Showing posts with label தனியார்மயம். Show all posts
Showing posts with label தனியார்மயம். Show all posts

Sunday, August 26, 2007

கரும்பு கசக்கிறது

அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும்கரும்பு விவசாயிகளின் அவலக் கதை

திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்து நின்ற கரும்புகளைத் தன் கையாலேயே தீ வைத்துக் கொளுத்தி விட்டார். ""இன்னும் சில ஏக்கர்ல கரும்பு மிச்சமிருக்கு; அதையும் கொளுத்திட்டு, எல்லாம் வீணாப் போயிடுச்சுன்னு மனதைத் தேத்திக்க வேண்டியதுதான்'' என விரக்தியோடு சொல்கிறார், அவர்.

ஜெய்சங்ரைப் போல, இந்தப் பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் கரும்புப் பயிரைத் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர். இந்த விவசாயிகள் கிறுக்குப் பிடித்துப் போய் இந்தச் செயலைச் செய்யவில்லை. தங்களுக்குக் கிறுக்குப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, கரும்பைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்ட அருணாச்சலா சர்க்கரை ஆலை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென சமீபத்தில் மூடப்பட்டது. நட்டக்கணக்குக் காட்டி, கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கியையும் தராமல் ஓடிவிட்டது ஆலை நிர்வாகம். மேலும் ஆலை திடீரென மூடப்பட்டதால், இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 இலட்சம் டன் கரும்பை என்ன செய்வது என திகைத்துப் போன கரும்பு விவசாயிகள், இப்பிரச்சினையைத் தீர்க்கக் கோரி போராடத் தொடங்கினர். விளைந்து நிற்கும் கரும்பு முழுவதும், அண்டை மாவட்டங்களில் உள்ள கரும்பு ஆலைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற சமரசத் தீர்வை முன் வைத்தது, தமிழக அரசு.

திருவண்ணாமலை மாவட்ட கரும்பை வாங்கிக் கொள்ளும்படி மூன்று முறை உத்தரவு போட்டதாகக் கூறுகிறது, தமிழக அரசு. ஆனால், அண்டை மாவட்ட சர்க்கரை ஆலைகள் இந்தக் காகித உத்தரவுக்கு எந்தவிதமான மதிப்பும் தரவில்லை. கரும்பை வெட்டுவதற்கான உத்தரவை வழங்காமல் இழுத்தடித்து, விவசாயிகளைப் பந்தாடின. பத்துபன்னிரெண்டு மாதங்களில் வெட்ட வேண்டிய கரும்பை 18 மாதங்களாகியும் வெட்டவில்லை என்றால், விளைந்த கரும்பு விறகுக் கட்டையாகத்தான் நிற்கும். இந்தக் கொடுமையைக் காணச் சகிக்க முடியாமல்தான், விவசாயிகள் நட்ட கையாலேயே தங்களின் கரும்பைக் கொளுத்தி விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளும் இதேபோன்ற நெருக்கடிக்குள் — பருவம் தாண்டியும் கரும்பை வெட்டுவதற்காக உத்தரவு கிடைக்காத அவல நிலைக்குள் — சிக்கிக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் பருத்தி விவசாயிகளைப் போல, தமிழகத்தின் கரும்பு விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கும் வண்ணம் கரும்பு விவசாயம் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.

உரிய பருவத்திற்குள் கரும்பை வெட்டவில்லையென்றால், அதன் நீர்ச்சத்து வற்றிப் போய் பிழிதிறன் குறைந்து போகும். பிறகு, பிழிதிறன் குறைவையே காரணமாகக் காட்டி, கரும்பை அடிமாட்டு விலைக்குக் கேட்கும் நாணயமற்ற வர்த்தக நடைமுறையைத் தனியார் ஆலைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
""கரும்பின் பிழிதிறன் குறையும் பொழுது, ஒரு ஏக்கரில் 50 டன் கிடைக்க வேண்டிய மகசூல், 30 டன்னாகக் குறைந்து விடும். இந்தக் கரும்பை, லாரி வாடகை, ஆள் கூலி, புரோக்கர் கமிசன் எல்லாம் கொடுத்து ஆலையில் இறக்கிப் போட்ட பிறகு கிடைக்கும் வருமானம், கரும்புக்கு உரம்போட்ட விலையைக் கூடச் சரிகட்டாது'' என்கிறார்கள் விவசாயிகள்.

மைய அரசு இந்த ஆண்டு 1 டன் கரும்புக்கு ரூ.802.50ஐ ஆதார விலையாக நிர்ணயித்தது. தமிழக அரசு, தனது பங்கையும் சேர்ந்து ஆதார விலையை ரூ.1,025/ என நிர்ணயித்தது. ஆனால், தனியாருக்குச் சொந்தமான தரணி சர்க்கரை ஆலை, ""1 டன் கரும்பை ரூ. 600/க்குத் தருகிறோம் என எழுதிக் கொடுங்கள்; இல்லையென்றால் கரும்பை வெட்ட அனுமதி கொடுக்க மாட்டோம்'' என விவசாயிகளை மிரட்டி வருகிறது.

கரும்பு விவசாயிகள் இந்த மிரட்டல் பற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தபொழுது, அவர் விவசாயிகள் தரணி ஆலையைப் பற்றித் தவறாகச் சொல்வதாகக் கூறி, ஆலை நிர்வாகத்துக்காகப் பரிந்து பேசியிருக்கிறார். மற்றொரு தனியார் ஆலையான எஸ்.வி.மில்ஸ் பற்றி விவசாயிகள் பேசத் தொடங்கியவுடனேயே, ""அவர்கள் அரசாங்கம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்; என்ன செய்ய முடியும்?'' எனக் கையை விரித்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, 1,400 ஏக்கரில் விளைந்து நிற்கும் பதிவு செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள மறுப்பதாகவும்; ஆரூரான் குழுமத்தைச் சேர்ந்த அம்பிகா சுகர் மில்ஸ், தனது நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கரும்பை வாங்காமல், வெளியில் இருந்து விலை குறைவாகக் கரும்பை வாங்குவதாகவும் விவசாயிகள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் சர்க்கரையின் விலை இறங்கிவிட்டதால்தான், 1 டன் கரும்பை ரூ.400/க்கும், ரூ.600க்கும் கேட்பதாகத் தனியார் ஆலைகள், இந்த அடிமாட்டு விலையை நியாயப்படுத்துகின்றன. சர்வதேசச் சந்தையில் சர்க்கரை விலை உச்சத்தில் இருந்தபொழுது இலாபத்தினை அள்ளிக் கொண்ட தனியார் முதலாளிகள், சர்க்கரை விலை குறைவால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் விவசாயிகளின் தலையில் சுமத்தி வருகிறார்கள்.

தனியார் முதலாளிகள் மட்டுமின்றி அரசும் தன் பங்குக்கு கரும்பு விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வருகிறது. கரும்பின் சர்க்கரை கட்டுமானம் 8.5 சதவீதம் என இருந்து வந்ததை, விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே 9 சதவீதமாக மைய அரசு உயர்த்தி விட்டது. இந்தக் கட்டுமானம் இல்லையென்றால், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது. ""கரும்பு பருவம் தவறி வெட்டப்படுவதாலும், கட்டுமானம் உயர்த்தப்பட்டிருப்பதாலும், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு 200506 மற்றும் 200607 ஆண்டுகளில் 92 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்'' என இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழகப் பொதுச்செயலர் ஆர்.விருத்தகிரி குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் 200203, 200304 ஆண்டுகளில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 34.20 கோடி ரூபாய் தனியார் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளது. வருவாய் மீட்பு சட்டப்படி இந்நிலுவைத் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுத்தர தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கரும்பை வெட்டி அனுப்பிய 14 நாட்களுக்குள் ஆலைகள் பணம் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிப்பதையும்; பதிவு செய்யாத கரும்பு விளைச்சலைக் காட்டி, ஆலைகளில் பதிவு செய்யப்பட்ட கரும்பின் விலையைக் குறைத்துக் கேட்கும் தனியார் முதலாளிகளின் வர்த்தக பேர அடாவடித்தனத்தையும் தமிழக அரசு கண்டு கொள்வதேயில்லை.

தனியார் ஆலைகளிடம் பதிவு செய்து கொண்டுள்ள கரும்பு 18 மாதங்களுக்கு மேலாகியும் வெட்டப்படாத நிலையில், ""இக் கரும்பினை நாட்டுச் சர்க்கரைத் தயாரிக்கப் பயன்படுத்திக் கொண்டு, அரசே நாட்டுச் சர்க்கரையை கிலோ ரூ. 15/ என்ற விலையில் ரேசன் கடைகளின் மூலம் விநியோகிக்க வேண்டும்'' என விவசாயிகள் கோருகிறார்கள். தமிழக அரசு இக்கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, வெட்டாத கரும்பை நாட்டுச் சர்க்கரைத் தயாரிப்பதற்கு விற்றால், ""கள்ளச் சாராயம் காய்ச்சவா நாட்டுச் சர்க்கரை தயாரிக்கிறாய்?'' என போலீசு மிரட்டி மாமூல் பறிப்பதாகக் குமுறுகிறார்கள் விவசாயிகள்.

""உணவுப் பயிர் விவசாயத்துக்குப் பதிலாக, பணப்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டால், விவசாயிகள் குபேரனாகி விடலாம்'' என்பது போல வேளாண் நிபுணர்களும், அதிகாரிகளும் விவசாயிகள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், தமிழகக் கரும்பு விவசாயிகளின் பரிதாபகரமான நிலையைப் பார்த்தால் இப்படி மாறுவதென்பது, எரிகிற கொள்ளியில் இருந்து தப்பித்து, கொதிக்கிற எண்ணெய் சட்டிக்குள் விழுந்த கதையாகி விடும் என்றுதான் தெரிகிறது.

தனியார் முதலாளிகளிடமும், கூட்டுறவு ஆலைகளிடமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கரும்பு விவசாயம் நடப்பதைப் போல, எல்லா விவசாய விளைபொருட்களையும் ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்யும் ஒப்பந்த விவசாய முறையை அமல்படுத்துவதற்கும்; ரிலையன்ஸின் அம்பானி தொடங்கி அமெரிக்காவின் வால்மார்ட் வரை, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் இந்த ஒப்பந்த விவசாயத்தில் குதிப்பதற்கும் தயாராகி வருகிறார்கள். 2010க்குள் 10 சதவீத விவசாயிகளை ஒப்பந்த விவசாயிகளாக மாற்றுவது என மைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒப்பந்த விவசாயத்தால் விவசாயி தொடங்கி நுகர்வோர் வரை அனைவருக்கும் இலாபம் கிடைக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் தேனொழுகக் கூறுகிறார்கள். ஆனால், தற்பொழுதுள்ள முறைக்கு மாற்றாக ஒப்பந்த விவசாயம் வந்தால், ""யார் கொழுப்பார்கள்? யார் இளைப்பார்கள்?'' என்பதற்கு கரும்பு விவசாயமே சாட்சியமாக உள்ளது.

· சுப்பு

Saturday, August 25, 2007

நகரத்தின் 'அழகு' ஏழைகளுக்குப் பேரழிவு!

தில்லி நகரத்தின் அழகையும், சுற்றுப்புறச் சூழலையும் மெருகூட்டும் பொருட்டு, இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற திட்டத்தின்படி, அந்நகரின் வர்த்தக மையமான சாந்தினி சௌக் பகுதியில் ரிக்ஷா மற்றும் தள்ளுவண்டிகள் இயக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நகரின் தெருவோரச் சிற்றுண்டி விடுதிகள் சுகாதார கேட்டினைப் பரப்புவதாகக் ""கண்டுபிடித்து'' அவற்றையும் மூடிவிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லியில் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ""சூப்பர் ஸ்டோர்''களைத் திறந்து நடத்துவதற்காக, ஆயிரக்கணக்கான சிறுநடுத்தர கடைகளை இழுத்து மூடிய பிறகு தொடுக்கப்பட்டுள்ள அடுத்த தாக்குதல் இது.


மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறச் சேரியான தாராவியை 9,300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. இதனால் தாராவியில் வசித்துவரும் 6 இலட்சத்துக்கும் அதிகமான ஏழைநடுத்தர மக்கள்; அங்கு இயங்கிவரும் 5,000 சிறு தொழில்கள்; அத்தொழில்களை நம்பியிருக்கும் 50,000 தொழிலாளர்கள் வேரோடு பிடுங்கியெறியப்படும் அபாயம் எழுந்துள்ளது.


இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும், அற்ப உடைமைகளும் நிர்மூலமாக்கப்படுவதை, அழகு என ரசிப்பது வக்கிரமானதில்லையா? பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் இருக்கிறது என்பது நிரூபணமான பிறகும் ""கோக்''கைத் தடை செய்ய மறுக்கும் நீதிமன்றம், மக்களின் தெருவோர உணவகங்களைத் தடை செய்வது கேலிக் கூத்தானதில்லையா?


சேவைத் தொழிலின் வளர்ச்சி கூலித் தொழிலாளர்களைத் தேவையற்றவர்களாக்கி, நகரங்களில் இருந்து துரத்தியடிக்கிறது. மனுதர்மம் கிராமப்புறங்களை ஊர் என்றும், சேரி என்றும் பிரித்தது என்றால், தனியார்மயம் நகர்ப்புறங்களைப் பணக்காரர்களின் அக்ரஹாரமாக்கி வருகிறது. இந்த ""அழகை'' ஆளும் கும்பல் வளர்ச்சி என்கிறது; நாம், உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும் போர் என்கிறோம்.

Monday, July 23, 2007

சில அடிமைகளால் துதிபாடப்படும் தனியார்மயத்தின் யோக்கியதை !

இதையே தமிழ்நாட்டில் எப்படி நடைமுறைப்படுத்துறாங்க பாருங்க....


காசு இருந்தா சொகுசு பஸ்.... காசு இல்லைன்னா போலீஸ் அடி !

இன்றைக்கு நாட்டை விற்கிறதை தீவிரமாக செய்துக்கிட்டு இருக்கிறார்கள். அதையே வளர்ச்சி , தவிர்க்க முடியாது (போலிகள் சாரி துரோகிகள்) என்கிற பேரில் நாடு முழுக்க முழுவேகத்தோடு இப்ப இந்த ஓட்டுக்கட்சிக்காரங்க அன்றாடம் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

அதுல ஒன்னுதான் பேருந்து விசயத்துல இன்றைய அரசாங்கம் செய்து உள்ளது. முன்பு வெள்ளை கலர், மஞ்சள் கலர் என்றும் பச்சை கலர் போர்டு என்றும் பேருந்து வீட்டார்கள். பின்பு M சர்வீஸ் என்றும் பேருந்து விட்டார்கள்.

இப்ப கலைஞர் அரசாங்கம் ,ஏற்கனவே இருந்த மூனு கலர் பேருந்துல பாதி வண்டி ஒட்ட ஒடசலா இயக்காம நின்னுக்கிறுந்தப்ப புதிசா வண்டிகளை வாங்கி ஆரங்சு கலர் போர்டு, நீலக்கலரு போர்டு, ஏர்பஸ் என விட்டு இருக்கிறார்கள்.

இப்படி குறைந்த கட்டணமே ஐந்து ரூபாய் என பேருந்து விட்டுட்டு, யாராவது இதை எதிர்த்து போராட்டம் , ஆர்ப்பாட்டம் என இறங்குனா அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து பயமுறுத்துகிறார்கள்.

இப்படி உள்ளுர் மாநகராட்சி பேருந்து வண்டில மட்டும் இல்லாமல், வெளியூர் பேருந்துலேயும் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என்கிற வண்டிதான் இப்ப எல்லா வழித்தடங்கலிலும் அதிகமாக போகிறது.

சரி நல்லது தானுங்க நாடு முன்னேறுது, தனியாருக்கு நிகராக அரசு சொகுசு பேருந்து விடுவது, காசு இருக்கிரவங்க எங்க கஸ்டப்படனும் என்று சிலர் யோசிக்கலாம்.

ஆனா நாட்ல ஆக பெரும்பான்மையான மக்களை வாழவழியற்றவர்களாக ஆக்கிட்டு, ஒரு சிறு கூட்டம் வசதி வாய்ப்பாக இருக்கிறதை காண்பித்து இதை செய்கிறார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் சம்பளத்துல சென்னையில வாழ்க்கையை நடத்துகின்ற தொழிலாளிகள்,படிச்சுட்டு வேலைக் கிடைக்காம வேலை தேடுறதே வேலையாக வைத்து உள்ள இளைஞர்கள் என பெரும்பான்மை மக்களை ஆக்கிட்டு இதை பண்ணுகிறார்கள்.

காசு இல்லாதவனுக்கு இங்கு எதுவும் சொந்தம் இல்லை. வாழ உரிமையும் இல்லை என்கிற உலகமயமாக்கலோட ஒரு பகுதிதான் இந்த வர்க்கத்துக்கு ஏற்ற மாதிரி பேருந்து விட்டது.இன்றைக்கு வெளை கலர் போர்டுல மக்கள் அதிகம் பயணம் செய்றதை பார்க்கிறோம். ஏன்னா அவர்ங்களால பத்து ரூபாய் கட்டணம் கொடுக்க முடியாததுதான்.

இப்படி பெரும்பான்மை மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் உழன்று கொண்டு இருக்குமாறு வாழ்க்கையை ஆக்கிட்டு, இங்க ஒரு சிறு கூட்டமான ஐ.டி, மற்ற மோசடி,பிழைப்புவாத கும்பல் சொகுசாக வாழ்க்கை வாழ இன்று ஏர் பஸ் விட்டு இருக்கிறார்கள்.

வெள்ளை கலர் போர்டு பேருந்துல மக்களை அனுப்பிட்டு, பின்னாடியே போலீசுக்காரங்களை அனுப்பி அடிக்கிறார்கள்.
..
ஆனால் அதிகமான மக்கள் வெள்ளை கலர்போர்டு பேருந்துல போறதுக்கும், படிக்கட்டில் பயணம் செய்யிறதுக்கும் யார் காரணம் ? மக்களா என்றால் இல்லை, இவர்களை இந்த நிலைக்கு தள்ளிய அரசு தான் காரணமாக இருக்கிறது.

இந்த உண்மைகளை எந்த பத்திரிக்கையும் எழுதுறது இல்ல. இவங்களோட செய்தி என்னான்னா "படிக்கட்டுல பயணம் செய்கின்றவர்களை போலீஸ்காரங்க அடிக்கிறாங்க" என்பது தான்.

ஆனால் உண்மையை பரிசீலித்தால்தான் தெரிஞ்சுக்க முடியும், இந்த " மக்கள் விரோத அரசின் யோக்கியதையும்", "நாலாவது தூணோட யோக்கியதையும்".

நன்றி கோபா

தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்! தொடரும் பிரச்சார இயக்கம்


""தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்'கை அடித்து விரட்டுவோம்!'' என்ற முழக்கத்தின் அடிப்படையில் மறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான ""கோக்''கிற்கு எதிராகவும் தமிழகமெங்கும் ம.க.இ.க.; வி.வி.மு.; பு.மா.இ.மு.; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த செப்.12ஆம் தேதியன்று நெல்லையில் மிகப்பெரிய பேரணி ஆர்ப்பாட்டத்தையும், "கோக்' ஆலை அமைந்துள்ள நெல்லை கங்கை கொண்டானில் மறியல் போராட்டத்தையும் நடத்தின.

தாமிரவருணியை நம்பியிருக்கும் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் வேளையில் தாமிரவருணியை உறிஞ்ச கோக்கிற்கு தாராள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் ""சிப்காட்'' நிறுவனம் கோக்கிற்கு தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் 1 லிட்டர் கோக் தயாரிக்கும் போது, நிலத்தடியில் உள்ள 48 லிட்டர் நல்ல நீர் கழிவு நீராக மாறும். இதனால்தான் கேரளாவில் கோக் ஆலை இயங்கிய பிளாச்சிமடா கிராமம் சுடுகாடாகிப் போய்விட்டது. கோக் ஆலை அமையவுள்ள கங்கை கொண்டான் பஞ்சாயத்தில் அடங்கியுள்ள மானூர் ஊராட்சி மன்றத் தலைவர் கம்சன், கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய பிறகு மர்மமான முறையில் இறந்து போயுள்ளார். கோக்கை அனுமதித்தால் தாமிரவருணி ஆறும் இந்த மண்ணும்கூட மர்மமான முறையில் மரணமடையும்.

இந்த உண்மைகளை விளக்கியும், தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்ட அணிதிரள அறைகூவியும் புரட்சிகர அமைப்புகள் நெல்லைதூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை ஏறத்தாழ 20 தோழர்கள் தாமிரவருணி கரையோரக் கிராமங்களில் அன்றாடம் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தெருமுனைக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாக இப்பிரச்சாரத்தை மேற்கொண்ட தோழர்கள், கிராம மக்களிடம் கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் விண்ணப்பத்தில் கையொப்பமும் பெற்றனர்.

புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதைக் கண்டு பீதியடைந்த நெல்லை மாவட்டப் போலீசு, வெளிப்படையாகவே கோக்கின் அடியாளாகச் செயல்பட்டது. மாவட்டம் முழுவதும் 302ஏ பிரிவு சட்டத்தை ஏவி பிரச்சாரத்துக்குத் தடை விதித்தது. பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டியது. கிராம மக்களிடம் ""இவர்கள் நக்சல்பாரி தீவிரவாதிகள்; கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் அவர்களது விண்ணப்பத்தில் கையெழுத்து போடாதீர்கள்; மீறி கையெழுத்து போட்டால் உங்கள் மீது வழக்கு போடுவோம்; கோர்ட் வாய்தா என்று நீங்கள் அலைய வேண்டி வரும்'' என்று அச்சுறுத்தியது.

போலீசின் தடைகள், அச்சுறுத்தல்களையும் மீறி நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் பிரச்சாரம் மற்றும் மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தோழர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கோக் ஆலையைத் தடை செய்யக் கோரும் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுள்ளதோடு, பல பத்தாயிரக்கணக்கான மக்களிடம் கோக்கிற்கு எதிரான பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளனர்.

ஏறத்தாழ 45 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த 20க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு உண்ண உணவும் இரவில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மக்கள், தாராளமாக நன்கொடை அளித்து இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகத்துடன் வரவேற்று ஆதரித்தனர். சில கிராமங்களில், உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்து, தோழர்களைக் கைது செய்ய போலீசு தேடி வந்தபோது, கிராம மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்து ஆதரித்தனர். ""தாமிரவருணி எங்கள் ஆறு; அமெரிக்க கோக்கே வெளியேறு'' என்ற போராட்டப் பாடல், இப்போது எல்லா கிராம மக்களும் விரும்பி இசைக்கும் பாடலாகியுள்ளது.
..
கோக் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு விளக்கியதைத் தொடர்ந்து, கோக் ஆலைக்கு வேலைக்குச் செல்வதை அவமானமாகக் கருதி, பல கூலித் தொழிலாளிகள் அவ்வேலையிலிருந்து விலகி விட்டனர். சில இளைஞர்கள், கோக் ஆலையில் வேலைக்குச் சேருவதற்காக வாங்கி வைத்திருந்த விண்ணப்பத்தை, மக்கள் முன்பாக சுக்குநூறாகக் கிழித்தெறிந்து தங்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தினர். பல கிராமங்களில், கோக் ஆலைக்கு ஆதரவாகப் பேசும் ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களிடம் வாதம் செய்து மக்கள் காறி உமிழ்ந்து, அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர்.
..
பணபலத்தையும் அரசு மற்றும் போலீசின் அதிகார பலத்தையும் கொண்டு, ஆலையின் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியைத் தொடங்கப் போவதாகக் கொக்கரிக்கிறது அமெரிக்க கோக் நிறுவனம். அதற்கெதிராக மக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்கும் மகத்தான பணியை புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தொடரும் பிரச்சார இயக்கத்தால் உணர்வு பெற்று வரும் மக்கள், நாளை பெரும் சூறாவளியாகத் திரண்டெழுந்து அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
..
பு.ஜ. செய்தியாளர்கள்.

Thursday, July 19, 2007

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

எடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.

எதிரொளிக்கும் ஃபுளோரசென்ட் பட்டைகள் கொண்ட சீருடை, தொப்பி, ஆரஞ்சு நிறக் கையுறை, ஆள் உயர இரும்பு பிரஷ், மண் அள்ளும் ஷவல், சாம்பல் நிறத்தில் நடமாடும் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி, உதிரிக் குப்பைகளை ஒய்யாரமாக ஏற்றிச் செல்லும் சிறிய ரக வாகனங்கள், வீதிகளின் மூலையில் கரும்பச்சை நிறத்துடன் இருப்புக் கொண்டிருக்கும் பெரிய குப்பைத்தொட்டி, அதை அப்படியே அலக்காகத் தூக்கித் தனது முதுகில் சாய்த்துக் கொள்ளும் தானியங்கி லாரிகள், சிப்பாய்களைப் போல அவற்றின் ஓரங்களில் தொங்கிக் கொண்டு செல்லும் துடிப்பான தொழிலாளிகள், சாலையில் படிந்திருக்கும் மண்ணை நக்கித் துடைக்கும் நவீன எந்திரங்கள் எழுப்பும் விநோத ஓசை, வாக்கி டாக்கியுடன் சுற்றித் திரிந்து இவற்றை மேற்பார்வையிடும் சூபர்வைசர்களின் மிடுக்கு... இது ஓனிக்ஸ்.

""அடடா... இது சென்னை நகரமா, அல்லது ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கும் ஐரோப்பிய நகரமா'' என்று பார்ப்பவர்களையெல்லாம் வியக்க வைக்கிறது; ""எவ்வளவு நீட்டா இருக்கு பாருங்க, என்ன இருந்தாலும் பிரைவேட்னா பிரைவேட்தான் சார்.'' என்று தனியார்மயக் கொள்கைக்கு "ஜே' போடவும் வைக்கிறது சென்னையில் இயங்கும் ஓனிக்ஸ் எனும் பன்னாட்டுத் துப்புரவுத் தொழில் நிறுவனம்.

சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை 2000 என்றெல்லாம் கனவு கண்ட முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்கப்பூராக்க வேண்டுமானால் அங்கே குப்பை அள்ளும் கம்பெனியை வைத்து சென்னையிலும் குப்பை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். லண்டன் மாநகரத்திலும் சிங்கப்பூரிலும் குப்பை அள்ளும் ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் வந்து இறங்கியது. துப்புரவுப் பணியிலும் தனியார்மயம் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் மந்தைவெளி, ஐஸ் ஹவுஸ், கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணியை ஏழேகால் ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது ஓனிக்ஸ் நிறுவனம்.
""காசுக்கு வழியில்லாதவன்தான் குப்பை பொறுக்குவான், இவ்வளவு பெரிய வெளிநாட்டுக் கம்பெனி நம்ம நாட்டுல வந்து குப்பை பொறுக்குறான்னா அவனுக்கு என்ன காலக்கொடுமையோ'' என்று நினைத்து விடவேண்டாம். கொடுமை பன்னாட்டுக் கம்பெனிக்கல்ல, அதன் பணியாளர்களுக்குத்தான்.
""ஓனிக்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்! மலையாய்க் குவிந்தன குப்பைகள்! நோய் பரவும் அபாயம்!'' என்று அலறின சென்னை நாளிதழ்கள். ஆனால் மலையாய்க் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் துயரம்தான் அவர்களை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளியிருக்கிறது என்ற உண்மையை மட்டும் அவை அணுவளவும் வெளியிடவில்லை. "வழக்கமான சம்பள உயர்வு, போனஸ் பிரச்சினைதான்' என்று பொய்யாகச் சித்தரித்து ஓனிக்ஸின் மேனாமினுக்கித் தோற்றத்திற்கு உள்ளே புழுத்து நெளிந்து கொண்டிருந்த அடக்குமுறைகள் அம்பலமாகாமல் இருட்டடிப்பு செய்தன.

ஓனிக்ஸ் தொழிலாளர்களை நேரில் சந்தித்த போதுதான் அழகு, சுத்தம் என்ற சொற்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது ஒரு அப்பட்டமான பயங்கரவாதம் என்பது தெரியவந்தது.

""எங்களை மனிதர்களாக நடத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களாக நடத்து'' என்ற ஒரு வரியில் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிவிடுகின்றன. ""தொழிலாளர்களை ரீ டிரெய்னிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தாதே; விசாரணை என்ற பெயரில் வேலை நீக்கம் செய்யாதே; தொழிலாளர்களைக் கேவலமாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு; ஆட்குறைப்புசெய்வதை நிறுத்து; சம்பளப் பாக்கிகளைக் கொடு'' என்பவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளின் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய பணிநிலைமைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
போகிற போக்கில் அலட்சியமாக நாம் வீசும் குப்பை, மூக்கைப் பிடித்துக் கொண்டு தெருவில் விட்டெறியும் செத்த எலி, கடைக்காரர்கள் கொட்டும் அழுகிய காய்கறிகள், ஓட்டல்கள் வெளியேற்றும் கெட்டுப்போன சோறு, கருச்சிதைவில் வெளியேறிய குழந்தை உள்ளிட்ட மருத்துவமனையின் ஆபத்தான கழிவுகள், லாரியில் அடிபட்டுச் செத்த நாய்கள்... இவையனைத்தும் நாட்கணக்கில் அகற்றப்படாமல் கிடக்கும் காட்சியைக் கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். துப்புரவுப் பணியாளர்கள் இயங்கினால்தான் சென்னை என்பது மாநகரம், இல்லையேல் மறுநாளே இது நரகம். ஆனால் அவர்கள் இயக்கப்படுவது எப்படி?

ஓனிக்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை நகரின் 3 மண்டலங்களுடைய துப்புரவுப் பணிக்காக ஏற்கெனவே மாநகராட்சி ஒதுக்கியிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6000. அதே பணியை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வைத்து முடித்து வருகிறது ஓனிக்ஸ் நிறுவனம். தனியாரின் திறமை இங்கிருந்து தொடங்குகிறது.

130 பெண்கள் உட்பட ஓனிக்ஸ் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 2300. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 டிவிசன்கள், ஒரு டிவிசனுக்கு 60 தொழிலாளர்கள், ஒரு சூபர்வைசர், லாரி டிரைவர். 8 மணி நேரத்தில் ஒரு தொழிலாளி சுத்தம் செய்ய வேண்டிய சாலையின் நீளம் 1400 மீட்டர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர். ஒரு துளி தூசும் இல்லாதபடி மறுபடி மறுபடி பெருக்க வேண்டும். வெறும் 300 சதுர அடி வீட்டைக் கூட்டி முடிப்பதற்குள் முதுகு பிடித்துக் கொண்ட கதையை இலக்கியமாகப் பேசும் நபர்கள் 1400 மீட்டர் கடைவீதியைக் கற்பனையிலாவது ஒருமுறை கூட்டிப் பார்க்க வேண்டும்.
..
இரும்புத் துடைப்பானால் குப்பையைத் தள்ளிக் கொண்டும், பொடி மண்ணை பிரஷ்ஷால் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டும் குனிந்த தலையுடன் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளியின் கைகள் ஓய்ந்து ஒரு கணம் நிற்பதையோ, அவர்கள் உட்கார்ந்திருப்பதையோ சென்னைவாசிகள் யாராவது எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் 5,6 பேராக டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்த்திருப்பீர்கள். 4 ஓனிக்ஸ் தொழிலாளிகள் சேர்ந்து டீ குடித்தபடி நிற்பதை யாராவது பார்த்ததுண்டா?

இதுவரை கவனித்திராதவர்கள் இனி கவனித்துப் பாருங்கள். வியர்வையைத் துடைப்பதற்காகக் கூட அவர்கள் ஒரு கணம் ஓய முடியாது. வயர்லெஸ்ஸ{டன் வண்டியில் சுற்றிக் கொண்டே இருக்கும் சூபர்வைசரின் கண்ணில் பட்டால் எந்த விளக்கத்தையும் அவன் காதில் வாங்க மாட்டான். உடனே மெமோ. சூபர்வைசரின் அனுமதியில்லாமல் சிறுநீர் கழிக்கக் கூட ஒதுங்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களிடம் பேசக்கூடாது. முகவரியை வைத்துக் கொண்டு வழிகேட்கும் மக்களிடம் கூடப் பேசக் கூடாது. நட்புணர்ச்சியுடன் கடைக்காரர்கள் ரெண்டு வாழைப்பழமோ டீயோ கொடுத்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது. குடித்தால், சாப்பிட்டால் மறுகணமே வேலைநீக்கம்.

இரண்டு பத்து நிமிடங்கள் தேநீர் இடைவேளை, சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் போக, 8 மணி நேர வேலை. கல்லாய்ச் சமைந்திருக்கும் சந்து முனீஸ்வரன்களுக்குக் கூட கழிவை வெளியேற்ற வழியுண்டு; ஒன்றரை கி.மீ. துப்புரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளிக்கு 10 நிமிட இடைவேளைக்குள் சிறுநீர் கழிக்க இடம் தேடுவதே பெரும் போராட்டம்.

எந்தச் சோற்றுக்காக இத்தனைப் பாடுபடுகிறார்களோ அதை நிம்மதியாகத் தின்ன முடியாது. அன்றைக்கு ஒதுக்கப்பட்ட சாலையில் ஏதாவது ஒரு கடையில் சோற்று டப்பாவைக் கொடுத்து வைத்து, இடைவேளை நேரத்தில் அந்தக் கடைக்கு ஓடிவந்து அள்ளி விழுங்கி விட்டு 30 நிமிடத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர வேண்டும். துர்நாற்றம் போகக் கை கால் முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடவோ, சாப்பிட்ட பின் சற்று அமரவோ கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.

அன்றாடம் 8 மணி நேரம் சாலையோரக் குப்பையையும் மண்ணையும் அழுந்தத் தேய்த்துச் சுத்தம் செய்யும் உள்ளங்கை புண்ணாகும். ஒரு தானியங்கி எந்திரத்தைப் போல நிமிடத்திற்கு 25,30 முறை முன்னும் பின்னும் இயங்கும் தோள்பட்டை மூட்டுக்கள் என்னாகும்? ஒரே ஆண்டில் சவ்வுகள் கிழிந்து தேய்ந்து போன எந்திரம்போல "கடக் கடக்' என்று ஓசை எழுப்புகின்றன தொழிலாளர்களின் தோள்பட்டைகள். ஆண்டுக்கு இரண்டு மாதம் வேகப்பந்து வீசும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே பிரச்சினை வருகிறது. அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை, 20 லட்சம் செலவு!

இப்படித் "தேய்ந்து' போகும் தொழிலாளர்களைக் கழித்துக் கட்ட கொடூரமான தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது ஓனிக்ஸ் நிர்வாகம். வேகம் குறைந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு "நின்னால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம்' என்று அவர்களுக்கு அடுக்கடுக்காக மெமோ கொடுத்து அலுவலகத்துக்கு அலைய வைப்பது; அப்போதும் வேலையை விட்டு ஓடவில்லையென்றால் "ரீ டிரெய்னிங்' என்ற பெயரில் இறுகிப் போன மண் மேடுகளைத் தன்னந்தனியாக சவல் போட்டு பெயர்த்தெடுக்கும் கொடிய தண்டனையை வழங்குவது இந்தக் கொடுமைகள் தாளாமல் பரிதாபத்துக்குரிய அந்தத் தொழிலாளர்கள் தானே வேலையை விட்டு ஓடுகிறார்கள்.

ஆனால் தேய்ந்து போன லாரிகளை ஓனிக்ஸ் இவ்வாறு கழித்துக்கட்டுவதில்லை. ""ஆரம்பத்துலதான லாரியெல்லாம் பந்தாவா இருந்திச்சு. இப்ப எந்த வண்டியிலுமே ஷாக் அப்சர்வர் வேலை செய்யறதில்லை. குப்பைய ஓவர் லோடு ஏத்தி வண்டி ஓட்ட முடியாம இடுப்பு வலி தாங்கல சார். குப்பை கொட்றப்ப எரிஞ்சு புகைமூட்டமாக இருக்கும். எதிர்ல வர்ற ஆளும் தெரியாது. வண்டியும் தெரியாது. குப்ப பொறுக்குறவங்க மேல வண்டி ஏறிடும். நைட்ல எங்காளுகளே வண்டி ஏறி செத்ததுண்டு டிரைவர்னு வேலைக்கு சேர்ந்தேன். தினம் 3 டிரிப் அடிக்கணும். முடிச்சிட்டா நீயும் போய் குப்பை வாருன்னு கட்டாயப்படுத்துறாங்க. முடியலீங்க. வேலைய விட்டுரலாம்னு இருக்கேன்.'' இது ஒரு டிரைவரின் குமுறல்.

ஓனிக்ஸிலிருந்து ராஜினாமா செய்து விட்டு ஓடிய தொழிலாளர்கள் சுமார் 4000 பேர். சில ஆண்டுகளிலேயே இத்தனைப் பெரிய வெளியேற்றம். வேறெந்தத் தொழிலிலும் காண முடியாதது. இளம் குருத்துக்களை வேலைக்கு எடுத்து, அவர்களுடைய எலும்பையும் தசையையும் கரும்புச் சாறு பிழியும் எந்திரம் போல முறுக்கிப் பிழிந்து 4000 பேரைத் துப்பியிருக்கிறது ஓனிக்ஸ்.
ஒரு தொழிலாளியின் சம்பளம் 2300 ரூபாய். ஆண்டுக்கு 24 நாட்கள் விடுப்பு. மூட்டு வலி, சுவாசக் கோளாறு, வயிற்று வலி, குடலிலும் சீறுநீரகத்திலும் மண் தங்குதல் இவை எல்லாத் தொழிலாளர்களுக்கும் வரும் நோய்கள். எனவே கூடுதல் விடுப்பு எடுப்பது தவிர்க்க முடியாதது. கூடுதலாக விடுப்பு எடுத்தாலோ, முன் அனுமதியின்றி எடுத்தாலோ, ஒருநாள் விடுப்புக்கு 4 நாள் சம்பளம் (ரூ. 340) வெட்டு.

சூபர்வைசர்களின் சம்பளம் 15,000 ரூபாய். ஒவ்வொருவரும் 60 தொழிலாளிகள் மற்றும் சுமார் 40 கி.மீ நீளச் சாலைக்குப் பொறுப்பு. இந்தப் பணிச்சுமையால் வேட்டை நாய்களாகவே அவர்களை மாற்றியிருக்கிறது நிர்வாகம். குப்பையின் எடையும் தண்டிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடக் கூட அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து, பரிசுகள்.
..
டன் ஒன்றுக்கு 650 ரூபாய் என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 1200 டன் குப்பை அள்ள வேண்டுமென்பது மாநகராட்சிக்கும் ஓனிக்ஸ{க்கும் இடையிலான ஒப்பந்தம். இந்தக் கணக்கின்படி ஓனிக்ஸின் மாத வருவாய்
ரூ. 2 கோடி 35 லட்சம். 2300 தொழிலாளர்களுக்கு (மொத்த ஊதியம் சராசரி ரூ. 3000 என்ற கணக்கில்) வழங்கப்படும் ஊதியம் 69 லட்சம் மட்டுமே. பிற செலவினங்கள் போனாலும் தோராயமாக மாத லாபம் ஒரு கோடி ரூபாய். குப்பையின் எடையைக் கூட்டுவதற்காக கட்டிடம் இடித்த கற்களை அள்ளி, குப்பைக் கணக்கில் சேர்த்துக் காசு பார்க்கிறது ஓனிக்ஸ். அவ்வப்போது பிடிபடும் இந்த மோசடியை லஞ்சத்தால் சரிக்கட்டியும் விடுகிறது.

இந்த ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காக ஓனிக்ஸ் இறக்கியிருக்கும் தொழில் நுட்பமென்ன? போட்ட முதலீடு என்ன? நம்மூர்க் குப்பைதான் முதலீடு. கசக்கிப் பிழியப்படும் நம் தொழிலாளர்களின் உழைப்புதான் தொழில்நுட்பம். கம்ப்யூட்டர் திரையையும் லாபக் கணக்கையும் தவிர வேறெதுவும் தெரியாத ஒரேயொரு வெள்ளைக்கார நிர்வாகியை மட்டும்தான் சென்னையில் இறக்கியிருக்கிறது ஓனிக்ஸ். வந்திறங்கிய ஒருசில ஆண்டுகளிலேயே 4000 இளைஞர்களை உயிருள்ள குப்பைகளாக்கி வீசியிருப்பதுதான் ஓனிக்ஸின் "திறமை'. ஈவிரக்கமற்ற சுரண்டல்தான் ஓனிக்ஸ் வழங்கும் சுத்தத்தின் இரகசியம்.

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோஹனஸ்பர்க்கில் குடிநீரைத் தனியார்மயமாக்கி, ""ப்ரீ பெய்டு அட்டை வாங்க முடிந்தவர்களுக்கு மட்டும்தான் குடிநீர்'' என்ற கொடிய திட்டத்தை அமல்படுத்திய வயோலியா என்ற பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தின் கிளைதான் ஓனிக்ஸ். காசில்லாதவனுக்குக் குடிநீரில்லை என்ற இந்தக் கொடிய திட்டத்தின் விளைவாக லட்சக்கணக்கான கறுப்பின ஏழைமக்கள் கழிவுநீரையும் குட்டை நீரையும் குடித்து காலராவுக்கு இரையாகினர்.

அதே வயோலியா நிறுவனம்தான் சென்னை மாநகரக் குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஆலோசகராகவும் அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குப்பையில் லாபம் பார்க்கும் ஓனிக்ஸ், குடிநீரில் லாபம் பார்ப்பதெப்படி என்பதை நமது மாநகராட்சிக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கிளைதான் கழிவுகளிலிருந்து நம்மைப் "பாதுகாக்க' வந்திறங்கியிருக்கிறது. ஓனிக்ஸின் ஒப்பந்தம் நீடிக்கப்படும்; மெல்ல மெல்ல சென்னை முழுவதுற்கும் அது விரிவுபடுத்தப்படும்.

ஏனென்றால், தனியார்மயம்தான் அரசின் கொள்கை. பணி உத்திரவாதம், குறைந்த பட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமைகள் போன்ற "தொந்திரவுகள்' நீக்கப்படாமல் இருப்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழையத் தயங்குகின்றன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை உடனே ஒழித்தால்தான் ஓனிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமென்றும் கூறுகிறார் மன்மோகன் சிங்.

அரசு இனி வழங்கவிருப்பதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்புகள்தான். ஓனிக்ஸ் தொழிலாளர்களில் பலர் எம்.ஏ., பி.ஏ. பட்டதாரிகள். பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அவர்களுடைய மாதச் சம்பளம் 2300 ரூபாய். குடியிருக்கும் இடத்திலிருந்து குப்பை அள்ளும் இடத்திற்கு வந்து போக பேருந்துக் கட்டணம் தினமும் 10 ரூபாய். தேநீர்ச் செலவு குறைந்தது 10 ரூபாய். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஒருநாள் சம்பளம் வெட்டு அந்த வகையில் மாதம் 340 ரூபாய். மிஞ்சுவது மாதம் 1340 ரூபாய். மருத்துவச் செலவு அதில்தான், சீருடையைத் துவைக்கும் செலவு அதில்தான். சோறும் வீட்டு வாடகையும் அதில்தான். இதுதான் தனியார்மயம் வழங்கும் "வேலை வாய்ப்பு'.

இனி இது ஓனிக்ஸ் தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, உங்கள் பிரச்சினை. இத்தகைய வேலைவாய்ப்புக்கு நீங்கள் தயாரா?

மு க.மு.

Monday, July 16, 2007

மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் :கொள்ளைக்காரனின் வள்ளல் வேடம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், இந்த விலைக் குறைப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் அறிவித்தார். நாட்டை மீண்டும் காலனியாக்கி மக்களை மரணக் குழியில் தள்ளி வரும் காங்கிரசுக் கூட்டணி ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் திடீரென அக்கறை வந்துவிட்டதோ என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த விலைக் குறைப்பு என்பது மோசடித்தனமானது என்றும் பன்னாட்டுஉள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டும் நடவடிக்கைதான் என்பதும் வெகு விரைவிலேயே அம்பலமாகி விட்டது.

விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள 886 வகையான மருந்துகளும் 11 பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் தயாரிக்கும் விலை அதிகமுள்ள மருந்துகளாகும். பெரும்பாலான மருத்துவர்கள் உள்நாட்டு மருந்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். அத்தகைய மருந்துகளின் விலைகளைக் குறைக்க மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உபயோகத்தில் இல்லாத, பரவலாகக் கடைகளில் கிடைக்காத, விலை அதிகமாக உள்ள மருந்துகளின் விலையை மட்டுமே — அதுவும் 5 முதல் 10 சதவீத அளவுக்கு மட்டுமே அரசு குறைத்துள்ளது. அதிகம் பயன்பாட்டில் உள்ள மருந்துகளின் விலைகள் மிகமிக அற்பமான அளவுக்கே குறைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, இமிடேல் என்ற ஊசி மருந்து ஏற்கெனவே ரூ. 4.99க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.98 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரான்கோல்ட் பிளஸ் 10 மாத்திரைகளின் விலை

ரூ. 18.11க்கு விற்பனையாகி வந்தது. இதன் விலை தற்போது ரூ. 17.51ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மாத்திரைகளின் விலையில் 60 பைசா குறைந்துள்ளது. சாமானிய மக்கள் கடையில் ஒன்றிரண்டு மாத்திரைதான் வாங்குகின்றனர். ஒரு பைசா, இரண்டு பைசா சில்லறையுடன் போய் இரண்டு மாத்திரை வாங்கினால் மட்டுமே அமைச்சர் கூறியபடி இந்த விலைக் குறைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல், இந்த விலைக் குறைப்பினால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. இதுதான் விலைக் குறைப்பின் பின்னேயுள்ள மோசடி.

உண்மைகள் மருந்தைப் போலவே கசப்பாகவே இருக்கின்றன. உலகின் பெரும் கோடீசுவரர்கள் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இடம் பெறும் அளவுக்கு, இந்தியா "பணக்கார வல்லரசு' நாடாக வளர்ந்து வருவதாக ஆட்சியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால், இந்நாட்டில்தான் ஏறத்தாழ 65 கோடி மக்கள் அத்தியாவசிய மருந்துகளைக் கூட வாங்குவதற்கான வாய்ப்பு வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும் மருந்து உற்பத்தி ஆலைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ள போதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (றுவுழு) தனது 2004ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடுகிறது.
இந்த அவல நிலைக்குக் காரணம், தனியார்மயம். உலகின் தனியார்மயமாக்கப்பட்ட மருத்துவ சுகாதாரத் துறையில், ஏழை நாடான இந்தியா முன்னணியில் உள்ளது. மணற்கொள்ளை, நிலக் கொள்ளை, கடற்கொள்ளை முதலானவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் இந்தியாவில் மருந்துக் கொள்ளை கேள்விமுறையின்றித் தொடர்கிறது.
இந்தியாவில் ஓராண்டுக்கு ஏறத்தாழ 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்து மாத்திரை வியாபாரம் நடக்கிறது. இதில் பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் ஏறத்தாழ 25 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் செய்கின்றன. இக்கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. உதாரணமாக, அவந்திஸ் நிறுவனத்தின் லெவோப்ளாசசின் என்னும் ஆன்டிபயோட்டிக் மாத்திரையின் விலை ரூ.95. அதே மாத்திரையை, அதே தரத்துடன் உள்நாட்டு சில்பா மருந்து நிறுவனம் ரூ.6.80க்கு விற்கிறது. இந்திய அரசோ இப்படி அநியாய விலை விற்கும் அன்னிய நிறுவன மருந்துக்குத் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையைப் பின்பற்றி வந்த அரசு, தனியார்மய தாராளமயமாக்கலைத் தொடர்ந்து படிப்படியாக இக்கொள்கையை நீர்த்துப் போகச் செய்து விட்டது. 1977ஆம் ஆண்டில் 347 அத்தியாவசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. 1995இல் இது வெறும் 74 மருந்துகள் என்று சுருங்கிப் போனது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக புதிதாக எந்த மருந்தும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை. மருந்துக் கம்பெனிகள் தாறுமாறாக விலையேற்றி கேள்விமுறையின்றி கொள்ளையடித்தன.

முந்தைய பா.ஜ.க. அரசு 2002ஆம் ஆண்டில் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த இந்த 74 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 30ஆகக் குறைக்கக் கிளம்பியது. கர்நாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி, இதை நடைமுறைப்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இத்தீர்ப்பின்படி, அரசு உருவாக்கிய மருத்துவ நிபுணர்கள் குழு, தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 2003ஆம் ஆண்டில் தயாரித்துக் கொடுத்தது. இதில் 354 வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இருப்பினும், இப்பட்டியலின்படி விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை பா.ஜ.க. அரசு அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முன்வராமல் கிடப்பில் போட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, ஈராண்டு காலமாக இழுத்தடித்து விட்டு, கடந்த ஜூலையில் வழக்கத்துக்கு மாறாக தவணை முறையில் நகல் மருந்துக் கொள்கையை வெளியிட்டது. மைய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இக்கொள்கைப்படி விலைக் கட்டுப்பாடு பட்டியலில் 354 அத்தியாவசிய மருந்துகளைக் குறிப்பிட்டு அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஆனால், அவரது அமைச்சரவையே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விலைக் கட்டுப்பாட்டிலுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலைப் பெருமளவுக்குக் குறைக்கக் கோரியது. இதனைப் பரிசீலித்து விலைக் கட்டுப்பாடு பட்டியலைத் தயாரிக்க 14 பேர் கொண்ட கூட்டுக் கமிட்டியை மைய அரசு நிறுவியது. இந்தக் கமிட்டியிலுள்ள 14 பேரில் 11 பேர் ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள். மீதி 3 பேர் மட்டுமே அரசாங்கத்தின் பிரதிநிதிகள். ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள இந்தக் கமிட்டி மக்கள் நலனை முன்வைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை கொண்டுவரும் என்று முட்டாள்கள்கூட நம்ப மாட்டார்கள்.

மைய அரசு ஜூலையில் வெளியிட்ட நகல் மருந்துக் கொள்கை அறிக்கையானது, மருந்துக் கம்பெனிகள் உற்பத்தி செலவுக்கு மேல் 200மூ வரை இலாபம் வைத்து விற்கலாம் என்று விலை நிர்ணய முறைக்கு ஆலோசனை கூறுகிறது. இதுவே மிக அநியாயமான பகற்கொள்ளைதான். ஆனால், ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்த விலை நிர்ணய முறையைக்கூட ஏற்க மறுத்துவிட்டன. இப்படிச் செய்தால் இலாபம் குறைந்து ஆலையை மூட நேரிடும்; ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும்; புதிய மருந்துக்கான ஆராய்ச்சியும் வளர்ச்சியும் குறைந்துவிடும்; நாட்டுக்கு மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. இருப்பினும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல், பொதுவில் 5 முதல் 10 சதவீதம் வரை விலையைக் குறைப்பதாக இம்மருந்துக் கம்பெனிகள் அறிவித்தன. இதன்படியே 886 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துவிட்டதாகவும், மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மைய அமைச்சர் அறிவித்துள்ளார்.

விலைக் கட்டுப்பாட்டுக்குள் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததாலும், மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதாலும் சாதாரண நோய்களுக்கே கூட சாமானிய மக்கள் நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. விலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய அத்தியாவசிய மருந்துகள் என அரசு முன்வைத்துள்ள நகல் கொள்கை அறிக்கையில் கூட, காசநோய், மலேரியா, ரத்தசோகை, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு முதலான நோய்களுக்கான மருந்துகளே இல்லை. வாந்தி பேதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அவசியமான உப்பு சர்க்கரை கரைசல் பொடி கூட விலைக் கட்டுப்பாடு பட்டியலில் இல்லை.
இதுதவிர இன்னும் ஏராளமான உயிர் காக்கும் மருந்துகள் இந்தப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் அநியாய விலை விற்கும் மருந்துகளை வாங்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள். அல்லது மருந்துக்காக பெருமளவில் செலவிட்டு கடனாளியாகி நிற்கிறார்கள். சாதாரண நோய்க்காக, ஒவ்வொரு புறநோயாளியும் தனது மொத்த மருத்துவ செலவில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை மருந்துமாத்திரைகளுக்காகச் செலவிடுவதாக, இந்திய அரசின் 55வது சுற்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கையே குறிப்பிடுகிறது. 1995இல் இரத்த சோகைக்கான மருந்தின் விலை 177 சதவீதம் உயர்ந்தது; காசநோய் தடுப்புக்கான மருந்தின் விலை 90 சதவீதம் உயர்ந்தது. இம்மருந்துகளும் இன்னும் பலவும் மேலும் விலை உயர்ந்துள்ளனவே தவிர, இன்றுவரை குறையவில்லை. உதாரணமாக சிட்ரிஜைன், நிமிசூலைடு, ஓமெப்ராஜோல் ஆகிய பரவலாக விற்கப்படும் மருந்துகளின் மூலம் 1000 சதவீதம் அளவுக்கு இலாபமீட்டி மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடித்துள்ளதாக இரசாயனத் துறை அமைச்சகமே கூறுகிறது.

இந்தப் பகற்கொள்ளை போதாதென்று, ""பொதுவான'' மருந்துகளை விலைக் கட்டுப்பாடு பட்டியலிலிருந்து விலக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்திய அரசை நிர்பந்தித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் புஷ் இந்தியாவுக்கு வந்தபோது, பிரதமரிடம் இதுபற்றி வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தை (ஈஇஅ)த் திருத்தியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இச்சட்டப்படி, ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருமுன் அதன் பாதுகாப்புத் தன்மை, நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், தரம் ஆகியவற்றுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையரிடம் (ஈஇஎஐ) அனுமதியும் சான்றிதழும் பெறவேண்டும். இந்த விதியை நீக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன.

மேலும், ""பொதுவான'' மருந்துகள் என்ற வகையின் கீழ் ஒரு புதிய மருந்து தயாரித்தால், அப்பொது மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு புதிய மருந்தைத் தயாரித்துள்ள நிறுவனம் கப்பம் கட்ட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, ""பாரசிட்டமால்'' என்ற காய்ச்சலுக்கான பொதுவான மாத்திரையை, ஒரு உள்நாட்டு மருந்து நிறுவனம் புதிய கலவையுடன் புதிய பெயரில் விற்க முனைந்தால், அந்த நிறுவனம், பொது மருந்தைக் கண்டுபிடித்த ஏகாதிபத்திய நிறுவனத்துக்குக் கப்பம் கட்டவேண்டும் என்கின்றன. இதற்கேற்ப மருந்துப் பொருட்கள் சட்டம் திருத்தப்பட்டால், மருந்து விலைகள் தாறுமாறாக உயரும்; பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கமும் கொள்ளையும் கேள்விமுறையின்றித் தொடரும்; உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் மலிவான விலையில் ""பொதுவான'' மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கிப் போகும். சாமானிய மக்கள் சாதாரண தலைவலி காய்ச்சலுக்கான ""பொதுவான'' மருந்துகளைக் கூட வாங்க முடியாதபடி அவற்றின் விலைகள் எட்டாத உயரத்தில் இருக்கும்.

ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே கம்பெனிகள் சட்டம், ஏகபோக தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டம், விதைச் சட்டம் எனப் பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்து விட்டனர். எஞ்சியிருக்கும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தையும் மாற்றியமைக்க இப்போது முயற்சித்து வருகின்றனர். ஏற்கெனவே மருந்துகளின் விலையேற்றக் கொள்ளையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது, மிகக் கொடிய மறுகாலனியத் தாக்குதலை ஏவி விடுவதற்கான ஏற்பாடுகளை வேகவேகமாக காங்கிரசு ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பன்னாட்டு ஏகபோக மருந்துக் கொள்ளையர்களின் ராஜ்ஜியத்தை நாம் அனுமதிப்பதா? அல்லது இக்கொள்ளைக் கூட்டத்துக்கு கதவை அகலத் திறந்துவிடும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவதா? நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் கொண்ட ஒவ்வொரு வரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

குமார்

Thursday, June 14, 2007

தேர்தல் புழுதியில் மறைக்கப்படும் பட்டினிச் சாவுகள்

உத்திரப்பிரதேசம்:
தேர்தல் புழுதியில் மறைக்கப்படும்பட்டினிச் சாவுகள்

உ.பி.மாநிலம் வாரணாசி மாவட்டத்திலுள்ள பேல்வா கிராமத்தைச் சேர்ந்த இலட்சுமிணாவிடம் அடமானம் வைப்பதற்குத் தனது திருமணப் புடவையைத் தவிர, மதிப்புமிக்க பொருட்கள் வேறெதுவும் இல்லை. அந்தச் சேலையை யாராவது அடமானம் எடுத்துக் கொண்டு நூறு ரூபாய் கொடுத்தால், சாகக் கிடக்கும் தனது மகள் சீமாவைக் காப்பாற்றி விடலாம் என நம்பினார், அவர். ஆனால், சேலையை அடகு வைப்பதற்கு முன்பே, சாவு முந்திக் கொண்டு விட்டது. ஒன்பது வயதான சீமா என்ற அந்தச் சிறுமியின் உயிரைக் குடித்த நோயின் பெயர் ""பட்டினி''!
.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோனேபத்ரா மாவட்டத்திலுள்ள ராப் கிராமத்தைச் சேர்ந்த 18 காசியா பழங்குடி இனக் குழந்தைகள் பட்டினியால் நோய்வாய்ப்பட்டு இறந்து போயின. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் பேல்வா கிராமத்தில் மட்டும் ஐந்து குழந்தைகள் பட்டினிக்குப் பலியாகியுள்ளன. கிழக்கு உ.பி. பகுதியில் கடந்த இரண்டே ஆண்டுகளில் 174 பேர் பட்டினிக்குப் பலியாகியிருப்பதாக மனித உரிமைகளுக்கான மக்கள் கண்காணிப்புக் குழு குறிப்பிடுகிறது.
.
கிழக்கு உ.பி. பகுதியில் அடிக்கடி ஏற்படும் வறட்சியால் விவசாயம் நசிந்து விட்டது. சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பாரம்பரியமிக்க நெசவுத் தொழில் நொடித்துப் போய் விட்டது. நிரந்தரமான மாற்று வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், இப்பகுதி மக்கள் பட்டினியோடு போராடி வருகின்றனர்.
பல நாட்கள் பட்டினி; சில வேளைகளில் அரிசிச் சோறும், வேகவைத்த உருளைக்கிழங்கு மட்டுமே உணவு. இதன் காரணமாக புரோட்டீன் சத்துக் குறைவு ஏற்பட்டு, என்ன ஏதுவென்று கண்டுபிடிப்பதற்கு முன்பே குழந்தைகள் இறந்து விடுவதாக குழந்தை நல மருத்துவர் ராஜேந்திர பதக் குறிப்பிடுகிறார். விவசாயக் கூலி வேலையை நம்பி வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்டோரும், நெசவுத் தொழிலை நம்பியுள்ள முசுலீம்களும் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உ.பி. மாநில சட்டசபையைக் கைப்பற்றுவதற்காக சாதிக் கூட்டணிக் கணக்கில் மூழ்கிப் போய்விட்ட ஓட்டுக் கட்சிகளுக்கு, இந்தப் பட்டினிக் கணக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ""உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறை இல்லாதபொழுது பட்டினிச் சாவு எப்படி நடக்க முடியும்?'' எனத் திமிராகக் கேட்கிறது அதிகார வர்க்கம்.
.
மேலும், பட்டினியோடு போராடும் இம்மக்களை வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வதாகப் பிரித்து, ரேசன் பொருட்கள் கிடைக்காமலும் வயிற்றில் அடித்துவிட்டது. காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் பீற்றிக் கொள்ளும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், இந்தப் பகுதியில் நடைபெற்றதற்கான அறிகுறியே தென்படவில்லை.

எத்தியோப்பியா, சூடான், சோமாலியா போன்ற ஏழை ஆப் பிரிக்க நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு, இந்தியாவின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நடந்து வருகின்றன.
தாராளமயத்தை மேலும் தீவிரமாக அமல்படுத்துவதுதான் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், பட்டினியையும் ஒழிப்பதற்கான ஒரே வழி என்கிறார், ப.சிதம்பரம்.

தாராளமயத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாராளமயம் நத்தை வேகத்தில்தான் நகர்ந்து வருகிறதா? தாராளமயம் "நத்தை' வேகத்தில் நகரும்பொழுதே, இத்துணை பட்டினிச் சாவுகளையும், தற்கொலைச் சாவுகளையும் ஏற்பத்தியிருக்கிறது என்றால், தீவிரமான தாராளமயம் நாட்டையே சுடுகாடாக்கி விடாதா?
-------------------------------

Saturday, May 26, 2007

லாலுவின் நிர்வாகத் "திறமை":கொல்லைப்புற வழியில் தனியார்மயம் கட்டணக் கொள்ளை

""நட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல் சமூகநீதி பேசும் பத்திரிகைகள் வரை இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இந்திய நிர்வாகவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) பயிலும் மாணவர்களிடம், இலாபமீட்டும் இரகசியத்தைப் பாடம் நடத்தும் அளவுக்கு அவரது பெருமையும், புகழும் பெருகியுள்ளதாக முதலாளித்துவ மூதறிஞர்கள் பாராட்டுகின்றனர்.

1980களில் 7.6 சதவீதமாக இருந்த இரயில்வே துறையின் வளர்ச்சி விகிதம் 1990களில் 6.56 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அடுத்த பத்தாண்டுகளில் குறிப்பிடும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இந்நிலையில், இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக லாலுபிரசாத் யாதவ் மாற்றியுள்ளார் என்றால், அவர் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்துள்ளதா, என்ன! அதுவும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே அவரால் எப்படி இந்த அதிசயத்தைச் செய்ய முடிந்தது?

1990களில் இரயில்வே துறையின் பல முக்கியமான மீட்டர்கேஜ் பாதைகள், அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன; டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட தடங்கள் பெருமளவில் மின்சாரமயமாக்கப்பட்டன; பல தடங்களில் இருவழிப் பாதைகள் போடப்பட்டன; பெரும்பாலான ரயில் நிலையங்களின் ""சிக்னல்கள்'' தானியங்கியாக மாற்றப்பட்டன. இவ்வாறு மிகப் பெரிய இரயில்வே துறையின் அடிக்கட்டுமானங்களை நவீனமயப்படுத்த பல்லாயிரங் கோடிகள் செலவிடப்பட்டதால், அந்த பத்தாண்டுகளில் இரயில்வே துறையின் இலாப விகிதம் குறைந்து போனது.

இம்முதலீடுகள் எல்லாம் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக பலன் தரத் தொடங்கியுள்ளன. நாட்டின் இரயில்வே தடங்களில் 70 சதவீதமாக உள்ள அகலப்பாதைகள்தான், இப்போது 95 சதவீத சரக்குப் போக்குவரத்துக்கும், 89 சதவீத பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படுகின்றன என்பதிலிருந்தே 1990களில் போடப்பட்ட அகலப்பாதைகளின் பங்களிப்பு புலனாகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலைப் போக்குவரத்துடன் போட்டியிடும் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதில் இரயில்வே துறை வளர்ந்துள்ளது. அகலப் பாதைகள் அமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளதன் விளைவாக, மூலதன அழுத்தம் கொண்ட இரயில்வே துறை இப்போது மெதுவாக வளர்ச்சியடைந்து பலன்தரத் தொடங்கியதும், இதையே லாலுவின் நிர்வாகத் திறன் என்று முதலாளித்துவவாதிகள் உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.

நவீனமயப்படுத்தலால் ஏற்பட்ட செலவுகள் குறைந்து, பலன்கள் கிடைப்பது ஒருபுறமிருக்க, இலாபமீட்டும் துறையாக இரயில்வே துறையை மாற்றிய லாலுவின் "திறமை'தான் என்ன? பேருந்துகளிலோ சந்தையிலோ ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அதையே அரசாங்கம் செய்தால் அது நிர்வாகத் திறமை என்பதுதான் லாலு கண்டுபிடித்துள்ள உத்தி.
சாதாரண தொடர் வண்டிகள் (பாசஞ்சர்) அனைத்தும் எவ்வித வசதிகளுமின்றி விரைவு வண்டிகள் (எக்ஸ்பிரஸ்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரைவு வண்டிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல விரைவு வண்டிகள் அதிவிரைவு வண்டிகள் (சூப்பர் ஃபாஸ்ட்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சட்டபூர்வமாகவே கட்டணக் கொள்ளை தொடர்கிறது.

புறப்படும் இடத்திலிருந்து அல்லாமல், அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்தால், அதற்குக் கூடுதல் கட்டணம்; முன்பதிவு செய்யப்படும் படுக்கையில், கீழ்தளப் படுக்கைக்குக் கூடுதல் கட்டணம் என்று அங்கேயும் வழிப்பறி; அவசர அவசியம் கருதி உடனடியாக படுக்கை வசதியுடன் பயணம் செய்வதற்காக சற்று கூடுதல் கட்டணமுறையுடன் இருந்த ""தட்கல்'' திட்டத்தை வரைமுறையின்றி விரிவுபடுத்தி பலமடங்குக் கூடுதல் கட்டணக் கொள்ளை; 90 நாட்களுக்கு முன்னரே இணையதளம் மூலம் எத்தனை பயணச் சீட்டுகளையும் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இணையதள வசதியில்லாதவர்கள் அவசரப் பயணத்திற்காக வேறுவழியின்றி ""தட்கல்'' திட்டத்துக்கு துரத்தப்பட்டு அங்கே கூடுதல் கட்டணத்தைக் கொட்டியழ வேண்டிய நிலை; முன்பதிவு செய்ததை ரத்து செய்தால் இழப்பீடு தொகை இரு மடங்கு உயர்வு என பல வழிகளிலும் நூதனமான வழிப்பறி செய்கிறது இரயில்வே துறை.

தொடர்ந்து ஈராண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்று கூசாமல் புளுகிக் கொண்டு புதிய உத்திகளுடன் வழிப்பறி செய்து வரும் லாலு, ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, செலவுகள் குறைந்து ஆதாயம் பெருகியுள்ளதாகக் கணக்கு காட்டுகிறார். இரயில்வே துறையால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் டாண்டன் கமிட்டி, ராகேஷ்மோகன் கமிட்டி ஆகியவை பரிந்துரைத்த தொழிலாளர் விரோத, தனியார்மய நடவடிக்கைகளே இப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடைநிலை ஊழியர்களான ""கலாசி'' தொழிலாளர்களில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வேலையிலிருந்து பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். தண்டவாளங்களில் விரிசலைக் கண்டறிந்து பழுது நீக்குதல், தண்டவாளத்தின் கீழுள்ள ஜல்லி இறுகி விடாமல் சீரமைத்தல் பராமரித்தல், ரயில் பெட்டிகளைத் துப்புரவு செய்தல், ரயில் நிலையங்களைப் பராமரித்தல், ரயில்வே குடியிருப்புகள், உணவகம், முன்பதிவு சேவை, ஆளற்ற லெவல் கிராசிங்குகள், பாலங்களைக் கண்காணித்தல் முதலான இரயில்வே துறையே முன்னர் செய்துவந்த பணிகள் அனைத்தும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரை வார்க்கப்பட்டுள்ளன. பணிமனைகளில் 15 சதவீதமும் தற்காலிக ஊழியர்களில் 100 சதவீதமும் ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்யப்பட்டு விட்டனர். அதிவேக ரயில்கள் சிறிய ஊர்களில் நிற்காது என்று காரணம் காட்டி, பல ரயில் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய ரயில் நிலையங்களில் ஆட்குறைப்பு காரணமாக ஊழியர்கள் மீது கூடுதல் வேலைப்பளு சுமத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளே இரயில்வே துறையின் இலாபத்துக்கு முக்கிய காரணமாகும்.

இதுதவிர, ""ஈ டிக்கெட்டிங்'' முறை மூலம் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் வாயிலாக பயணச் சீட்டு விற்பனையைக் கொண்டுவந்து, ஆட்குறைப்புக்கும் அதன்மூலம் அதிகலாபத்துக்கும் திட்டம் தீட்டி வருகிறார் லாலு. ஏற்கெனவே தனியாருடன் சேர்ந்து 225 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார் லாலு. இந்திய ரயில்வேக்குச் சொந்தமாக நாடெங்குமுள்ள 10,000 ஏக்கர் உபரி நிலங்களைத் தனியாருக்கு விற்று ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டவும், ரயில்வே கட்டிடங்களில் தனியாருடன் இணைந்து தங்கும் விடுதிகள், பேரங்காடிகள், திரையரங்குகளை நிறுவவும் திட்டங்கள் தயாராக உள்ளன. வருவாய் அதிகம் கிடைத்துவரும் முக்கியமான சரக்கு ரயில் நிலையங்களையும் பயணிகள் ரயில் நிலையங்களையும் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான பம்பார்டியர், ஜெனரல் எலக்டிரிகல்ஸ் ஆகியன இதற்குப் பேரங்களை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே பயணிகள் பெட்டிகளையும் சரக்கு ரயில் பெட்டிகளையும் 15 தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 500 கோடி அளவுக்கு இரயில்வே துறை ஆதாயம் ஈட்டியுள்ளதால், இதை மேலும் விரிவுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்தகைய தொழிலாளர் விரோததனியார்மய நடவடிக்கைகளால் விரைவில் 3 லட்சம் ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வேலையிலிருந்து விரட்டப்படும் அபாயத்தில் உள்ளனர்.

விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால், ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் விளம்பரங்களை அனுமதித்து வந்தது போய், இப்போது ஒரு ரயிலையே விளம்பரத்துக்காக பெயரிட்டு இயக்குமளவுக்கு தனியார்மயத்தில் மூழ்கி முத்தெடுக்கிறார், லாலு. கொலைகார கோக்கின் பங்காளி நிறுவனமான பெப்சி குளிர்பான கம்பெனியின் ""குர்குரே'' எனும் நொறுக்குத் தீனியை விளம்பரப்படுத்துவதற்காகவே ""குர்குரே எக்ஸ்பிரஸ்'' இயக்கப்படுகிறது.
உணவு மற்றும் பிற சேவைகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டதன் மூலம், உபரியாக உள்ள ஊழியர்கள் குறைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1000 கோடி அளவுக்குச் செலவுகள் குறைந்துள்ளதாகப் பெருமைப்படும் லாலு, இத்திட்டத்தை நாடெங்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
சமூகநீதி, இடஒதுக்கீடு பேசும் பிற்பட்டோர் நலச் சங்கங்களில் பூஜிக்கப்படும் லாலுவால், ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஊழியர்களாவர். கடைநிலை ஊழியர்களான இவர்களின் வயிற்றிலடித்துதான், இலாபக் கணக்கு காட்டுகிறார் லாலு. பால்கோ போன்ற அரசுத்துறை நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் அல்லாமல், படிப்படியாக இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் புதிய உத்தி; ஒட்டு மொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்து வீதியில் வீசியெறியும் நரித்தனம்; விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, உள்வட்டப் பேருந்து என்றெல்லாம் பெயரிட்டு கட்டணக் கொள்ளையை நடத்தும் தி.மு.க. அரசை விஞ்சும் சட்டபூர்வ வழிப்பறி இவைதான் இரயில்வே அமைச்சர் லாலுவின் நிர்வாகத் திறன்!

இதனால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ""கோமாளி, ஊழல் பெருச்சாளி, கிரிமினல் அரசியல்வாதி, மாட்டுக்கார வேலன்'' என்றெல்லாம் நக்கலடித்து சாடி வந்த பார்ப்பனபனியா பத்திரிகைகளும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் இன்று அவரை ""டாப் டென்'' அமைச்சர்கள் பட்டியலில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

· கவி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது