Sunday, August 26, 2007

கரும்பு கசக்கிறது

அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும்கரும்பு விவசாயிகளின் அவலக் கதை

திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்து நின்ற கரும்புகளைத் தன் கையாலேயே தீ வைத்துக் கொளுத்தி விட்டார். ""இன்னும் சில ஏக்கர்ல கரும்பு மிச்சமிருக்கு; அதையும் கொளுத்திட்டு, எல்லாம் வீணாப் போயிடுச்சுன்னு மனதைத் தேத்திக்க வேண்டியதுதான்'' என விரக்தியோடு சொல்கிறார், அவர்.

ஜெய்சங்ரைப் போல, இந்தப் பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் கரும்புப் பயிரைத் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர். இந்த விவசாயிகள் கிறுக்குப் பிடித்துப் போய் இந்தச் செயலைச் செய்யவில்லை. தங்களுக்குக் கிறுக்குப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, கரும்பைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்ட அருணாச்சலா சர்க்கரை ஆலை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென சமீபத்தில் மூடப்பட்டது. நட்டக்கணக்குக் காட்டி, கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கியையும் தராமல் ஓடிவிட்டது ஆலை நிர்வாகம். மேலும் ஆலை திடீரென மூடப்பட்டதால், இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 3 இலட்சம் டன் கரும்பை என்ன செய்வது என திகைத்துப் போன கரும்பு விவசாயிகள், இப்பிரச்சினையைத் தீர்க்கக் கோரி போராடத் தொடங்கினர். விளைந்து நிற்கும் கரும்பு முழுவதும், அண்டை மாவட்டங்களில் உள்ள கரும்பு ஆலைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற சமரசத் தீர்வை முன் வைத்தது, தமிழக அரசு.

திருவண்ணாமலை மாவட்ட கரும்பை வாங்கிக் கொள்ளும்படி மூன்று முறை உத்தரவு போட்டதாகக் கூறுகிறது, தமிழக அரசு. ஆனால், அண்டை மாவட்ட சர்க்கரை ஆலைகள் இந்தக் காகித உத்தரவுக்கு எந்தவிதமான மதிப்பும் தரவில்லை. கரும்பை வெட்டுவதற்கான உத்தரவை வழங்காமல் இழுத்தடித்து, விவசாயிகளைப் பந்தாடின. பத்துபன்னிரெண்டு மாதங்களில் வெட்ட வேண்டிய கரும்பை 18 மாதங்களாகியும் வெட்டவில்லை என்றால், விளைந்த கரும்பு விறகுக் கட்டையாகத்தான் நிற்கும். இந்தக் கொடுமையைக் காணச் சகிக்க முடியாமல்தான், விவசாயிகள் நட்ட கையாலேயே தங்களின் கரும்பைக் கொளுத்தி விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளும் இதேபோன்ற நெருக்கடிக்குள் — பருவம் தாண்டியும் கரும்பை வெட்டுவதற்காக உத்தரவு கிடைக்காத அவல நிலைக்குள் — சிக்கிக் கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் பருத்தி விவசாயிகளைப் போல, தமிழகத்தின் கரும்பு விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கும் வண்ணம் கரும்பு விவசாயம் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.

உரிய பருவத்திற்குள் கரும்பை வெட்டவில்லையென்றால், அதன் நீர்ச்சத்து வற்றிப் போய் பிழிதிறன் குறைந்து போகும். பிறகு, பிழிதிறன் குறைவையே காரணமாகக் காட்டி, கரும்பை அடிமாட்டு விலைக்குக் கேட்கும் நாணயமற்ற வர்த்தக நடைமுறையைத் தனியார் ஆலைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
""கரும்பின் பிழிதிறன் குறையும் பொழுது, ஒரு ஏக்கரில் 50 டன் கிடைக்க வேண்டிய மகசூல், 30 டன்னாகக் குறைந்து விடும். இந்தக் கரும்பை, லாரி வாடகை, ஆள் கூலி, புரோக்கர் கமிசன் எல்லாம் கொடுத்து ஆலையில் இறக்கிப் போட்ட பிறகு கிடைக்கும் வருமானம், கரும்புக்கு உரம்போட்ட விலையைக் கூடச் சரிகட்டாது'' என்கிறார்கள் விவசாயிகள்.

மைய அரசு இந்த ஆண்டு 1 டன் கரும்புக்கு ரூ.802.50ஐ ஆதார விலையாக நிர்ணயித்தது. தமிழக அரசு, தனது பங்கையும் சேர்ந்து ஆதார விலையை ரூ.1,025/ என நிர்ணயித்தது. ஆனால், தனியாருக்குச் சொந்தமான தரணி சர்க்கரை ஆலை, ""1 டன் கரும்பை ரூ. 600/க்குத் தருகிறோம் என எழுதிக் கொடுங்கள்; இல்லையென்றால் கரும்பை வெட்ட அனுமதி கொடுக்க மாட்டோம்'' என விவசாயிகளை மிரட்டி வருகிறது.

கரும்பு விவசாயிகள் இந்த மிரட்டல் பற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தபொழுது, அவர் விவசாயிகள் தரணி ஆலையைப் பற்றித் தவறாகச் சொல்வதாகக் கூறி, ஆலை நிர்வாகத்துக்காகப் பரிந்து பேசியிருக்கிறார். மற்றொரு தனியார் ஆலையான எஸ்.வி.மில்ஸ் பற்றி விவசாயிகள் பேசத் தொடங்கியவுடனேயே, ""அவர்கள் அரசாங்கம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்; என்ன செய்ய முடியும்?'' எனக் கையை விரித்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, 1,400 ஏக்கரில் விளைந்து நிற்கும் பதிவு செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள மறுப்பதாகவும்; ஆரூரான் குழுமத்தைச் சேர்ந்த அம்பிகா சுகர் மில்ஸ், தனது நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கரும்பை வாங்காமல், வெளியில் இருந்து விலை குறைவாகக் கரும்பை வாங்குவதாகவும் விவசாயிகள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் சர்க்கரையின் விலை இறங்கிவிட்டதால்தான், 1 டன் கரும்பை ரூ.400/க்கும், ரூ.600க்கும் கேட்பதாகத் தனியார் ஆலைகள், இந்த அடிமாட்டு விலையை நியாயப்படுத்துகின்றன. சர்வதேசச் சந்தையில் சர்க்கரை விலை உச்சத்தில் இருந்தபொழுது இலாபத்தினை அள்ளிக் கொண்ட தனியார் முதலாளிகள், சர்க்கரை விலை குறைவால் ஏற்படும் நட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் விவசாயிகளின் தலையில் சுமத்தி வருகிறார்கள்.

தனியார் முதலாளிகள் மட்டுமின்றி அரசும் தன் பங்குக்கு கரும்பு விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வருகிறது. கரும்பின் சர்க்கரை கட்டுமானம் 8.5 சதவீதம் என இருந்து வந்ததை, விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே 9 சதவீதமாக மைய அரசு உயர்த்தி விட்டது. இந்தக் கட்டுமானம் இல்லையென்றால், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது. ""கரும்பு பருவம் தவறி வெட்டப்படுவதாலும், கட்டுமானம் உயர்த்தப்பட்டிருப்பதாலும், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு 200506 மற்றும் 200607 ஆண்டுகளில் 92 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்'' என இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழகப் பொதுச்செயலர் ஆர்.விருத்தகிரி குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் 200203, 200304 ஆண்டுகளில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 34.20 கோடி ரூபாய் தனியார் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளது. வருவாய் மீட்பு சட்டப்படி இந்நிலுவைத் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுத்தர தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கரும்பை வெட்டி அனுப்பிய 14 நாட்களுக்குள் ஆலைகள் பணம் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிப்பதையும்; பதிவு செய்யாத கரும்பு விளைச்சலைக் காட்டி, ஆலைகளில் பதிவு செய்யப்பட்ட கரும்பின் விலையைக் குறைத்துக் கேட்கும் தனியார் முதலாளிகளின் வர்த்தக பேர அடாவடித்தனத்தையும் தமிழக அரசு கண்டு கொள்வதேயில்லை.

தனியார் ஆலைகளிடம் பதிவு செய்து கொண்டுள்ள கரும்பு 18 மாதங்களுக்கு மேலாகியும் வெட்டப்படாத நிலையில், ""இக் கரும்பினை நாட்டுச் சர்க்கரைத் தயாரிக்கப் பயன்படுத்திக் கொண்டு, அரசே நாட்டுச் சர்க்கரையை கிலோ ரூ. 15/ என்ற விலையில் ரேசன் கடைகளின் மூலம் விநியோகிக்க வேண்டும்'' என விவசாயிகள் கோருகிறார்கள். தமிழக அரசு இக்கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, வெட்டாத கரும்பை நாட்டுச் சர்க்கரைத் தயாரிப்பதற்கு விற்றால், ""கள்ளச் சாராயம் காய்ச்சவா நாட்டுச் சர்க்கரை தயாரிக்கிறாய்?'' என போலீசு மிரட்டி மாமூல் பறிப்பதாகக் குமுறுகிறார்கள் விவசாயிகள்.

""உணவுப் பயிர் விவசாயத்துக்குப் பதிலாக, பணப்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டால், விவசாயிகள் குபேரனாகி விடலாம்'' என்பது போல வேளாண் நிபுணர்களும், அதிகாரிகளும் விவசாயிகள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், தமிழகக் கரும்பு விவசாயிகளின் பரிதாபகரமான நிலையைப் பார்த்தால் இப்படி மாறுவதென்பது, எரிகிற கொள்ளியில் இருந்து தப்பித்து, கொதிக்கிற எண்ணெய் சட்டிக்குள் விழுந்த கதையாகி விடும் என்றுதான் தெரிகிறது.

தனியார் முதலாளிகளிடமும், கூட்டுறவு ஆலைகளிடமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கரும்பு விவசாயம் நடப்பதைப் போல, எல்லா விவசாய விளைபொருட்களையும் ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்யும் ஒப்பந்த விவசாய முறையை அமல்படுத்துவதற்கும்; ரிலையன்ஸின் அம்பானி தொடங்கி அமெரிக்காவின் வால்மார்ட் வரை, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் இந்த ஒப்பந்த விவசாயத்தில் குதிப்பதற்கும் தயாராகி வருகிறார்கள். 2010க்குள் 10 சதவீத விவசாயிகளை ஒப்பந்த விவசாயிகளாக மாற்றுவது என மைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒப்பந்த விவசாயத்தால் விவசாயி தொடங்கி நுகர்வோர் வரை அனைவருக்கும் இலாபம் கிடைக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் தேனொழுகக் கூறுகிறார்கள். ஆனால், தற்பொழுதுள்ள முறைக்கு மாற்றாக ஒப்பந்த விவசாயம் வந்தால், ""யார் கொழுப்பார்கள்? யார் இளைப்பார்கள்?'' என்பதற்கு கரும்பு விவசாயமே சாட்சியமாக உள்ளது.

· சுப்பு

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது