Wednesday, January 9, 2008

நரேந்திர மோடியே ஒரு ""தேசிய''அவமானம்

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ""விசா'' (நுழைவுச் சீட்டு) மறுக்கப்பட்டதும் ஆத்திரம் பொங்கக் குரைக்கிறது இந்துமதவெறிப் பாசிசக் கூட்டம்; இந்தியாவுக்கே, இந்திய மக்களுக்கே, இதன் அரசியல் சட்டத்துக்கே அவமானம் நேர்ந்துவிட்டது, இந்தியாவின் இறையாண்மைக்கே, இதன் ஜனநாயக மரபுகளுக்கே ஆபத்து வந்துவிட்டது என்று கூச்சல் போடுகிறது; ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சியின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், அமெரிக்க விமான நிலையத்தில் அம்மணமாக்கி சோதனையிடப்பட்டார். போபால் விஷ வாயுப் படுகொலைகளுக்குக் காரணமான முதலாளி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டான், இந்திய ஏழை விவசாயி மக்கள் மீது பூச்சி மருந்து தெளித்து பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தினந்தோறும் இவ்வாறானவை நடக்கும் போது அவமானம் இழைக்கப்பட்டதாக இவர்கள் யாருமே கருதவில்லை.

நரேந்திர மோடிக்கு அமெரிக்க ""விசா'' மறுக்கப்பட்ட பிறகுதான் சில உண்மைகள் இந்துமதவெறி பாசிஸ்டுகளின் ஞானத்துக்கு உறைக்கின்றன. ஈராக் படுகொலைகளையும் ""அபுகிரைப்'' சிறைச் சித்திரவதைகளையும் சான்று காட்டி, மனித உரிமைகள் விஷயத்தில் அமெரிக்காவின் இரட்டைத் தரம்பற்றி இப்போது கதறுகின்றனர். இவர்கள் இதுவரை ""பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவின் போர்'' விஷயத்திலும் இரட்டை அளவுகோல் பின்பற்றப்படுவதாகக் கதறிவந்தார்கள். அது அமெரிக்காவுக்கு எதிராக அல்ல, ஆதரவாக. அதாவது இசுலாமிய சர்வதேச பயங்கரவாதம் என்று அறிவித்து அந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை (தன்னை) இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடினார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, மனித உரிமை மீறல்களைத் தடுப்பது, மதச் சுதந்திரத்தைப் பேணுவது, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை, சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர், அணு ஆயுத மற்றும் பேரழிவு ஆயுதக் குவிப்பைத் தடுப்பது என்ற பெயர்களில் அமெரிக்கா உலகம் முழுவதும் உளவுப் படைகளையும் இராணுவ அதிரடிப் படைகளையும் ஏவி மேலாதிக்க, பயங்கரவாத வெறியாட்டம் போடுகிறது. உலக நாடுகளின் இறையாண்மையை மதியாத இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் இதுவரை இந்தியாவும் குறிப்பாக இந்து மதவெறி பாசிஸ்டுகளும் துணை போயிருக்கிறார்கள்.

குஜராத்தில் மதவெறிப் படுகொலைகள் நடந்தபோது சின்னஞ்சிறிய பின்லாந்து நாடு கூட கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அமெரிக்காவோ மௌனம் சாதித்தது. இப்போது ஈராக் படையெடுப்பு அபுகிரைப் சித்திரவதை குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடியின் அரசியல் குருவும் முன்னோடியுமான அத்வானி அப்போது அமெரிக்காவிற்கே போய் இந்தியப் படையை அனுப்பித் தருவதாக உறுதியளித்தார். பா.ஜ.க. மற்றும் காங்கிரசு அரசுகளின் வெளியுறவு மந்திரிகளும் கூட அவ்வாறே செய்தனர். இங்குள்ள எதிர்ப்பு காரணமாக தனியார் படை திரட்டி அனுப்பியுள்ளனர். இந்த வகையில் இந்துமதவெறிப் பாசிஸ்டுகளுக்கும் காங்கிரசுக்கும் பெரும் வேறுபாடு இல்லை. அரசியல் மற்றும் அரசுதந்திர காரணங்களுக்காக வேண்டியபோது அன்னிய பிரமுகர்களை அழைத்து விருதுகளும் கையூட்டுகளும் வழங்குவதும், வேண்டாதபோது விசா மறுப்பு உட்பட எதிர் நடவடிக்கைகள் எடுப்பதும் புதிதல்ல. விசா வழங்குவது அல்லது மறுப்பதை அரசுதந்திர ஆயுதமாக இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகளும் பயன்படுத்துகின்றன. விடுதலைப்புலி கிட்டு, பாலசிங்கம் மட்டுமல்ல, உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த கார்த்திகேசு சிவத்தம்பிக்குக் கூட விசா மறுக்கப்பட்டது. சமீபத்தில் அசாம் மற்றும் வடகிழக்கிந்தியா குறித்த சிறப்பு ஆராய்ச்சியாளரான டச்சு பேராசிரியருக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.

மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்; இந்தியக் குற்றவியல் சட்டத்தால் குற்றவாளி என்று நிரூபித்து தண்டிக்கப்படாத அவருக்கு விசா மறுப்பது சரியல்ல என்று காங்கிரசு உட்பட போலி தேசபக்தர்களும் மதச்சார்பற்றவாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இட்லர் கூடத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஜெர்மன் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. மதவெறிப் படுகொலைகளுக்குத் தலைமையேற்ற மோடி இன்னமும் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்தியாவும் அதன் அரசியல் சட்டமும் தனக்குத்தானே அவமரியாதை செய்து கொள்வதாகும். வெட்கித் தலைகுனிய வேண்டியதாகும். நரேந்திர மோடிக்கு விசா மறுப்பு இந்துமதவெறியர்களுக்குக் கிடைத்த தக்க தண்டனை, அவர்கள் கன்னத்தில் விழுந்த அறை என்று சிலர் ஆறுதல் அடைகின்றனர். இது அநீதி, அக்கிரமங்களை எதிர்த்து போராடி வீழ்த்துவதற்குத் துணிவு கொள்ளாதவர்கள் ""கடவுளாகப் பார்த்துக் கூலி தருவான்'' என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் கையாலாகாத்தனம்தான். மோடிகள் இந்த நாடே, இந்தச் சமூகமே வெறுத்து அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது