந்து இவற்றை மேற்பார்வையிடும் சூபர்வைசர்களின் மிடுக்கு... இது ஓனிக்ஸ்.

""அடடா... இது சென்னை நகரமா, அல்லது ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கும் ஐரோப்பிய நகரமா'' என்று பார்ப்பவர்களையெல்லாம் வியக்க வைக்கிறது; ""எவ்வளவு நீட்டா இருக்கு பாருங்க, என்ன இருந்தாலும் பிரைவேட்னா பிரைவேட்தான் சார்.'' என்று தனியார்மயக் கொள்கைக்கு "ஜே' போடவும் வைக்கிறது சென்னையில் இயங்கும் ஓனிக்ஸ் எனும் பன்னாட்டுத் துப்புரவுத் தொழில் நிறுவனம்.

சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை 2000 என்றெல்லாம் கனவு கண்ட முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்கப்பூராக்க வேண்டுமானால் அங்கே குப்பை அள்ளும் கம்பெனியை வைத்து சென்னையிலும் குப்பை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். லண்டன் மாநகரத்திலும் சிங்கப்பூரிலும் குப்பை அள்ளும் ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் வந்து இறங்கியது. துப்புரவுப் பணியிலும் தனியார்மயம் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் மந்தைவெளி, ஐஸ் ஹவுஸ், கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணியை ஏழேகால் ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது ஓனிக்ஸ் நிறுவனம்.
""காசுக்கு வழியில்லாதவன்தான் குப்பை பொறுக்குவான், இவ்வளவு பெரிய வெளிநாட்டுக் கம்பெனி நம்ம நாட்டுல வந்து குப்பை பொறுக்குறான்னா அவனுக்கு என்ன காலக்கொடுமையோ'' என்று நினைத்து விடவேண்டாம். கொடுமை பன்னாட்டுக் கம்பெனிக்கல்ல, அதன் பணியாளர்களுக்குத்தான்.
""ஓனிக்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்! மலையாய்க் குவிந்தன குப்பைகள்! நோய் பரவும் அபாயம்!'' என்று அலறின சென்னை நாளிதழ்கள். ஆனால் மலையாய்க் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் துயரம்தான் அவர்களை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளியிருக்கிறது என்ற உண்மையை மட்டும் அவை அணுவளவும் வெளியிடவில்லை. "வழக்கமான சம்பள உயர்வு, போனஸ் பிரச்சினைதான்' என்று பொய்யாகச் சித்தரித்து ஓனிக்ஸின் மேனாமினுக்கித் தோற்றத்திற்கு உள்ளே புழுத்து நெளிந்து கொண்டிருந்த அடக்குமுறைகள் அம்பலமாகாமல் இருட்டடிப்பு செய்தன.

ஓனிக்ஸ் தொழிலாளர்களை நேரில் சந்தித்த போதுதான் அழகு, சுத்தம் என்ற சொற்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது ஒரு அப்பட்டமான பயங்கரவாதம் என்பது தெரியவந்தது.

""எங்களை மனிதர்களாக நடத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களாக நடத்து'' என்ற ஒரு வரியில் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிவிடுகின்றன. ""தொழிலாளர்களை ரீ டிரெய்னிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தாதே; விசாரணை என்ற பெயரில் வேலை நீக்கம் செய்யாதே; தொழிலாளர்களைக் கேவலமாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு; ஆட்குறைப்புசெய்வதை நிறுத்து; சம்பளப் பாக்கிகளைக் கொடு'' என்பவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளின் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய பணிநிலைமைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
போகிற போக்கில் அலட்சியமாக நாம் வீசும் குப்பை, மூக்கைப் பிடித்துக் கொண்டு தெருவில் விட்டெறியும் செத்த எலி, கடைக்காரர்கள் கொட்டும் அழுகிய காய்கறிகள், ஓட்டல்கள் வெளியேற்றும் கெட்டுப்போன சோறு, கருச்சிதைவில் வெளியேறிய குழந்தை உள்ளிட்ட மருத்துவமனையின் ஆபத்தான கழிவுகள், லாரியில் அடிபட்டுச் செத்த நாய்கள்... இவையனைத்தும் நாட்கணக்கில் அகற்றப்படாமல் கிடக்கும் காட்சியைக் கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். துப்புரவுப் பணியாளர்கள் இயங்கினால்தான் சென்னை என்பது மாநகரம், இல்லையேல் மறுநாளே இது நரகம். ஆனால் அவர்கள் இயக்கப்படுவது எப்படி?

ஓனிக்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை நகரின் 3 மண்டலங்களுடைய துப்புரவுப் பணிக்காக ஏற்கெனவே மாநகராட்சி ஒதுக்கியிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6000. அதே பணியை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வைத்து முடித்து வருகிறது ஓனிக்ஸ் நிறுவனம். தனியாரின் திறமை இங்கிருந்து தொடங்குகிறது.

130 பெண்கள் உட்பட ஓனிக்ஸ் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 2300. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 டிவிசன்கள், ஒரு டிவிசனுக்கு 60 தொழிலாளர்கள், ஒரு சூபர்வைசர், லாரி டிரைவர். 8 மணி நேரத்தில் ஒரு தொழிலாளி சுத்தம் செய்ய வேண்டிய சாலையின் நீளம் 1400 மீட்டர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர். ஒரு துளி தூசும் இல்லாதபடி மறுபடி மறுபடி பெருக்க வேண்டும். வெறும் 300 சதுர அடி வீட்டைக் கூட்டி முடிப்பதற்குள் முதுகு பிடித்துக் கொண்ட கதையை இலக்கியமாகப் பேசும் நபர்கள் 1400 மீட்டர் கடைவீதியைக் கற்பனையிலாவது ஒருமுறை கூட்டிப் பார்க்க வேண்டும்.
..
இரும்புத் துடைப்பானால் குப்பையைத் தள்ளிக் கொண்டும், பொடி மண்ணை பிரஷ்ஷால் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டும் குனிந்த தலையுடன் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளியின் கைகள் ஓய்ந்து ஒரு கணம் நிற்பதையோ, அவர்கள் உட்கார்ந்திருப்பதையோ சென்னைவாசிகள் யாராவது எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் 5,6 பேராக டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்த்திருப்பீர்கள். 4 ஓனிக்ஸ் தொழிலாளிகள் சேர்ந்து டீ குடித்தபடி நிற்பதை யாராவது பார்த்ததுண்டா?

இதுவரை கவனித்திராதவர்கள் இனி கவனித்துப் பாருங்கள். வியர்வையைத் துடைப்பதற்காகக் கூட அவர்கள் ஒரு கணம் ஓய முடியாது. வயர்லெஸ்ஸ{டன் வண்டியில் சுற்றிக் கொண்டே இருக்கும் சூபர்வைசரின் கண்ணில் பட்டால் எந்த விளக்கத்தையும் அவன் காதில் வாங்க மாட்டான். உடனே மெமோ. சூபர்வைசரின் அனுமதியில்லாமல் சிறுநீர் கழிக்கக் கூட ஒதுங்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களிடம் பேசக்கூடாது. முகவரியை வைத்துக் கொண்டு வழிகேட்கும் மக்களிடம் கூடப் பேசக் கூடாது. நட்புணர்ச்சியுடன் கடைக்காரர்கள் ரெண்டு வாழைப்பழமோ டீயோ கொடுத்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது. குடித்தால், சாப்பிட்டால் மறுகணமே வேலைநீக்கம்.

இரண்டு பத்து நிமிடங்கள் தேநீர் இடைவேளை, சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் போக, 8 மணி நேர வேலை. கல்லாய்ச் சமைந்திருக்கும் சந்து முனீஸ்வரன்களுக்குக் கூட கழிவை வெளியேற்ற வழியுண்டு; ஒன்றரை கி.மீ. துப்புரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளிக்கு 10 நிமிட இடைவேளைக்குள் சிறுநீர் கழிக்க இடம் தேடுவதே பெரும் போராட்டம்.

எந்தச் சோற்றுக்காக இத்தனைப் பாடுபடுகிறார்களோ அதை நிம்மதியாகத் தின்ன முடியாது. அன்றைக்கு ஒதுக்கப்பட்ட சாலையில் ஏதாவது ஒரு கடையில் சோற்று டப்பாவைக் கொடுத்து வைத்து, இடைவேளை நேரத்தில் அந்தக் கடைக்கு ஓடிவந்து அள்ளி விழுங்கி விட்டு 30 நிமிடத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர வேண்டும். துர்நாற்றம் போகக் கை கால் முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடவோ, சாப்பிட்ட பின் சற்று அமரவோ கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

அன்றாடம் 8 மணி நேரம் சாலையோரக் குப்பையையும் மண்ணையும் அழுந்தத் தேய்த்துச் சுத்தம் செய்யும் உள்ளங்கை புண்ணாகும். ஒரு தானியங்கி எந்திரத்தைப் போல நிமிடத்திற்கு 25,30 முறை முன்னும் பின்னும் இயங்கும் தோள்பட்டை மூட்டுக்கள் என்னாகும்? ஒரே ஆண்டில் சவ்வுகள் கிழிந்து தேய்ந்து போன எந்திரம்போல "கடக் கடக்' என்று ஓசை எழுப்புகின்றன தொழிலாளர்களின் தோள்பட்டைகள். ஆண்டுக்கு இரண்டு மாதம் வேகப்பந்து வீசும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே பிரச்சினை வருகிறது. அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை, 20 லட்சம் செலவு!

இப்படித் "தேய்ந்து' போகும் தொழிலாளர்களைக் கழித்துக் கட்ட கொடூரமான தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது ஓனிக்ஸ் நிர்வாகம். வேகம் குறைந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு "நின்னால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம்' என்று அவர்களுக்கு அடுக்கடுக்காக மெமோ கொடுத்து அலுவலகத்துக்கு அலைய வைப்பது; அப்போதும் வேலையை விட்டு ஓடவில்லையென்றால் "ரீ டிரெய்னிங்' என்ற பெயரில் இறுகிப் போன மண் மேடுகளைத் தன்னந்தனியாக சவல் போட்டு பெயர்த்தெடுக்கும் கொடிய தண்டனையை வழங்குவது இந்தக் கொடுமைகள் தாளாமல் பரிதாபத்துக்குரிய அந்தத் தொழிலாளர்கள் தானே வேலையை விட்டு ஓடுகிறார்கள்.

ஆனால் தேய்ந்து போன லாரிகளை ஓனிக்ஸ் இவ்வாறு கழித்துக்கட்டுவதில்லை. ""ஆரம்பத்துலதான லாரியெல்லாம் பந்தாவா இருந்திச்சு. இப்ப எந்த வண்டியிலுமே ஷாக் அப்சர்வர் வேலை செய்யறதில்லை. குப்பைய ஓவர் லோடு ஏத்தி வண்டி ஓட்ட முடியாம இடுப்பு வலி தாங்கல சார். குப்பை கொட்றப்ப எரிஞ்சு புகைமூட்டமாக இருக்கும். எதிர்ல வர்ற ஆளும் தெரியாது. வண்டியும் தெரியாது. குப்ப பொறுக்குறவங்க மேல வண்டி ஏறிடும். நைட்ல எங்காளுகளே வண்டி ஏறி செத்ததுண்டு டிரைவர்னு வேலைக்கு சேர்ந்தேன். தினம் 3 டிரிப் அடிக்கணும். முடிச்சிட்டா நீயும் போய் குப்பை வாருன்னு கட்டாயப்படுத்துறாங்க. முடியலீங்க. வேலைய விட்டுரலாம்னு இருக்கேன்.'' இது ஒரு டிரைவரின் குமுறல்.

ஓனிக்ஸிலிருந்து ராஜினாமா செய்து விட்டு ஓடிய தொழிலாளர்கள் சுமார் 4000 பேர். சில ஆண்டுகளிலேயே இத்தனைப் பெரிய வெளியேற்றம். வேறெந்தத் தொழிலிலும் காண முடியாதது. இளம் குருத்துக்களை வேலைக்கு எடுத்து, அவர்களுடைய எலும்பையும் தசையையும் கரும்புச் சாறு பிழியும் எந்திரம் போல முறுக்கிப் பிழிந்து 4000 பேரைத் துப்பியிருக்கிறது ஓனிக்ஸ்.
ஒரு தொழிலாளியின் சம்பளம் 2300 ரூபாய். ஆண்டுக்கு 24 நாட்கள் விடுப்பு. மூட்டு வலி, சுவாசக் கோளாறு, வயிற்று வலி, குடலிலும் சீறுநீரகத்திலும் மண் தங்குதல் இவை எல்லாத் தொழிலாளர்களுக்கும் வரும் நோய்கள். எனவே கூடுதல் விடுப்பு எடுப்பது தவிர்க்க முடியாதது. கூடுதலாக விடுப்பு எடுத்தாலோ, முன் அனுமதியின்றி எடுத்தாலோ, ஒருநாள் விடுப்புக்கு 4 நாள் சம்பளம் (ரூ. 340) வெட்டு.

சூபர்வைசர்களின் சம்பளம் 15,000 ரூபாய். ஒவ்வொருவரும் 60 தொழிலாளிகள் மற்றும் சுமார் 40 கி.மீ நீளச் சாலைக்குப் பொறுப்பு. இந்தப் பணிச்சுமையால் வேட்டை நாய்களாகவே அவர்களை மாற்றியிருக்கிறது நிர்வாகம். குப்பையின் எடையும் தண்டிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடக் கூட அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து, பரிசுகள்.
..
டன் ஒன்றுக்கு 650 ரூபாய் என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 1200 டன் குப்பை அள்ள வேண்டுமென்பது மாநகராட்சிக்கும் ஓனிக்ஸ{க்கும் இடையிலான ஒப்பந்தம். இந்தக் கணக்கின்படி ஓனிக்ஸின் மாத வருவாய்
ரூ. 2 கோடி 35 லட்சம். 2300 தொழிலாளர்களுக்கு (மொத்த ஊதியம் சராசரி ரூ. 3000 என்ற கணக்கில்) வழங்கப்படும் ஊதியம் 69 லட்சம் மட்டுமே. பிற செலவினங்கள் போனாலும் தோராயமாக மாத லாபம் ஒரு கோடி ரூபாய். குப்பையின் எடையைக் கூட்டுவதற்காக கட்டிடம் இடித்த கற்களை அள்ளி, குப்பைக் கணக்கில் சேர்த்துக் காசு பார்க்கிறது ஓனிக்ஸ். அவ்வப்போது பிடிபடும் இந்த மோசடியை லஞ்சத்தால் சரிக்கட்டியும் விடுகிறது.

இந்த ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காக ஓனிக்ஸ் இறக்கியிருக்கும் தொழில் நுட்பமென்ன? போட்ட முதலீடு என்ன? நம்மூர்க் குப்பைதான் முதலீடு. கசக்கிப் பிழியப்படும் நம் தொழிலாளர்களின் உழைப்புதான் தொழில்நுட்பம். கம்ப்யூட்டர் திரையையும் லாபக் கணக்கையும் தவிர வேறெதுவும் தெரியாத ஒரேயொரு வெள்ளைக்கார நிர்வாகியை மட்டும்தான் சென்னையில் இறக்கியிருக்கிறது ஓனிக்ஸ். வந்திறங்கிய ஒருசில ஆண்டுகளிலேயே 4000 இளைஞர்களை உயிருள்ள குப்பைகளாக்கி வீசியிருப்பதுதான் ஓனிக்ஸின் "திறமை'. ஈவிரக்கமற்ற சுரண்டல்தான் ஓனிக்ஸ் வழங்கும் சுத்தத்தின் இரகசியம்.

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோஹனஸ்பர்க்கில் குடிநீரைத் தனியார்மயமாக்கி, ""ப்ரீ பெய்டு அட்டை வாங்க முடிந்தவர்களுக்கு மட்டும்தான் குடிநீர்'' என்ற கொடிய திட்டத்தை அமல்படுத்திய வயோலியா என்ற பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தின் கிளைதான் ஓனிக்ஸ். காசில்லாதவனுக்குக் குடிநீரில்லை என்ற இந்தக் கொடிய திட்டத்தின் விளைவாக லட்சக்கணக்கான கறுப்பின ஏழைமக்கள் கழிவுநீரையும் குட்டை நீரையும் குடித்து காலராவுக்கு இரையாகினர்.

அதே வயோலியா நிறுவனம்தான் சென்னை மாநகரக் குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஆலோசகராகவும் அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குப்பையில் லாபம் பார்க்கும் ஓனிக்ஸ், குடிநீரில் லாபம் பார்ப்பதெப்படி என்பதை நமது மாநகராட்சிக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கிளைதான் கழிவுகளிலிருந்து நம்மைப் "பாதுகாக்க' வந்திறங்கியிருக்கிறது. ஓனிக்ஸின் ஒப்பந்தம் நீடிக்கப்படும்; மெல்ல மெல்ல சென்னை முழுவதுற்கும் அது விரிவுபடுத்தப்படும்.

ஏனென்றால், தனியார்மயம்தான் அரசின் கொள்கை. பணி உத்திரவாதம், குறைந்த பட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமைகள் போன்ற "தொந்திரவுகள்' நீக்கப்படாமல் இருப்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழையத் தயங்குகின்றன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை உடனே ஒழித்தால்தான் ஓனிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமென்றும் கூறுகிறார் மன்மோகன் சிங்.

அரசு இனி வழங்கவிருப்பதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்புகள்தான். ஓனிக்ஸ் தொழிலாளர்களில் பலர் எம்.ஏ., பி.ஏ. பட்டதாரிகள். பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அவர்களுடைய மாதச் சம்பளம் 2300 ரூபாய். குடியிருக்கும் இடத்திலிருந்து குப்பை அள்ளும் இடத்திற்கு வந்து போக பேருந்துக் கட்டணம் தினமும் 10 ரூபாய். தேநீர்ச் செலவு குறைந்தது 10 ரூபாய். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஒருநாள் சம்பளம் வெட்டு அந்த வகையில் மாதம் 340 ரூபாய். மிஞ்சுவது மாதம் 1340 ரூபாய். மருத்துவச் செலவு அதில்தான், சீருடையைத் துவைக்கும் செலவு அதில்தான். சோறும் வீட்டு வாடகையும் அதில்தான். இதுதான் தனியார்மயம் வழங்கும் "வேலை வாய்ப்பு'.

இனி இது ஓனிக்ஸ் தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, உங்கள் பிரச்சினை. இத்தகைய வேலைவாய்ப்புக்கு நீங்கள் தயாரா?

மு க.மு.

Wednesday, July 18, 2007

வென்றது வள்ளலார் நெறி! வீழ்ந்தது பார்ப்பனச் சதி!

சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில் உத்தரஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி 1872 முதல் ஏழைகளுக்கு உணவளித்து வந்த வள்ளலார், பார்ப்பனச் சடங்குகளையும், சாதிக் கொடுமையையும் மறுத்து புதியதொரு மார்க்கத்தை உருவாக்கினார். தீட்சிதர் கூட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆடூர் சபாபதி குருக்கள், வள்ளலார் கொள்கையை ஏற்பதாக நடித்து, அவர் மறைவுக்குப் பின், சைவ ஆகம நெறியைப் புகுத்தி சபையைப் பார்ப்பனமயமாக்கும் சதியைத் தொடங்கினார்.

சிவலிங்க வழிபாடு, பிரதோஷ பூசை, பூணூல் அணிந்த அர்ச்சகர், வள்ளலாருக்கே நெற்றியில் பட்டை போடுவது, சபைக்கு சொந்தமான நிலத்தை ஏப்பம் விட்டு சொத்து சேர்ப்பது என்று வள்ளலாரின் சன்மார்க்கத்தை ஒழித்து "சைவ மார்க்கத்தை' வளர்த்தார் தற்போதைய பூசகர் சபாநாத ஒளி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பொள் ளாச்சி மகாலிங்கத்தின் பின்புலத்தை வைத்துக் கொண்டு, தட்டிக்கேட்ட வள்ளலார் நெறியாளர்களை மிரட்டினார். இதற்கெதிராக வள்ளலார் நெறியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
..
இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனையொட்டி பெரியார் தி.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் மாவட்டமெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரமும் செய்தனர். ""பார்ப்பன மதத்தை மறுத்து வாழ்ந்த வள்ளலாரை பார்ப்பனமயமாக்கும் சதியை முறியடிப்போம்!'' என்ற தலைப்பில் பு.மா.இ.மு. வெளியிட்ட துண்டறிக்கை, பெரும் வரவேற்பைப் பெற்றது.
..
தைப்பூசத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் வடலூருக்கு வரும் மக்களிடமும், மாதந்தோறும் பூசத்தன்று திரளும் வள்ளலார் நெறியாளர்களிடமும் இந்தப் பார்ப்பனமயமாக்கத்தை எதிர்த்துப் போராடுமாறு செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள் திரளாக நின்று பிரச்சாரம் செய்தனர். துண்டறிக்கையை வரவேற்ற சன்மார்க்க சங்கத்தினர் தாமே முன்வந்து அதனை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினர்.
..
பார்ப்பனமயமாக்கத்துக்கு எதிரான வள்ளலார் நெறியாளர்களின் போராட்டம் மே 17ஆம் தேதி வெற்றி பெற்றது. சபாநாத ஒளி சிவாச்சாரியார் அறநிலையத் துறையால் வெளியேற்றப்பட்டார். வள்ளலார் வகுத்த வழியில் வடலூரில் மீண்டும் வழிபாடு தொடங்கியிருக்கிறது.

Tuesday, July 17, 2007

மீண்டும் படரும் காவி இருள்

மீண்டும் படரும் காவி இருள்மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.
..
தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.
..
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.
..
சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
..
உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
..
ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று தாலிபான்களை விஞ்சும் விதத்தில் பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.
..
1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.
..
ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.
..
ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.

···
ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.
..
இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
..
சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
..
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறது."
"இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.
..
''தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.···
..
குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.
..
''எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.
..
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்.
..
அழகு

சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!


""ஜெகந்நாபாத் சிறைச்சாலையின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நடத்திய அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதலானது, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக் குறைபாடுகள் குறித்த பல பாரிய கேள்விகளை எழுப்புகின்றது. தேர்தல் ஆணையத்தின் கட்டளையின்படி சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக பாதுகாப்புப் படைகள் ஈடுபடுமாறு திருப்பி விட்டிருந்தது கூட, இந்தச் "சிறைத் தகர்ப்பு நடவடிக்கை'க்கு காரணமாக அமைந்து விட்டது. இந்த அமைப்பு அதிநவீன ஆயுதங்களை எவ்வாறு அடைய முடிந்தது; அவர்களின் தொழில்முறைப் பயிற்சி மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்புகள் ஆகியவை குறித்துப் பாரிய கேள்விகளைக் கூட இந்த ஒட்டு மொத்த நிகழ்வு எழுப்புகிறது. இவற்றிலெல்லாம் அரசாங்கமும் அதன் (ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை) முகமைகளும் கவனம் செலுத்த வேண்டும்; அதேசமயம் விவாதிக்கப்பட வேண்டிய பிற பிரச்சினைகளும் இருக்கின்றன.''

இது அருண்சௌரி, ""துக்ளக் சோ'' போன்ற கம்யூனிச எதிர்ப்பு பார்ப்பன பாசிசக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எழுதியதல்ல. ஏகாதிபத்திய மேலாதிக்கம், மறுகாலனியாதிக்கம், உலகமயமாக்கம் ஆகிய புதிய காலகட்டத்திற்கேற்ற நவீன திருத்தல்வாதத்தின் புதிய தலைமுறைத் தலைவர் சீதாராம் யெச்சூரியின் கூப்பாடு.

ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு குறித்து எழுதும் முதலாளியத் தாராளவாத விமர்சகர்களே கூட, நக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சிக்கான சமூக, அரசியல், பொருளாதார காரணிகளைச் சுட்டுகின்றனர்; தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பின்தங்கிய நிலை, அரசாங்கங்கள் அம்மக்களின் நல்வாழ்வில் அக்கறையின்றிப் புறக்கணிப்பது மட்டுமல்ல. அரசின் மக்கள் விரோதச் செயல்களையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியோ துரோகத்தனமான, கேவலமான எதிரிவர்க்கக் கைக்கூலியாகவே மாறி மேற்கண்டவாறு தமது அதிகாரபூர்வ ஆங்கில ஏடான ""பீப்பிள்ஸ் டெமாக்ரசி''யில் எழுதியிருக்கிறார்.

அதாவது, இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி நவீன ஆயுதங்களை அடைந்தது, தொழில்முறை பயிற்சி பெற்றது, பிற குழுக்களுடனான அதன் தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து ஒடுக்கும் வேலைகளை அரசும் அதன் ஆயுத உளவுப் படைகளும் செய்ய வேண்டும், தம் தரப்புக்கு அக்கட்சி எழுப்பியுள்ள அரசியல், சித்தாந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாக எழுதுகிறார்.

நக்சல்பாரி இயக்கத்துக்கு எதிரான அரசியல் சித்தாந்த விளக்கம் என்று எண்ணிக் கொண்டு வழக்கமான தனது புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார், அந்தத் திருத்தல்வாதி. சிறைத்தகர்ப்பு போன்ற வன்முறை ""இடது தீவிரவாதம்'' என்றும் அவற்றை வைத்து கம்யூனிசம் வன்முறையை வழிபடுவதாகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இம்மாதிரி அராஜகத்தையும் சி.பி.எம். கட்சியின் புரட்சிகர வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ். சமப்படுத்துவதாகவும் புளுகுகிறார். அராஜக வன்முறையை இசுலாமிய அடிப்படைவாதிகளோடு வேண்டுமென்றே சமப்படுத்தி வைப்பது போலத்தான் சி.பி.எம். கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து ஆர்.எஸ்.எஸ். குழப்புவதாகப் புளுகுகிறார்.

நக்சல்பாரி இயக்கத்தின் புரட்சிகர வன்முறையை, சி.பி.எம்.இன் நாடாளுமன்றப் பன்றி அரசியல் வேலைகளுக்குச் சமமாகப் பேசினால், நக்சல்பாரி இயக்கத்துக்குதான் இழப்பு, அவப்பெயர் அவமரியாதை சி.பி.எம். கட்சிக்கு அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, கொஞ்சமாவது பொது அரசியல் அறிவுள்ள எல்லோருக்குமே நக்சல்பாரி இயக்கத்துக்கும், சி.பி.எம். கட்சிக்கும் இடையிலுள்ள அடிப்படை வேறுபாடு தெரியும். அதாவது சி.பி.எம். ஒரு நாடாளுமன்றக் கட்சி, புரட்சிக்கு வன்முறையில் நம்பிக்கை வைக்காத கட்சி. நக்சல்பாரி இயக்கம் புரட்சிகர வன்முறையில் நம்பிக்கையுள்ள கட்சி, நாடாளுமன்ற அரசியலை எதிர்த்துப் புறக்கணிக்கும் இயக்கம். எப்படியிருந்தாலும் (புரட்சிகர) வன்முறை இரண்டு இயக்கங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, வேறு யார்தான் இரண்டின் நடைமுறைகளைச் சமன்படுத்திப் பேசமுடியும்? அப்படிப் பேசினால் யார்தான் அதை நம்பப் போகிறார்கள்?

ஆக, திருத்தல்வாதி இங்கேயும் உண்மையைத் திரித்து எழுதியிருக்கிறார். ஏதோ, தனது கட்சியும் புரட்சிகரக் கட்சி என்பதாகக் காட்டிக் கொள்வதற்காக, அப்பட்டமான புளுகு வாதத்தை முன்வைத்து புரட்சிகர இயக்கத்தின் மீது அவதூறு செய்ய முயன்றிருக்கிறார். இவர்கள் அமைப்பைச் சேர்ந்த 42 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட போதும், கான்பூரில் இவர்களின் கலைக்குழு அமைப்பாளர் சப்தார் ஹாஸ்மி பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட போதும், அதேபோல, இவர்களின் மதுரை மாநகர உறுப்பினர் லீலாவதி கொடூரமாகக் கொல்லப்பட்ட போதும் கோழைத்தனமாக செயலிழந்து ஒடுங்கிக் கிடந்துவிட்டு, அவற்றை ஓட்டுப்பொறுக்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் இந்தப் போலி கம்யூனிஸ்டுகளோடு, புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தை சமன்படுத்திவிடுவார்கள் என்பது ஒரு சிகப்புப் பொய் அல்லவா?

அதோடு, ஜெகந்நாபாத் சிறைத்தகர்ப்பு ஒரு அடாவடித்தனமான, துடுக்குத்தனமான தாக்குதல் என்றும், வன்முறை வழிபாடு என்றும், அராஜக வன்முறை என்றும் யெச்சூரி சித்தரிக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியினர் உட்பட நக்சல்பாரி இயக்கத்தினர் ஆயிரக்கணக்கில் இந்தியச் சிறையில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல், விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். பதின்வயதுச் சிறுவர்கள், பெண்கள் கூட ""பொடா'' சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜெகந்நாபாத் கொடுஞ்சிறையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுப் புரட்சியாளர்கள் விசாரணைக் கைதிகளாக ஆண்டுக்கணக்கில் அடைபட்டுக் கிடந்தார்கள். அதனால்தான் இந்தச் சிறைத் தகர்ப்பே தவிர, வெறுமனே வன்முறைக்காக வன்முறை, வன்முறை வழிபாடு என்பதெல்லாம் போலி கம்யூனிஸ்ட் மூளைகளில் உதித்த திருத்தல்வாதம்தான்!

நக்சல்பாரி இயக்கம் பிளவுபட்டுப் போனது, குழுக்களாக செயல்படுவது பற்றி நக்கலாக எழுதுகிறார் யெச்சூரி. இந்தக் குழுக்களிடையே நிலவுவது, புரட்சியை எப்படிச் சாதிப்பது என்கிற வேறுபாடுதானே தவிர, கேரளத்திலும், மே.வங்கத்திலும் சி.பி.எம். கட்சிக்குள் நடப்பதைப் போல பதவிச் சண்டையோ, இலஞ்ச ஊழல் போட்டியோ அல்ல. சினிமாக்காரன்களின் புகழ்பாடியோ ""புரட்சித் தலைவி ஆசி பெற்ற சி.பி.எம். வேட்பாளர்'' என்று கூறியோ ஓட்டுப் பொறுக்கும் கட்சியின் தலைவருக்கு இதெல்லாம் தெரியாததில்லை!

மு சுப்பு

Monday, July 16, 2007

மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் :கொள்ளைக்காரனின் வள்ளல் வேடம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், இந்த விலைக் குறைப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் அறிவித்தார். நாட்டை மீண்டும் காலனியாக்கி மக்களை மரணக் குழியில் தள்ளி வரும் காங்கிரசுக் கூட்டணி ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் திடீரென அக்கறை வந்துவிட்டதோ என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த விலைக் குறைப்பு என்பது மோசடித்தனமானது என்றும் பன்னாட்டுஉள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டும் நடவடிக்கைதான் என்பதும் வெகு விரைவிலேயே அம்பலமாகி விட்டது.

விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள 886 வகையான மருந்துகளும் 11 பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் தயாரிக்கும் விலை அதிகமுள்ள மருந்துகளாகும். பெரும்பாலான மருத்துவர்கள் உள்நாட்டு மருந்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். அத்தகைய மருந்துகளின் விலைகளைக் குறைக்க மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உபயோகத்தில் இல்லாத, பரவலாகக் கடைகளில் கிடைக்காத, விலை அதிகமாக உள்ள மருந்துகளின் விலையை மட்டுமே — அதுவும் 5 முதல் 10 சதவீத அளவுக்கு மட்டுமே அரசு குறைத்துள்ளது. அதிகம் பயன்பாட்டில் உள்ள மருந்துகளின் விலைகள் மிகமிக அற்பமான அளவுக்கே குறைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, இமிடேல் என்ற ஊசி மருந்து ஏற்கெனவே ரூ. 4.99க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.98 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரான்கோல்ட் பிளஸ் 10 மாத்திரைகளின் விலை

ரூ. 18.11க்கு விற்பனையாகி வந்தது. இதன் விலை தற்போது ரூ. 17.51ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மாத்திரைகளின் விலையில் 60 பைசா குறைந்துள்ளது. சாமானிய மக்கள் கடையில் ஒன்றிரண்டு மாத்திரைதான் வாங்குகின்றனர். ஒரு பைசா, இரண்டு பைசா சில்லறையுடன் போய் இரண்டு மாத்திரை வாங்கினால் மட்டுமே அமைச்சர் கூறியபடி இந்த விலைக் குறைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல், இந்த விலைக் குறைப்பினால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. இதுதான் விலைக் குறைப்பின் பின்னேயுள்ள மோசடி.

உண்மைகள் மருந்தைப் போலவே கசப்பாகவே இருக்கின்றன. உலகின் பெரும் கோடீசுவரர்கள் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இடம் பெறும் அளவுக்கு, இந்தியா "பணக்கார வல்லரசு' நாடாக வளர்ந்து வருவதாக ஆட்சியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால், இந்நாட்டில்தான் ஏறத்தாழ 65 கோடி மக்கள் அத்தியாவசிய மருந்துகளைக் கூட வாங்குவதற்கான வாய்ப்பு வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும் மருந்து உற்பத்தி ஆலைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ள போதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (றுவுழு) தனது 2004ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடுகிறது.
இந்த அவல நிலைக்குக் காரணம், தனியார்மயம். உலகின் தனியார்மயமாக்கப்பட்ட மருத்துவ சுகாதாரத் துறையில், ஏழை நாடான இந்தியா முன்னணியில் உள்ளது. மணற்கொள்ளை, நிலக் கொள்ளை, கடற்கொள்ளை முதலானவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் இந்தியாவில் மருந்துக் கொள்ளை கேள்விமுறையின்றித் தொடர்கிறது.
இந்தியாவில் ஓராண்டுக்கு ஏறத்தாழ 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்து மாத்திரை வியாபாரம் நடக்கிறது. இதில் பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் ஏறத்தாழ 25 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் செய்கின்றன. இக்கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. உதாரணமாக, அவந்திஸ் நிறுவனத்தின் லெவோப்ளாசசின் என்னும் ஆன்டிபயோட்டிக் மாத்திரையின் விலை ரூ.95. அதே மாத்திரையை, அதே தரத்துடன் உள்நாட்டு சில்பா மருந்து நிறுவனம் ரூ.6.80க்கு விற்கிறது. இந்திய அரசோ இப்படி அநியாய விலை விற்கும் அன்னிய நிறுவன மருந்துக்குத் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையைப் பின்பற்றி வந்த அரசு, தனியார்மய தாராளமயமாக்கலைத் தொடர்ந்து படிப்படியாக இக்கொள்கையை நீர்த்துப் போகச் செய்து விட்டது. 1977ஆம் ஆண்டில் 347 அத்தியாவசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. 1995இல் இது வெறும் 74 மருந்துகள் என்று சுருங்கிப் போனது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக புதிதாக எந்த மருந்தும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை. மருந்துக் கம்பெனிகள் தாறுமாறாக விலையேற்றி கேள்விமுறையின்றி கொள்ளையடித்தன.

முந்தைய பா.ஜ.க. அரசு 2002ஆம் ஆண்டில் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த இந்த 74 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 30ஆகக் குறைக்கக் கிளம்பியது. கர்நாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி, இதை நடைமுறைப்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இத்தீர்ப்பின்படி, அரசு உருவாக்கிய மருத்துவ நிபுணர்கள் குழு, தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 2003ஆம் ஆண்டில் தயாரித்துக் கொடுத்தது. இதில் 354 வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இருப்பினும், இப்பட்டியலின்படி விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை பா.ஜ.க. அரசு அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முன்வராமல் கிடப்பில் போட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, ஈராண்டு காலமாக இழுத்தடித்து விட்டு, கடந்த ஜூலையில் வழக்கத்துக்கு மாறாக தவணை முறையில் நகல் மருந்துக் கொள்கையை வெளியிட்டது. மைய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இக்கொள்கைப்படி விலைக் கட்டுப்பாடு பட்டியலில் 354 அத்தியாவசிய மருந்துகளைக் குறிப்பிட்டு அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஆனால், அவரது அமைச்சரவையே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விலைக் கட்டுப்பாட்டிலுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலைப் பெருமளவுக்குக் குறைக்கக் கோரியது. இதனைப் பரிசீலித்து விலைக் கட்டுப்பாடு பட்டியலைத் தயாரிக்க 14 பேர் கொண்ட கூட்டுக் கமிட்டியை மைய அரசு நிறுவியது. இந்தக் கமிட்டியிலுள்ள 14 பேரில் 11 பேர் ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள். மீதி 3 பேர் மட்டுமே அரசாங்கத்தின் பிரதிநிதிகள். ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள இந்தக் கமிட்டி மக்கள் நலனை முன்வைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை கொண்டுவரும் என்று முட்டாள்கள்கூட நம்ப மாட்டார்கள்.

மைய அரசு ஜூலையில் வெளியிட்ட நகல் மருந்துக் கொள்கை அறிக்கையானது, மருந்துக் கம்பெனிகள் உற்பத்தி செலவுக்கு மேல் 200மூ வரை இலாபம் வைத்து விற்கலாம் என்று விலை நிர்ணய முறைக்கு ஆலோசனை கூறுகிறது. இதுவே மிக அநியாயமான பகற்கொள்ளைதான். ஆனால், ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்த விலை நிர்ணய முறையைக்கூட ஏற்க மறுத்துவிட்டன. இப்படிச் செய்தால் இலாபம் குறைந்து ஆலையை மூட நேரிடும்; ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும்; புதிய மருந்துக்கான ஆராய்ச்சியும் வளர்ச்சியும் குறைந்துவிடும்; நாட்டுக்கு மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. இருப்பினும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல், பொதுவில் 5 முதல் 10 சதவீதம் வரை விலையைக் குறைப்பதாக இம்மருந்துக் கம்பெனிகள் அறிவித்தன. இதன்படியே 886 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துவிட்டதாகவும், மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மைய அமைச்சர் அறிவித்துள்ளார்.

விலைக் கட்டுப்பாட்டுக்குள் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததாலும், மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதாலும் சாதாரண நோய்களுக்கே கூட சாமானிய மக்கள் நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. விலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய அத்தியாவசிய மருந்துகள் என அரசு முன்வைத்துள்ள நகல் கொள்கை அறிக்கையில் கூட, காசநோய், மலேரியா, ரத்தசோகை, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு முதலான நோய்களுக்கான மருந்துகளே இல்லை. வாந்தி பேதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அவசியமான உப்பு சர்க்கரை கரைசல் பொடி கூட விலைக் கட்டுப்பாடு பட்டியலில் இல்லை.
இதுதவிர இன்னும் ஏராளமான உயிர் காக்கும் மருந்துகள் இந்தப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் அநியாய விலை விற்கும் மருந்துகளை வாங்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள். அல்லது மருந்துக்காக பெருமளவில் செலவிட்டு கடனாளியாகி நிற்கிறார்கள். சாதாரண நோய்க்காக, ஒவ்வொரு புறநோயாளியும் தனது மொத்த மருத்துவ செலவில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை மருந்துமாத்திரைகளுக்காகச் செலவிடுவதாக, இந்திய அரசின் 55வது சுற்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கையே குறிப்பிடுகிறது. 1995இல் இரத்த சோகைக்கான மருந்தின் விலை 177 சதவீதம் உயர்ந்தது; காசநோய் தடுப்புக்கான மருந்தின் விலை 90 சதவீதம் உயர்ந்தது. இம்மருந்துகளும் இன்னும் பலவும் மேலும் விலை உயர்ந்துள்ளனவே தவிர, இன்றுவரை குறையவில்லை. உதாரணமாக சிட்ரிஜைன், நிமிசூலைடு, ஓமெப்ராஜோல் ஆகிய பரவலாக விற்கப்படும் மருந்துகளின் மூலம் 1000 சதவீதம் அளவுக்கு இலாபமீட்டி மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடித்துள்ளதாக இரசாயனத் துறை அமைச்சகமே கூறுகிறது.

இந்தப் பகற்கொள்ளை போதாதென்று, ""பொதுவான'' மருந்துகளை விலைக் கட்டுப்பாடு பட்டியலிலிருந்து விலக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்திய அரசை நிர்பந்தித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் புஷ் இந்தியாவுக்கு வந்தபோது, பிரதமரிடம் இதுபற்றி வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தை (ஈஇஅ)த் திருத்தியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இச்சட்டப்படி, ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருமுன் அதன் பாதுகாப்புத் தன்மை, நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், தரம் ஆகியவற்றுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையரிடம் (ஈஇஎஐ) அனுமதியும் சான்றிதழும் பெறவேண்டும். இந்த விதியை நீக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன.

மேலும், ""பொதுவான'' மருந்துகள் என்ற வகையின் கீழ் ஒரு புதிய மருந்து தயாரித்தால், அப்பொது மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு புதிய மருந்தைத் தயாரித்துள்ள நிறுவனம் கப்பம் கட்ட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, ""பாரசிட்டமால்'' என்ற காய்ச்சலுக்கான பொதுவான மாத்திரையை, ஒரு உள்நாட்டு மருந்து நிறுவனம் புதிய கலவையுடன் புதிய பெயரில் விற்க முனைந்தால், அந்த நிறுவனம், பொது மருந்தைக் கண்டுபிடித்த ஏகாதிபத்திய நிறுவனத்துக்குக் கப்பம் கட்டவேண்டும் என்கின்றன. இதற்கேற்ப மருந்துப் பொருட்கள் சட்டம் திருத்தப்பட்டால், மருந்து விலைகள் தாறுமாறாக உயரும்; பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கமும் கொள்ளையும் கேள்விமுறையின்றித் தொடரும்; உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் மலிவான விலையில் ""பொதுவான'' மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கிப் போகும். சாமானிய மக்கள் சாதாரண தலைவலி காய்ச்சலுக்கான ""பொதுவான'' மருந்துகளைக் கூட வாங்க முடியாதபடி அவற்றின் விலைகள் எட்டாத உயரத்தில் இருக்கும்.

ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே கம்பெனிகள் சட்டம், ஏகபோக தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டம், விதைச் சட்டம் எனப் பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்து விட்டனர். எஞ்சியிருக்கும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தையும் மாற்றியமைக்க இப்போது முயற்சித்து வருகின்றனர். ஏற்கெனவே மருந்துகளின் விலையேற்றக் கொள்ளையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது, மிகக் கொடிய மறுகாலனியத் தாக்குதலை ஏவி விடுவதற்கான ஏற்பாடுகளை வேகவேகமாக காங்கிரசு ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பன்னாட்டு ஏகபோக மருந்துக் கொள்ளையர்களின் ராஜ்ஜியத்தை நாம் அனுமதிப்பதா? அல்லது இக்கொள்ளைக் கூட்டத்துக்கு கதவை அகலத் திறந்துவிடும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவதா? நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் கொண்ட ஒவ்வொரு வரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

குமார்

Tuesday, July 10, 2007

வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள்

விவசாயத்தில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க முன் வராத அரசு, வங்கிக் கடனைக் கட்டத் தவறியதற்காக விவசாயிகளைக் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் மட்டும், கடந்த நான்கே மாதங்களில் 25 கரும்பு விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர்.

தனியார்மயம்தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளில், நாடெங்கிலும் ஏறத்தாழ 1 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்ட கசப்பான உண்மையை, அரசாங்கமே இப்பொழுது வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது.

எனினும், விவசாயிகளின் இந்தத் தற்கொலைச் சாவுகள் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் எவ்விதமான கலக்கத்தையோ, பதற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்குத் தரப்படும் அரசியல் முக்கியத்துவம், சந்தை பயங்கரவாதத் தாக்குதலால் நடந்து வரும் இத்தற்கொலைச் சாவுகளுக்குத் தரப்படுவதில்லை. ""அவன் விதி, செத்தான்'' என இலகுவாக, வெறும் புள்ளிவிவரமாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது.""இந்தத் தற்கொலைச் சாவுகள் இறந்து போனவர்களைப் பற்றி அல்ல; அந்த இழப்பைச் சகித்துக் கொண்டு வாழ்க்கையோடு போராடும் உயிருள்ள விவசாயிகளைப் பற்றித்தான் பேசுகிறது'' என்கிறார் ஏழை விவசாயியான கமலாபாய் குதே.

இவர் வசித்து வரும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் 6,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுள், கமலா பாயின் கணவர் பலசுராமும் ஒருவர்.பலசுராமின் தற்கொலைக்கு நட்டஈடாக அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்ச ரூபாயை, கந்துவட்டிக்காரர்கள் பறித்துக் கொண்ட பிறகும், கமலாபாய்க்கு ரூ. 50,000/ கடன் பாக்கி இருந்தது. கடந்த ஆண்டு, அவர் தனது ஆறு ஏக்கர் நிலத்தில், மகாராஷ்டிர மாநில அரசு விளம்பரப்படுத்திய பி.டி. பருத்தியினைப் பயிர் செய்தார். ஆனால், விளைந்ததோ வெறும் 2 குவிண்டால்தான். இப்பொழுது கடன் ஒன்றுக்கு இரண்டாகி விட்டது. ஆறு ஏக்கர் நிலம் இருந்த போதிலும், கமலாபாய் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.

பணப் புழக்கம் அதிகம் இருக்கும் நாட்டில், 12 மணி நேரம் வேலை செய்யும் கமலாபாய்க்குக் கிடைக்கும் கூலி, 25 ரூபாய் பெறுமான சோளம்தான்.ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் வாழும் பந்தி இலட்சுமம்மாவின் கணவர் பந்தி நரசிம்மலு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பொழுது, இலட்சுமம்மாவிற்கு ஆறுதல் சொல்ல ஓட்டுக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவந்தனர். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""இலட்சுமம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்க வேலை அளிக்கப்படும்'' என வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால், ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் இலட்சுமம்மாவிற்கு, கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் கூட வேலை கிடைக்கவில்லை.இலட்சுமம்மா, தனது கிராமத்தில் இருந்து 18 கி.மீ. அப்பால் உள்ள நகரத்தில் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இதற்கு அவருக்கு கிடைக்கும் கூலி 60 ரூபாய்தான். இதில் 10 ரூபாய் போக்குவரத்து செலவுக்குப் போய்விடும். அவரது மகன் கோபால், உள்ளூரில் உள்ள வங்கியில் 1,500 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குநராக வேலை பார்க்கிறார். மூன்று பேர் கொண்ட இலட்சுமம்மாவின் குடும்பம், மாதந்தோறும் கிடைக்கும் 3,000 ரூபாய் கூலியில், குடும்பச் செலவுகளை மட்டும் ஈடு கட்டாமல், விவசாயத்தையும் நடத்த முயன்று வருகிறது. "

"விளைச்சல் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் போதும், நாங்கள் பிழைத்துக் கொள்வோம்'' என நம்பிக்கையோடு சொல்கிறார், இலட்சுமம்மா.விவசாயம் சூதாட்டமாக மாறிப் போன பிறகும், அத்தொழில் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கும் இலட்சுமம்மா போன்ற விவசாயிகளுக்கு அரசு பெரிதாக உதவி எதுவும் செய்வதில்லை. மாறாக, ""வங்கிக் கடனைத் திருப்பித் தருகிறாயா, இல்லை கம்பி எண்ணப் போகிறாயா?'' என மிரட்டத் தொடங்கியிருக்கிறது.ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தைச் சேர்ந்த திராட்சை விவசாயி நல்லப்ப ரெட்டி, சமீபத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். வங்கிக் கடனை உரிய காலக் கெடுவுக்குள் அடைக்கத் தவறியதுதான் இவர் செய்த குற்றம்.நல்லப்ப ரெட்டி விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடன் 24,000/ ரூபாய் தான்.

கந்துவட்டிக்காரர்களிடம் 34,000/ ரூபாய் கடன் வாங்கி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முயன்றார், அவர். ஆனால், வங்கியோ, வட்டியோடு சேர்த்து ஒரு இலட்ச ரூபாய் கட்டத் தவறியதற்காக அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டது.கதிரி மண்டலைச் சேர்ந்த கெங்கி ரெட்டி, ""கடனுக்கு ஈடாக தனது ஆறு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு'' வங்கி அதிகாரிகளிடம் மன்றாடினார். ஆனால், அதிகாரிகளோ, ""பணம் இல்லையென்றால், ஜெயில்'' எனக் கறாராகச் சொல்லி, அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை வாங்கித் தந்துவிட்டனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பாசன வசதிமிக்க தனது ஆறு ஏக்கர் நிலத்தை விற்று வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தினார், கெங்கி ரெட்டி.

மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் (ஒருவர் தாழ்த்தப்பட்டவர்; மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்) இந்திய அரசு வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக, சாதி வேறுபாடு பார்க்காமல், அதிகாரிகளால் சிறைக்குள் தள்ளப்பட்டனர். உலக வங்கிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை, காங்கிரசு ஆட்சியில் தீவிரம் அடைந்திருப்பதாகக் குமுறுகிறார்கள், ஆந்திர விவசாயிகள்.

விவசாயத்தில் இருந்து போதிய வருமானம் கிடைப்பதில்லை என்பது உண்மை என்றாலும், சட்டமும், நீதிமன்றமும் தங்களின் கடமையைச் செய்வதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் நியாயவான்களைப் போலப் பேசுகிறார்கள். ஆனால், இந்தச் சட்டமும், நீதிமன்றமும் வங்கிக் கடனை வாங்கி ஏப்பம் விட்ட எத்தனை தொழில் அதிபர்கள் மீது பாய்ந்திருக்கிறது? ஆந்திராவைச் சேர்ந்த 200 முக்கிய புள்ளிகள் வங்கிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் கடனை வாங்கி ஏப்பம் விட்டிருப்பதை ஆந்திர அரசே அம்பலப்படுத்திய பிறகும், அவர்களுள் ஒருவர்கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை."

"அரசாங்கம், விவசாயத்தை முதலாளிகளிடம் ஒப்படைக்க விரும்புகிறது'' என்கிறார், சாய்நாத் ரெட்டி என்கிற விவசாயி. இதற்காகத்தான், ஒப்பந்த விவசாயம், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்; ஏற்றுமதிக்காக பழச் சாகுபடி செய்தால் 70 சதவீத மானியம்; மல்பெரி சாகுபடிக்கு மானியம்; ரிலையன்ஸ், வால் மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் குத்தகைதாரர்களாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.

ஏழை நடுத்தர விவசாயிகளை தரகு முதலாளிகளின் பிடியில் சிக்க வைக்கும் இக்கவர்ச்சித் திட்டங்களுக்கு மயங்காமல், தன் சொந்தக் காலில் நின்று விவசாயம் செய்யத் துணிந்தால், அவர்களை அச்சுறுத்துவதற்காகவே, ""கடன் வசூல், கைது, சிறைத் தண்டனை'' என்ற குண்டாந்தடிகளைத் தூக்கிக் கொண்டு திரிகிறது, ஆளும் வர்க்கம்.

..

இரணியன்

Monday, July 9, 2007

"சோவியத் நாட்டைச் சுற்றிப் பார்ப்போம்"

நி.மிஹாய்லவ் அவர்கள் எழுதிய "சோவியத் நாட்டைச் சுற்றிப் பார்ப்போம்" என்ற அனேக புகைப்படங்களுடன் கூடிய நூலில் இருந்து சில புகைப்படங்களை எடுத்து வெளியீட்டு உள்ளோம்.
.....
கிழே க்ளிக் செய்து பார்க்கவும்
************************************
..
..
..
..
..
..
..
..
..
..]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது