Saturday, June 2, 2007

கார்ப்பரெட் சிபிஐ(எம்) பார்ட்டி ஆஃப் இந்தியா (டாட்டாயிஸ்ட்)


சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையைக் கொண்டிருப்போரை போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பதில் நமக்கு தயக்கமிருந்ததில்லை. ஆனால், சொல்லிலும் செயலிலும் முரண்பாடு ஏதுமின்றி ""சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'' என்று கொள்கைக் குன்றுகளாக வலம் வரும் "மார்க்சிஸ்டு'களை இனிமேலும் போலி கம்யூனிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டிருப்பது பொருத்தம் தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.

""முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு கம்யூனிசச் சொற்களால் விளக்கமளிக்க வேண்டும்; அத்தகைய விளக்கம் முதலாளி வர்க்கத்தின் கோபத்தைத் தூண்டிவிடும்படி இருக்கக் கூடாது; அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் அதிருப்தியையும் தோற்றுவித்து விடக்கூடாது.'' — இப்படியாக, கம்பி மேல் நடப்பதையும், கடுகைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவதையும் விடக் கடினமானதும் அபாரமான மொழி வல்லமையையும், ராஜதந்திரத்தையும், கலைத்திறனையும் கோருவதுமான இந்தச் சாகசத்தைத் தொடர்ந்து நிகழ்த்த வேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து சிங்குர் பிரச்சினை "மார்க்சிஸ்டு'களை விடுவித்திருக்கிறது. தங்களுடைய உண்மையான சிந்தனையை இயல்பாகப் பேசுவதற்கான சுதந்திரத்தையே ஒரு நிர்ப்பந்தமாக "மார்க்சிஸ்டு'களின் மீது திணித்திருக்கிறது சிங்குர்.

எனவே, ""விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி, டாடாவுக்கும் ஜின்டாலுக்கும் ரூயாவுக்கும் மலேசியாவின் சலீம் குழுமத்திற்கும் வழங்குவது நியாயம்தானா'' என்று மார்க்சிஸ்டுகளிடம் இனிமேலும் கேட்டுக் கொண்டிருப்பது அசட்டுத்தனம். "மார்க்சிஸ்டு'களின் இந்தப் புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், இந்தக் கொள்கை பிறப்பெடுக்கும் மூளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கூற்றுகள் வழியாகவே அதனைப் புரிந்து கொள்வோம்.
···

"மார்க்சிஸ்டு' கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசி, வார இதழில் (செப்.11, 2006) அவர்களது கட்சியைச் சார்ந்த பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். "வக்கிரப் பொருளாதாரத்தின் தாக்குதல்' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை, ""தேசிய உற்பத்தி வளர்ந்தால் வறுமை ஒழிந்து விடும், செல்வம் பெருகினால் வறுமை ஒழிந்து விடும்'' என்று கூறும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பொய்களை அம்பலப்படுத்துகிறது.

எந்த அறிவியல்பூர்வமான அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத இந்தப் பொருளாதாரக் கொள்கையை வக்கிரப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் அழைத்ததை அக்கட்டுரையில் விளக்கும் பட்நாயக், இது ஒரு முதலாளித்துவப் பித்தலாட்டம் என்று ஆணியடித்தாற் போலக் கூறி முடிக்கிறார்.பட்நாயக் அடித்த ஆணியை இரண்டே வரிகளில் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடுங்கி எறிகிறார் யெச்சூரி.
""கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதில்லை என்பது ஒரு தவறான அபிப்ராயம், உண்மை அதுவல்ல. ஏனென்றால் செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனை என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கல்கத்தா முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. (இந்து, ஜன. 5, 2007)
செல்வம் உருவாவதுதான் மக்கள் நலனுக்கு முன்நிபந்தனையாம்!
இதையே கொஞ்சம் எளிமையாக ரஜினிகாந்த் படத்தின் வசன மொழியில் சொல்வதென்றால், முதலாளி நல்லா இருந்தாத்தானே தொழிலாளி நல்லா இருக்க முடியும் என்று சொல்லலாம். அதாவது, பணக்காரர்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஏழ்மை ஒழியும் என்கிறார் யெச்சூரி.

···
மார்க்ஸ் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? ""ஒரு முனையில் செல்வம் குவிவது என்பதன் பொருள், அதே நேரத்தில், அவ்வாறு செல்வம் குவிவதன் விளைவாக வறுமையும் உழைப்பின் துயரமும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடூரமும் சிந்தனைச் சீரழிவும் இன்னொரு முனையில் அதிகரிப்பது என்பதுதான்'' என்று கூறும் மார்க்ஸ், வறுமை என்பதே ஒரு குறிப்பிட்ட சமூக உறவின் வெளிப்பாடுதான் என்பதை நிலைநாட்டுகிறார். தொழிலாளிகள் எந்த அளவுக்கு செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு வறியவர்கள் ஆக்கப்படுவார்கள். உற்பத்திச் சாதனங்களைத் தம் உடைமையாக வைத்திருக்கக் கூடிய முதலாளிகள் ஒருபுறம், உழைப்பை விற்று வயிற்றைக் கழுவும் தொழிலாளிகள் மறுபுறம் என்று இருக்கும் முதலாளித்துவச் சமூக அமைப்பில் செல்வம் உருவாவது என்பதன் உடனடி விளைவு வறுமைதான் என்பதே மார்க்சியப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி.

உலகத்தைக் கண்திறந்து பார்ப்பவன் எவனும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அல்லது, தங்கள் கட்சியின் மத்தியக் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள தீர்மானத்தைப் படித்துப் பார்த்தும்கூட மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
""தேசிய நிகர உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக மைய அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை... இந்த வளர்ச்சியின் விளைவாக பணக்காரர்கள்தான் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 40 பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரே ஆண்டில் 61 பில்லியன் டாலரிலிருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அரசாங்கப் புள்ளிவிவரப்படியே கூட 30 கோடி மக்கள் நாளொன்றுக்கு 45 ரூபாய் கூட வருமானமின்றி வறுமையில் உழல்கிறார்கள்'' என்று கூறுகிறது மத்தியக் குழு தீர்மானம்.

மக்கள் மென்மேலும் வறுமையில் தள்ளப்படுவதுதான் முதலாளித்துவச் சமூகத்தில் செல்வம் உருவாவதற்குரிய முன்நிபந்தனை. ஆனால் யெச்சூரியோ, செல்வம் உருவாவதுதான் மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான முன்நிபந்தனை என்று ப.சிதம்பரத்தின் சித்தாந்தத்தை அப்படியே வழிமொழிகிறார்.

""வக்கிரப் பொருளாதாரத்தை முன்மொழிபவர் நம்முடைய ஆதரவு பெற்ற பிரதமர் என்பதால் நாம் சும்மா இருந்து விட முடியாது'' என்று கொதிக்கிறார் பட்நாயக். அவரே நம்முடைய தோழர் புத்ததேவ் பட்டாசார்யாவாக இருக்கும்போது என்ன செய்வதாம்?

சிங்குர், நந்திக்கிராமம் பிரச்சினைகளில் மார்க்சிஸ்டு அரசின் அணுகுமுறையைக் கண்டித்து இடதுசாரி வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், அருந்ததி ராய், ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட அறிவுத்துறையினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்குப் பதிலளிக்கு முகமாக பகிரங்கக் கடிதமொன்றை அவர்களுக்கு எழுதியிருக்கிறார் முதல்வர் புத்ததேவ். (பைனா. எக்ஸ். ஜன.19, 2007.) விவசாயிகளிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி டாடாவுக்கு வழங்க நேர்ந்ததற்கான பொருளாதார நியாயத்தை அக்கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:
""சிங்குரில் இருக்கும் அந்தச் சில துண்டு நிலங்களில் விவசாயம் செய்து கிடைக்கக்கூடிய வருவாயைக் காட்டிலும் மிகப் பன்மடங்கு அதிகமான பொருளாதார ஆதாயத்தை இந்தத் தொழிற்சாலை வழங்கும்'' என்கிறார் புத்ததேவ்.

உண்மைதான். 250 ஏக்கர் நிலத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் கார்களை டாடா அறுவடை செய்வார்; பல கோடி ரூபாய்களை மூட்டை கட்டுவார். விவசாயிகள் மிஞ்சிப் போனால் எத்தனை கலம் நெல்லை அறுத்துவிடுவார்கள்? எத்தனை ரூபாயை மூட்டை கட்டிவிடுவார்கள்?

புத்ததேவின் இந்தக் கூற்றைத்தான் ""வக்கிரப் பொருளாதாரத்தின் உச்சகட்டம்'' என்று சாடுகிறார் பட்நாயக். ""கேக் எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது எல்லாருக்கும் நல்லது என்று கூறுவது, வறுமையென்பது குறிப்பிட்ட சமூக உறவின் விளைவுதான் என்ற உண்மையையே இருட்டடிப்பு செய்வதாகும்'' என்கிறார்.

""தொழிலாளர்கள் எந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்கிறார்களோ அது தேசிய உழைப்பின் முழு உற்பத்தியாலும் நிரம்பியிருக்கையில், அதிலிருந்து அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தடுப்பது பாத்திரத்தின் அளவுக் குறைவோ அல்லது அதிலுள்ள பண்டங்களின் போதாமையோ அல்ல; தொழிலாளர்களுடைய கரண்டிகள் சிறிதாக இருப்பதுதான்'' என்றார் மார்க்ஸ்.

டாடா தொழிற்சாலை வழங்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தை அறுவடை செய்யப் போவது யார்?

சிங்குரின் நேற்றைய விவசாயிகளா, அல்லது நாளை அங்கே வேலைக்குச் சேரவிருக்கும் தொழிலாளிகளா?

சிங்குரின் 1000 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பவர்கள் 1320 குத்தகை விவசாயிகள், சுமார் 3000 நிலமற்ற கூலி விவசாயிகள், காய்கனி வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 4475 பேர், வெளியூர்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் சுமார் 5000 தொழிலாளர்கள். இந்த 12,000 பேருக்கு டாடா ஆலை வழங்கப் போவது என்ன?

ஆலையைச் சுற்றி அமையவிருக்கும் அபார்ட்மென்டுகளில் விவசாயிகள் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். சிறு வியாபாரிகள் அயர்ன் வண்டி தள்ளலாம், நாற்று நட்ட பெண்கள் அபார்ட்மென்டு அம்மணிகளுக்குத் துணி துவைத்துப் போடலாம். இவ்வாறாக மேட்டுக்குடி வர்க்கத்துக்குப் பலவிதமாகச் சேவை செய்து அவர்கள் வழங்கும் மிச்சம் மீதியை வாங்கித் தின்னலாம். இதுதான் டாடா ஆலை உருவாக்கவிருக்கும் பன்மடங்கு ஆதாயத்தில் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கப் போகும் பங்கு.
···

""ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி அலைகிறார்கள், அவர்களை நாம் கைவிட்டு விட முடியுமா?'' என்று தன் கடிதத்தில் உணர்ச்சி பொங்கக் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். தன்னுடைய சுரண்டலுக்காகவும் லாப நோக்கத்துக்காகவும் அன்றி வேறு எந்தச் சமூக நோக்கத்துக்காகவும் ஒரு முதலாளி தொழிற்சாலையைத் தொடங்குவதில்லை. மார்க்சியம் தெரியாத பாமரத் தொழிலாளிக்குக் கூடத் தெரிந்திருக்கும் இந்த உண்மை புத்ததேவுக்கு மறந்துவிட்டது போலும்! முதலாளி வர்க்கத்தின் ஆவி புத்ததேவுக்குள் புகுந்து கொண்டு அவரைச் சாமியாட வைக்கிறது.

12,000 பேரை வேலையைவிட்டு விரட்டிய இந்த ஆலை எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்? கிட்டத்தட்ட இதே அளவு மூலதனத்துடன் சென்னையில் இயங்கிவரும் ஃபோர்டு, ஹூண்டாய் ஆலைகள் ஆயிரத்துக்கும் குறைவான தொழிலாளர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. தினக்கூலிகளையும் துணைத்தொழில்களில் ஈடுபட்டிருப்போரையும் சேர்த்தால் கூட வேலை வாய்ப்பு ஓரிரு ஆயிரங்களைத் தாண்டாது.

பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு சிங்குரில் அமையவிருப்பது சைக்கிள் தொழிற்சாலை அல்ல. கார் உற்பத்தி என்பதே உயர் தொழில்நுட்பம் சார்ந்தது. டாடாவோ குறைந்த விலையில் (ஒரு லட்சம் ரூபாயில்) கார் தயாரிக்கவிருக்கிறார். அதி உயர் தொழில் நுட்பம் இல்லாமல் இந்த விலைக் குறைப்பு சாத்தியமில்லை. உயர் தொழில் நுட்பம் இருந்தாலோ வேலை வாய்ப்பு சாத்தியமில்லை. உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளிகள் கசக்கிப் பிழியப்படாமல் குறைந்த விலையிலான கார் சாத்தியமே இல்லை. இவையனைத்தும் மிக எளிய பொருளாதார உண்மைகள்.

ஆனால் உண்மைகள் யாருக்கு வேண்டும்? ""ஒரு கருத்தாக்கம் அறிவியல் பூர்வமாகச் சரியாக இருக்கிறதா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. சர்வதேச நிதிமூலதனத்துக்கும், அதன் கூட்டாளிகளான இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் அந்தக் கருத்தாக்கம் உகந்ததாக இருக்கிறதா இல்லையா என்பதுதான் வக்கிரப் பொருளாதாரம் நிர்ணயிக்கும் அளவுகோல்'' என்று தனது கட்டுரையில் சாடுகிறார் பட்நாயக்.
சிங்குர் பிரச்சினை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நியாயமாகவோ, அறிவியல் பூர்வமாகவோ பதிலளிக்க முடியாத புத்ததேவ், சென்டிமென்டுக்குத் தாவுகிறார். ""ரத்தன் டாடாவை நான் அரும்பாடு பட்டு அழைத்து வந்தேன். சிங்குர் நிலம் இல்லை என்று நான் டாடாவிடம் எப்படிச் சொல்ல முடியும்? இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறாவிட்டால் நான் தலைநிமிர்ந்து நடக்கவே முடியாது,'' (இந்து, டிச.27, 2006) என்று கூறி டாடா என்ற முதலாளியின் வியாபாரப் பிரச்சினையை, தன்னுடைய மானப் பிரச்சினையாக மாற்றுகிறார்.

""இத்தனைப் பிரச்சினைகள் இருக்கும்போது ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியதுதானே'' என்று கேள்வி எழுப்பியபோது, ""டாடா நிறுவனத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே ஒரு உணர்ச்சிபூர்வமான உறவு இருக்கிறது'' (இந்து, நவ. 26, 2006) என்று பதிலளித்திருக்கிறார் டாடா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ரவி காந்த்.

இலாப உணர்ச்சி தவிர வேறெந்த உணர்ச்சியையும் அறியாத முதலாளி வர்க்கம் இந்த அளவுக்கு உணர்ச்சி வயப்படுவதிலிருந்தே, காப்பியச் சிறப்பு மிக்க இந்த உணர்ச்சிப் போராட்டத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

""நாங்கள் 6 இடங்களைக் காட்டினோம். சிங்குர் தான் வேண்டும் என்று டாடா நிறுவனம் கூறிவிட்டது'' என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் "மார்க்சிஸ்டு' எம்.பி.நீலோத்பல் பாசு. அவர்கள் விரும்பிய சிங்குர் நிலம் 120 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொடுத்து வாங்கப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார் தொழிற்சாலைக்கு 250 ஏக்கருக்கு மேல் தேவையில்லை எனும்போது 1000 ஏக்கர் எதற்கு என்ற கேள்விக்கும் பதில் இல்லை. தண்ணீர், மின்சாரம், சாலைகள் முதலானவற்றில் இன்னும் என்னென்ன சலுகைகள் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை. இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்துவது நட்புக்கு இலக்கணமாகாது என்று புத்ததேவ் கருதுகிறார் போலும்!

தகவல் அறியும் உரிமையின் கீழ் விவரம் கேட்டவர்களுக்கு ""வணிக இரகசியம்'' என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டது "மார்க்சிஸ்டு' அரசு. அனில் அம்பானியுடனான பாசப்பிணைப்புக்காக 10,000 ஏக்கர் விளைநிலத்தை வழங்கியிருக்கும் முலாயம் சிங்கும் கூட ""வணிக இரகசியம்'' என்று கூறித்தான் விவரம் தர மறுக்கிறார்.

எல்லா உறவுகளும் அவற்றுக்குரிய உணர்ச்சிகளை இழந்து, விற்கவும் வாங்கவுமான பண்டங்களாக மாறிவரும் இந்தக் காலத்தில் உணர்ச்சிமயமான உறவுகளை உருவாக்கும் வல்லமை வணிகத்துக்கு மட்டும்தான் இருக்கிறது போலும்! புத்ததேவுக்கும் டாடாவுக்கும் இடையிலான இந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் உறவைத் தாங்கி நிற்பவை எத்தனை சைபர்கள் என்ற உண்மை வெளிவராமலேயே போய்விடுமா என்ன?
···

சிங்குர் நிலத்தை டாடாவுக்கு வழங்க முடியாமல் போய்விடுமா என்ற கேள்வி எழுந்தாலே உணர்ச்சி வயப்படுகிறார் புத்ததேவ். ஆனால் அவர் கண்களிலிருந்து நிலத்தை இழந்த விவசாயிகளுக்காக ஒரு துளி கண்ணீர் கூடக் கசியவில்லை. ""பொருளாதார வளர்ச்சியின் நிகழ்ச்சிப் போக்கு என்பது விவசாயத்திலிருந்து தொழில்துறையை நோக்கித்தான் சென்றாக வேண்டும். இது மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும் பொருந்தாதா என்ன?'' என்று சுமித் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்புகிறார் புத்ததேவ். ""தொழில்மயமாகும் போது விவசாய நிலங்களை இழப்பதென்பது ஒரு இயற்கையான நிகழ்ச்சிப் போக்குதான்'' என்று நமக்கு அறிவொளி ஊட்டுகிறார் யெச்சூரி.

எப்பேர்ப்பட்ட இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு! "இயற்கையான' சந்தை விதிகளுக்கு மாறாக அரசாங்கம் தலையிட்டு நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்து சட்டமியற்றி, அதைத் தரகுமுதலாளிக்குச் சொந்தமாக்கும் இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு! அந்த ஊருக்குள்ளேயே யாரும் நுழையக்கூடாது என்று 144 போட்டும் அடியாள் படையை ஏவியும் குண்டுவீசியும் விவசாயத்தைத் தொழில்மயமாக்கும் இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு!

""சிங்குரின் 997 ஏக்கர் நிலத்திற்கு 17,000 சிறு உடைமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம் ஒப்புதல் கேட்டு ஒரு தனியார் முதலாளி (டாடா) நிலத்தை வாங்கவேண்டுமென்றால் அதற்கு இன்னொரு யுகமே ஆகிவிடும்'' என்று இந்த நிலப்பறிமுதலை நியாயப்படுத்துகிறார் மேற்கு வங்க அரசின் வணிகத்துறைச் செயலர். (பைனா. எக்ஸ், ஜன.18, 2007.)

எனவேதான், 1894இல் வெள்ளைக்காரனால் போடப்பட்ட நிலப்பறிமுதல் சட்டத்தை வைத்து சிங்குர் நிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது "மார்க்சிஸ்டு' அரசு. இது இயற்கையான நிகழ்ச்சிப் போக்கென்றால்,ஈராக் ஆக்கிரமிப்பும் கூட இயற்கையான நிகழ்ச்சிப் போக்குதான். இதன்படி, கலிங்க நகர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பழங்குடி மக்களும், நர்மதா அணையின் அகதிகளும்கூட இயற்கைக் கொடுமைகளுக்குப் பலியானவர்கள்தான் போலும்!
சின்னமீனைப் பெரியமீன் விழுங்கும் இந்த இயற்கையான நிகழ்ச்சிப் போக்கை அனுமதிக்கும்படிதான் வால் மார்ட்டும் கூடக் கோருகிறது. வளர்ந்துவிட்ட உற்பத்திச் சக்திகளுக்குத் தீனி போட உலகச் சந்தையைத் திறந்துவிடச் சொல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையும் அதை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் காட் ஒப்பந்தமும் கூட இயற்கையான நிகழ்ச்சிப் போக்குகள்தாம்.

இந்த இயற்கையான நிகழ்ச்சிப் போக்கின் அடிப்படையில், சிங்குர், நந்திக்கிராமம் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விவசாயத்திற்கே ஒரு இரங்கற்பா பாடி முடித்துக் கொள்ளலாம் என்கிறார் புத்ததேவ்.

""நிலைமையை நாம் எதார்த்தமாக மதிப்பீடு செய்ய வேண்டும். வாரிசுகளிடையே சொத்து பிரிக்கப்படுவதால் நிலம் துண்டுதுண்டாக ஆகிவருகிறது. விவசாய உள்ளீடு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. தற்போதைய சூழ்நிலையில் நாம் பழைய திட்டத்தையே பின்பற்றினால் விவசாயத்துறையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது'' என்று சுமித் சர்க்காருக்கு எழுதுகிறார்.
விவசாய உற்பத்தி விழுந்துவிட்டது என்பதை அலுவாலியாவே ஒப்புக் கொள்கிறார்; சிதம்பரமும் மறுக்க முடியாமல் மண்டையை ஆட்டுகிறார். விவசாய உற்பத்தி 2 சதவீதம் கூட வளரவில்லை என்று மன்மோகன் சிங் அரசைச் சாடுகிறது "மார்க்சிஸ்டு'களின் மத்தியக் குழுத் தீர்மானம். புத்ததேவோ, அபரிமிதமான விளைச்சல்தான் விவசாயப் பொருட்களின் விலைவீழ்ச்சிக்குக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்.

விதை உரம் பூச்சிமருந்து போன்ற உள்ளீடு பொருட்களின் விலையேற்றத்துக்குக் காரணமான பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளைப் பற்றி புத்ததேவ் மூச்சு விடவில்லை. விவசாயிகளுக்கு விலை நிர்ணய உரிமை வழங்கப்படாதது குறித்து வாய்திறக்கவில்லை. கூட்டுறவுக் கடன் விநியோகத்தில் இந்தியாவிலேயே மே.வங்கம் கடைசி இடத்தில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை இல்லை. தரகு முதலாளிகளுக்கு மானியங்கள் வாரி இறைக்கப்படுவதையும், விவசாயிகளின் மானியம் வெட்டப்படுவதையும், பாசனப்பராமரிப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதையும் பற்றிப் பேச்சில்லை. தானியக் கொள்முதலிலிருந்து அரசு விலகிக் கொண்டுவிட்டதைப் பற்றியோ, அவை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்டிருப்பதைப் பற்றியோ, தானியச் சந்தையில் தலைவிரித்தாடும் ஊகவணிகச் சூதாட்டம் பற்றியோ ஒரு வார்த்தை இல்லை.

அதாவது, விவசாயத்தை தற்போதைய சூழ்நிலைக்குச் சீரழித்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவக் கொள்ளைகள் பற்றியும், கொள்ளைகள் பற்றியும் ஒரு வார்த்தை கூட இல்லை. ""இந்தச் சூழ்நிலையில் விவசாயத்தைக் கட்டி அழ முடியாது. அதன் மரணமும் தவிர்க்க இயலாதது. எனவே கருணைக் கொலை செய்து விடலாம்'' என்பதுதான் புத்ததேவ் தரும் விளக்கத்தின் பொருள். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடைதேடி அலைபவர்கள் புத்ததேவின் இந்த விளக்கத்தைக் கேட்டு ஞானம் பெறலாம்.

""மூலதனத்தின் தாக்குதல் காரணமாக சிறுவீத விவசாய உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை அதற்கு நேரெதிரான முறையில் சித்தரித்து, விவசாய நெருக்கடிக்குத் தீர்வு சிறு விவசாயிகளை ஒழிப்பதே'' என்று பேசுபவர்களையும் வக்கிரப் பொருளாதாரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார், பட்நாயக்.
···
உண்மையிலேயே சமூகத்துக்கு எந்த வகையிலும் தேவையில்லாததாகவும் உடனே ஒழித்துக் கட்டப்பட வேண்டியதாகவும் இருக்கும் வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் கூட்டாளியான தரகு முதலாளி வர்க்கமும்தான்.
""உற்பத்தி சார்ந்த தொழில்களில் மூலதனமிடுவது என்ற ஒரேயொரு நடவடிக்கைக்காகத்தான் தனது இருத்தலுக்கான சமூக நியாயத்தை முதலாளி வர்க்கம் பெறுகிறது. மூலதனமிட்டுத் தொழில் தொடங்குவதென்பது முதலாளிகளின் கருணைச் செயல் அல்ல. வளரவேண்டும் அல்லது அழிய வேண்டும் என்ற விதியின் காரணமாக, தான் உயிரோடு இருப்பதற்கே மூலதனம் விரிடைய வேண்டியிருக்கிறது'' என்று முதலாளித்துவத்தின் சமூகப் பாத்திரத்தை விளக்கி னார் மார்க்ஸ்.

இன்றைய புதிய தாராளவாத சகாப்தத்தில் மூலதனமிடுதல் என்ற தனக்குரிய சமூகப் பாத்திரத்தை ஆற்றுவதோடு சமூகத்திடமிருந்து லஞ்சம் கேட்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். முதலாளித்துவத்தின் இந்தத் திமிரைச் சாடுகிறார் பட்நாயக். இலவச நிலம், கடன், முழு வரிவிலக்கு, ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்தும் வாய்ப்பு, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு, வருமான வரி விலக்கு, லாப உத்திரவாதம் ஆகிய அனைத்தையும் வழங்கி பன்னாட்டு முதலாளிகளையும் அவர்களுடைய இந்நாட்டுக் கூட்டாளிகளையும் கவர்ந்திழுப்பதற்கு மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடும் வெட்கக்கேட்டையும் விவரிக்கிறார்.

""இம்முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளின் காரணமாக, அரசின் மீது நிதிச்சுமை கூடுகிறது... உலக வங்கியிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டு அதன் நிபந்தனைகளுக்குப் பணிந்து கல்வி, மருத்துவம் போன்ற அனைத்துக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் நிலை உருவாகிறது. மொத்தத்தில் சமூகத்திடமிருந்து முதலாளிகள் கறந்தெடுக்கும் இந்த லஞ்சத்தின் சுமை, ஏழை உழைக்கும் மக்களின் தலைமீது தான் இறங்குகிறது'' என்ற உண்மையை அம்பலமாக்குகிறார். (புதிய தாராளவாதத்தின் பரிமாணம், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, டிச. 24, 2006.)

இந்தக் கட்டுரை வெளிவந்த நாட்களில்தான் சிங்குர் பற்றியெரிந்து கொண்டிருந்தது. இந்தக் கட்டுரையின் விமரிசனத்தை மே.வங்க அரசின் நடைமுறையுடன் தம் கட்சி அணிகள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று தலைமைக்கு அவ்வளவு நம்பிக்கை!
""சிங்குர் ஆலையை எதிர்ப்பவர்கள் விவசாயிகளே அல்ல, பதிவு செய்துகொள்ளாத சில குத்தகை விவசாயிகளும் நிலமில்லாத கூலி விவசாயிகளும்தான் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.'' (இந்து, டிச.1, 2006.) என்கிறார் புத்ததேவ். அதாவது, நிலவுடைமை இல்லாதவன் விவசாயியே அல்ல என்று பிரகடனம் செய்கிறார் புத்ததேவ். "நான் கம்யூனிஸ்டு அல்ல' என்பதை ஒரு மனிதன் இதைவிடத் தெளிவாக வேறு எப்படித்தான் கூற முடியும்?
···

ஏக்கருக்கு 8.6 இலட்சம் முதல் 12.76 இலட்சம் வரை விலை நிர்ணயம் செய்து 120 கோடி ரூபாயை 17,000 பேருக்குப் பிய்த்துப் போட்டிருக்கிறது "மார்க்சிஸ்டு' அரசு. நிலத்திற்கு அரசு வழங்கும் தொகையில், முக்கால் பங்கு நிலச் சொந்தக்காரருக்கு, கால் பங்குதான் குத்தகை விவசாயிக்காம்! கூலி விவசாயிகளுக்கு எதுவும் கிடையாதாம். அவர்கள் மாற்று வேலைவாய்ப்புக்குப் பயிற்றுவிக்கப்படுவார்களாம்.

"சிங்குரில் நாங்கள் வழங்கியிருக்கும் நிவாரணம்தான் தலைசிறந்தது. இதன் மூலம் நிவாரணத்தொகை குறித்த பிரச்சினையை நாங்கள் தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்துவிட்டோம்'' என்று மார்தட்டுகிறார் யெச்சூரி. (இந்து, ஜன.1, 2007) அப்படியானால் வாச்சாத்தி பிரச்சினை மூலம் கற்பழிப்புக்கான நிவாரணத் தொகை எவ்வளவு என்பதை தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்ததற்காக திருவாளர் தேவாரமும் மார்தட்டிக் கொள்ளலாம்.
சிங்குர் நந்திக் கிராமம் விவசாயிகளை ஆதரிப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்கிறார் புத்ததேவ். நரோத்னிக்குகளின் புதிய அவதாரங்கள் என்று சாடுகிறார் பிரகாஷ் காரத். சரி, இந்த போல்ஷ்விக்குகள் என்ன சொல்கிறார்கள்?

""மக்கள் ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கான தொழிலாளர் விவசாயிகள் கூட்டணியை உருவாக்கப் பாடுபட்டு வருகிறோம். இந்த போர்த்தந்திர நோக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் எதையும் "மார்க்சிஸ்டு கட்சி' அரசு செய்யாது'' என்கிறார் காரத். அடேயப்பா! சிங்குர், நந்திக் கிராமத்தில் இந்தப் பக்கம் விவசாயிகள் நிற்கிறார்கள்; எதிர்ப்பக்கம் நிற்கும் தொழிலாளி வர்க்கம் யார்? டாடாவா, சலீமா, ஜின்டாலா? அங்கே தொழிலாளி விவசாயி கூட்டணிக்கு என்ன ஆபத்து வந்தது? விவசாயிகளின் நிலத்தை எந்தத் தொழிலாளி அபகரித்துக் கொண்டான்? மக்கள் ஜனநாயகப் புரட்சியை "டாடாவின் மக்கள் காரில்' ஏற்றி விரைவுபடுத்தக் கோரிய தொழிலாளி வர்க்கம் எது?

விவசாயிகள் இருக்கட்டும். குறைந்தபட்சக் கூலி, வேலை நேரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்ற எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளி வர்க்கத்துக்கு டாடா ஆலையும், "மார்க்சிஸ்டு'கள் அமைக்கவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வழங்க இருப்பது என்ன?

அந்த இரகசியத்தை கொல்கத்தா முதலாளிகளிடம் தெரிவித்திருக்கிறார் யெச்சூரி: ""தொழிலாளிகளுக்குத் தற்போதுள்ள உரிமைகளைக் கரைப்பது (ஞீடிடூதtடிணிண) என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால் அவற்றை (ஞூடிணஞு tதணடிணஞ்) ராவுவது பற்றி நாம் விவாதிக்கலாம். அதேநேரத்தில் (வெளியேற்றப்படும்) தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலைகள் (ண்ச்ஞூஞுtதூ ணஞுt) பற்றி முதலாளிகளும் யோசிக்க வேண்டும்.''

வேலைநிறுத்த உரிமையைக் கரைப்பதற்கும் ராவுவதற்கும் இடையில் நடைமுறையில் என்ன வேறுபாடு? தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலைகளுக்கும் விவசாயிகளுக்கான நிவாரணத்துக்கும் என்ன வேறுபாடு? டாடாவுக்கும் புத்ததேவுக்கும் என்ன வேறுபாடோ, அதே வேறுபாடுதான்.

மேற்கு வங்க அரசு என்பது ஒரு தொழிற்கழகம்; அதன் தலைமை நிர்வாக அதிகாரியான (இஉO) புத்ததேவ் தன்னை முதல்வர் என்று அழைத்துக் கொள்கிறார். இந்தத் தொழிற்கழகத்தின் நிர்வாகிகள் குழுவோ (ஆணிச்ணூஞீ ணிஞூ ஈடிணூஞுஞிtணிணூண்) தன்னை மத்தியக் குழு என்று கூறிக் கொள்கிறது.

கார்ப்பரேட் பார்ட்டியாகிய அந்தக் கட்சி தன்னை கம்யூனிஸ்டு பார்ட்டி என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது. ""விளம்பரத்தில் என்ன இருக்கிறது? ஹமாம் சோப்பில் "நேர்மை' எவ்வளவு இருக்கிறது என்று யாராவது சுரண்டிப் பார்க்கிறார்களா என்ன? சிவப்பு என்றால் கம்யூனிசம் என்று ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்'' என்று நீங்கள் எண்ணலாம்.

நந்திக்கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்த அதே நாளில் ஐ.ஐ.எம். மாணவர்களிடையே புத்ததேவ் ஆற்றிய உரையைக் கீழ்கண்டவாறு பாராட்டினாராம் ஒரு மாணவர்: ""அவர் அப்படியே எங்களுடைய மொழியைப் பேசினார். ஒரு கம்யூனிஸ்டு பேசுகிறார் என்ற உணர்வு எந்தத் தருணத்திலும் எங்களுக்கு ஏற்படவில்லை.'' (டெலிகிராப், ஜன.7, 2007)

போலச் செய்தல் என்பதுதான் போலிகள் என்று அழைக்கப்படுவதற்கான முன் நிபந்தனை. அவ்வாறாயின், கம்யூனிஸ்டுகள் போல பேசக்கூடத் தெரியாத இவர்களை இனிமேலும் "போலி கம்யூனிஸ்டுகள்' என்று அழைப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

· மருதையன்

Thursday, May 31, 2007

உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி


1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.

பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய் ஓடிற்று. இந்தத் தத்தளிக்கும் தீக்கடலிலிருந்து இரக்கமற்ற அப்பட்டமான வர்க்கப் போராட்டமும், புதிய கிரகங்களது மெல்லக் குளிர்ந்து கெட்டியாகும் மொறுமொறுப்பான மேலோடும் உருவாகி வெளிப்பட்டன.

ரசியப் புரட்சி இரண்டு அங்கங்களைக் கொண்டது. முதலாவது, பழைய ஆட்சியினை ஒழித்திடுதல், இரண்டாவது புதிய ஆட்சியினை உருவாக்குதல்.

ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த இன்னல்மிக்க இத்தருணத்தில் ஸ்மோல்னி மாளிகை லெனின் தலைமையிலான புரட்சி போல்ஷ்விக் கட்சியின் செயல்தளமாகச் செயல்பட்டது. சிறுபான்மை மென்ஷ்விக்கு சமரசவாதிகளும், "சோசலிசப் புரட்சியாளர்கள்' என்று தங்களை அழைத்துக் கொண்ட வலதுசாரிகளும் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து, கெரன்ஸ்கி அரசாங்கம் கூடிய விரைவில் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதாகச் சொல்லி கண்ணா மூச்சி ஆட்டம் ஆடித்தள்ளிப் போட்டு வந்ததையே நியாயப்படுத்தி, மக்களை அமைதியாக இருக்கும்படி கோரிக்கை விட்டனர். இதனால் தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகமிழைத்து அரசியல் சாகசக்காரன் கெரன்ஸ்கி, பழைய ரசிய இராணுவ ஜெனரல் கர்னீலவ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள்.

இத்தகைய கடுமையான சூழ்நிலையில் லெனினது போல்ஷ்விக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள், படையாட்களை ஒருங்கிணைத்து புரட்சியை வழிநடத்தியது.
ரசியப் புரட்சி முதலாளித்துவப் புரட்சிகளைப் போல புதிய உற்பத்திக் கருவிகளை அல்ல, புதிய வகை மனிதர்களையும் மனித உணர்ச்சிகளையும் உருவாக்கியது. பிறருக்காக அனைவருக்காகவும் அனைவரும் சிந்திக்கும் மனித அறிவு மற்றும் உணர்வு நிலையை உலகுக்கு வழங்கியது. கோடானுகோடி மக்களை ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புள்ளியில் இணைக்கும்போது இந்தச் சித்திரம் நமக்கும் முழுமை பெறும்.

(மூலநூலான ஜான் ரீடின் "உலகைக் குலுக்கிய பத்து நாட்களி'லிருந்து சிறு பகுதியை கீழே வெளியிடுகிறோம்.)

நவம்பர் 8, 1917: ஸ்மோல்னியில் சூழ்நிலை முன்பு இருந்ததையும்விட கடுமையாகி ஒரே அமர்க்களமாயிருந்தது. இருண்ட நடைவழிகளில் முன்பு போலவே ஆட்கள் சிட்டாய்ப் பறந்தனர்; தொழிலாளர் குழுவினர் துப்பாக்கி ஏந்தி நின்றனர்; தடித்த கைப்பைகள் வைத்திருந்த தலைவர்கள், நண்பர்களும் துணைவர்களும் புடை சூழ்ந்து வர, வாதாடிக் கொண்டும் விளக்கிச் சொல்லிக் கொண்டும் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும் பரபரக்க விரைந்து சென்றனர். மெய்யாகவே இவர்கள் மெய்மறந்தோராய் இயங்கினார்கள். இராப் பகலாய்க் கண் துஞ்சாமல் ஓயாது உழைக்கும் அருந்திறல் படைத்தோராய் இருந்தார்கள் — முகம் மழிக்கப்படவில்லை. மேலெல்லாம் அழுக்கு, கண்கள் சிவந்து ஜிவுஜி வுத்தன. அடங்காத ஆர்வத்தை விசையாய்க் கொண்டு தமது நிலையான குறிக்கோளை நோக்கி இவர்கள் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் செய்ய வேண்டியிருந்தவை நிறைய இருந்தன, அளவின்றி நிறைய இருந்தன! அரசாங்கத்தை உருவாக்கியாக வேண்டும், நகரில் ஒழுங்கை நிலைபெறச் செய்தாக வேண்டும், நகரக் காவல் படையைத் தம் பக்கத்தை விட்டுச் செல்லாதிருக்கும்படி பார்த்துக் கொண்டாக வேண்டும், டூமாவையும் இரட்சணியக் கமிட்டியையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும், ஜெர்மானியரை உள்ளே விடாதிருக்க வேண்டும், கேரென்ஸ்கியுடன் போர் புரியத் தயார் செய்தாக வேண்டும், என்ன நடந்திருக்கிறதென்று மாநிலங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும், அர்ஹான்கேல்ஸ்கிலிருந்து விளதிவஸ்தோக் வரையில் பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

சரியாய் எட்டு நாற்பதுக்கு, இடியென அதிர்ந்த வாழ்த்துக்க ளுக்கும் கையொலி முழக்கத்துக்கும் இடையே தலைமைக் குழுவினர் உள்ளே வந்தார்கள், அவர்களிடையே லெனினும் மேதை லெனினும் இருந்தார். லெனின் விசித்திரமான மக்கள் தலைவர் முற்றிலும் அறிவாற்றல் என்னும் ஒரேதகுதியின் காரணமாய்த் தலைவராகியவர். வண்ணக் கவர்ச்சியில்லை, மிடுக்கில்லை, மனம் தளர்ந்து விட்டுக் கொடுக்கும் இயல்பில்லை, தன்வயப்பட்ட விருப்பு வெறுப்பில்லை, படாடோபமான தனிப் பாணிகள் இல்லை ஆனால் ஆழ்ந்த கருத்துக்களை எளிய முறையில் விளக்கும் ஆற்றலும் ஸ்தூல நிலைமையைப் பகுத்தாராயும் திறனும் நிரம்பப் பெற்றவர். இவற்றுடன் கூட மதிநுட்பமும் அசாதாரணமான தொலை நோக்குப் பார்வையும் சேர்ந்திருந்தன.

இப்போது லெனின் உரைமேடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார். சிமிட்டிக் கொண்ட அவரது சிறு கண்கள் பிரதிநிதிகளது கூட்டத்தின் மீது ஒரு தரம் வட்டமிட்டு விட்டு வந்தன. கையொலி முழக்கம் நிற்பதற்காக அவர் காத்திருந்தார். ஓயாமல் சில நிமிடங்களுக்கு நீடித்த இந்த முழக்கம் அவரைப் பாதித்ததாய்த் தெரியவில்லை. அது நின்றதும் மிகவும் எளிய முறையில் அவர் சுருக்கமாய்க் கூறினார்: ""இப்போது நாம் சோசலிச அமைப்பைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்கலாம்!'' திரும்பவும் கட்டுக்கடங்காத ஆர்வ முழக்கம்.

""சமாதானத்தைக் கைகூடச் செய்வதற்கு நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நம் முன்னுள்ள முதலாவது பணி... போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் சோவியத்து வரையறைகளின் அடிப்படையில் பிரதேசம் பிடித்தல் இல்லை, இழப்பீடுகள் இல்லை, தேசங்களது சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமாதானத்தை முன்மொழிவோம். அதேபோது ஏற்கெனவே நாம் வாக்களித்தது போல், இரகசிய உடன்படிக்கைகளை வெளியிட்டு, பழையனவற்றை நிராகரிப்போம்... யுத்தத்தையும் சமாதானத்தையும் பற்றிய பிரச்சினை தெட்டத் தெளிவானது. ஆகவே, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் பிரகடனம் என்பதான இந்தத் திட்டத்தை இங்கு நான் முன்னுரை எதுவும் இல்லாமலே படித்துக் காட்டலாமென நினைக்கிறேன்...''

""போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பிரகடனம்: நவம்பர் 6,7ஆம் நாள் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்டு, தொழிலாளர்கள், படையாட்களை, விவசாயிகள் பிரதிநிதிகளது சோவியத்துகளை அடிப்படையாய்க் கொண்டு அமைந்த தொழிலாளர்கள், விவசாயிகளது அரசாங்கம் நேர்மையான, ஜனநாயகத் தன்மையதான சமாதானத்திற்காக உடனே பேச்சவார்த்தைகள் தொடங்கும்படி, போரிடும் எல்லா நாடுகளின் மக்களுக்கும் அவர்களது அரசாங்கங்களுக்கும் முன்மொழிகிறது....''

இடியென அதிர்ந்த கையொலி முழக்கம் பிரகடனத்தை வரவேற்றது. லெனின் தொடர்ந்து விளக்கிப் பேசினார்.

மணி சரியாய் 10.35 ஆயிற்று, பிரகடனத்துக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோரும் அவர்களது பிரதிநிதிச் சீட்டுகளை உயர்த்திக் காட்ட வேண்டுமென்று கூறினார் காமெனெவ். பிரகடனம் ஒருமனதாய் ஏற்கப்பட்டது.

சொல்லி வைத்தாற் போல் எல்லோரும் ஒரு திடீர் உணர்ச்சியால் உந்தப்பட்டு எழுந்து நின்று, ஒரே குரலாய் ஒருங்கிணையும் வண்ணம் சர்வதேசியக் கீதம் பாட முற்பட்டோம். தலை நரைத்த முதுபெரும் படையாள் ஒருவர் சிறு குழந்தை போல் விம்மியழுதார். அலெக்சாந்திரா கொலன்தாய்ழூ சட்டெனக் கண்ணீர்த் துளியைத் துடைத்து அகற்றிக் கொண்டார். அந்த ஆழ்ந்த பண்ணொலி மண்டபத்தில் பெருக்கெடுத்து, சன்னல்களையும், கதவுகளையும் அதிரச் செய்து, வெளியே நிசப்த வானத்துள் உயர்ந்து எழுந்தது. ""யுத்தம் முடிவுற்றது! யுத்தம் முடிவுற்றது!'' என் அருகே நின்ற இளந்தொழிலாளி ஒருவர் முகம் பளிச்சிட்டு ஒளிரக் கூறினார்.

கீதம் முடிவுற்ற நிசப்தத்தால் சங்கடப்படுவோராய் நாங்கள் நின்று கொண்டிருந்த அக்கணத்தில் மண்டபத்தின் பின் வரிசையிலிருந்து பலத்த குரலில் கூறினார் ஒருவர்: ""தோழர்களே! சுதந்திரத்துக்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்வோம்!'' உடனே எல்லோருமாய்ச் சேர்ந்து சவ அடக்கப் பண்ணை இசைக்க ஆரம்பித்தோம். அடிமேல் அடி வைத்துச் செல்லும் துயரார்ந்த பண். ஆயினும் வெற்றியை முழங்குவது, முழுக்க முழுக்க ரசியப் பண்ணாய் அமைந்தது. நெஞ்சை நெக்குருகச் செய்வது. சவ அடக்கப் பண் இருளில் வதைந்த ரசியப் பெருந்திரளினரது இதயத்தின் பண்ணாய் ஒலிப்பது இந்தப் பெருந்திரளினரின் பிரதிநிதிகள்தான் இம்மண்டபத்தில் அமர்ந்து, தெளிவின்றி மங்கலாய்த் தமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு புதிய ரசியாவை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வெஞ்சமரில் உயிர் நீத்தீர்

வீரத் தியாகிகளாய், மக்கள்தம்

விடுதலைக்காக,
மக்கள்தம் மானம் காக்க...

இன்னுயிர் ஈந்தீர், உயிரனையவை யாவும் ஈந்தீர்;

கொடுஞ் சிறையில் வதைபட்டீர்,

கொடுமைக்கோர் அளவில்லை,

கடுங்காவல் கைதிகளாய்ச்

சங்கிலிகளில் தொலைவிடங்கள்

சென்றீர்...

சங்கிலி சுமந்து உடல் வருந்தினீர்,

உள்ளம் வருந்தவில்லை,

பட்டினியில் வதைந்த உம்

சோதரரையே

உள்ளத்தில் நினைத்திருந்தீர்;

ஒடுக்குவோரின் வாள் வீழ்ந்துபடும்,

நீதி வெல்லுமென அஞ்சாது நின்றீர்....

நீவீர் ஈந்த இன்னுயிரின் வெற்றிநாள்

இதோ வருகிறது;

கொடுங்கோன்மை தகர்ந்துவிழும், தளையறுந்து

பேருருவினராய் எழுவர் மக்கள்!

சென்று வருக சோதரர்காள்!

அழியாப் புகழ்கொண்ட

பாதை உமது பாதை!

புதுப்படை வருகிறது

உமைத் தொடர்ந்து,

சாவுக்கு அஞ்சாத படை...

சென்றுவருக சோதரர்காள்!

அழியாப் புகழ் கொண்ட

பாதை உமது பாதை!

சூளுரைக்கிறோம் உமது சமாதியில், விடுதலைக்காக,

மக்கள் தம் இன்ப வாழ்வுக்காக,

போராட, பாடுபட சபதம் ஏற்கிறோம்...

இதற்காகத்தான் அங்கே துஞ்சுகிறார்கள், மார்ச் மாதத்தியாகிகள் குளிரில் அமைந்த அவர்தம் சோதரத்துவச் சமாதியிலே. இதற்காகத்தான் ஆயிரமாயிரமாய் மடிந்தார்கள் சிறைக்கூடங்களில், தொலைவிடங்களில், சைபீரியச் சுரங்கங்களில்... இது வந்த விதம் இவர்கள் எதிர்பார்த்தது போன்றதாயில்லை, அறிவுத்துறையினர் விரும்பியது போன்றதாகவும் இல்லை. ஆனால் வந்து சேர்ந்தது இது கரடுமுரடானது, பெரும் பலம் படைத்தது, சூத்திரங்களுக்கு அடங்காதது, உணர்ச்சிப் பசப்புகளை மதியாதது; மெய்யானது...

மு பஷீர்

அலெக்சாந்திரா கொலன்தாய் (1872 1952): 1915லிருந்து போல்ஷ்விக் கட்சியின் உறுப்பினர், நவம்பர் புரட்சிக்குப் பிறகு பொதுநலத்துறை மக்கள் கமிசார்.

Saturday, May 26, 2007

லாலுவின் நிர்வாகத் "திறமை":கொல்லைப்புற வழியில் தனியார்மயம் கட்டணக் கொள்ளை

""நட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல் சமூகநீதி பேசும் பத்திரிகைகள் வரை இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இந்திய நிர்வாகவியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) பயிலும் மாணவர்களிடம், இலாபமீட்டும் இரகசியத்தைப் பாடம் நடத்தும் அளவுக்கு அவரது பெருமையும், புகழும் பெருகியுள்ளதாக முதலாளித்துவ மூதறிஞர்கள் பாராட்டுகின்றனர்.

1980களில் 7.6 சதவீதமாக இருந்த இரயில்வே துறையின் வளர்ச்சி விகிதம் 1990களில் 6.56 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அடுத்த பத்தாண்டுகளில் குறிப்பிடும் அளவுக்கு வளர்ச்சி இல்லை. இந்நிலையில், இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக லாலுபிரசாத் யாதவ் மாற்றியுள்ளார் என்றால், அவர் கையில் அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்துள்ளதா, என்ன! அதுவும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே அவரால் எப்படி இந்த அதிசயத்தைச் செய்ய முடிந்தது?

1990களில் இரயில்வே துறையின் பல முக்கியமான மீட்டர்கேஜ் பாதைகள், அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன; டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட தடங்கள் பெருமளவில் மின்சாரமயமாக்கப்பட்டன; பல தடங்களில் இருவழிப் பாதைகள் போடப்பட்டன; பெரும்பாலான ரயில் நிலையங்களின் ""சிக்னல்கள்'' தானியங்கியாக மாற்றப்பட்டன. இவ்வாறு மிகப் பெரிய இரயில்வே துறையின் அடிக்கட்டுமானங்களை நவீனமயப்படுத்த பல்லாயிரங் கோடிகள் செலவிடப்பட்டதால், அந்த பத்தாண்டுகளில் இரயில்வே துறையின் இலாப விகிதம் குறைந்து போனது.

இம்முதலீடுகள் எல்லாம் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக பலன் தரத் தொடங்கியுள்ளன. நாட்டின் இரயில்வே தடங்களில் 70 சதவீதமாக உள்ள அகலப்பாதைகள்தான், இப்போது 95 சதவீத சரக்குப் போக்குவரத்துக்கும், 89 சதவீத பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படுகின்றன என்பதிலிருந்தே 1990களில் போடப்பட்ட அகலப்பாதைகளின் பங்களிப்பு புலனாகிறது. கடந்த மூன்றாண்டுகளாக சாலைப் போக்குவரத்துடன் போட்டியிடும் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதில் இரயில்வே துறை வளர்ந்துள்ளது. அகலப் பாதைகள் அமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளதன் விளைவாக, மூலதன அழுத்தம் கொண்ட இரயில்வே துறை இப்போது மெதுவாக வளர்ச்சியடைந்து பலன்தரத் தொடங்கியதும், இதையே லாலுவின் நிர்வாகத் திறன் என்று முதலாளித்துவவாதிகள் உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.

நவீனமயப்படுத்தலால் ஏற்பட்ட செலவுகள் குறைந்து, பலன்கள் கிடைப்பது ஒருபுறமிருக்க, இலாபமீட்டும் துறையாக இரயில்வே துறையை மாற்றிய லாலுவின் "திறமை'தான் என்ன? பேருந்துகளிலோ சந்தையிலோ ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். அதையே அரசாங்கம் செய்தால் அது நிர்வாகத் திறமை என்பதுதான் லாலு கண்டுபிடித்துள்ள உத்தி.
சாதாரண தொடர் வண்டிகள் (பாசஞ்சர்) அனைத்தும் எவ்வித வசதிகளுமின்றி விரைவு வண்டிகள் (எக்ஸ்பிரஸ்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விரைவு வண்டிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல விரைவு வண்டிகள் அதிவிரைவு வண்டிகள் (சூப்பர் ஃபாஸ்ட்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சட்டபூர்வமாகவே கட்டணக் கொள்ளை தொடர்கிறது.

புறப்படும் இடத்திலிருந்து அல்லாமல், அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்தால், அதற்குக் கூடுதல் கட்டணம்; முன்பதிவு செய்யப்படும் படுக்கையில், கீழ்தளப் படுக்கைக்குக் கூடுதல் கட்டணம் என்று அங்கேயும் வழிப்பறி; அவசர அவசியம் கருதி உடனடியாக படுக்கை வசதியுடன் பயணம் செய்வதற்காக சற்று கூடுதல் கட்டணமுறையுடன் இருந்த ""தட்கல்'' திட்டத்தை வரைமுறையின்றி விரிவுபடுத்தி பலமடங்குக் கூடுதல் கட்டணக் கொள்ளை; 90 நாட்களுக்கு முன்னரே இணையதளம் மூலம் எத்தனை பயணச் சீட்டுகளையும் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இணையதள வசதியில்லாதவர்கள் அவசரப் பயணத்திற்காக வேறுவழியின்றி ""தட்கல்'' திட்டத்துக்கு துரத்தப்பட்டு அங்கே கூடுதல் கட்டணத்தைக் கொட்டியழ வேண்டிய நிலை; முன்பதிவு செய்ததை ரத்து செய்தால் இழப்பீடு தொகை இரு மடங்கு உயர்வு என பல வழிகளிலும் நூதனமான வழிப்பறி செய்கிறது இரயில்வே துறை.

தொடர்ந்து ஈராண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவே இல்லை என்று கூசாமல் புளுகிக் கொண்டு புதிய உத்திகளுடன் வழிப்பறி செய்து வரும் லாலு, ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, செலவுகள் குறைந்து ஆதாயம் பெருகியுள்ளதாகக் கணக்கு காட்டுகிறார். இரயில்வே துறையால் நியமிக்கப்பட்ட பிரகாஷ் டாண்டன் கமிட்டி, ராகேஷ்மோகன் கமிட்டி ஆகியவை பரிந்துரைத்த தொழிலாளர் விரோத, தனியார்மய நடவடிக்கைகளே இப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடைநிலை ஊழியர்களான ""கலாசி'' தொழிலாளர்களில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வேலையிலிருந்து பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். தண்டவாளங்களில் விரிசலைக் கண்டறிந்து பழுது நீக்குதல், தண்டவாளத்தின் கீழுள்ள ஜல்லி இறுகி விடாமல் சீரமைத்தல் பராமரித்தல், ரயில் பெட்டிகளைத் துப்புரவு செய்தல், ரயில் நிலையங்களைப் பராமரித்தல், ரயில்வே குடியிருப்புகள், உணவகம், முன்பதிவு சேவை, ஆளற்ற லெவல் கிராசிங்குகள், பாலங்களைக் கண்காணித்தல் முதலான இரயில்வே துறையே முன்னர் செய்துவந்த பணிகள் அனைத்தும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் தாரை வார்க்கப்பட்டுள்ளன. பணிமனைகளில் 15 சதவீதமும் தற்காலிக ஊழியர்களில் 100 சதவீதமும் ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்யப்பட்டு விட்டனர். அதிவேக ரயில்கள் சிறிய ஊர்களில் நிற்காது என்று காரணம் காட்டி, பல ரயில் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய ரயில் நிலையங்களில் ஆட்குறைப்பு காரணமாக ஊழியர்கள் மீது கூடுதல் வேலைப்பளு சுமத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகளே இரயில்வே துறையின் இலாபத்துக்கு முக்கிய காரணமாகும்.

இதுதவிர, ""ஈ டிக்கெட்டிங்'' முறை மூலம் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் வாயிலாக பயணச் சீட்டு விற்பனையைக் கொண்டுவந்து, ஆட்குறைப்புக்கும் அதன்மூலம் அதிகலாபத்துக்கும் திட்டம் தீட்டி வருகிறார் லாலு. ஏற்கெனவே தனியாருடன் சேர்ந்து 225 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார் லாலு. இந்திய ரயில்வேக்குச் சொந்தமாக நாடெங்குமுள்ள 10,000 ஏக்கர் உபரி நிலங்களைத் தனியாருக்கு விற்று ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டவும், ரயில்வே கட்டிடங்களில் தனியாருடன் இணைந்து தங்கும் விடுதிகள், பேரங்காடிகள், திரையரங்குகளை நிறுவவும் திட்டங்கள் தயாராக உள்ளன. வருவாய் அதிகம் கிடைத்துவரும் முக்கியமான சரக்கு ரயில் நிலையங்களையும் பயணிகள் ரயில் நிலையங்களையும் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான பம்பார்டியர், ஜெனரல் எலக்டிரிகல்ஸ் ஆகியன இதற்குப் பேரங்களை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே பயணிகள் பெட்டிகளையும் சரக்கு ரயில் பெட்டிகளையும் 15 தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 500 கோடி அளவுக்கு இரயில்வே துறை ஆதாயம் ஈட்டியுள்ளதால், இதை மேலும் விரிவுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்தகைய தொழிலாளர் விரோததனியார்மய நடவடிக்கைகளால் விரைவில் 3 லட்சம் ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, வேலையிலிருந்து விரட்டப்படும் அபாயத்தில் உள்ளனர்.

விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால், ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் விளம்பரங்களை அனுமதித்து வந்தது போய், இப்போது ஒரு ரயிலையே விளம்பரத்துக்காக பெயரிட்டு இயக்குமளவுக்கு தனியார்மயத்தில் மூழ்கி முத்தெடுக்கிறார், லாலு. கொலைகார கோக்கின் பங்காளி நிறுவனமான பெப்சி குளிர்பான கம்பெனியின் ""குர்குரே'' எனும் நொறுக்குத் தீனியை விளம்பரப்படுத்துவதற்காகவே ""குர்குரே எக்ஸ்பிரஸ்'' இயக்கப்படுகிறது.
உணவு மற்றும் பிற சேவைகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டதன் மூலம், உபரியாக உள்ள ஊழியர்கள் குறைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1000 கோடி அளவுக்குச் செலவுகள் குறைந்துள்ளதாகப் பெருமைப்படும் லாலு, இத்திட்டத்தை நாடெங்கும் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
சமூகநீதி, இடஒதுக்கீடு பேசும் பிற்பட்டோர் நலச் சங்கங்களில் பூஜிக்கப்படும் லாலுவால், ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஊழியர்களாவர். கடைநிலை ஊழியர்களான இவர்களின் வயிற்றிலடித்துதான், இலாபக் கணக்கு காட்டுகிறார் லாலு. பால்கோ போன்ற அரசுத்துறை நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் அல்லாமல், படிப்படியாக இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் புதிய உத்தி; ஒட்டு மொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்து வீதியில் வீசியெறியும் நரித்தனம்; விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, உள்வட்டப் பேருந்து என்றெல்லாம் பெயரிட்டு கட்டணக் கொள்ளையை நடத்தும் தி.மு.க. அரசை விஞ்சும் சட்டபூர்வ வழிப்பறி இவைதான் இரயில்வே அமைச்சர் லாலுவின் நிர்வாகத் திறன்!

இதனால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ""கோமாளி, ஊழல் பெருச்சாளி, கிரிமினல் அரசியல்வாதி, மாட்டுக்கார வேலன்'' என்றெல்லாம் நக்கலடித்து சாடி வந்த பார்ப்பனபனியா பத்திரிகைகளும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் இன்று அவரை ""டாப் டென்'' அமைச்சர்கள் பட்டியலில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.

· கவி

Monday, May 14, 2007

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது !

வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.
.
ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டதுமுன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.
.
விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்
'குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.
.
மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.
"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

புதிய கலாச்சாரம் மே 2007 இருந்து

தொடர்புடைய பதிவுகள் :

" புதிய கலாச்சாரம்" மே 2007

Monday, April 30, 2007

கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும் 'சிறுவணிகத்தை அழிக்கும் ரிலையன்ஸ் ·ப்ரஸ்'


இன்று நீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு தடை என்று உத்தரவு பிறப்பித்தவுடன் "அது சமுக நீதிக்கு எதிரானது" என்றும், "நீதிமன்றத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை" என்றும் கூறி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து பந்த் நடத்தினார் கலைஞர். ரிலையன்ஸ் கடைதிறப்பதால் பாதிக்கப்படும் சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம் நடத்தும் போது அதே சமூக நீதி அமைதி காக்கிறது.

இடஒதுக்கீட்டுக்குத் தடை என்றால் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமுகநீதி பேசும் இவர்கள், ரிலையன்ஸ் பிரஷ் வருவதால் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் என்று தெரிந்தும் உயர் ஜாதி பனியாவான அம்பானியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

இன்று ரிலையன்ஸ் செல்போனில் 24 மணி நேரமும் சன் டி.வியை கண்டுகளிக்கலாம் என்று விளம்பரம் செய்கிறான், இதனை சிவப்பு கம்பளத்தோடு சேர்த்து பார்க்கும் போது அம்பானிக்குள் கலைஞரும் அடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

14..... 24....ரிலையன்ஸ் கடைகள் திறப்பு...கோயம்பேட்டில் 40% வியாபாரம் பாதிப்பு, சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம், கடையடைப்பு என தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கும் போது கலைஞர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

பா.விஜய் எழுதிய நூல் வெளியீட்டுக்கு சென்று கொண்டும் (இந்த வித்தக கவிஞர்தான் 'சின்ன விடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா' என்று பாடல் எழுதியவர்), அம்மாவின் கருத்து மிக்க விமர்சன அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

மற்றபடி ரிலையன்ஸால் பாதிப்பு இல்லை என்று குங்குமத்தில் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ரிலையன்ஸ் பிரஷ்-ஆல் எந்த பாதிப்புமில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே, அவனை ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டால் பதில் இல்லை...
சரி இந்த விஷயத்தில் மற்ற தலைவர்களை பார்த்தால், பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் எதிர்கட்சியான அம்மா.. போராட்டம் நடக்க ஆரம்பித்தவுடன் ரிலையன்ஸை எதிர்த்து அறிக்கை விட்டார். இப்ப உத்திரபிரதேசத்திற்கு சென்று அம்பானியின் கூட்டாளியான முலாயம் சிங்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். இவர் இங்கு அம்பானியின் ரிலையன்ஸை எதிர்ப்பார், மேடை போட்டுப் பேசுவார் என்று எதிர் பார்க்க முடியுமா? அப்படி யோசிப்பதற்குத்தான் என்ன அடிப்படை உள்ளது?

அடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.

இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?

அடுத்து சொல்லில் மட்டும் மார்க்சியம் பேசும் சி.பி.எம் யின் DYFI..இன்று மாநாட்டு கோஷங்களுடன் சேர்த்து ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்தும் சுவரொட்டி எழுதி வருகின்றனர். இதை விட மோசடி இருக்க முடியாது. ஏனெனில் இவர்கள் ஆட்சியின் இருக்கும் மேற்கு வங்காளத்தில் தான் ரிலையன்ஸின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. டாட்டா, சலிம் நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை பறி கொடுத்துவிட்டுப் போராடும் மக்களைச் சுட்டு கொன்றும் , ஒடுக்கியும் வருகிறது, சிபிஎம் அரசு. இதே ரிலையன்ஸ் பிரஷ்க்கு கூட அனுமதி வழங்க புத்ததேவ் பட்டாச்சாரியா தயாராகி விட்டார்.ஆனால் DYFI இங்கு ரிலையன்ஸை எதிர்க்கின்றனர்.

மற்றொரு தலைவர் திருமா.. இவர் எல்லாரையும் விட மிக அறிவுடன் ரிலையன்ஸால் பாதிப்பே இல்லை என்று சொல்லி விட்டார். இவர் கட்சியின் சங்கம் தான் கோயம்பேட்டில் பெரியது. கோயம்பேட்டில் மூட்டை தூக்கி , கூறு போட்டு காய்கறி வாங்கி விற்பனை செய்யும் தலித் மக்கள் தாங்கள் பாதிக்கப் படுவதாகச் சொல்லிப் போராடுகின்றனர். ஆனால் இந்த 'வாழும் அம்பேத்கர்' பாதிப்பு இல்லை என்கிறார்.

இன்று சட்டசபையின் ரிலையன்ஸ் பிரஷ் பற்றி இவர்களின் எவரும் வாய்திறப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் அனைவருக்கும் அம்பானிக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை அறியலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மக்கள் போராட்டங்களை நாம் திரும்பிப் பார்ப்போமானால் அவை 'வேலைகொடு' என்றோ, 'சோறு போடு' என்றோ, 'கல்வி, மருத்துவமனை வேண்டும்' என்றோ இருப்பதை விட 'எங்களை வாழவிடு' என்றுதான் இருக்கிறது.
கடந்த மாதம் நந்திகிராமத்தில் மக்கள் தங்களது உயிராதாரமான நிலத்தைப் பன்னாட்டுக் கம்பெனியின் லாபத்திற்காகக் கொடுக்க முடியாது என்று போராடினார்கள். அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கு முன்பு, கலிங்க நகர் பழங்குடி மக்களின் வாழ்விடமான, கனிமவளம் மிக்க காடுகளை டாட்டாவுக்கு விற்பதை எதிர்த்துப் போராடிய பழங்குடிமக்களைச் சுட்டு வீழ்த்தினர். அதற்கு முன்பு டெல்லி விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களது போராட்டமும் வீணாகி டெல்லி விமான நிலையம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, இன்று சென்னை விமான நிலையத்தையும் தனியாருக்கு விற்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வீட்டைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து விட்டுக் கடைசியில் அந்த வீட்டுப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியைக் குறிவைத்துப் பறிக்கும் போது அப்பெண் "இதைமட்டுமாவது விட்டுவிடு" என்று கதறுவதைப் போலத்தான், 'எல்லாவற்றையும் கொள்ளையடித்தாய் பொறுத்துக்கொண்டோம் ஆனால் இன்றைக்கு எங்களை உயிர்வாழக்கூட விடாமல் தாலியறுக்கிறாயேடா நாயே!' என்று மக்கள் போராடுகிறார்கள்.

இப்படி அரசாங்கம் - தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத் தான் செயல்படுகிறது என்பதனை மறைக்கத்தான் மக்களுக்கு 'இரண்டு ரூபாய்க்கு அரிசி', 'இலவச டி.வி' என்று கலைஞர் வழங்குகிறார். இது கூட இவர்கள் கண்டுபிடித்தது அல்ல.அன்று ஜெர்மனியில் நாஜிக்கட்சி தொடர்ந்து மக்களுக்கு எதிராக அடக்குமுறை செலுத்தி வரும் போது மக்கள் நமக்கு எதிராக போராட மாட்டார்களா என்று கட்சிக்குள்ளே ஒரு விவாதம் வந்த போது ஹிட்லர் கூறினான் ' மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும் , சர்க்கஸ் மட்டுமே' என்று. அதைத்தான் இன்று மக்களுக்கு ரொட்டித் துண்டுக்குப் பதிலாக 2 ரூபாய் அரிசியும், சர்க்கஸ¤க்குப் பதிலாக கலர் டி.வி யும் வழங்குகிறார் கலைஞர்.

இன்றைக்குக் காசு இருந்தால் மட்டுமே நல்ல கல்வி பெற முடியும். இல்லையென்றால் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும். பணவசதியிருந்தால் மட்டுமே அப்பல்லோவுக்குப் போய் மருத்துவம் பார்க்க முடியும். இல்லையென்றால் அரசு மருத்துவமனைக்குப் போய் இன்னும் பல வியாதிகளை வாங்க வேண்டும். என்று பணம் இருத்தால்தான் உயிர்வாழலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இப்படி மக்களைப் பற்றி எந்தக் கவலையுமின்றி இந்த அரசு இருக்கையில் மக்களாகப் பார்த்து தாங்கள் உயிர் வாழத் தானாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, 5 வட்டி 10 வட்டிக்குக் கடன் வாங்கி, ஒரு சிறு தள்ளுவண்டி, தரைக்கடை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கும் ஆப்பு வைக்க அம்பானியைக் கொண்டு வருகின்றனர்.
இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு எல்லா முயற்சிகளும் செய்து விட்டுக் கடைசியில் வேறு வழியின்றி விவசாய நிலத்தை, குடியிருந்த வீட்டை விற்றுப் பணம் கொண்டுவந்து ஒரு சிறு மளிகைக் கடை நடத்தி எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்று நம்பி இருக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட வந்தது 'ரிலையன்ஸ் பிரஷ்'

'போட்டி போடு' என்று வாதாடும் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கும் இவர்கள்தான், 250 ரூபாய் காய்கறி கடை வைத்துப் பிழைக்கும் ஒரு பெண்னை , 25,000 கோடி போட்டு தொழில் நடத்தும் அம்பானியுடன் போட்டு போடச் சொல்கிறார்கள்.

ரிலையன்ஸ் பிரஷ்ஷால் நன்மை என்ன? என்று கேட்டால் , வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார் ப சிதம்பரம். சரி. எத்தனை பேருக்கு? புதிதாக வேலை வாய்ப்பை அம்பானி உருவாக்குகிறானா என்றால் அது இல்லை. இருக்கின்ற 18 லட்சம் சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகளின் வேலையைப் பறித்து விட்டு வெறும் ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை தருவானாம். இந்த அயோக்கியத்தனத்தைத் தைரியமாக இந்த ஏகாதிபத்திய அடிமை கூறுகிறது.

இத்தகையதொரு தனியார்மயம், தாராளாமயம் , உலகமய நடவடிக்கை தான் அனைத்துத் துறைகளில் முழு வீச்சாக இந்த ஆளும் வர்க்க அடிமைகளால் தினத்தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தான் நாடு மறுகாலனியாக்கத்துக்கு உட்பட்டு வருகிறது என்று நாம் சொல்கிறோம்.
இன்று நாட் டில் இருப்பது இரண்டே அணிகள் தான்.

ஒன்று அம்பானி, டாடா , வால்மார்ட் போன்ற பன்னாட்டு,தரகு முதலாளிகள் - அவர்களுக்காக ஏவல் வேலை செய்யும் ஓட்டு கட்சிகள் இவை அனைத்தும் ஒரு அணி.

சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகள்,தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் மக்கள் ஆகிய நாம் ஒரு அணி.

நாமாக ஓரணியில் திரளாவிட்டாலும் அவன் இன்று நம்மை ஓரணியில் திரள வைக்கிறான்.

அரசாங்கமே அவன் பின்னால் உள்ளது, அரசாங்கமே முடிவு செய்து விட்டது என்று புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை, துணிந்து அவனா , நம்மளா என்று பார்த்து விடுவோம். நம் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குபவனை பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா ? போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா? வாருங்கள், அத்தகையதொரு போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் என்று அழைக்கின்றோம்.

(27-4-07 புரசைவாக்கத்தில் தோழர் மருதையன் உரையில் இருந்து தொகுக்கப்பட்டது)
RELATED

Sunday, April 29, 2007

Thursday, April 26, 2007

ரிலையன்சை விரட்டியடிப்போம் - சிறுவணிகம் காப்போம்



ரிலையன்சை விரட்டியடிப்போம் - சிறுவணிகம் காப்போம்
27-04-2007
பொதுக்கூட்டம் & கலை நிகழ்ச்சி
தானா ரோடு, புரசைவாக்கம்,சென்னை


Thursday, April 12, 2007

"ரிலையன்ஸ் பிரஸ் முற்றுகை" மே 1 சென்னை





பண்ணைக் கூலிப்பாட்டு

நுகத்தடி உனதல்ல
பூட்டியகாளைகளும் உனதல்ல
உழுத பங்கு உனதல்ல
சவுக்கும் உனதல்ல
ஏரு மட்டுமா , விளையும் பூமி மட்டுமா?

வெள்ளைக் காளை உனதல்ல
மச்சக் காளை உனதல்ல
மாட்டுக் கொட்ட உனதல்ல
வெக்கப் போரும் உனதல்லஏரு
மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

ஏரிக்கரை உனதல்ல
கரை மரமும் உனதல்ல
முறம் உனதல்ல
ஒரு கோப்புகூட உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

கெணறு உனதல்ல
குளமும் உனதல்ல
கறந்த பாலு உனதல்ல
முளைச்ச பயிரும் உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

மழை உனதல்ல
காவாயும் உனதல்ல
அறுவா உனதல்ல
அறுவடையும் உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

கறுத்த மேகம் உனதல்ல
பருவங்களும் உனதல்ல
மேச்சநிலம் உனதல்ல
களத்து மோடும் உனதல்ல
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா?

குந்தி இருந்தா அண்ணே
குதிரைதான் ஓட்டுவான்
கொதிச்செழுந்து ஒன்னா நின்னா
எல்லாம் நடக்குமப்பா
தைரியமா நீ சொல்லுப்பா

நீ இல்லாம எள்ளுகூட மொளச்சு வராது
கூலியில்ல எங்களுக்கு நிலமே சொந்தம்
ஏரு மட்டுமா, விளையும் பூமி மட்டுமா
நாடு முழுசுக்கும் நீதான் சொந்தக்காரம்பா

குந்தி இருந்தா அண்ணே
குதிரைதான் ஓட்டுவான்
எதிர்த்து நாம நின்னமுன்னா
கஷ்டமும் பட வேணாம்
கண்ணீரும் விடவேணாம்
கொதிச்செழுந்து ஒன்னாநின்னா
எல்லாம் நடக்கும்ப்பா !

- செரபண்டராஜூ
(ஜூலை 10, 1972)

"ஒரு தமாஷின் விலை ஒரு லட்ச ருபாய்"


பாராளுமன்ற பன்றிகளின் தொழுவத்தில் எந்தவொரு விஷயமும் விவாதித்து முடிவெடுக்கப்படுவதில்லை. பல விஷயங்கள் விவாதத்திற்கு வருவதே கிடையாது; வந்தாலும் விவாதிக்கும் நேரத்தில் 'கோரம்' (குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை) இருப்பதில்லை. கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து 'கோரம்' இல்லை. அழைப்பு மணி ஒலித்தும் கூட யாரும் வரவில்லை. ஆனால் அதே கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் டி.வி.யில் கிரிக்கெட் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுருந்தார்கள். அங்கேதான் பெரும்பான்மை (மெஜாரிட்டி) !

போதாக் குறைக்கு பாராளுமன்றத்தில் அடிதடி சண்டைகள் முதல் 'தமாஷ்'கள் வேறு; மாதிரிக்கு இதோ :

நாராயணன் செளபே : ஹெக்டேர் மீட்டர் என்றால் என்ன?
பி.சங்கரானந்த் : உங்களுக்கு ஹெக்டேர் தெரியுமா?
நா.செள : தெரியும்.
பி.ச : மீட்டர் தெரியுமா?
நா.செள : எனக்கு நன்றாகவே தெரியும்.
பி.ச :
ஒரு மீட்டர் தண்ணீர் ஹெக்டேர் பரப்பளவுக்குத் தேங்கி நின்றால் அதுதான் ஹெக்டேர் மீட்டர். உங்களுக்கு புரிந்ததா?

நா.செள : நல்ல பேராசிரியராக உங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

பி.ச : ஆனால் உங்களைப் போன்ற மாணவர்கள் எனக்கு வேண்டாம்.

நா.செள : எனக்கு கற்றுக் கொடுக்க யாராவது வேண்டுமே?

-இந்த ஒரு தமாஷின் விலை என்ன தெரியுமா: ஒரு லட்சம் ரூபாய்! மக்களின் வரிப் பணத்தில் ஒரு சில நிமிடங்களில் ஒரு லட்ச ரூபாய் காலி !

(இப்ப இருக்கிற எம்.பிக்களின் பெயரை ,கேலிக்கூத்துக்களை போட்டு கொள்ளவும்)


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது