Wednesday, June 27, 2007

கிரிமினல்மயமானது தி.மு.க. வாரிசு அரசியல்

கருணாநிதியின் சாணக்கிய அரசியல், பரமபத விளையாட்டில் நடப்பதைப் போல வெற்றியின் இறுதிப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து, சரிந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்தி, இரத்தத்தின் இரத்தமான தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக முடிசூட்டுவதற்கான எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டதாகப் பெருமூச்சுவிட்டு, தன் சட்டமன்ற வாழ்வுக்குப் பொன்விழாக் கொண்டாடும் வேளையில் அரசியலில் அவர் வளர்த்தகடாவே மார்பில் முட்டிவிட்டது. கருணாநிதி தனது எழுபதாண்டு அரசியல் வாழ்வில் நடிக்காத ஒரு சில தருணங்களில் ஒன்று அவரது மருமகனும் அரசியல் சகுனியுமான முரசொலி மாறன் இறந்தபோது இடிந்து போய் கதறி அழுததாகும். முரசொலி மாறனின் இழப்புக்கு ஈடுகட்டுவதற்காக தனக்கு நெருக்கமான, விசுவாசமான, ஆங்கிலம்இந்திப் புலமையுள்ள, உலகமயமாக்கச் சூழலுக்கேற்ற கல்வியும் பயிற்சியும் பெற்ற அரசியல்தொழில் தரகனாக தயாநிதி மாறனைத் தெரிவு செய்தார் கருணாநிதி.
..
கருணாநிதியின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமர் மன்மோகன், காங்கிரசுத் தலைவர் சோனியா முதல் பில்கேட்சு போன்ற பன்னாட்டுத் தொழில் கழகத் தலைவர் வரை பேரங்கள் நடத்தும் அதிகாரத்தைப் பெற்றார், தயாநிதி மாறன். செய்தி ஊடகத்தில் மாறன் சகோதரர்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றிகரமான, திறமையான மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்ற கருத்தை உருவாக்கினார். உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் வரைவுத் திட்டப்படி நீட்டிய கோப்பில் கையொப்பமிடுவதோடு, தனது குடும்பத் தொழில் குழுமத்துக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் போடுவதும் சாதனையாகச் சித்தரிக்கப்பட்டன. இருபது தொலைகாட்சி அலைவரிசைகள், ஏழு பண்பலை வானொலி அலைவரிசைகள், மூன்று நாளிதழ்கள், மூன்று பருவ இதழ்கள் ஆகியவற்றோடு தென்னக செய்தி ஊடகத் துறையில் ஏகபோக நிலையை அடைந்த மாறன் சகோதரர்கள், தகவல் தொழில் நுட்ப சாதன உற்பத்தி மற்றும் விமான சேவை என்று தமது தொழிலை விரிவுபடுத்தி, மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டிலேயே 13வது பணக்கார நிறுவனமாக சன் குழுமம் வளர்ச்சியுற்றது. மேலிருந்து கட்சிக்குள்ளும் அரசியலிலும் திணிக்கப்பட்டதால் தயார் நிலையில் கிடைத்த ஆதிக்கத்தை உண்மையான செல்வாக்கென்று அவர்கள் நம்பிவிட்டனர். தயாநிதி மாறனின் அரசியல் ரீதியிலான திடீர் வளர்ச்சியும், கலாநிதி மாறனின் தொழில் ரீதியிலான அசுர வளர்ச்சியும் மாறன் சகோதரர்களிடையே அதிகார ஆசைகளைக் கிளப்பி விட்டன.முரசொலி மாறனைப் போல கருணாநிதியின் நிழலிலேயே, அவரது குடும்பத்துக்கு விசுவாசமாகவே எப்போதும் இருப்பதற்கு அவரது பிள்ளைகளான மாறன் சகோதரர்கள் விரும்பவில்லை. தி.மு.க.வின் தலைமையையும், மாநில அதிகார மையத்தையும் இலக்கு வைத்து மாறன் சகோதரர்கள் காய்களை நகர்த்தினர். இதுதான் தி.மு.கழகத்துக்குள்ளேயும், கருணாநிதிமாறன் குடும்பத்திற்கிடையேயும் புகைச்சல், மோதல், வாரிசுச் சண்டை என்று பல மாதங்கள் நீறுபூத்த நெருப்பாக நீடித்திருந்ததற்குக் காரணம்.
..
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் மு.க. ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியும், அரசு செலவில் சென்னை சங்கமம் நடத்தியதைச் சாதனையாகக் காட்டிக் கனிமொழிக்கு எம்.பி. பதவியளித்து அரசியலில் நுழைப்பதையும் கருணாநிதி திட்டமிடுவதை அறிந்த மாறன் சகோதரர்கள், அம்முயற்சிகளைச் சீர்குலைக்கும் வேலையில் விரைந்தனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள ஸ்டாலினின் நிர்வாகத் திறமையை மறைமுகமாக விமர்சனம் செய்து வருவதோடு, தாத்தாவான பிறகு கூட, இளைஞரணித் தலைவராக ஸ்டாலின் நீடிப்பதைக் குறிக்கும் வகையில் கிண்டலடித்தது மாறன் சகோதரர்களின் தினகரன். கனிமொழி தலைமையேற்று நடத்தும் ""கருத்து'' அமைப்பு மற்றும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை இருட்டடிப்புச் செய்தது, சன்தினகரன் செய்தி ஊடகம். ஆனால், கடந்த மாத ஆரம்பத்தில், கருணாநிதி கேட்டுக் கொண்டதையும் மீறி இரண்டு கருத்துக் கணிப்புகளை சன்தினகரன் குழுமம் வெளியிட்டது. இந்தக் கணிப்புகள் தயாநிதி மாறனைத் தமிழக அரசியலில் வளரும் மாற்றுத் தலைமையாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
..
இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மதுரை மேயர், அவரது கணவன், மற்றும் முன்னாள் மேயர் தலைமையில் திரண்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் தி.மு.க. ரௌடிகளால் தினகரன் நாளிதழ் எரிப்பு, நகரம் முழுவதும் பேருந்துகள் உடைப்பு, கல்லெறிதல், தினகரன்சன் குழும அலுவலகங்கள் சூறையாடப்படுதல், தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மூன்று ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலித்தனங்கள் அனைத்தும் புகைப்படங்களாகவும் ""வீடியோ'' காட்சிகளாகவும் ஆதாரம்சாட்சியமாகப் பதிவு செய்யப்படுவதைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் போலீசுப் பாதுகாப்பு உதவியுடன் உடந்தையுடன் மிகவும் நிதானமாகவும், அலட்சியமாகவும் இது ""நம்ம ஆட்சி, நம்ம போலீசு'' என்ற திமிரோடும் நடத்தப்பட்டுள்ளன.
..
தான் சொல்லியும் கேளாமல், தினகரன் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டதுதான் வன்முறைக்கு காரணம் என்றும், ஆத்திரமுற்ற கழகத் தொண்டர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டனர் என்று அழகிரியின் ரௌடித்தனத்துக்கு நியாயம் கற்பித்துள்ளார், கருணாநிதி. அவரது பொறுப்பிலுள்ள போலீசு அழகிரிக்கு உடந்தையாகவும், அவரது ஆணையின் கீழ் செயலிழந்தும் போயுள்ளது அம்பலப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மகன் மு.க. அழகிரியைக் குற்றங்களில் இருந்து தப்புவிக்கும் நோக்கத்தோடு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறார். தர்மபுரி மாணவிகள் எரிப்புக்கு இணையான மூன்று அப்பாவி ஊழியர்கள் படுகொலையின் சூத்திரதாரி மு.க.அழகிரிதான் என்று ஊரே, நாடே அறிந்திருந்தபோதும் அவர் கைது செய்யப்படவுமில்லை; அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட சேர்க்கப்படவில்லை; அழகிரியின் அல்லக்கைகள் சிலர் மட்டுமே பெயருக்குக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
..
மு.க.அழகிரியின் செல்வாக்கை "இருட்டடிப்பு' செய்து பொய்யான கருத்துக் கணிப்புகள் வெளியிட்டதனால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டது இயல்பானதுதான்; அதனால் 3 ஊழியர்கள் இறக்க நேர்ந்தது ஒரு பிரச்சினையே இல்லை என்பது போலவும் கருணாநிதியின் தலைமை நடந்து கொள்கிறது. ""தி.மு.க.வின் கட்டமைப்பையே குலைத்துவிடும் முயற்சியில் மாறன் சகோதரர்கள் கடந்த சில மாதங்களாகவே இறங்கி வந்தார்கள்; ஆனாலும் கலைஞர் பொறுமை காத்தார். இப்போது தலைவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார், கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைத்து விட்டார், கட்சிக்குக் களங்கம் விளைவித்து விட்டார்'' என்று குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் பதவியைப் பறித்ததோடு, கழகத்தில் இருந்தும் தயாநிதி மாறன் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் முத்தமிழ் வித்தகர் கருணாநிதியின் அகராதியில் ஒரே பொருள் தான் இருக்கிறது. கருணாநிதியின் பிள்ளைகளிடையே ""குழப்பத்தை விதைத்து, மோதலை உருவாக்கி, கழகத் தலைமையைக் கைப்பற்ற சதி செய்தார்'' என்பதுதான் அது. ஆனால், கருணாநிதியோ, கட்சியைக் குடும்பத்தின் சொத்தாகவும், அரசு அதிகாரத்தை குடும்பத்துக்கான சொத்துச் சேர்க்கும் கருவியாகவும் கருதி, அதன் கட்டுக்கோப்புக் கலையாமல் மகன்களுக்கும், மகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பதவி வழங்குபவர்; தனது குடும்ப வாரிசுகளுக்கிடையே சுமுகமான பஞ்சாயத்து செய்து சொத்துக்களையும், பதவிகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிப்பதற்குத் திட்டமிட்டு வாரிசு அரசியலின் ஆபாசங்கள் அனைத்தையும் உருவாக்கி வளர்ப்பவர்.
..
குடும்பச் சொத்தும் அதிகாரமும்தான் குறிக்கோள் என்றான பிறகு குடும்பத்துக்குள் குத்து வெட்டு நடப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. குடும்பத்துக்குள் குடுமிப்பிடிச் சண்டை வந்துவிட்ட காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய மனிதராகக் கருணாநிதியைக் கருதுவது முட்டாள்தனம். பரந்து விரிந்து கிடக்கும் தமிழகத்தையும் அரசு அதிகாரம் அளிக்கும் ஆதாயங்களையும் சுமுகமாகப் பகிர்ந்து கொண்டு வாழாமல், தனது அரசியல்வாரிசுகள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்பதும், சட்ட விரோத மாற்று அதிகார மையமாகிவிட்ட அழகிரி கும்பலால் தனது வாரிசு அரசியலுக்குக் களங்கம் ஏற்படுகிறதே என்பதும்தான் கருணாநிதியின் ""துயரம்''.
..
""அண்ணன் அழகிரியின் ரவுடித்தனங்களையும், கட்டைப் பஞ்சாயத்துக்களையும் எதிர்த்துக் கொண்டு மதுரையிலும், தென்மாவட்டங்களிலும் யாரும் உயிரோடு இருக்க முடியாது. அப்படிப்பட்ட கொலைகளுக்கு போலீசும் துணை நிற்கும்'' என்பதுதான் இந்தச் சம்பவத்திலிருந்து வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கும் இடையிலான அதிகார அரசியல் சண்டை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அதற்காக பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதும், பொதுமக்களுக்கு எதிராக வன்முறை ரௌடித்தனங்களை நடத்துவதும் அப்பாவி ஊழியர்களைப் படுகொலை செய்வதையும் யார்தான் சகித்துக் கொள்ள முடியும்?
..
தி.மு.க.வின் மாவட்ட செயலர் த.கிருட்டிணன் கொலை விவகாரத்தில் அழகிரிக்கு கருணாநிதி வக்காலத்து வாங்கினார்; தானே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, இதே வகையான ரவுடித்தனங்களை அவரது கும்பல் அரங்கேற்றியபோதும் பிள்ளை பாசம் கருணாநிதியின் கண்களை மறைத்தது. தென் மாவட்டங்களில் மதுரை முத்துவுக்குப் பிறகு தேர்தலில் ஜெயிப்பதற்கு தேவையான கிரிமினல் நடவடிக்கைகளுக்காகவே கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டு ஊட்டி வளர்க்கப்படுபவர்தான் மு.க.அழகிரி. ஆனால், கருணாநிதியின் வாரிசு குடும்ப அரசியலையும் கிரிமினல் அரசியலையும் மறைத்துவிட்டு, ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் வகையில் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து விட்டதாக வருத்தம் தெரிவிக்கும் "தோழமை'க் கட்சிகளோ, பெயர் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிநியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோருகின்றன. தாமே குடும்பவாரிசு அரசியலை ஊட்டி வளர்க்கும் வைகோவும், சசிகலா கும்பல் வடிவில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு அதிகார மையத்தை உருவாக்கிப் பராமரிக்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியின் வாரிசுகுடும்ப அரசியல் பற்றிக் கூச்சல் போடுவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது.
..
தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கும் மறுகாலனியாக்க அரசியல் குறித்து கவனம் செலுத்தாமல், யாருக்கு இளவரசுப் பட்டம் என்ற அரண்மனைக் குத்து வெட்டை அரசியலாகக் கருதிப் பேசிக் கொள்வதற்கும், பதவிக்காக அடித்துக் கொள்பவர்களில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொள்வதற்கும் ஊடகங்கள் மக்களைப் பயிற்றுவிக்கின்றன. இது ஒரு புதிய சுவாரசியமான தொலைக்காட்சி சீரியல் போல மக்களை ஆக்கிரமிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. பிழைப்புவாத அரசியல், வாரிசு அரசியல், கிரிமினல் அரசியல், கோஷ்டி அரசியல் போன்ற நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளின் வெளிப்பாடுதான் கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் சகோதரர்களுக்கிடையிலான மோதலாக வெடித்திருக்கிறது.

2 comments:

Anonymous said...

தோழர் கேடயத்தின் சரவெடி கட்டுரை

****************

மாமா வீரமணியும் மயங்கிக் கிடக்கும் மாப்பிள்ளைகளும்

http://kedayam.blogspot.com/2007/06/blog-post_930.html

ஜனநாயகம் முற்போக்கு என்று வலம் வந்து கொண்டிருந்த நமது நண்பர்களின் முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. உரிமை என்று நேற்றுவரை பேசியவர்கள் இன்று இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டுமென பதிவிடுகிறார்கள். புரட்சி, கோபம் இது அசுர குணம் என்று பார்ப்பன குரலில் அலறுகிறார்கள். வன்முறை தீர்வல்ல என்று நமக்கு வக்கனையாய் போதித்துக்கொண்டே “நக்சல்பரிகளை கட்டிவைத்து எரிக்க வேண்டுமென” தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு பேதமை என பேசித்திரிந்தவர்கள் இன்று பிறப்பினை ஆய்வு செய்து கிசுகிசு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். ம.க.இ.க பார்ப்பனீயம் என்ற பதத்தையே 2000த்தில்தான் பயன்படுத்த துவங்கியது என அவதூறுகளையும் அவற்றோடு அள்ளித்தெளிக்கிறார்கள். நேற்றுவரை உற்ற நண்பர்களாய் ஒட்டி உறவாடிவிட்டு இன்று உக்கிரப்பார்வை பார்க்கும் நண்பர்களின் கோபத்திற்கு காரணம் என்ன? எளிமையானது. இந்த நாட்டினுடைய இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் சுரண்ட ஏகாதிபத்தியத்திற்கு தரகு வேலை பார்க்கும் மாமா வீரமணியை நமது தோழர். அசுரன், மாமா என்றே சொல்லியதுதான்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக இழிவை போக்க ஆயிரமாயிரம் எதிர்புகளுக்கிடையில், கல்லடிகளுக்கும், சொல்லடிகளுக்கும் மத்தியில் பெரியார் கட்டியெழுப்பிய இயக்கத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்து கொண்டு தரகு வேலை பார்ப்பதனாலேயே மாமா வீரமணி தன் தவறினை மறைத்துக்கொள்ள முடியாது என்று நாம் திரைகிழித்ததுதான் நண்பர்களின் கோபத்தை தூண்டியிருக்கிறது. ம.க.இ.க பெரிய புடுங்கிகளா என்று பேச வைத்திருக்கிறது.

நாம் வீரமணியை விமர்சிப்பது புதிதல்ல. ஊரையடித்து உலையில் போட்டு உடலேங்கும் நகையோடும் திமிரோடும் ஜெயலலிதா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தில் எச்சில் இலைக்கு அலையும் நாய் போல நமது மானங்கெட்ட வீரமணி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு சென்ற போது “வீரமணியும் வந்தாரு மானத்த மொய்யா தந்தாரு” என எள்ளி நகையாடி, மாமி ஜெயாவோடு கூடிக்குலவிய மாமா வீரமணியை அம்பலப்படுத்தியது அண்ணன் வர்றாரு என்ற ம.க.இ.கவின் ஒலிபேழை.

“நான் ஒரு பாப்பாத்தி” என்று சட்டமன்றத்திலேயே பேசிய சமூகநீதிகாத்த வீராங்கனை ஜெயலலிதாவை “பெண் பெரியார்” என்று வர்ணித்து மகிழ்ந்தவர்தானே இந்த மாமா வீரமணி.

எதிரியாவது நமது கண்களுக்கு முன்னால் காவிக்கொடியேந்தி தெளிவாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். இந்த துரோகியோ கருஞ்சட்டையோடு பெரியாரின் பின்னே ஒளிந்து கொண்டு பார்ப்பனீயத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எவனோ கிளி ஜோசியனின் பேச்சை கேட்டு கொண்டு கண்ணகி சிலையை வீராங்கனை பெயர்த்தெறிந்த போது கற்பு-கண்ணகி என்றெல்லாம் ஆய்வு செய்து அதற்கு சித்தாந்த விளக்கம் கொடுத்தது யார்? மாமா வீரமணிதான். கண்ணகி சிலை அகற்றப்பட்ட காரணம் பெண்ணுரிமைதான் என்று பேசும் அளவிற்கு அப்பாவியா அவர்?

பெரியார் இறந்து போன இந்த 29 ஆண்டுகளில் என்ன பகுத்தறிவு பிரச்சாரம் செய்து புடுங்கியிருக்கிறார் இவர். பார்ப்பனத்தி வாஸந்தியை அழைத்து வைத்து தமது கல்லூரிகளிலே கருத்தரங்கம் நடத்தி கொண்டிருக்கிறார். பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதை விட வாழ்வியல் சிந்தனைகளை பரப்புவதில்தான் வேகமாய் இயங்குகிறார். ம.க.இ.க என்ன புடுங்கியது என கேட்கும் நண்பர்களே தமிழகம் முழுக்க எமது தோழர்களால் நடத்தபடும் ஆதிக்க சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களிலும், இன்னும் ம.க.இ.க தோழர்களால் நடத்தப்படும் எத்தனைஎத்தனையோ போராட்டங்களிலும் செயலில் இறங்கி கைகோர்க்க புடுங்க திராணியில்லாத உங்கள் தலைவர். பெரியார் முழங்கிய வீரியமிக்க சொற்களை கூட காரியவாதத்தோடு மறந்துவிட்டாரே. அடக்குமுறைக்கு அஞ்சாமல் அந்த சொற்களை பேசவும் நக்சல்பாரிகள்தானே வந்து புடுங்க வேண்டியிருக்கிறது. பெரியார் சிலை உடைப்பின் போது நடைபெற்ற பூனூல் அறுப்பு சம்பவங்களை வன்முறை என்று கண்டித்தது இந்து முன்னனி. அதற்கு எதிராய் ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கு போய் புடுங்கி கொண்டிருந்தார் உங்கள் தலைவரென்று கேட்டீர்களா?. அதற்கு கூட ம.க.இ.க வின் பொதுச்செயலர் மருதையன் தானே “அது வன்முறையைல்ல பூனூல் என்று எம்மை இழிவுபடுத்து ஆதிக்க கருத்தியலின் மெளனமான வன்முறைக்கு எதிர் வன்முறை, போர்” என்று இந்து முன்னனியின் கொழுப்பை புடுங்க வேண்டியிருந்தது. ஆனால் ம.க.இ.க தோழர்கள் திருவரங்கத்து கருவறையில் நுழைந்து கலகக்குரல் எழுப்பிய போதும், தியாகராஜ கீர்தனையில் போர்பறை இசைத்து முழங்கிய போதும் அதனையெல்லாம் வன்முறை என்று கண்டிக்க இந்த புடுங்கி மாமா வீரமணி ஒடோடிவந்துவிட்டார். அவர் இத்தனை முறை தன்னை எந்த பக்கமிருப்பதாக நிரூபித்தாலும் நண்பர்களே நீங்களே அவர் கருப்பு சட்டை கண்டு மயங்கும் அப்பாவித்தனத்தை மாற்றிக்கொள்ள மாட்டீர்களா? இதனை சொன்னால் ஏன் நண்பர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. பெரியாரையும் அவர் கொள்கையையும் காப்பதை விட இந்த சொறிநாயை காப்பதுதான் சரி என்று உங்கள் பகுத்தறிவு சொல்கிறதா?

இதனையெல்லாம் கேட்டால் நம்து நண்பர்கள் சொல்கிறார்கள் “அவர் என்னதான் மாமா வேலை பார்த்தாலும், ஒரு இயக்கத்தின் தலைமையை மாமா என்று சொல்வது தவறில்லையா” “தோழர்கள்!நீங்கள் சொல்கின்ற காரணங்கள் சரிதான் ஆனால் வார்த்தைகளின் வீரியத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளூங்களேன்” என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள். “பார்ப்பனர்” என்று பேசினால் அய்யர்களின் மனம் புண்படுமே அதனால் பிராமணர் என்று பேசுங்களேன் என்று பெரியாருக்கு யோசனைச்சொல்லி மூக்குடைப்பட்டு போனவர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் எண்ணிவிட்டு வாருங்களேன் என்று நாம் நண்பர்களுக்கு யோசனை சொல்கிறோம்.

“இந்தியாவிற்கு பகத்சிங்கின் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நம்து பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்த வரை பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொதுவுடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதியிருக்கிறோம்” என்று ஈரோட்டு கிழவன் தனது கூர்தீட்டிய வரிகளோடு வெள்ளை அரசின் அடக்குமுறையை குத்திக்கிழித்த காலம் ஒன்றுண்டு. இன்று உங்களிடம் பெரியாரின் குரலை நாங்கள் எதிர்பார்க்கவில்லையென்றாலும் நண்பர்களே, “நக்சலபாரிகளை ஒழிக்க வேண்டும், எரிக்க வேண்டும்” என்று அத்வானியின் குரலிலே பேசிக்காட்டி எங்களை அசத்துவீர்களென்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பல நாட்களாய் வெளியில் உலவிய பார்ப்பனர்களை விமர்சித்து விமர்சித்து உங்கள் மூளையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களை விட்டுவிட்டீர்களே. இந்த பயங்கரவாத பீதி கலைய பகத்சிங்கை தூக்கிலிட்ட போது பெரியார் வெளியிட்ட அறிக்கையை படியுங்கள். மாமா வீரமணியின் சகவாசம் விட்டுத்தொலையுங்கள்.

ஆனால் உங்கள் தலைவர்கள் போலவே நீங்களும் திடீரென்று எதையாவது புலனாய்வு செய்து புடுங்கிவிடுகிறீர்கள். அப்படி உங்கள் சமீபத்திய புலனாய்வு தோழர்.மருதையன் பிறப்பால் பார்ப்பனர் என்பதுதான் ஆனால் நண்பர்களே நீங்கள் இவ்வளவு பாமரத்தனமானவர்கள் என்று நான் நினைத்ததேயில்லை, ம.க.இ.கவின் நடைமுறையில் விமர்சனம் வைக்க முடியாத சில ஒட்டுண்ணிகள் இந்த வாதத்தை சிற்றிதழ் வட்டாரத்திலும், தமிழின குழுக்களுக்கிடையிலும் எழுப்பிவிட்டு வாங்கிகட்டிக்கொண்டு ஓடினார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? பாவம் நீங்களும்தான் என்ன செய்வீர்கள் இப்போது இது உங்களூக்கு புது செய்தி. சரி, மாமா வீரமணி நடைமுறையில் ஒரு பச்சைபார்ப்பான் என்று நிறுவிக்காட்ட எத்தனையோ காரணங்களை எம்மால் அடுக்க முடியும் தோழர்.மருதையனை பிறப்பைதவிர நடைமுறையில் அவர் பார்ப்பனர் என்பதற்கு உங்களால் ஒரே ஒரு காரணம் சொல்ல முடியுமா? “அவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அப்படித்தானிருப்பார்” என்பதன் மூலமாக, வர்ணத்திற்கு ஒரு குணம் “பறை புத்தி அரை புத்தி” போன்ற இழிவான பார்பனீய வரையறைகளில் நின்று கொண்டுதானே உங்கள் மூளை இவ்வளவு கேவலமாய் வேலை செய்கிறது. வெளியில் பார்பனனை ஒழித்துக்கட்டுவதிருக்கட்டும் நண்பர்களே முதலில் உங்கள் மூளைக்குள் இருப்பவனை அடித்து துரத்துங்கள். கூடுதலாய் ஒரு கேள்வி உங்கள் வரையறையின் படி பதிவர் வட்டத்திலேயே எங்கள் தோழர்களிடம் வாங்கிகட்டி கொண்டு ஓடிய இந்து மதவெறியன் அரவிந்த நீலகண்ட நாடாரும், அர்த்தமுள்ள இந்துமதமெழுதிய கண்ணதாசன் செட்டியாரும், பெள்ளாச்சி மகாலிங்க கவுண்டரும் தமிழர்களா? திராவிடர்களா?

இன்னும் சில நண்பர்களுக்கு நம் மீது கோபம் நாம் வெகுமக்களூக்கிடையில் பணி செய்யவில்லையாம்। இதற்கும் உங்களையே குறை சொல்லும் நிர்பந்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டீர்களே நண்பர்களே. தினமலர், தினமணி போன்ற செய்திதாள்களின் கட்டம் கட்டிய செய்தியிலிருந்து உங்கள் பொது அறிவை மீட்டு அதனை வெகுசனங்களுக்கு இடையில் முதலில் இறக்கி விடுங்கள். பேருந்துகளிலும் இரயில்களும் மக்கள் கூடுமிடங்களிலும் கூர்மையான அரசியல் விமர்சனத்தோடு “புதிய ஜனநாயக்த்தையும்” “புதிய கலாச்சாரத்தையும்” விற்கும் எமது தோழர்களின் குரலை ஒருமுறையாவது கேளுங்கள். பிறகு பேசுங்கள்.

“சிலையை உடைத்ததன் மூலம பெரியாரை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்துவழங்கினார்கள் இந்து மதவெறியர்கள்। உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப்போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்த கிழவனை இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப்பயணம் அழைத்துச்சென்றிருக்கலாம் “மண்டைச் சுரப்பை உலகு தொழும்” பாரதிதாசன் பாடினாரே அந்த தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயை போல பற்றவைத்திருக்கலாம். பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு, பகுத்தறிவுக்கல்லை பேசவைத்துக்காட்டியிருக்கலாம்.” என்று பெரியார் சிலை உடைப்பின் போது பொறி பறக்க எழுதியது “புதிய ஜனநாயகம்” உங்கள் புடுங்கித்தலைவர்களோ ஏ.சி ரூமில் உட்கார்ந்து தங்களுக்குள் விவாதித்துவிட்டு அமைதிகாக்குமாறு அறிவுரை சொன்னார்கள். பூனூலை காக்கமட்டும் ஓடோடி வந்தார்கள். சொல்லுங்கள் நண்பர்களே இதில் எது வெகுசன நடவடிக்கை.


நேற்றுவரை எம்மோடு கூடியிருந்தீர்கள் இன்று விமர்சனம் என்றவுடன் வெகுண்டெழுந்து அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என்று கூச்சலிடுகிறீர்கள்!! நாங்கள் நேச சக்தி எங்களை விமர்சிக்கலாமா என்று விழுந்து புரள்கிறீர்கள், இந்த தேசம் அடகு வைக்கப்படும் போது, எமது உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்படும் போது அதற்கு ஆதரவாய் நிற்கும் எந்த சக்தியையும் எதிர்க்கத் தயங்காது நண்பர்களே எமது குரல்கள். இது ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட வீறிட்டு வெடிக்கும் அசுர கானம் எந்த ஆதிக்கத்தாளத்திற்கும் அடிபணியாது. “கட்டபொம்மன் போராட தொடங்கும் வரை எட்டப்பன் கட்டபொம்மனின் உற்ற நண்பன், கட்டபொம்மன் போராட துவங்கும் போதுதான் எட்டப்பன் வெளிப்பட்டான்” என்று ஒரு கூட்டத்திலே தோழர். மருதையன் குறிப்பிட்டதாக நினைவு. இன்றும் பாருங்களேன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டபொம்மனின் வாரிசுகளாய் களத்தில் நிற்கிறோம் நாங்கள், தூக்கில் தொங்கவும் தயார், கட்டி எரிக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை, ஆனால் நாங்கள் போராடத்துவங்கும் போதுதான் “அசுரர்களை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும்” என்று தேவர்களின் குரலில் பேசிகொண்டே எட்டப்பன்கள் வெளிவருகிறார்கள்.

குருத்து said...

சமகால வாரிசு அரசியலின் யோக்கியதையை நன்றாக அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

தி.மு.க வின் விசிறிகள் தான் படிக்கவேண்டும்

பின்குறிப்பு : பதிவின் தேதி தவறாக காண்பிக்கிறதே!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது