Tuesday, January 22, 2008

விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?

எச்சரிக்கை! எய்ட்ஸ் வியாபாரிகள்
..
10 ஆண்டுகளுக்கு முன் புதிய கலாச்சாரத்தில் வந்த "விபச்சாரத்தின் தரகன் எய்ட்ஸின் மருத்துவனா?" என்ற கட்டுரை தற்போது ஆணுறை வியாபாரத்திற்கு NGO கள் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கும் காலத்தில் மறுபதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என பிரசுரிக்கப்பட்டு உள்ளது. இதில் என்ன கூடுதல் பொருத்தம் என்றால் அன்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சராக கருணாநிதி என்பது. இன்றும் இவர்கள் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன முன்னேற்றம் என்றால் லட்சக்கணக்கான கோடியினை தங்கள் முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுத்திய இவர்கள் தங்களது சொத்தை பல்லாயிரக்கணக்கான கோடியாக உயர்த்தியதும் 83 கோடி இந்திய மக்களின் தினசரி வருமானத்தை ரூ 20 ஆக ஆக்கியதும் தான்.

ஐம்பதாம் ஆண்டு சுதந்திரத்தின் (?) விழாவைக் கொண்டாடும் ஆட்சியாளர்கள் நாடெங்கும் 'தேசபக்தி' பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டை நோக்கி மக்களை இழுத்துப் போக இருபத்தியோரு சானல்களை திறந்து தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்று ஆரம்பித்தபோது எதிர்த்து விமர்சித்தவர்களைப் பார்த்து, "உலக நாடுகளோடு போட்டி போட்டு முன்னேற இதெல்லாம் அவசியம், சும்மா குறைசொல்வதை விட்டு பாசிட்டிவ்வான விசயத்தைப் பாருங்கள்", என்று அறிவுரை கூறினார்கள் அமைச்சர் பெருமக்கள். இவர்கள் தீட்டிய திட்டங்களினால் ஏழை, எளிய மக்களுக்கு என்னடா பாசிட்டிவ்வான சங்கதி என்று எட்டிப் பார்த்தால் நாடு முழுக்க ஓரே எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆக இருக்கிறது.

"லாரி வாகன தொழிலாளர்கள் தான் அதிகம்; இல்லை நடுத்தர வர்க்க ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகம்; பெண்கள்; குழந்தைகள் தப்பவில்லை என்று மக்களிடம் சதவிகித கண்க்கைக் காட்டிவிட்டு, எய்ட்ஸின் சமூக தோற்றுவாய்க்கு காரணமான அரசும், ஆளும் வர்க்கமும் தப்பித்துக் கொள்கிறது.

எந்தவொரு சமூக சீரழிவும் அரசாங்கத்தின், அதிகார வர்க்கத்தின் துணையின்றி நடப்பதில்லை என்பது நாடே அறிந்த சங்கதி. சாராயாம், சூதாட்டம், சுரண்டல் லாட்டரி, ஆபாச சினிமா, ஆபாச புத்தகம், விபச்சாரம் என ஒவ்னொன்றையும் மெல்லமெல்ல அறிமுகப்படுத்தி தொழிலாக்குவது பின்பு அது சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தி பிரச்சினைகள் கிளம்பியவுடன் "இனி என்ன செய்வது? சாராயத்தை ஒழிக்க முடியுமா? விபச்சாரத்தை ஒழிக்க முடியுமா? ஜனங்கதான் இதுக்கெல்லாம் போகாம இருக்கனும்; அவங்கதான் விரும்புறாங்க", என்று பழியை மக்கள் மீதே போட்டு, மேற்பூச்சு நடவடிக்கைகள் எடுப்பதுதான் அரசாங்கத்தின் வாடிக்கை.

சிகரெட் பெட்டியில் "புகை உடல்நலத்திற்கு தீங்கு" என்று எழுதி வியாபாரம் செய்வதுபோல, மதுப் புட்டியில் "குடும்பத்தைக் கெடுக்கும்" என்று எழுதி வியாபாரம் செய்வது போல "எய்ட்ஸை தடுக்க நிரோத் உபயோகியுங்கள்" என்று எய்ட்ஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற அரசும், தன்னார்வ அமைப்புகளும். ஒழுக்கம், அன்பு, அகிம்சை என்ற பாதையில் தொடர்ந்து முன்னேறிய "கதர் வியாபாரிகள்" இவ்வளவு சீக்கிரம் நிரோத் வியாபாரிகளாக வளர்ந்திருக்கிறார்கள் என்றால், எல்லாம் புதிய பொருளாத கொள்கையின் மகிமைதான்.

அன்னிய மூலதனத்தைப் புகுத்தி விவசாயம், கைதொழில், சிறு தொழில்களை நசுக்கி நாசமாக்கி ஆயிரக்கணக்கான மக்களை குடும்பம் குடும்பமாக விபச்சாரத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்க்கையை சீரழித்தது யார்? இதற்குக் காரணமான இந்த அரசாங்கமும், அதிகார கும்பலுக்கும் "எய்ட்ஸை" பற்றி விழிப்புணர்வூட்ட எந்த அருகதையும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க இவர்களின் அணுகுமுறையே, எய்ட்ஸை ஒழிக்கப் போவதில்லை என கட்டியம் கூறுகிறது.

எய்ட்ஸை ஒழிப்பதைவிட ஆணுறை விற்பதிலேயே அரசாங்கம் குறியாய் இருக்கிறது. இது மிகையில்லை. வக்கிர சிந்தனைகளை வாரி வழங்க வகைவகையான சானல்கள், ஆபாச திரைப்படக் காட்சிகள், நட்புத் தொலைபேசி என்ற பெயரில் பேச்சு விபச்சாரம், பாலியல் சுற்றுலா என்று அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே மக்களிடம் "மனக் கட்டுபாடு அவசியம்" என்று இரட்டை வேடம் போடும் இந்த அயோக்கியத்தனத்தை ஒழிப்பதல்லவா முதல் அவசியம்.

சமீபத்தில் மகாலிங்கபுரத்தில் சிறுவர்கள் விபச்சாரம் பற்றி தெய்தி வெளியே வந்தபோது இந்திய சுற்றுலாத் துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தொட்டு உதிர்த்த வாக்குமூலம் இது, "வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர்களின் வருகையே நின்றுபோகும். சுற்றுலா வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகையால் குற்றவாளிகளை கடுமையாக ஏதும் செய்ய முடியாது"

பார்த்தீங்களா? எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன கல்லா பெட்டிக்கு காசு வந்தால் போதும் என்று அரசியல் விபச்சாரம் செய்யும் இந்த ஆளும்வர்க்க கும்பலா எய்ட்ஸை ஒழிக்கப் போகிறது?!

இந்திய கலாச்சாரம், புனிதம் என பொய்த்திரைகள் களைந்து கூட்டாளி நிர்வாணப்பட்டு நிற்கும் போது பங்காளி பார்த்துக் கொண்டிருப்பானா? எய்ட்ஸின் பிதாமகன் அமெரிக்கா (USAID) உடுக்கை இழந்த இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

குறிப்பாக தமிழ் நாட்டில் வி.எச்.எஸ் (வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் என்ற தன்னார்வ அமைப்பிற்கு 36 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு ஆள் அமர்த்தியுள்ளது. யாரால் எய்ட்ஸ் தோன்றியதோ, அவனே இங்குவந்து யார், யாருக்கு 'எய்ட்ஸ்' இருக்கிறது என்று அக்கரை எதிர்க்கத் தோன்றுமா? இந்தியாவின் உறவு கொள்கை வரை ஆராய்வதற்கு அமெரிக்காவுக்கு இல்லாத உரிமையா?

அதாவது வியாபாரம் என்பது கேவலமில்லையாம், விபச்சாரி என அழைப்பதுதான் பாவமாம். ஆனால் பாலியல் தொழிலாளர் (Sex - worker) என பங்குவமாக அழைக்கச் சொல்கிறது. இந்த அறிவாளிகளின் அகராதிப்படி இனி திருடனை திருடன் என்று அழைக்கக் கூடாது. களவுத் தொழிலாளி என கவுரவமாக அழைக்க வேண்டும்.

புதுப்பட்ஜெட் தயாரித்து ப.சிதம்பரம் சொன்னதுபோல, இனி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. அப்படியே வெளுப்பாக்கி கொள்ளலாம் என்றார். அதன்படி விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. எனவெ அதையும் ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எந்தச் சீரழிவையுமே ஒழிப்பதற்கு பதில், அதை ஒரு தொழிலாக ஆக்குவதிலேயே தன்முனைப்பைக் காட்டுகிறது அரசாங்கம்.

எய்ட்ஸ், ஊழல் எதுவானாலும் "பாதுகாப்பாக விளையாடுங்கள்" என்பதையே பண்பாடாக உருவாக்குகிறது அரசு. இதற்கான வேலைகளையும் மும்மூரமாக நடக்கிறது.

மைல் கணக்கில் நடந்துபோய், மணிக்கணக்கில் காத்திருந்து ரேஷன் அரிசி வாங்கிவரும் சிரமத்திற்கு மாற்று ஏற்பாட்டிற்கு வழி செய்யாத அரசு, கைக்கெட்டும் தூரத்தில் ஆணுறைகளை அள்ளிக் குவிக்கிறது.

இவர்களின் 'எய்ட்ஸ் கட்டுப்பாட்டை' நிரோத் அட்டை கவர்ச்சியே எடுத்தெறியும் அளவுக்கு, தொழில் சூடு பிடித்துள்ளது. பிரபலங்கைன் டி.வி விளம்பரம் முதல், விலாசம் எழுதப்படாத (இன்லெண்ட்) உள்நாட்டு காகிதம் வரை எய்ட்ஸ் எச்சரிக்கையுடன் நிரோத் விளம்பரம் இளைய பாரதத்திற்கு வழிகாட்டுகிறது. தனித்தனி ஊசி, இலவச பரிசோதனை, இன்னும் ஒரு படி மேலேபோய் வரலாற்றில் பதிக்குமளவுக்கு சாலையோரங்களில் மரங்களை நட்ட பெருமை அசோகருக்கென்றால், ஆணுறை தானியங்கி நட்ட பெருமை கருணாநிதிக்கு எனுமளவுக்கு அப்படியொரு கட்டுமான வேலை நாடெங்கும் நடக்கிறது.

பாவம் இதையெல்லாம் கண்ணாரக் காண ஒருவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆசையாய் அறிமுகப்படுத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் இவ்வளவு சீக்கிரமாய் எச்.ஐ.வி பாசிட்சிவாக மலரும் என்று தெரிந்திருந்தால், போயும் போயும் போபர்ஸ் பீரங்கியில் பெயரைக் கெடுத்துக் கொண்ட ராஜீவ் காந்தி தேச பாதுகாப்புக்காக ஒரு ஆணுறை கம்பெனி ஒப்பந்தத்திலேயே பணத்தை கமுக்கமாக அள்ளியிருக்கலாம். அதை அளவிற்கு எய்ட்ஸை ஒழிப்பதற்கான அடிப்படையை மாற்றாமல், நோய்க்கு உறை தைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் வியாபாரிகள்.

இதில் பத்திரிகையில் வாளிப்பான உடலையும் , எலும்பு துருத்திய உடலையும் பக்கம் பக்கமாக போட்டு, இப்படி இருந்தவனை, இப்படி ஆக்கிவிட்டது "எய்ட்ஸ்" என்ற விளம்பரம் வேறு; ஆபத்தைத் தடுக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்த ஒரே வழி "எய்ட்ஸ்க்கு நிரோத்; இந்தியாவிற்கு காந்தியம்"

எலும்பும் தோலுமாக இருக்கும் தொழிலாளி; எப்பவுமே துருத்தி இருப்பதற்கு யார் காரணம்? எய்ட்ஸா? அரசா? நமக்குத் தெரியும் எய்ட்ஸை வியாபாரம் செய்யும் அரசும், அதிகார வர்க்கமுமே அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம்; இனியும் நம்முடைய இரத்தத்தை பசிசோதித்துக் கொண்டிருப்பதில் பலனில்லை; இந்திய ஆளும் வர்க்கத்தை ஒரு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எய்ட்ஸ் உள்ளிட்ட எதற்கும் தீர்வில்லை.

- சித்தன்
நன்றி இரும்பு

நன்றி புதிய கலாச்சாரம்

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது