Wednesday, August 1, 2007

ஒட்டு மொத்த அரசு எந்திரமே செல்லரித்துப் போயிருக்கின்றன !!

அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!

நடுத்தர வர்க்கத்தினர், எப்போதுமே மற்ற வர்க்கத்தினரை விட அறிவாளிகளாகத் தங்களை எண்ணி சுயதிருப்தியில் மிதக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அற்பவாதிகள். அவர்கள் அறிவோ மிகவும் மேலோட்டமானதுதான்; ஆழமானதல்ல. சமீபத்தில் வெளியான சில வழக்குமன்றத் தீர்ப்புகளைக் கண்டதும், தமது அரசியலற்ற பார்வையுடன் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ""பார்த்தீர்களா, எல்லாம் அரசியல்வாதிகளால்தான் நாடே கெட்டுப் போகிறது. இதை நீதிமன்றம் மீண்டும் நிரூபித்து விட்டது'' என்று கூச்சல் போடுகின்றனர்.

பிரியதர்சினி மட்டூ, மற்றும் ஜெசிகாலால் கொலை வழக்குகளில் அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தி ஊடகம் மற்றும் சமூக அமைப்புகளின் முயற்சிகள் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொலைக்குற்ற வழக்கிலிருந்த தப்பிவந்த மத்திய நிலக்கரி அமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரன், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத்சிங் சித்து ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ளார்.

""மேற்கண்ட வழக்குகளில் தாமதமாகத் தீர்ப்புகள் வந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது. நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை, உறுதியாகி விட்டது'' என்கிறார்கள் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். ""இவை அரசியல்வாதிகள் மீது நீதித்துறை அடைந்த வெற்றி'' என்கின்றனர். இதற்குத் துணையாக இன்னொரு சான்றையும் எடுத்துக் காட்டுகிறார்கள். ""ஓட்டுவங்கியை நோக்கமாகக் கொண்டு இடஒதுக்கீடு அதிகரிப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்வதை எதிர்த்து நீதிமன்றங்கள் தீர்ப்புகள் கூறுகின்றன. நாடாளுமன்ற முடிவுகளை நீதிமன்றப் பரிசீலனைக்குட்படுத்துவதைத் தடுக்கும் ஒன்பதாவது பிரிவின் கீழ் சட்டங்கள் இயற்றுவதை உச்சநீதி மன்றம் எதிர்த்துள்ளது. ஆகவே, அரசியல்வாதிகள் ரொம்பவும் ஆட்டம் போட முடியாதவாறு மூக்கணாங்கயிறு போடுகிறது, உச்சநீதி மன்றம்'' என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் குதூகலிக்கின்றனர்.
இவர்கள் படித்த அறிவுஜீவிகள்தாம்; ஆனால், இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. படிக்காத பாமரர்களைப் போன்றே இந்த விசயத்தில் சிந்திக்கிறார்கள். உள்ளூராட்சி முதல் நாடாளுமன்றம் வரை நடக்கும் பல்வேறு வகைத் தேர்தல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மட்டும்தான் அரசியல்; அவற்றில் பங்கேற்கும் கட்சிகள், அமைப்புகள் தாம் அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள்; அவற்றின் பிரமுகர்கள், தலைவர்கள்தாம் அரசியல்வாதிகள் என்று நினைக்கிறார்கள்.

அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், சிறைச்சாலை, நீதிமன்றம் மற்றும் இவை சார்ந்த அனைத்துத் துணை நிறுவனங்களும் அரசு அமைப்புதான். இப்போது புதிதாக ""அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்'' என்ற பெயரில் அவதாரம் எடுத்துள்ள அமைப்புகளும் உண்மையில் அரசியல் அமைப்புகள்தாம். இந்த நிறுவனங்கள் அமைப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களும், நடவடிக்கைகளும் அரசியல்தான். இவற்றில் பங்கேற்கும் எல்லா நபர்களும் அரசியல்வாதிகள்தாம். ஆனால், இவையெல்லாம் நிர்வாக அமைப்புகள், நேர்மையாகவும், தூய்மையாகவும் இயங்கக் கூடியனவென்றும், மக்களின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அதாவது மற்ற யாரும் இவற்றின் மீது குறைகூறக் கூடாது என்றும், தேர்தல் அரசியல்வாதிகள்தாம் கேடானவர்கள்; எல்லாவிதமான அரசியல் தவறுகளுக்கும் காரணமானவர்கள் என்றும் படித்த அறிவுஜீவிகள் கருதுகின்றனர். இந்த வாதத்துக்கு ஆதாரமாக சிபு சோரன், சித்து போன்றவர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறார்கள்.

ஆனால், உண்மையோ வேறுவிதமாக உள்ளது. இராணுவ அமைப்புதான் நாட்டிலேயே மிகப்பெரிய மக்கள் விரோத ஊழல் அமைப்பு; நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் எல்லாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் பாதுகாப்பான சொர்க்க புரிகளாக உள்ளன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் போலீசு அமைப்பான சி.பி.ஐ.யும், உச்சநீதி மன்றமும் நாடறிந்த குற்றவாளிகளுக்குத் துணை செய்யும் அமைப்புகளாகவே உள்ளன. இதற்கான ஆதாரங்களை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. சிபு சோரன், சித்து விவகாரங்களிலேயே புதைந்துள்ள உண்மை இதுதான்.

சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த குற்றம் நடந்தது 1994ஆம் ஆண்டு. நவஜோத் சிங் சித்துவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குவதற்குக் காரணமாக இருந்த குற்றம் நடந்தது 1988ஆம் ஆண்டு. இதற்கிடையே சிபு 12 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சித்துவோ, இந்தியக் கிரிக்கெட் அணி வீரராகவும், வானொளியில் விமர்சகராகவும், பின்னர் எம்.பி. ஆக சில ஆண்டுகளும் இருந்து கோடிகோடியாக சம்பாதித்து சுதந்திரமாக வாழ்ந்துள்ளார். ""தாமதமாக வழங்கப்படும் நீதி, உண்மையில நீதி மறுக்கப்படுவதாகும்'' என்று படித்த அறிவுஜீவிகள் அடிக்கடி பிதற்றும் வசனம் இந்த வழக்குகளுக்குப் பொருந்தாதா? போலீசும் நீதித்துறையும் தானே இதற்குக் காரணம்! ""அரசியல்'' தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமென்றால் முதுகெலும்பில்லாத போலீசுக்கும், நீதித்துறைக்கும் படித்த அறிவுஜீவிகள் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்?

1994ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யாக இருந்த சிபுசோரனும் மற்றும் நான்கு பேரும் சேர்ந்து அவரது தனிச்செயலாளராக இருந்த சசிநாத் ஜா என்பவரை புதுதில்லியிலிருந்து கடத்தி ராஞ்சி நகரின் ஒரு குடியிருப்புக்குக் கொண்டுபோய் கொன்றுவிட்டனர். கொல்லப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் அவரது தாயார் தொடுத்த வழக்கில் தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படியும், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குப் போனது. நான்காண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1998இல் குற்றப் பத்திரிக்கை தாக்கலாகியது; கொலை நடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2006 டிசம்பரில் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது, சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கொலைக்கான காரணம், பின்னனி என்னவென்பதுதான். 1993ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரசின் சிறுபான்மை அரசுக்கு எதிராக வலதுசாரி பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரிகள் ஆகியோர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், பல கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு, மகத்தோ உட்பட ஐந்து எம்.பி.க்கள் நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரசுக்கும் ஜா.மு.மோ.வுக்கும் இடையிலான இரகசிய பேரம் பற்றிய உண்மைகளை அறிந்திருந்த சிபு சோரனின் தனிச் செயலர் சசிநாத் ஜா, இலஞ்சத் தொகையில் பங்கு கேட்டிருக்கிறார். அப்போது தான் இலஞ்சம் வாங்கியது எங்கே அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சிய சிபுசோரன் தனது தனிச் செயலாளரை தில்லியிலிருந்து கடத்திக் கொண்டு போய் ராஞ்சியில் வைத்துக் கொன்றுவிட்டார்.

இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்த இலஞ்ச விவகாரம் பின்னர் அம்பலமாகியது. நரசிம்மராவின் ஆட்சிக் காலமும் முடிந்துவிட்ட பிறகு நரசிம்மராவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங் மீது கிரிமினல் இலஞ்ச ஊழல் வழக்குப் போட்டது, பின்னர்வந்த ஐக்கிய முன்னணி அரசு. சி.பி.ஐ. நடத்திய இந்த வழக்கில், இலஞ்சம் வாங்கியதை மறுக்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமை மற்றும் வாக்குரிமை மீது கிரிமினல் வழக்குப் போடமுடியாது என்று வாதிட்டனர். சி.பி.ஐ. நீதிமன்றமும், தில்லி உயர்நீதி மன்றமும் இந்த வாதத்தை நிராகரித்தன.

ஆனால், நரசிம்மராவுக்கு எதிராக சி.பி.ஐ. நடத்திய வழக்கில் இலஞ்சம் வாங்கியவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அங்கு பேசியதற்கும் ஓட்டளித்ததற்கும் வழக்குப் போட முடியாது; அது அவரது சிறப்புரிமை என்றும் இலஞ்சம் கொடுத்தவர் மீது மட்டும் வழக்குப் போடலம் என்றும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சிபு சோரன் மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், தனது தீர்ப்பின்படியேகூட, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவின் மீது எந்த நடவடிக்கையும், தண்டனையும் விதிக்கவில்லை. மேலும் பல இலஞ்ச ஊழல் தில்லுமுல்லு மோசடி வழக்குகளில் இருந்து நரசிம்ம ராவை விடுதலை செய்தது.

இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் மேலும் கோமாளித்தனமான தீர்ப்பு வழங்கியது. இலஞ்சம் பெற்றவர்கள் குற்றவாளிகள் அல்லவென்று விடுவிக்க வகை செய்த உச்சநீதி மன்றம், இலஞ்சம் வாங்கியதற்காக அஜித் சிங் மீது குற்ற விசாரணை நடத்தலாம் என்று அனுமதித்தது. இலஞ்சம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதில் இருந்து அவர் விலகி இருந்தார் என்று காரணம் கூறியது, உச்சநீதி மன்றம்; அவர் ஓட்டுப் போடவில்லை; ஆதலால் வாங்கிய இலஞ்சம் அவரது ஓட்டைப் பாதிக்கவில்லை என்று வினோதமான விளக்கம் வேறு கொடுக்கப்பட்டது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அஜீத்சிங் கோரியதையும் உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இதே வாதத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் அஜித் சிங் மீதான குற்றவிசாரணையிலிருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது.

ஆனால், உச்சநீதி மன்றத்தின் அடிமுட்டாள்தனத்தை, அறிவுநேர்மையற்ற செயலை அஜித் சிங் விவகாரம் மேலும் நிரூபித்து விட்டது. அதாவது நரசிம்மராவிடம் இலஞ்சம் வாங்கிய அஜித் சிங் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது உச்சநீதி மன்றம் கூறியதைப்போல வாக்களிக்காமல் இருந்து விடவில்லை. அத்தீர்மானத்தை ஆதரித்து, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார். இந்த உண்மையைச் சொல்லி தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியபோதும் உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது. அதாவது இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களித்தவர்கள்மீது குற்றவிசாரணை நடத்த முடியாது; இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களிக்காமலோ எதிர்த்து வாக்களித்தாலோ அவர்மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரம். மொத்தத்தில், இலஞ்சம் கொடுத்தவருக்கு இலஞ்சம் வாங்கியவர் விசுவாசமாக இருக்கவேண்டும்; வேறுவிதமாக நடக்கக் கூடாது என்பது உச்சநீதி மன்றம் போட்டுள்ள புதிய சட்டம்!
நாடாளுமன்ற விவாதங்களில் பயமின்றி அதன் உறுப்பினர்கள் பேசவும், வாக்களிக்கவும் அதற்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடுக்க முடியாது என்று தடைவிதிக்கிறது 105 (2)வது சட்டப் பிரிவு.
ஆனால், இதை 1998ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய இத்தீர்ப்பு கையுங்களவுமாகப் பிடிபட்ட இலஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தப்புவிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டது, உச்சநீதி மன்றம். அதே உச்சநீதி மன்றம்தான் 2006ஆம் ஆண்டு இறுதியில் வழங்கிய ஒரு தீர்ப்பில் இதையே புரட்டிப் போட்டுப் பேசுகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பதினொரு எம்.பி.க்கள் அதற்கு எதிராக வழக்குப் போட்டனர். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு கேள்வி கேட்ட எம்.பி.க்களைப் பதவி நீக்கம் செய்தது சரிதான் என்று தீர்ப்புக் கூறியது. அதன்பிறகு வேறொரு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு அப்பால் வைக்கும் சட்டப்பிரிவு ஒன்பதின் கீழ் வைக்குமாறு நிறைவேற்றப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் விசாரிக்க உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளது.

அப்போது, இலஞ்ச ஊழல் பேர்வழிகளான நரசிம்ம ராவ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சாதகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு உரிமைகளை வளைத்துத் தீர்ப்புச் சொன்ன உச்சநீதி மன்றம், இப்போது அந்த சிறப்பு உரிமைகளை ஏற்க முடியாது, தலையீடு செய்வோம் என்கிறது. ஏனென்றால் இப்போது, நாடாளுமன்றம் கொண்டு வரும் இடஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சில்லரை சீர்திருத்தங்களைக் கூட சகித்துக் கொள்ளாது நாடாளுமன்றத்துக்குள்ள சிறப்பு உரிமைகளையும் மறுப்போம் என்கிறது உச்சநீதி மன்றம்.

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளில் மிகமிகப் பெரும்பான்மையினர் காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை (இடது சாரி கூட்டணியும் இதில் அங்கும்) ஆதரிப்பவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்றும் அதன் கட்டணி கட்சிகளை ஆதரிப்பவர்கள். நரசிம்மராவ், இந்திரா, ராஜீவ் உட்பட காங்கிரசுத் தலைவர்கள் பலரின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் உச்சநீதி மன்றம் துணை போயிருக்கின்றது.

சிபு சோரன் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெருங்கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கட்சியோ சிபு சோரனுடன் சேர்ந்து இலஞ்சம் வாங்கிய மகத்தோ என்ற ஜா.மு.மோ.வின் இன்னொரு எம்.பி.யை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது. அவர் பேரங்கள் படியாமல் ஒரு சில மாதங்களிலேயே பா.ஜ. கட்சியை விட்டு வெளியேறினார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று சிபு சோரன் உட்பட எதிர்த்தரப்பினர் விவகாரங்களில் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கி வைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ""யோக்கியவான்கள்'' நவஜோத் சிங் சித்து விவகாரத்தில் பொது இடத்தில் கார் நிறுத்தும் தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கு 1988இல் இருந்து நடந்தபோதும் அவரை எம்.பி. ஆக்கினர். இப்போது கொலைவழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்ற சித்து, பெயருக்குப் பதவி விலகி, உச்சநீதி மன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு பெற்றவுடன், மீண்டும் பா.ஜ.க.வால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுகிறார்.

பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஜெர்மானியப் பெண்ணைக் கற்பழித்துவிட்டான், அதன் கூட்டணி கட்சி ஆளும் ஒரிசா மாநில போலீசு பொது இயக்குநர் (டி.ஜி.பி.) மகன். அதற்காக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தன் மகனை சொந்த ஜாமீனில் பரோலில் அழைத்து வந்த ஒரிசா டி.ஜி.பி அவனை தலைமறைவாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுமார் இரண்டு மாதங்களாகியும் டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்யாமல், குற்றவாளியையும் பிடிக்காமல் இரு மாநில அரசுகளும் ஆட்டங்காட்டி வருகின்றன. புத்தாண்டு கேளிக்கையில் கலந்து கொண்டு, பெண்களிடம் தகாத முறையில் நடந்த இரண்டு இராணுவ அதிகாரிகளைக் கடந்தமாதம் கைது செய்தது கொல்கத்தா போலீசு. உடனே இராணுவப் படையொன்று போலீசு நிலையத்துக்குள் நுழைந்து சூறையாடி, போலீசுக்காரன்களையும், அடித்து நொறுக்கிவிட்டு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை மீட்டுச் சென்றது இப்போது மத்திய மாநில அரசுகள் (சி.பி.எம். அரசுதான்) சமரசம் செய்து விவகாரத்தை மூடி மறைக்க எத்தணிக்கின்றன.

இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுவது என்னவென்றால், தேர்தல் கட்சிகளும், அதன் பிரமுகர்கள் தலைவர்கள் மட்டுமல்ல உச்சநீதி மன்றம் உட்பட நீதிதுறையும் போலீசும், இராணுவமும் மொத்தத்தில் ஒட்டு மொத்த அரசு எந்திரமே செல்லரித்துப் போயிருக்கின்றன. இதில்
""அரசியல்வாதிகளை'' மட்டும் குறைகூறி, ஒட்டு மொத்த அரசு அமைப்பைப் பாதுகாக்க எத்தணிப்பது பச்சையான மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.

· மாணிக்கவாசகம்
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2007

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது