Monday, January 14, 2008

குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ""துக்ளக்''இல் இருந்து ""இந்தியா டுடே'' போன்ற பத்திரிக்கைகள் வரை, ""குஜராத் முதல்வர் மோடி அம்மாநிலத்தை அதிநவீனமாக்கி, சந்திரபாபு நாயுடுவை விடவும் முனைப்போடு அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்கி, அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முன்னோடி மாநிலமாக்கி இருக்கிறார்'' எனப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ""ஊக்கமிகு குஜராத்'' எனப் பெயர் சூட்டி, அதன் நவீனமயத்தைப் புகழ்வது இருக்கட்டும். இந்தியாவிலேயே பருத்தி விளைச்சலுக்குப் பெயர் போன குஜராத்தில் விவசாயிகளின் நிலைமை என்ன?

பருத்தி விவசாயம் பொய்த்துப் போனதால் கடனாளிகளாகி தற்கொலை செய்து கொண்ட மராட்டிய , ஆந்திர விவசாயிகளின் நிலைமைதான் குஜராத்திலும் இன்று நிலவுகிறது. இத்தனைக்கும் குஜராத்தில் தான் உயர்ரகப் பருத்தி அதிகமாக விளைகிறது. அம்மாநிலத்தின் மொத்த விளைநிலப்பரப்பில் 44% நிலங்களில் நீர்ப்பாசன வசதியுடன் பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. அம்மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் பூபேந்திர சிங், ""குஜராத் விவசாயிகளில் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை'' என்கிறார். ஆனால் அரசாங்கமே, 2006 இல் மட்டும் 148 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. முதல்வர் மோடியோ, பொதுக் கூட்டங்களில் பேசும் போது, ""எங்கள் மாநில விவசாயிகள், கஷ்டமான வாழ்க்கை நடத்தவில்லை. அவர்களில் பலரிடம் மாருதி கார்கள் கூட உள்ளன''என்கிறார். இவற்றுள் எது உண்மை?

ராஜ்காட் அருகிலுள்ள சரப்தார் கிராமத்தைச் சேர்ந்த பிரபா பென்னின் கணவர் ரமேஷ் விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்து கொண்டார். ரமேஷûம் அவரின் சகோதரர்களும் இணைந்து 20 ஏக்கரில் சீரகமும், பருத்தியும் பயிர் செய்து வந்தõர்கள். தொடர்ந்து இரண்டாண்டுகளாய் விளைச்சல் இல்லாததால், ரமேஷ் வெறுப்புற்றுத் தூக்கு மாட்டிக் கொண்டார்.
ரமேஷின் தற்கொலையைப் பதிவு செய்த போலீசு, தற்கொலைக்குக் காரணமாய் விவசாயம் பொய்த்ததை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது. பின்னர் அதனைத் திருத்திய போலீசு, சாவுக்குக் காரணமாக குடும்பப் பிரச்சினையைச் சொன்னது. ""உண்மையான காரணத்தை எழுதிவிட்டால் அரசின் இழப்பீடு கிடைத்து விடும். இதையே முன்னுதாரணமாக்கிக் கொண்டு பணத்துக்காகப் பலரும் சாகத் துணிவர்'' என வக்கிரமாய்ப் பேசுகிறது போலீசு.

வாட்லி கிராமத்தில் நம்பிய விவசாயம் மோசம் செய்ததால் 50,000 ரூபாய்க்குக் கடனாளியாகி, கடனைத் திருப்ப முடியாத நிலையில் கடந்த ஜூலையில் பஹூபாய் எனும் 35 வயது விவசாயி உயிரை மாய்த்துக் கொண்டார். அவரின் விதவை மனைவி வஜூபென், இச்சாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்கவும் முடியவில்லை. ""புகாரைப் பதிவு செய்யக்கூடப் பணம் கேட்கும் போலீசுக்குத் தர என்னிடம் பணம் இல்லை'' எனும் வஜூபென்னால் சாதி வழக்கப்படி (தர்பார் சாதிராஜ்புத்) தண்ணீர் எடுக்கக்கூட வீட்டை விட்டு வெளியே வர இயலாது அவர் விதவை என்பதால்;வயிற்றுப் பாட்டுக்கு? தனது உறவினர்கள் செய்யும் சிறு உதவிகளாலும், தனது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதாலும் ஏதோ வாழ்க்கை ஓடுகிறது.

அதே ஊரில் தர்பார் சாதியைச் சேர்ந்த அனக்காய் தக்கடா (வயது 32) விவசாயத்தில் நட்டமடைந்து 2007 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் விதவையோ கூட்டுக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டு வயிற்றுப் பாட்டைச் சமாளிக்கிறார்.

பெண்களின் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கடன் வாங்கிச் செலவழிக்கும் விவசாயிகள், கடனை அறுவடைக்குப் பின் அடைத்து விடலாம் என எண்ணினால், விவசாய இடுபொருளின் செலவைக் கூட விளைச்சல் ஈடுகட்டுவதில்லை. வாங்கிய கடனும், அதன் வட்டியும் வளர்ந்து அவர்களின் உயிரைப் பறித்து விடுகிறது.

பனியா தேவ் கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவர் வல்லப்பும் அவர் மனைவி, மகன்,மருமகள் ஆகியோரும் கடந்த நவம்பரில் சோமநாதபுரம் அருகே கடலில் குதித்து ஒட்டுமொத்தமாய் உயிரை மாய்த்துக் கொண்டனர். மின்சாரக் கட்டணப் பாக்கி கட்ட வேண்டி 5 வட்டிக்கு லேவாதேவிக்காரர்களிடமிருந்து ஒண்ணரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். விவசாயம் அவர்களை ஏய்த்து விட்டது. வட்டிக்கு மேல் வட்டி வளர்ந்து 12 லட்சமாய் ஆனபிறகு, தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுப் பார்த்தார், வல்லப். கடன்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. "எந்நேரம் கடன்காரன் வீட்டில் வந்து உட்காரப் போகிறானோ' எனும் திகிலிலேயே அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை. அந்த அவமானமே அவர்களைக் கடல் நோக்கித் தள்ளிவிட்டது.

மலாக்நெஸ் கிராமத்தில் 5000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத தலித் விவசாயியின் வீட்டையே எடுத்துக் கொண்டுள்ளனர், கந்துவட்டிக்காரர்கள். ""அவர்களை எதிர்த்து எதுவும் பேசமுடியாது. சிறு விவசாயிகளில் ஒருத்தர் கூட நல்லா இல்லை. வாழ்வதற்கே பெரும் போராட்டமாய் இருக்கிறது'' என்கிறார் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் கானுபாய் கன்னியா.

விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு ஓடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூச்சிக்கொல்லி, விதை ஆகியவற்றின் விலை ஏறிக் கொண்டு வருகிறது. பாசனத்துக்கு தேவைப்படும் தண்ணீரின் கட்டணத்தை ஆண்டுக்காண்டு ஏற்றி வருகின்றனர். மோடி அரசோ மின்கட்டணத்தை இருமடங்கு ஏற்றி விட்டது. ஆந்திர, மராட்டிய மாநில விவசாயிகளை ஏமாற்றிய பி.டி.பருத்தி விதையின் விலை அதிகமாகி விட்டதால், அதே விதையின் போலி குஜராத் சந்தையில் மலிவாய் விற்கப்படுகிறது. அதை வாங்கி விதைத்துக் காய்ப் புழுக்களால் நாசமாகியுள்ளனர் விவசாயிகள்.
பெருகிக் கொண்டிருக்கும் குஜராத் தற்கொலைகளை மூடி மறைக்கும் மோடி அரசை எதிர்த்து, அவரது பா.ஜ.க. கட்சியின் துணை அமைப்பான ""பாரதீய கிசான் சங்கம்'' போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர் பிரபுல் சஞ்சேலியா, ""தற்கொலை மொத்தம் 148 மட்டுமே எனப் புளுகுகிறது மோடி அரசு... எங்களுக்குத் தெரிந்தவரை இது 300க்கு மேல்'' என்கிறார்.

"தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை போலீசு முதல் தகவலறிக்கையில் எழுதி விட்டால், குஜராத்தில் கொந்தளிப்பு உருவாகிவிடும் என்பதால் பொய்யை எழுதி நிரப்புகிறார்கள்'' என அவர் சாடுகிறார்.

குஜராத் அரசின் விவசாய விரோதக் கொள்கையை அந்த அமைப்பே, ""அரசு விவசாயிக்கு ஒன்றுமே செய்வதில்லை. அதன் நோக்கமெல்லாம் விவசாய நிலத்தைக் கைப்பற்றி, அதைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வசம் ஒப்படைப்பதுதான்'' என அம்பலப்படுத்துகிறது.
மோடி, தனது மாநில விவசாயிகள் கார் வைத்திருப்பதாகச் சொன்னதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போன மலாக்நெஸ் கிராம விவசாயிகள், தங்கள் தேய்ந்து பிய்ந்து போன செருப்புகளைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்டி, ""நல்ல செருப்பு வாங்கவே வக்கற்ற நிலையில் இருக்கும் நாங்கள் காருக்கு எங்கே போவது? முடிந்தால் இந்தச் செருப்புகளை மோடிக்கு அனுப்புங்கள். அவரிடமே கார் வைத்திருக்கும் விவசாயியைக் காட்டச் சொல்லுங்கள்'' என்கிறார்கள்.

இந்துக்களின் ராஜ்ஜியம் என மோடியின் அரசைப் பாராட்டி மகிழ்கிறார்கள் இந்து வெறியர்கள். ஆனால், மோடியின் விவசாய விரோத கொள்கைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் "இந்துக்கள்'தான் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, முஸ்லிம், கிறிஸ்துவ விரோத அரசு மட்டுமல்ல. அது ஏழை "இந்து' விவசாயிகளுக்கும் எதிரான அரசுதான். ஆனால், முதலாளித்துவ பத்திரிக்கைகள் அனைத்தும், அம்மாநில அரசு போலி என்கவுண்டர் (போலி மோதல்)களை மூடி மறைப்பதைப் போலவே, கணினிமயமாக்கிய "ஹைடெக்' முதல்வர் எனும் முகமூடியை மோடிக்கு அணிவித்து, நாட்டு மக்களை ஏய்த்து வருகின்றன.
·கவி

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது