Monday, September 3, 2007

"இறந்தவன் நல்லவனல்ல; கொன்றவன் கெட்டவனுமல்ல" நீதி கேட்கிறாள் ஒரு தாய்!

நீதிமன்றங்கள் என்பவை உண்மையில் அநீதிமன்றங்கள்தான் என்று நாம் அரசியல் ரீதியில் பலவாறாக அமபலப்படுத்தி எழுதியிருக்கிறோம். சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து இந்த உண்மையினை முகத்திலெறியும் ஒரு கடிதத்தை இங்கே வெளியிட்டுள்ளோம்.

இந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் ஒரு தாய். இவரது மகன்கள் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கொலையுண்டவ்னோ அண்ணன்.

தனது இரண்டு மகன்களும் செய்தது குற்றமல்ல,நியாயமான கொலைதான். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திற்கு அந்தத் தாய் அனுப்ப விழையும் முறையீடும், வாசகர்களிடம் நீதி கேட்டு அவர் எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டுள்ளன.

ஊர் பெயர் விவரங்களையெல்லாம் உள்ளது உள்ளபடியே அவர் எழுதியிருந்த போதிலும் அவற்றை மாற்றியுள்ளோம்;

கிழே க்ளிக் செய்து படிக்கவும்...
.
..
..
..
..
நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி குற்றாமாச்சே" - என்ற வசனத்தை வழக்கறிஞர்கள் வாயிலிருந்தும், போலீசார் வாயிலிருந்தும் நாம் எவ்வளவு முறை கேட்டிருப்போம், நியாயத்துக்குப் புறம்பான ஒரு சட்டம்; அந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் நீதி; நீதியால் தண்டிக்கப்படும் நியாயம்!

யாருக்கு நீதி வழங்குகிறது இந்தத் தண்டனை யாருக்கு நிவாரணம் வழங்குகிறது இந்தத் தீர்ப்பு எந்த ஒழுங்கை நிலைநாட்டுவதர்காக அந்த இரண்டு பேரும் சிறை வைக்கப்பட்டிருகிறார்கள் இவை நீத்மன்றம் விடை தரமுடியும் கேள்விகள். நீதிவழங்கு நெறியின் முகத்தில் காறி உமிழும் கேள்விகள்.

நீதிமன்றத்தில் பேச தாய்க்கும் உரிமை இல்லை; தாய் மொழிக்கும் உரிமை இல்லை. புரியாத மொழியில் (ஆங்கிலத்தில்) விசாரனை; புரிகின்ற மொழியில் (கை விலங்கு) தண்டனை ! நீதிமன்றத்தில் "தமிழ் வேண்டும்" என்பதும் "நீதி வேண்டும்" என்பதும் இரு வேறு கோரிக்கைகளல்ல என்பதை இதைவிடத் தெளிவாக, இதைவிட மனதைத் தொடும் விதத்தில் வேறேப்படிச் சொல்ல முடியும்.

இந்த சட்டம் மக்கள் விரோதமானது என்பது மட்டுமல்ல, நீதிமன்ற அமைப்பின் வடிவமும் மக்கள் விரோதமானது. எனவேதான் சொல்கிறோம் இதற்குத் தீர்வு மக்கள் நீதிமன்றம்தான்.

"நீதி" எனும் சொல்லை மட்டும் கேள்விக்குள்ளாக்கவில்லை இந்தக் கடிதம். எது குற்றம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஒரு குடும்பத்தை நாசமாக்கிய சமூக விரோதியைக் கொல்வதில் என்ன தவறு என்ற கேள்வியை எழுப்புகிறது. குடும்பத்துக்குப் பொருந்தும் இந்த நியாயம் சமூகத்திற்கும் பொருந்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.
நன்றி புதிய கலாச்சாரம் மார்ச் 2000

Sunday, September 2, 2007

"நாளை உலகம்"

என் தெருவில்
தொகுதி எம்.எல்.ஏ
திண்ணையில் எம்.பி
.
சரியாக வரும்
நகரப் பேருந்து
தட்டுப்பாடு இல்லாத
தண்ணீர்க் குழாய் , மின்சாரம்,
கனிவுடன் மருந்து போடும்
அரசு மருத்துவர்,
வேலைக்கு ஆளின்றி
தேடி அலையும்
வேலை வாய்ப்பு அதிகாரி
உழுதவன் கணக்கில்
ஆயிரமாய் இலாபம்;
.
சுத்தமாய் நகரம்,
சுறுசுறுப்பாய் மக்கள்
தவறு கண்டு
இமை சிவக்கும்
இளைஞன்.
.
இவை
என் தாய்
என்னைத் தட்டி எழுப்பும் வரை.

-பி.செல்வராஜ்

நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா

கடந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது. மற்ற சிலர் தப்பிவிட்டதாகக் கூறி, சிலருடைய புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறது, போலீசு. ஜூலை 8ம் தேதியன்று இரவு சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டு, போலீசு விசாரணைக்குப்பின் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தப்பியவர்களைப் பிடிப்பதற்கு மதுரை மற்றும் பிற நகரங்களிலும் ""கியூ'' பிரிவு உளவுத்துறைப் போலீசு வீடுவீடாகச் சோதனை நடத்தியிருக்கிறது.
வீரப்பனின் பிணத்தைச் சுட்டுக் கைப்பற்றிய விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

""தமிழகமெங்கும் 70 பேர் கொண்ட 70 ஆயுதக் குழுக்கள்!'', ""பெரியகுளத்தில் ஏ.கே47 துப்பாக்கிகள், ஆயுதப் புதையல்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள்'', ""ஆயுதப்படையில் சேருவதற்குத் தயாராக 600 மாணவர்கள்'' என்று விஜயகாந்த் சினிமாவை விஞ்சும் வகையில் திரைக்கதை எழுதுகின்றன, பத்திரிகைகள். "நக்சல் வேட்டை' என்று போலீசு அராஜகத்தைக் கொண்டாடுவது, விஜயகுமாரையும் உளவுத் துறை போலீசு அதிகாரிகளையும் ஏதோ உயிருக்குத் துணிந்த வீர சாகச நாயகர்களாகச் சித்தரிப்பது, கைது செய்யப்பட்ட தோழர்களை "அவன், இவன்' என்று ஏகவசனத்தில் எழுதுவது என நாலாந்தரமான போலீசு எடுபிடிகளாகவும் பரபரப்புக்காகப் பச்சைப் பொய்களைப் புனைந்து எழுதும் பேனாத்தரகர்களாகவுமே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மாவோயிஸ்டுகள் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயம் போல ஒரு சித்திரம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. எனினும் இந்தத் "தேடுதல் வேட்டை'க்குத் தலைமை தாங்கும் விஜயகுமார், நாஞ்சில் குமரன் போன்ற போலீசு அதிகாரிகள் ""அச்சப்படும் அளவுக்கு தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் வளர்ந்துவிடவில்லை'' என்று கூறுகின்றனர். கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார் ""தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 25 முதல் 35 வரை இருக்கலாம் என்பது எங்கள் கணக்கு'' என்று பேட்டி கொடுக்கிறார். ""கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மிகச் சாதாரணமானவை'' என்றும் போலீசே கூறுகிறது.பிறகு ஏன் இந்த ஆரவாரம்? பெரியகுளத்தில் வேட்டை, குற்றாலத்தில் வேட்டை, கொடைக்கானலில் வேட்டை, தருமபுரியில் வேட்டை என்று விஜயகுமாரின் காட்டு சீன் ஸ்டில்கள், சினிமா ஸ்டில்களைப் போல அன்றாடம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவது ஏன்? பெரியகுளத்தில் நிரந்தரமான அதிரடிப்படை முகாம் எதற்கு?
இது போலீசின் வழக்கமான விளம்பர மோகம் அல்ல; மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அரச பயங்கரவாதம். "நக்சல்பாரி' என்ற சொல்லைக் கேட்டாலே மக்களுக்கு அதிரடிப் படையின் கொடூரமுகம் நினைவுக்கு வரவேண்டும் என்பதும், அவர்கள் அஞ்சி நடுங்கி ஒதுங்க வேண்டும் என்பதும்தான் இந்த நடவடிக்கையின் முதல் நோக்கம்.

இரண்டாவதாக, இது தீவிரவாத ஒழிப்பில் மன்னனை விஞ்சிய ராஜவிசுவாசியாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ள கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சி. ""தமிழகத்தைத் தீவிரவாத அபாயத்திலிருந்து காப்பாற்றி அமைதியான வாழ்க்கையை அளிக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதுடன், சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துவிடும்'' என்பது ஜெயலலிதா நிரந்தரமாக முன்வைத்துவரும் பாசிச அரசியல். துக்ளக் முதல் இந்து வரையிலான பார்ப்பனப் பத்திரிகைகளால் வழிமொழியப்படும் பிரச்சாரமும் இதுதான்.

தற்போது ஜெயலலிதாவின் ஆசி பெற்ற விஜயகுமாரை "நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்' தலைவராக நியமித்திருப்பதன் மூலம் "வசிட்டன் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்' வாங்கத் துடிக்கிறார், கருணாநிதி. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழகத்தைப் பேணுவதற்கும், ஆளும் வர்க்கங்களின் மனம் கவர்ந்த அமைதிப் பூங்காவாக மாநிலத்தை "மார்க்கெட்டிங்' செய்வதற்கும் நக்சல் வேட்டை என்னும் இந்த ஊதிப்பெருக்கப்பட்ட நடவடிக்கை திமுக அரசுக்குத் தேவைப்படுகிறது.
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் ""அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.

இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தான்.

தினகரன் பத்திரிகை மீது பட்டப்பகலில் போலீசின் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். 3 ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தும், அந்த வன்முறை வெறியாட்டம் மறுக்க முடியாதவண்ணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தும், ""தாக்குதலுக்குக் கருத்துக் கணிப்புதான் காரணம்'' என்று கூறி, சட்டமன்றத்திலேயே அதனை நியாயப்படுத்தினார், கருணாநிதி. அண்ணன் அழகிரிக்கு 2% தான் ஆதரவு என்று எழுதியதற்காக ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஊழியர்களுடன் சேர்த்துக் கொளுத்தலாமாம். அழகிரி ஆதரவாளர்களின் கோபத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்கும், பல ஆயிரம் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் படுகொலைக்கும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக்கும் தள்ளும் இந்த அரசமைப்புக்கு எதிராக ஆயுதமேந்துவது தீவிரவாதமாம்!

மூன்று இளைஞர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றத்துக்காகத் தமிழகமெங்கும் மாவோயிஸ்டு அமைப்பினர் மீது தேடுதல் வேட்டை நடத்துகிறது போலீசு. சிவகங்கையில் நட்ட நடுவீதியில் ரிமோட் குண்டு வைத்து தி.மு.க. நகராட்சித் தலைவரை தி.மு.க.காரனே கொலை செய்கிறானே, அந்தப் படுகொலைக்கு என்ன காரணம்? அன்று உள்ளாட்சித் தேர்தலையும், இன்று கூட்டுறவுத் தேர்தலையும் ரத்து செய்ய வைத்த வன்முறைக்கான காரணம் என்ன? தமிழ் நாட்டையே கொள்ளைக் காடாக்கி வரும் கழக வீரப்பன்கள் மீது எந்த அதிரடிப்படை ஏவப்பட்டிருக்கிறது?

"நக்சல் ஒழிப்பு' நடவடிக்கையில் காட்டப்படும் இந்தத் தீவிரத்தில் ஒரு சதவீதமாவது "தீண்டாமை ஒழிப்பு', "லஞ்ச ஒழிப்பு', "மதவெறி ஒழிப்பு' நடவடிக்கைகளில் காட்டப்பட்டதுண்டா? காடு மலையெல்லாம் தேடி அலைய வேண்டிய தேவையே இல்லாமல் கண்முன்னால் காட்சி தரும் இந்தக் கிரிமினல் குற்றங்களை ஒழிக்க ஒரு அமைதிப்படையாவது ஏவப்பட்டதுண்டா?

"வன்முறையா மென்முறையா' என்பதல்ல பிரச்சினை. இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும் ஆயுதம் ஏந்தி மோதிக்கொள்வதில் ஆளும் வர்க்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. மக்கள் யுத்தக் குழுவினர் சந்திரபாபு நாயுடுவுக்கு வைத்த குண்டைக் காட்டிலும், சிவகங்கையில் வைக்கப்பட்ட ரிமோட் குண்டுதான் நவீன தொழில்நுட்பம். அவ்வாறிருந்தும் சிவகங்கையில் தேடுதல் வேட்டை கிடையாது, காரணம், இது திமுக ஆட்சி என்பது மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகள் எதுவும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவையல்ல என்பதுதான் அடிப்படைக் காரணம்.

மாறாக, ""இந்த கொள்ளைக்கார அரசமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும்'' என்று கூறுவதனால்தான், ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தி நக்சல்பாரிகள் மீது பாய்ந்து படுங்குகின்றன.
குறிப்பாக, தனியார்மயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள், நாளை கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்கிறது. துப்பாக்கிகாடுபயிற்சி என்பதல்ல எதிரிகளின் அச்சத்துக்குக் காரணம். மார்க்சியம்லெனினியம்மாசேதுங் சிந்தனை என்ற கம்யூனிசச் சித்தாந்தம்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களின் உறுதியும் விடாப்பிடியான முயற்சியும் அவர்களுக்குப் பீதியூட்டுகிறது.

இதனை மறைத்துக் கொண்டு, "வேலையில்லாத பட்டதாரிகளும் விரக்தியுற்ற இளைஞர்களும்தான் நக்சல்பாரிகளாக மாறிவிடுவதாக'க் கதையளக்கிறார்கள். "இந்த சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் நக்சலியம் ஒழிந்துவிடும்' என்று கனாக் காண்கிறார்கள். வேலையின்மை, வறுமை காரணமாக நக்சலியம் பரவுகிறது (திருட்டு, விபச்சாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் பரவுவதைப் போல) என்று கூறுவதன் மூலம் நக்சல்பாரி அரசியலையே கிரிமினல் குற்றமாகச் சித்தரிக்கிறார்கள்.

விரக்தியுற்றவர்கள்தான் நக்சல்பாரிகளாகிறார்கள் என்ற கூற்று உண்மையாயிருப்பின், தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சம் விவசாயிகளும் நக்சல்பாரிகளாகியிருக்க வேண்டும். நக்சல்பாரிகளை உந்தித் தள்ளும் உணர்ச்சி, விரக்தி அல்ல; அது சமூக அநீதிகளுக்கு எதிரான ஆவேசம். அவர்களை வழிநடத்துவது மார்க்சியம்லெனினியம் என்ற அறிவியல் பார்வை. நக்சல்பாரிகள் சமூகத்தைத் தம் தோளில் சுமப்பவர்கள், மக்கள் நலனுக்காகத் தம் சொந்த வாழ்வின் இன்பங்களைத் தாமே முன்வந்து துறப்பவர்கள். நக்சல்பாரிகள் விரக்தியுற்ற இளைஞர்களுமல்ல, கம்யூனிசம் சோற்றால் அடித்தால் செத்துவிழும் கொள்கையுமல்ல.

நக்சல்பாரிகளின் அரசியலைத் தவறு என்று யாராலும் வாதாட முடியாது. நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு சாதாரணத் தொண்டன் எழுப்பும் அரசியல் கேள்விக்கு எந்த ஓட்டுப் பொறுக்கித் தலைவனாலும் பதில் சொல்ல முடியாது. நக்சல்பாரிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. எனவேதான் அச்சுறுத்துகிறது, அவதூறு செய்கிறது, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது.

பெரியகுளம் சம்பவத்தையொட்டி நக்சல்பாரிகளுக்கு எதிராக அரசும் ஊடகங்களும் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். ஆனால், மேற்கூறிய பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லையென்றோ, மாவோயிஸ்டுகளின் "ஆயுதப் போராட்டத்துக்கான' நியாயத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றோ அதற்குப் பொருள் அல்ல. பெரியகுளம் சம்பவத்தையொட்டி மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையே இதற்குச் சான்று கூறுகிறது.

""மாவோயிஸ்டுகளின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயற்சிக்கின்றன''... ""ஆயுதப் போராட்டத்திற்கான சிறிய தயாரிப்புகளையே பெரும் பயங்கரவாதமெனச் சித்தரித்துப் பயங்கரவாத பீதியை உருவாக்கி வருகிறது கருணாநிதி அரசு'' என்று கூறும் அந்த அறிக்கை, ""மாவோயிஸ்டுகள் யார், அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று சுருக்கமாக விளக்குகிறது.

"மாவோயிஸ்டுகள் யார், அவர்களுடைய கொள்கை என்ன, அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்' என்பதையே மக்களுக்கு விளக்கிப் புரியவைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு அமைப்பு, ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதை விளக்கத் தேவையில்லை. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இவர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை.
பேருந்து எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக சனவரி, 2000இல் தோழர் ரவீந்திரனை போலீசு காவலில் வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று விட்டு, அதனை மோதல் கொலை என்று புளுகியது போலீசு. அது தி.மு.க. ஆட்சிக்காலம். பின்னர், நவம்பர், 2003இல் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் 26 தோழர்கள் கைது செய்யப்பட்டு பொடாவில் சிறை வைக்கப்பட்டனர். தோழர் சிவா சுட்டுக் கொல்லப்பட்டார் அது ஜெயலலிதா ஆட்சிக் காலம். இப்போது பெரியகுளம் சம்பவம்.

பெரியகுளத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி மாவோயிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை எதுவும் கூறவில்லை. ஆனால், முன்னர் ரவீந்திரன் கொலை செய்யப்பட்டபோதும், ஊத்தங்கரையில் 26 பேர் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட போதும், மக்கள் ஆதரவு அடித்தளம் கூட இல்லாமல் ஆயுதக் குழுக்களைக் கட்டும் இவர்களுடைய சாகசவாதம் பற்றி நாம் விமரிசித்தோம். மாவோயிஸ்டுகள் கோபப்பட்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான மக்களைத் திரட்டியிருப்பதாகவும், அம்மாவட்டம் ஒரு ஆயுதப்போராட்ட முனையாக உருவாகியிருப்பதாகவும் வலிந்து வாதாடினார்கள்.

தற்போது பெரியகுளம் பகுதி! இங்கே மாவோயிஸ்டு அமைப்பிற்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான செல்வாக்கு ஏதும் இல்லை. அன்றைய சம்பவத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக அந்த வட்டாரத்து மக்கள் யாரும் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி இல்லை.

""மலைத்தொடர்கள், காட்டுப் பகுதிகள், பாதுகாப்பான மறைவிடங்கள் கொண்ட காட்டுப்பகுதிகளாக இருந்தால் போதும்; அங்கே ஆயுதக்குழுக்களைக் கட்டிவிடலாம், ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கிவிடலாம்'' என்று சிந்திக்கும் அளவுக்கு புவியியல்தான் இவர்களை வழிநடத்துகிறது; அரசியல் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. அரசியல் கண்ணோட்டம் ஏதுமற்ற இந்த அசட்டுத்தனமான நடவடிக்கையை இவர்கள் தம்முடைய சொந்த விவகாரமாகக் கருதிக் கொள்கிறார்கள். ""நாங்கள் போராடுகிறோம், நாங்கள் தியாகம் செய்கிறோம், உனக்கென்ன நட்டம்?'' என்ற சாகசவாதிகளுக்கே உரித்தான மனோபாவம்தான் இவர்களுடைய சிந்தனையை வழிநடத்துகிறது.
""கம்யூனிஸ்டுகள் தம்முடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள்'' என்ற மிக எளிய உண்மை கூட, எதிரிகளின் அவதூறுப் பிரச்சாரம் தொடங்கிய பின்னர்தான் இலேசாக இவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது.

எனவேதான் ""மாவோயிஸ்டுகள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று தங்களுடைய அறிக்கையில் மக்களுக்கு விளக்கம் தருகிறார்கள். ""சிறப்புப் பொருளாதார மண்டலம், கோக், பெப்சி, ரிலையன்சு, குஜராத் படுகொலைகள்..'' என்று ஒரு நீண்ட பட்டியலைக் கூறி ""இத்தகைய பயங்கரவாதங்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதம் ஏந்துவது பயங்கரவாதமல்ல. அத்தகைய மக்கள் புரட்சிக்குத் தலைமை ஏற்கவே மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்துகிறார்கள்'' என்கிறது அவர்களது அறிக்கை.
மேற்கூறிய பிரச்சினைகளுக்காக ஏற்கெனவே மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறதாம்! அதற்கு இவர்கள் தலைமை தாங்குகிறார்களாம்! புரட்சிக்குத் தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுகள், புரட்சியில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் "தன்னிலை விளக்கம்' தந்து புரிய வைப்பதை நாம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.

சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கட்டும், பிற தனியார்மய நடவடிக்கைகளாக இருக்கட்டும், அவற்றுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அரசமைப்பின் வரம்புக்குள்ளேயே தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல்வேறு மக்கட்பிரிவினர் நடத்தும் இத்தகைய போராட்டங்கள் அவை போர்க்குணமிக்கவையாக இருப்பினும் பொருளாதாரப் போராட்டங்களே. மறுகாலனியாக்க எதிர்ப்பு என்ற அரசியல் கண்ணோட்டமோ, இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்ற இலட்சியமோ அத்தகைய போராட்டங்களுக்கு இல்லை. அத்தகைய அரசியல் முழக்கங்களை முன்வைத்து மக்களைத் திரட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமை. புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது என்பதன் பொருள் இதுதான். இப்படிப்பட்ட புரிதலோ, இவ்வாறு மக்களைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையோ மாவோயிஸ்டுகளுக்கு இல்லை.

மாறாக, மக்களை அரசியல் படுத்த ஒரு விபரீதமான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். தத்தம் கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அவற்றில் கலந்து கொண்டு, அப்போராட்டங்களையே போலீசுடனான மோதலாக மாற்றினால், நிராயுதபாணிகளான மக்களோ போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார்கள்; இப்படியாக "அரசு என்பது அடக்குமுறைக் கருவி' என்ற உண்மையை மக்களுக்கு அனுபவபூர்வமாக புரிய வைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். இப்படியான செயல்கள் மூலம் அவர்கள் மத்தியிலிருந்து முன்னணியாளர்கள் சிலரைத் தமது "ஆயுதக் குழுக்களுக்கு' வென்றெடுக்கிறார்கள். இதுதான் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்ட மாவோயிஸ்டுகள் வகுத்திருக்கும் வழிமுறை.

சில சிறப்பான நிலைமைகளில் ஆந்திரம் மற்றும் தண்டகாரண்யாவின் பழங்குடி மக்கள் மத்தியில் தாங்கள் பெற்றிருக்கும் ஆதரவைக் காட்டி, அதனை மக்களின் ஆயுதப் போராட்டம் என்று சித்தரிக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். இதையே நாடு முழுவதற்கும் விரிவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.அந்த மக்கள் ஆதரவின் தன்மை என்ன? அது அரசியல் ரீதியான ஆதரவல்ல. ""நம்முடைய கோரிக்கைகளுக்காக நக்சல்பாரிகள் உயிரைக் கொடுக்கிறார்கள்'' என்ற அறவுணர்வின் அடிப்படையில் பழங்குடி மக்கள் வழங்கும் ஆதரவு. இத்தகைய ஆதரவு மக்களிடம் அரசியல் உணர்வை வளர்ப்பதில்லை. மாறாக, அதனை இல்லாமல் செய்து, மக்களை வெறும் பார்வையாளர்களாக்கி விடுகிறது.

சமீபத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் அறிவித்த "பந்த்'இல் ஆந்திரத்தில் எவ்வித சம்பவமும் இல்லை என்கின்றன பத்திரிகைச் செய்திகள். சட்டிஸ்காரிலோ தொலைபேசி கோபுரம் தகர்ப்பு, மின் கோபுரம் தகர்ப்பு என்பன போன்ற சில இராணுவ நடவடிக்கைகள்தான் நடந்துள்ளன. மக்களின் அரசியல் உணர்வை அமைப்பாக்கிக் காட்டுகின்ற போராட்ட வடிவமான "பந்த்' என்ற நடவடிக்கை, செயலூக்கமிக்க பங்கேற்பின் மூலம் அவர்களுடைய வர்க்க உணர்வை இன்னும் மேம்பட்ட தளத்துக்கு உயர்த்தவேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கை, அதன் பொருளை இழந்து ஆளும் வர்க்கத்துக்கு "தொந்திரவு தரும் நடவடிக்கையாக'ச் சுருங்கிவிட்டதை நாம் காண்கிறோம்.

ஆந்திரத்தில் தங்கள் அமைப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்கிறார் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தோழர் சோனு. (பீப்பிள்ஸ் மார்ச், ஜூலை, 2007) ஆனால், இந்தப் பின்னடைவு குறித்தும்கூட அவர்கள் இராணுவ ரீதியாகப் பரிசீலிக்கிறார்களேயன்றி, அரசியல்ரீதியாகப் பரிசீலிப்பதில்லை.

""அங்கே மாவோயிஸ்டுகள் ஏற்கெனவே நிலைநாட்டியிருப்பதாகக் கூறிக் கொள்ளும் "மக்கள் அதிகாரத்தைப்' பாதுகாத்துக் கொள்ள மக்கள் போராடுகிறார்களா? ராஜசேகர் ரெட்டி அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள், பேச்சு வார்த்தையின்போதே போலி மோதல் கொலைகளை அரசு தொடங்கியபோது, அதனை எதிர்த்து அவ்வாறு மக்கள் அணிதிரளாதது ஏன்? மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த ஆந்திரத்துக்கு, கடுமையான மக்கள் எதிர்ப்புகள் இன்றி புஷ் விஜயம் செய்ய முடிவது எப்படி? சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆந்திரம் முன்னிலை வகிப்பதும், நாயுடுவைக் காட்டிலும் தீவிரமாகப் புதிய தாராளவாதக் கொள்கைகளை ரெட்டி அமல்படுத்த முடிவதும், இவற்றுக்கெல்லாம் எதிராக நந்திக்கிராமுடன் ஒப்பிடத்தக்க வகையிலான மக்கள் போராட்டங்கள் எதுவும் ஆந்திரத்தில் நடைபெறாமல் இருப்பதும் ஏன்?'' என்பன போன்ற கேள்விகளை அவர்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்வதில்லை.

""அடக்குமுறை இருப்பதால் மக்கள் திரளவில்லை, இல்லையென்றால் மக்கள் திரளுவார்கள்'' என்ற எளிய சூத்திரத்தைச் சொல்லி ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். வரலாறு நெடுகிலும் நடந்திருக்கின்ற மக்களின் அரசியல் ரீதியான எழுச்சிகளோ, நம் கண் முன்னே காஷ்மீரிலும், மணிப்பூரிலும் ஏன், நந்திக்கிராமிலும் அடக்குமுறைகளை மீறிக் கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சிகளோ கூட (அவை வேறு யார் தலைமையிலானவையாக இருந்தாலும்) மாவோயிஸ்டுகளுடைய கண்களைத் திறக்கவில்லை. ஏனெனில், அவர்களுடைய சுத்த இராணுவக் கண்ணோட்டம், மக்களின் அரசியல் முன்முயற்சி பற்றிக் கவலைப்படுவதில்லை. "தமது ஆயுத நடவடிக்கைகளுக்கு உதவுவது' என்ற கோணத்தில் மட்டுமே மக்களின் ஆதரவு குறித்துக் கவலைப்படுகிறார்கள்.

""மாவோயிஸ்டுகளின் கொள்கைகளை மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயல்கின்றன'' என்று மாவோயிஸ்டு தமிழ் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஊடகங்கள் அவதூறு செய்வது இருக்கட்டும், உண்மை நிலவரமென்ன? "" ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதுதான் ஒரு அமைப்பை புரட்சிகர அமைப்பு என்று மதிப்பிடுவதற்கான முன் நிபந்தனை'' என்று மாவோயிஸ்டு அமைப்பினர் கொண்டிருக்கும் கருத்துக்கும், சிறுபிள்ளைத்தனமான பெரியகுளம் ஆயுதப்போராட்டத் தயாரிப்புக்கும் வேறென்ன பொருள்? "புரட்சிகர அரசியலின் பௌதிக வடிவமே துப்பாக்கிதான்' என்று கருதும் சிந்தனைதானே இதில் வெளிப்படுகிறது!

""அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப்போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்ய வேண்டும்'' என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள். ""மக்கள் ஆயுதப்போராட்டத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். சும்மா எத்தனை நாள் பேசிக்கொண்டே இருக்க முடியும்? நாம்தான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்'' என்று அரசியலையே வீர வசனமாகச் சுருக்குகிறார்கள்.

மக்களைப் புரட்சிக்கு அணியமாக்குவதும், தலைமை தாங்குவதும்தான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பணியே அன்றி, மக்களின் சார்பாகப் புரட்சி செய்வதல்ல. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களுடன் புரட்சியாளர்கள் "ஒண்டிக்கு ஒண்டி' நடத்தும் சண்டையும் அல்ல. ஆனால், மக்களுக்கு விடுதலையை "வழங்கப் பொறுப்பேற்றிருக்கும்' இடது சாகசவாதம் இப்படித்தான் கருதிக் கொள்கிறது.

வலது சந்தர்ப்பவாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் புரட்சிக்கு இழைக்கும் துரோகம் எளிதில் அம்பலமாகிவிடுகிறது. ஆனால், இடது சாகசவாதமும் புரட்சிக்கு இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. சிறையையும் சித்திரவதையையும் சந்திக்கும் அந்தத் தோழர்களின் தனிப்பட்ட இழப்பாக மட்டுமே இது புரிந்து கொள்ளப்படுகிறது.

""பயங்கரவாதப் படையான அதிரடிப்படையை அனுப்புவதன் மூலம் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை மட்டுமல்ல, இச்சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் அனைவரையும் மிரட்ட முயற்சிக்கிறார் கருணாநிதி'' என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு.உண்மைதான். ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான அரசு எந்திரமும் அதிரடிப்படையும் மக்கள் அனைவரின் பொது எதிரி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அந்த எதிரிப்படை தன்னை நாயகனாகச் சித்தரித்துக்கொள்ளவும், தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்ளவும், புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் மாவோயிஸ்டுகளின் இந்த நடவடிக்கை எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது புரட்சிக்கு ஏற்படும் இழப்பு என்பதை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களா என்பதுதான் கேள்வி.
— ஆசிரியர் குழு

Saturday, September 1, 2007

'விளம்பரங்களற்ற மாநகரங்கள்': அரசு திடீர் முடிவின் பின்னணி !!

சென்னை: நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் தமிழகத்தின் ஆறு மாநகராட்சிகளிலும் விளம்பர போர்டுகளுக்குத் தடை விதிக்கவும், இதன் மூலம் இந்த ஆறு நகரங்களையும் விளம்பர போர்டுகளற்ற நகரங்களாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
..
இதன் பின்னணியில் கொஞ்சம் விவகாரமானது.
..
தாம்பரத்தைத் தாண்டி சென்னைக்குள் நுழைபவர்கள் கண்களில் முதலில் படுவது ஊர் அல்ல, பெரிய பெரிய விளம்பர போர்டுகள்தான். அந்த அளவுக்கு விமான நிலையத்தில் தொடங்கி சென்னை நகரின் பிரதான சாலைகள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மெகா சைஸில் காணப்படும் இந்த விளம்பர போர்டுகளின் பின்னணியில் மகா பெரிய மனிதர் ஒருவர் மறைந்திருக்கிறார்.
..
சென்னை நகரின் பெரும்பாலான விளம்ப போர்டுகளை வைத்திருப்பது அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனுக்குச் சொந்தமான செவன் ஸ்டார் நிறுவனம்தான். இந்த நிறுவனத்தைத் தாண்டி ஒரு விளம்பர நிறுவனம் செயல்படுவது என்பது சென்னையில் சத்தியமாக சாத்தியமில்லாத விஷயம்.
..
அந்த அளவுக்கு தேவராஜனின் நிறுவனம் படு பவர் ஃபுல்லானது. சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோைவ, மதுரை, திருச்சி, சேலம் என பெரும் நகரங்கள் அனைத்திலும் கூட தேவராஜனின் திருக்கரங்கள்தான் நீண்டுள்ளன. இதுதவிர பெங்களூரில் உள்ள பிரபலமான செல்வெல் குரூப்புடன் இணைந்து செவன் ஸ்டார் நிறுவனம் கர்நாடகத்திலும் தனது கிளை பரப்பியுள்ளது.
..
தேவராஜனின் செல்வாக்கு மிகப் ெபரியது. இந்தியாவின் பல முன்னணி நகரங்களில் இவரது விளம்பர போர்டுகள் பளிச்சிடுவதைக் காணலாம். எந்த மாநிலமாக இருந்தாலும், அதில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தேவராஜனின் செல்வாக்குதான் அங்கு கொடி கட்டிப் பறக்கும்.
..
கடந்த அதிமுக ஆட்சியிலும் கூட தேவராஜனை பல வழிகளிலும் மடக்கி உள்ளே தள்ள ஜெயலலிதா கடுமையாக முயன்றார். ஆற்காடு வீராசாமியின் வீட்டிலும் கூட லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
.
ஆனால், வெறும் மருந்து மாத்திரை பில்கள் தான் சிக்கின. தனது திறமையால் ஜெயலலிதாவை சமாளித்து தப்பிவிட்டார் தேவராஜன். தேவராஜனால் சென்னை மாநகராட்சி அடைந்துள்ள நஷ்டத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றி விழுந்து விடுவார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு வருவாயை வாரி அள்ளியுள்ளாராம் தேவராஜன்.
..
விளம்பர போர்டுகள் தொடர்பாக வரும் எதிர் கருத்துக்களுக்கு கவுண்டர் செய்தால் ஆற்காடுக்கும் திமுகவுக்கும் நிச்சயம் கெட்ட பெயர் உருவாகும் என்ற சூழலில் தான் தேவராஜனுக்கு இல்லாதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற 'நல்ல எண்ணத்தில்' ஒட்டு மொத்தமாக விளம்பர போர்டுகளுக்கே தடை போட முடிவு செய்துள்ளனர்.

அணு ஒப்பந்தமும் அத்வானி சர்க்கஸும்!!

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாஜக நிலை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி மீண்டும் ஒரு நழுவல் விளக்கத்தை அளித்துள்ளார்.
..
அணு சக்தி ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் பாஜக எதிர்த்து வந்தது. பின்னர் இடதுசாரிகளுடன் சேர்ந்து மத்திய அரசை விமர்சித்து வந்தது.
.
ஆனால், திடீரெ அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. நாட்டு நலனைக் கருதி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அத்வானி அறிவித்தார். ஆனால் பாஜகவின் இந்த பல்டி கட்சிக்குள் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
..
இதையடுத்து தனது பேச்சு குறித்து அத்வானி புதிய விளக்கம் தந்துள்ளார். இது இன்னொரு 'அந்தர் பல்டி'யாக கருதப்படுகிறது. அவர் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பாஜக நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நான் கூறியதற்கும், பாஜகவின் நிலைக்கும் எந்த முரண்பாடும் இல்லை. தற்போதுள்ள வடிவில் 123 ஒப்பந்தம் பாஜகவுக்கு உடன்பாடானது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் பேசிய பேச்சையும், எனது நிலையையும் பாஜக நாடாளுமன்றக் கட்சியிடம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளேன்.
..
அமெரிக்காவின் ஹைட் சட்டம், இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு உள்ளது என்று நான் கூறியுள்ளேன்.
..
இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால், அது நமது நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்கி விடும். நமது பாதுகாப்பு திட்டங்களும் கேள்விக்குறியாகி விடும் என்று நான் கூறியுள்ளேன்.
..
இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் ஹைட் சட்டம் உள்ளிட்ட பிற அமெரிக்க சட்டங்களை நாம் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவற்றை நாம் ஏற்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயல்படுவது என்பதை விட அமெரிக்காவிடம் சரணடைந்து செயல்படுவது என்ற நிலை ஏற்படும்.
..
அதை பாஜக ஏற்காது. 1962ம் ஆண்டு அணு சக்தி சட்டத்தை இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் 123 ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் சமாளிக்க முடியும். இந்திய, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணிக் கட்சிகளை மட்டும் உள்ளடக்கிய குழுவை பாஜக ஏற்காது.
..
நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக முதலில் கூறிய அத்வானி தற்போது நான் முழுவதுமாக அதை ஆதரிக்கவில்லை என்ற ரீதியில் விளக்கமளித்திருப்பது அவரது குழப்பத்தையே காட்டுவதாக உள்ளது.
..
அத்வானியின் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அத்வானியின் விளக்கம் திருப்திகரமாக உள்ளது. அவர் எனது தலைவர், அவர் தவறு செய்ய மாட்டார் என்றார்.
..
மொத்தத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இன்ன நிலைதான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை பாஜகாவால் விளக்க முடியாத அளவுக்கு அங்கு குழப்பம் குடிகொண்டிருப்பது புரிகிறது.
..

Friday, August 31, 2007

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேராத ஒருவராலோ அல்லது ஒரு சிலராலோ இம்மக்கள் வசிக்கும் ஓர் இடத்திலோ அவர்கள் வந்துபோகும் இடங்களிலோ, வன்கொடுமைகள் இழைக்கப்படும் என்ற தகவலோ, அச்சுறுத்தலோ ஒரு அரசு நிர்வாக அமலாளர் மற்றும் போலீசு துணைக் கண்காணிப்பாளருக்குக் கிடைக்கும்போது, அச்செய்தியை அந்த அதிகாரிகள் உறுதி செய்து கொண்டு வன்கொடுமைகள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடி மக்களிடையே தமக்கு வன்கொடுமை ஆபத்து விளையாது என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மாநில அரசு அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அறிவுறுத்துகிறது.

இச்சட்டத்தை பயனுள்ள முறையில் அமல் செய்வது மத்திய, மாநில அரசின் கடமைகள் என்று அறிவுறுத்தும் அதேசமயம், அதற்கான வழிவகைகளையும் நல்லெண்ணத்தோடு அந்த அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பும் அளிக்கிறது. அவ்வாறான நடவடிக்கை ஒன்றுக்காகவும் மத்திய, மாநில அரசுகளுக்கும் அவற்றின் அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிமையியல் வழக்கோ, உரிமைகள் வழக்கோ அல்லது வேறு சட்ட நடவடிக்கையோ ஏதும் தொடர முடியாது.பின்வரும் நடவடிக்கைகளை இச்சட்டம் மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கிறது.

கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு சட்ட உதவி உட்பட போதிய வசதிகளுக்கு வகை செய்தல்; பாதிப்புற்றவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பயணச் செலவும் பராமரிப்புச் செலவும் கிடைக்க வகை செய்தல்; பொருளாதாரச் சமுதாயப் புனர்வாழ்விற்கு வகை செய்தல்; இச்சட்டத்தின் வழிவகைகளை மீறியதற்காக வழக்குத் தொடுப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் அதிகாரிகளை நியமித்தல்; இச்சட்டத்தின்படியான நடவடிக்கைகளை வகுத்து அமல் செய்ய மாநில அரசுக்கு உதவும் பொருட்டு பொருத்தமான மட்டங்களில் குழுக்களை அமைத்தல்; இச்சட்டத்தின் வழிவகைகளை மேலும் சிறந்த முறையில் செயலாக்குவதற்கும் இவ்வழிவகைகள் இயங்கும் விதம் குறித்து ஆய்வு செய்வதற்கும் வகை செய்தல்; கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய பகுதிகளை இனங்கண்டு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்தல்.

மேலும், இச்சட்டத்தை அமலாக்குவதில் மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பின்வருமாறு இச்சட்டமே பரிந்துரைக்கிறது. மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு அவசியமாகக் கூடியவற்றை மத்திய அரசு செய்யும்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் இச்சட்டத்தின்படி எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஆறாண்டுகளுக்குப் பிறகுதான் அதாவது 1995ஆம் ஆண்டுதான் அச்சட்டத்தை அமலாக்குவதற்கான வழிவகைகளை வரையறுக்கும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) விதிகள், 1995 என்பது அதன்பெயர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்செ யல்களைத் தடுக்கும் வகையில் அரசு மேற்கொள்ள வேண்டிய பதினோரு முன்னெச்சரிக்கை மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளன.

வன்கொடுமை நிகழும் என நம்பும் அல்லது சந்தேகப்படும் இடங்களை அடையாளங்கண்டு, மாவட்ட குற்றவியல் நடுர் அல்லது போலீசுக் கண்காணிப்பாளர் அல்லது வேறு அலுவலர்களை அப்பகுதியைப் பார்வையிடும்படி ஆணையிட வேண்டும். தேவையெனில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது வேலையாட்கள், குடும்ப நண்பர்கள் வைத்திருக்கும் உரிமத்தை முடக்கி வைக்க வேண்டும்; அத்தகைய ஆயுதங்களைக் கைப்பற்றி அரசு ஆயுதக் கிடங்கில் ஒப்படைக்க வேண்டும். அப்பகுதியில் எல்லா வெடிகளையும் பறிமுதல் செய்வதோடு வெடிபொருள் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிப்பதற்காக அவசியம் எனில் அவர்களுக்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள் வழங்க வேண்டும்.

இச்சட்டத்தின் விதிகளை அமலாக்குவதில் அரசுக்கு உதவிட அவசியம் எனில் மாநில, மாவட்ட அல்லது கோட்ட அளவிலான உயர்மட்டக் குழுக்களை அமைக்க வேண்டும். இச்சட்ட விதிமுறைகளைத் திறம்பட அமலாக்குவதற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்கவேண்டும். அப்பகுதிகளில் விழிப்புணர்வு மையங்களை அமைத்து, பணியரங்குகளை நடத்தி மத்திய, மாநில அரசுகளின் சட்டம், விதிகள், நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் மூலம் அம்மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள், பாதுகாப்புக் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு செய்யும் அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை அளித்து ஊக்குவிக்க வேண்டும். அடையாளம் காணப்படும் பகுதிகளில் சிறப்புக் காவல் படையை நிறுத்த வேண்டும்.
..
காலாண்டுக்கு ஒருமுறை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இச்சட்டத்தின் விதிகளை அமலாக்குவதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அமைப்புகளின் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை நடத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்மட்ட வழக்கறிஞர்களின் குழு ஒன்றை மாவட்டக் குற்றவியல் நடுவர் அளிக்கும் பரிந்துரையின்படி மாநில அரசு நியமிக்கவேண்டும். அதோடு வழக்குகளுக்குப் பொறுப்புள்ள விசாரணை இயக்குநரின் ஆலோசனையின் பேரில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் குழு ஒன்றும் அமைக்க வேண்டும். இவ்விரு குழுக்களும் மூன்றாண்டுகளுக்குப் பொறுப்பு வகிக்கும். மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் விசாரணை இயக்குநர் வருடத்திற்கு இரண்டு முறை வழக்குகளின் நிலவரம், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். பதிவு செய்யப்படும் வழக்கு விவரங்களை ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்தால் மேற்படி அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியை உடனடியாக நேரடியாகப் பார்வையிட்டு ஏற்பட்ட பாதிப்பு, உயிரிழந்தவர்களின் விவரம், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அரசுக்கு அறிக்கை தரவேண்டும். வன்கொடுமை பரவியுள்ள பகுதிகளில் தீவிர போலீசு ரோந்துக்கு ஆணையிட வேண்டும். உயிரிழந்தவர்களின் அனுதாபிகள் மற்றும் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்.

வன்கொடுமைக் குற்றத்தை போலீசு கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத ஒருவர்தான் புலனாய்வு செய்ய வேண்டும். கடந்தகால அனுபவம், நேர்மை, கடமை உணர்வு அடிப்படையில் இந்தப் புலனாய்வு அதிகாரியை மாநில அரசு, போலீசுத் தலைமை இயக்குநர் மூலம் நியமித்து, 30 நாட்களுக்குள் புலனாய்வை முடித்து அறிக்கை பெற வேண்டும். ஒவ்வொரு காலாண்டும் மாநில உள்துறைச் செயலர், சமூகநலச் செயலர், விசாரணை இயக்குநர், விசாரணைப் பொறுப்பு அதிகாரி, போலீசுத் தலைமை இயக்குநர் ஆகியோர் பரிசீலனை செய்ய வேண்டும்.

வன்கொடுமைக் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் குழு ஒன்றை மாநிலத் தலைநகரங்களில், போலீசு தலைமை ஆய்வாளர் பொறுப்பில் மாநில அரசு நியமிக்க வேண்டும். அக்குழுவானது குற்றங்கள் நடக்கும் என்று அடையாளம் காணப்படும் பகுதியில் ஆய்வு செய்து, பொது அமைதியை நிர்வகிக்க வேண்டும். அப்பகுதியில் சிறப்புக் காவல் படையை நிறுத்தவும் சிறப்புக் காவல் சாவடியை அமைக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.

குற்றங்களுக்குச் சரியான அடிப்படைக் காரணம் குறித்துப் புலனாய்வு செய்வதோடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்துத் தலைமை மற்றும் சிறப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தந்து, அவர்களிடம் விசாரணையும் செய்ய வேண்டும். குற்றங்களைப் பதிவு செய்வதோடு, வழக்குகள் குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் விசாரிப்பதோடு வழக்குகளின் நிலவரம் குறித்து மறுபரிசீலனை செய்வேண்டும். மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இச்சட்டத்தின் விதிமுறைகளை அமலாக்கும் பொறுப்பு வகிக்கும் குற்றவியல் நடுவர் மற்றும் போலீசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக மாநில அரசின் செயலர் பதவிக்கு இணையான உயர் அதிகாரியை மாநில அரசு நியமிக்க வேண்டும். அதேபோல மாவட்டக் குற்றவியல் நடுவர் பதவிக்குக் குறையாத ஒருவரை மாவட்டச் சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்த அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினராக இருக்க வேண்டும்.

மாநில உயரதிகாரியானவர், இச்சட்ட விதிகளின்படி மாநில அரசு பெறும் அறிக்கைகளைப் பரிசீலிப்பது, வழக்குகளின் நிலவரங்களைப் பரிசீலிப்பது, குற்றங்கள் நடக்கும் பகுதிகளில் சட்டம்ஒழுங்கு நிலவரங்களைப் பரிசீலிப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் உடனடி நிவாரணம் மற்றும் இதர உதவிகளைப் பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தேவையான ரேசன், உடை, தங்கும் வசதி, சட்ட உதவி, பயணப்படி, தினசரிப்படி, போக்குவரத்து போன்ற வசதிகளைப் பரிசீலித்து போதிய அளவு அளிக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இச்சட்ட அமலாக்க அதிகாரிகள் ஆகியோரின் செயல்பாடுகளைப் பரிசீலிக்க வேண்டும்.

மாவட்ட சிறப்பு அதிகாரியானவர்கள் குற்றங்கள் நிகழும் பகுதி அல்லது மாவட்டத் தலைமையகங்களில் விழிப்புணர்வு மையங்களை அமைத்து மத்திய, மாநில அரசுகளின் சட்டதிட்டங்களால் கிடைக்கும் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பிற உதவிகள் குறித்து பணியரங்குகள் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு விளக்க வேண்டும். இம்மையங்களை நிர்வகிப்பது அல்லது பணியரங்குகளை நடத்துவதற்காக அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்குப் பயணப்படி, தினசரிப்படி, நிர்வாகச் செலவு, பராமரிப்புச் செலவு மற்றும் போக்குவரத்து வசதிகளை மாநில அரசு செய்து தரவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவச் செலவு, அவசியமான உடைகள், உணவு மற்றும் பழங்கள், போக்குவரத்து ஆகியனவற்றுக்கு அவர்களே செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இச்சட்டத்தை அமலாக்குவதில் மாவட்ட நிர்வாகத்திற்குள்ள ஏழு பணிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் உதவி செய்வது; உடனடியாகப் புலனாய்வு அதிகாரியை நியமிப்பது; அப்பகுதியில் காவல்படையை நிறுத்துவதோடு மீண்டும் குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பது; பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், உடை, தங்குமிடம், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் இழப்புகளுக்குத் தகுந்த நட்டஈடு அடங்கிய நிவாரணம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இச்சட்டத்தை அமலாக்க நியமிக்கப்படும் அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளும் திறமுள்ளவராக இருக்க வேண்டும்; நிர்வாகம், காவல்நிலையம், காவல் சாவடி ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.

பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு தனது ஆண்டு வரவு செலவு திட்டத்தில் செய்யவேண்டும். இச்சட்டத்தை அமலாக்குவது குறித்த பல்வேறு அறிக்கைகளைத் தவறாது பரிசீலிப்பதோடு மாநில அரசு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனையும் செய்யவேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நிவாரணத் திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. உடனடி நிவாரணமாக பணம் மற்றும் பிற உதவிகள் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணியில் வேலை அளிக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட விதவைகள், உயரிழந்தவர்களின் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் அல்லது வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாய நட்டஈடும், சமூகப் பொருளாதார, நிரந்தர வீட்டு வசதி ஆகியவை ஏற்படுத்த வேண்டும். அம்மக்கள் வாழும் பகுதிகளில் சுகாதாரம், இன்றியமையாப் பொருட்கள் வழங்கல், மின்சாரம், குடிநீர், மயானப் பாதை மற்றும் சாலை வசதிகளைச் செய்துர வேண்டும். இவற்றுக்கும் மேலும் எதிர்பாரா செலவினங்களுக்கும் திட்டம் வகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாநில அளவிலும் 25 பேர் கொண்ட உயர்மட்டக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு அமைக்க வேண்டும். மாநில முதல்வர் அதன் நிர்வாகியாகவும் தலைவராகவும் இருப்பார். உள்துறை மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களோடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அக்குழு உறுப்பினர்களாக இருப்பர். மேலும் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீசுத் தலைமை இயக்குநர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணைய இயக்குநர் துணை இயக்குநர்களும் இக்குழுவில் இருப்பர். அம்மக்களின் மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான பொறுப்புச் செயலர் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மாநில அரசு பெறும் பல்வேறு அறிக்கைகளையம் சட்ட விதி அமலாக்கம், வழக்குகள், நிவாரணங்கள் ஆகியவற்றை ஆண்டுக்கு இருமுறை இக்குழு பரிசீலிக்கும்.

இதேபோல மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு செயல்படும். நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள், போலீசுத் துறை கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாநில அரசின் "ஏ' பிரிவு அதிகாரிகள் மூவர், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதே வகுப்பைச் சேர்ந்த அரசுசாரா அமைப்புகளின் 5 பிரதிநிதிகள், அந்த அமைப்புகளைச் சேர்ந்த ஆனால் அந்த வகுப்புகளைச் சாரா 3 உறுப்பினர்கள் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர். மாவட்டக் குற்றவியல் நடுவர் தலைவராகவும், சமூகநல அதிகாரி செயலராகவும் செயல்படுவர்.

நாட்டின் எந்தவொரு சமூகப் பிரிவினருக்காகவும் இவ்வளவு விரிவாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் அக்கறை காட்டும் வகையிலான "கடுமை'யான சட்டம் கிடையாது. இப்படிப்பட்ட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகளாகிறது. இந்த 18 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு நேரும் வன்கொடுமைகளை இந்தியாவிலுள்ள மத்திய, மாநில அரசுகளும் அதிகாரிகளும் எவ்வாறு அமலாக்கியுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
..
-தொடரும்

"இந்து மதம்" - பெரியார்தாசன்

நன்றி இவான்

Related:

சுயமரியாதையுள்ள(?) இந்துத்துவ வெறியர்களே - இந்த முறையாவது......

Thursday, August 30, 2007

"சாயி பாபாவின் மோசடி" வீடியோ ஆதாரம்

Releted:


சாயி பாபா: ஆண்டவனுக்குத் தரகனா? ஆள்பவருக்குத் தரகனா?

செயின் திருட்டுக்கு இந்த அடியென்றால் அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் (123) எழுதிக் கொடுத்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு !!

நன்றி இவான்

Related:


அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !


ஜாமின் கொடுத்து கை குலுக்கி வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்கிறானுங்க ! இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையைப் பாருங்க !!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது